எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️ - 15

NNK-34

Moderator
ஆதவன் 15

ரிசெப்ஷன் ஏற்பாடுகள் முழுவதையும் கவனித்துக் கொள்ளவே ஒரு பெரிய குழுவை நியமித்திருந்தார் தேவராஜ்.

தனது மகனை பற்றி அவதூறாக பேசியவர்கள், மற்றும் அவனது திருமண வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று சொன்னவர்கள் அத்தனை பேரின் வாயையும் அடைத்து, அவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என்பதற்காகவே சொந்தங்கள், தொழில் முறை நண்பர்கள் என தனக்கு மற்றும் ஆதித்துக்கு தெரிந்தவர்கள் ஒருவரை விடாமல் அனைவரையும் அவர் ரிசெப்ஷனுக்கு அழைத்திருந்ததால், சினிமா பிரபலங்கள் நடிகர் நடிகைகள் என ஏராளமானோர் வருகை தருவதுமாக போவதுமாக இருக்க, பல கோடிகளை விழுங்கிய ஆடம்பர அலங்காரங்களாலும் வான வேடிக்கைகளாலும் அந்த மண்டபமே ஒரு பக்கம் திணற, மறுபக்கம் ஆதித்தின் பள்ளி, கல்லூரி கால நெருங்கிய நண்பர்கள் மற்றும் கசின்ஸ் சேர்ந்து கொண்டு புதுமண தம்பதிகளை கேலி செய்ய, என ரிசெப்ஷன் களை கட்டியது.

@@@@

"நேரம் ஆகிட்டே இருக்கு இன்னும் கிளம்பாம துணி மடிச்சிட்டு இருக்க, இதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம் முதல்ல கிளம்பு வேணி" என்று தன் சட்டைக்கு பொத்தானை போட்டு கொண்டே தன்னிடம் வினவிய தனது கணவனை நிமிர்ந்து பார்த்த வேணி,

"ஏற்கனவே சொன்னது தான், நீங்க வேணும்ன்னா போய்ட்டு வாங்க நான் வரல" என்றவர் மீண்டும் தான் விட்ட பணியை தொடர்ந்தார்.

வேணியின் பிடிவாதத்தைக் கண்டு நெற்றியை தேய்த்த கேசவன்,

"இங்க பாரு வேணி ஆனாலும் உனக்கு இவ்வளவு விம்பு இருக்கக் கூடாது, சம்பந்தியும் சம்பந்திமாவும் அன்னைக்கு வந்து எவ்வளவு தன்மையா பேசிட்டு போனாங்க. அப்புறமும் ஏன் நீ பிடிவாதம் பிடிக்கிற? அவ்வளவு பெரிய ஆளுங்க அவங்களே அக்சப்ட் பண்ணிக்கிட்டு இறங்கி வராங்க, பொண்ணை பெத்தவங்க நாம கொடி பிடிக்கிறதுதுல அர்த்தமே இல்லை, தயவு செஞ்சு கிளம்பி வா, வர்ஷா கிட்ட நீ பேசக்கூட வேண்டாம். சபைக்காக போயிட்டு வந்துடுவோம், அவங்க அவ்வளவு வந்து கூப்பிட்டும் நாம போகலைன்னா அவங்கள அவமானப்படுத்துற மாதிரி ஆகிடும், நம்ம பொண்ணு வேற அங்க தான் வாழ்ந்துட்டு இருக்கா, இதனால அவ வாழ்க்கையில எதாவது பிரச்சனை வந்திட கூடாது, நம்ம பிள்ளைங்களுக்காக இறங்கி வர்றதுல தப்பே கிடையாது, எதையும் யோசிக்காம கிளம்பு வேணி" என்று கேசவன் துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் வீட்டின் கதவு தட்டப்பட எழுந்து சென்று கதவை திறந்த வேணி வாசலில் நின்றிருந்த நபரை பார்த்து, "யார்" என்று கேட்க, அந்த நபர் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு தான் வந்ததற்கான காரணத்தை கூறவும் தன் கணவரை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

@@@@@@

"நாங்களே உன் தாத்தா பாட்டிக்காக வேண்டா வெறுப்பா கிளம்பிட்டு இருக்கோம், நீ எங்கடி வர?" வழக்கத்தை விட கூடுதல் ஒப்பனையில் தயாராகி நின்ற தன் மகளை பார்த்து வினவினர் ஊர்மிளா.

