எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -3

@38

Moderator
3

மொத்தத்துல உங்க பிரண்டும் அவர் மகளும் நல்லா இருக்கணும்னு என் பையன் வாழ்க்கைய முடிச்சு கட்டிட்டீங்கல்ல என அழுதபடியே பெருமாளை பார்த்து சாந்தி கேட்டார்.

இப்போ உனக்கு என்ன பிரச்சனை.
என் பையன் அந்த புள்ள கூட சந்தோசமா தான் இருக்கான் நீ தான் தேவை இல்லாம கண்டதையும் போட்டு குழப்பிக்கிட்டு இருக்க விசேஷ வீடு நாலு சொந்த பந்தம் வந்திருக்கற இடத்துல என்னை பேச வைச்சுறாத ஒழுங்கா போய் உள்ள வேலையை பாரு.


இப்படியே சொல்லி சொல்லி என் வாயை அடிச்சிடுங்க.. மகாராணி கழட்டி போட்ட துணியை கூட என் புள்ளைதான் தூக்கிட்டு வர்றான்.

இப்போ பையன் அழுக்கு துணியை எடுத்துட்டு வந்தது தான் பிரச்சனை அவ்வளவுதானே நாளைக்கு நீ குளிச்சிட்டு துணியை போட்டுட்டு வா நான் எடுத்து வைக்கிறேன்..அப்போ உனக்கு பெருசா தெரியாதுல்ல என்றபடி அவர் எழுந்து செல்ல.

இந்த மனுஷனுக்கு எது சொன்னாலும் புரியாது புரிய வைக்கவும் முடியாது என் வாழ்க்கையே போயிடுச்சு என முணுமுணுத்தபடி சென்றார்.

என்னப்பா இது துணிபூரா ஈரமா இருக்கு என மருமகளை பார்த்தபடியே மகனிடம் கேள்வி கேட்டார்.

அருவிகரை ஓரமா வந்தேன்பா தண்ணிய பார்த்ததும் இறங்கிட்டா.


விளையாட்டு புள்ள.. சரி போன காரியம் முடிஞ்சுதா.


முடிஞ்சிடுப்பா இன்னைக்கு நைட்டு இல்லனா நாளைக்கு காலைல டெம்போல ஆட்டை அனுப்பிவைக்கறதா சொல்லிருக்காரு ..இந்தாங்கப்பா மீதி பணம் என்று பாக்கெட் மீது கை வைக்க.

அது உங்கிட்டயே இருக்கட்டும் பிறகு கணக்கு பார்த்துக்கொள்ளலாம் என்றவர் அப்புறம் கார்த்தி என்று தயங்கிப்படியே இன்னும் மருமக மாத்திரை சாப்பிட்டுட்டு தான் இருக்காளா.

பெருமூச்சு விட்டவன் சாப்பிடலன்னா ரொம்ப முரட்டுதனமாகிடுவா என்னால சமாளிக்க முடியாது.


எதுவா இருந்தாலும் அந்த பிள்ளையை விட்டிடக்கூடாது பா அவங்க அப்பனுக்கு நான் வாக்கு கொடுத்து இருக்கேன் என்று கூறவும்.

நீங்களே விட சொன்னா கூட நான் விட மாட்டேன் பா அவளை மாதிரியான ஒரு குழந்தையை ஹேண்டில் பண்றதும் கூட நல்லாதான் இருக்கு.

ஒருவேளை இந்த குணத்தை பார்த்து தான் அவங்க அப்பன் கட்டிக் கொடுத்தா உனக்கு தான் கட்டிக் கொடுப்பேன்னு ஒத்தை கால்ல நின்னான்‌ போல எப்படியோ நல்லா இருந்தா சரி.

சீக்கிரமா எல்லாம் சரி ஆகட்டும் இதே மாதிரி ஊரை கூட்டி கறி விருந்து போட்டிடனும் உன் சார்பா.


சரிப்பா அப்படியே செஞ்சிடலாம்.


