எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை-5

@38

Moderator
5


பெருமாளுக்கு நிரம்பவே வருத்தம் தான் ஆனால் மகனின் சம்மதத்தைக் கேட்காமல் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது அவரின் தவறல்லவா அதனால் பெரிதாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


ஆனாலும் இத்தனை ஆண்டு காலமாக ஊரில் அவர்களின் குடும்பம் வாங்கியிருந்த பெயர் சற்று ஆட்டம் கண்டது உண்மைதான் எல்லாவற்றிலும் பக்குவமாக கையாள்பவர் இந்த விஷயத்தையும் கையாண்டார் .


காலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றும் சக்தி இருக்கிறது என்பதை முழுமையாக நம்பியதால் உறவினர்களின் கேலிப்பேச்சையோ ஏளனத்தையோ கண்டு கொள்ளாமல் கடந்து சென்றார்


மனதிற்குள் மட்டும் இரு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே என்ற கவலை மட்டும் அவரை அரித்து கொண்டிருந்தது அதைப் போக்கும் விதமாக கார்த்தி அவனது தங்கையின் எதிர்காலத்திற்கு தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாக கூறவும் சற்று நிம்மதி அடைந்தார்.


கார்த்தி பேசியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை அமுதா படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் இருந்த சர்டிபிகேட்டை வாங்கி சென்னையில் சேர்த்து அவனது அறையிலேயே தங்க வைத்துக் கொண்டான்.என்னதான் கார்த்தி மீது கோபமும் வெறுப்பும் இருந்தாலும் கூட அவன் தங்கையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல் பட்டதால் சாந்திக்கு அவன் மீது இருந்த கோபம் மெது மெதுவாக குறைந்தது.கதிரவன் அந்தப் பக்கம் சொர்ணாவிற்கு வேக வேகமாக மாப்பிள்ளை பார்க்க இந்த பக்கம் சத்தமே இல்லாமல் அமுதா படித்துக் கொண்டிருந்தாள்.


அவளின் படிப்பு முடிந்த பிறகு மேற்படிப்பு படிக்கிறாயா என கார்த்திக் கேட்ட பிறகு அவளுக்கு பெரிதாக எதிலுமே ஆர்வமில்லை என்பதை புரிந்து கொண்டான்.


எவ்வளவு உறுதியானவராக இருந்தாலும் காதல் தோல்வி அவரை பலமிழக்கச் செய்து விடுகிறது என்பதுதான் உண்மை.


படிப்பிலும் அவள் ஒன்றும் பெரியதாக சாதிக்கவில்லை பெயருக்கு படிப்பை முடித்திருக்கிறாள் அவ்வளவு தான்.


ஊருக்கு செல்கிறாயா என்று நேரடியாக கேட்கவும் தயக்கம் ஊருக்கு சென்றால் மீண்டும் பழைய காதல் நினைவுக்கு வரலாம் இரண்டாவது அவனால் ஏதாவது தொல்லைகள் கூட ஏற்படலாம் இங்கே இருந்து கொண்டு தங்கையை ஊருக்கு அனுப்பி நிம்மதியை இழக்க முடியாது என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனுடன் வேலை பார்க்கும் ஈஸ்வர் அமுதாவை கார்த்தியுடன் பார்த்து விட்டு யார் என அவனிடமே வந்து விசாரித்தான்.


எதற்காக தங்கையை பற்றி விசாரிக்கிறாய் என்று கோபமாக கார்த்தி கேட்கவும் தான் அவளை

மிகவும் பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறினான்.


ஈஸ்வர் பற்றி கார்த்தி நன்கு அறிவான் கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது இப்பொழுது தனியாக கூட அவுட்சோர்ஸ் எடுத்து செய்து கொண்டிருக்கிறான் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகவும் இனிமையானவன் அழகனும் கூட தந்தையிடம் உடனே அதைப் பற்றி பேசவும் தந்தையும் பையனின் குடும்பம் பற்றி விசாரி எனக் கூறினார்.ஈஸ்வரின் வேலை தான் இங்கேயே தவிர அவனுடைய சொந்த ஊர் அந்த பக்கம் தான் என அவனை பற்றிய தகவல்களை உடனடியாக தந்தைக்கு அனுப்பி வைத்தான்.