"ஆதித்தோட ரிசெப்ஷனுக்கு நான் இல்லாம எப்படிமா?" என மிகவும் இயல்பாக பதில் கூறிய மகளை விழி விரித்து பார்த்த ஊர்மிளா, என்னங்க இது என்பதை போல தன் கணவரை பார்க்க, அவருக்குமே வருணிக்காவின் செயல் அதிர்ச்சியாக தான் இருந்தது.

"ஆதித் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டியாடி, அவனை உன் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டியா?" மகள் மட்டும் ஆமாம் என்று சொல்லிவிட்டால் அடுத்த முஹுர்த்தத்திற்குள் நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைத்துவிடலாமே என்னும் எண்ணத்தில் ஊர்மிளா வருணிக்காவிடம் ஆர்வமாக கேட்க,

ஆனால் அவங்ளோ, "இல்லையே இப்பவும் அவன் தான் என் மனசுல இருக்கான்" என தனது பெற்றோர்களின் தலையில் குண்டை தூக்கிப் போட்டவள் ஒய்யாரமாக சென்று காரில் அமர்ந்து கொண்டு,

"நீங்க வரலையா?" என்று அவர்களுக்கு வருணிக்கா குரல் கொடுக்க, " இவள" என்று கோபத்தில் பற்களை கடித்த ஊர்மிளாவை, "விடு ஊர்மி வீட்டுக்கு வந்து பாத்துக்கலாம்" என்று சமாதானம் செய்தார் அவரது கணவர்.

@@@@@@@@

ஆதித்திற்கு மனதிற்குள் அவ்வளவு அழுத்தமும், கோபமும் இருந்தாலும், அவனது நண்பர்களின் வருகையும், நடந்த எதைப்பற்றியும் அவனிடம் கேட்டு அவனை சங்கடப்படுத்தாது, மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்துகொண்டு அவனுடன் இயல்பாக உறவாடிய அவர்களின் பண்பும் சந்தோஷத்தை கொடுக்க, அந்த நேரத்திற்கு அனைத்தையும் மறந்து மிகவும் நிம்மதியாக காணப்பட்டான்.

ஆனால் அதே நேரம் அழகான லெஹங்காவில் ஆதித்தின் அருகே பெண்களுக்கே உரிய அழகுடன் நின்றிருந்த வர்ஷாவுக்கு எண்ணம் முழுவதும் அவளது தாய் தந்தையை பற்றி தான் இருந்தது.

அப்பொழுது ஆதித்தின் அருகே வந்த ஆகாஷ், "வந்துட்டாங்க உன் அம்மாகிட்ட பேசிகிட்டு இருக்காங்க" என்று சொல்லவும் சரி என்பதாய் தலையாசைத்தவன் திரும்பி வர்ஷாவை பார்க்க, அவளோ தன் பெற்றோர்களின் வருகையை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் தங்களை நோக்கி நடந்து வந்த மீராவையும் மீராவுடன் வந்த அவளது அசிஸ்டன்டும் தனது தோழியுமான சௌமியாவையும் பார்த்து ஆச்சரியத்துடன் புன்னகைக்க, அதேநேரம் ஆதித்தை அழைத்த ஆகாஷ், "மீரா வராடா" என்று சொல்ல,

அவனிடம், "அவ எப்படா ஊர்ல இருந்து வந்தா" என்று கேட்டான் ஆதித், அதற்கு அவன், "இன்னைக்கு காலைல தான் வந்தா, வந்ததும் எனக்கு கால் பண்ணினா, ரிசெப்ஷனுக்கு வந்துருன்னு சொன்னேன், வீடியோ அப்புறம் கல்யாண விஷயத்தை பத்தி என்கிட்ட கேட்டா, நீயே பேசுவன்னு சொல்லிட்டேன்" என்றான் ஆகாஷ்.