அப்போ செலவெல்லாம் உன்னோடது தாண்டா அப்பன் கிட்ட இருந்து ஒத்த காசு வராது என கேலி போல கூறவும் .


சிறப்பாக பண்ணிடலாம் பா.


மணிக்கட்டில் தெரிந்த மூன்று கோடு போல தெரிந்த தழும்பை மெல்லவருடிய படி கட்டின் மீது அமர்ந்திருந்தவளை கண்டவன் அருகே சென்று தழும்பை பார்த்தபடி வலிக்குதா.

இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
பிறகு எழுந்து அவளது பேக்கில் எதையோ தேட.

கட்டிலில் அமர்ந்த படியே மெடிசன் என்கிட்ட பத்திரமா இருக்கு.

என்னோடதை எதுக்கு நீ எடுத்த..

கத்தாத மெதுவா பேசுன்னு உனக்கு பலதடவை சொல்லிக்கிட்டேன் கேட்கவே மாட்டியா என்றவன் உன்கிட்ட இருந்தா கண்ட்ரோல் இல்லாம சாப்பிடற அதான் எல்லாத்தையும் நான் எடுத்து வச்சுக்கிட்டேன்.

தூக்கம் வருது.

தூங்கு..

மாத்திரை போட்டா நல்லா தூங்கிடுவேன் தா.. கெஞ்சினாள்.

மாத்திரை போடாம தூங்க பாரு கறார் குரலில் கூறினான்.

இப்போ என சொல்லும் போதே கேவ ஆரம்பித்தவள் அவன் பார்க்கவும் அழனும் போல இருக்கு.

உணர்ச்சியற்ற பார்வையில் அவளை அருகே அழைத்தவன் அருகே அமரச்சொன்னான்.
தனது தோளில் சாய வைத்துக்கொண்டு அழு என்றான்.

அதை அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பொங்கி வெளியே வந்தது.

என்னை தப்பா நினைக்க மாட்ட தானே.

இல்ல.

நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேன்ல .

இல்ல

ஆமா நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்தறேன் எல்லாம் என்னால தான் நான் செஞ்ச தப்புதான் அழுகையுடனே அவளை குற்றம் சாற்றியவள் அடுத்த நொடி நீ ரொம்ப ஓழுக்கமா உன்னால ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை ஸ்பாயில் ஆகி இருக்கு உங்களுக்கெல்லாம் கில்டி ஃபீல் இல்லையா என்றாள்.

எதைக் கூறுகிறாள் என புருவ சுழிப்புடன் அவளை பார்த்தவன் அடுத்த நொடி முகம் இறுக இல்லை.

யூ..யூ..சீட்டர் தள்ளிப்போ என அவனை அடிக்க தொடங்கினாள்.

சரி என்றவன் அவனது வலிய கரங்களால் அவளது மென்மையாக கைகளை இறுக பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

திமிறினாள்..கடித்தாள் ஓருகட்டத்தில் ஓய்ந்து போய் மீண்டும் அழத்தொடங்கினாள்.கண்களில் நீருடன் காம் டௌன்..காம் டௌன் என உச்சந்தலையில் முத்தமிட்டு அவளை உறங்க வைத்தான்.

மனச்சிதைவு நோயின் உச்சத்தில் இருக்கும் மனைவியை சமாளிப்பது கூட அவனுக்கு பெரிய விஷயமாக இல்லை ஆனால் அந்த நோயின் தாக்கத்தால் அவள் படும் அவஸ்தையை தான் அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை .

இந்த ஒரு வருடம் நான்கு மாதத்தில் தினம் தினம் இதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ஆனாலும் மனதிற்குள் உறுதியாக நம்புகிறான்.

மனைவியை எப்படியாவது இந்த நோயிலிருந்து வெளிக்கொண்டு வருவேன் என்று.

