எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -11

@38

Moderator
11

கணவரிடம் வந்த சாந்தி அமுதா காதலிக்கும் பையனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள் லதாவின் தாய் மாமன் வழி சொந்தம் என்று கேட்டதும் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார்.


திட்டம் போட்டு இரு பெண்களையும் வளைத்துப் பிடித்திருக்கிறார்கள். இந்தப் பெண்களும் கண்டதெல்லாம் காட்சி கொண்டதெல்லாம் கோலம் என நம்பி விட்டனர்.

எப்படி இதிலிருந்து மீள்வது என தெரியாமல் நிம்மதி இழந்து தவிக்க ஆரம்பித்தார்.


அப்பொழுதுதான் பெருமாளே முன் வந்து கதிரவனுக்கு ஏன் அமுதாவை கட்டிக் கொடுக்கக் கூடாது என யோசனை கேட்க.. முதலில் தயங்கினாலும் அடுத்த நொடி சரி செய்யுங்க என்று தலையை ஆட்டினார்.


இருவருக்குமே நிச்சயமாக தெரியும் கதிரவனிடம் சென்று அமுதாவை பற்றி பேசினால் லதாவை கார்த்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பான். இப்பொழுது இருபெண்களுமே காப்பாற்றப்பட வேண்டும் பெண்கள் பிரச்சினையில் மாட்டிக் கொள்வதை பெற்றோர்கள் விரும்பவில்லை.

அதேபோல் கதிரவனும் லதாவிற்காக கார்த்திகை கேட்க என்ன செய்வது என்று பெருமாள் சாந்தியிடம் கேட்டார் சாந்தியும் மகனின் மனதை அறிந்திருந்ததால் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டார் ஆனால் கதிரவனுக்கு லதா காதலிக்கும் விஷயம் தெரியாது. தங்கையின் மனதை அறிந்திருந்தால் கண்டிப்பாக திருமணம் எதனால் தடைப்பட்டது என சிறிதாவது ஆராய்ச்சி செய்திருப்பான்.

அமுதா நிதர்சனத்தை புரிந்து கொண்டு வீட்டுக்குள் அடங்கி விட லதா திருமணத்தை நிறுத்திவிட பல்வேறு வழிகளில் முயற்சி செய்து பார்த்தாள்.


சாந்தி லதாவை அழைத்து வந்து வீட்டில் அடைத்து வைத்தார் காவலுக்கு இரண்டு பெண்களை வேறு வைத்து விட்டார்.

அவளது மொபைல் போன் பறிக்கப்பட்டது.
வெளித் தொடர்புகள் எதுவுமே அவளை நெருங்காதவாறு பார்த்துக் கொண்டார்.

வேலை செய்பவர்கள் மூலமாக காதலனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்தாள் லதா.. தேடிவந்தவனை அடித்து விரட்டினர்.

மாமனின் உதவியை நாடலாம் என்று பார்த்தால் என்னை அடிக்கும் உரிமை யார் கொடுத்தது என்று கேட்டாளோ அதன் பிறகு அவர் முகத்தைக் கொடுத்து கூட பேசவில்லை.. சொல்லப் போனால் அவருக்கு லதா, கார்த்தி திருமணமே பிடிக்கவில்லை அமுதாவிற்காக இவளை சகித்துக் கொண்டிருக்கிறார்.


சாந்தி தான் அவரை சமாதானப்படுத்தியது நமது வீட்டின் சொத்தை பார்த்து வேண்டுமென்றே திட்டம் போட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார்கள்.


இதற்கு நம் வீட்டுப் பெண்கள் என்ன செய்வார்கள் ..அமுதா எப்படி நம் மகளோ அதேபோல் லதாவையும் ஏற்றுக் கொள்ளுங்கள் தெரியாமல் ஒரு வார்த்தை பேசி விட்டால் அதற்காக அவள் மீது இத்தனை கோபம் ஆகாது. நன்றாக யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும் காதல் மயக்கத்தில் அவன் சொன்னதை எல்லாம் இவள் நம்பி இருக்கிறாள் நம்மைப் பற்றி அவன் தவறாக புரிய வைத்திருக்கிறான்.. அந்த வயது எதை ஏற்றுக் கொள்வது எதை விடுவது என தெரியாமல் பேசிவிட்டாள்.

