எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 13

NNK-29

Moderator

அத்தியாயம் 13​

“என்னடா தேவா? இப்படி சொல்லிட்டு இருக்க?” என்று புலம்பிக் கொண்டிருந்தார் செல்வராணி.​

“என்னோட முடிவு இது தான்மா” என அதிரடியாக கூறிவிட்டு எழுந்து அறைக்குள் சென்றான்.​

“நீயாவது அவனுக்கு எடுத்து சொல்ல கூடாதா சாரு? குழந்தைக்கு பெயர் வைக்கிறப்ப தங்கத்துல தான மாமா முறை செய்யணும்? இவன் என்னடான்னா ஏதோ பத்திரம் வாங்கிக்கொடுக்க போறேன்னு நிக்கிறான்?” என தன் ஆதங்கத்தை மருமகளிடம் கொட்டினார் செல்வராணி.​

“அது பத்திரம் இல்லை அத்தை… ஷேர்!” என சாருமதி திருத்தினாள்.​

“சபைல அதெல்லாம் கொடுத்தா நல்லாவா இருக்கும்? ஒருமுறை நீ அவன்கிட்ட பேசி பாருமா…” என்றார்.​

அன்று சாருவுடன் வந்த கோமதி கர்ப்பமாக இருக்கும் சாருமதியையும், உடலில் உள்ள சக்தி முழுவதையும் திரட்டி குழந்தை பெற்றெடுத்த வந்தனாவையும் செல்வராணியுடன் நன்றாகவே பார்த்துக்கொண்டார். ஜெயந்தியும் அங்கிருக்க முடியாமல் தினமும் இங்கு வந்துவிட்டு செல்வார்.​

சாருமதிக்கு வந்தனாவை போல் வாந்தி, மயக்கம் என்று எதுவுமில்லை. ஒருநாள் வந்தனா, “உங்களுக்கு என்னை மாதிரி இல்லை” என்று சொல்லிக்காட்ட, அதற்கு சிரித்த சாரு எதுவும் சொல்லவில்லை.​

ஆனால் அதை கவனித்த ஜெயந்தி, “எல்லாருக்கும் ஒன்னுபோல இருக்காது. இதுக்கு தான் ரெண்டு பேரையும் ஒண்ணா வைக்க கூடாதுன்னு சொன்னேன். எனக்கு உன்னை மாதிரி இல்லை. உனக்கு என்னை மாதிரி இல்லைன்னு ஒருத்தரை பார்த்து ஒருத்தர் எதாவது சொல்லிகிட்டே இருப்பீங்க…” என்று ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் கூறினார்.​

அதன்பிறகு, ஒரே மாதத்தில் “குழந்தைக்கு பெயர் வைத்து அழைத்து செல்லலாம்” என்று கூறிவிட்டார். அதில் செல்வராணிக்கு வருத்தம் தான். ஆனால் அங்கிருந்தாலும் நன்றாக கவனித்துக்கொள்வார்கள் என்று அமைதியாகிவிட்டார்.​

இரண்டு நாள்கள் முன்பு தான் கோமதி அவரின் வீட்டிற்கு திரும்பினார். இன்னும் இரண்டு நாளில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா!​

வந்தனா அவளின் அறையில் குழந்தையுடன் உறங்கியிருக்க, இங்கே செய்முறை செய்வதற்கு தாயும் தனையனும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.​

மெதுவாக எழுந்து அறைக்குள் சென்ற சாருமதியிடம், “என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை மதி! அம்மாக்காக என்கிட்டே வந்து எதுவும் பேசாத…” என்றான் தேவா திட்டவட்டமாக.​

‘எல்லா அம்மாவும் மகனை யார் பேச்சும் கேட்காத அளவுக்கு வளர்த்து விட்டுடுறாங்க… அப்புறம் உன்னோட புருஷன் கிட்ட இதெல்லாம் சொல்ல மாட்டியானு நம்மகிட்டயே கேட்க வேண்டியது வேற?’ என மனதோடு புலம்பியவள், “தேவ் செயின்…” என அவள் முடிக்கும் முன்னே,​

