எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்தவி -13 கதைத்திரி

NNK 67

Moderator
பார்தவி-13


இங்கே மிதிலாவை வீட்டிற்கு அழைத்துவந்த பின், சங்கரனோ தன் மகளின் வாழ்கையை எண்ணி வருந்திகொண்டிருக்க வசந்தியோ சங்கரனிடம், “என்னங்க..? இந்த பொண்ணு எது சொன்னாலும் புரிஞ்சுக்காமல் இப்படி அடம்பிடிக்கிறாளே..? கல்யாணமான பொண்ணு இப்படி வீட்டில் வாழாவெட்டியாக இருந்தால், அவளோட வாழ்க்கை என்னவாகும்..? எவ்வளவு எடுத்து சொல்லியும் புரிஞ்சுக்கமாட்டேங்கிறாளே..? நீங்களும் அவள் சொன்னதுக்கெல்லாம் சரி என்று, தலையாட்டி அவளைக்கூடவே கூட்டிட்டு வந்துட்டீங்க..? அவள் புருஷனோட வாழவேண்டிய பொண்ணுங்க..?” என்று வருத்தமாக கூற சங்கரனோ, “இல்லை வசந்தி..! அவள் மனசுல நிறைய காயம்பட்டிருக்கா..! அதனாலதான், அவளால இப்போ தெளிவான முடிவை எடுக்க முடியல..! எனக்கு நம்பிக்கை இருக்கு..! நம்ம பொண்ணால் மாப்பிள்ளையைவிட்டு, ரொம்பநாள் தனியாக பிரிந்திருக்கமுடியாது..! படக்கூடாத கஷ்டமெல்லாம் பட்டு வந்திருக்கா..! எதுக்கும் கொஞ்சநாள் போகட்டும்..! அவள் மனசு அமைதியான பின்னாடி, எடுத்துசொல்லி மாப்பிள்ளையோடு அனுப்பிவைக்கலாம்..! அதுவரை இவள், இங்கேயே இருக்கட்டும்..!” என்று சொல்ல,


வசந்திக்கும் அதுவே சரியெனப்படவே, “என்னவோங்க..? மிதிலா சீக்கிரமே மனசுமாறி மாப்பிள்ளையோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தால், எனக்கு அதுவேபோதும்..!” என்று சொல்லிவிட்டு செல்ல, இதையெல்லாம் அறையின் ஜன்னலின் வழியே கேட்டுக்கொண்டிருந்த மிதிலாவோ மனதில், “அம்மா..? அப்பா..? நீங்க என்னை மன்னிச்சிடுங்க..! நீங்க நினைக்கிறமாதிரி, இனி எப்பவுமே நான் திரும்பி அவரோட வீட்டிற்கு போகவேமாட்டேன்..! நான் இந்த வீட்டுக்கு திரும்பி வாழாவெட்டியாக வந்ததிற்கு காரணமே, என்னோட ராகவ் இனிமேலாவது சந்தோஷமாக வாழனுமென்றுதான்..! இப்படி வேறொருவனால் கடத்தப்பட்டு, மானபங்கபடுத்தபட்ட இந்த மலடியோடு, இனி அவர் வாழவேண்டாம்..! என்று நினைத்துதான் இப்படி பண்ணேன்..!” என்று நினைத்தவளோ, ராகவ்விடம் மானசீகமாக மனதார மன்னிப்புவேண்டி, “ராகவ்..? என்னை மன்னிச்சிடுங்க ராகவ்..! என்னதான் நான், உங்களை விரும்பி காதலிச்சு கல்யாணம்பண்ணாலும், உங்களுக்கென்று ஒரு வாரிசு கொடுக்கக்கூடிய தகுதி எனக்கு இல்லை..! அப்படிப்பட்ட என்னுடன் வாழ்ந்து, உங்களோட வாழ்க்கையும் சேர்ந்து வீணாகிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இப்படி செய்தேன்..! கண்டிப்பா உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்..! ஆனால், அந்த கஷ்டமெல்லாம் சில நாட்களிலேயே மறைந்துவிடும்..! காலம்முழுக்க என்னை போன்ற மலடியுடன் வாழ்ந்து, குழந்தையில்லை என்ற தீராவலியுடன்னும், அடுத்தவனால் கடத்தப்பட்டவளின் கணவன் என்ற அவமானத்துடனும் நீங்கள் வாழக்கூடாது..! என்ற எண்ணத்தில்தான் இப்படி நடந்துகொண்டேன்..! என்னை மன்னிச்சிடுங்க..!” என்று கூறி, கண்ணீர்வடித்தாள் பேதை..


