எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் ---20 ( இறுதிப் பகுதி )

நிலாச் செய்தி..

மறைந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் கூற்றுப்படி நம்மை அண்டத்தின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து வேற்றுக் கிரக மனிதர்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் யாரும் உதாசினப்படுத்த முடியாது. ஏன் நாம் தேடும் அந்த வேற்றுக் கிரக பிறவி ஏதாவது ஒரு கிரகத்தின் நிலாவில் வசிக்க கூடாது ?

இதுவரை பச்சையன்..

விமலாவின் வீட்டில் இருந்து வெளியேறிய நிலாமகளும், பச்சையனும் பூங்காவில் பேசிக்கொண்டு இருக்கின்றர். அந்த சமயத்தில் பச்சையன் தன் காதல் தொடருமா என தெரியவில்லை என்று தெரிவிக்க நிலா அதிர்ச்சி அடைகிறாள். இனி..

பச்சையன் – 20 ( இறுதிப் பகுதி )

பச்சையன் சொன்னதைக் கேட்டு நிலாமகளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. தன் இதயம் இந்த நேரத்தில் வெடித்து தன் உயிர் இந்த நேரம் பிரியக்கூடாதா என ஏங்கினாள். சற்று முன் காதலினால் ஆனந்தக் கண்ணீர் விட்டவள் தற்போது மனம் உடைந்து கதறி அழ முற்ப்பட்டாள். ஆனாலும் தன்னை தேற்றிக் கொண்டு பச்சையனை கேட்டாள்.

“ ஏன் என்னை அல்லது எங்களை அதாவது இந்த மனிதப் பிறவிகளை உனக்குக் பிடிக்கவில்லையா ?”

“ அப்படி எல்லாம் இல்லை. உண்மையில் எனக்கு மிக பிடித்தவர்கள் நீங்கள்தான். நான் தங்கியிருந்த ஓட்டலில் என்னுடைய பெயரை நோட்டில் பார்த்திருப்பாய் ‘ மேன்ரோப்’ என்று எழுதியிருந்தது இல்லையா ? அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா ? ‘ மனித இயந்திரம் “’.

“ மனித இயந்திரமா ? அப்படியானால்…”

“ நான் இயந்திர மனிதன் இல்லை. மனித இயந்திரம் “

“ இரண்டும் ஒரே அர்த்தம்தானே, இதில் என்ன வித்தியாசம் ?”

“ இயந்திர மனிதனில், மனித உணர்வுகளை கொண்டு வரமுடியும், ஆனால் எல்லாமே இயந்திரதனமானது. இங்கு மனித இயந்திரம் என்பது மனிதனும் இயந்திரமும் சேர்ந்த வினோதக் கலவை. MAN WITH ROBOT = MAROB. மனித நரம்புகளும், வயர்களும் சேர்ந்தது. சிலிக்கான் சிப்புகளும், உடல் செல்களும் கலந்தது. இதயமும் , பேட்டரிகளும் இணைந்தது”.

நிலா திகைத்துப் போனாள். ’தமிழில் இப்படி ஒரு வார்த்தை விளையாட்டா ? இப்படி ஒரு படைப்பா ? இது என்ன பிறவி ?

“ ; நீ யார் ? எங்கிருந்து வந்தாய் ? வந்த நோக்கம் ? “

“ உங்கள் பூமியிலிருந்து பல லட்சம் கிலோ மீட்டர் தாண்டி உங்கள் டெலஸ்கோப்பின் தூரத்திற்கு சிக்காத வகையில் உள்ள உங்கள் பூமி போன்ற ஒரு கிரகத்தை சுற்றி உள்ள ஒரு நிலாவில் வசிக்கும் கிரகவாசி நான் “

“ மீண்டும் கேட்கிறேன். அவ்வளவு தூரத்திலிருந்து வந்த நோக்கம் ?”

“ பூமியை வேவு பார்க்க”.

