எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாலைவன பட்டாம்பூச்சி!

Fa.Shafana

Moderator
பரபரப்பு அடங்கிய காலை வேளை. கணவன் மாமனார் இருவரும் காலை உணவை முடித்துக் கொண்டு கடைக்குச் சென்றதும் தன் அறையில் சென்று கட்டிலில் சற்றே சாய்ந்து கொண்டாள் மீனா.

"மீனா.. மீனா" என்ற மாமியாரின் குரல் அடுத்த ஐந்தாவது நிமிடமே அவளை வந்தடைய எழுந்து வெளியே வந்தாள்.

முகம் வாடியிருந்ததைக் கவனித்துவிட்டு,

"உள்ள என்ன பண்ற?" என்றார்.

"எனக்கு பீரியட்ஸ் வந்திருக்கு அத்த. தலையும் வயிறும் ரொம்ப வலிக்கிது. உடம்பு ரொம்ப அசதியா இருக்கு அதான் கொஞ்சம் தூங்கலாம்னு.."
என்றவள் குரலோ அவளை விட சோர்ந்திருந்தது.

"மாசா மாசம் வாரது தானே? உனக்கு மட்டுமா வருது? பொண்ணுங்கன்னா இதெல்லாம் பொறுத்து போக தான் வேணும், அதுக்குன்னு இப்படி நேரம் காலம் இல்லாம தூங்கினா வீட்டுல மத்த வேலை எல்லாம் யாரு பார்க்குறதாம்?

வலின்னு நாம நினைச்சா தான் ரொம்ப வலிக்கும். அதை மனசுக்கு எடுக்காம அடுத்த வேலைய பார்த்தா அதுவும் வந்த வலி தெரியாம போய்டும். போய் மதியத்துக்கு சமையல ஆரம்பிச்சிடு. இன்னைல இருந்து கடைல வேலை செய்ற பசங்களுக்கும் மதியம் சமைக்கணும்" என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு மறு வார்த்தை பேச முடியாது வாடிய முகமாக சமையலறையை நோக்கிச் சென்றாள்.

சில மாதங்கள் கழிந்த ஒருநாள். காலை நேர சமையல் முடித்து இன்ன பிற வேலைகளையும் முடித்துவிட்டு அசதியாக இருக்கவே சற்று நேரம் ஓய்வெடுக்க அமர்ந்தவளைப் பார்த்து

"காலைல சமையல் முடிஞ்சதோட மத்த வேலைகள பார்த்தா தானே மதியத்துக்கு நேரமே சமைக்க முடியும்? அதில்லாம தேமேன்னு உட்கார்ந்திருந்தா எப்படி டைமுக்கு கடைக்கு சாப்பாடு அனுப்புறதாம்?"

என்று கேட்ட அத்தையின் குரலில் அவ்விடம் விட்டு எழுந்துவிட்டாள் மீனா.

கணவர் மகேந்திரன் பலசரக்கு கடை ஒன்றையும் மாமனார் மரக்கறி கடையும் வைத்திருந்தனர். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொருவர் உதவிக்கென இருந்தனர். அவர்களுக்கும் சேர்த்து மதிய உணவு வீட்டில் இருந்து தான் சமைத்துக் கொடுக்க வேண்டும்.

கடையில் வாங்கிக் கொடுப்பதை விட இது இலாபம் என்றே இந்த ஏற்பாடு, மீனா திருமணம் முடித்து இங்கே வந்த அடுத்த வாரம் முதல் இதோ இந்த எட்டு மாதங்களாக வழமையானது.

முன்னெல்லாம் சுறுசுறுப்பாக இருந்தவள் இப்போது ஆறு மாத கருவை சுமந்து கொண்டிருப்பதால் அடுத்தடுத்து ஓய்வில்லாமல் இயந்திரமாக சுழல முடிவதில்லை.

"கொஞ்ச நேரத்துல சமைக்கலாம்னு இருந்தேன் அத்த" என்றாள் மெல்லிய குரலில்.

"நீ ஆற அமர ரெஸ்ட் எடுத்துட்டு சமையல ஆரம்பிச்சா பாதி சமைக்கும் போதே சாப்பாடு எடுத்துட்டு போக கடை பையன் வந்துடுவான்" என்றவர்,

"நாங்கெல்லாம் அந்த காலம் ஓடியாடி வேலை செய்வோம். இப்போ இருக்கிற பிள்ளைங்களுக்கு ஒரு வேலை செஞ்சிட்டு அடுத்த வேலை செய்ய ஒரு மணி நேரம் ரெஸ்ட் தேவைப்படுது" என்று முனுமுனுத்துக் கொண்டே தன் அறையை நோக்கிச் சென்றார்.

வழமையான பேச்சுக்கள் தானே என்ற நினைப்புடன் சமையலை ஆரம்பித்து விட்டாள்.

நாட்கள் ஓடி வருடங்களாகின.

அன்று மகேந்திரன் வீட்டிற்கு வரும் போது அவள் அறையில் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள்.

"அப்படி என்ன தான் இருக்கோ அதுல? எப்போ பாரு ஒரு புக்கோட தான் இருக்க. என்னவோ கதை படிச்சா பணம் கிடைக்குற மாதிரி ஓயாம படிக்குற. வீட்டுல வேற வேலையே இல்லையா உனக்கு?"

"வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் படிக்கிறேன். அதை தான் நீங்க பார்க்கறீங்க. வாசிப்புல எனக்கு ஒரு ஆத்ம திருப்தி இருக்கு. பணம் தான் எல்லாம்னு இல்லைங்க" என்றாள்.

"பணம் தான் எல்லாம்னு இல்லையா? அப்போ நீ சாப்பிட, உடுத்த எல்லாம் உங்க அப்பா வீட்டுல இருந்தா வருது? பணம் கொடுத்தா தான் எல்லாம் வரும்" என்று கடுமை காட்டியவன் குளியலறைக்குள் சென்றான்.

சட்டென்று கண்ணில் துளிர்த்த கண்ணீர்த்துளியை துடைத்துவிட்டு பாரமேறிய மனதுடன் வெளியே சென்று அவனுக்கான இரவுணவை எடுத்து வைத்தாள்.

