எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 5 - கதை தீரி

NNK-53

Member
பிப்ரவரி 14, நேரம் காலை 9:30

கோவை மத்தியக் காவல் நிலையம் அருகிலிருக்கும் உணவு விடுதி.

“தாலியே கட்டிட்டானா?”அதிர்ச்சியில் காபி கோப்பையைக் கீழே வைத்தாள் ஜான்சி.

“ம்ம்..” மேலும் கீழும் தலையாட்டி இதழ்ப் பிதுக்கினாள் சுதா.

“அக்கம் பக்கம் யாருமே வந்து அவனைத் தட்டி கேக்கலையா?”

“எப்படி கேட்பாங்க? பழையபட்டி ஜமீன் குடும்பத்து வாரிசு. கிட்டத்தட்ட அந்த ஊரு ராஜா மாதிரி. அவனைப் போய் யாராவது தட்டிக் கேட்க முடியுமா?”

“உஹும் அதுவும் சரி தான். ஆனாலும் அவனை மட்டும் இதில் குத்தம் சொல்லி ஒரு பயனும் இல்லையே. ப்ச்…! இப்ப வரப் பல படங்களில் இப்படித் தான காட்றாங்க, அதாவது ஒரு பொண்ணை அடக்கனும் னத் தாலி கட்டினப் போதும், அவ அடங்கிடுவா அப்படிங்கிற மாதிரி. ம்ம்…! அந்த மாதிரி காட்சிகளைப் பார்த்து வளர்ந்தவன் மூளைக்குள்ள அந்த மாதிரி சிந்தனை தானே வரும். ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல சுதா? நீ எப்படித் தாலியைக் கழட்டி எரிஞ்ச?” என்று விளித்தாள் ஜான்சி.

“ப்ச்…! யு சி ஜான்சி… என்னைப் பொறுத்தவரைக்கும் தாலிங்கிறது இருவருடைய பரஸ்பர அன்பு, நம்பிக்கை, உரிமை இதனுடைய அடையாளம். அந்த அடையாளம் தாலியாக மட்டும் இருக்கனும்ங்கிற அவசியம் கூட இல்ல, ஏன் அது மோதிரமாகவோ, செயினாகவோ இவ்வளவு ஏன் ஒரு கீரிடிங் கார்டாகக் கூட இருக்கலாம். ஒரு காதலிக்கு… அவ காதலன் கொடுக்கிற ஒரு ரிப்பன் கூட பொக்கிஷம் தான். அதைக் கூட அவ தாலிக்கு இணையாகத் தான பார்ப்பா, இதுவே அவளுக்குப் பிடிக்காதவன் ஏதாவது கொடுத்தா, அது வைரமாகவே இருந்தாலும் அது அவளைப் பொறுத்தவரை வெறும் கல்லு தான். எனக்கும் அவன் தாலி கெட்டும் போது அப்படித் தான் தோணுச்சு.” காபி அருந்தியபடியே பதில் கொடுத்தாள் சுதா.

“உண்மையிலேயே உன்ன பாராட்டனும் சுதா. அன்பின் அடையாளமா இருக்க வேண்டிய தாலியைப் பெண்களுக்கு எதிரான ஆயுதமா உபயோகப்படுத்துற சில ஆண்களுக்கு நீ செருப்படி கொடுத்திருக்க. வெல்டன் சுதா யு ஆர்ச் சோ பிரேவ்.” மனதார பாராட்டிய ஜான்சிக்கு வெறும் புன்னகையை மட்டுமே பதில் சுதாவிடமிருந்து.

“சரி சுதா அதுக்கு…” என்று ஜான்சி வாய் திறக்கும் முன்பே, “மேடம் உங்களை இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாங்க.” டீ கொடுக்கும் பையன் வந்து தகவல் கூறிவிட்டுச் செல்ல, பட்டென்று எழுந்தாள் அவள்.

நெஞ்சை நிமிர்த்தி தலையில் தோப்பியை அணிந்தபடியே, “சுதா இந்த இடத்தைவிட்டு எங்கும் போகாத நான் இப்ப வந்துடுவேன்.” என்று ஆணையிட, “ஜான்சி பிளீஸ்… நான் அவரை உடனே பார்க்கப் போகனும்.” சிணுங்கினாள் சுதா.