“ பூமியை வேவு பார்த்து……… ?”

“ உங்களை போன்று இயந்திர கலப்பு இல்லாமல் முழு மனித உடலாக மாற்ற ஆராய்ச்சி நோக்கத்தில் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்”

“ அதாவது இங்குள்ள யாராவது இரு மனிதர்களை கடத்தி, அதுவும் ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக அப்படிதானே “

“ சரியாகச் சொன்னாய். எங்களுக்கு உங்களை விட ஒரு அறிவு கூடுதல். எங்கள் மூதாதையர் உங்களை போன்று இருந்தவர் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் யாரும் இப்போது இல்லை. இந்த பரம்பரை யாரோ ஒருவன் செய்த தவறால் பிறந்தவர்கள். கடவுளின் படைப்பில் உண்டான இயற்கை பிறப்பில் எங்களுக்கு ஆர்வம் உண்டு. ஏற்கனவே நான் தேர்ந்து எடுத்து விட்டேன்”.

“ நீ மற்றும் அந்த ஓட்டல் வரவேற்பாளர் ஆண் “

நிலா அதிர்ந்து போனாள்.

“ நான் என்ன நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்கு ஆராய்ச்சி எலியா ? உனக்கு காதல் ஒரு விளையாட்டா ? என் காதல்தான் நீ விளையாட கிடைத்ததா ?”

“ இல்லை நிலா எனக்கு கொடுத்த வேலை முடிந்து விட்டது. குற்றாலத்திற்கு சற்று தள்ளி ஒரு மறைவான பகுதியில் என்னை இறக்கி விட்டு போய்விட்டார்கள். என்னுடைய கைகளும், கண்களும் என் உடல் இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எங்களுக்கு விருப்பம் இல்லாததால் எங்கள் கிரகத்தில் இருந்த பல பேர் இணைந்து செய்ய இருக்கும் ரகசிய ஆராய்ச்சி இது “.

“ அப்படியானால் புனிதமான காதல் பெயரில் என்னை அழைத்துச் செல்ல வந்தாயா ? அல்லது இழுத்துப் போக வந்தாயா ? பெண்கள் மனம் என்ன கால் பந்தா ? மாற்றி மாற்றி நீ திசை மாற்றி உதைப்பதற்கு ? நீங்கள் தாடியை வைத்து உங்கள் சோக முகத்தை மூடி விடுவீர்கள், ஆனால் நாங்கள் நொந்து , வெந்து தூக்கில் தொங்கவா ?’. இவ்வளவு நாளாக நீ என்னைப் பார்த்தது உடல் ஆராய்ச்சி சம்பந்தமாகதானா , காதல் இல்லையா ? என்ன ஏழறிவு ஜென்மம் நீ ? நான் வரவில்லையென்றால் என்னை தூக்கிச் சென்று விடுவாயா ? சொல்லடா , சொல்லு ?”

ஆவேசத்தில் பேசி முடித்ததில் மேல் மூச்சு, கீழ்மூச்சு நிலாவுக்கு வாங்கியது.

“ என்னை நீ தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றாய். என்னை சீக்கிரம் வரச்சொல்லி இரண்டு நாட்களாக செய்தி வந்து கொண்டு இருக்கின்றது. இன்று இரவு நான் உன்னுடனும், அவனுடனும் கிளம்ப வேண்டும். என்னால் இனிமேலும் காலம் தாழ்த்தி தப்பிக்க முடியாது”.

“ எங்களை எப்படி கண்காணிக்கின்றீர்கள் ?”