"குழந்தை தெருவுல சைக்கிளோட நிற்கிறான் வண்டிக்காரன் ஹாரன் அடிச்சுட்டே இருக்கான் உனக்கு கேட்கல்லையா மீனா?" என்ற மாமனாரின் குரலில் அடித்துப்பிடித்து வாசலுக்கு வந்தாள்.

"குழந்தைய பார்க்காம உள்ள அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை உனக்கு?" என்றவரிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டே,

"கேட் மூடித் தான் இருந்தது மாமா. நான் பின் பக்கம் காயப் போட்ட துணி எல்லாம் எடுக்கப் போய் இருந்தேன்" என்றவள் ஊகித்திருந்தாள் அடுத்த வீட்டுக்குச் சென்று வந்த அத்தை தான் நுழைவாயிலைத் திறந்தபடியே வைத்துவிட்டு வந்திருக்க வேண்டும் என்று.

"ஆமா இந்த ஒத்த பிள்ளைய கவனிக்காம இத்தனை சாட்டு சொல்றா மத்தப் பிள்ளையும் வந்தா என்ன பண்ணப் போறாளோ?"

என்றபடி அவளின் மேடிட்டிருந்த வயிற்றை ஒரு பார்வை பார்த்து விட்டு அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கினார் அவளின் அத்தையானவர்.

தனக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கு இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தவளை ஏதோ ஒரு பொறாமை கண் கொண்டு தான் பார்க்க ஆரம்பித்தார் அவர். அத்தையை அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு தன் மகனுடன் சமையலறைக்குள் சென்று பெரியவர்களுக்கான தேநீரை தயாரித்தாள் மீனா.

மாமியாரின் கூற்று காதுக்குள் இன்னும் கேட்டது அவளுக்கு. இதயத்தை கிழித்து ரணப்படுத்தும் சுடு சொற்கள் தான் ஆனாலும் அதை எதிர்த்துப் பேசவோ கண்ணீர் விட்டு அழவோ முடியாதே அவளுக்கு. ஆறுதல் தேட தாய் மடி கூட இல்லாத துர்ப்பாக்கியசாலி!

ஐந்து வயதில் தாயை இழந்தவளுக்காக தந்தை மறுமணம் செய்து கொண்ட சிற்றன்னை, அவர் ஈன்ற குழந்தைகளுக்கு மட்டுமே பாசம் காட்டி அவளை தூர நிறுத்தி இருந்தார்.

தந்தை இறந்து அடுத்த சில மாதங்களில் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டு, இது தான் உன் குடும்பம் என அவளை ஒதுக்கியும் வைத்து விட்டார்.

சுடு சொற்களைக் கேட்டு, புறக்கணிப்புகளைக் கண்டு பழகியவள் தானே! தன் வலியை தனக்குள்ளே புதைத்துக் கொண்டாள்.

ஏதோ தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு ஒருநாள் அழுது கொண்டிருந்த போது அவளின் கெட்ட நேரம் மகேந்திரனும் அன்று நேரத்துடன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

அறையில் கண்ணீரோடு இருந்தவளைக் கண்டு அருகில் வந்தவன்,

"எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க?" என்றான்.

உன் தாயின் சுடு சொற்களின் கனம் தாங்காது அழுது கொண்டிருக்கிறேன் என்று கூறவா முடியும்? கண்களைத் துடைத்துக் கொண்டு இடவலமாக தலையசைத்து ஒன்றும் இல்லை என்றாள்.

"வீட்டுல இருக்குற உனக்கு வெளியே எனக்கு இருக்குற கஷ்டம் தெரியாது. கடைல வேலை செய்துட்டு அசதியா வரும்போது சிரிச்ச முகமா இருப்பியா? அதை விட்டுட்டு இப்படி அழுது வடிஞ்சிட்டு இருப்ப இல்லைன்னா முகத்த தூக்கி வெச்சிட்டு இருப்ப. நானும் மனுஷன் தான் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு. ஒருநாள் இல்லை ஒருநாள் என் கிட்ட வாங்கிக் கட்டிக்க தான் போற" என்றான்.

திரும்பி நின்று உடை மாற்றிக் கொண்டிருந்தவனைப் பார்த்து சன்னமாகப் புன்னகைத்துக் கொண்டாள்.

இதுவே அவளாக எதுவும் ஆர்வமாக, ஆசையாக பேசச் சென்றால்,

"அசதியா வந்தவன கொஞ்சம் அமைதியா இருக்க விடு மீனா. அப்புறம் பேசலாம்" என்ற தருணங்களும் உண்டு.

அப்படி அவன் தட்டிக் கழித்ததை மறுபடியும் அதே ஆர்வத்துடன் கூற முடியாது விட்டுவிடுவாள் அல்லது மறந்துவிடுவாள்.

நாளாக நாளாக பிள்ளைகள் வளர, அவளின் வேலைப்பளு அதிகரிக்க கூடவே மாமியாரின் நச்சரிப்பும் அதிகரித்தது.

அவள் தன் பிள்ளைகளுக்கு ஏதாவது அறிவுரை கூறினால் கூட தன்னை குத்திக் காண்பிப்பதாக நினைத்து சண்டை போட ஆரம்பித்தார்.

அல்லது,
"இந்த வயசுல இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா? பெரியவங்களானா தானா தெரிஞ்சிக்குவாங்க" என்றோ,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை உங்கம்மா வாய வெச்சிட்டு சும்மா இருக்காம ஏதாவது சொல்லிட்டு இருக்கா நீங்க கண்டுக்காதீங்க" என்றோ கூறி ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்தார்.

"ட்ரெஸ் எல்லாம் மடிச்சு வெச்சிட்டேன் சுதன், சுனிதா ரெண்டு பேரும் வந்து எடுத்து வைங்க" என்று குரல் கொடுக்க

பிள்ளைகள் வரும் முன்பு மாமியாரின் குரல் தான் வந்தது.

"ஏன் உனக்கு என்ன வேலை இருக்கு? அதை நீயே எடுத்து வைக்குறது தானே? பசங்களே தான் எடுத்து வைக்கணுமா?" என்றார்.