உங்கள் மீதும் தவறு இருக்கிறது வீட்டிற்கு அழைத்து வந்து கண்டித்திருக்க வேண்டுமே தவிர பொது இடத்தில் இரு பெண்களை கை ஓங்கியது தவறுதான்.
என மெல்ல மெல்ல கரைத்தார் .

அதன் பிறகு அவரும் யோசித்துப் பார்க்க சொத்துக்காக தான் தாயைக் கொன்றார்கள் இப்பொழுது லதாவையும் அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தால் கண்டிப்பாக அவள் பெயரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் மாற்றப்பட்டவுடன் ஏதாவது செய்தாலும் செய்து விடுவார்கள் நமது கோபத்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை பறிபோய் விடக்கூடாது என அவரும் சற்று தனித்து வந்தார்.

லதா அத்தையிடம் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். அத்தை உங்க பொண்ணா இருந்தா இந்த அளவுக்கு அழவிடுவீர்களா.

என் பொண்ணு இதைவிட அழுது முடிச்சிட்டா என்றார்.

என் அம்மா இருந்திருந்தா கண்டிப்பா என் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்க மாட்டாங்க.

என் அண்ணி பிழைச்சிருந்தா தானே அவங்களை தான் கொன்னுட்டாங்களே அதனால அவங்க இடத்திலிருந்து நான் முட்டுக்கட்டை போடறேன்.

அவங்க சாவு எதிர்பாராத விபத்து அத்தை.. நிஜமாவே என் அம்மா பண்ணைக்கு போகும் போது பாம்பு கடிச்சு செத்துருக்காங்க அதுக்கு சாட்சி அங்க வேலை செஞ்ச நிறைய பேரு இருக்காங்க அத்தை மாமா கூட எல்லார்கிட்டயும் கூட்டிட்டு போய் கேட்ட வச்சாங்க.


அவன்கிட்ட சம்பளம் வாங்குறவன் எப்படி அவனுக்கு எதிரா சொல்லுவான்.. பண்ணையாட்களுக்கு பணம் கொடுத்து உங்கிட்ட அந்த மாதிரி பேச சொல்லி இருப்பாங்க அப்போ தானே அந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்னு நீ என்கிட்ட வாக்குவாதம் பண்ண முடியும்.

இங்க பாரு லதா இதுக்கு மேல இதை பத்தி நீ எதுவுமே பேசக்கூடாது இந்த அத்தை கையால சாப்பிட்டதில் ஒரு துளியாது உனக்கு விசுவாசம் இருந்தால் நன்றி இருந்தா இந்த கல்யாணத்தை நீ பண்ணிக்கிற.. இதுக்கப்புறம் நீ ஏதாவது பேசின உன்னை வளர்த்தின பாவத்துக்கு என் கழுத்தை அறுத்துக்கிட்டு நானே செத்துப் போயிடுவேன் என்று முடிக்கவும் அத்தையின் தற்கொலை மிரட்டல் சற்று வேலை செய்தது அதன் பிறகு எந்த ஒரு எதிர்ப்பையும் அவள் காட்டவே இல்லை.

லதாவின் திடீர் அமைதி சாந்திக்கு சற்று பயத்தை கொடுத்தது சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கூட நம்பி இருப்பார்.

திருமண புடவைகள் எடுப்பது நகைகள் தேர்ந்தெடுப்பது என அனைத்திலும் மௌனமாகவே கலந்து கொண்டாள் ஏதாவது திட்டம் வச்சிருக்கியா என்ன என்று சாந்தி நேரடியாகவே கூட கேட்டுப் பார்த்து விட்டார்.

தலையை அசைத்து இல்லை என்று சொன்னவள். அமுதா கிட்ட பேசினேன் அவ லவ் பண்ணின பையன் சொத்து இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டானாம்.. அப்படின்னா இவனும் அப்படித்தானே இருப்பான் அதான் என் மனசை மாத்தி கிட்டேன் .

அதும் இல்லாம அண்ணாக்கு அமுதாவை ரொம்ப பிடிச்சிருக்கு என்னால அண்ணனோட சந்தோஷம் பாழாக வேண்டாம்.