அதற்கு ஆகாஷிடம், "சரி டா" என்ற ஆதித் மேடையேறி வந்த மீரா மற்றும் சௌமியாவை பார்த்து, "வா மீரா வாங்க சௌம்யா" என்று புன்னகையுடன் வரவேற்க, "அதெல்லாம் இருக்கட்டும், சூட்டிங் முடிச்சிட்டு வர்றதுக்குள்ள என்னடா இப்படி ரெண்டு பேரும் ஜோடி மாதிரி நிக்கிறீங்க" என்று சற்று அதிர்ச்சியுடனே கேட்க, சத்தமாக சிரித்தவன்,

"ஏன் எங்க ஜோடி நல்லா இல்லையா?" என்று பதிலுக்கு ஆதித் கண்களை சிமிட்யபடி கேட்க, "நல்லா தான் இருக்கு ஆனாலும் ஏதோ இடிக்குதே" என்ற மீராவிடம், "இப்ப இந்த டாபிக் தேவையா மீரா" என்று கேட்டான் ஆதித்.

அவன் அவ்வாறு கேட்ட பிறகே தான் எங்கு வந்து நின்று கொண்டு இதை பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த மீரா, "சரி இன்னைக்கு விடுறேன், ஆனா நீங்க ரெண்டு பேரும்" என்று வர்ஷாவையும் ஆதித்தையும் மாறிமாறி பார்த்தவள் "என்கிட்ட பேசியே ஆகணும்" என்று கண்டிப்புடன் கூற, வர்ஷாவுக்கு தான் சங்கடமாக இருந்தது.

மேலும் தனது தோழியின் பார்வையை வைத்தே அவள் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்த்த, உணர்ந்துகொண்ட வர்ஷாவுக்கு மீரா மற்றும் சௌமியாவை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்பதை என்னும் பொழுதே கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வந்தது.

பின்பு மீண்டும் தன் தாய் தந்தையரின் வருகையை எதிர்பார்த்தபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு வெகு நேரம் ஆகியும் ஏமாற்றமே மிஞ்ச, போதாக்குறைக்கு அழுகை வேறு வந்து விடுவது போல கண்கள் இரண்டும் கரித்துக் கொண்டு வர, யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக வர்ஷா குனிந்த நேரம் அவள் பக்கம் திரும்பிய ஆதித் அவளை அழைத்து, "அங்க பாரு" என்று கண்களால் வாசலை காட்ட, வாசலைப் பார்த்த பெண்ணவளின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

@@@@@@

"நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், உங்கள பார்த்தா வர்ஷா தான் ரொம்ப சந்தோஷப்படுவா,

மேடைக்கு போறதுக்குள்ள என்கிட்ட ஒரு பத்து தடவையாவது நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டிருப்பா" என்ற மகாலட்சுமியிடம் வேணி நாகரிகம் கருதி புன்னகைக்க, அவர்கள் இருவரையும் மணமக்களை ஆசீர்வாதம் செய்வதற்காக மேடைக்கு அழைத்து வந்தார்.

ஆதித் பெரிதாக அவர்களுடன் உரையாட விட்டாலும் பண்புடன் அவர்களை வரவேற்றவன், உணவு அருந்தி விட்டு தான் செல்ல வேண்டும் என்று வலியுறுத்த, அவர்களும் பெரிதாக மறுப்பேதும் சொல்லாமல் புன்னகையுடன் சரி என்பதாய் ஆமோதித்தவர்கள் தங்கள் மகளையும் மருமகனையும் மனதார ஆசீர்வதித்தனர்.