வேதவள்ளிக்கோ, மிதிலா ராகவ்வுடன் செல்லாமல், திரும்பி வாழாவெட்டியாக தனது வீட்டிற்கே, தன் அடிமையாக வந்திருப்பதை நினைத்து, மனதில் மகிழ்ச்சி எல்லை கடந்தோடியது..! இப்படியே சென்றிருக்க, பவித்ரா தற்போது கர்ப்பமாக இருப்பதினால் அவ்வப்போது தன் தாய்வீட்டிற்கு வந்து செல்கிறாள்..! ஒட்டுமொத்த வாழ்க்கையையே வெறுத்த மிதிலாவிற்கு இருக்கும் ஒரே நிம்மதி, கர்ப்பமாக இருக்கும் தனது செல்ல தங்கையுடன் நேரம் செலவழிப்பதுதான்..! ஆனால், அதை பொறுக்காத வேதவள்ளிபாட்டியோ, ஒவ்வொரு முறையும் மிதிலாவை தனது தேள்கொடுக்கு வார்த்தைகளால் கொட்டி தீர்த்துவிடுகிறார்..! ஆனால் மிதிலாவோ, அதைவிட பெரிய வலியெல்லாம் தாங்கியவள்தானே..? அதனாலோ என்னவோ..? வேதவள்ளி பாட்டி பேசும் கடுஞ்சொற்கள் அவளை பெரிதாக காயப்படுத்துவதில்லை..! ஆனால், சங்கரனுக்கும் வசந்திக்கும் ஏன் பரத்திற்கும்கூட வேதவள்ளிபாட்டி மிதிலாவை பேசுவதைக்கேட்டு வேதவள்ளியின்மீது கோபம்வந்தாலும் மிதிலாவின் நிலையை எண்ணி வருத்தத்தோடு செல்வர்..


சிலசமயங்களில் வேதவள்ளி பாட்டியின்மீது பரத்தின் கோபம் கரைகடந்து, “ஏன் பாட்டி..? அவங்களை தேவையில்லாமல் ஏதாவது பேசிக்கிட்டே இருக்கீங்க..? ப்ளீஸ்..! அவங்களே வாழ்க்கையில நொந்துபோய் இருக்காங்க..! கொஞ்சம் பேசாமல் விடுங்களேன்..?” என்று கோபமாக கேட்டிட, தன் முகவாயை இழுத்து தோளில் இடித்தபடி சென்றுவிடுவார் வேதவள்ளி.. இப்படியே சென்றுகொண்டிருக்க, பரத்தும் அவ்வப்போது ராகவின் வீட்டிற்குச்சென்று நந்தனிடம், ராகவ் மிதிலா சந்திப்பிற்கான ஐடியாக்களையும், அவர்களை எவ்வாறு சேர்ப்பது..? என்ற யோசனை யுக்திகளையும் மாறிமாறி வழங்கிட நந்தனோ என்னதான், தான் ராகவிற்கு உயிர்நண்பன் என்றாலும், பரத் இவ்வளவு மெனக்கெடுவதை பார்த்து மகிழ்ச்சியுடன், “ஏன்டா பரத்..? உன் சகலை மேல் உனக்கு அவ்வளவு பாசமோ..?” என்று கிண்டலாக கேட்க, பதிலுக்கு சிரித்த பரத்தோ பதிலேதும் கூறாமல் கண்களை மட்டும் சிமிட்டியபடி, “சொல்றதை செய்யுங்க நந்தன்..! எப்படியாவது இவங்க ரெண்டுபேரும் ஒன்று சேர்ந்தால், அதுவே போதும்..! உங்களுக்கும் அதுதானே வேண்டும்..?” என்று சொல்ல, “ஆமா..! ஆமா..! எப்படியாவது மறுபடி இவங்க ரெண்டுபேரும் சேர்ந்துட்டால், அதுவே போதும்டா சாமி..!” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மேலே ராகவ்வின் அறையிலிருந்து ஏதோ பாட்டில் உடையும் சத்தம் கேட்க, திடீரென்று கேட்ட சத்தத்தில் பரத்தோ, “என்ன நந்தன்..? திடீரென்று மேலே ஒரு சத்தம் கேட்குது..?” என்று கேட்க, இவ்வளவுநேரம் மகிழ்ச்சியாக இருந்த நந்தனின் முகம்மாறி அளவுகடந்த வருத்தம் தெரிந்திட, பரத்தோ மேலும் நந்தனிடம், “என்ன ஆச்சு நந்தன்..? கேட்டதற்கு எதுவும் பேசமாட்டேங்கறீங்க..?” என்று மீண்டும் கேட்க,


