எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 8

S.Theeba

Moderator
வரம் 8


“மாலு…. டிபன் ரெடியாச்சா…. சீக்கிரம் சீக்கிரம் லஞ்ச்சையும் சீக்கிரம் பாக் பண்ணிடு…” என்று சமையலறைக்குள் பரபரப்பாக வந்தாள் வர்ஷனா. “எனக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வரப் போகுது. இது நம்ம வர்ஷூதானா… நான் ஒருவேளை கனவு காண்கிறேனோ?” என்று சொன்னதுடன் நிற்காது தன் கையில் வைத்திருந்த தோசைக் கரண்டியால் மறுகையில் சிறிது சூடு வைத்துப் பார்த்தாள் மாலதி. “ஸ்…. ஆமா கனவில்லை நிஜம்தான்” என்று கையைத் தடவி விட்டபடி “என்ன வர்ஷூ.. இன்று சூரியன் தெற்கில் உதிச்சிருக்கோ..” என்று அவளிடம் சந்தேகம் கேட்டதுடன் நிற்காது ஜன்னல் ஊடாக வெளியே எட்டியும் பார்த்தார். “போ மாலு உன் பொண்ணு கொஞ்சம் திருந்தவும் விட்டிராத..” என்று தாயைக் கட்டியபடி கூறினாள் வர்ஷனா.

மாலதி அதிர்ச்சியடைந்ததுக்கும் காரணம் இருக்கிறது. வர்ஷனா பள்ளி செல்லத் தொடங்கிய பருவத்தில் இருந்து இன்றுவரை அவளாக நேரத்திற்கு எழுந்தது கிடையாது. மாலதி அடிச்சும் கத்தியும் எழுப்பினால் மட்டுமே படுக்கையை விட்டு எழுவாள். சில நேரங்களில் தண்ணீர் அபிஷேகமும் நடக்கும்.

அதிசயமாக நேரத்திற்கு எழுந்தது மட்டுமல்லாது ஆபிஸ் போக ரெடியாகவும் வந்திருக்கிறாள். அதுதான் அதிர்ச்சிக்கு காரணம்.

ஆகாய நீல நிறத்தில் சுடிதார் அணிந்து கழுத்தில் சிறிய பென்ரனுடன் கூடிய மெல்லிய சங்கிலியும் வலது கையில் வாட்ச்சுமாக அழகாக இருந்தாள்.

“மாலு.. இன்று ஆபிஸில் வேலையிருக்கு. அதான் சீக்கிரம் போகணும்” என்றபடி தட்டில் ஒரு தோசையும் கொஞ்சம் சட்னியும் எடுத்து வைத்து நின்று கொண்டே சாப்பிடத் தொடங்கினாள்.
“ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு. இன்னும் நேரம் இருக்கு. எதுக்கு இந்த அவசரம். என்றுமில்லாத திருநாளாய் இன்று இவ்வளவு அவசரப்படுகின்றாய்…” என்றாள் மாலதி.
“வர்ஷாம்மா ஆபிஸ் போக ரெடியாச்சு போல…” என்று கேட்டபடி வந்தார் குமார். “ஆமாப்பா..” என்றபடி தன் தட்டிலிருந்த தோசையை உண்டு முடித்தவள் கைகழுவச் சென்றாள்.

சாப்பாட்டிற்கு என்றுமே வஞ்சகம் செய்யாதவள் இன்று ஒரு தோசையுடனேயே தன் உணவை முடித்துக் கொள்ளவும் மாலதியும் குமாரும் அதிசயமாக அவளைப் பார்த்தனர். அவர்களின் பார்வையை புரிந்து கொண்டவள் என்ன சொல்லி சமாளிப்பதென யோசித்து விட்டு “இன்று வனிதா ஸ்பெசல் பிரேக் பாஸ்ட் கொண்டு வாறன் என்றாள். அதுதான் மாலுவின் இந்த போரடிக்கும் டிஃபனிலிருந்து தப்ப ஒன்றை மட்டும் சாப்பிட்டன்” என்று கூறிவிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு ஆபிஸ் கிளம்பி விட்டாள்.

அங்கும் அவளால் தன்வேலையைக் கூடச் சரிவரச் செய்யமுடியாமல் போனது. அவள் மனம் ஒரு நிலையிலேயே இல்லை. அலைபாய்ந்து கொண்டிருந்த மனதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறிது நேரம் கண்களை மூடித் தியானத்திலும் ஈடுபட்டாள். அப்போதும் அவன் முகம் கண்களுக்குள் வந்து இம்சித்தது.
எதற்காகத் தான் சீக்கிரம் ஆபிஸ் வந்தோம், எதற்காக இந்தப் பதட்டம். அவன் இன்று ஆபிஸ் வருவானா? அவனைப் பார்க்க என் மனம் ஏன் இப்படித் தவிக்கின்றது என்று தன்னைத் தானே கேள்வி கேட்டாள். ஆனால் அதற்கான பதில் தான் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவன் திருமணம் ஆனவன். அவனுக்கு ஒரு குழந்தை கூட உண்டு. இந்த நிலையில் தன் மனம் அவனைத் தேடுவது சரியா? ஏன் இப்படி ஒரு நிலை தனக்கு என்று சுய பச்சாதாபமும் ஏற்பட்டது.