“ உங்களுடைய செயற்கைகோள் தகவல்கள், எஸ்.எம். எஸ் , தொலைதொடர்புகள் அனைத்தும் உறிஞ்சக் கூடிய அதாவது கிரகிக்கக் கூடிய சக்தி வாய்ந்த கருவிகள் எங்களிடம் உள்ளது. உங்கள் பூமியைப் பற்றிய அனைத்து தகவல்களும், மொழிகளும் எங்களுக்கு அத்துப்படி. தேவை என்றால் நாங்கள் எப்போது வேணும்னாலும் இங்கே வரலாம் உங்கள் பூமியை கைப்பற்றி அழிக்க”

“ அப்படியானால் நீ அன்புக்குரியவன் இல்லையா அழிவுக்குரியவனா ?”

பச்சையன் சில நிமிடங்கள் நிலாவைப் பார்த்தான். அந்த சக்தி மிகுந்த கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது, உடல் குலுங்க ஆரம்பித்தது. நிலா திகைத்துப் போய் பார்த்தாள்.

‘ இவன் ஏதும் நடிக்கிறனா ? நம்மை ஏமாற்ற முயற்சிக்கின்றானா ? இவனை எப்படி நம்புவது ?’

இவள் மனம் ஒரு ஆண்மகன் தன் முன் அழுவதைக் கண்டு இளகியது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து பின் மெதுவாக அவன் கரங்களை மெதுவாக ஆறதலாக தொட்டாள். பச்சையன் சற்று நிதானித்து பேச ஆரம்பித்தான்.

“ நான் நிஜம், நீ நிஜம், நம் காதல் நிஜம். இந்த பூமிக்கு வருவது இது முதல் தடவை என்றாலும் இங்குள்ள ரத்த உறவு சம்பந்தம், சகோதர உறவு, நட்பு என அனைத்து வித உறவுகளும் என் மனதை பாதித்து விட்டது. இந்த அழகான பூமியை நீங்கள் வேண்டுமானால் நாசப்படுத்தலாம், ஆனால் உங்கள் உறவுகள் புனிதமானவை . எங்களிடம் அப்படி எல்லாம் எந்த உறவும் இல்லை. வலுக்கட்டாயமாக சேர்ந்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவார்கள். எனக்கு கூட இங்கு வந்த பிறகுதான் அனைத்து விதமான உணர்வுகளும் எனக்குள் பிறந்து இருக்கின்றது, காதல் உட்பட”

“ இப்படியும் பேசுகிறாய், அப்படியும் பேசுகிறாய் . என்னை நம்பச் சொல்கிறாயா ? இன்னுமா என்னை காதலிக்கறாய் ? காதலை களிமண்போல உன் இஷ்டத்திற்கு பிசைந்து கொண்டு இருக்கிறாய்”.

பச்சையன் எழுந்தான். அவளை கூர்ந்து பார்த்தான். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான். நிலா அடுத்து என்ன சொல்லப் போகிறான் என ஆர்வமாய் அவன் முகத்தைப் பார்த்தாள்.

“ நான் உங்கள் இருவரையும் அழைத்துச் செல்லப் போவதில்லை என முடிவு செய்திருக்கின்றேன். உன் காதலால் நீ மட்டுமல்ல உன் பூமியும் காப்பாற்றப்பட்டது . காதல் உணர்வு இவ்வளவு இனிமையானதா ? போதை ஏற்றக் கூடியதா ? என்னால் உன் கண்களின் காந்தப் பார்வை, காதல் பார்வைக்கு முன் நான் பனியாக உருகி கரைகிறேனடி”

நிலாவின் கோபம் படக்கென்று இறங்கியது. அவன் தன் மேல் கொண்ட காதலை எண்ணி உருகினாள்.

“ பச்சையன், இதனால் உங்களுக்கு ஏதாவது …..?”

“ என் காதலுக்கு உத்தரவாதம் உண்டு என நினைக்கின்றேன், ஆனால் என் உயிருக்கு ?”நான் மீண்டும் திரும்ப வருவேனா ? நம் காதல் தொடருமா ? தெரியவில்லையடி.

நிலா கலங்கிப் போய் நின்றாள்.