நந்தனோ தலைகுனிந்தவாறு, “ வேற ஒன்னுமில்லை பரத்..! எல்லாம் அந்த ராகவ் பையன்தான்..! எப்போ மிதிலா, இவனை வேண்டாமென்று விட்டுட்டு போனாங்களோ..? அப்போ இருந்தே இப்படிதான்..! என்கிட்டகூட சரியா பேசறதில்ல..! நிறைய குடிக்கிறான்..! கண்டகண்ட நேரத்துலதான் வீட்டுக்கே வர்றான்..! சரியா ஆபீஸ்க்குகூட வர்றதில்லை..! வீட்டுக்கு வந்தாலும், அந்த ரூமே கதின்னு கிடக்கிறான்..! விடியவிடிய குடிச்சிட்டு, அந்த பாட்டிலை போட்டு உடைச்சிட்டு மிதிலா மிதிலான்னு கத்துறான்..!” என சொல்ல,


அதிர்ச்சியடைந்த பரத்தோ, “என்ன நந்தன் சொல்றீங்க..? ராகவ் குடிப்பாரா..?” என்று கேட்க, “இல்லைங்க..! அவனுக்கு அந்த பழக்கமே இல்லை..! எப்போ மிதிலாவை காதலிச்சானோ..? அப்போ இருந்துதான் இந்தபழக்கம்..?” என்று சொல்லிட, மேலும் சில பாட்டில்கள் உடையும் சத்தத்துடன் அறையே அதிரும்படி “மிதிலா…!” என்று ராகவ் கத்தும் சத்தம்கேட்கவே பதட்டமானவர்களோ, மேலேசென்று ராகவ்வின் அறைக்கதவை தட்ட, அது ஏற்கனவே தாழிடப்படாமல் இருப்பதால் இவர்கள் தட்டியவுடன் திறந்துவிட்டது..! பின்னர், அறைக்குள் நுழைந்தவர்களோ அங்கு சென்று பார்க்கையில் ஒருகணம் அதிர்ந்துதான் போயினர்..! ஆம்..! அறைமுழுக்க உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகளாக சிதறிகிடக்க, கையில் உடைந்த மதுபாட்டிலுடன் ரத்தம்வடிந்தபடி, “மிதிலா..! மிதிலா..!” என்று புலம்பியபடி, அரை போதையில் இருந்த ராகவ்வை கண்டவர்களோ, அவனது நிலையைக்கண்டு வருந்தியபடி அவன்ருகே செல்ல,


