எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 15

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 15

செந்தா கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டு அதனை இறுக்கிப் பிடித்தவாறு பள்ளிக்குள் நுழைந்தாள்.

"டீச்சர்! நீங்க பஸ்ஸில் வரதில்லையா? யாரு அவங்க?" எனக் கேட்டுக் கொண்டே அருகில் மாலா டீச்சர் நுழைந்தாள்.

"அவரு தான் செந்தாமரை டீச்சரோட ஹஸ்பண்ட் மாலா" என நேற்று மனிஷை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக துணைக்கு வந்த மேகலை டீச்சர் கூறியப் படி அவர்களுடன் சேர்ந்து நடந்தாள்.

"ஓ! டெய்லி சார் தான் ட்ராப் பண்ணுவாங்க போல, பக்கத்துல எங்கயும் வொர்க் பண்றாங்களா என்ன?"

"அவரு வைய்பை ட்ராப் பண்ணிட்டு போறார், ஏன் பக்கத்துல இருந்தா தான் ட்ராப் பண்ணனுமா?" என மேகலை முறைத்தாள் மாலாவை. இருவரும் தோழிகள் தான், நிரந்தர வேலையில் இருப்பவர்கள், மாலாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

"பரவாயில்ல விடுங்க மேகலை, அவரு ஃபாரின்ல வேலைப் பாக்குறாரு மாலா, இப்ப லீவில் இருக்காங்க, இன்னும் கொஞ்சம் நாளில் கிளம்பிடுவாங்க"

"ஓ! அப்ப டெய்லி ரொமான்ஸ் பைக் ட்ராவெலா டீச்சர்" எனக் கேட்டு நக்கலாக சிரித்தாள் மாலா.

"ம்ம்ம்! உனக்கும் கல்யாணம் ஆனா புரியும், டெய்லி ரொமான்ஸ் நடக்குதானு" எனச் சலித்தப்படி கூறினாள் மேகலை.

"அட போம்மா! உன் புருசன் மாதிரியா எல்லாரும் இருப்பாங்க, உன்னைய மாதிரி மாட்டுனா நான் டைவர்ஸ் பண்ணிட்டு வெளியில் சுதந்திரமா வந்துடுவேன்"

செந்தா புரியாமல் இருவரையும் பார்த்தாலும், அவர்களின் பெர்சனல் என ஒதுங்கி அமைதியானாள்.

மேகலை"ம்ம்ம்! நீ பேசுவ, எல்லாம் தனக்குனு நடக்கும் போது தான் புரியும்" எனத் தலையைக் குலுக்கிவிட்டு அவர்களைக் கடந்துச் சென்றாள்.

மற்ற இருவரும் பேசாமல் பின் தொடர்ந்தனர்.

மதிய உணவு இடைவேளை வந்தது.

மேகலை, மாலா, செந்தா மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

"ஹேய் சாரி! காலையில் ஹர்ட் பண்ணிட்டனா?" என மன்னிப்புக் கேட்டாள் மாலா.

"ச்சே! ச்சே! என் வாழ்க்கை அப்படி விடு"

செந்தா"கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க, என்ன ஆச்சு? பெர்சனலா இருந்தா வேணாம்" என மெல்ல கேட்டாள்.

"டீச்சர்! அப்படி சொல்ல கூடாத அளவுக்கு ரகசியமில்லை, இங்க எல்லாருக்குமே தெரியும். ஏனா என் புருசன் குடிச்சுட்டு வந்து இந்த ஸ்கூல் முன்னாடியும் கெடப்பார், நான் இப்ப மறைச்சாலும் உங்களுக்கு தானா தெரிஞ்சுடும்" என விரக்தியாக கூறினாள்.

"சாரி டீச்சர்! கஷ்டம் தான்" என்றாள் செந்தா.

"டீச்சர்! இவளை சின்ன வயசிலே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க, இவளோட வீட்டுக்காரர் தான் பி எட் படிக்க வச்சது, ஆனா பாருங்க அப்பப்ப ட்ரிங்க்ஸ் உணடு, சில சூழ்நிலையால் ஒரு கட்டத்துல வேலையும் போய் இப்ப முழு நேரக் குடிகாரர் ஆகிட்டார். இவளுக்கு ரெண்டுப் பொண்ணு." என்றாள் மாலா.