அவருக்கு பதில் கூறாமல் பெரியவர்களின் உடைகளை அவர்களின் நிலைப்பேழையில் வைத்துவிட்டு வெளியே வர,

பிள்ளைகள் தங்கள் உடைகளை கையில் எடுத்திருந்தனர்.

"அம்மா பக்கத்துல இல்லாத காலம் வரும் ஏன் இல்லாமலே கூட போய்டுவேன். அப்போ நீங்க அடிப்படையான சில வேலைகளையாவது செய்து கொள்ள தெரிஞ்சுக்கணும். எங்க காலம் வாஷிங் மெஷின்ல கழுவிப்போம்னு நினைப்பீங்க. மெஷின் கழுவிக் கொடுக்கும் ஆனா மடிச்சு பீரோல வைக்காது, அதை நீங்க தான் செய்யணும். அது போல தான் நான் உங்களை ஏவுற சின்ன சின்ன வேலைகள் எல்லாம். வேலைக்கு ஆள் வெச்சா கூட குறிப்பிட்ட சில வேலைகள நீங்களே செய்யணும். அம்மாவுக்கு உங்க வேலைகள செய்து தர முடியாம இல்லை நீங்களும் பழகிக்கணும்னு தான் சொல்றேன் புரியும்னு நினைக்கிறேன்" என்றாள்.

"புரியுதும்மா" என்ற சுனிதாவிற்கு ஏதாவது அவசரமான, அவசியமான நேரத்தில் உதவும் என்று சிறிது சமையலைக் கூட பழக்கி இருந்தாள் மீனா.
 

Fa.Shafana

Moderator
சுதன் பதினொன்றும் சுனிதா எட்டாவதும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

பள்ளியில் ஆசிரியர் ஏதோ கூற கோபமாக வந்தவன் மொத்தக் கோபத்தையும் அடக்கிக் கொண்டு தூங்கி விட்டான்.

இரவுணவுக்காக அவனை அழைக்கச் சொல்லி மீனா கூற அவனை எழுப்பி விடச் சென்ற சுனிதாவின் மீது எரிந்து விழுந்தவன் எழுந்து கொள்ள வெளியே வந்தவள் அண்ணன் எரிந்து விழுந்ததுக்கு அன்னையிடம் சண்டையிட ஆரம்பித்தாள்.

"இனிமே தூங்குற அண்ணாவ எழுப்ப நீங்களே போங்க ம்மா, என்னால முடியாது கண் மண் தெரியாம திட்ட வேண்டியது" என்று விட்டு விருட்டென்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

சுதன் வரவும்,

"ஸ்கூல்ல என்னாச்சுப்பா? வந்ததுல இருந்து உன் முகமே சரியில்லை, சிடுசிடுன்னு இருக்க, சுனிதாவையும் திட்டி இருக்க, டீச்சர்ஸ் இல்லைன்னா பசங்க ஏதாவது சொன்னாங்களா? என்று வரிசையாக கேள்வி கேட்க,

"போதும்மா கேள்வி கேட்கிறத நிறுத்துங்க. சாப்பாட்ட எடுத்து வைங்க" என்றான் மாறாத சிடுசிடுப்புடனே.

இரண்டு இட்லியை சாப்பிட்டு விட்டு எழ,

"ஏன்ப்பா இன்னும் ரெண்டு வைக்கிறேன்"

"போதும் பசிக்கல்லை" என்றவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

"ஏன்மா அண்ணா உங்க கிட்டயும் கோவமா தான் பேசினாங்க நீங்க எதுவுமே சொல்லல்லை?" என்றாள் அங்கே நடப்பதை கவனத்துக் கொண்டிருந்தவள்.

"அவனுக்கு யார் மேலயோ ஏதோ கோவம். அங்க காட்டிக்க முடியாம இங்க என் கிட்ட காட்டுறான். அவ்வளவு தான்"

"ஆனாலும் அண்ணாவுக்கு இப்போல்லாம் ரொம்பவே கோவம் வருதும்மா"

"அவனுக்கு மட்டுமா? உனக்கில்லையா?" என்றார் அவளை ஆழ்ந்து பார்த்து.

அவள் அமைதியாகி விட, அவளின் தலை கோதி

"வயசுடா.. நீங்க ரெண்டு பேரும் டீன்-ஏஜ்ல இருக்கீங்க. உடல்ல ஏற்படும் ஹோர்மோன் சேன்ஜஸ்னால மனசு ஒரு நிலையா இருக்காது. இப்படி தான் அடிக்கடி ஏன் எதுக்குன்னு தெரியாம கோவம், எரிச்சல் மட்டும் இல்லை சோகம், கண்ணீர் எல்லாம் கூட வரும்.

அதை புரிஞ்சு நான் தான் உங்களை அனுசரிச்சு போகணும், அது இல்லாம நானும் உங்களை திட்டினா இன்செக்யூர் (பாதுகாப்பின்மை) ஃபீல் வரும். நமக்கு யாருமே இல்லைங்கிற ஃபீல் உங்கள தனிமையா உணர வைக்கும். இந்த வயச கடந்துட்டா இதெல்லாமே சரியாகிடும் அதான் இதை எல்லாம் கடந்து வர நானும் உங்க கூட துணையா வரேன்" என்றாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள்,

"ஆனா அம்மா.." என்றாள்.

"என்ன சுனிதா?"

"கேட்டா திட்டுவீங்க வேணாம் விடுங்க" என்று விட்டு மீண்டும்,

"திட்ட மாட்டீங்கன்னா கேட்குறேன்" என்றாள்.

"சரி கேளு"

"நாங்க டீன்-ஏஜ்ல இருக்கோம் சரி ஆனா.." என்று பாட்டியின் அறைப் பக்கம் பார்வையை ஓட்டியவள்,

"பாட்டி ஏன் எப்பவுமே உங்க மேல சிடுசிடுப்பாவே இருக்காங்க?" என்று கேட்டே விட்டாள்.

"அவங்க ஓல்ட்-ஏஜ்ல இருக்காங்க" என்றாள்.