நந்தனோ, ராகவ்வின் உடைந்த பாட்டில் குத்திகிழித்து ரத்தம் வடிந்த கையைப்பிடித்து, “என்னடா ராகவ்..?என்ன பண்ணி வச்சிருக்க..? ஏன்டா இப்படி பைத்தியக்காரத்தனமெல்லாம் பண்ற..?” என்று கேட்க, அந்த அரை மயக்கநிலையிலும் கண்ணீர் வடித்த ராகவ்வோ நந்தனைக்கண்டு, “டேய் நந்தா..? என்னால அவளை மறக்க முடியலைடா..! அவளைமாதிரி என்னால, அவளை ஒரு ரெண்டு நிமிஷத்துல தூக்கி எறிய முடியலடா..! வலிக்குதுடா..! இங்கே வலிக்குது..!” என்று தன் நெஞ்சை குத்திகுத்தி காட்டிட, அதனைக்கண்ட நந்தனுக்கோ மனம் பாரமாக, எவ்வாறு தன் நண்பனை தேற்றுவது..? என்று தெரியாமல் திணறியபடி தேற்றிய நந்தனோ, “டேய் ராகவ்..? ப்ளீஸ்டா..! இப்படியெல்லாம் பண்ணாதடா..! நீ இப்படி இருந்தால், என்னால் அதை தாங்கமுடியாதுடா..! இப்போ என்னடா உனக்கு..? அவங்க வேணும் அவ்வளவுதானே..? வாடா போகலாம்..! நீ போய் பேசு..! நீ கூப்பிட்டால், கண்டிப்பா மிதிலா வருவாங்க..!” என்று சொல்ல, உடனே அதற்கு மறுப்பாக தலையசைத்த ராகவோ, அழுது கொண்டிருந்தாலும்கூட தன் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு பிடிவாதமாக, “என்னை வேண்டாமென்று சொல்லிட்டு போனால்ல..? அவள் எனக்கு வேண்டாம்டா..!” என்று சொல்ல நந்தனோ, “டேய்..? இந்த பிடிவாதத்திற்கு ஒன்றும், உங்க ரெண்டுபேருக்கும் எந்த குறைச்சலும் இல்லை..! இப்படியே ரெண்டுபேரும் முரண்டு பிடிச்சிட்டு இருந்தீங்கன்னா, உங்க வாழ்க்கை

தான் வீணாப்போகும்..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே போதையின் மயக்கத்தில் அப்படியே உறங்கிப்போனான் ராகவ்..


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பரத்தோ நந்தனிடம், “என்ன நந்தா இது..? இவங்க நிலைமை, நாளுக்குநாள் இப்படி மோசமா போயிட்டேயிருக்குது..?” என்று சொல்ல, “என்னைமட்டும், என்ன பண்ண சொல்ற பரத்..? இவன் குணம்தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே..? அவங்களாவது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகலாமே..? அவங்களும் இவனுக்கு ஏற்றார்போல் முரண்டு பிடிச்சா, நான் மட்டும் என்ன பண்றது..? எந்த நேரத்துல இவனுக்கு கல்யாணம் பண்ணிவைத்து, குடும்பம் குழந்தையை வாழனுமென்று ஆசைப்பட்டேனோ..? அந்த நேரத்திலிருந்து கஷ்டம்தான் படுறான்..! பாவம்..! பேசாமல், சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருந்த பையனை நான் அப்படியே விட்டிருக்கலாம்..! தேவையில்லாமல் இவனுக்கு கல்யாணம் பண்ணி, இப்போ இவனையும் சேர்த்து கஷ்டப்படுத்திகிட்டு இருக்கேன்..!” என்று, தன்மீதே கோபம்கொண்டு சொல்லவே பரத்தோ, “நம்மதான், இதுக்கு சீக்கிரம் ஏதாவது ஒருவழியை கண்டுபிடிக்கணும்..? இவங்க ரெண்டுபேரையும் நாம நேரில் சந்திக்கவைத்தால் போதும்..! இவங்களே பேசி, இவங்களோட பிரச்சனையை தீர்த்துக்குவாங்க..! நான் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருகிறேன்..!” என்று சொல்ல, பரத்தை மெச்சுதலாக பார்த்த நந்தனோ, “சரி..!” என்று தலையாட்டினான்..