பெருமாளும் உடனே விசாரிக்கும் படலத்தை ஆரம்பித்து விட்டார்.


அவர்களின் ஊருக்கு பக்கத்தில் தான் ஈஸ்வரின் ஊரும்.. குடும்பத்தை கூட ஆங்காங்கே உறவுகளின் விஷேசங்களில் பார்த்திருப்பதாக தந்தை சந்தோஷம் கொண்டார். விசாரித்த வரையில் அவருக்கு முழு திருப்தி.


ஆனால் அமுதாவின் காதல் தெரியாவிட்டாலும் கூட அவளின் திருமணம் நின்றது சுற்றுவட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே..அதை மாப்பிள்ளையின் வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா என கேள்வி எழுப்பினார்.


நான் நேரடியாக மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு அவர் மூலமா அவங்க குடும்பத்துல பேசிட்டு என்ன தகவல் என்பதை சொல்றேன் பா ஆனா அவங்க வீட்ல ஒத்துக்கலைன்னா கூட மாப்பிள திருமணம் செய்றதுல உறுதியா இருக்காரு இப்போ நீங்க தான் அப்பா முடிவு சொல்லணும் என்ன பண்ணலாம்னு என்று தந்தையின் பக்கமே முடிவை விட்டான் .


அவரும் தம்பி அது தப்பு மாப்பிள்ளை பையன் கிட்ட பேசு முடிஞ்ச அளவு அவங்க அம்மா அப்பாவை ஒத்துக்க வைக்க பாரு அப்படி இல்லையா நம்ம வீட்டு சூழ்நிலையை சொல்லி எந்த பையன் நம்ம புள்ளைய கட்டிக்க வர்றானோ அந்த பையனுக்கு பொண்ணை கொடுக்கலாம் நம்மளால ஓரு குடும்பம் உடைய வேண்டாம் அந்த தப்பை என்னைக்கும் நீ பண்ண கூடாது என்று உறுதி பட கூறிவிட்டார் .அதன் பிறகு ஈஸ்வரிடம் அமுதாவின் பழைய காதல் அதனால் ஏற்பட்ட தொல்லைகள் அதன் பிறகு உறவினனான ஒருவனுக்கு திருமணத்திற்காக பேசியது.. அவனின் தங்கையை தனக்கு பேசியது.


அந்த திருமணத்தின் மீது தனக்கு விருப்பம் இல்லை என்று நிறுத்தியது என ஒன்று விடாமல் அனைத்தையும் கூறினான் .எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டவன் திருமணம் நின்றதற்கு அமுதாவின் தவறு எதுவுமே கிடையாது திருமணத்தை நிறுத்தியதற்கும் உன் பக்கத்தில் இருந்தும் எந்த தவறும் கிடையாது.உன் விருப்பத்தை கேட்காமல் திருமணத்தை ஏற்பாடு செய்தது உனது பெற்றோர்களின் தவறு சோ இது எனக்கு முக்கியமில்லை இரண்டாவது அவள் அப்பொழுதுதான் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்திருக்கிறாள் கிராமத்தில் வளர்ந்த பெண் தீடிரென நகரத்தை பார்க்கவும் சூது அறியாமல் பழகியிருப்பாள் இல்லையென்றால் அந்த வயதிற்கே உண்டான இன கவர்ச்சியாக கூட இருந்திருக்கலாம்.அதனால் அந்த காதலும் எனக்கு பெரிது இல்லை என்று தன்மையாக கூறினான்.