உங்களுக்கும் என் மாமா குடும்பத்தை சுத்தமா பிடிக்கல அப்படியே நான் உங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டாலும் கடைசி வரைக்கும் உங்களை பாக்கவும் முடியாது பேசவும் முடியாது உங்களுக்காக அவனை இழக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஆனா அவனுக்காக உங்களை இழக்க முடியாது அத்தை என்று உண்மையாகவே தான் கூறினாள்.

அவளுக்கு அத்தையின் மீது அவ்வளவு பாசம் இருந்தது சிறுவயதில் இருந்து அவளை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார்.. எல்லாமே அவள் விருப்பமாக தானே இருந்தது இன்றுவரை எத்தனை செலவு செய்திருக்கிறார் எதுக்குமே அவர் கணக்கு பார்த்தது கிடையாது அப்படி இருக்கும் பொழுது அவருக்காக இந்த சிறு தியாகத்தை செய்தால் தான் என்ன என்று தோன்றியது ஆனால் கார்த்தியுடன் திருமணம் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் கார்த்தி தோற்றத்திலும் குணத்திலும் அப்படியே சிவராமின் மறு உருவம்.

சிவராமன் சிறுவயதில் இருந்தே லதாவிடம் அதட்டிப் பேசுவதும் கண்டிப்பதுமாக இருந்ததால் எப்பொழுதுமே அவரைக் கண்டால் அவளுக்கு பயம் தான் இருக்கும் மரியாதையோ பாசமோ துளிகூட கிடையாது.


அதே உருவத்தோற்றத்திலும் குணத்திலும் ஒத்துப் போகும் கார்த்தியை நினைத்துப் பார்க்கையில் மனம் கசப்பை உணர்ந்தது.
அத்தைக்காக பொறுத்துக் கொண்டாள்.
அவனுடன் சேர்ந்து விளையாடி இருக்கிறாள். சேர்ந்து பிரயானங்கள் மேற்கொண்டு இருக்கிறாள் அவ்வளவு ஏன் காலேஜிலிருந்து ஊருக்கு வரும்பொழுது அவனைத்தான் அழைப்பாள் அதேபோல் அவன் தான் திருப்பவும் அழைத்துச் செல்வான்.

எத்தனையோ பொருட்கள் கேட்டு வாங்கி இருக்கிறாள்.. அவனும் வாங்கி கொடுத்திருக்கிறான். அதெல்லாம் வேறு அத்தை மகன் என்று உரிமை ஆனால் திருமணம் என்பதற்கு அடிப்படையில் பிடித்தம் வேண்டுமே அது இல்லாமல் எப்படி..?

தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் போல துடித்துக் கொண்டிருந்தாள் ஆனால் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள யாருமே இல்லை இந்த சமயத்தில் எப்படியோ அவளது காதலனான பிரியதர்ஷன் அவளைக் காண அறைக்கே வந்துவிட்டான்.

உனக்கு கல்யாணமாமே எனக்கேட்டபடியே ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள்..யாராவது பாத்திட போறாங்க முதல்ல வெளிய போ என விரட்டி விட்டாள்.

எதுக்காக நான் வெளியே போகணும் நாலு வருஷமா மாங்கு மாங்குன்னு காதலிச்சியே அதுக்கு அர்த்தம் என்ன..?

நான் உங்கிட்ட ஆரம்பத்திலேயே சொன்னேன் உன் வீட்டில உன்னை கொன்னு வேணாலும் போடுவாங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்கன்னு.

அப்போ எல்லாம் என்ன சொன்ன..?
அத்தை என் மேல் உயிரையே வச்சிருக்காங்க நான் சொன்னா கண்டிப்பா மறு பேச்சு பேசாம கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு இன்னைக்கி அவங்க பையனுக்கே உன்னை கல்யாணம் பண்ணறாங்கன்னா என்ன அர்த்தம் என அவளின் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.

பைத்தியம் மாதிரி உளறாத இந்த கல்யாணம் என் அண்ணனோட நிர்பந்தத்தால் நடக்குது அவங்க அமுதாவுக்கு தான் என் அண்ணனை கேட்டது .