புரியாமல் பார்த்த தன் மகளிடம்,

"தான் மூத்தவங்க, வீட்டுல இருக்குற இளையவங்க தன்னை சார்ந்து, தன் பேச்சைக் கேட்டு நடக்கணும்னு நினைக்குறாங்க. அவங்க மூத்த தலைமுறை இல்லையா? அவங்களோட காலத்துல இருந்த மாதிரியே தான் இப்போ கூட இருக்க நினைக்குறாங்க. ஃப்ரெண்ட்லியா இருந்தா எங்க நாம அவங்களை மதிக்காம போய்டுவோமோன்னு ஒரு எண்ணம், அதான் இப்படி இருக்காங்க. ஆனா உங்க ரெண்டு பேர் மேலயும் உங்க பாட்டி பாசமா தானே இருக்காங்க?"

என்றவளை இடைமறித்து,
"அப்பா மேலயும் ரொம்ப பாசம் அவங்களுக்கு" என்றாள் சின்னவள்.

மெல்லிய புன்னகையுடன்,
"என் மேலயும் பாசம் இருக்குடா ஆனா காட்டிக்க மாட்டாங்க" என்றவளின் மனசாட்சி அவளை எள்ளி நகைத்தது.

மகளின் பாட்டி மீதான புரிதல் சரியாகவே இருப்பினும் தானும் பேசி அதை உறுதிப்படுத்துவது பிழையான வழிகாட்டுதல் என்று மாற்றிப் பேசி வைத்தவளுக்குத் தெரியாததா தன் மாமியார் குணம்?

தன் மகனையும் பேரப்பிள்ளைகளையும் மாதிரியா மருமகள் அவருக்கு? முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டம். கிட்டத்தட்ட சம்பளம் இல்லாத வேலைக்காரி!

இரவுணவின் போது சுதனைக் கேட்ட மகேந்திரனிடம்

"அவன் தூங்குறான்"

"சாப்பிட்டானா?"

"பசிக்கல்லைன்னு ரெண்டு இட்லி சாப்பிட்டான்" என்க

"வளர்ற பிள்ளைங்களுக்கு நல்லா ருசியா சமைச்சு கொடுக்கணும். அத விட்டுட்டு ஏனோதானோன்னு சமைச்சா பிள்ளைங்க எப்படி சாப்பிடுவாங்க? நமக்கே சில நேரம் சாப்பிட முடியுறதில்லை" என்றார் மாமியார்.

நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்து,
"அன்னைக்கு அப்பாவும் இதை தானே சொன்னாங்க உப்பு சப்பில்லாம இருக்குன்னு? வயசானவங்களும் வயசுப் பிள்ளைங்களும் இருக்காங்க கொஞ்சம் மெனக்கெட்டு யார் யாருக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து சமைக்கலாம் மீனா. மளிகை சாமான் எல்லாம் எந்த குறையும் இல்லாம வீட்டுக்கு வருது தானே?" என்றான்.

முட்டிக் கொண்டு வந்தது கண்ணீர். முயன்று அடக்கிக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.

மாமனார், மாமியார், கணவன் மூன்று பேருக்கும் என்ன ஒரு கோவம், சங்கடம், எரிச்சல் இருந்தாலும் உணவில் குறை சொல்வது வழக்கத்தில் இருக்க இவள் என்ன அறுசுவை விருந்து சமைத்தாலும் வீணே!

காலங்கள் மாறின, வாழ்க்கை ஓட்டத்தில் காட்சிகள் மாறின ஆனால் அவள் என்று வரும் இடத்தில் அந்த வீட்டில் கருப்பொருள் மட்டும் மாறவே இல்லை. அவளுக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறவே இல்லை.

தனக்குள்ளே சிரித்துக் கொண்டவள் அனைவரும் உணவருந்தி முடிய தானும் அருந்திவிட்டு பார்த்திரங்களை எடுத்து வைக்க, கணவனானவன் கடைக்கு சரக்கு வருகிறது என்று கிளம்பிவிட்டான்.

பிள்ளைகள், பெரியவர்கள் தூங்கி விட வேலைகளை முடித்தவள் ஒரு புத்தகத்தோடு அமர்ந்து அதற்குள் மூழ்கிவிட்டாள்.

என்றும் அவளது தனிமைக்குத் துணையானது அவளின் புத்தகங்களே!

அன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரி விடுமுறையாதலால் பிள்ளைகள் வீட்டில் தான் இருந்தார்கள். திடீரென கேட்ட மீனாவின் அதிர்ந்த குரலில் சுதனும் சுனிதாவும் தாயின் அருகே ஓடினர்.

"வயிறு ரொம்ப வலிக்கிது சுதன். மயக்கம் வரும் போல இருக்கு அப்பாவுக்கு கால் பண்ணுடா" என்க

தொலைபேசி அருகே சென்று எண்களை அழுத்தியவனிடம்,

"உங்கம்மாவுக்கு இதே வேலை. கல்யாணம் பண்ணி வந்த அடுத்த ரெண்டாவது வாரம் வயிறு வலின்னா ரெண்டாவது மாசம் மசக்கைன்னா தொடர்ந்து தலைவலியும் காச்சலும் விடாம வரும் அவளுக்கு. உங்கப்பா கடைல வேலையா இருப்பான் இப்போ கால் பண்ணாத. சூட்டு வலிக்கும் குய்யோ முய்யோன்னு கத்துவா உங்கம்மா. அது தானா சரியாகிடும். விடு" என்றார் அவனின் பாட்டியானவர்.

அவரின் கூற்றில் யோசனையாக தொலைபேசியை வைத்து விட்டு தாயிடம் சென்று,

"சூட்டு வலி தானாம்மா. அதுவே சரியாகிடுமாம். பாட்டி சொல்றாங்க" என்க கதறிவிட்டாள்.

"ப்ளீஸ்டா உங்கப்பாவ கூப்பிடு" என்றவர் அப்படியே மயங்கியும் விட்டாள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவள் அடுத்த நாளே இவ்வுலகை விட்டு விடை பெற்றிருந்தாள்.