“அவன் பையன் தான மதி? அவனுக்கு எதுக்கு தங்கத்துல போடனும்? இந்த ஷேரோட வல்யூ இருபது வருஷம் கழிச்சி கண்டிப்பா பெரிய லெவல்ல போகும். அந்நேரம் அவனுக்கு இது யூஸ் ஆகும்” என அவன் முடிக்க,​

“என்ன சொல்லுறீங்க தேவ்? பொண்ணுனா ஒரு மாதிரி… பையன்னா ஒரு மாதிரியா? நான் உங்க கிட்ட இதை எதிர்பார்க்கலை” என அவளது அதிருப்தியை முகத்தில் காட்டினாள்.​

தேவாவும் என்ன செய்வான்? அவன் படித்துமுடித்து வேலைக்கு செல்லும் பொழுது வந்தனாவிற்கென்று நகையை தான் சேர்க்க சொல்லிக்கொடுத்தார் செல்வராணி. இன்றளவும் பெண் பிள்ளை இருக்கும் வீட்டில் நகையை தானே சேர்க்கின்றனர்!​

“தெரியாம சொல்லிட்டேன்னு சொல்ல மாட்டேன். எதோ ஒரு ஃப்லோல சொல்லிட்டேன். நம்ம அன்பை காட்ட தான மதி இதெல்லாம் செய்யுறது? அப்புறம் என்ன? இந்த ஷேர் அவனோட எதிர்காலத்துக்கும் நல்லது தான?” அவளை அருகில் அமர்த்தி மெதுவாக எடுத்துசொன்னான்.​

“ஓகே தேவ். உங்க தங்கச்சி பையனுக்கு மாமா முறைல நீங்க செய்ங்க. என்னோட அண்ணா பையனுக்கு அத்தை முறைல நான் செயின் போடுறேன்” என அவள் முற்றுப்புள்ளி வைக்க பார்த்தாள்.​

“என்ன? ஒரே வீட்ல இருந்து ரெண்டு சீரா…?” என மேலும் அவளிடம் சீறினான்.​

அவனை முறைத்தவள், “அத்தை உங்கள சார்ந்து இருக்கிறதால உங்களுக்கு தோணினது மட்டும் செய்யணும்னு நினைக்கிறீங்களா? அவங்களுக்கும் ஆசை இருக்கும் தான? அவங்களோட பேரனுக்கு இப்படி செய்யணும் அப்படி செய்யணும்னு?” என கேள்வியால் மடக்கினாள்.​

“கேள்வியின் நாயகியே! உன்னோட யோசனையை நிறுத்து! நான் அப்படிலாம் நினைக்க கூட இல்லை” என கலவரமாக கூறியவன்,​

“நான் சொன்னதும் செய்யுறேன். அவங்க சொன்னதையும் செய்யுறேன் போதுமா? தயவு செஞ்சி நீ கண்டபடி யோசிக்காம உன்னோட கற்பனை குதிரையை கட்டிவை!” என்றவனை பார்த்து கலகலத்து சிரித்தாள்.​

“யஷ்வந்த்! யஷ்வந்த்! யஷ்வந்த்!” என மூன்றுமுறை அந்த குழந்தையின் காதில் கூறி புதிதாய் வந்த உறவிற்கு பெயரிட்டனர்.​

தாய்வீட்டு சார்பாக செய்யும் அனைத்தையும் தேவா, சாரு இருவரையும் தான் முன்னிறுத்தி செய்ய வைத்தார் செல்வராணி. தனக்கு பின் அவர்கள் தான் என்பதால் அவர்களை வைத்தே அனைத்தையும் செய்தார், செல்வராணி.​

பெயர் வைக்கும் விழா நல்லபடியாக முடிய வந்தனாவையும் அவனின் புதல்வனையும் அழைத்து சென்றான் அரவிந்த்.​