அத்தோடு இல்லாமல் அமுதாவை பெண் கேட்டுச் செல்லும்படி அவனது பெற்றோர்களுக்கும் பணிந்தான்.அவர்களும் அமுதாவின் திருமணம் நின்றது தெரிந்து தான் இருந்தது . அவர்கள் கேள்விப்பட்டவரையில் பெண் கொடுத்து பெண் எடுக்கும் பொழுது ஏதோ ஒரு ரசபாசம் அதனால் திருமணம் நடைபெறவில்லை அதற்கு அமுதா என்ன செய்வாள் என பெரிது படுத்த விரும்பவில்லை..

மகனுக்கு பெண் பிடித்திருக்கிறது. பெண்ணுக்கும் மகனை பிடித்திருந்தால் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என பெண் கேட்ட அன்றே அனைத்தையும் பேசி முடித்து விட்டனர்.


அமுதாவிற்கு தான் ஊர் செல்ல சற்று கூச்சம் ஏற்கனவே மணமேடை வரை ஏறியவள் மீண்டும் அதே தோரணையில் ஊரின் முன்பு நிற்க வேண்டுமா என்று அதே அவஸ்தை பெருமாளுக்கும் இருந்தது போல.


ஏற்கனவே ஒரு முறை பத்திரிக்கை அடித்த பந்தல் போட்டு ஊரைக் கூட்டி மற்றவர்களின் கேலிக்கும் ஆளாகிவிட்டதால் மீண்டும் அது போல் ஆடம்பரம் வேண்டாமென எண்ணினார்.


ஊரில் எளிமையான முறையில் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தனர் .


சென்னையில் ரிசப்ஷன் கொடுக்க வேண்டும் உடன் பணிபுரியவர்கள் நண்பர்கள் படித்தவர்கள் என எல்லோரும் அங்கே தான் இருக்கிறார்கள் தரப்பில் ஒரு நியாயமான கோரிக்கையை ஈஸ்வர் பெற்றோர்களிடத்தில் வைத்தான்.எதற்காக இரட்டிப்பு செலவு இரட்டிப்பு அலைச்சல் ஒரே முறையாக சென்னையிலேயே திருமணத்தையும் வரவேற்பையும் முடித்துக் கொள்ளலாம் என பேசி.சென்னையிலேயே மிக எளிமையான முறையில் அவர்களின் திருமணத்தை முடித்தனர்.


அமுதாவும் ஊருக்கு வரவே இல்லை அப்படியே சென்னை வாசியாக மாறிவிட்டாள். கடந்த காலங்களை எல்லாம் மறந்துவிட்டு கணவனின் அன்பு மனைவியாகவும் அருமையான குடும்ப தலைவியாகவும் மாறிவிட்டாள் .இப்பொழுது வளைகாப்புக்காக தான் ஊருக்கு வந்திருக்கிறாள். அதனால் தான் இரு குடும்பத்தாருமே வளைகாப்பு விழாவை பெரிய அளவில் சிறப்பிக்க வேண்டும் என முடிவெடுத்து அனைவரையும் அழைத்து அவர்களின் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.கதிரவனுக்கு அமுதாவின் திருமணத்தை கேள்விப்பட்டதுமே மிகுந்த அதிர்ச்சி பெரியதாக அமுதாவின் மீது எந்த ஈர்ப்பும் கிடையாது ஆனால் திருமணம் செய்து கொள்ள மாமா வந்து பேசிய பிறகு அவள் பக்கம் சற்று பார்வையை திருப்பி இருந்தான்.அவளின் துறுதுறுவென இருக்கும் பாங்கும் துடுக்கு பேச்சும் அவனை வெகுவாகவே கவர்ந்திருந்தது.


என்னதான் ஒன்றாகவே வளர்ந்து இருந்தாலும் இத்தனை நாள் இதை கவனித்ததில்லை..திருமணம் என வந்த பிறகு தன்னவள் தானே என்ற உரிமையில் பார்த்தவனை மேலும் மேலும் ஈர்த்தாள். அவளின் சோகம் கூட அவனுக்கு பிடித்திருந்தது கண்ணீரை தாங்கியபடி இருக்க‌ கண்கள் கூட பல கவிதைகள் வாசித்தன.


