எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 3 - கதைத் தீரி

NNK-53

Member
தேன்மிட்டாய் 3

நாள் பிப்ரவரி 14, நேரம் காலை.

கோவை மத்தியக் காவல் நிலையம் அருகில்…

“உண்மையிலேயே அத்தனைப்பேருக்கும் முன்னாடியா அவனை அடிச்ச?” பேருந்திலிருந்து இறங்கியபடியே விசாரித்தாள் ஜான்சி.

“ம்ம்.. ! ஆமா…!” என்று இவள் மேலும் கீழுமாகத் தலையாட்ட, “எனக்கு என்னமோ அந்தப் பையன் வேணும் னு உன்கிட்டத் தப்பா நடந்துக்கிட்ட மாதிரி தெரியல.” யோசனையுடன் சுதாவை ஏறிட்டாள் ஜான்சி.
“எப்படி சொல்ற?” கைகட்டியபடியே கேள்வி எழுப்பினாள் சுதா.

“பின்ன, நீ அவன் க்ரே கலர் டிரஸ் போட்டிருந்தானென்று தானே சொன்ன?”

“ஆமா!”

“லவ்வர்ஸ் டே அன்னைக்குக் க்ரே கலர் டிரஸ் போட்டிருந்தா என்ன அர்த்தமென்று உனக்குத் தெரியுமா?”

“என்ன அர்த்தம்?”

“க்ரே ன நாட் இன்டர்ஸ்டட்டு னு அர்த்தம். அவனுக்குக் காதல் கீதல் எல்லாம் பிடிக்காது போல, அப்பறம் எப்படி உன்கிட்டத் தப்பா நடந்திருப்பான். அத்தோட கீழ விழப் போன உன்ன காப்பாத்தியிருக்கான். அவனைப் போய் தேவையில்லாம அடிச்சிட்ட னு நான் நினைக்கிறேன்.” குற்றம் சாட்டினாள் ஜான்சி.

“ம்ம் வாட்டெவர் யாரா வேணுமென்றாலும் இருத்துட்டுப் போகட்டும். அவனுடைய இன்டன்சன் என்னவா இருந்தா எனக்கு என்ன? அவன் என் இடுப்பைப் பிடிச்சது தப்பு தான? ஓகே நீ சொல்ற மாதிரி தெரியாம அவன் கைப் பட்டிருந்தா கூட, தொட்டதும் கையை எடுத்திருக்கனும் ல, அத விட்டுட்டு என் இடுப்பை அழுத்திப் பிடிச்சி என்ன அணைக்க வந்தது தப்பு தான? அதுக்கு தான் சப்புனு ஒன்னு கன்னத்திலேயே விட்டேன்.” நிமிர்த்திய மார்புடன் தெளிவான பதில் சுதாவிடமிருந்து.

“ம்ம்… அதுவும் சரி தான். அப்பறம் என்ன ஆச்சு? நீ அடிச்சா அடியில அவன் பயந்து போய் உன் பக்கம் வந்திருக்க மாட்டேனே.”

“ஹாஹா யாரு அவனா? அவனாவது பயந்துப் போறதாவது? அன்னைக்குச் சாயங்காலமே பஸ் ஸடாப் ல முதல் ஆளா வந்து நின்னான்.”

“எதுக்காம்?”

“ஏன் டி என்ன அடிச்சா னு நியாயம் கேட்கிறதுக்கு.”

“ஓஹ் அவன் கேட்டதுக்கு நீ என்ன பதில் கொடுத்த?”

“மறுபடியும் கன்னத்துல ஒன்னு கொடுத்தேன்.”

“ஹாங்..!” அதிர்ச்சியில் ஜான்சியின் கண்கள் விரிந்தன.