“எனக்கு முழுக் கதையும் சொல்லாம நீ எங்கேயும் போகக் கூடாது. யு ஆர் இன் மை கஸ்டடி. காட் இட்.” மென்னகையுடன் ஜான்சி சென்றிட, “ஐயோ ஜான்சிஇஇ…!” பொய்க் கோபத்துடன் சுதா.

******************************
பிப்ரவரி 14, 1998…
காலை 9:36
கோவையிலிருக்கும் மிகப் பெரிய மஸ்ஜித்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற திருக்குர்ஆனின் வசனத்தின் பொருள் என்ன? அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் என்பதாகும். அளவற்ற அருளாளனா என்னன்னு யாருக்காவது தெரியுமா?” என்று இமாம் அந்த மஸ்ஜித்யில் பேருரையாற்றிக் கொண்டிருக்க, அவருக்கு முன்னாலிருந்த இளைஞர்கள் சிலர் ஒருவர் கண் ஜாடைக் காட்டிவிட்டு நைஸாக அவ்விடத்தை விட்டு நகன்று, வெளியே தூணில் சாய்த்திருந்த அல்உம்மா இயக்கத்தின் தலைவன் சையது அஹமத் பாட்ஷாவிடம் வந்தனர்.

“பிஸ்மில்லாஹ் உஸ்தாத்…” பாட்ஷாவிற்குச் சலாம் வைத்தனர் அவ்விளைஞர்கள்.

“வ அலைக்கும் ஸலாம்… ஆமா சொன்ன வேளை என்ன ஆச்சு?” மெல்லிய குரலோடு புருவம் உயர்த்தினார்ப் பாட்ஷா.

“நீங்க சொன்ன வேலையைப் பக்ருதீன் பண்ணிட்டான் உஸ்தாத். நீங்க சொன்ன மாதிரியே அந்தச் சைக்கிள ரயில்வே ஸ்டேசனில் நிப்பாட்டிட்டான்.” பதில் கொடுத்தான் அன்சாரி.

“அவன் ஏன் இன்னும் மசூதிக்கு வரல?”

“அவனுக்கு என்னமோ பயமா இருக்காம். அதான்…!” என்று அன்சாரி இழுக்க,

“க்யா? இன்னும் என்ன பயம் அவனுக்கு? அவனை மாதிரியே இங்க யாருக்காவது பயமா இருக்கா? ஹாங்! சொல்லுங்க பயமா இருக்க?” என்று பாட்ஷா அதட்டவும், அனைவரும் தலை கவிழ்ந்தனர். “அவனுங்க நம்ம மசூதியை இடிச்சிருக்காங்க. நம்ம சொந்தங்களையும் நம்ம வீட்டு பொண்ணுங்களை எல்லாம் நாசம் பண்ணிருக்காங்க. யா அல்லாஹ்! ம்ம்… அதை எல்லாம் மறந்திட்டீங்களா?! ஹாங்..” என்று அவர் உரும, அப்போதும் அங்கே அமைதியே நிலவியது.

அனைவரையும் ஒரு முறைப் பார்வையால் அளவிட்டபடியே, “ஹான் சொல்லுங்க, இவ்வளவுக்கும் காரணமான அந்தச் சைத்தான்கி பச்சா…! லால் கிருஷ்ண அம்பானி நம்ம ஊருக்கே வந்து பிரசாரம் பண்ணலாமா? ஹாங் பண்ணலாமா?” என்று கர்ஜிக்க, “இல்ல அவனைச் சும்மா விடக் கூடாது. அவன் உயிரோடா இந்த மண்ணை விட்டுப் போகக் கூடாது.” வெறியுடன் கூச்சலிட்டனர் ஏனையவர்கள்.