"கர்ப்பப்பை புற்றுநோய் இருந்திருக்கு இவங்க கவனிக்காம விட்டுட்டாங்க போல சார். ஆனா சாதாரணமா தாங்கிக்க கூடிய வலி இல்லை ரொம்பவே கஷ்டம், இவங்க எப்படி இத்தனை நாள் சாதாரணமா இருந்தாங்கன்னு தான் புரியல்லை" என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் வீட்டில் இயல்பு நிலை முற்றாக மாறியது. வேலைகள் தேங்கின. அத்தனை வருடங்களாக மீனா அந்த வீட்டில் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தாள் என அவள் இல்லாமல் போன ஒரு வாரத்தில் அவளது கணவனுக்குப் புரிந்தது.

சுனிதாவால் மட்டும் வீட்டில் இருந்த ஐந்து பேருக்கும் சமைக்க முடியாது என்று கடையில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகள் ஒவ்வாமை உண்டாக்கின.

வீட்டு வேலை, சமையலுக்கு என்று ஒரு பெண்மணியை நியமித்துவிட்டு கடையில் வேலை செய்பவர்களுக்கு உணவு வெளியே இருந்து வாங்கிக் கொடுத்தார்கள்.

மீனாவின் கைமணத்தில் சமைக்கப்பட்ட உணவை ஆயிரம் குறை கூறிக் கொண்டே ருசித்து உண்பவர்களால் வெளியாள் சமைத்ததை அத்தனை விரும்பி உண்ண முடியாது போனது.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. அன்று இரவு மகேந்திரன் வீட்டிற்கு வந்த போது சுனிதா, அவனது அறையில் தரையில் அமர்ந்து பெரிய அட்டைப் பெட்டி ஒன்றைப் பிரித்து வைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
அவளைச் சுற்றிலும் நிறைய புத்தகங்கள் இருந்தன.

"என்னடா பண்ற?"

"இதெல்லாம் அம்மா படிச்ச புக்ஸ் ப்பா. இங்க இந்த பெட்டிக்குள்ள சும்மா இருக்குறத லைப்ரரிக்கு கொடுக்கலாம்னு நினைச்சேன். நீங்க
என்ன சொல்றீங்கப்பா?" என்று கேட்டாள்.

"நீயும் புக்ஸ் படிப்ப தானே? இதெல்லாம் நீயே வெச்சுக்கலாமே, ஏன் லைப்ரரிக்கு கொடுக்கணும்?" என்றவனிடம்


"அம்மா ஃபேமிலி சப்ஜெக்ட் தான் படிப்பாங்க எனக்கு அது இன்ட்ரஸ் இல்லை. நான் சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் தான் படிப்பேன்" என்க புரியாமல் பார்த்து வைத்தான்.
 
Last edited:

Fa.Shafana

Moderator
எழுந்து வந்து தந்தையின் கையைப் பிடித்தவள்,

"நாம கொஞ்சம் பேசலாமாப்பா? அம்மாவப் பற்றி.. நம்மளப் பற்றி" என்றாள்.

அவனது தலை தானாக அசைந்து சம்மதம் கூறியது.

"இங்க வேணாம் வாங்கப்பா பால்கனில இருந்து பேசலாம்" என்று கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றவளின் பின்னால் தானும் சென்று அவள் தரையில் அமர அவளருகில் அமர்ந்து கொண்டான்.

"நாம மூனு பேரும் நம்ம படிப்பு, வேலைன்னு கவனம் வெச்சதுல எங்களுக்குன்னு இருந்த அம்மாவ கவனிக்காம போய்ட்டோம் ப்பா" என்றாள் தந்தையின் முகம் பார்த்து.

"ஏன் இப்படி சொல்ற சுனிதா?"

"உண்மை தான் ப்பா. அவங்க படிக்கிற புக்ஸ் பற்றி சொன்னேன்ல? ஃபேமிலி சப்ஜெக்ட். அப்படின்னா குடும்பம், அன்பு, பாசம், நட்பு, காதல் அதை சார்ந்த மகிழ்ச்சி, நிம்மதி, நிறைவு அனைத்தும் கலந்திருக்குற நாவல்கள், கதைகள் தான் படிப்பாங்க.

அவங்களுக்கு கிடைக்காததை எல்லாம் அந்த கதைகள்ல உணர்ந்து ரசிச்சிருக்காங்கன்னு இப்போ தோனுது" என்க,

"என்ன சொல்ற? புரியல்லை" என்றான்

"நிஜமா தான் சொல்றேன். அவங்க கதை படிக்கும் போது நான் கவனிச்சிருக்கேன் நிறைய உணர்வுகளை அவங்க முகம் பிரதிபலிக்கும்.

அதே போல இன்னும் ஒரு ஹாபிட் இருந்தது. கண்ணாடி கிட்ட பேசிட்டு இருப்பாங்க கவனிச்சிருக்கீங்களா?"
என்றாள்.

இல்லை என்று அவனது தலை இடவலமாக ஆடியது.

"ம்ம்ம்.. நான் கவனிச்சுட்டு ஒரு நாள் கேட்டேன். கண்ணாடி முன்னால ரொம்ப நேரமா நின்னு என்னம்மா யோசிக்கிறீங்கன்னு அதுக்கு அவங்க,

இது கிட்டத்தட்ட என் ஃப்ரெண்ட் மாதிரி. என் மனசுல இருக்குறதெல்லாம் இதுக்கிட்ட சொல்லிட்டா ரிலாக்ஸா இருக்கும்னு சொன்னாங்க" என்றவள் தொடர்ந்து,

"அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாருமே இல்லையாம்ப்பா. அவங்களோட ஃபீலிங்ஸ ஷேர் பண்ணிக்க அவங்க நாடினது கடவுளையும் கண்ணாடியையும் தான்" என்க

தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று அறியாது சமைந்திருந்தான் மகேந்திரன்.

"எங்க மேல அம்மா ரொம்ப பாசமா, ரொம்ப அக்கறையா இருந்தாங்க ஆனா நாம.." இடவலமாக தலையசைத்து

"நிச்சயமா நாம பாசமா இருந்தாலும் அக்கறை காட்டவேயில்லை. அவங்க நம்ம கூட இருக்கும் வரை அவங்களை நாம கவனிக்கவே இல்லை.