முதல் மூன்று மாதம் சாருமதி எந்த வித்தியாசமும் இல்லாமல் இயல்பாக தான் இருந்தாள். ஆனால் அதன் பிறகு அடிக்கடி பசிக்க தொடங்கியது.​

கர்ப்பகாலத்தில் இது சாதாரணம் தான் என்றாலும், எப்பொழுதும் அளவுடனே சாப்பிடும் சாருமதியால் இதனை சாதாரணமாக கடக்க முடியவில்லை.​

சில சமயம் இரவில் தேவாவை எழுப்பி பாவமாக முகத்தை வைத்து, “பசிக்குது…” என்பாள். அப்பொழுதெல்லாம் தேவா உருகிவிடுவான். பின் அவளுக்கு தேவையானதை செய்துகொடுத்து அவளை உண்ணவைத்து உறங்கவும் வைப்பான். அதனாலே செல்வராணி இரவில் உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்வார்.​

மருத்துவரும் ரெண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை சாப்பிட சொல்லி அறிவுரை வழங்கினர். எதையெல்லாம் கலோரி அதிகம் என்று அவள் ஒதுக்கி வைத்தாலோ அதெல்லாம் தான் அவர்களின் மகவு தேடியது.​

தேவா கூட, “குழந்தை என்னை மாதிரி வரும் போல… அதான் நீ சாப்பிடுற எதையுமே ஏத்துக்க மாட்டேங்குது!” என்று கிண்டலடிப்பான்.​

இது தான் சாப்பிடணும்! இப்படி தான் சாப்பிடணும்! இவ்வளவு தான் சாப்பிடணும்! என்று ஒரு கோட்பாடோடு இருந்தவளை மொத்தமாக புரட்டிபோட்டது சாருமதியின் கர்ப்பகாலம்.​

ஓர் உயிர் இந்த உலகத்திற்கு வருவதற்காக உண்ணும் உணவில் இருந்து உறங்கும் நேரம் வரை அனைத்திலும் மாற்றம் கண்ட தன்னவளின் மேல் தேவாவிற்கு காதல் மேலும் மேலும் அதிகரித்தது.​

சாருவின் வயிற்றில் கைவைத்து தனது மகவின் அசைவை உணர்வான். ‘குழந்தை உன்னை மாதிரி இருக்குமா? என்னை மாதிரி இருக்குமா? எப்படி வளர்க்க வேண்டும்…’ என்று குழந்தையை பற்றி பேசி பேசி இருவரும் அவர்களுக்குள் ஓர் தனியுலகையே உருவாக்கினர்.​

எவ்வளவு சாப்பிட்டாலும் காலையும் மாலையும் தேவாவுடன் கைகோர்த்து நடைப்பயிற்சி செல்வது, முறைப்படி யோகாசனம் செய்வது என அவளுக்குள் நிகழ்கின்ற மாற்றங்களையும் அவளவனின் துணையுடன் அனுபவித்து கடந்தாள்.​

ஏழு மாதம் முடிந்த நிலையில் சாருமதியின் வயிறு சற்று மேடிட்டிருந்தது. அன்றிலிருந்து அகாடமி செல்வதை நிறுத்தியிருந்தாள். மருத்துவரின் அறிவுரைப்படி கர்ப்பகாலத்தில் செய்யும் உடற்பயிற்சியை மட்டும் செய்ய தொடங்கியிருந்தாள்.​

“தேவ்! இப்பலாம் என்னால வீடியோ எடுக்க முடியல. வயிறு தெரியுது. நான் ப்ரக்னேன்ட்ன்னு யூடியூப்ல சொல்லட்டுமா?” என அவனை எறிட்டாள்.​