*****************
பிப்ரவரி 14, காலை 10.
மத்தியக் காவல்நிலையம் அருகிலிருக்கும் உணவு விடுதி.

“நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ஆல் இண்டிய ரேடியோ. செய்திகள் வாசிப்பது நாராயண சுவாமி, காதலர்த் தினம் முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு. காவேரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக முதல்வர்ப் பேச்சு. இன்று கோவையில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள, எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் முக்கிய தலைவருமான திரு எல். கே அம்பானி இன்று மாலைத் தமிழகம் வருகிறார்…!” என்ற வானொலி செய்திகளைக் கேட்டபடியே ஓர் இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தாள் சுதா.

கன்னத்தில் கை வைத்தபடியே சுதா அமர்ந்திருக்க, அவளது தோளை இடித்து, “ப்பேஆஆ..” என்று கத்தினாள் ஜான்சி.

“அட இது என்ன விளையாட்டு?” சிரித்தபடியே சுதா திரும்பிட, “வா சுதா நாம உக்கடம் போகலாம்.” கையிலிருந்த கோப்புகளைக் கெட்டியாகப் பிடித்த கொண்டு ஜான்சி அழைக்க, “ஹாங் உக்கடத்திற்காக நீயும் நானுமா? எப்படி?” ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினாள் சுதா.

“ஆமா உக்கடம் போகிறோம். இந்த ஃபயிலை அங்க போய் குடுக்கனுமாம் டியூட்டி கொடுத்திருக்காங்க.”

“சூப்பர் டி.”

“நாம போலிஸ் ஸ்டேசன்ல இந்த ஃபயிலைக் கொடுக்கிறோம். அப்பறம் உன் புருசனைப் போய் பார்க்கிறோம்.” குறும்பாக அவள் கூற, “ஏய்…” என்று முறைத்தாள் இவள்.

இருவரும் பேருந்தில் ஏறி அமர, மிதமான வேகத்தில் பேருந்தும் உக்கடம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

“ம்ம்.. சொல்லு அதுக்கு அப்பறம் என்ன நடந்துச்சு? உன் அண்ணன் அவனை என்ன பண்ணாரு? அதுக்கு அப்பறம் அவனை எங்க பார்த்த?” கேள்விகளை அவள் அடுக்க, அந்த நாளை நினைவு கூர்ந்தவளின் நினைவலைகள் பின்னோக்கிச் செல்லத் தொடங்கின.
***************************
மார்ச் 18, 1993
நேரம் மாலை 6:15…

திவாகரின் ஊர்த் திருவிழா முடிந்து இப்போது சுதாவின் ஊரில் பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றோடு ஒன்பது நாள் நிறைவேறியிருந்தது.
முன்பெல்லாம் விடிய விடியக் கோவிலே கதியென்று கிடந்த சுதாவை அவளின் பாதுகாப்பு கருதி ஆறு மணிக்கே வீட்டிற்கு அனுப்பி வைத்தான் கதிர்.

அன்றும் அப்படித் தான் ஒயிலாட்டம், பட்டிமன்றம், தெருக்கூத்து என்று திருவிழா களைகட்டிக் கொண்டிருக்க, அவையெல்லாம் காண முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தாள் சுதா. அவளுக்குத் துணைக்குச் சிவதாஸும் பாட்டி செல்லதாயியும்.

“கதிரண்ணா எப்பண்ணா வரும்?” என்று சுதா கேட்க,

“மில்லில் வேலையிருக்காம், முடிஞ்சதும் அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டு வரேன் னு சொல்லிச்சு.” ஏதோ பிரபலமான எழுத்தாளருடைய க்ரைம் நாவலை மும்முரமாகப் படித்துக்கொண்டே பதில் கூறினான் சிவதாஸ்.

“உஹும்… சரிண்ணே.” பெருமூச்சுடன் கூறியவள் இரவு உணவு சமைத்து வைத்துவிட்டுக் கொல்லைப்புறம் சென்றவள் கிணற்றில் தண்ணீரை இரைத்துக் குளிக்கும் போதே எதோ நிழலாடுவது போல் தோன்ற, “யாரு? யாரு?” சிறிது பயத்துடன் சுதா சத்தம் கொடுக்க, “மியாவ்…” என்ற சத்தத்துடன் பூனை ஒன்று மதில் மேல் ஏறிச் சென்றது.

