எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-12

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத_NNK70

அத்தியாயம்-12

அன்று இரவு படுக்கையில் விழுந்த இனிக்கு தூக்கம் ஏனோ தூரமாகிப் போனது. புதிதாகத் தன்னுடன் ஒட்டிக் கொண்ட ஆணவனின் ஸ்பரிசம் அவளைப் பெரிதும் இம்சித்தது. தூக்கம் வராமல் புரண்டவளோ, பின் புத்தகத்தைத் திறந்து படிக்கலானாள். அச்சமயம் சரியாக அவளின் அலைப்பேசி ஒலித்தது. யாரென்று அவள் பார்க்க, அழைத்தது அவளவன் தான்.

மெல்லிய புன்னகையோடு அழைப்பை ஏற்றவள், அவனின் பேச்சில் மெல்ல மெல்ல ஒன்றிப் போனாள்.

“ என்ன மிரு இன்னக்கு டே எப்படி போச்சு, எல்லாம் ஒகே வா, இல்ல மிருவுக்கு பிடிக்காத எதுவும் நடந்துச்சா?” என்று அக்கறையாகக் கேட்டான்.

ஆடவனின் அக்கறையில் பெண்ணவளோ சக்கரை பாகாய் உருகித்தான் போனாள். சிறு வயதில் பள்ளி விட்டு வீடு வந்தவுடன் தன் தாய் அருகில் அமர்ந்து, ஓயாமல் அன்றைய நாளில் நடந்த கதையை முற்றும் முழுவதுமாக ஒப்புவிப்பாள் இனி.

இதோ இன்று நெடுங்காலம் கழித்து வந்த கேள்வியில் பழைய நியாபகங்கள் வந்து போயின அவளுக்கு.

அவன் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக அன்றைய நாளின் நிகழ்வுகள் அனைத்தையும் பகிர்ந்தாள். மழலைச் சொல் கேட்கும் தாயாக, அவள் கூறிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான் இதய்.

அனைத்தும் பேசி முடித்தவள் கடைசியாக அவனிடம் ஓர் வினா தொடுத்தாள்.

“ஏன் இதய், இன்னைக்கு எனக்குப் பிடிச்ச மாதிரி சாப்பிடனும்னு சொல்லிச் சாதாரண சாப்பாட்டுக்கே அவ்ளோ முக்கியத்துவம் கொடுத்தீங்களே, அ… அது நம்ம முதல் சந்திப்பு என்கிறதாலயா?” என்றுத் தனக்கு தோன்றியதை மறைக்காமல் அவனிடம் கேட்டும் விட்டாள்.

அதில் பெரிதாக இதழ் விரித்துச் சிரித்தவனோ, “மிரு… பெரும்பாலும் இப்போதைய லவ் ஏன் ப்ரேக் அப் ஆகுதுன்னு தெரியுமா?” என்றான்.

“நிறைய காரணங்கள் இருக்கு பட் நீங்களே சொல்லுங்க” என்றாள்.

“இன்னைக்கு பெரும்பாலும் லவ் பிரேக்ப் ஆகக் காரணம், சரியான புரிதல் இல்லாதது தான். ஒருத்தர இன்னொருத்தர் தன் தேவைக்கு ஏற்ற மாதிரி மாத்தனும்னு நினைக்கிறது தான் பிரச்சனையே.