சிறுவயதிலேயே தாயின் மரணம் தந்தை விட்டுச் சென்றது என பல அழுத்தங்களுக்குள் இருந்தவன் பெரிதாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.. ஆனால் அமுதாவை அந்த கண்ணோட்டத்தில் பார்த்த பிறகு கதிரால் அப்படி இருக்கவும் முடியவில்லை


அவனின் ஒரே ஆதரவு அவனது தங்கை லதா மட்டுமே. கதிர் அமுதாவின் திருமணத்தைப் பற்றி பெருமாள் பேச்சை எடுத்ததுமே கார்த்தியை தங்கையுடன் இணைத்து வைத்துவிட வேண்டும் என ஆர்வம் காட்டினான்.


கார்த்தியை அவனுக்கு சிறு வயதிலிருந்து பிடிக்கும் அவனின் ஒழுக்கம் நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நடை என பல விதங்களில் கவர்ந்தவன் தனது தங்கையை மட்டும் கார்த்தி‌‌ திருமணம் செய்து கொண்டால் அவனுக்கு என்றுமே அவளைப்பற்றிய கவலை இருக்காது.
ஆனால் கார்த்தி திருமணத்தை நிறுத்த இவனும் வேறு வழியில்லாமல் அமுதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என மிரட்டிப் பார்த்தான் அப்படியாவது கார்த்தி மனம் மாறுவானா என்று.ஆனால் கார்த்தியோ பிடிவாதமாக நிற்க வேறு வழியில்லாமல் அமுதாவை திருமணம் செய்ய மறுத்து விட்டான் .எப்படி இருந்தாலும் பிரச்சனை ஓய்ந்த பிறகு அத்தையும் மாமாவும் அவனிடத்தில் மீண்டும் வந்து அமுதாவின் பேச்சை எடுப்பார்கள் அப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு அவளது திருமண செய்தி இடியை இறக்கியது.அமுதாவுமே திருமணம் நின்ற பிறகு ஊரில் இல்லை சென்னை போய் செட்டில் ஆனவள் இப்பொழுது திருமணமும் செய்ய போகிறாள்.ச்சே என்ன பெண் இவள் என்று ஒரு நிமிடம் அவளை அருவருப்புடன் நினைத்து கூட பார்த்துவிட்டான் ஆனாலும் வெறுக்க முடியவில்லை அவளை மனைவியாகவே கற்பனை செய்து விட்டதால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.


ஆனாலும் தங்கையுடன் திருமணத்திற்கு சென்றே ஆக வேண்டிய நிர்பந்தம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலே திருமணத்தில் கலந்து கொண்டான்.


அமுதாவின் முகத்தில் தன்னை இழந்ததற்கான சிறு வருத்தமாவது தெரிகிறதா என தேடி தேடி பார்த்தான் அப்படி எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை அமுதா ஈஸ்வரனுடன் மிகவும் சந்தோஷமாக திருமண நிகழ்வில் கலந்து கொண்டாள்.புகைப்படம் எடுக்கும் வேளையில் அவள் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு .. அவளது துடுக்கத்தனம் மணவறையில் இருந்த ஈஸ்வரை மட்டுமல்ல வாழ்த்த வந்த அனைவருமே ஈர்த்தது.. ஈஸ்வர் அவளைப் பார்க்கும் பார்வையிலும் அமுதா ஈஸ்வரை பார்க்கும் பார்வையிலும் காதல் அப்பட்டமாக வெளிப்பட்டது.அதை பார்த்த உடனேயே கதிருக்கு புரிந்து விட்டது அன்றைய திருமணத்தை அத்தை மாமாவிற்காக செய்திருந்தாலும் கூட அமுதாவிடம் இருந்து இது போல காதலை எதிர்பார்த்திருக்க முடியாது.வயதில் கோளாறு காரணமாக காதல் வலையில் விழுந்தாள் பெற்றோர்களுக்காக தன்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாள்.. இப்பொழுதுதான் அவளுக்கே அவளுக்கான துணையை தேடி இருக்கிறாள்..வருத்தம் தான். உடன் வளர்ந்தவள் சொந்த அத்தையின் மகள் நன்றாக இருக்கட்டும் என அவனின் காதலை மென்று முழுங்கியபடி மனதார வாழ்த்தினான்.