"அவங்களுக்காக தனியா மறுவாழ்வு மையம் இருக்கே மேகலை டீச்சர்"

"அது எல்லாம் போய் பாத்தாச்சு செந்தாமரை. அங்கப் போயிட்டு வந்தா ரெண்டு, இல்ல மூணு மாசம் நல்லா இருப்பார். மறுபடியும் ஆரம்பிச்சுடுவார். எதும் வேலைக்கு ஆகல, இதான் என் விதினு ஏத்துக்கிட்டேன். ஏதோ புள்ளைங்களுக்கு அப்பா, எனக்கு புருசனு ஒரு கேரக்டர். இல்லனா நான் தனியா ரெண்டையும் வச்சுட்டு வாழனுமே"

"ம்ம்ம்! சொல்றேனு தப்பா நெனக்காதீங்க, அப்படி ஒருத்தர் பாதுகாப்புக்கு இருந்தாலும் பிரயோஜனம் இல்லையே, உங்களுக்கு என்ன நடந்தாலும் தெரியாத நிலையில் தானே இருப்பார்" எனக் கேட்டாள் செந்தா.

"நல்லா கேளுங்க செந்தாமரை!" என்றாள் மாலா.

"ம்ம்ம்! உண்மை தான் டீச்சர், என் புருசன் கெட்டவர் இல்ல, ஆனால் குடிகாரர், எவ்வளவு குடிச்சாலும் என் மேல அடிக்கனு கை ஓங்கினதில்ல, அவரு சரியில்லனு நான் விலகிப் போனாலும் ரெண்டுப் பொண்ணுங்க வாழ்க்கை என் பொறுப்பு தான்.

அவர விவகாரத்துப் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் துளிக் கூட இல்ல, அப்படி இருக்கும் போது அவர் பாட்டுக்கும் ஒரு மூலையில் வாழ்ந்துப் போகட்டுமே, எனக்கு இவ்வளவு தான் வாழ்க்கை. இனி புள்ளைங்க மட்டும் எல்லாமே" எனக் கண் கலங்கினாள் மேகலை.

"உங்களுக்கு உங்கப் புருசன் மேல கோபமே வரலையா டீச்சர்?" எனக் கேட்டாள் செந்தா.

"இவளுக்கு வருதோ இல்லையோ எனக்கு ரொம்ப கோபம் வரும், இவ நல்லா சம்பாரிக்குறா, அவர விட்டுட்டு தனியா போனா தான் என்ன? அவரையும் இவ ஏன் பாரமா சுமக்கனும்?" எனக் கடுப்புடன் கேட்டாள் மாலா.

"என் புருசன் ஆரம்பத்துல நல்லா தான் இருந்தார் செந்தாமரை, எங்க காதல் வாழ்க்கைக்கு ஆதாரமாக தான் ரெண்டுப் புள்ளையும் பொறந்தது, குடிப்பழக்கம் இரவு நேரத்தில் மட்டுமே இருக்கும், பகலில் வேலையுண்டுனு போயிட்டு வருவார்.

ஒரு ஆக்ஸிடென்ட் ஆனுச்சு அதனால கண் பார்வைப் பிரச்சனை ஆகிட்டு, அதைச் சரிசெய்ய சில மாதங்கள் ஆனது, பார்வைச் சரியாகி அவர் மீண்ட நேரத்தில், வேலைக்குப் போன போது அவருக்கான போஸ்டிங்கை மாத்திப் போட்டுட்டாங்க, காரணம் அவரால தொடர்ந்து கம்யூட்டரைப் பார்க்க முடியாத நிலை. அவரோட வேலையே அது தான். அவர் கெஞ்சிக் கேட்டும் அவங்க வாய்ப்புக் கொடுக்கல, வெளியில் போனாலும் அதே பிரச்சனை தான். மேலும் சம்பளம் குறைக்கவும் வாய்ப்பிருக்கு.

அந்த ஆபிஸில் நல்ல இடத்தில் இருந்துட்டு பிறருக்கு கீழ் வேலைச் செய்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை மறக்க போதையில் இறங்கினார்.