கவனிச்சிருந்தா அவங்க நோய்ல இருந்தத கண்டுபிடிச்சிருக்கலாம்ல? நமக்கு கடைசி வரை தெரியாம தானே இருந்தது. வலின்னு சொன்னா கூட பாட்டி ஏதாவது சொல்லுவாங்கன்னு தான் சொல்லி இருக்கமாட்டாங்க.

அன்னைக்கு கூட அண்ணா உங்களுக்கு கால் பண்ண வரவும் பாட்டி அப்படி தான் பேசி வெச்சாங்க.

பாட்டி அவங்க மேல பாசமா தான் இருக்காங்க ஆனா அதை வெளியில காட்டிக்க மாட்டாங்கன்னு ஒருநாள் அம்மா என்கிட்ட சொன்னாங்க ஆனா அது பொய். பாட்டி மேல எனக்கு பிழையான அபிப்பிராயம் வரும்னு தான் அப்படி சொல்லி இருக்காங்கன்னு கொஞ்சம் வளர்ந்ததும் எனக்கு புரிஞ்சது. இப்போ அம்மா இறந்த பிறகு அது கன்ஃபர்ம் பண்ணிட்டேன்.

பாசமா இருந்தவங்கன்னா அம்மா இறந்ததுக்கு ஒருநாள், ஒரு பொழுதாவதா வருந்தாம இருப்பாங்க? ஏதோ வந்தா, வாழ்ந்தா, போய்ட்டாங்குற மைண்ட் செட் தான் பாட்டிக்கு"

நிறுத்தாமல் படபடவென பொரிந்து கொண்டிருந்தாள்.

"தாத்தா இருக்கும் வரை அம்மாவ ஏதாவது சொல்லிட்டே தானே இருந்தாங்க. சமைக்குறதுல இருந்து நைட் ரொம்ப நேரமா வெளிய லைட் போட்டு இருந்தா கூட அம்மாவ தானே திட்டுவாங்க?"

என்றவள்
அடுத்து அவனே எதிர்பாராத விதத்தில்,
"ஏன்ப்பா உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க அம்மா சமையல் டேஸ்ட்டா இருக்காதா?" என்றாள்.

"இல்லையேடா நல்லா தான் சமைப்பா. அவ கல்யாணம் பண்ணி இங்க வந்ததுல இருந்து கடைசி வரை நம்ம கடைகள்ல வேலைக்கு இருந்தவங்களுக்கு கூட அவ தானே சமைச்சா" என்றான் பட்டென்று.

"ம்ம்ம்.. ஆனா இதை நீங்க ஒரு நாளாவது அம்மா கிட்ட சொல்லி இருக்கீங்களாப்பா?"

மகளின் கேள்வியில் அறை வாங்கிய உணர்வு ஏற்பட

"இல்லைடா சொன்னதே இல்லை, சொல்ல தோனவே இல்லை" குரல் குன்றிவிட்டது அவனுக்கு.

"அதை சொல்லல்லை ஆனா நீங்க, தாத்தா, பாட்டின்னு யாரும் ஏதாவது கோவம், எரிச்சல் வந்தா சட்டுன்னு உங்க கோவத்த அவங்க சமையல் மேல தானே கொட்டுவீங்க? மனசாட்சியே இல்லாம சாப்பாட்ட குறை சொல்லுவீங்க?

இப்போ நாம சாப்பிடறது அம்மா சமையல் அளவுக்கு இல்லை ஆனா அமைதியா தான் இருக்காங்க ஏன்? ஏதாவது சொல்லி சமையல் பண்ற ஆண்ட்டி கிளம்பி போய்ட்டா அடுத்த வேள பசில தான் இருக்கணும் இல்லைன்னா பாட்டி தான் சமைக்கணும். அந்த பயம்" என்றவள் தொடர்ந்து,

"ஒருநாள் அம்மா கிட்ட கேட்டேன், நாங்கெல்லாம் ஏதாவது கோவம் வந்தா உங்கள கோவமா பேசிடுறோம் நீங்க அமைதியா போய்டுறீங்களேம்மா உங்களுக்கு எங்க மேல வருத்தம் இல்லையான்னு.

அதுக்கு உரிமையும், எதிர்வினையும் இருக்குற இடத்துல தானே நம்ம உணர்வுகள காட்ட முடியும்னு மட்டும் தான் சொன்னாங்க. அதோட முழு அர்த்தம் இப்போ தான் புரியுதுப்பா.

அவங்களோட உணர்வுகள நாம புரிஞ்சிக்கவே இல்லைன்னோ புரிஞ்சிக்குற அளவு நாம இல்லைன்னோ தான் சொல்லி இருக்காங்க" என்றவள் வெடித்து அழ ஆரம்பித்தாள்.

சொற்ப சந்தர்ப்பங்களில் அவள் அழுத போதும், சில நேரங்களில் கவலையாக இருந்த போதும் அவளைக் கண்டித்தது மனதில் வந்து போனது. கூடவே அவள் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வும்.

அன்று..
"என்னோட சிவப்பு சட்டை எங்க மீனா?" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வர அவள் கட்டிலில் சாய்ந்திருந்தவள் எழுந்து,

"நேற்று துவைக்க போட்டது தானேங்க? இன்னைக்கு துவைச்சு காய்ஞ்சிருக்கு இன்னும் மடிக்கல்லைங்க" என்றவள் குவித்து வைத்திருந்த துணிகளில் தேடி எடுத்துக் கொண்டு இஸ்திரி போடத் தயாராக,

"ஒன்னோ ஏதாவது புத்தகம் பார்க்கறது இல்லைன்னா இப்படி படுக்குறது. உனக்கு வேற வேலையே இல்லை. மடிக்க இவ்வளவு துணி இருக்குல்ல, இப்போ இந்த டைம்ல படுத்து தூங்கின நேரத்துல அதை மடிச்சிருக்கலாம்ல?" என்று கேட்டான்.