கைநிறைய வளையல்களையும் அவனின் விருப்பமான கொழுசும் அணிந்து முட்டிவரை இருந்த பருத்தியிலான கர்ப்பகால உடையில் தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்தவளை ரசனையுடன் பார்த்தவன், “ஏன் சொல்லணும் மதி? எதுக்கு நம்ம தனிப்பட்ட விஷயத்தை ஒரு சமூகவலைத்தளத்துல சொல்லணும்?” என அமைதியாக கேட்டான். ‘சொன்னால் அதோடு நின்றுவிடுமா?’ என்ற கேள்வி அவனின் பார்வையில் தொக்கி நின்றது.​

தேவா மட்டுமில்லை சாருமதியின் குடும்பமே இதற்கு எதிராக தான் இருந்தனர். “நீ போடுற வீடியோவை லட்சகணக்கானவங்க பார்ப்பாங்க சாரு. கண்ணு பட்டுடும்! குழந்தை பிறந்ததும் சொல்லிக்கலாம்” என அவளை கட்டுப்படுத்தி வைத்தனர்.​

அவர்களின் திருமணத்திற்கான அறிவிப்பை கூட திருமணம் முடித்து இருமாதங்கள் கடந்துதான் அவளின் சேனலில் சொல்லியிருக்கிறாள். அன்றிலிருந்து, “உங்க கணவர் போட்டோ போடுங்க… அவரோட சேர்ந்து வீடியோ போடுங்க…” என்று அன்பு(?!) தொல்லைகள் வந்தவண்ணம் உள்ளன.​

அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை கேட்பதில் அப்படி ஒரு அற்ப சந்தோசம்! அதையெல்லாம் பார்த்த தேவா, அவளை யூடியூபை ஓரளவிற்கு மேல் பயன்படுத்த விடமாட்டான்.​

“ஜஸ்ட் நம்ம போட்டோ போடுறதுல என்ன தேவ்?” என்ற சாருவின் கேள்விக்கு அழுத்தமாக அவளை பார்த்தவன், “போட்டோ போட்டா ஜோடி பொருத்தத்தை பத்தி பேசுவாங்க மதி. யாருனே தெரியாதவங்கலாம் நம்மள பத்தி எதுக்கு பேசணும்?” என்ற கேள்வியுடன் முடித்துக்கொண்டான்.​

ஏழு மாத வயிற்றுடன் அவனை நெருங்கியவள், “எல்லாரும் பேபியோட ஜென்டர் ரிவில்ன்னு வீடியோ போடுறாங்க தெரியுமா? ஆனா நான் ப்ரெக்னேண்ட்னு சொல்ல கூட விட மாட்டிங்குறீங்க?” என குறைப்பட்டுக்கொண்டாள்.​

சாருவின் முகத்தில் படர்ந்த முடியை ஒதுக்கியவாறு, “அதெல்லாம் நமக்கு வேண்டாம் மதி! முன்னாடி கமெண்ட்ல ஆஹா! ஓஹோ!ன்னு புகழுறவங்க பின்னாடி என்னலாம் பேசுவார்களோ?” என மென்மையாக கேட்டவன்,​

“இதெல்லாம் எல்லாரோட வாழ்க்கைலையும் நடக்குறது தான மதி? அதை எதுக்கு வீடியோ போட்டு விற்கணும்?” என்று சரமாரியாக கேட்க தொடங்கினான்.​

“வீடியோ போட்டா காசு வருதுன்றதுக்காக நம்ம வாழ்க்கைல நடக்குற நிகழ்வுகள்ல அந்த நொடி வாழமா எல்லாத்தையும் ஒரு கண்டெண்ட் கண்ணோட்டதோடயே பார்த்தா எப்பதான் வாழுறது?” என்றவன் அவளின் கையை மிருதுவாக பிடித்தான்.​

“சில விஷயங்கள் நம்ம அறையை விட்டே வெளிய போக கூடாது மதி! அதெல்லாம் நமக்கானது! நம்மளோட அந்தரங்கம்! ஆனா கப்பில் வ்லாக்ஸ், ரீல்ஸ்ன்னு எல்லாத்தையும் கடைபரப்புறாங்க. ரீல்ஸ்ன்னு சொல்லி சொல்லி ரியல் லைஃபை தொலைச்சிட்டு இருக்காங்க…” என ஆதங்கமாக கூறியவன்,​