இரண்டு பேருக்கும் இருக்கும் வெவ்வேற மனசும் மூளையும் ஒரே நேர்கோட்டுல பயணிக்காது. இது எதார்த்தம். இந்த எதார்தத்த புரிஞ்சு இருந்தாலே போதும் காதலையும் கல்யாணத்தையும் அழகா கொண்டு போகலாம். அதை விட்டுட்டு, நமக்கு விருப்பமானத மட்டுமே நம்ம துணை செய்யனும்னு நினைச்சு நம்மோட பிடித்தத்தையும் பிடிவாததத்தையும் அவங்ககிட்ட திணிச்சா அவங்களுக்கு மூச்சு முட்டிடும், உறவு கசந்திடும், அப்புறம் என்ன பண்ணினாலும் ஒட்ட வைக்க முடியாது. காதல்ல இயல்ப தொலைக்கிறதுங்கிறது ஓர் அற்புதமான உணர்வு ஆனா அது தானாக நடந்தா தான் அழகு. கட்டாயப்படுத்தி மாத்தினா அங்க காதல் காணாம போய்டும். நாமே நம்மை விரும்பித் தொலைக்கிற பட்சத்துல எந்தப் பிரச்சனையும் வராது.காதலிக்கிறோங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக அவங்கள நம்ம இஷ்டத்துக்கு வளைக்க முயற்சிக்க கூடாது. ஒன்னு ஒருத்தர் விரும்பியே தன் இணைக்காகத் தன் இயல்பைத் தொலைக்கனும், இல்லனா ரெண்டு பேரும் தத்தம் இயல்பிலயே நின்னு ஒருத்தர ஒருத்தர் மாற்ற முயற்சிக்காம அவங்கவங்க வாழ்க்கைய வாழ்ந்தாலே போதும் எந்தப் பிரச்சனையும் வராது, இன்னைக்கு சாப்பாடு தானேன்னு நீ சாதரணமா சொல்லலாம் ஆனா அதுக்கூட நாளைக்கு பிரச்சனைக்குரிய முக்கிய காரணமா மாற வாய்ப்பிருக்கு. இன்னும் சிம்பிளா சொல்லனும்னா, காதல்ன்னு வந்திட்டா நிறைய கேட்கனும், கம்மியா பேசனும் என்றான் நிதானமாக.

அவனின் இந்த அழுத்தமான பேச்சும் காதலைப் பற்றிய தெளிவான புரிதலும் அவளுக்குக் காதலின் புதிய பரிமாணத்தைக் காட்டியது.

“ அப்புறம் இன்னொரு விஷயம், இந்த இதய் எப்போவுமே ஒரே மாதிரிதான் இருப்பான், முதல் நாள் கடைசி நாள்ன்னு நாள் கணக்குல்லாம் எனக்குக் கிடையாது, என்னப் பொருத்தவர என் கூட இருக்கப்போ என் மிருவுக்கு எல்லா விஷயமும் அவளுக்குப் பிடிச்ச மாதிரிதான் நடக்கனும், அது சிங்கள் டீ யா இருந்தாலும் சரி இல்ல வேறெதும் பெரிய விஷயமா இருந்தாலும் சரி” என்றான் உறுதியாக.

அவனின் இந்த அளவில்லா நேசத்தில் திளைத்தவளோ, அவனிடம் நெடு நேரம் பேசிவிட்டு அப்படியே கண்ணயர்ந்தாள், இதுவே அவர்களின் வாடிக்கையானது. தினமும் அவன் ஏதாவது பேச, அதைக் கேட்டுக் கொண்டே தூங்குவது அவளுக்குப் பழகிப் போனது.இருவருமே அதிக பணிச்சுமை கொண்ட துறைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் ஆதலால் நேரம் கிடைக்கும்போது இருவரும் சந்தித்தும், நேரம் கிட்டாதபோது அலைப்பேசியிலும், தங்கள் காதலை வளர்த்தனர். அவர்களின் காதலைப் போல நாட்களும் வேகமாக நகர்ந்துக் கொண்டே இருந்தது.

நகரின் மத்தியில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய அந்த மருத்துவமனையில் அன்று இரவு பணியில் இருந்த இனிக்கு, அதிகாலை தான் பணி முடிந்தது. அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான் இதய்.

அவனைக் கண்டவுடன் பள்ளி விட்டு வீடு செல்லும் குழந்தைப் போலக் கிட்டதட்ட ஓடிச் சென்றாள் அவனிடம்.

“ஹே மெதுவாக வா மிரு! என்ன அவசரம், நான் இங்கதான இருக்கேன்” என்றான் சிரித்தவாரே.

அதில் அவனை முறைத்தவளோ “ஏன் இரண்டு நாளா என்னைப் பார்க்க வரல நீங்க” என்றவளின் கேள்வியில் அவளின் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அதில் உருகியவனோ,“ஐம் சோ சாரி டியர், ஒரு முக்கியமான கேஸ் என்கொய்ரில இருந்தேன் அதான் மீட் பண்ண முடியல, டாக்டரம்மா என்ன ரொம்ப தேடுனீங்களோ?” என்றான் காதலாக.
“ இ… இல்…. ஆமா தேடுனேன் ரொம்ப ரொம்ப” என்றாள் அவன் முகம் பார்த்து. அந்தப் பார்வையில் எண்ணிலடங்கா காதல் ஒளிந்து கிடந்ததை அவனும் அறிவான்.