அதற்கு பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். அன்று அவள் அந்த மதியப் பொழுது படித்திருந்ததே உடல் உபாதையால் தானோ என்று இப்போது சிந்திக்கலானான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள்,

"நானும் அண்ணாவும் எதுவும் தப்பு பண்ணினா அம்மா கண்டிப்பாங்க, அட்வைஸ் பண்ணுவாங்க ஆனா பாட்டி.." என்றவள் நிறுத்தி தந்தை முகம் பார்த்து,

"பாட்டி, பாட்டின்னு அவங்கள குறை சொல்றதா நினைக்காதீங்கப்பா. நீங்க இல்லாத நேரங்கள்ல வீட்டுல என்னெல்லாம் நடக்கும்னு உங்களுக்கு தெரியாதுல்ல"
என்று விட்டுத் தொடர்ந்தாள்.

"அம்மா எங்களை ஏதாவது சொன்னா பாட்டி அம்மா கூட சண்டைக்கு போவாங்க, அவங்களை ஜாடை பேசித் தான் அம்மா எங்களுக்கு அட்வைஸ் பண்றாங்கன்னு ஒரு நினைப்பு பாட்டிக்கு. பாட்டி அப்படி சண்டை போடும் போது அம்மா மேல தான் தப்புன்னு நாங்க நினைச்சு அவங்கள பேச்ச கண்டுக்க மாட்டோம். சில நேரம் கோபமும் வரும். நான் கொஞ்சம் அம்மா பேச்ச கேட்டாலும் அண்ணா அப்படி இல்லை. அதனால ஒரு கட்டத்துக்கு மேல எங்களை கண்டிக்க கூட முடியாது அவங்களால"
என்று கூறியவள் மௌனமாக

'இதுவே நான் அவ பேசுறத காது கொடுத்து கேட்டு கவனிச்சு இருந்தா பிள்ளைகள பற்றி என்கிட்ட சொல்லி இருப்பா, இவங்க தப்பு பண்ணும் போது கண்டிச்சு இவங்கள இன்னும் கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்' என்றே தோன்றியது மகேந்திரனுக்கு.

"அம்மா இல்லாமலே போனதுக்கு அப்புறம்
இப்போ எனக்கு இருக்குற மெச்சூரிட்டி அப்போ இல்லை. அவங்க சொன்னது எல்லாம் இப்போ நினைச்சு என்னை நானே செதுக்கி வழி நடத்திக்கிறேன்.

ஆனா அம்மா இருக்கும் போது அவங்க கிட்ட இன்னும் கொஞ்சம் நெருக்கமா இருந்து இருக்கலாம்னு ஒவ்வொரு நிமிஷமும் தோனுது"
என்று இருட்டை வெறித்துப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் தன் நிலை மாறாமல்,

"அம்மா கடைசியா என்ன சொன்னாங்கன்னு தெரியுமாப்பா?" என்றாள் கேள்வியாக. தந்தையிடமிருந்து பதில் வராது என்று தெரிந்து அன்று நடந்ததை கூறினாள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் கட்ட சிகிச்சைகள் முடிந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு நோயாளர் பிரிவுக்கு (General ward) மாற்றப்பட்டாள். மயக்கமும் தூக்கமும் கலந்த நிலையில் நிச்சிந்தையாக விழி மூடியே இருந்து அதிகாலை ஆறு மணியளவில் கண் விழித்தாள்.

அருகில் இருந்த மகளைக் கண்டு வலியுடன் கூடிய சன்னமாக ஒரு புன்னகை சிந்த சுனிதாவுக்கு அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது. அவள் அறிந்து மீனா இப்படி நோய் நொடியில் படுத்ததே இல்லையே!

"அம்மா உங்களுக்கு எதுவும் ஆகாதில்ல? சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு போய்டலாம்ல?" என்றாள்.

மறுப்பாக தலையசைத்து,
"இ.. இல்லை சுனிதா என் மு.. முடிவு தான் இதுன்னு தோனுது" என்று திக்கி திக்கிப் பேச,

"உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா. இன்னும் நிறைய வருஷம் வாழணும் நீங்க"

"இல்.. லைடா இது போதும். நான் வாழ்.. வாழ்ந்தது போது..ம்"

"இப்படி சொல்லாதீங்க ம்மா
எனக்கு பயமா இருக்கு"

"நீ தை.. தைரியமா இரு..க்கணும்டா. உன்.. வயசுல என..க்கு துணையா, ஆதரவா யாருமே இ.. இல்லை. ஆனா.. என்னோட கடைசி நாள் வரை.. நா..ன் உங்க கூட துணையா இரு..ந்தேன். இனிமேல் நீயும் அண்ணாவும் உங்கள பார்த்துக்குவீங்கன்னு நம்புறேன்"

"இல்லம்மா, நீங்க சீக்கிரம் குணமாகி வாங்க. நாங்க உங்களை பார்த்துக்குறோம்"

"வேணாம்டா. என..க்கு இது போதும். இத்..தனை நாள் ஓ..டியாடி வே லை செய்து.. ட்டு இப்போ நோய்ல விழு..ந்து உங்க எல்லா..ருக்கும் கஷ்டம் கொ..கொடுக்காம போய்டுறேன். என..க்கு இந்த உலக வாழ்..க்கையே சலிச்சி..ருச்சு சுனிதா. அம்..மாவ போக விடுடா"

என்றவள், அவளை அழைத்து குனிய வைத்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

அடுத்த சில மணிநேரங்களில் அவளின் உயிர் பிரிந்திருந்தது.

தாயின் கடைசி நிமிடங்களை கூறி முடித்தவள் அழுதழுது ஓய்ந்து இருந்தாள்.
மௌனமே அந்த இடத்தில் நிறைந்திருந்தது.



உன் தாலி ஏற்று

உன்னோடு வந்தவள்
என்னை
உனக்கானவளாய்
எப்போது தான்
உணர்வாய்!


உன்
ஏவல் விலக்கல்கள்
தாரக மந்திரம்
உன் தாரமாகிய எனக்கு..
ஆனால்
நான் பேச
நீ உன்னிப்பாய்
கேட்டதென்று
எதுவுமே இல்லை!!