“ஆமா பின்ன? சுதாராணின சும்மாவா? ஏன் டி அடிச்ச னு வாயால கேட்டிருந்தா நானும் ஒழுங்கு மரியாதையா பதில் கொடுத்திருப்பேன். ஆனா அவன்? என் கையைப் பிடிச்சி இழுத்து, ஏன் டி என்ன அடிச்ச னு கேட்டான். அப்படித் தான்டா அடிப்பேன் னு சொல்லித் திரும்பவும் ஓரு அடி கொடுத்தேன்.” (அம்மாடியோ இது டெரர்ப் பீஸு டோய்..) என்று அவள் ஆர்ப்பாட்டமின்றிப் பதில் கூறிட, “அப்…!” அதிர்ச்சியில் வாயைப் பிளந்து மூடினாள் ஜான்சி.
பேயறைந்தாற் போல் ஜான்சி வர, குறுநகையுடன் அவளுடன் நடந்தாள் சுதா.

இருவரும் தோளோடு தோள் உரசப் காவல்நிலையம் அருகில் வர, இருவருக்கும் இடையில் இடித்துவிட்டுச் சென்றான் ஒரு முரடன்.
இருவரும், “ஏய்…!” என்று கத்தியபடி தோளைத் தடவினார்.

காவல்நிலையம் உள்ளிருந்து, “கொலைகாரன் தப்பிச்சு ஓடுறான் அவனைப் பிடிங்க…!பிடிக்க…!” என்று ஆணின் சத்தம் மட்டும் வர, சுதாவின் அருகில் நின்றிருந்த ஜான்சியோ, மின்னல் வேகத்தில் அவனைத் துரத்திப் பிடித்தாள்.

பெண் சிங்கம் இரையைக் கவ்வி இழுத்து வருவது போல் அந்தத் தடியனின் தலைமுடியைப் பற்றியவள் அவனது முழங்காலில் லத்தியைக் கொண்டு அடித்தபடியே ஸ்டேசனுக்குள் இழுத்து வர, மற்ற போலிஸ் அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டனர். அவளின் வீரத் தீரச் செயலைப் பார்த்த அந்த ஸ்டேசன் உயர் அதிகாரியோ, “வெல்டன் மிஸ் ஜான்சி…” உளமார பாராட்டினார்.

“தாங்கிஸ் சார்.” பதிலுக்கு இவள் சலூட் வைக்க, “அக்சூவலி சி இஸ் அத்லடிக், நெக்ஸ்ட் இயர்க் கூட இவங்க ஒலிம்பிக்ல ஓட போறாங்க சார். ஆர்டர்க் கூட வந்திடுச்சு.” ஜான்சியின் பெருமைகளை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தினார் அப்துல் கரீம்.

“மை குட்நஸ்…!” அதீதச் சந்தோசத்துடன் முணுமுணுத்த ஜான்சி, இருவருக்கும் முகமன் செலுத்திவிட்டு வெளியே வர, “சூப்பர் டி சூப்பர். மேடம் ஒலிம்பிக் போறீங்களாம் ஏட்டம்மா சொன்னாங்க.” அன்போடு அவளை அணைத்து விடுவித்தாள் சுதா.

“ஆமா சுதா அது என்னுடைய நீண்ட நாள் கனவு. எப்படியாவது ஒலிம்பிக் போகனும். கோல்ட் மெடல் வாங்கனும். நம்ம நாட்டுக்கு நான் பெருமைச் சேர்க்கனும்…” தோளை நிமிர்த்தி அவள் கூறிட, “நிச்சயம் நீ வாங்குவ, நியூஸ் பேப்பர், வாரமலர் ஏன் சன் டிவி நியூஸ் ல கூட உன்ன தான் பேட்டி எடுப்பாங்க நீ வேணா பாரேன்.” ஆருடம் கூறினாள் சுதா.

“ம்ம்.. பார்க்கலாம்…” பெருமூச்சுடன் கூறிய ஜான்சியோ, “சரி டீ வா பசிக்குது சாப்பிட்டு வரலாம்.” என்று அழைக்க, “ஐய்யோ இல்ல ஜான்சி நான் முத அவரைப் பார்க்கனும். அப்பறம் தான் சாப்பாடு…” உடனே மறுத்தாள் சுதா.

“ம்ம்… போகலாம்… ஆமா அவரு எங்க இருக்காரு? அட்ரஸ் ஏதாவது தெரியுமா?”

