எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 10

S.Theeba

Moderator
வரம் 10

இலக்கியாவுக்கு அம்மா இல்லை என்று மஞ்சு சொல்லி முடிப்பதற்குள் தங்கள் வீட்டின் அருகில் வந்துவிட்டார்கள். வாசலிலேயே மாலதி நின்றிருந்தாள். மஞ்சுவின் தாய் கலாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். இதனால் மேற்கொண்டு யதுநந்தன் பற்றி வர்ஷனாவால் மஞ்சுவிடம் பேசமுடியாது போய்விட்டது. அன்று இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தாள் வர்ஷனா.
யதுநந்தனின் மனைவிக்கு என்ன நடந்திருக்கும், பிரசவத்தில் ஏதாவது பிரச்சினை வந்திச்சோ அல்லது விபத்தில் சிக்கி உயிர் போயிருக்குமோ என்று மனம்போன போக்கில் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தாள்.

மறுநாள் அலுவலகம் சென்றவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது யதுநந்தன் மனைவி பற்றி அறிந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் யோசித்தே மண்டை வெடித்து விடும் போல் தோன்றியது.

மஞ்சுவிற்கு நிச்சயம் விவரம் தெரிந்திருக்கும். சும்மாவே அவளை பிபிசி என்றுதான் நண்பிகள் கேலி பண்ணுவார்கள். ஏனெனில், அவள் ஊரிலுள்ள எல்லோரைப் பற்றியும் தகவல் சேகரித்து வைத்திருப்பாள்.

அப்படிப்பட்டவள் நிச்சயம் தனது மாணவியான இலக்கியாவின் அம்மாவைப் பற்றி அறிந்து வைத்திருப்பாள். அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தவள் அவளுக்கு ஹோல் பண்ணலாம் என்று முடிவெடுத்தாள். அவளின் நல்ல நேரம் சிவானந்த் தன் பெர்சனல் விஷயமாக வெளியில் சென்றிருந்தான்.

மஞ்சுவின் பள்ளி விடும் நேரம் பார்த்து அவளது கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினாள். அழைப்பை எடுத்த மஞ்சு "ஹாய் செல்லம்... என்ன இந்த டைமில் ஹோல் பண்ணுறாய்... வேலை இல்லையா... அல்லது நேரத்துக்கே கொட்டிக்கிறியா..?" என்றாள்.
"உனக்கு இப்போ கிளாஸ் இருக்காடி..."
"இல்லடி... ஸ்கூல் விட்டாச்சு. நீ சொல்லு செல்லம்...."
"சும்மாதான்டி எடுத்தேன்.."
"அடியே... யார்கிட்ட கதை விடுறாய். வேர்க் டைமில் நான் ஹோல் பண்ணினாலே கத்துவாய். இப்போ சும்மா ஹோல் பண்ணியிருக்காளாம்..."
"இல்லடி... அது வந்து...."
"எது வந்திச்சு..."
"போடி எருமை... நேற்று நீ சொல்லிட்டு பாதியில விட்டுட்டியா.. அதுதான்.."
"எதையடி பாதியில விட்டன்.."
"அடச்சீ கழுதை.. கொஞ்ச நேரம் வாயை மூடுடி. கேட்க வந்ததை முழுசாக் கேட்க விடாம நொய்நொய்னுட்டு இருக்க.."
"ஊரிலுள்ள மிருகத்தையெல்லாம் கூப்பிடுறாயடி. எனக்கு எங்க அம்மா அப்பா அழகாய் மஞ்சு என்று பேர் வைச்சிருக்கினம்.."
"நான் ஃபோனைக் கட் பண்ணுறேன். நீ பேசிக் கொண்டே இரு.."
"சாரி வர்ஷா. நான் வாயைக் கையால் மூடிட்டன். இப்போ நீ பேசு செல்லம்"
"அது வந்து.. நேற்று இலக்கியாவுக்கு அம்மா இல்லைன்னு சொன்னியே.. அவள் அம்மா இறந்திற்றாங்களா...? எப்படி?"
"ஓ... அதைக் கேட்டியா? நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைச்சேன். ஆனால்... ஆமா.. இப்போ எதுக்குடி ஹோல் பண்ணி இலக்கியா அம்மா பற்றி இவ்வளவு அக்கறையா கேட்கிறாய்? உனக்குத் தான் மற்றவர்களைப் பற்றி பேசினால் பிடிக்காதே. அடுத்தவங்க பெர்சனல் விசயம் எதுவும் நாம தெரிஞ்சுக்க ஆசைப்படக்கூடாது என்று எனக்கு அட்வைஸ் பண்ணுவே..."

