எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 12

NNK-41

Moderator

அகம் 12​

டைரி​

விருந்தினர் அறை மிகவும் அழகாக இருந்தது. சுவர் முழுதும் நவீன ஓவியங்கள் ஒய்யாரமிட்டிருந்தன. ஏனோ அவை என்னை கவரவில்லை. ரசிக்கும் நிலையிலும் நானில்லை. தனிமையில் இனிமை காண முடியுமா என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக முடியும் என்றே சொல்வேன். இத்தனை வருடங்களாக தனிமை எனக்கு இனிமையும் அமைதியையும் கொடுத்திருந்தது.​

நான் என் உலகம் என்றிருந்த என்னிடம் நட்புகரம் நீட்டி நுழைந்த இலக்கியாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவளை மட்டும் பிடித்திருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது என்பதுதான் உண்மை. கூடவே அவளின் அண்ணனையும் பிடித்திருந்தமையால் வந்த துன்பத்தை எண்ணி என்னை சரிபடுத்த எனக்கு தனிமை தேவைபட்டது.​

உனக்கு அந்த தனிமையை கொடுப்பேனா என்று கங்கணம் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர் இலக்கியாவும் வாசுவும்.​

“சொல்லு மலர்… என் பேர்த்டே அன்னைக்கி என்ன நடந்துச்சு? யாராச்சும் தப்பா பேசினாங்களா? இல்ல வேற ஏதாச்சும் நடந்ததா?” இலக்கியா கேட்கையில் சற்று தடுமாறி போனேன். ஞாபகம் வைத்து கேட்பாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஆனாலும் அவள் அக்கறையில் நனைந்தேன்.​

“என்ன மலர் சும்மா இருக்கீங்க? இன்னேரம் போற வழியில என்னை போல வாத்து நடந்துச்சு, இலக்கியா போல கோழி நடந்துச்சு அப்புறம் அண்ணன் போல சிங்கம் நடந்துச்சினு சொல்லியிருக்க வேண்டாமா!” நடுவில் வாசு நுழைந்து கலாய்க்க…​

“அச்சச்சோ அப்படி சொன்னா இலக்கியா என்னை அடிக்க வந்திருவாளே!” வாசு கொடுத்த வாய்ப்பை கப்பென பற்றிக்கொண்டேன்.​

“நான் ஏன்டி உன்னை அடிக்கப்போறேன்? ஹாஸ்டல்ல வந்து உன்னை கூப்பிட்டப்போ நீ மறுக்கும்போதே ரெண்டு கொடுத்திருக்கனும்… இருந்தாலும் நல்ல பிள்ளையா நான் அடங்கி இருக்கல?” விளையாட்டாக சொன்னாலும் அதில் இருந்த ஆதங்கம் வாசு புரிந்துக்கொண்டான். ஆனால் என்னால்தான் சட்டென புரிந்துக்கொள்ள முடியவில்லை.​

“உன் சின்ன அண்ணன் சொல்றது போல சொன்னா நாங்க என்ன மிருகங்களா அப்படினு சொல்லி அடிக்க வர மாட்டியா? இல்லனா சொல்லு அப்படியே சொல்லிடுறேன்” என்று நான் சொல்ல​

“ஏது நான் கோழி… இந்த குரங்கு வாத்தா?” இலக்கியா வாசுவை கலாய்க்க​

“நான் வாத்தோ இல்ல குரங்காகவோ இருந்துட்டு போறேன்… ஏன்னா நான் கமல் போல மனிதன் பாதி மிருகம் பாதி. இரண்டும் சேர்ந்த கலவை நான். ஆனா அந்த சிங்கத்தை மட்டும் விட்டுட்டீயே தங்கச்சி… என் ஆசை கொட்டாங்குச்சி..” வாசு வம்பிழுக்க… ஆதித்யா பெயர் வந்த்தும் எனக்கு ஆத்திரம் வந்தது.​

“ஆமாம் சாதாரண சிங்கம் இல்ல நாக்குல சாட்டையை வச்சி சுத்திக்கிட்டு இருக்கிற சிங்கம்” என்றுவிட்டேன். அறையில் எந்த சத்தமும் இல்லாமல் போக… அப்பொழுதுதான் அவசரத்தில் நான் விட்ட வார்த்தைகள் ஞாபகத்துக்கு வர பயத்துடன் இருவரையும் பார்த்தேன்.​