அமுதாவை வாழ்த்த முடிந்தவனால் கார்த்தியை மன்னிக்க முடியவில்லை. அந்தத் திருமணம் நின்ற பிறகு அவனது தங்கை ரூமுக்குள் அடைந்து கிடந்தது அவனுக்கு மட்டுமே தெரியும் .எத்தனையோ இரவுகளில் அமைதியை குழைப்பது போல அவளின் அழுகை சத்தம் அந்த வீடு எங்கும் ஒலிக்கும்.


அப்பொழுதெல்லாம் கார்த்தியை மனதார சபிப்பான் எனது தங்கையின் நிம்மதியை கெடுத்த உனக்கு என்றுமே நிம்மதியான வாழ்க்கை அமையாது என்று.


அவளால் பாதிக்கப்பட்டது இரு பெண்கள் ஆனால் அவனுடன் பிறந்தவளை மட்டும் எப்படி பாதுகாத்துக் கொண்டான் அவள் விரும்பியது போல மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்து திருமணம் செய்து வைத்துவிட்டானே என்னால் ஏன் அதை செய்ய முடியவில்லை அவனைப் போலவே எனக்கும் தந்தையின் சொத்து இருக்கிறது படிப்பு இருக்கிறது அவன் தங்கையை விட அழகிய தங்கை எனக்கும் இருக்கிறாள் அப்படி இருந்தும் ஏன் தன்னால் அவனைப் போல் ஜொலிக்க முடியவில்லை என்று உள்ளுக்குள் பொறாமை கொண்டான்


இதை விட சிறந்த மாப்பிள்ளையை லதாவிற்கும் பார்த்து கார்த்தி பொறாமைப்படும் அளவிற்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என மனதில் உறுதி கொண்டான்.அதேபோலவே மிக தீவிரமாக தேடி மத்திய அரசாங்கத்தில் வேலையில் இருக்கும் ஒருவனைப் பிடித்து லதாவிற்கும் மிக ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தான்.ஆனால் அங்கு தான் சிறு பிசகு ஆனது ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிய முறையில் திருமணம் செய்த அமுதாவின் வாழ்வு நன்றாக போய்க் கொண்டிருக்கும் ஆடம்பரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் செய்து வைத்த லதாவின் திருமணம் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை கணவன் மிகுந்த பேராசைக்காரன் அழகியான லதாவையே புறத்தோற்றத்தை காட்டி கேலி பேசுபவன்.. சில சமயங்களில் அவளுடன் உறவாரி விட்டு ஒருவேளை இப்படி நீ ஜடம் மாதிரி கிடந்ததுனால தான் அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டானோ என்று குரூரமாக வேறு கேட்டு வைப்பான். அந்த சமயங்களில் காதை பொத்திக்கொண்டு கதறி விடுவாள் லதா.


எதிர்த்து ஏதாவது பேசினால் யோசிக்காமல் கைநீட்டிவிடுவான்.


இல்லையென்றால் உன் வளர்ப்பு சரியில்லை உன்னை வளர்த்தவரை கூப்பிடு என்றபடி பெருமாளுக்கு ஃபோன் அடித்து விடுவான் அத்தையும் மாமாவும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பிலேயே முடிந்த அளவு அவனிடம் அடங்கிப் போக ஆரம்பித்து விட்டாள்.ஒரு முறை ஊரில் விஷேசத்திற்கு வந்தவள் யதார்த்தமாக கதவை பூட்டாமல் புடவை மாற்ற உள்ளே வந்த சாந்தி அவள் உடம்பில் இருந்த காயங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து என்ன ஏது என்று விசாரிக்கவும் அவளுக்கு நடக்கும் கொடுமைகளை கூறி அழுதாள் .


