எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 9

S.Theeba

Moderator
வரம் 9

அறைக்குள் யதுநந்தன் மட்டுமே அமர்ந்திருந்தான். அந்த அறையின் வாசலுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருந்தான். அங்கே சிவானந்தைக் காணவில்லை.

உள்ளே நுழைந்த வர்ஷனா அவன் மட்டும் இருப்பதை உணர்ந்ததும் பின்னால் நின்று அவனையே பார்த்து நின்றாள். ஏதோ ஒன்று அவனைப் பார்க்கும்படி அவளைக் கட்டிப்போட்டு இருந்தது.

எவ்வளவு நேரம் நின்றாளோ தெரியவில்லை "என்ன பார்க்கிறாய்?" என்று திடீரென அவன் குரலைக் கேட்டதும்தான் சுய உணர்வுக்கு வந்தாள். அவன் என்ன கேட்டான் என்பதைப் புரிந்துகொள்ளவே அவளுக்கு சிறிதுநேரம் தேவைப்பட்டது. "என்ன.." என்று கேட்டாள். "அதை நீதான் சொல்லனும். ரொம்ப நேரமா பின்னாடி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாய். சொல்லு..." என்றான் அவன்.

‘நான் அறைக்குள் வந்த நேரத்தில் இருந்து இவன் ஃபைல் தானே பார்த்திட்டு இருந்தான். ஃபைலை விட்டு தலையை நிமிர்த்தவுமில்லை, திரும்பிப் பார்க்கவுமில்லை. நான் வந்தபோது கூட மெதுவாகத்தானே உள்ளே நுழைந்தேன். எப்படிக் கண்டுபிடித்தான்' என்று மைன்ட் வாய்சில் பேசினாள். "எனக்கு முதுகிலும் கண் இருக்கு" என்று சரியாக அந்த நேரத்தில் அவன் பதில் சொன்னான். ‘ஐயையோ நம்ம மைன்ட் வாய்ஸ் அவ்வளவு சத்தமாவா..கேக்குது...' என்று மீண்டும் மனதிற்குள் புலம்பினாள். "சொல்லு ஏன் அப்படிப் பார்த்துக்கொண்டு நின்றாய்" என்று மீண்டும் கேட்டான். அவனது குரலில் இருந்து அவன் என்ன மனநிலையில் பேசுகின்றான் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. கோபமா.. அதிகாரமா... கனிவா... என்னவென்றே தெரியவில்லை.

"நான்." என்று அவள் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது அறைக்குள் நுழைந்த சிவானந்த் "மச்சி.. கொட்டேஷன் பார்த்து முடிச்சிட்டியா.. எல்லாம் கரெக்டா இருக்கா..." என்று கேட்டபடி அவன் அருகில் சென்று நின்றான். அதுவரை திரும்பிப் பார்க்காமலேயே அவளிடம் பேசிக்கொண்டு இருந்தவன் எழுந்து சிவானந்திடம் ஃபைலைக் குடுத்தபடி "மச்சி ஒரேயொரு கரெக்சன் மட்டும் நோட் பண்ணியிருக்கன். அதை மாற்றினால் ஓகேடா. நான் கிளம்புறேன். பார்த்துக்க..." என்று கூறிவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று விட்டான்.

அப்பாடா தப்பிச்சன். இல்லாவிட்டால் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று திணறியிருப்பேன். சிவா சார் வந்து காப்பாத்திட்டார் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

தொடர்ந்து வந்த நாட்களில் யதுநந்தன் ஆபிஸ் பக்கம் வரவேயில்லை. சிவானந்தும் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை போனிலேயே அவனுடன் பேசித் தெளிவுபடுத்தினான். அவனது பேச்சிலிருந்து யதுநந்தன் தனது தொழில் விடயமாக சிங்கப்பூர் சென்றுள்ளான் என்று தெரியவந்தது.

வர்ஷனாவுக்குதான் பெரும் கஸ்ரமாக இருந்தது. அவனைத் தினமும் பார்க்க வேண்டும் என்று மனம் தவித்தது. ஒருபக்கம் அவன் திருமணம் ஆனவன், அவனுக்கு ஒரு குழந்தையும் உண்டு. நீ அவனை நினைப்பது சரியா என்று மனச்சாட்சி திட்டியது. இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் தவித்துத்தான் போனாள்.

???

அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவுக்குப் பிறந்தநாள். எனவே வர்ஷனாவும் மஞ்சுவும் இன்னுமொரு தோழியான ராகவியும் சேர்ந்து ரெஸ்டாரன்ட் சென்றிருந்தனர். ஐந்து மாடிகளைக் கொண்ட மால் ஒன்றின் கீழ்த் தளத்தில் அந்த ரெஸ்டாரன்ட் இருந்தது.
மூவரும் கலகலத்தபடி தாங்கள் தருவித்திருந்த உணவுப் பொருட்களை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ராகவி கூறிய ஒரு ஜோக்கைக் கேட்டு சிரித்தபோது வர்ஷனாவுக்குப் புரையேறிவிட்டது. தண்ணீரைக் குடித்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்தித் தள்ள அந்த ரெஸ்டாரன்ட் வாசலைப் பார்த்தாள். அங்கே யதுநந்தன் வந்து கொண்டிருந்தான். சில நாட்களாக அவனைக் காணாது தவித்தவளுக்கு அவனைக் கண்டதும் ஒரு கூடை ஐசை தலையில் கொட்டியது போல் உள்ளுக்குள் குழு குளுவென இருந்தது. அவனை ஆசைதீர பார்த்து கண்களில் மட்டுமல்லாது மனதிலும் நிறைத்தாள். இன்று அவன் அணிந்திருந்த பிரவுண் நிற ஜீன்சும் கிரீம் நிற முழுக்கை சட்டையும் அவனை ஆணழகனாகக் காட்டியது.
'வாவ்… என்ன ஒரு ஹான்ட்சம். சூப்பர் யது.’ என்று மனதில் ரசித்துக் கொண்டிருந்தவளின் சந்தோஷம் துணி கொண்டு துடைத்து விட்டாற் போல் காணாமல் போனது. அவளது சந்தோஷம் வந்த வேகத்தலேயே துடைக்கப்பட்டு வேதனை குடிகொண்டது. காரணம் அவனுடன் கூட வந்தவர்கள்.