சாயும் தோளாய்,
தாங்கும் மடியாய்,
கோதும் விரலாய்
நீ தேவையில்லை
ஆனால்
சோர்வும், வலியும்,
ஏக்கமும், கவலையும்
எனக்குள்
இருக்கும்
என சற்றேனும்
புரிந்து கொள்
போதும்!!

உன்
வேலைப்பளு
இடையே
என்
தனிமை போக்கியாக
நீ வேண்டாம்..
எனினும்
என்
பொழுதுபோக்கை
துச்சமாக மதித்து
நீ
ஏளனம் செய்ய
வலிக்கிறது
எனக்கு!!

ஒரு சொல் வெல்லும்,
ஒரு சொல் கொல்லும்
எனக்கு வெல்லும் சொல்
தேவையில்லை
கொல்லும் சொல்லை
என் முன்
உதிர்க்காமல்
இருந்தாலே போதும்..
கோப முகம் காட்டி
நீ உதிர்க்கும்
ஓர் சொல்
என்னோடு
கை கோர்த்து
கூடவே
வருகிறது
நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடமும்
வழித்துணையாக!!

அத்தனை
வலிகளை
உள்ளுக்குள்
வைத்து
மென்புன்னகையுடன்
வரவேற்கும்
என் மீது
வெளியே உள்ள
சங்கடங்கள்
அனைத்தையும்
பொழிந்து
விட்டு நகரும்
தருணமதில்
பொய்த்துப் போகிறது

நம் தாம்பத்தியம்!!

கையில் இருந்த நாட்குறிப்பில் முத்து முத்தான கையெழுத்தில் இருந்த வரிகளை மீண்டும் ஒரு முறை வாசித்தவனுக்கு மனதில் பாரம் ஏறிக் கொண்டது.

இருந்தும் என்ன செய்ய கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போலல்லவா இந்த வருத்தமும் கவலையும்?
சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் மீண்டும் மீனாவின் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுனிதா அந்த நாட்குறிப்பை கண்டெடுத்து தந்தையிடம் கொடுத்திருந்தாள்.

"நீ சலிப்பான வலி நிறைஞ்ச வாழ்க்கைய தான் என் கூட வாழ்ந்து இருக்க ஆனா இங்க யாருக்கும் நீ எந்த குறையும் வைக்கல்லன்னு நீ இல்லாத இந்த கொஞ்ச நாள்ல புரிஞ்சுக்கிட்டேன் மீனா. இப்போ ஒன்னுமே முழுமை இல்லாம இருக்கும் போது தான் உன் அருமை புரியுது. அதுவும் நம்ம பொண்ணு அன்னைக்கு எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கும் போது செருப்படி வாங்கினது போல இருந்தது எனக்கு.

உன் கிட்ட மனசார மன்னிப்பு கேட்குறேன். இங்க கிடைக்காத நிம்மதியும் சந்தோஷமும் அங்க உனக்கு கிடைக்கட்டும்"
என்று அவளை நினைத்து தனக்கு தானே பேசிக் கொண்டான் மகேந்திரன்.

உறவுகள் நம்மோடு இருக்கும் போது அலட்சியம் செய்வதும் அவர்களின் பிரிவில் அவர்களின் அருமை புரிவதும் நானே மனித இயல்பு; அதில் இந்த மகேந்திரன் போன்ற கனவான்கள், கணவர்கள் என்றும்
முதன்மையானவர்களே!

உறவுகளும் நட்புகளையும் மதிப்போம் கொண்டாடுவோம் அவர்கள் நம்முடன் இருக்கும் போதே!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
 
Last edited:

NNK34

Moderator
அக்கா.. இப்படி அழ வச்சுடீங்களே😭😭.. மனதை தொட்டு விட்டது அக்கா
 

S. Sivagnanalakshmi

Well-known member
அருமையான கதைடா. மனைவியின் மனதை அழகக சொல்லியிருக்கீங்க சொல்லியிருக்கீங்கடா. கணவன் எப்படி இருக்கக்கூடாது என்றும் அருமை. கண்ணீர் வந்து விட்டது. கணவன் பெயர் மட்டும் குழப்பம் சண்முகம் மனோகரன் என்று வருகிறது அதை மட்டும் கரெக்ட் பண்ணிடுங்கடா. கவிதை செம. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ❤❤❤
 

Fa.Shafana

Moderator
அருமையான கதைடா. மனைவியின் மனதை அழகக சொல்லியிருக்கீங்க சொல்லியிருக்கீங்கடா. கணவன் எப்படி இருக்கக்கூடாது என்றும் அருமை. கண்ணீர் வந்து விட்டது. கணவன் பெயர் மட்டும் குழப்பம் சண்முகம் மனோகரன் என்று வருகிறது அதை மட்டும் கரெக்ட் பண்ணிடுங்கடா. கவிதை செம. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ❤❤❤
ரொம்ப ரொம்ப நன்றி சகி. மனோகரன் பெயரை மாற்றினேன் அதில் வந்த குழப்பம் நான் கவனிக்கல்லை. சரி பண்ணிடறேன் கவனிச்சு சொன்னதுக்கு நன்றி சகி
 

Manju sharvesh

New member
பாதி இல்லத்தரசியோட நிலைமை இது தான்😔😔😔. மீனாவை நினைச்சா வேதனை தான்🥺🥺🥺.ஆனால் அவுங்க உயிரோட இருந்து படுக்கையில விழுந்திருந்தால் வார்த்தையால வத்ச்சிருப்பாங்க 😔😔😔.ரொம்ப ஒரு மாதிரி இருக்கு மீனாவோட முடிவு😭😭😭
 

Fa.Shafana

Moderator
ணபாதி இல்லத்தரசியோட நிலைமை இது தான்😔😔😔. மீனாவை நினைச்சா வேதனை தான்🥺🥺🥺.ஆனால் அவுங்க உயிரோட இருந்து படுக்கையில விழுந்திருந்தால் வார்த்தையால வத்ச்சிருப்பாங்க 😔😔😔.ரொம்ப ஒரு மாதிரி இருக்கு மீனாவோட முடிவு😭😭😭
நன்றி நன்றி சகோதரி. அவள் பட்ட துன்பம் போதுமே அதான் இப்படி ஒரு முடிவை எழுதினேன்.
 
Top