ஆனா என் அண்ணன் தான் கார்த்திக்கிற்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் தான் அமுதாவை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னாங்க ..அதுக்காக தான் வேற வழி இல்லாம அவங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க மத்தபடி எதுவும் இல்லை இப்போ கூட ஒன்னும் இல்ல நீ என்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லு உன் பின்னாடியே வர்றேன்.என அவனிடம் கெஞ்சினாள்.

அதை புறந்தள்ளியவன் ஆஹா எவ்வளவு அருமையான திட்டம் ஏற்கனவே உன் அம்மாவை கொன்னுட்டோம்ங்கற பழி சொல்லோட வாழ்ந்துட்டு இருக்கோம் இப்போ உன்னையும் கூட்டிட்டு போனேன்னா சொத்துக்காக கூட்டிட்டு போனேன்னு சொல்லுவாங்க அந்த பழிச்சொல் என் குடும்பத்துக்கு என்னால வர வேண்டாம் என்றான்.

அப்படின்னா இப்போ உன்னோட கூட்டிட்டு போக வரலையா..?என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா..?என கண்ணீருடன் கேட்டாள்.

இல்லை என்றவன் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லிட்டு போகணும்ங்கிறதுக்காக தான் வந்தேன் எப்படி இருந்தாலும் நீ எனக்கு கிடைக்க போறதில்லை. நான் உன்னை ஏதாவது பண்ண முயற்சி செய்தாலும் வாசல்ல நிக்கிறவங்க ரெண்டே நிமிஷத்துல உன்னை வந்து காப்பாத்திடுவாங்க.

ஏற்கனவே உன்னை ஒரு முறை பார்க்க வந்த போ உன் மாமா என் கையை காலை உடைச்சிட்டாரு ..இப்போ தான் நான் கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சிருக்கேன் மறுபடியும் என் உடம்பை புண்ணாக்கிக்க விரும்பல பிறகு எதுக்கு வந்தேன்னு தானே சொல்ற.

என் குடும்பத்தை பத்தி தப்பு தப்பா சொல்ற உன் அத்தை மாமாவோட கேவலமான புத்தியை பத்தி சொல்றதுக்காக தான்.

அவங்க ஒன்னும் வளர்த்த பாசத்துக்காகவோ இல்லை அண்ணன் பொண்ணு என்கிற முறையிலேயோ உன்னை அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கல.


உன் பெயரில் இருக்கிற சொத்துக்காக தான்.. சொத்து மட்டும் இல்லைன்னு வையேன் இந்த குடும்பத்துல நீ செல்லா காசு..

உளறாத தர்ஷன். அதான் உன் காதலை முறிச்சிகிட்டியே .அதுக்கப்புறம் எதுக்காக என்கிட்ட பேசிட்டு இருக்க அவங்க சொத்துக்காக என்னை மருமகளா ஏத்துக்கறாங்க..இல்ல வேற எதுக்காகவோ என்னை ஏத்துக்கறாங்க அது அவங்களுக்கும் எனக்கு இருக்கிற தனிப்பட்ட விஷயம் நீ தயவு செஞ்சு இங்க இருந்து போ இல்ல நான் கத்தி வெளில இருக்கறவங்களை உள்ளே கூப்பிடுவேன்.

தாராளமா என்றவன் பேண்ட் பாக்கெட் இருந்த சில போட்டோக்களை எடுத்து அவள் முகத்தில் வீசி எறிந்தான்..உள்ள வர்றவங்க இதையும் சேர்ந்து பார்க்கட்டும் என்றபடி.

ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்தவள் அருவருப்பில் முகம் சுளித்தாள்.

அவனுடன் தனிமையில் இருந்த போட்டோக்கள் எல்லாவற்றையுமே அவளுக்கே தெரியாமல் மிக ஆபாசமாக படம் பிடித்திருந்தான்.

எப்படி.. எப்படி இது சாத்தியம் நான் எப்பொழுதுமே இதுபோல அவனிடம் நெருக்கம் காட்டியது இல்லையே..தனிமையில் சந்தித்தது உண்மை..எல்லை மீறியதெல்லாம் நினைவில் இல்லை அப்படியென்றால் என யோசிக்கும் வேளையில் அவன் பேச ஆரம்பித்தான்.