ஆரம்பத்துல எனக்குத் தெரியல, தெரிஞ்ச போது வேலையும் போச்சு, என் வாழ்க்கையும் போச்சு. இப்ப நான் குடும்பத்தைத் தாங்கிட்டு இருக்கேன்.

ஆனாலும் அவரோட காதல் அப்பப்ப அத்திப் பூத்தாற் போல கெடைக்குது அதை அனுபவிச்சுட்டு இருக்கேன். இது போதும், அவர் நல்லா இருந்தப்ப நிரம்ப வாழ்ந்தவ தான் நான். இப்ப புள்ளைகளுக்காக வாழப் போறேன்" என முடித்தாள் மேகலை.

செந்தா அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

"என்ன அப்படி பாக்குறீங்க செந்தாமரை ...?"

"இல்ல! பெருசா எத்தன வருசம் வாழ்ந்திருப்பீங்க, அதுவே போதுமா? இன்னும் வேணுமுனு ஆசையில்லையா?"

"ஆசைகளுக்கு அளவு இருக்கா என்ன? அதுக்காக ஆசைகளை மட்டும் வச்சுட்டுச் சுத்தினா என் வாழ்க்கை மாறிடப் போகுதா? ஒரு வேளை அன்று என் புருசனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகாம கடவுள் ஒரு வாய்ப்புக் கொடுத்து இருந்தா, இல்ல அந்த ஆபிஸில் அனுபவத்துக்காக ஒரு வாய்ப்புக் கொடுத்திருந்தா என் வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும்."

செந்தாவின் மனம் எங்கயோ சென்றது, காலையில் கௌது கேட்ட ஒரு வாய்ப்புக் கொடு செந்தா என்பது நினைவில் ஓடியது.

"நீ இப்டியே பேசிட்டு இரு, உனக்கு இன்னும் வயசு ஆகல மேகலை, என்னமோ பெருசா வாழ்ந்து கிழிச்சுட்டனு புள்ளைங்களுக்காக வாழப் பழகிட்ட. நீ ஆயிரம் சொன்னாலும் உன் புருசனை என்னால ஏத்துக்கவே முடியாது" என முறைத்தாள் மாலா.

"நான் ஏத்துக்கிட்டேன் மாலா, இப்பவும் அவருக்கு நானா உயிர், எனக்கும் தான். என்ன ஒன்னு குடிக்காரன் பொண்டாட்டி என்ற பேரும் சேந்துட்டு. ஏதோ போகுது போ! அவரு கெட்டவர் இல்ல"

"ஏன் டீச்சர், நீங்க குடிக்க காசு குடுக்காம இருக்க வேண்டியது தானே" எனக் கேட்டாள் செந்தா.

"ம்ம்ம்! எல்லாம் பண்ணியாச்சு, அவருக்கு என்னைய தொல்லைப் பண்ணக் கூடாதுனு தெரியுது, அதனால தற்கொலை வரைப் போயிட்டாரு. கடைசியில் நானே தினமும் காசுக் கொடுத்து விடுறது. இப்ப கடைசியா மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி இருக்கேன் செந்தாமரை. இது அப்பப்ப நடப்பது தான். மனசு வெறுத்து ஒரு முறை முயற்சிப் பண்ணலாமுனு அனுப்பி இருக்கேன்.

போய் ஒரு மாசம் ஆகுது. இன்னும் வரல, நல்லா இருக்குறாருனு சொல்றாங்க அது வீடு வந்தா தான் தெரியும். என்னால முடிஞ்ச ஒரு வாய்ப்பைக் கடவுள் மேல பாரத்தைப் போட்டு கொடுத்து அனுப்பி இருக்கேன், பாப்போம்" எனப் புன்னகைச் சிந்தினாள்.

"கவலைப்படாதீங்க டீச்சர்! இந்தத் தடவை கண்டிப்பா நல்லா ஆகிடுவார்" என செந்தா மேகலையின் கையைப் பிடித்து ஆறுதல் கூறினாள்.
…………………

மாலை வேளை...

செந்தா வெளியில் வர, அங்கு கௌது பைக் மேல் சாய்ந்தவாறு நின்றான்.