இவனைத் தவிர வேறு யாராலும் அவளை சமாளிப்பது கடினம் என்பதால் தான் அவளின் தந்தையும் இவனின் தந்தையும் சேராத தண்டவாளமாக இருந்தாலும் சேர்ந்தே பயணிக்கட்டும் என சேர்த்து வைத்தது.


இருவருக்குமே தனித்தனியாக காதல் தோல்வி இருக்கிறது அவளின் காதல் தோல்வி மூர்க்கத்தனமாக மாற்றியது,மனச்சிதைவு நோயை பரிசளித்தது என்றால் இவனின் காதல் தோல்வி பக்குவம் அடைய வைத்தது.பொறுமையை கடைபிடிக்க கத்துக்கொடுத்தது.

இருவருமே வாழ்க்கையின் முக்கிய முடிவில் தோல்வியை சந்தித்ததால் சுலபமாக மற்றொருவரை புரிந்து கொள்ளவும் முடிகிறது.

சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கிவிட நன்றாக படுக்க வைத்து விட்டு பெட்ஷீட்டால் போத்தி விட்டு வெளியே வர தாய் கூடத்திலேயே காத்திருந்தாள்.

இதெல்லாம் என்னால பாத்துட்டு இருக்க முடியலடா அம்முவோட வளைகாப்பு முடிஞ்சதும் பேசாம இவளை அத்து விட்டிடு உனக்கு நான் வேற பொண்ணை பாக்கறேன்.

ம்மா..என கத்தி விட்டான்.உறவினர்கள் அனைவரும் என்னவென்று எட்டிப் பார்க்கவும் கடினப் பட்டு கோபத்தை உள்ளிழுத்தவன் இதுக்கு மேல ஏதாவது பேசினா உங்க கிட்ட என்னைக்குமே பேச மாட்டேன்.

இன்னைக்கு கீத்து இந்த அளவு கஷ்டப்படறானா அதுக்கு காரணம் நீங்களும் தாம்மா மறந்துடாதீங்க தேவையில்லாதை‌ எல்லாம் அவ கிட்ட பேசி சொல்லக்கூடாததெல்லாம் சொல்லி டிப்ரசனோட ஆரம்பத்தில் இருந்தவளை உச்சத்துல கொண்டு வந்து விட்டுட்டீங்க.

ஓஓ நீ பண்ணின தப்ப மறைக்க பழியை‌ தூக்கி எம்மேல போடுறியா நல்லா இருக்குடா நல்லா இருக்கு.


இல்லைன்னு சொல்ல வர்றீங்களாம்மா எந்த விஷயம் அவளுக்கு தெரியக்கூடாதுன்னு நான் மறைச்சு வச்சிருந்தேனோ அந்த விஷயத்தை சாதாரணமா அவ கிட்ட போட்டு உடைச்சிட்டீங்களேமா அதுக்கு அப்புறம் தான் தினமும் மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சா.

உங்க அண்ணன் பொண்ணை கட்டிக்கலன்னு இவ்வளவு வன்மமா அம்மா உங்களுக்கு

என்னடா பேசுற பெத்தவளை பார்த்து உன் குடும்பத்தை கெடுக்க வந்த மாதிரி சொல்லற நீ கஷ்டப்படுறதை பாத்து பொறுக்காமல் தானடா உனக்கு புத்தி சொல்ல வந்தது.

வேணாம் நீங்க புத்தியே சொல்லவேண்டாம். உங்களுக்கு பயந்து தான் அவ கல்யாணம் ஆன நாளிலிருந்து இங்க வரவே பயந்தா .


அம்முவிற்காக கெஞ்சி கூத்தாடி அவளை கூட்டிட்டு வந்திருக்கேன் நீங்க அவ முன்னாடி இப்படி பேசுனீங்கன்னு வைங்களேன் எதைப்பற்றியும் யோசிக்காம கிளம்பி போய்டுவா அவ போயிட்டான்னா நானும் பின்னாடியே போய்டுவேன்ம்மா அப்புறம் உங்களுக்கு என்னைக்குமே மகன் இருக்க மாட்டான் ஞாபகம் வச்சுக்கோங்க.