தன் மகனின் மீது சற்று திரும்பி இருந்த பாசம் மீண்டும் வெறுப்பாக மாறியது அவன் மட்டும் இவளை திருமணம் செய்து இருந்தால் இந்த நிலைமை இந்த பெண்ணுக்கு வந்திருக்காதே குழந்தையாக இருக்கும் பொழுது தரையில் பாதம் பட்டால் கூட பாதம் நோகுமே என இடுப்பில் தூக்கி வைத்து வளர்த்தவர் அப்படிப்பட்ட பெண்ணிற்கா இந்த நிலை என துடித்துவிட்டார்.


பெருமாளை அழைத்து உடனடியாகவே சாந்தி குற்ற பத்திரிக்கை வாசித்துவிட்டார் ஆனால் பெருமாளோ அந்தப் பொண்ணே எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்து வாய் திறந்து சொல்லாதப்போ எதை வச்சு நாம போய் கேட்க முடியும்.


இங்க உன் கிட்ட சொன்னவ அங்க போயிட்டு அப்படியெல்லாம் ஒன்னும் இல்லன்னு மாத்தி பேசிட்டா என்ன பண்ணுவ எதா இருந்தாலும் அவதான் முடிவெடுக்கணும் அவன் கூட சேர்ந்து இருக்கிறதா இருந்தாலும் சரி வேணாம்னு வந்தாலும் சரி எப்பவும் நம்ம வீட்டு கதவு அவளுக்காக திறந்திருக்கும் அந்த நம்பிக்கையை அவளுக்கு கொடு கூறிவிட்டார்.


அப்படி இருந்தும் சாந்திக்கு மனது கேட்கவில்லை கதிரவனிடம் சென்று நீ கூட தங்கச்சி எப்படி இருக்கா என்ன ஏதுன்னு போய் பார்க்க மாட்டியா என சண்டை போட்டார் .


லதாவிற்கு என்ன நல்லா தான் இருக்கா.. உங்க பொண்ணு கட்டிக்கிட்டவன் மாதிரி கூலிக்காரனை கட்டிக்கலையே மத்திய அரசாங்கத்தில் பெரிய வேலையில் இருக்கிறவனை கல்யாணம் பண்ணி இருக்கா.அந்த வயித்தெரிச்சல்ல நீங்களா கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க அத்தை என முகத்தில் அடித்தபடி பேசிவிட்டான்.சாந்திக்கு எதிர்த்து பேச வாய் வரவே இல்லை கதிரா இப்படி பேசியது என்ற அதிர்ச்சி தான் அவருக்கு மேலோங்கி இருந்தது .லதாவும் மிகக் கூலாக அத்தை எல்லா வீட்டிலும் இருக்கற பிரச்சனை தான் என் வீட்டிலும் இருக்கு..எனக்கு அம்மா இல்ல அதனால உங்க கிட்ட சொன்னேன் நீங்க இவ்ளோ பெரிய பிரச்சினையாக்குவிங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல.இனிமே இந்த பக்கம் வந்தா என்னை என்னன்னு கேளுங்க என்றபடி அவளும் கோபித்து விட்டு செல்ல அப்படியே உறைந்து விட்டார்.
 

@38

Moderator
கதிரவன் தேவையில்லாத பொறாமையை வளர்த்துட்டு அவசரப்பட்டுட்டான்!!..
ஆமா..இதுல அடிப்படை ஒன்னு கவனிக்கனும் இவனுக்கு நல்லது கெட்டது சொல்ல பெற்றோர்கள் இருக்காங்க அவனுக்கு இல்ல என்ன தான் அத்தை வளர்த்தாலும் பெற்றவர்கள் போல சொல்லி குடுத்து வளர்க்க முடியாது இல்லையா.

ரொம்ப நன்றி மா
 
Top