அடுத்த நொடி அந்த அறையே அதிரும்படி சிரித்தனர் இருவரும். ஹப்பாடா இப்பொழுதுதான் என்னால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அவர்களுடன் இணைந்துக்கொண்டேன்.​

“பரவாயில்லையே என் அண்ணனை ஒரு நாளிலேயே நல்லா புரிஞ்சிக்கிட்டீயே… அண்ணன் இப்படி இருக்கிறதுக்கு காரணம் என் தாத்தா பாட்டியோட செல்லம்தான். அவன் எது செய்தாலும் அதுதான் சரினு சொல்லி வளர்த்துட்டாங்க. எங்க அம்மா அப்பாவையும் சேர்த்து கெடுத்து வச்சிட்டாங்க. இப்போ தாத்தா பாட்டி போய் சேர்ந்துட்டாங்க. அப்பா அம்மாவுக்கு அண்ணன் சொல்தான் மந்திரம்னு ஆகிட்டாங்க.​

“அப்போ நீங்க?” என்று நான் கேட்க​

“ஆடுரா ராமா கேஸ்தான்” என்று வாசு சொல்ல​

“அடடா உங்களை இலக்கியா குரங்குனு சொன்னதுல தப்பில்ல போலிருக்கே!” என்று நான் சொன்னதும் மறுபடியும் அந்த அறை முழுதும் சிரிப்பலை.​

அதிசயமாக தனிமை விரும்பியான எனக்கு இருவரின் அன்பும் அருகாமையும் சந்தோஷம் கொடுத்தது. இதுவரை அனுபவித்திராத அன்பை இலக்கியாவின் அக்கறையிலும், வாசுவின் தோழமையிலும் எனக்கு கிட்டியது என்றே சொல்ல வேண்டும்.​

“என்னை குரங்கென்று சொன்னதில் எனக்கு நோ அப்ஜெக்ஷன். நம்ம மூதாதையர் அனைவரும் அந்த வெர்ஷனை தாண்டி வந்ததால் நான் பெருந்தன்மையாக உண்மையை ஒப்புக்கொள்கிறேன்!!” என்ற வாசு என்னிடம் வந்து ஹை ஃபைவ் கொடுத்தான்.​

கையை அடித்துக்கொண்டிருக்கையில் கதவு திறந்து ஆதித்யா உள்ளே நுழைய… இணைந்திருந்த எங்கள் கரங்களை அழுந்த பார்த்தவன்​

“வாட் இஸ் திஸ்? இட்ஸ் கெட்டிங் லேட் போய் படுங்க!!” என்று இருவரையும் துரத்த… காற்றாய் மறைந்து போயினர் இருவரும்.​

ச்சே இவனை பார்க்க கூடாது என்று நினைத்தால் கண்முன் வந்து நிற்கிறானே. அவனும் அவன் பார்வையும். கோபத்திலும் அழகாய் இருந்து தொலைக்கிறான். அவனை பார்க்க கூடாது பேசக்கூடாது என்று எனக்குள்ளே எத்தனை தடவை ஜெபம் செய்து கொண்டிருந்தேன்.​

“ஹவ் ஆர் யூ?” கேட்டு விட்டான். என் ஜெபம் பலிக்கவில்லை. பதில் சொல்லியாக வேண்டிய நிலமை எனது. அவனை நிமிர்ந்து பார்த்தேன்… என்னைதான் ஆராய்ந்து கொண்டிருந்தான்.​

“ம்ம்.. ஓகே”​

“அதான் தெரியுதே நீ ஒகேனு. கீழே வரைக்கும் கேட்குது உங்க சிரிப்பு சத்தம்!” என்றான் நக்கலாக.​

சிரிப்பது குற்றமா? இந்த கேள்வியை இவனிடம் கேட்டு பதிலுக்கு அவன் என்னை காயப்படுத்தும்படி பேசிவிட்டால்… வேண்டாம் பேசக்கூடாது. என் வீட்டில் இருப்பதுபோல் வாயிருந்தும் ஊமையாகவும் காதிருந்து செவிடாக இருந்துக்கொள்ள வேண்டியதுதான்.​