இவர்களுக்கு அடுத்திருந்த மேசையில் வந்தமர்ந்தான் யதுநந்தன். அவன் கையைப் பிடித்தபடி துள்ளலுடன் நடந்துவந்த இலக்கியாவைத் தனக்கு மிக அருகில் கதிரையை எடுத்துப் போட்டு அமரவைத்தான்.

வர்ஷனாவின் வேதனைக்குக் காரணம் அவனுடன் கூடவே சிரித்துப் பேசியபடி வந்து, அவனின் பக்கத்தில் வந்தமர்ந்த பெண்தான்.

மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் மிக அழகாக இருந்தாள் அந்தப் பெண். விலையுயர்ந்த அழகான கற்கள் பதித்த சுடிதாரும் அதற்குத் தோதாக அவள் அணிந்திருந்த நகையும் அவள் அழகை மேலும் அதிகரித்துக் காட்டியது. அதைவிட சிறிதாக மேடிட்டிருந்த அவளது வயிறு அவள் இன்னுமொரு குழந்தைக்குத் தாயாக இருக்கிறாள் என்பதைப் பறைசாற்றியது. யதுநந்தனின் மனைவிதான் அவள் என்பதைப் புரிந்துகொண்டதாலேயே அவள் மனம் வேதனையில் அழுதது.

இலக்கியாவைக் கண்டதும் மஞ்சுவிற்கு சந்தோசம் ஏற்பட்டது. "ஹாய்.. இலக்கியா..." என்று அழைத்தாள். தன் டீச்சரை அங்கு கண்டதும் அவளுக்கும் சந்தோசமே. அதை விட அவளுக்குப் பிடித்த ஆன்ரியும் பக்கத்தில் இருப்பதைப் பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவர்களைத் தேடி ஓடி வந்தாள். அவள் அருகில் வந்ததும் தன் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு "ஹாய் சுவீட்டி..." என்று அணைத்து அவளை முத்தமிட்டாள் வர்ஷனா. தன் ரீச்சரிடமும் முத்தத்தைப் பெற்று விட்டு தன் தந்தையிடம் சென்று அமர்ந்தாள். யதுநந்தனும் இலக்கியாவின் ஆசிரியர் என்று மஞ்சுவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினான். அதன் பிறகு இந்தப் பக்கம் அவன் திரும்பவில்லை. அந்தப் பெண்ணும் அழகான புன்னகை ஒன்றை சிந்திவிட்டு அமைதியாக இருந்தாள்.

வர்ஷனாவின் பாடுதான் சொல்லமுடியாமல் இருந்தது. அவனைப் பார்த்த பின்பு அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதிலும் அவனது மனைவி, பிள்ளையோடு அவனைப் பார்த்த பின்பு, தான் அவனை மனதில் நினைப்பது சரியா என்று தவித்துப் போனாள்.

அவளின் தடுமாற்றத்தைக் கண்ட மஞ்சு "என்னடி ப்ராப்ளம்...." என்று கேட்டாள். "ஒன்றுமில்லையடி.. சும்மாதான்..." என்று சமாளித்து விட்டாள்.
"டாடி... எனக்கு சாக்கி ஐஸ்...." என்று கேட்டாள் இலக்கியா. "ஓகேடா லக்கிச் செல்லம்... உனக்கு சாக்லேட் ஐஸ்கிரீம்" என்றுவிட்டு தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் "பானுக்குட்டி... உனக்கு என்ன ஓடர் பண்ணட்டும்..." என்று கேட்டான். அவர்கள் பேசுவதைப் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷனாவுக்கோ இவன் தன் மனைவி, மகள் மீது எவ்வளவு பாசமாக இருக்கின்றான். இந்தக் கல்லுளி மங்கனுக்குள் இப்படி ஒரு பாசக்காரனும் இருக்கானா என்று அதிசயமாகவும் இருந்தது. அவனின் காதலைப் பெற்ற அவர்கள் மீது மெல்லிய பொறாமையும் எட்டிப் பார்த்தது.

வீடு திரும்பும் போது மஞ்சுவைத் தனது ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு வந்தவள் மனது பூரா யதுநந்தனதும் அவனது குடும்பத்தினதும் நினைப்பாகவே இருந்தது.
மஞ்சுவிடம் தன் போக்கில் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். திடீரென "இலக்கியாவின் அம்மா ரொம்ப கியூட்டா இருக்கால்ல...." என்றாள் வர்ஷனா.
"யாரைச் சொல்கிறாய்...?" "இலக்கியாவோட வந்தாங்களே...."
"அட லூசு… அது இலக்கியா அம்மா இல்லை. அவளோட அத்தை.... பானுமதி. மிஸ்டர் யதுநந்தனின் தங்கச்சி." என்றாள் மஞ்சு.
"ஓ.... அப்போ இலக்கியா அம்மா வரலையா?" என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்டாள் வர்ஷனா. "இலக்கியாவுக்கு அம்மா இல்லடி..."என்றாள் மஞ்சு.
 
Top