பாப்பு பைக் மேல் அமர்ந்துக் கொண்டு கௌது வாங்கிக் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

செந்தா வரவும், "ஐ! அம்மா வந்தாச்சு, இந்தாம்மா அப்பா வாங்கி தந்தாங்க" என நீட்டினாள்.

"நீ சாப்புடுடா" எனப் பின்னால் செல்ல, கௌது பைக்கில் ஏறி அதை உதைத்து ஸ்டார்ட் செய்தான்.

செந்தாவும் பின்னால் ஏறி அமர்ந்திட, பைக் புறப்பட்டது.

பாப்பு மட்டுமே பேசிக் கொண்டு சென்றாள், பெற்றவர்கள் அவளின் ரசிகர்களாக மாறியிருந்தனர்.

செந்தாவிற்கு மனதில் பல எண்ணங்கள் ஓடியது, மேகலை டீச்சர் வாழ்க்கைக்கும், அவள் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்த வாய்ப்பு என்ற வார்த்தை மட்டுமே அவளை பாடாய்படுத்தியது.

ஒரு வேளை கணவன் கேட்ட வாய்ப்பினை நான் கொடுக்காமல் விட்டால் அவரும் மதுபிரியர் ஆகிவிடுவாரா? பிறகு எப்படி வாழ்க்கை மாறும்? அவளால் யோசிக்கவே முடியவில்லை.

மேகலை முதல் கட்ட கல்யாண வாழ்க்கையை கொஞ்சமாச்சும் மனதார இருவருமாக வாழ்ந்துப் பார்த்திருக்கிறர்கள்.

ஆனால் செந்தா, கௌது வாழ்க்கை ஒரு மகள் இருந்தும் இன்னும் தொடங்கவே இல்லையே!

செந்தா மூளையும், மனமும் மாறி மாறி அவளைக் கேள்விகள் கேட்டும், பதில்கள் அளித்தும் அசதியில் மயங்கியது.

இரவு......

பாப்புவை வழக்கம் போல் கௌது தூங்க வைத்தபின் செந்தா நடுவில் படுக்க வர கௌது ஒதுங்கி இடம் கொடுத்தான்.

மூவரும் படுத்திருக்க, கௌது, செந்தா இருவருமே தூங்கவில்லை. ஆனால் வார்த்தைகளியின்றி முழித்துக் கொண்டு இருந்தனர்.

நீண்ட மௌனத்தை களைத்தவாறு"உங்கக் கிட்ட ஒன்னு சொல்லனும்?" என்றாள் செந்தா.

"சொல்லு செந்தா" என அவள் பக்கம் திரும்பிக் கேட்டான்.

மேகலை கதையை அவனிடம் கூறினாள். அதைப் பொறுமையாக கேட்டவன்"அடப்பாவமே! குடிக்கு இந்தளவு அடிமையாவதா? புள்ளைங்க, பொண்டாட்டி, குடும்பம் ஞாபகம் வேணுமுல" என இரக்கப்பட்டான்.

"அவங்க வாழ்க்கைக்கும் நம்ம வாழ்க்கைக்கும் சம்பந்தமில்ல, ஆனா அவருக்கு வாய்ப்புகள் தரப்படலைனு எனக்கு தோணுச்சு. காலையில் நீங்கக் கேட்டதும் ஒரு வாய்ப்பு தானே. அதான்...." என நிறுத்தினாள்.

"அதனால....." எனப் புரியாமல் கௌது அவளை நோக்கினான்.

"உங்களுக்கு ஒரு வாய்ப்புத் தரேன், நம்ம வாழ்க்கையை நமக்குப் புடிச்ச மாதிரி மாத்திக்க, நானும் பழசை மறந்துட்டு புதுசா உங்கக் கூட வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்படுறேன்" என்றாள் மெல்ல.

"செந்தா! நிஜமாவா?"

"ம்ம்ம்! நீங்களும் கெட்டவர் இல்லையே, ஆனா!" என நிறுத்தினாள்.

"ஆனா! ஆவனா! எல்லாம் வேணாம் விடு, எனக்கு புரிஞ்சு நாள் ஆச்சு. இப்ப தூங்கு" என்றான்.

அவனை முறைத்தவள்"கொஞ்சம் இடம் கொடுத்தா உடனே அதிகாரம் பண்றீங்க பாத்தீங்களா?" என்றாள் கோபமாக.