பரத்தும் அதன்பிறகு ராகவ் மிதிலா சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர எவ்வளவோ முயற்சிசெய்தும், அதற்கான வாய்ப்பு மட்டும் அமையவே இல்லை…! இப்படியே நாட்கள் நகர்ந்து, இன்றுடன் மிதிலா ராகவ்வைவிட்டு பிரிந்துவந்து முழுதாக மூன்று மாதங்கள் நிறைவடைந்திருந்தது..! இப்போது பவித்ராவுக்கு ஆறுமாதம் என்பதாலும், பரத்தின் வீட்டில் பெரியோர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும், பரத்தும் பவித்ராவும் இப்போது சங்கரனின் வீட்டில்தான் இருக்கின்றனர்..! இப்படியிருக்க, அன்று காலை வழக்கத்திற்குமாறாக தாமதமாக எழுந்த மிதிலாவோ மிகவும் களைப்பாக உணரவே, முகம்,கை,கால் கழுவிக்கொண்டு கிச்சனுக்கு சென்று, தனக்கு காபிபோட்டு எடுத்துவந்து ஹாலில் அமர, அதனைக்கண்ட வேதவள்ளி பாட்டியோ, “வந்துட்டியா சனியனே..? காலங்காத்தாலேயே ஹாலில் வந்து உட்கார்ந்திருக்க..? ஏன்டி இன்னைக்கு காலையில பவித்ராவுக்கு செக்கப் இருக்குதுன்னு உனக்கு தெரியாதா..? காலங்காத்தால உன் முகத்தில் முழிச்சிட்டு ஹாஸ்பிடல் செக்கப்பிற்கு போனால், அங்கே ஏதாவது விளங்குமா..?” என்ற தேளாய் கொட்டிட, இயலாமையுடன் வேதவள்ளி பாட்டியை வலிகொண்ட பார்வைபார்த்த மிதிலாவோ, வாயில்லா பூச்சியாக வழக்கம்போல் தன் மனதை நோகடித்ததை எண்ணி கண்ணீர் வடிக்க, அதனைக்கண்ட வேதவள்ளி பாட்டியோ சலிப்பாக, “ஆன்னா..ஊன்னா.. இப்படி நீலி கண்ணீர்வடித்து நடிச்சு, எல்லோரையும் ஏமாத்திடு..! நீ எங்கேயோ பொறந்து, என் பையன் கையில கிடைச்சு, உன் விளங்காதனத்துனால என் குடும்பத்தை கெடுத்துட்டு இருக்க..! பிறகு, நீயே தெருவுலபோற ரவுடி பையனை பார்த்து, அவனைத்தான் விரும்புறேன்னு சொல்லி, எங்களை எல்லோரின் முன்பும் அவமானப்படுத்தி கல்யாணமும் பண்ணிகிட்ட..! நானும், சரி சனியம் ஒளிஞ்சதுன்னு பார்த்தால், அவன்கூட வாழப்பிடிக்காமல் வேற ஒரு ஆம்பளையை தேடிப்போயிட்ட..! இது தெரியாத அந்தமுட்டாள் பையன், உன்னை தெருத்தெருவாக தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சான்..! கடைசியில அந்த அனாதை பையன் கூடயும் வாழமாட்டேன் என்று சொல்லிட்டு, மறுபடியும் என் பையன் கழுத்துலையே வந்து பிடிச்சுகிட்ட பேய்மாதிரி..! எங்க வீட்ல வந்து உட்கார்ந்திருக்கயே பீடை புடிச்சவளே..! எப்போதான்டி எங்களை நிம்மதியாய் இருக்கவிடுவ..?” என்று, கொடிய வார்த்தை அம்புகளை மிதிலாவின்மீது பிரயோகிக்க, அதில் மனம் ரணப்பட்டு துவண்டு போனவளோ, வேதவள்ளியின் வார்த்தைகளை பொறுக்கமுடியாது அழத்தொடங்க, ஆரம்பத்தில் விசும்பலாக இருந்த அழுகை, நேரம் செல்ல கதறலாக மாறியது..! இருந்தும், அதையெல்லாம் கண்டுகொள்ளாத வேதவள்ளிபாட்டியோ அவளது வேலைகளை கவனிக்க செல்ல, மிதிலா அழுவதைக்கேட்ட சங்கரனோ வேகமாக அறையிலிருந்து வெளியே வந்து மிதிலாவிடம், “மிதிலா..? அம்மாடி என்னம்மா ஆச்சு..? ஏன் இப்படி அழுதுட்டிருக்க..?” என்று கேட்டதற்கு, வழக்கம்போல் எந்த பதிலும் மிதிலாவிடம் இல்லை..! அவள் சொல்லிதான் சங்கரனுக்கு புரியவேண்டுமா..? என்ன..? “எப்படியும் வேதவள்ளிதான் எதையாவது சொல்லி, மிதிலாவின் மனதை காயப்படுத்தி இருப்பார்..?” என்று புரிந்துகொண்டவரோ, தேம்பித்தேம்பி அழும் மிதிலாவின் தலையை வாஞ்சையாக தடவி, “அம்மாடி மிதிலா..? இதெல்லாம் உனக்கு தேவையாடா..? ஏன்டா இங்க இருந்து கஷ்டப்படுற..? பெண்ணாக இருந்தாலும் சரி, பொருளாக இருந்தாலும் சரி, அது எங்க இருக்கணுமோ..? அங்க இருந்தால்தான்டா அதற்கான மதிப்பு கிடைக்கும்..! இல்லையென்றால், மற்றவர்கள் வாயில் மெல்லும் பொருளாக மாறிவிடுவோம்டா..!” என்று நாசுக்காக மிதிலாவை அவளது கணவன்வீட்டிற்கு செல்ல அறிவுறுத்த ,வசந்தியும் அங்கேவந்து அவரது பங்கிற்கு, “ஆமாம்டி..! அப்பா சொல்வது சரிதான்..! ஒரு பொண்ணுக்கு பிறந்த வீட்டில் கிடைக்கும் மரியாதை, அவள் புகுந்தவீட்டில் வாழும் வாழ்க்கையை பொருத்ததுதான்டா..! புரிஞ்சுக்கோடா..?” என்று அறிவுறுத்த, தன் பெற்றவர்களின் அறிவுரையை கேட்டாலும், தன் மனதில் இருக்கும் வேதனையை அவர்களிடம் சொல்லமுடியாது தவித்த மிதிலாவோ கதறியழுதப்படி தனது வேதனையை கொட்டி தீர்க்க, ஏற்கனவே களைப்பாக இருந்தவளோ மேலும் தன்னை சிரமப்படுத்தி கதறியழுததால், கண்கள் இருட்டிக்கொண்டு வரவே, தலைசுற்றி அப்படியே மயங்கிச்சரிந்தால் பேதை..!