“வாசுகிட்ட மட்டும் வாய் கிழிய பேச முடியுது!! என்கிட்ட மட்டும் ஏன் இந்த ஊமை நாடகம்?” சுதி ஏறிய அவன் குரலில் மனம் திக்கென்றது. கூடாது! கூடாது! இவன்முன் பயத்தை காட்டக்கூடாது!! என்ன செய்வதென்று தெரியாமல் கட்டிலின் அருகே இருந்த பழத்தை எடுத்து வெட்டினேன்.​

“அவன் படிப்பை முடிச்சிட்டு இப்போதான் பிஸ்னஸ் செய்ய வந்திருக்கான்..”. இதை எதுக்கு எங்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கான். பழத்தை வெட்டி அவனிடம் ஒரு துன்டை நீட்டினேன்.​

என்னையும் பழத்தையும் ஒரு பார்வை பார்த்தவன். வேண்டாமென தலையாட்டினான். அடுத்து எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.​

“எப்போ இங்கிருந்து கிளம்புவ?”​

ஓ… இதுக்குதானா இந்த ஆர்பாட்டம். அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தேன்.​

“இப்பொழுதுகூட நான் போக தயாரா இருக்கேன். உங்கம்மாவை கூப்பிடுங்க. சொல்லிட்டு போயிடுறேன். அவங்கதான் என்னை கூட்டிட்டு வந்தாங்க. அவங்ககிட்ட சொல்லிட்டு போறதுதான் சரி” என்றேன்.​

“என்ன புதுசா டிராமா போடுறீயா? எப்போ கிளம்புவ என்றுதானே கேட்டேன். இப்பொழுதே போ என்றா சொன்னேன்?”.​

நீ கேட்டதற்கு இதான்டா அர்த்தம். மனம் கூவியது. ஆனால் நான் வாய் திறக்கவில்லை. மன அழுத்தமாகியது.​

“வாசுகிட்ட நெருங்க முயற்சிக்காதே! என்னை ரசிக்கிறேன்னு சொல்லி மூன்று நாள்கூட முடியல… அதுக்குள்ள வாசுகிட்ட சிரிச்சி வழிஞ்சிட்டு கைதட்டி நிற்கிற!!” வார்த்தைகளை அமிலமாய் கொட்டினான்.​

கடவுளே!! வாசுவை போய்… ச்சே!! ஆண்களை வெறுத்த எனக்கு வரப்பிரசாதமாய் கிடைத்த தோழன் அல்லவா வாசு. எப்படி இவனால் அப்படி நினைக்க முடிகிறது? ஏன் இவன் இப்படி தேளாய் கொட்டுகிறான்? ஏன் என் மனதுக்கு இவனை பிடித்து தொலைத்தது? அவனை ரசித்தது குத்தமா? இல்ல அதை ரகசியமாய் வைக்காமல் வாய்விட்டு சொன்னது குத்தமா?​

மனதின் கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் மன அழுத்தம் அதிகமாகியது. உடல் விரைக்க அமர்ந்திருந்தேன். அழ தோன்றவில்லை.​

“நீ அழகிதான் ஒத்துக்குறேன்.. ஆனா இந்த அழகை காட்டி என்னையும் என் தம்பியையும் வளைச்சி…. ஏய்!! ஏய்! ஏய்!!” பேச்சை பாதியில் விட்டு அலறிக்கொண்டு என்னை நெருங்கினான். ஏன் என்று நான் உணரும் முன்னமே என் கையிலிருந்த கத்தியை பிடுங்கி எரிந்திருந்தான்.​

எனது இடது கையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஓ… பழம் வெட்டுகிறேன் என்று கையை வெட்டிக்கொண்டேன் போல. ஏன் வலிக்கவில்லை? ஒரு உணர்வும் இல்லையே? கண்ணில் கண்ணீரும் இல்லை… அப்படியென்றால் நான் பழைய நிலைக்கு சென்று விட்டேனா? ஆட்டிசம் என்னை வென்றுவிட்டதா?​