"ஏய்! காலையில நீ தான் ஸ்கூலுக்குப் போகனும், எனக்கு வேலையில்ல, நீ நிம்மதியா தூங்கு" என்றவன் கண்களை மூடினான்.

செந்தாவும் நித்திரைக்குச் சென்றாள்.

காலையில் எழுந்தது முதல் கணவனிடம் முகம் கோணிக் கொள்ளாமல் வழக்கமான வேலைகளில் இருந்தாள் செந்தா.

பாப்பு அடம் பிடித்தாலும் சமாதானம் செய்து பள்ளிக்கு பஸ்ஸில் அனுப்பி வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான் கௌது.

சரியாக செந்தா புடவையின் முந்தானையால் மார்பை மறைத்து சேஃப்டி பின் போட்டுக் கொண்டு இருந்தாள்.

"செந்தா! சீக்கிரம் கெளம்பு, போற வழியில் கோயில் போயிட்டுப் போகலாம்" என்று நுழைந்தவன், கண்ணாடி முன் நின்றவளை நோக்கியவாறு கட்டிலில் சென்றமர்ந்தான்.

"ஏன்? என்ன விசேஷம்...?" எனத் திரும்பாமல் கேட்டாள்.

"சொன்னா தான் வருவீயா?" என அவனும் வேண்டுமென்றே கேட்டான்.

"நேத்து நைட் அப்படி பேசி இருக்க கூடாதுப் போல, கெஞ்சினவருக்கு இப்ப தைரியம் வந்துட்டு" என முணு முணுத்தாள்.

அவளின் முணுமுணுப்புக் கேட்டாலும், உள்ளுக்குள் சிரித்தவன், மெல்ல எழுந்து அவளை பின்னால் சென்று முன் இடையில் கைகோர்த்து அணைத்து அவளின் தோளில் முகம் பதித்து கண்ணாடியில் அவளை நோக்கினான்.

அதுவரை புடவையை சரிச்செய்தவள் அவனின் ஸ்பரிசத்தில் அசையாமல் கண்ணாடியைப் பார்த்து விழித்தாள்.

அவளிடம் புருவத்தை உயர்த்தியவன்,
"என்ன ஏதோ சொன்ன, இல்லல்ல முணுமுணுத்தப் போல பொண்டாட்டி?" எனக் கேட்டான்.

செந்தா அமைதியாக நிற்க, அவனே தொடர்ந்தான்.

"நீ தானே சொன்ன, ஒரு வாய்ப்புத் தரேன்னு, அதை சரியா பயன்படுத்த வேண்டாமா? அதான் நான் புது கௌதுவா, செந்தா மனசுக்குப் புடிச்சவனா மாறிட்டேன். நீ தான் இன்னும் புது செந்தாவா இருக்க, நீயும் பழைய செந்தாவா மாறு அப்ப தான் நம்ம வாழ்க்கை நல்லா போகும்டி" என அவள் காதோரம் இடித்துக் கூறினான்.

செந்தாவிற்கு இந்தப் புதுமையான கௌது வித்தியாசமாக தெரிந்தான்.

இன்னுமே அதிர்ச்சியாய் நோக்கினாள்.

"நம்பலையா!" என்றவன், அவளை தன்னோடு மேலும் இறுக்கினான்.

"நம்பு செந்தா, நானே தான்" என அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன் சட்டென்று விலகி, "நான் பைக்கில் வெயிட் பண்றேன் வா!" என்றான்.

அவன் விலகியதும் ஏதோ ஒரு மாதிரி வெறுமைத் தோன்றினாலும், அதை வெளிக்காட்டாதவள்,

"இன்னும் சாப்புடல!" எனக் கைப்பையை எடுத்துச் சரி செய்தாள்.

"தோசை தானே, நீ கெளம்பு கோயிலுக்குப் போயிட்டு சாப்புட்டுகலாம்"

"இல்ல!" என இழுத்தாள்.

"என்ன இல்ல, அம்மாவும், பாட்டியும் சாப்புட்டாச்சு. நீயும், நானும் தானே. வா பாத்துக்கலாம்" என அவன் வெளியேறினான்.

செந்தா சாப்பிடாததை எல்லாம் கவனத்தில் எடுக்காத செவாயி மகனிடம் மட்டும் விசாரித்தார்.