“அவங்கலாம் வாழ்க்கைல உண்மையிலேயே சந்தோசமா இருப்பாங்களானு பார்த்தா நிஜமா இல்லை. வீடியோவுக்காக அவ்வளவும் நடிப்பு!” என்று முடித்தான். அவனின் கையோடு கைகோர்த்தவள் அமைதியாக தோள் சாய்ந்தாள்.​

‘தேவா அப்படித்தான் கூறுவான்!’ என்று தெரிந்திருந்தது சாருமதிக்கு. அவளும் அவளது சுயவிவரத்தை இதுவரை யூடியூபில் போட்டது கிடையாது.​

“சும்மா தான் தேவ் கேட்டேன்!” என மூச்சு பிடித்து பேசியவனிடம் தண்ணீரை கொடுத்தாள். “என்னை டென்சன் பண்ணி பார்க்கிறதுல அப்படி என்ன சந்தோசமோ?” என வலிக்காமல் அவளின் மூக்கை திருகினான்.​

உண்மையிலேயே இங்குள்ளவர்களில் ஆசைக்காகவென்று யூடியூபில் சேனல் ஆரம்பித்து, அதில் வந்த வருமானத்தை பார்த்து, வீடியோ போடவேண்டும்! போட்டே ஆகவேண்டும்! என்று தீவிரமாக மாறிவிட்டனர். அது அவர்களுக்கு மனஅழுத்தத்தை தான் கொடுக்கிறது என்று தெரியாமலே தொடர்கின்றனர்.​

சாருமதியே ஆசைக்காக தான் சேனல் தொடங்கினாள். ஆனால் அதில் அவளுக்கோர் ஆத்மதிருப்தி கிடைத்தது. ‘உங்களால நான் வெயிட் குறைச்சிருக்கேன். தேங்க்ஸ் சாரு! உங்க டயட் பிளான் எனக்கு உதவியா இருக்கு!’ என்று சாருமதிக்கு வந்த மெயில்கள், காமெண்டுகளை பார்த்து மகிழ்ந்திருக்கிறாள்.​

அனைத்திற்கும் மேலாக, ‘உங்களின் டயட் பிளான் தொடர்ந்து செய்து உடல் எடையை குறைத்து, இப்பொழுது கர்ப்பமாக உள்ளேன்!’ என்று வந்த மெயிலை பார்த்து ஆனந்தத்தில் அழ கூட செய்திருக்கிறாள். ‘நமக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோம். நாம் சரியான வழியில் தான் செல்கிறோம்!’ என்ற கர்வம் சாருமதிக்கு என்றுமே உண்டு.​

நாட்கள் வாரங்கலாகி, வாரங்கள் மாதங்களை கடந்து சாருமதிக்கு ஒன்பதாவது மாதம் தொடங்கியது.​

சுவற்றில் சாய்ந்து காலை நீட்டி பெட்டில் அமர்ந்திருந்த சாருமதியின் கண்ணையும் கருத்தையும் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் தேவா தான் நிறைத்திருந்தான்.​

சாருமதி கர்ப்பம் தரித்தில் இருந்து வேண்டுதல் என்ற பெயரில் முகமுழுக்க தாடியும், தலைமுழுக்க முடியும் வளர்ந்திருந்தான். ‘குழந்தை பிறந்த பிறகே எடுக்க வேண்டும்!’ என்று செல்வராணி கட்டளையாக கூறியிருந்தார்.​

முதலில், ‘இதோடு எப்படி அலுவலகம் செல்வேன்?’ என்று முரண்டு பிடித்தவன் கர்ப்பகாலத்தில் சாருமதியின் அவஸ்தையை பார்த்து அவனும் வேண்டிக்கொண்டு அதனை கடைப்பிடிக்கிறான்.​