“இனியாழ்!! இனியாழ்!! இங்கே பார்… கையெல்லாம் ரத்தம்… ஏன் இப்படி இருக்க? வலி இல்லையா உனக்கு? ரத்தம் வருது பார்!! வெய்ட் நான் ஃப்ர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்திட்டு வரேன்” என்றுவிட்டு ஓடினான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் சற்று அதிர்ந்து நின்றுவிட்டு… மறுகணம் எனக்கு மருந்திட்டான்.​

“எப்படி உன்னால ஒரு இடத்துல அப்படியே சிலைபோல் உட்கார முடிஞ்சது? வலிக்கலயா?” என்றவனின் கண்களில் வலி இருந்ததுபோல் தோன்றியது. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். தெரியவில்லை.​

நான் கட்டிலில் அமர்ந்திருக்க அவன் கீழே அமர்ந்து கைக்கு மருந்திட்டு கொண்டிருந்தான். அலைஅலையான அவன் கேசம்தான் முதலில் என் கண்ணில் பட்டது. லாவகமாக பணிபுரியும் அவன் விரல்களை பார்த்தேன். என் இரத்தம் அவன் கைகளில் திட்டு திட்டாய் பதிந்திருந்தது.​

மனதை காயப்படுத்தியவன் கைகாயத்துக்கு மருந்திட்டு கொண்டிருந்தான். ஆனால் என் மனம்… அதுக்கு மருந்திட இவனால் முடியுமா? எத்தனை கொடூரமான வார்த்தைகள்.​

“ஏன் இப்படி?” நேருக்கு நேராக என் கண்களை பார்த்து கேட்டான். நானும் அவன் கண்களை தீர்க்கமாக பார்த்தேன்.​

“நாளைக்கு காலையில் நான் கிளம்பிடுவேன். இப்பொழுதே கிளம்ப ஆசைதான் ஆனால் ஹாஸ்டலில் இந்த நேரத்தில உள்ளே விடமாட்டாங்க. ஹாஸ்டல விட்டா எனக்கு வேறு இடம் தெரியாது” என்றுவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டேன். தன்னிரக்கத்தில் கண்ணீர் வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாய் இருந்துக்கொண்டேன்.​

அவனே கொண்டுப்போய் விடுவதாக சொன்னான். மறுத்துவிட்டேன். ஏன் வலிக்க வில்லை ஏன் அழவில்லை என்று கேள்விகள் அவனிடமிருந்து வந்தது. எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. தலையணையை எடுத்து கீழே போட்டுவிட்டு படுத்துவிட்டேன். அவன் பதறியதுபோல் தோன்றியது. எனக்கு கவலை இல்லை.​

பலமுறை என்னை எழுந்து மேலே படுக்க சொன்னான். அட் லீஸ்ட் போர்வையாவது எடுத்துக்க சொன்னான். நான் மௌனமாக இருந்தேன். ஒரு பெருமூச்சுடன் இரத்தம் பதிந்த பஞ்சுகளை சுத்தம் செய்தான். கைகளை கழுவிக்கொண்டவன் அருகில் சோஃபாவில் படுத்துக்கொண்டான்.​

அதிர்ந்து போனேன். ஓர் ஆணுடன் ஒரே அறையில் படுப்பதா? என்னால் முடியவில்லை. எழுந்து அமர்ந்துக்கொண்டேன்.​

“இப்போ என்ன?” என்றான். அவனுடன் ஒரே அறையில் இருப்பது முடியாது என்றேன். எழுந்து வெளியே சென்றுவிட்டான். ஹப்பாடா நிம்மதியாக இருந்தது. கைவலிப்பது போல் தோன்ற மெதுவாக தடவி விட்டேன். மறுபடியும் அறைக்குள் நுழைந்தவன் கையில் பால் இருந்தது. ஏனென்று அவனை நான் பார்க்க… குடி என்றான். மறுத்தேன். குடிக்காவிட்டால் அவனும் அந்த அறையில் படுத்துவிடுவதாக சொன்னான்.​

குடித்தால் சென்று விடுவாயா என்று நான் கேட்க… புன்னகைத்தான். அந்த இரண்டு கன்னக்குழிகளை காட்டி. வாங்கி குடித்தேன். பால் இதமான சூட்டில் இருக்க… இது கூட இவனுக்கு தெரியுமா என்ற எண்ணத்துடன் குடித்து முடித்தேன். உறங்கிவிட்டேன்.​