“ பச்சையா, நான் உன் கூட வரத் தயார். என் உயிரைக் கொடுத்து உன்னை எப்படியாவது காப்பாற்றுவேன் “

பச்சையன் நிலாமகளின் தலையில் ஆதரவாய் கைவைத்தான். அவள் காதலின் உறுதியை கண்டு வியந்தான்.

“ நான் இங்கு வந்த முதலில் அதிக கோபத்தில் உணர்ச்சி வசப்படுபவனாக இருந்தேன். காதல் உணர்ச்சி உன்னால் உண்டான போது அனைத்து வித தீய எண்ணங்களும் என்னை விட்டு போய் விட்டன. ஏழாம் அறிவில் ஒன்று குறைந்து ஆறாக மாறி விட்டது போல தோன்றுகிறது”.புதைத்து வைத்த மூங்கில் விதை வளர சில வருடங்கள் எடுத்து திடீரென வேகமாக வளருவது போல, காதல் என்னில் வேகமாக வளருகிறதுடி. என்ன செய்வேன் நான் ?”

இருவரும் காதலில் கரைந்து போனார்கள். காதல் அவர்களை கரைத்துக் கொண்டு இருந்தது. நேரம் கடக்க இரவு ஆனது.

பச்சையன் எழுந்து முன் நடக்க, நிலா பின் நடந்தாள். ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான ஒரு மேடான பகுதிக்கு பின்னால் வந்தார்கள்.

“ எந்த ஒரு ரேடாராலும் கண்டு பிடிக்க முடியாத விண்கலம் எங்களது. இருட்டிலும் எங்களால் ரொம்ப தூரத்தை தாண்டி பார்க்க முடியும். அதோ பார் “

பச்சையன் ஒரு குறிப்பிட்ட பகுதியை காட்ட முதலில் ஒன்றும் தெரியவில்லை. பின்னால் சற்று கண்ணை சுருக்கிப் பார்க்க அந்த கரிய நிற பெரிய வட்ட வடிவமான ஒன்று நின்றிருந்தது. ஊதுபத்தி வெளிச்சத்தை விட குறைவாய் இரு புள்ளிகள் தெரிந்தன். அந்த புள்ளிகளுக்கு இடையே இருட்டில் யாரோ நின்று இருந்தார்கள்.

பச்சையன் நிலா மகளின் இருகைகளை இறுகப் பற்றிக் கொண்டான். குணிந்து மென்மையாக முதல் முறையாக முத்தமிட்டான். பின் கைகளை விடுவித்து மெதுவாய் நடந்து இருட்டில் கரைந்தான் . அந்து உருவத்திற்கும் இவனுக்கும் இடையில் ஏதோ சிறிய வாக்குவாதம் நடப்பது தெரிந்தது. சில நிமிடங்கள் கழித்து மெதுவாய் அந்த விண்கலத்தில் உள்நுழைந்தது தெரிந்தது.

நிலா கண்ணீர் மல்க பார்க்க அந்த தட்டு ஒரு நொடியில் மேலேறி மின்னலாய் மறைந்தது.

நிலா மெதுவாய் திரும்பி நடக்க எதேச்சையாக தன் கைகளைப் பார்க்க அவை மெல்லிய இளம் பச்சை நிறத்தில் பளபளத்தன. தன் குணமாக்கும் சக்தியை அவளிடம் விட்டுப் போயிருந்தான் பச்சையன்.

நிலா நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.

ஏதோ ஒரு நிலவிலிருந்து வந்து நிலா மகளை காதலித்து நிலவுக்குச் சென்றவன் மீண்டும் நிலாவை காதல் கொள்ள வருவானா ? பூமியை காப்பாற்றுவானா ?

நிலா காத்திருக்கின்றாள், நாமும் காத்திருக்கலாமா ?

உண்மைக்காதல் யாரையும் தோற்க வைக்காது.

இனி எல்லாம் சுபமே……

பச்சையன் -2வது பாகத்தில் சந்திக்கலாம்.
 
Top