பேசுடா ..பேசு. எல்லாம் என் தலை எழுத்து உன்கிட்ட இருந்து இப்படி எல்லாம் வார்த்தை வாங்கணும்னு..ஒரு பொம்பளையோட சாபத்தை வாங்கினாலே குடும்ப உருப்படாதும்பாங்க நீ ஒன்னுக்கு ரெண்டு பேரோட சாபத்தை வாங்கி வச்சிருக்கியேடா அப்புறம் எப்படி. உன்னை நிம்மதியா இருக்க விடும் எல்லாம் விதி என கண்கலங்கியபடி செல்ல.

ச்சே என்ன வாழ்க்கை என நொடியில் வெறுத்து விட்டது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த பழிச்சொல்லோடு வாழ்வது யாரைப் பார்த்தாலும் இரு பெண்களின் வாழ்வை கெடுத்தவன் என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்தால் எப்படிதான் வாழ்க்கையை எதிர் கொள்வது.

என்ன நடந்தது என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும் பெற்றவளே புரிந்து கொள்ளவில்லை மற்றவர்களா புரிந்து கொள்ளப் போகிறார்கள் என ஒரு கையை தலையில் வைத்துக்கொண்டு மற்றொரு கையால் நெஞ்சே நீவி விட்டுக் கொண்டு வாசலுக்கு வர உள்ளே நடந்த சம்பாஷனைகள் அனைத்தையும் கேட்டு விட்டதற்கு அடையாளமாய் பெருமாள் மகனைப் பார்த்து தலையசைத்தார்.

அதன் பிறகு எங்கோ பார்த்துக் கொண்டு நாளைக்கு சொர்ணலதா வர்றா தகவலாக சொல்லி விட்டு நகர்ந்தார்.

இது வேறா.. சும்மாவே தாய் மத்தளம் இல்லாமல் நடனம் ஆட கூடியவர் இப்பொழுது சொர்ணா என்னும் மேளம் வந்தால் இவனை விட்டு வைக்க மாட்டார்.

அண்ணன் மகளின் மீது இருக்கும் பாசத்தை சொந்த மகனின் மீது துளி அளவு காட்டியினால் கூட இன்று இந்த நிலை அவனுக்கு வந்திருக்கா.

சற்றுமுன்பு சாபம் வாங்கியவன் என்று தாயார் கூறியது சொர்ணாவை மனதில் வைத்து தான்.

ஊராரின் முன்பு இரு பெண்களின் வாழ்க்கையை கெடுத்தவன் என்ற பெயரை யாருக்கும் தெரியாமல் கொடுத்தது அவள் தான்.. அவனுக்கு மட்டுமே தெரியும் அவள் அவனுக்கு கெட்ட பெயரை மட்டும் கொடுத்து விட்டுச் செல்லவில்லை காதல் தோல்வி என்னும் காலத்தால் அழிக்க முடியாத ஒரு தழும்பையும் இதயத்தில் பதித்து விட்டு தான் சென்றாள்.

நாளை இவன் அவளை எதிர்கொள்வதை விட பயங்கரமான நிகழ்வு கீர்த்தனா சொர்ணாவை நேருக்கு நேர் பார்ப்பது தான்.


ஏற்கனவே கணவனால் அவளின் வாழ்க்கை கெட்டுவிட்டது என்று முழு மனதாக நம்புபவள் இப்பொழுது நேரில் பார்த்தால்‌ கீத்துவின் உடல்நிலை மேலும் மோசமாகக் கூடும் எப்படி எதிர்கொள்வது.. மனைவி சொன்னது போல ஊருக்குள் வராமலே இருக்கலாமோ ,அப்படியே வந்தாலும் கூட மனைவியை அவளது தந்தையிடம் ஒப்படைத்
து விட்டு தனியாக வந்திருக்க வேண்டுமோ,முதல்முறையாக அவனின் வீடு அதிபயங்கரமாக அச்சுறுத்தியது.
 
Last edited:
Top