தனது தாய் தந்தையை கண்டதும் உணர்வு பொங்க அணைத்துக் கொண்ட வர்ஷாவின் கலங்கிய கண்களை துடைத்து விட்ட கேசவன், "அழாதடா அதான் வந்துட்டோம்ல" என்க, "சரிப்பா" என்ற பெண்ணவளோ தனது தாய் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேச மாட்டாரா என ஏக்கமாக அவரைப் பார்க்க, ஆனால் வேணி அவளைப் பார்க்க கூடவில்லை. தாயின் பாராமுகம் வருத்தத்தை கொடுத்தாலும் அவர் இவ்வளவு தூரம் மனம் இறங்கி வந்ததே பெரிய விடயம் என்று எண்ணியவள், கோபத்தை விடுத்து இங்கு வந்தது போல சீக்கிரம் தன்னிடம் பேசி விடுவார் என்று நம்பிக்கை கொண்டாள்.

அவளது நம்பிக்கையும் பொய்க்கவில்லை என்பது போல, அங்கிருந்து கிளம்பும்போது அனைவரிடமும் விடைபெற்ற வேணி திரும்பி தன் மகளைப் பார்த்து, "எத பத்தியும் யோசிக்காம சந்தோஷமா இரு, நல்ல நாள் அதுவுமா அழுதுட்டு இருக்காத" என்றவர் அவள் சரி என்பதாய் தலையசைக்கவும் அங்கிருந்து கிளம்பி விட, செல்லும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவிடம் தனது கைக்குட்டையை கொடுத்த ஆதி கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுமாறு கூற, அவன் சொன்ன பிறகே தான் அழுது கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த வர்ஷா சட்டென்று குனிந்து கொண்டவள் அவன் கொடுத்த கைகுட்டையால் தனது கண்ணீரை துடைத்த பிறகு அவனை நிமிர்ந்து பார்த்து "தேங்க்ஸ்" என்க,

அவனோ, "கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்குள்ள ஒரு மூணு தடவையாவது அழுதுட்ட" என்று சொல்லவும்,

'இவர் என்னை எப்ப பார்த்தாரு? இவ்வளவு சரியா நோட் பண்ணி இருக்காரு' என்று தன் மனதிற்குள் எண்ணிய வர்ஷா ஆச்சரியமாக அவனைப் பார்க்க, அவளது பார்வைக்கான அர்த்தத்தை உள்வாங்கியபடி புன்னகையுடன் மேலும் தொடர்ந்தவன், "முதல்ல உன் அப்பா அம்மா வரமாட்டாங்களோன்னு நினைச்சு அழுத, அப்புறம் அம்மா உன்கிட்ட பேசலன்னு உன் கண்ணு கலங்குச்சு, இப்போ பேசிட்டு சந்தோஷமா தான் போறாங்க அப்பவும் அழுற ஏன்?" என்ற கேள்வியுடன் அவளைப் பார்க்க, தன்னை பார்த்துக்கொண்டிருந்த ஆதித்தை ஆச்சரியம் குறையாமல் பார்த்தவள்,

"அது சந்தோஷத்துல ஆனந்த கண்ணீர், அவங்க பேசுவாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல அதான்" என்க அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்த ஆதித், "அப்போ எப்போ சந்தோஷமா இருந்தாலும் இப்படி தான் அழுவியா" என்று கேட்டான்.