அப்போது அறைக்குள் நுழைந்த சிவானந்த் “கொட்டேஷன் ரெடியா வர்ஷனா… இன்று ஈவினிங்குக்கு முன்னரே அதை அனுப்பிடனும்” என்றான். திடுக்கிட்டவள் “இதோ ரெடியாச்சு சேர். திரும்ப ஒருக்கா செக் பண்ணுறேன். இப்போ முடிஞ்சுடும். கொண்டு வந்து தாறன் சேர்” என்றாள். அத்தோடு தன் மனதின் தவிப்புகளையும் அவன் நினைவுகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

மதியம் உணவு இடைவேளையில் ‘யது ஏன் இன்னும் இங்கு வரவில்லை. ஒருவேளை வரமாட்டானோ..? (அவள் யதுநந்தனைச் செல்லமாக மனதிற்குள் யது என்றே அழைத்தாள்) என்று சிந்தித்தபடி, தன் அம்மா செய்துதந்த லெமன் சாதத்தை எடுத்துக் கொண்டு சாப்பிடும் இடத்தை நோக்கிச் சென்றாள்.

அந்த அலுவலகம் மூன்று மாடிகளைக் கொண்டது. மூன்றாவது மாடியிலேயே எம்.டி.யின் அறை உள்ளது. சாப்பிடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடமோ கீழ்த் தளத்தில் உள்ளது. எனவே அங்கே செல்வதற்கென லிஃப்டுக்காகக் காத்திருந்தாள். லிஃப்ட் மேலே வந்து கதவு திறந்ததும் உள்ளே புக முயன்றாள். கதவிலே மோதி நின்றவள் அதிர்ந்து போய் கண்களை மூடிவிட்டாள். கோபத்தில் வாய் விட்டு “அவ்வளவு வேகமாகவா கதவு பூட்டப்பட்டது. எந்த மடையன் கதவை மூடியது” என்று திட்டிக் கொண்டே கண்களை மெதுவாகத் திறந்தாள். திறந்த கண்கள் திறந்த படியே இருக்க அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

எதிரில் கண்களில் சினத்துடன் உறுத்து விழித்தபடி நின்றான் யதுநந்தன். 'ஆஹா…! இவனா… சும்மாவே சிடுமூஞ்சி. இப்போ முகத்தில் அப்பளம் போட்டால் பொரியும் போல' என்று தன் மனதுக்குள் புலம்பியபடி நின்றாள்.
அன்றும் அவன் இளம் நீலத்தில் சர்ட்டும் அடர் நீலத்தில் பாண்ட்டும் அணிந்திருந்தான். நீலத்தில் கறுப்புக் கோடுகள் போட்ட டை கட்டியிருந்தான். தன்னைப் போல் இவனுக்கும் நீல நிறம் தான் பிடிக்கும்போல, மேட்சிங் மேட்சிங் என்றும் சிந்திக்க அவள் மறக்கவில்லை.

“அறிவில்ல. கண்ணை மூடிற்றா நடக்கிறாய். எதிரில் ஆள் இருப்பது தெரியாமல் வந்து மோதுகின்றாய்” என்று திட்டினான்.
அவன் திட்டியதும்தான் சுரணை வந்தது அவளுக்கு. “நான் தெரியாமல்…. மோதி…. நீங்க….” என்று தட்டுத் தடுமாறிப் பதில் சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தைகள்தான் வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. அவளின் தடுமாற்றத்தைக் கண்கள் இடுங்கப் பார்த்தவன் இவள் இப்போதைக்குப் பேசி முடிக்க மாட்டாள் என்பதை உணர்ந்தான். “கொஞ்சம் வழி விட்டால் நான் என் வேலையைப் பார்க்கப் போய் விடுவேன். நீ ஆறுதலாக யோசித்து விட்டு வந்து பேசு” என்றவன் அவள் ஒதுங்கி நிற்கவும் அங்கிருந்து சென்று விட்டான்.

மனதின் தவிப்பால் சாப்பாட்டைப் பேருக்குக் கொறித்துவிட்டு, வேகமாகத் திரும்பி வந்தாள் வர்ஷனா. அவன் சிவானந்தின் அறையில்தான் இருப்பான் என்பதால் அவனை மீண்டும் பார்க்கும் ஆவலும் அவளை உந்தத் தன் அறைக்கு விரைந்தாள். சிவானந்தின் அறையில் ஒரு ஓரத்திலேயே வர்ஷனாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அறைக்குள்போகும்போது யதுநந்தன் அமர்ந்து இவள் சிவானந்திடம் கொடுத்துச் சென்ற பைலைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிவானந்தைக் காணவில்லை.
 
Top