வெள்ளை நிற கால் சாராய் அணிந்து பிஸ்தா நிற சட்டை அணிந்திருந்தவன் சட்டையின் பட்டனை போட்டுக்கொண்டிருந்தான்.​

“தேவ்…” என்ற சாருமதியின் அழைப்பை கேட்டு திரும்பியவன், “இவ்வளவு நேரம் கண்ணாலே கபளீகரம் பண்ணிட்டு இருந்த? இப்ப கிட்ட வந்தா சட்டையை கசக்கி விடுவ… எனக்கு வேலைக்கு நேரமாச்சு” என நழுவ பார்த்தான்.​

“ஓஹோ! நைட் மட்டும் ப்ளீஸ் மதி! ப்ளீஸ் மதின்னு கிட்ட வருவீங்க?” என புருவம் உயர்த்தி கேட்டவளை சிரிப்புடன் பார்த்தவன் அவளிடம் வந்து நின்றான்.​

மலர்ச்சியுடன் புன்னகைத்து, “தேவ்…” என சங்கீதமாய் ஆரம்பித்து அவனின் தாடியை பிடித்திழுத்தவள் அவனின் முகத்தோடு முகம் வைத்து இழைத்து அவனின் உதட்டில் மென்முத்தம் பதித்தாள்.​

சில நிமிடம் அவளின் செயலுக்கு கட்டுப்பட்டு நின்றவன், “நீ என்ன பண்ணாலும் நோ தான் மதி” என அவளை உச்சி முகர்ந்தான்.​

இன்னும் மூன்று நாட்களில் சாருமதிக்கு வளைகாப்பு நடக்கவிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஒன்பதாம் மாதம் தொடங்கியது. இன்னும் இருபது நாட்களில் அவளுக்கு டேட் கொடுத்திருக்க தாய்வீடு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.​

“உன்னோட அம்மாக்கும் பாட்டிக்கும் ஆசை இருக்கும் தான மதி? வந்தனாவை ஏழாம் மாதமே கூட்டிட்டு வந்துட்டோம். உனக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கிருச்சின்னு உங்கம்மா வேற சொல்லிட்டு இருக்காங்க…” என அவளை பேசி சம்மதிக்க வைத்தான்.​

கல்யாண பட்டில் தாய்மையின் பூரிப்பில் அழகு பதுமையாக அந்த மனையில் வீற்றிருந்தாள் சாருமதி. அவள் மனையில் அமர்ந்திருந்தாலும் அவளின் கண்கள் தூரத்தில் விழாவிற்கு வந்த சொந்தங்களை வரவேற்றுக்கொண்டிருந்த தேவாவை தான் சுற்றி வந்தது.​

தேவாவும் பட்டு வேட்டி கட்டி சட்டையின் முன்னிரண்டு பட்டன்கள் போடாமல் தந்தையாக போகும் மகிழ்ச்சியில் முன்னுச்சி முடிகள் கலைந்து கவர்ச்சியுடன் கண்ணை பறித்தான். அவனின் பக்கத்தில் கையில் ஏழுமாத குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்தான் அரவிந்தன்.​

“சாருமா! சும்மா அவரையே பார்க்காத… இங்க பாரு!” என அவளின் கன்னத்தை பிடித்து திருப்பினார் அவளின் சின்ன பாட்டி காந்திமதி.​

“அண்ணா ரிசெப்ஷன்ல சொன்ன மாதிரி இப்ப சொல்ல முடியாது பாட்டி. எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு! இப்ப அவரை பார்க்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு!” என கண்ணடித்து கூறினாள்.​

“உனக்கு எல்லா உரிமையும் இருக்கு தான். அதுக்காக இப்படி எல்லார் முன்னாடியும் பார்க்காத சாரு. ஒருத்தர் கண் போல ஒருத்தர் கண் இருக்காது…” என பேத்தியை கட்டுப்படுத்தி சந்தானம் குங்குமம் வைத்து வளையிட்டு ஆசிர்வதித்தார்.​