அதனைக்கண்டு பயந்துபோன சங்கரனும் வசந்தியும், “அம்மாடி மிதிலா..? மிதிலா.. எழுந்திருமா..? என்ன ஆச்சு உனக்கு..?” என்று பதட்டத்தொடு, தண்ணீரை அவளது முகத்தில் தெளித்து மயக்கம் தெளிய வைக்க, மயக்கம் தெளிந்த மிதிலாவோ மெல்ல தனது விழிகளை திறந்து பார்த்திட, தம் மனக்காயங்களின் ரணம் ஆறாதிருக்க, கண்ணில்மட்டும் கண்ணீர் வழிந்தோடியபடி இருக்க வசந்தியோ, மிதிலாவின் முகத்தை துடைத்துவிட்டு, எழுப்பி அமரவைத்து அவளுக்கு குடிப்பதற்கு பழரசம் கொடுக்க, அதனை வாங்கி பருகியவளைக்கண்ட வசந்தியோ சந்தேகமாக மிதிலாவிடம், “மிதிலா..?” என்று கூப்பிட நிமிர்ந்து பார்த்தவளோ, “என்னம்மா..?”என்று கேட்டாள்..


அதற்கு வசந்தியோ, “மிதிலா..? நீ கடைசியா எப்போ குளிச்ச..?” என்று கேட்டிட, முதலில் தன்தாய் கேட்கும் விஷயம்புரியாது விழித்த மிதிலாவோ, பின்பு தான் கடைசியாக மாதவிலக்கான தேதியை கணக்கிட்டு, “ம்மா..? அது எப்படியும் ரெண்டுமாசத்துக்கு மேல இருக்கும்மா..!” என்று சொல்ல, மிதிலாவின் மயக்கத்திற்கான காரணம் என்னவென்று வசந்திக்கு புரிந்துவிட்டது..! இருந்தும் அதனை மருத்துவரை வைத்துதான் உறுதி செய்யவேண்டும்..! என்று நினைத்தவளோ சங்கரனிடம் கூறிவிட்டு, பவித்ராவுடன் இன்று மிதிலாவையும் சேர்த்து மருத்துவரிடம் அழைத்துச்சென்றாள்..