மறுநாள் யாருடைய வற்புருத்தலும் என்னிடம் வேலை செய்யவில்லை. இவர்களின் அன்புக்குமுன் இவனின் பேச்சு தூசுதான். அல்லாடும் மனதை அடக்க தெரிந்துக்கொண்டேன். புதிதாக முளைத்த தன்மானம் என்னை விலக சொல்லியது.​

அதன்பின் என்னுடைய நாட்கள் தெளிந்த நீரோடையாய் சென்றன. ஆனால் எனது ஆட்டிசம் தலை தூக்க ஆரம்பித்திருந்தது. பல கேள்விகள் மனதில் உதித்த வண்ணம் இருந்தது. மறதியும் வர ஆரம்பித்திருந்தது. பாடங்கள் பல முறை படித்தப்பிறகுதான் புரிய ஆரம்பிக்கிறது. ஏன் என்று தெரியவில்லை.​

எப்பொழுதும்போல் இலக்கியா என்னுடன் இருப்பாள். சில சமயம் இலக்கியாவை அழைக்க வரும் பொழுது வாசுவை காண்பேன். வயிறு வலிக்க என்னை சிரிக்க வைத்துவிட்டுதான் போவான்.​

அத்தி பூத்தாற்போல் ஆதித்யாவும் வருவான் இலக்கியாவை அழைக்க. ஏதேதோ காரணம் சொல்லி ஹாஸ்டலுக்கு சென்று விடுவேன். நான் அவனை பார்ப்பதைவிட என்னை அவன் பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். ஏன்? தெரியவில்லை? அந்த நாட்களில் ஜாமத்தில் விழிப்பு வந்துவிடும். கூடவே அவனின் நினைவுகளும். ஒட்டுண்ணியாய் அவனின் சுடும் சொற்களும். அழுகை மட்டும் வரவில்லை. ஏன்? இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.​

காலேஜ் விடுமுறை ஆரம்பித்தது. வீட்டுக்கு செல்ல பேக் அப் செய்து கொண்டிருந்தேன். வீட்டுக்கு செல்ல பிடிக்கவில்லை. அம்மா அக்காவின் தேள்கொடுக்கு வார்த்தைகள்… அப்பா மற்றும் அண்ணனின் அன்னிய பார்வை… கசந்துவிட்டது. கடமைக்காக அப்பா அழைத்து நாளை வாடகை கார் புக் செய்து விட்டதாக சொன்னார். அதில் சற்றே நெகிழ்ந்தேன். போதும் இது போதும் எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது.​

அறைத்தோழி வந்து வார்டன் அழைப்பதாக சொல்லவும். என்னவாக இருக்கும் என்றுகூட நான் யோசிக்கவில்லை. மனம் வெறுமையாக இருந்தது. அங்கே இலக்கியாவின் அம்மா அமர்ந்திருந்தார். அவர் அருகில் அவன் ஆதித்யா. என் கண்கள் இலக்கியாவை தேடின.​

அன்று இலக்கியாவை பெண்பார்க்க வருகிறார்களாம். அதற்கு என்னை அழைத்துபோக வந்திருந்தார். வாவ்! இலக்கியாவுக்கு கல்யாணம் நடக்கப்போகிறதா… சந்தோஷத்துடன் வாழ்த்தினேன். நேராக அவளிடமே வாழ்த்தை கூற அழைத்தார். எனக்குள் தயக்கம். அதே தயக்கத்துடன் அப்பா நாளை என்னை அழைத்து போக வருவதை பற்றி சொன்னேன்.​

மசிந்து விடுவாரா இலக்கியாவின் தாயார்… இலக்கியாவிடம் இருக்கும் பிடிவாதம் இவரிடமிருந்துதான் வந்திருக்கனும் என்று நினைத்துக்கொண்டேன். சட்டென வார்டனிடமிருந்து அப்பாவின் ஃபோன் நம்பரை வாங்கியவர் உடனே அழைத்தும் விட்டார்.​