“பூனையா?” அசட்டுச் சிரிப்புடன் பிடரியில் அடித்துக் கொண்டவள் இரவு உடையை அணிந்து கொண்டு வீட்டிற்குள் வர, சிவதாஸோ தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தான்.

“இன்னைக்கு கேபிளில் என்ன படமாம் சுதா?” ஒவ்வொரு பொத்தானாக அழுத்தியபடியே அவன் கேட்க, “இந்த டைம்ல புதுப் படம் தான் போடுவான்ண்ணா.” பதில் கொடுத்தபடியே அவன் அருகில் அமர்ந்தாள் சுதா.

“ஆமா சன் டிவின்னு ஓன்னு வந்துச்சே அதுல என்ன ப்ரோக்ராம் சுதா?”

“இரண்டு மணி நேரம் தான்ண்ணா அந்தச் சேனல் வருது. அதுவும் ஒரு அக்கா வந்து ஏதாவது பாட்டு மட்டும் போடுறாங்க. தூர்தர்சன் ல கூட இப்ப ஹிந்தி நியூஸ் தான் வரும். கேபிள் ல வையிண்ணா. நேற்று கூட சின்ன கவுண்டர் போட்டாங்க.”

அவனும் அவ்வாறே செய்ய, பெரிய கவுண்டர் பொண்ணு என்ற படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தைப் பார்த்தபடியே மூவரும் உணவை உண்டு முடித்தனர்.

பாடம் என்பது தெரியாமல் பாட்டி, “என்ன பொண்ணு டி இவ. அவன் அப்பன் வளர்ப்பு சரியில்ல.” என்று மானாவாரி திட்ட, “ஐய்யோ பாட்டி கொஞ்சம் அமைதியா தான் சாப்பிடேன்… வரவர உன் தொல்லைத் தாங்க முடியல, போனவாரம் இப்படித் தான் மன்னன் படம் போடும் போது விஜயசாந்தியைத் திட்டின, இப்ப கௌதமியைத் திட்டுற. அவங்க எல்லாம் நடிக்கிறாங்க னு இந்தப் பாட்டிக்கு ஏன் தான் புரிய மாட்டிக்கிதோ” பெரிதாய் குறைபட்டாள் சுதா.

அங்கே சரத்குமார்க் கௌதமியைத் துரத்தி துரத்தி தாலி கட்ட, இவளுக்கோ திவாகரை நினைத்து உள்ளம் கொதித்தது.

கோபத்தில் தலையைப் பிடித்துக் கொண்டவள், “அண்ணாஆஆ டிவியை அஃப் பண்ணுண்ணாஆஆ.” என்று கத்த, அவளின் மனநிலையைப் புரிந்து கொண்ட சிவாவும் உடனே தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து வைக்க, அருகில் அமர்ந்திருந்த தாய்க்கிழவியோ, “ஏன்டி படம் நல்லா தான போகுது. அந்தப் பெட்டியைப் போடு டி பார்த்துட்டுத் தூங்கிறேன்.” முகம் சுளித்தாள் பாட்டி.

“அடியாத்தி, அம்மா டா யாரு பேச்சி வாங்குறது? நீ தூக்காம பிபி யை ஏத்திட்டு அம்மாவத் திட்டுவ, அம்மாவோ என்ன திட்டும், இது எனக்குத் தேவையா? ஒழுங்கா வா பாட்டி மாத்திரைத் தரேன் பேசாம தூங்கு.” உருட்டி மிரட்டி அவளது அறைக்கு அழைத்துச் சென்றவள், மாத்திரையை எடுத்துப் பார்க்க, அதில் ஒன்று குறைந்திருந்தது.

“பாட்டி ஒரு மாத்திரைக் குறையுற மாதிரி தெரியுதே! நேற்று நான் தானே கொடுத்தேன். நான் பார்க்கும் போது அஞ்சு இருந்துச்சே! இப்ப நாளு தான் இருக்கு. என்ன பாட்டி கடிச்சா மாவு மாதிரி இருக்குதுனு அள்ளி வாயில போட்டுக்கிட்டியா? அப்படி எதுவும் செஞ்சிடாத! அப்புறம் உன்னைச் சுடுகாட்டுல தான் வைக்கனும்.” நக்கலாகச் சுதா கூற, “போடிப் போ இவளே! நானா சுடுகாட்டுக்குப் போவேன், வைரம் பாய்ந்த கட்டை டி நானு. தாயும் மகளும் என்னைச் சுடுகாட்டுக்கு அனுப்புறதுலயே குறியா இருக்காளுக.” பொருமினாள் அவள்.