“ம்ம்… அவருடைய அத்தை பையன் ரவிகிட்ட கேட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்றவள் தனது தோள் பையிலிருந்து துண்டுச் சீட்டை எடுத்து நீட்டினாள்.

அதைப் பிரித்த பார்த்தவளோ, “உக்கடமா? அட அது இங்கிருந்து பக்கத்தில் தானே இருக்கு. இரு சாப்பிட்டுப் போகலாம் வா.” என்றவள் சுதா மறுக்க மறுக்கக் கேன்டினுக்கு இழுத்துச் சென்று இட்லி வாங்கிக் கொடுத்தாள்.

“ம்ம்.. அப்பறம் என்ன நடந்தது னு சொல்லு அந்தக் க்ரே கலர் டிரைஸ் என்ன பண்ணினான்? அதுக்கு பிறகாவது இரண்டு பேரும் சமாதானமா போனீங்களா இல்லையா?” இட்லியைப் பிட்டு வாயில் வைத்தபடியே ஜான்சி விசாரிக்க,

“சமாதானமா? ஹாஹா சண்டையே அதுக்கு அப்பறம் தான் சூடு பிடிக்கவே ஆரம்பிச்சது.” என்ற சுதா, அதன் பின் நடந்தவைகளை விவரிக்க தொடங்கினாள்.
*********************************************************
மார்ச் 5, 1993..

அந்த அம்மன் கோவிலில் அன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

“அம்மன் கோயில் வாசலிலே… ஏய் பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு.. தங்கணும் தங்கணும் செல்வம் நூறு…” என்ற சினிமா பாடல் ஒரு பக்கம் ஒலிபெருக்கியில் ஓட, மறுபக்கம் பெண்களோ கோவில் வாசலில் பொங்கல் வைத்து குழவையிட்டனர்.

எங்கேங்கிருந்தோ ஜனங்கள் அந்த ஊரின் அம்மனைக் காண வேண்டி, வண்டி கட்டி வந்திருக்க, பளபளக்கும் வெள்ளை நிற அம்பஸெடர் காரில் வந்து இறங்கினாள் சுதா. அவளுடன் அவளுக்குப் பாதுகாப்பாக அவளது இரு அண்ணன்களும் வந்திருந்தனர்.

“ஏய் வா டி சுதா, உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா?…” அன்புடன் அவளை வரவேற்ற உமா, “வாங்க கதிர் அண்ணா! வாங்க சிவா அண்ணா.” என்று சுதாவின் அண்ணன்களான கதிரேசன் சிவதாஸையும் மரியாதையுடன் அழைக்க, இருவரும் ஒரு புன்முறுவலுடன் அவளது அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.

நால்வரும் கோவிலை நோக்கி நடக்க, இரத்த சிவப்பு ஏறிய விழிகள் இரண்டு, போகும் அவளையே வெறியோடு பார்த்து நின்றது.

“எவ்வளவு திமிறு இருக்கனும் இவளுக்கு? என்ன பஸ் ஸடாப்ல அடிச்சி அசிங்கப்படுத்தினதும் இல்லாமல் எவ்வளவு தெனாவட்டு இருந்தா என் ஊருனு நல்லாவே தெரிஞ்சு இருந்தும் என் ஊருக்குள்ளே தைரியமா வருவா? உஹும் இவளை இன்னைக்குச் சும்மா விடக் கூடாது. நான் யாரு என் பரம்பரை என்னனு இன்னைக்கு இவளுக்குக் காட்டியே ஆகணும் காட்டுறேன் டி.” கோபத்தில் உடல் இறுகப் பற்களை நறநறவென அரைத்தான் அவ்விரு சிவந்த விழிகளுக்குச் சொந்தக்காரனான திவாகர்.


தொடரும்..

கதை எப்படி இருக்குது என்று கருத்து கூறவும் டியர்ஸ்.. பிடித்திருந்தால் லைக் கொடுக்கவும். தொடர்ந்து உங்களின் ஆதரவு எனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 

kalai karthi

Well-known member
திரும்ப அடிவாங்கத் தான் போகிறாய். பில்டப் குறைச்சல் இல்லைடா
 
Top