ஐயோ அப்பா என்ன சொல்லுவாரோ? ஊரில் இருக்கிறவன் அத்தனை பேரும் என்னை மட்டும்தான் பார்ப்பாங்க… இல்ல இல்ல நாந்தான் அவங்களை பார்க்க வைப்பேன் என்று சொல்லுவாரே… இப்போ இவங்ககிட்ட என்ன சொல்லி வைக்கப்போறாரோ… என்ற தவிப்புடன் என் விரலை நான் கடித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க… அவன்… ஆதித்யா என் கண்ணில் விழுந்தான். அவன் என்னைதான் பார்த்து கொண்டிருந்தான்.​

மொழுமொழு கன்னம் இப்பொழுது தாடியால் மறைக்கப்பட்டிருந்தது. நிலவின் அழகு இரவில் ஒளிர்வதை போல் அந்த தாடி மேலும் அவனை அழகனாக காட்டியது. ச்சே! இவன் என்னை கேவலமாக பேசியவன். இவனை ரசிக்க கூடாது என்ற எண்ணம் வந்ததும் இலக்கியாவின் அம்மாவை பார்த்தேன்.​

என்ன சொன்னாரோ தெரியவில்லை அப்பா சம்மதித்துவிட்டாராம். எனக்கு அதிர்ச்சி. விட்டது தொல்லை என்று நினைத்துவிட்டாரோ என்று நான் நினைத்திருக்க… பேசு என்றார் இலக்கியாவின் அம்மா. என்னவென்று நான் கேட்க… ஸ்பீக்கரில் போட்டிருக்கேன் அப்பாவிடம் பேசு என்றார்.​

ஐயோ இவர்கள்முன் அப்பா என்னை கேவலமாக பேசிவிடுவாரோ என்ற எண்ணத்துடன் தயங்கி பேச… என் எண்ணத்தை நனவாக்கினார் அப்பா. படிக்க அனுப்பினால் ஊர் சுத்துகிறாயா என்ற வசையில் ஆரம்பித்து ஏதோ ஒரு பெண்தோழியின் அம்மா பேசியதால் பெருமனதுடன் சம்மதித்து விட்டதாக சொல்லி வைத்துவிட்டார்.​

அனைவர்முன் சிறுத்து போனேன் நான். ஆதித்யா என்மேல் வைத்த குற்றசாற்றுக்கு தீனி போட்டு விட்டார் அப்பா என்ற எண்ணம் வந்து தின்றது என்னை. கடலில் மூழ்குவதுபோல் மனம் என்னை அழுத்தியது. அருகில் இருக்கும் நாற்காலியை இறுக பற்றிக்கொண்டேன்.​

“ம்மா கிளம்பலாம் நேரமாகுது மாப்பிள்ளை வீட்டார் வரதுக்கு முன்ன நமக்கு வேலை இருக்கு. இலக்கியா வேறு இனியாழுக்காக காத்திருக்கா” என்ற ஆதித்யா காருக்கு செல்ல… நான் என்னை சமாளித்துக்கொண்டு லக்கேஜை எடுத்துக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தேன்.​

என் வாழ்க்கை என் கையில் இல்லை. சொந்த விருப்புக்கு இடமில்லை. ஆட்டுவித்தார் பலர் ஆடுகின்றேன் நான். பொம்மலாட்டமாய் என் வாழ்க்கை.​

 

kalai karthi

Well-known member
இனியாழ் குழந்தை அவள். இலக்கியா வாசு செம. அம்மா சூப்பர். ஆதித்யா 😡😡😡
 

NNK-41

Moderator
இனியாழ் குழந்தை அவள். இலக்கியா வாசு செம. அம்மா சூப்பர். ஆதித்யா 😡😡😡
அந்த குழந்தையே அவனை ஆட வச்சிருச்சி... நன்றி டியர்🥰 ஆதி மேல இம்புட்டு கோபம் வேண்டாமே... பாவம்
 

NNK-41

Moderator
என்னலாம் பேசுறான் இவன்!!... லூசு பையன்!!... எப்பதான் அவளை புரிஞ்சுப்பாங்களோ???
அதான் டியர்... ஆனாலும் அவன் நல்லவந்தான்... என்ன அவ குழந்தைனா இவன் ஈகோ பிடிச்ச கழுதை;)
 
Top