இப்படி மஞ்சு கேள்வி கேட்கவும் திடுக்கிட்டாள் வர்ஷனா. என்ன சொல்வதென்று யோசித்து விட்டு "அதுவந்து.. இலக்கியா ரொம்ப கியூட்டான சுட்டிப் பொண்ணுடி. எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். அந்தக் குழந்தைக்கு அம்மா இல்லை என்றதும் மனசுக்குக் கஸ்டமாய் இருந்திச்சு. அதுதான் கேட்டேன்."
"ம்ம்… ஓகே ஓகே. இலக்கியா என் கிளாசில் சேர்ந்தப்போ அவளுக்கு அம்மா இல்லை, அப்பா மட்டும்தான் என்று அறிந்தப்போ எனக்கும் ரொம்பக் கஸ்டமாய்தான் இருந்திச்சு. இலக்கியாவின் அப்பா மிஸ்டர் யதுநந்தன் மேற்படிப்பை லண்டனில் முடிச்சவராம். அங்கே படிக்கும்போதே ஒரு பெண்ணை லவ் பண்ணி கல்யாணமும் பண்ணியிருக்கார். இலக்கியா பிறந்ததும் இருவருக்கும் ஏதோ பிரச்சினையாகி டிவோர்ஸ் ஆச்சுதாம். அவளுக்கு பிள்ளைய வளர்க்கிறதில இஷ்டம் இல்லை. தனக்கு பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம். சோ.. இலக்கியா பிறந்ததிலிருந்து அப்பா கூடவே வளருது. மிஸ்டர் யதுநந்தனின் தங்கச்சி பானுமதிதான் இலக்கியாவை பார்த்துக்கிறது. இப்போ பானுமதிக்கும் மேரேஜ் ஆச்சு. பட், இலக்கியாவுக்காக அவங்க புருஷன் வீட்டுக்குப் போகாம இங்கேயே தங்கிற்றாங்க. அவங்க புருஷன் சவுதியில் இஞ்சினியராக இருக்காராம்.. அதனால அவங்களுக்கு இலக்கியாவப் பார்த்துக்கிறதில எந்தக் கஷ்டமும் இல்லையாம்."
"ஓ..ஓ.."
"என்னடி ஓஓ என்று இழுக்கிறாய்"
"இல்லடி... இலக்கியாவ நினைக்க பரிதாபமா இருந்திச்சு. இந்த வயசுல தாயில்லாமல் வளருதே. எவ்வளவு ஏக்கமாக இருக்கும்"
"பாவம்தான். ஆனால் அந்தக் குழந்தைக்கு அம்மா பற்றி எந்த ஏக்கமும் தோணாமதான் வளர்க்கிறார்கள். அவளது அப்பாவும் அத்தையும் கண்ணின் மணியைப் போல பார்த்துக்கிறாங்க."
"ம்..ம்.. ஓகேடி நீ சாப்பிட்டியா..?"
"செல்லக்குட்டி என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா..? பதினொரு மணிக்கு லஞ்சும் ஆறு மணிக்கு டின்னருக்கு சாப்பிடும் வீரப்பரம்பரையில் வந்தவள் நான். என்னைப் பார்த்து கேட்டாயே ஒரு கேள்வி..."
"சரிடி... சரிடி.. சாப்பிடுறதையே வீரமா மாத்திக்கிற தன்மை உனக்கு மட்டும்தான் இருக்கு."
"அடியே சாப்பாட்டு ராமி.. இதை நீ சொல்லுறாய். மாலதி அம்மாகிட்ட கேட்டா உன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடும்."
"ஓகேடி. கூல்.. கூல்.. நான் அப்புறமா ஹோல் பண்ணுறேன். பை.. சீ யூ.."
" ஓகே.. பை.. மிஸ் யூ செல்லக்குட்டி..."

மஞசுவிடம் பேசிவிட்டு நிமிர்ந்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். ஏனெனில், அவள் மேசைக்கு அருகில் நின்று கொண்டிருந்தான் யதுநந்தன்.
 
Top