“இப்படி சொல்லிட்டே இரு. வாயில சூடு போடுறேன்.”

“நீ செய்தாலும் செய்வ டி யம்மா.” என்ற பாட்டி காலை நீட்டி கட்டிலில் படுத்துக் கொள்ள, அவளது காலை இதமாகப் பிடித்துத் தூங்க வைத்தாள் சுதா.
சிவாவோ விட்ட இடத்திலிருந்து நாவலைப் படித்துக் கொண்டிருந்தான்.

சுதா அடுப்படியில் பாலைக் காய்ச்சி இருவருக்கும் கலந்து கொண்டிருக்க, கொல்லைப் புறத்திலிருந்து எதோ விழும் சத்தம் பலமாகக் கேட்டது.

'என்ன சத்தம்' என்று பதறிய அண்ணன் தங்கை, இருவரும் வேகமாக ஓடிப் போய் பார்க்க, கொல்லையிருந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து கீழே விழுந்து கிடந்தது.

“சே இதுக்கா இவ்வளவு பயந்தோம் பூனை தான் உடைச்சிருக்கும். நீ வா சுதா நாம உள்ள போகலாம்.” அசட்டுச் சிரிப்புடன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான் சிவா.

பாலை அவனுக்குக் கொடுத்தவள் தனக்கான பாலைச் சமையலறையில் எடுக்கப் போக, அதுவோ தரையில் கொட்டிக்கிடந்தது.

“அச்சசோ பாலு கொட்டிப் போச்சே! எல்லாம் இந்தத் திருட்டு பூனை செய்ற வேலை!” புலம்பியபடியே சமையலறையைத் துடைத்தவள் கூடத்திற்கு வர, சிவா அப்படியே மெது இருக்கையில் சாய்ந்து கிடந்தான்.

“அண்ணா தூங்கப் போகலையா?” என்று இவள் கேட்க, அவனிடத்தில் பதில் இல்லை. “அண்ணாஆஆ அண்ணாஆஆ..” அவனது தோளைத் தட்டி அழைக்க, நினைவின்றிக் கிடந்தான் சிவதாஸ்.

“சிவா அண்ணா இப்படித் தூங்க மாட்டானே.” புருவம் இடுக்கி யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது. இதற்கு எல்லாம் காரணமானவன் திவாகர் தான் என்று.

மிரட்சியுடன் அக்கம் பக்கம் நோட்டமிட்டவள் வேக வேகமாகத் தொலைப்பேசியின் பொத்தானை அழுத்தி விழா கமிட்டினருக்கு அழைப்பு விடுத்தாள்.

‘அப்பா அங்க தான் இருப்பாரு. அவரை உடனே இங்கே வரச் சொல்லனும். ஹா..! பிக் அப் பிக் அப்…” நகத்தைக் கடித்த படியே சுதா இருக்க, “ட்ரிங் ட்ரிங்…” என்ற தொடர்ச் சத்தம் மட்டுமே அவள் காதில் தொடர்ந்து விழுந்தது.
' சே.. என்ன இது யாருமே ஃபோனை எடுக்க மாற்றாங்க' பதற்றத்துடன் அவள் இருக்க, அவளது கையிலிருந்து ஃபோனைப் பிடுங்கி ரிசிவரில் வைத்தது ஒரு கரம். அது திவாகரின் வலிய கரம்.


தொடரும்..

இந்த நாவல் ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எழுதப் பட்டது. அது என்ன உண்மை சம்பவம் என்று கண்டு பிடிங்க பார்க்கலாம்.

மறக்காம லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க செல்லங்களே..
 

Saranyakumar

Active member
1993 =ல் நான் +2 படிச்சுட்டு இருந்தேன் ஆனாலும் மறந்துட்டேன்😁
 
Top