அனைத்து பெண்களும் நலங்கு வைத்தபின் இறுதியாக தேவா வந்தான். கன்னம் இரண்டிலும் சந்தம் பூசி, தலை நிறைய பூவைத்து, கை நிறைய வளையலடுக்கி சூல்கொண்ட வயிறுடன் தேவதையாக அமர்ந்திருந்தாள். முறைப்படி அனைத்தையும் செய்தவனிடம், “கிஸ் மீ!” என கிசுகிசுப்பாக கூறினாள்.​

அவளின் கேள்வியில் திணரியவன் கண்களால் அனைவரையும் சுட்டிக்காட்டினான். அதில் முகம் சுருக்கிவளிடம், யாரும் அறியாவண்ணம் இதழ்குவித்து காற்றிலே அவளுக்கு முத்தத்தை பறக்கவிட்டான். அந்த காற்றாய் சுவாசித்து அவளின் உயிருக்குள் நிறைத்துக்கொண்டாள், பாவை.​

அன்னையின் வீட்டிற்கு கிளம்பும் பொழுது சாருமதி தேவாவை தேடினாள். “அவங்க கிட்ட சொல்லிட்டு கிளம்ப கூடாது சாரு! வா நாம கிளம்பலாம்” என கோமதி அவளின் கையை பிடித்தார்.​

‘இதென்ன? ரெண்டு பேர் கர்ப்பமா இருந்தா ஒரே வீட்டுல இருக்க கூடாது! வளைகாப்பு முடிந்து கிளம்புறப்ப கணவர்கிட்ட சொல்லிட்டு போக கூடாது!’ என அவளின் மனம் சுணங்கிக்கொண்டது.​

அவளுக்கு தெரியும், ‘இன்று கிளம்பினால் இதோடு குழந்தை பிறந்த பிறகு தான் இங்கே வருவாள்’ என்று. ஆனால் அவனிடம் சொல்லாமல் செல்ல இயலாமல் கண்கள் கலங்கியது.​

அவளிடம் வந்த செல்வராணி, “தேவாவும் உன்னை கூட்டிட்டு வந்து விடுறேன்னு நிக்கிறான். அவனை உள்ள பிடிச்சி வெச்சிருக்கோம் சாரு. இதுல நீ கண்கலங்கிட்டு கிளம்புனேன்னு தெரிஞ்சா சாமி ஆடிடுவான். இப்ப நீ கிளம்பு சாரு! அவனை நான் நாளைக்கே உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்” என அவளை அணைத்து ஆறுதல் படுத்தினார்.​

‘சம்பிரதாயம் என்பது நாம உருவாக்கினது தான? அதை நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்க கூடாதா?’ என்ற எண்ணம் சாருவின் மனதில் எழாமல் இல்லை! பின் செல்வராணியிடம் சொல்லிவிட்டு தனது குடும்பத்துடன் கிளம்பினாள்.​

சொன்னது போல் மறுநாளே தேவா அவளை பார்க்க சென்றுவிட்டான். தினமும் வேலை முடித்து அவளை பார்க்க சென்றாலும் அங்கு தங்க மாட்டான்.​

மருத்துவர் சொன்ன நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் விடியற்காலையில் தேவாவிற்கு அழைத்த அரவிந்த், “சாருக்கு வலி வந்துடுச்சி தேவா. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம். நீங்க சீக்கிரம் வந்திடுங்க” என்று அழைப்பை துண்டித்தான்.​

இங்கே தேவா அவனின் அன்னையை அழைத்து கொண்டு மருத்துவனை விரைந்தான்.​

வீட்டில் இருந்து புறப்படும் முன் கோமதி சாருவின் நெற்றியில் திருநீர் பூசி, “ரெண்டு உசுரா நல்ல படியே வாம்மா” என கடவுளிடம் வேண்டிக்கொண்டே பேத்தியை அழைத்து சென்றனர்.​ 
Last edited:
Top