வழக்கம்போல அவளுக்குக் கார் கதவைத் திறந்து விட்டவன், கிழக்கு கடற்கரை சாலை நோக்கித் தன் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தான்.

அந்த அதிகாலை வேளையை இன்னும் அழகாக்கும் வண்ணம் கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. இருவரும் சிறிது நேரம் கரையோரம் நின்று கால் நனைத்துக் கொண்டனர்.அங்கு இருளே இன்னும் சூழ்ந்திருக்க, வீசிய கடல் காற்றில் மேனி எங்கும் சிலிர்த்தது. பின்னர் இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்து அங்கிருந்த இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர். இரவு முழுதும் உறக்கம் இல்லாமல் இருந்தவளுக்கு அங்கு வீசிய ஈரக்காற்றால் தூக்கம் கண்ணைக் கட்டி கொண்டு வரவே அப்படியே அவன் மடிசாய்ந்தாள். அசதியில் உறங்கியவளை எழுப்ப மனமில்லாது அவனும் விட்டுவிட்டான்.

நீண்டதொரு சுகமான உறக்கத்தில் இருந்தவள், தன் அலைப்பேசியில் இருந்த அலாரம் ஒலிக்கவே அடித்துப் பிடித்து எழுந்தாள்.

எழுந்தவுடன்தான் தெரிந்தது அவளுக்கு அவன் மடியில் படுத்து இத்தனை நேரமும் தூங்கிக் கொண்டிருந்தது.

அசடு வழிய அவனைப் பார்க்க, அவனோ எப்போதும் போலத் தன் அக்மார்க் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

“ என்ன மிரு, ரொம்ப டயர்டா? இன்னும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டியதுதான?மடியில படுத்துக் கழுத்து வலிக்குதா? என்றான் ஆதுரமாக.

“இ… இல்ல, கொஞ்சம் வொர்க் அதிகம் அதான் டயர்ட்ல அப்படியே தூங்கிட்டேன், ச…சாரி, உங்கள ரொம்ப சிரமபடுத்திட்டனோ?” என்றாள் அவனைப் பார்த்து.

“ஹே ! ஒன்னும் சிரமம் இல்ல” என்றான் புன்னகையுடன்.

கடிகாரத்தைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அவன் மடியிலேயே உறங்கியிருக்கிறாள்.

“ ஏன் இதய், நான் தான் அசந்து தூங்கிட்டேன் நீங்க என்ன எழுப்பி விட்டுருக்கலாம்ல, உங்க முதுகு என்னா வலி வலிக்குமோ, ஏற்கனவே முதுகு வேற ஆப்ரேட் பண்ணிருக்கு” என்றாள் கவலையாக.

அவளின் கவலையில் ஒளிந்திருக்கும் நேசத்தை கண்டவனோ, “இதுலாம் சுகமான வலிகள் மிரு” என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

இதோ இந்தப் பேச்சில் மயங்கி மொத்தமாக அவனுடன் காதலில் விழுந்துவிட்டாள், விழுந்தவள் அதலிருந்து தன்னை மீட்கவும் முயற்சிக்கவில்லை. இப்படியே அவனுடன் தொலைந்துப் போகப் பேராவல் கொண்டாள்.

அன்றைய தினத்திற்கு பின் மீண்டும் வாழ்க்கை வண்ணமயமாய் மாறியது இருவருக்கும். ஒவ்வொரு நொடியும் ஒருவரை மற்றொருவர் நினைத்துத் திகட்ட திகட்ட இன்புற்றனர்.

அன்று காலை மருத்துவக் கல்லூரியில் ஒரு ஆய்வறிக்கை சமர்பிப்பதற்காக விரைந்து கிளம்பிக் கொண்டிருந்தாள் இனி.

அவளின் அலைப்பேசி சிணுங்கவே யாரென்று யூகித்து சிரித்தவாரே அழைப்பை ஏற்றாள்.

“குட் மார்னிங் இதய்” என்றாள் துள்ளளாக.

“வெரி குட் மார்னிங்! டாக்டரம்மா கிளம்பியாச்சா, என்ன ஷெடியூல் இன்னைக்கு?” என்று வினவினான்.

“ஹம்…கிளம்பிட்டேன், இன்னைக்கு ஒரு ரிட்போர்ட் சம்மிட் பண்ணனும், எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது இன்னும் டூ டேஸ்ல அதுக்கு ப்ரிபேர் பண்ணனும், ஆப் டூயூட்டி கேட்டுருக்கேன் எக்ஸாம் முடியுற வரைக்கும், என்ன சொல்லுறாங்கன்னு தெரியல” என்றாள்.

“ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாத மிரு, உன்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.சரி ஈவ்னிங் உன்ன மீட் பண்ண வரேன், அத சொல்லதான் கால் பண்ணேன்” என்றவனிடம்,
“என்ன கவனிச்சுக்க தான் நீங்க இருக்கீங்களே, எனக்கென்ன கவலை” என்றாள் அவனின் உண்மையான நேசம் உணர்ந்தவளாக. அதில் பெரிதாகச் சிரித்தவனோ, மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தான்.

அவனிடம் பேசியதால் ஏற்பட்ட உற்சாகத்தோடே உணவருந்த வந்தவள், தன் தந்தை அங்கு உணவருந்தி கொண்டிருப்பதை கவனிக்காமல், “அத்த ரொம்ப பசிக்குது, சீக்கிரம் எதாவது எடுத்து வாங்க”, என்றாள் வயிற்றை பிடித்தவாரே.

நெடுநாளுக்கு பிறகு மகள் தன் அருகில் உணவு அருந்த அமர்ந்ததை பார்த்த இனியின் தந்தை ரத்தின வேலுவிற்கு கண்கள் பனித்தது.

மேகலாவும் அதே ஆச்சிரியத்தோடே அவளுக்கு உணவு பரிமாறினார். தந்தையும் மகளும் ஒரே வீட்டிலிருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. குறிப்பாக இனி தன் தந்தையை தவிர்த்து வந்தாள், தந்தை இருக்கும் இடத்தில் அவள் எப்போதும் இருந்ததில்லை, இருக்கவும் விரும்பியதில்லை.

ஆனால் இன்று அவள் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.
“அத்த எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது. நாளையிலருந்து ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணிக்குவேன், ஒன் வீக் கழிச்சுதுதான் வருவேன் என்றாள் அறிவிப்பாக, இது வழமையான விஷயம் தான், கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்தே தேர்வு நடக்கும்போது விடுதியில் மட்டுமே தங்குவாள், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பதற்கும் அவள் மேற்கொண்ட முடிவு அது. அதனால் வீட்டில் எந்த மறுப்பும் வந்தது கிடையாது.

வயிறு நிறைய உண்டு பின் தன் அத்தையை கொஞ்சிவிட்டு சிட்டாகப் பறந்தாள் இனி. முன்பை போல் இறுக்கமாக இல்லாமல் இப்போதெல்லாம் முகம் ஒளிர இருக்கும் மகள், ஏனோ தந்தையின் கண்ணிற்க்கு வித்தியாசமாகத் தெரிந்தாள்.

“அண்ணா இப்போலாம் இனி பழைய மாதிரி இல்லண்ணா, நல்லா சிரிச்சுப்பேசறா, நடந்தத ஓரளவுக்கு மறந்துட்டான்னு நினைக்கிறேன், முகத்த பாருங்க அவ்ளோ பொலிவா இருக்கு, பொண்ணுக்கு கல்யாண கலை வந்திடுச்சு, படிப்பும் முடிய போகுது அதனால சீக்கிரமா ஒரு ராஜகுமாரன் கையில அவள பிடிச்சு கொடுத்திட்டா, நமக்கு இன்னும் நிம்மதியாகிடும்” என்றார் மேகலா தன் அண்ணனிடம்.

தங்கையின் கூற்றைச் சரியென ஆமோதித்தவரோ, “நான் ஏற்கனவே அந்த ராஜகுமாரன பார்த்து வச்சிடேன் மா, பரிட்சை முடியட்டும் நேரம் வரப்போ நானே அவ கிட்ட பேசுறேன்”என்றவரின் கூற்றில் இன்பமாய் அதிர்ந்தார் மேகலா.

அதோ அங்கு ரத்தினவேல் தன் மகளுக்குப் பார்த்து வைத்திருந்த இராஜகுமாரனோ, போதையில் தள்ளாடியபடியே தன் அறைக்கதவை திறந்தான், குப்பென்று மது மற்றும் சிகரெட் வாடை வீசவே, அதை நன்கு முகர்ந்தபடி நுழைத்தவன் அங்கு மஞ்சத்தின் மேல் படுத்திருந்த நங்கைமேல் சரிந்தான்.
 
Last edited:
Top