"கோயிலுக்குப் போறோம்மா, பாத்துகிறோம்" என பைக்கை ஸ்டார்ட் பண்ண, செந்தா சென்று அமர்ந்தாள்.

"ம்ம்ம்! கோயிலுக்குச் சாப்புட்டு போகபுடாத என்ன? அவ விரதம் இருக்கானு எம் புள்ளையும் சேத்து விரதம் இருக்க வைக்கிறா, இவனும் பொண்டாட்டிப் பின்னாடி பூம் பூம் தலை ஆட்டிட்டுப் போறான்" என வாய்விட்டே புலம்பினார்.

இளா மட்டும் செந்தாவிற்கு இடையிடையே பேசுகின்றாள், தமிழு அம்மாவிற்கு சப்போர்டாக செந்தாவிடம் பெரிதாக பேசுவதில்லை.

கோவில் வளாகம்...

உள்ளே செல்லும் முன் கௌது செந்தாவிற்கு பூ வாங்கிக் கொடுத்தான். அவளும் மறுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டாள்.

இருவரும் சாமிக் கும்பிட்டு முடிக்க, ஐயர் பிரசாதம் தந்தார்.

அருகருகே நின்றவர்களில் முதலில் பிரசாதம் வாங்கிய கௌது, குங்குமத்தைச் சட்டென்று கண்கள் மூடி வேண்டிக் கொண்டு இருந்த செந்தாவின் நெற்றியில் வைத்துவிட்டான்.

விழிகளைத் திறந்தவள் அருகே கணவனைக் காண, "அங்கப் பாரு!" என சன்னதியைக் காட்டினான்.

செந்தாவும் எட்டி உள்ளே பார்க்க, சாமி சிலைப் பிரகாசிப்பது புதிதான நம்பிக்கை தந்தது. பிறகு கோயிலைச் சுற்ற தொடங்கினர்.

கௌது சென்று ஓரிடத்தில் அமர, செந்தா சென்று தரையில் விழுந்து வணங்கிவிட்டு வந்து அவனருகே அமர்ந்தாள்.

'என்ன திடீருனு கோயில் எல்லாம்?" எனக் கேட்டாள்.

"சும்மா வரத் தோணுச்சு"

"ம்ம்ம்!"

"உனக்கு சந்தோஷமா?"

"ம்ம்ம்!" எனத் தலையை ஆட்டி லேசாக சிரித்தாள். ஆனாலும் அது பற்கள் தெரியாத மெல்லிய சிரிப்பாய் அவன் மனதைக் கொள்ளையடித்தது.

அவளருகே குனிந்தவன்"செந்தா!" என அழைத்து, பின்"அழகா இருக்க" என்றான்.

அவன் ஏதோ சொல்ல வருகிறான் என அவளும் குனிய, அவனின் அந்த வார்த்தைகளில் மனம் மகிழ்ந்தாலும், வெளிக்காட்டாமல்"ஏன் இத்தன நாளா அது தெரியலையா?" என இதழினைச் சுளித்தாள்.

"அதான் பாரு! மக்கு புருசனா இருந்துட்டேன். ஆனா இப்ப அறிவாளியா மாறிட்டேனாக்கும். பொண்டாட்டி எத சொன்னா சந்தோஷப்படுவானு அதைச் சரியா சொன்னேன் பாத்தீயா" என கிண்டல் செய்தான்.

அவனைத் திரும்பி முறைத்தவள், உடனே எழப்போனாள்.

அவள் கையைப்பிடித்து அமர வைத்தவன், "இப்ப நீ சொல்லு, மக்கு புருசனா இருக்கட்டுமா? இல்ல அறிவாளி புருசனா இருக்கட்டுமா?" எனக் கேட்டான்.

"ம்ம்ம்! மொதல மண்டையில மூளை இருக்கா?" என்றாள் கோபமாக.

"பாத்தீயா! நீ டீச்சர்ல அத மறந்துட்டேன்.
சரி சொல்லு!"

"என்ன சொல்ல?"

"எப்படி இருக்கட்டும்?"