மிதிலாவிற்கு முதலில் புரியவில்லை என்றாலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் விஷயத்தைக்கேட்டவுடன், “தன் அன்னை, தன்னைப்பற்றி தவறாக நினைத்துவிட்டாரே..? தன்னால்தான் ஒரு குழந்தையை பெறமுடியாதே..?” என்று நினைத்தவளோ, “எப்படியும் இன்று மருத்துவமனையில், இந்த உண்மை மருத்துவரின் வாயிலாக நம் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியத்தான் போகிறது..! எத்தனை காலங்கள் இதனை மறைத்து வைக்கமுடியும்..?” என்று அனைத்தையும் இறைவனிடத்திலேயே விட்டுவிட்டு, விட்டேத்தியாக அமர்ந்துவிட்டாள் மிதிலா.. பிறகு பவித்ராவின் அப்பாயிண்ட்மெண்ட் நேரத்திற்கே, அவள் வழக்கமாக செக்கப் செல்லும் மருத்துவமனைக்கு மிதிலாவையும் அழைத்துச் சென்றிருந்தனர் சங்கரன் வசந்தி தம்பதியினர்..


அது பெங்களூரிலேயே மிகப்பிரசித்தி பெற்ற மருத்துவமனை.. சங்கரனின் வசதிக்கு அந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்ப்பதெல்லாம் இயலாத காரியம்தான்..! ஆனால், பரத் தனது மனைவிக்கு அங்குதான் செக்கப் செய்துவருகிறான்..! அதனால்தான் பவித்ராவுடன் மிதிலாவையும் இன்று இதே மருத்துவமனைக்கு அழைத்துவந்திருந்தனர்.. வந்தவுடன் முதலில் பவித்ராவுக்கு வழக்கம்போல் செய்ய வேண்டிய சோதனைகளை எல்லாம் செய்துவிட்டு காத்திருக்க சொல்லிவிட்டு, பின்பு மிதிலாவிடம் சென்ற மருத்துவரோ மிதிலாவிற்கு தேவையான அடிப்படை பரிசோதனைகளையெல்லாம் செய்தார்.. பின்பு மிதிலாவுடன் வந்தவர்களை அழைத்த மருத்துவரோ, சங்கரன் வசந்தி தம்பதியினரையும், அவர்களினருகே அமர்ந்திருக்கும் மிதிலாவையும் காண, மிதிலாவின் மனதிலோ, “இன்று, தன்னால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது..!என்ற உண்மை தெரியத்தான் போகிறது..! இதனை எப்படி நம் பெற்றவர்கள் தாங்குவார்கள்..?” என்று பதட்டமாக அமர்ந்திருக்க,