எவ்வளவு அழகா என்கிட்ட மயங்கி கிடக்கிற பாத்தியா உனக்கு நான் முத்தம் கொடுக்கும் போது, அப்பறம் நான் உன்னை..என காதில் கேட்க முடியாத அளவிற்கு அவனின் ஆபாச வார்த்தைகளை கேட்டவள் கோபத்தில் கத்தினாள்.

டேய் அசிங்கம் புடிச்சவனே உன்னையா நான் காதலிச்சேன்.. அத்தை சொன்னப்போ கூட நம்பல இப்போ சொல்லறேன்டா..என் அம்மா சாவுக்கு நீங்க தான் காரணம்.பொறுக்கி போடா இங்கிருந்து என்று கத்தவும்.. அறையின் வெளியே சிறு சலசலப்பு கேட்டது.

சற்று நேரத்தில் சாந்தி கதவை தட்டினார்.

டேய் வீட்டுக்கு பின்னாடி ஏதோ சத்தம் கேட்குது என்னனு பாருங்க..என்றவர் லதா..கதவை திற என்ன பண்ணற இவ்ளோ நேரமா ..

ஒன்னுமில்ல அத்தை..துணி மாத்தறேன் இப்போ வரேன் என்றவள்
போட்டோவை மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என நினைத்து அதை வேகமாக சேகரிக்க குனிந்தாள்.

அவளை தள்ளிவிட்டவன் இதெல்லாம் என்கிட்டயே இருக்கட்டும்.. பாத்தியா சொல்ல வந்ததை மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்.

இந்த போட்டோவை எல்லாமே உன் மாமன்காரன் பாத்துட்டான்.. ஸ்பெஷல் எடிசன் கூட பாத்திருக்கான்..என்ன அதையெல்லாம் என் முன்னாடியே எரிச்சிட்டான்.

இதுக்கப்புறம் கூட அவன் பையனுக்கு உன்னை கல்யாணம் பண்ண சம்மதிக்கறான்னா என்ன காரணம்..உன்னோட சொத்து மட்டும் தான்.அப்புறமா உன்னை அந்த கோலத்துல பாத்தவன் இனி எப்படி மரியாதையா பாப்பான்.

அவனை தான் உன்னால எப்படி நேருக்கு நேரா சந்திக்க முடியும்..
எது எப்படியோ அந்தாளு மனசுக்குள்ள ஏதோ பெரிய திட்டம் வச்சிருக்கான் இல்லனா உன்னை மாதிரி ஒழுக்கம் கெட்டவளை மருமகளா ஏத்துப்பானா..
வாழ்த்துக்கள் பெருமாள் மருமகளே.

இந்த போட்டோ எல்லாம் என்கிட்ட தான் பத்திரமா இருக்கும்.. எதிர் காலத்துல உன் புருஷன் பாக்கனும்ல என்றபடி விசில் அடிக்க அவனை தூக்கிச் செல்ல ஒரு கயிறு உள்ளே வந்து விழுந்தது அதில் ஏறி மறைந்தான்.

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.. எவ்வளவு அழகாக ஏமாற்றப்பட்டிருக்கிறாள்.

அத்தையை நினைத்து மனம் வெம்பியது..அவள் அத்தை அல்ல..தாய்..தாயே தான்..அவள் வாழ்வை காக்க வந்த தாய்..அவர் பேச்சை கேட்காமல் இவன் பின் சென்றிருந்தாள் இவளின் நிலை என்னவாகியிருக்கும்.. நல்லவேளை காப்பாற்றி விட்டார்.

மாமா..அவரை நினைத்ததுமே அவமானத்தில் முகம் விழுந்துவிட்டது.. இதையெல்லாம் உன் மாமன் பாத்துட்டான்.. ஸ்பெஷல் எடிசன் வேற பார்த்தான் என்றது காதில்
நாராசமாக ஒலித்தது.

அய்யோ மாமா நீங்க அதையெல்லாம் பாத்தும் கூடவா என்னை மருமகளா ஏத்துகிட்டீங்க..இனி எப்படி உங்க முகத்துல முழிப்பேன்..அய்யோ..போச்சே,போச்சே..இது வரை நான் சேர்த்து வச்ச பெயர் எல்லாம் போச்சே..மாமா..
என்னை மன்னிச்சிடுங்க..இனி எப்படி உங்க முன்னாடி என்னால வர முடியும் என முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.
 
Top