"ம்ம்ம்! என் புருசனா இருங்க போதும்"

"அப்ப நீயும் என் பொண்டாட்டியா இருக்கனும்"

"அதுல என்ன சந்தேகம்?"

"இல்ல! நீ அழகா இருக்கனு சொன்னதும், உன் முகம் செவந்துச்சு, ஆனாலும் அதை மறைச்சுட்ட பாரு, கொஞ்சமாச்சும் வெட்கபடுடி, கல்யாணம் ஆகி இத்தனை வருசம் கழிச்சு கெஞ்சுறேன் பாரு, நீ சொன்ன மாதிரி மூளை இருக்கானு எனக்கும் சந்தேகம் தான். ஆனாலும் இருக்கு போல" என்றவனின் பேச்சில், வெளிப்படையாக பற்கள் தெரிய லேசாக சிரித்தவள்,

"எப்படி தெரியும், மூளை இருக்கு போலனு?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்! இல்லைனா இந்த காதல் மனைவி என் கண்ணுக்கு இப்பவரை தெரிஞ்சிருக்க மாட்ட செந்தா. அதே அம்மா பையன், புரிதல் இல்லாத புருசன், காசு சம்பாரிக்கும் மெசினா வாழ்ந்துட்டு நரைமுடி வந்திருக்கும் போது, தொலைத்த வாழ்க்கையைத் திரும்பி எண்ணி ஏங்கியிருப்பேன்"

அவன் பேச்சில் மனம் இளகியவள், அவனின் கையைப் பிடித்து ஆறுதல் செய்தாள்.

"சரி போகலாமா?"

"ம்ம்ம்!"

அருகே இருந்த உணவகத்திற்கு சென்றனர். செந்தாவிற்கு என்னப் பிடிக்கும் எனக் கேட்டு ஆர்டர் செய்தான்.

கௌதுவிற்கும் என்னப் பிடிக்கும் என்பதை ஆச்சரியமாக பார்த்தாள் செந்தா.

"உங்களுக்கு இதுப் புடிக்குமா?"

"ம்ம்ம்!"

"ஆனா உங்கம்மா உங்களுக்குப் புடிக்குமுனு வேற எல்லாம் சொல்வாங்க"

"அம்மா தனி ஆள் செந்தா, அதனால அதுக்குச் செய்ய முடிஞ்சதை நான் புடிச்சதா மாத்திகிட்டேன். அவ்ளோ தான்"

"ஓ!" எனக் கணவனை முதன் முறையாக வேறக் கோணத்தில் பார்த்தாள்.

குடும்பத்துக்காக உழைப்பவன் என்பது தெரிந்த விசயம், ஆனால் அவனுக்கென்ற ஆசைகள் தனியா இருக்கா? என்ற யோசனையில் இறங்கினாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பினர். ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. செந்தாவிற்கு வேலையை நிரந்தரமாக்கி, சொற்ப சம்பளமும் போட்டனர். அது செந்தாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அன்று அதன் சந்தோஷத்தில் செந்தா, பள்ளியின் வெளியே கௌதுவிற்காக காத்திருந்தாள்.

ஆனால் அவன் வரவில்லை. நேரமாக ஃபோன் செய்தவளிற்கு ஸ்விட் ஆப் என்றே வந்தது.

மனதில் பயம் கிளம்பிட, பஸ்ஸில் ஏறி வீட்டிற்குச் சென்றால், அங்கும் அவன் இல்லை. மகேஷ், இன்னும் பலரிடம் விசாரித்தும் பயனில்லை.

இரவுப் பொழுது கடந்திட, கௌதுப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. செவாயி ஒப்பாரி வைக்க, மகள்கள், மருமகன்கள் வீடு வந்துச் சேர்ந்தனர்.

விடிந்தும் கௌதுவைப் பற்றிய தகவல் இல்லை. செந்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. மனமோ'இல்ல அவருக்கு ஒன்னும் ஆகியிருக்காது' என ஆறுதல் கூறியது.

பாப்பு வேறு அப்பா என அழத் தொடங்கினாள். செந்தாவின் பிறந்த வீட்டினர் வர, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை அக்கா இருவரிடமும் கொட்டினாள்.

அவளைத் தேற்ற முடியாமல், அனைவரும் தவித்தனர்.

கொலுசொலி ஆசைகள்....
 
Top