மருத்துவரோ சங்கரனைக்கண்டு, “சார்..? இவங்க உங்க பொண்ணுதானே..?” என்று கேட்க, “ஆமாம்..!” என்று ஆமோதித்த சங்கரனோ, “என் பொண்ணுக்கு என்னாச்சு..?” என்று கேட்க, “ ஒன்னும் பயப்படற விஷயமில்ல சார்..! இருந்தாலும் இவங்களோட பாடி கண்டிசனைப்பற்றி, நான் முன்னாடியே உங்ககிட்ட சொல்லிடுறேன்..! இவங்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கிற ஃபெலோபியன் டியூப் ரெண்டுலயுமே அடைப்பு இருக்கு..! இன்னும் சொல்லப்போனால், இவங்களால இயற்கையாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மிகமிகக்குறைவு..!” என்று சொல்ல, இதெல்லாம் கேட்டிருந்த மிதிலாவுக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை..! ஆனால், சங்கரன் வசந்தி தம்பதிக்கோ பதட்டமாகி, “ஐயோ.. டாக்டர்..? என்ன சொல்றீங்க..?” என்று கேட்க மருத்துவரோ, “பதறாதீங்க சார்..! அவங்க உடம்பு கண்டிஷனைதான் நான் சொன்னேன்..! ஆனால் நமக்கும் மேல ஒரு சக்தி இருக்குன்னு சொல்வோம் இல்ல..? அது உண்மைதான்..! என்று, உங்க பொண்ணு விஷயத்துல நடந்திடுச்சு சார்..!” என்று சொல்ல, தன் பெற்றோருடன் சேர்ந்து மருத்துவரையே விசித்திரமாக பார்த்த மிதிலாவோ எதுவும் பேசாமலிருக்க, மேலும் தொடர்ந்து மருத்துவர், “சார்..? வாழ்த்துக்கள்..! உங்க பொண்ணு கன்சீவ்வா இருக்காங்க..! அதுவும் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போறாங்க..! குழந்தை ஃபார்மாகி முழுசா 90 நாட்கள் கடந்திடுச்சு..! கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க..! இப்படி ஒரு கேஸ் ஆயிரத்துல ஒன்னுதான் அமையும்..! அதுவும் என் சர்வீசில் இப்போதான் இதுபோன்று முதல்முறை பார்க்கிறேன்..!” என்று கூற, மருத்துவர் கூறியதைக்கேட்டு இன்ப அதிர்ச்சியான மிதிலாவோ, ஒருகணம் மகிழ்ச்சியில் உறைந்துதான் போனாள்..! எத்தனை நாட்கள் இந்த குழந்தை வரத்திற்காக தவம் இருந்திருப்பாள்..? தன் காதல் கணவனுக்கு, தன்னால் ஒரு வாரிசை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று, எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பாள்..? அதற்காக எத்தனை கண்ணீர் வடித்திருப்பாள்..? இன்று ஆண்டவன் கொடுத்த பரிசாக, தன்னவனின் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருக்கிறாளே..? என்பதை நினைத்தவளுக்கோ, நெகிழ்ச்சியில் மனம் பூரித்திட, இதனை முதலில் தன்னவனிடம் சொல்லி மகிழ்ச்சியடைய வேண்டுமென்று நினைத்தவளுக்கு அப்போதுதான், தான் செய்துவந்த காரியம் நினைவிற்குவரவே, மிதிலாவின் முகத்திலிருந்த மொத்தமகிழ்ச்சியும் வடிந்து போனது..!


பின்பு, “இதனை எவ்வாறு தன்னவனிடம் சொல்வது..?” என்று யோசித்துக்கொண்டிருந்தவளின் யோசனையைக் கலைக்கும் விதமாக, சங்கரனும் வசந்தியும் மருத்துவமனை என்றும் பாராது, தங்களது மகளை கொஞ்சி கொண்டாடி தீர்த்துவிட்டனர்..! பிறகு பவித்ராவின் மருத்துவசெலவை ஏற்கனவே பரத், அங்கே கட்டியுள்ளதால், மிதிலாவுக்கு மட்டுமான மருத்துவ செலவைக்கணக்கிட்ட சங்கரனோ மருத்துவரிடம், “எவ்வளவு ஆச்சுங்க டாக்டர்..?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவரோ புன்சிரிப்போடு மிதிலாவைக்காட்டி, “இவங்க மிஸ்டர் ராகவ் ரிஷியோட ஒயிப்தானே..?” என்று கேட்டதற்கு, “ஆமாம் டாக்டர்..! அவர் என்னோட மருமகன்தான்..! உங்களுக்கு அவரை தெரியுமா..?” என்ற சங்கரனை பார்த்த அந்த மருத்துவரோ, “நான், இதற்குமுன்பே உங்க பொண்ணை ராகவ்சாரோடு வெளியே பார்த்திருக்கிறேன்..! அதுமட்டுமின்றி, உங்க மருமகனால்தான் எங்களுடைய ஹாஸ்பிடல் டிரஸ்ட்டை சேர்ந்த குழந்தைகளுக்கு, இன்றுவரை இலவசமாக, தரமான உணவு கிடைத்துக்கொண்டிருக்கிறது..! அப்படிப்பட்டவரின் மனைவியிடம், நாங்க எப்படி பணம் வாங்குவது..?” என்று கேட்க, மிதிலாவிற்கோ தன்னவனின்மீது தான் கொண்ட கர்வம் இன்னும் அதிகமானது..!


காதலின் சக்தியால், இயற்கையை மட்டுமல்ல இறைவனையே வென்றிடலாம்…! பார்க்கலாம்…


தொடரும்…
 
Last edited:
Top