அதற்கு அவளோ, "சில நேரம்" என்றாள். அதற்கு அவன், "ஏன் அப்படி?" என்று கேட்க, பெருமூச்சுடன் அவனது விழிகளை பார்த்தவள், "எதிர்பார்க்காத நேரத்துல நான் எதிர்பார்த்த சந்தோஷம் எனக்கு கிடைச்சா அந்த சந்தோஷம் நிலைக்காதோன்னு எனக்கு தோணுச்சுன்னா பயத்துல எனக்கு கண்ணீர் வந்திடும்." என்று சொல்ல அவளுக்கு பதில் சொல்ல வேண்டியவனோ சகலமும் மறந்தவவனாய் கருந்துலையாக தன்னை ஈர்த்துக் கொண்டிருந்த பெண்ணவளின் விழிகளுக்குள் வழமை போல விழுந்து கொண்டிருக்க, என்றுமில்லாமல் இன்று பெண்ணவளவுமே காந்தமாய் தன்னை ஈர்த்த ஆணவனின் விழிகளுக்குள் மூழ்கிகொண்டிருக்க, அப்பொழுது திடிரென்று கொஞ்சம் சத்தமாக கேட்ட டிஜேவின் இசையும், குழுமி இருந்தவர்களின் ஆரவாரமும் ஆதித்தையும் வர்ஷாவையும் சுயம் பெற செய்திருக்க, சிகையை அழுத்தமாக கோதி தன்னை நிலைப்படுத்தி கொண்டவனை,

"எப்பா காதல் பறவைகளே எங்களையும் கொஞ்சம் பாருங்க" என்று அவனது கல்லூரி நண்பனுள் ஒருவன் கேலி செய்ய, மற்றொரு பெண் தொழியோ, "அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு அப்படி தான், என்ன டைரக்டர் சார்?" என்று கண்ணடிக்க,

"அப்படின்னா அப்படி தான்" என்று கேலியாக கூறி ஆதித்தும் பதிலுக்கு கண்ணடிக்க, "ஓஹோ" என்று அவனது நண்பர்கள் பட்டாளம் போட்ட சத்தத்தில் எஞ்சிய நெருங்கிய உறவினர்களுள் இருந்த பெரியவர்களும் நாகரிகமாக விலகி விட, ஆட்டம் பாட்டம் என இளசுகளின் உண்மையான கொண்டாட்டம் தொடங்கியது.

"கைஸ் அடுத்ததா ஆட போறது நம்ம ஆதித் மஹாதேவ் அண்ட் வர்ஷா" என்று ஆதித்தின் சித்தப்பா மகள் அனன்யா கொளுத்தி போட, "நல்லா ரொமான்ட்டிக் பாட்டா போடுங்க பா" என்று ஆகஷும் தன் பங்கிற்கு கோர்த்து விட,

"டேய் ஆள விடுங்கடா எனக்கு இந்த டான்ஸ் எல்லாம் வராது சொல்லிட்டேன்" என்று ஆதித் நழுவ பார்க்கவும், "அதெல்லாம் தெரியாது நீங்க ஆடி தான் ஆகணும், அண்ணி டான்சர் தானே அப்புறம் என்ன? அப்படியே அண்ணிய மேட்ச் பண்ணி ஆடிருண்ணா" என்று அனன்யா அடம்பிடிக்கவும், அதைப் பிடித்துக் கொண்ட மொத்த கூட்டமும் "எஸ் கமாண் ஆதி வர்ஷா" என்ன மாறி மாறி கத்த துவங்க, இப்பொழுது வேறு வழியே இல்லாமல் ஆதித் வர்ஷாவை பார்த்தான்.

அவளோ அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு இல்ல வேண்டாம் என்று கண்களாலே கெஞ்ச, "ஆடலன்னா கண்டிப்பா விடமாட்டானுங்க, புரிஞ்சுக்கோ ஒரு ரெண்டு ஸ்டெப் தான் ப்ளீஸ்" ஆதித் அவ்வாறு கேட்கவும் அவனுக்கு மறுக்கவும் முடியாமல் அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் ஒருவித தயக்கத்துடனே வர்ஷா அமர்ந்திருக்க, தனது இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட ஆதித் அவள் முன்பு வந்து தனது வலது கரத்தை நீட்ட, நெஞ்சம் படபடக்க பெரும் தயக்கத்துடன் அவனது கரத்தை பற்றிக் கொண்டாள்.

இசையாமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜின் இசையில் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..." என்னும் பாடல் ஒலிக்க, அந்நேரம் ஆதித் வர்ஷாவின் இடையை தன் இருக் காரங்களால் பிடித்துக்கொள்ளவும் தடுமாறிய பெண்ணவள் பதற்றத்தில் அவனது மார்பில் தன் கரங்களை அழுத்தமாக பதித்துவிட, அந்த நொடி அவர்கள் இருவரது விழிகளும் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டுக் கொள்ள, அவர்களோ அப்படியே வேறு ஒரு மாய உலகில் தொலைந்து போயினர். அதன் பிறகு யாரையுமே அவர்கள் பார்க்கவும் இல்லை, யாரை பற்றியும் கவலை கொள்ளவும் இல்லை. சுற்றும் முற்றும் அனைத்தையும் மறந்து ஆடினர்.

எந்த ஒரு பயிற்சியும் இன்றி, தப்பும் தவறுமாக தான் இருவருமே ஆடினர் ஆனாலும் அவர்களது பார்வையில் இருந்த நெருக்கம் காண்போர் அனைவரையும் ரசிக்க வைத்திருக்க, கைத்தட்டலும் விசலும் பறந்தது.

அதன் பிறகு அனன்யாவின் நடனம், அந்தாக்ஷரி, சிறு சிறு விளையாட்டுக்கள் என நடந்த அனைத்தையுமே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை ஆதித்தின் தொடர் அழைப்பு ஈர்க்க, "ஹான்" என்றபடி வர்ஷா அவனை பார்த்தாள்.

"வாஷ் ரூம் போய்ட்டு வந்திடுறேன்" என்றவனிடம் சரி என்பதாய் தலையசைத்தவள் நிகழ்ச்சியில் கவனமாகிவிட, மென்னகையுடன் எழுந்து தன் அறைக்குள் சென்றவனை பின் தொடர்ந்த வருணிக்கா, அவன் அறைக்குள் நுழையவும் தானும் நுழைந்து கதவுக்கு தாழிட, அதை பார்த்த ஆதித், "இங்க என்ன பண்ணிட்டு இருக்க? கதவை ஏன் பூட்டிருக்க முதல்ல வெளிய போ" என்றான் சீற்றத்துடன்.

 

Mathykarthy

Well-known member
ஆதித் சூப்பர்... இவன் தான் வர்ஷா அம்மாவை சமாதானப்படுத்தி function க்கு வர வச்சிருக்கான்.. 😊

வர்ஷா மேல கோபம் இருக்குறப்பவே அவளுக்காக எவ்வளவு பார்க்குறான்...
அவ மேல தப்பில்லன்னு தெரிஞ்சா எப்படி எல்லாம் பார்த்துப்பான் 😍😍😍😍😍😍

வருணி 😡😡😡😡😡😡 இந்த வில்லங்கம் ஏன் இப்போ இப்படி பண்ணுது.... லூசு இன்னும் நல்லா வாங்கினா தான் அடங்குவா போல...😤
 

NNK-34

Moderator
ஆதித் சூப்பர்... இவன் தான் வர்ஷா அம்மாவை சமாதானப்படுத்தி function க்கு வர வச்சிருக்கான்.. 😊

வர்ஷா மேல கோபம் இருக்குறப்பவே அவளுக்காக எவ்வளவு பார்க்குறான்...

அவ மேல தப்பில்லன்னு தெரிஞ்சா எப்படி எல்லாம் பார்த்துப்பான் 😍😍😍😍😍😍

வருணி 😡😡😡😡😡😡 இந்த வில்லங்கம் ஏன் இப்போ இப்படி பண்ணுது.... லூசு இன்னும் நல்லா வாங்கினா தான் அடங்குவா போல...😤
Yes da...
Unmai therinjaa thaan iruku dr❤️
Kandipaa dr❤️
Thank u so much dr
 
Top