எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 7

NNK-54

Moderator

வர்ணங்கள் 7அடுத்தநாள் அலுவலகம் சென்ற சாயா மறந்தும் ஜெயந்தனை நோக்கி பார்வையை வீசினாள் இல்லை.அவளுக்கு தெரியும்,எந்த ஆணையாவது பெண்ணானவள் தன்னை மீறி நோக்கிவிட்டால் அந்த ஆணின் மனதில் அவளைப்பற்றிய மரியாதை இருப்பதில்லை."இவள்தானே"என்ற எண்ணம் வந்துவிடுகிறது.


ஆனாலும் அவளுக்கே புரியாத ஒன்று உண்டு. அவளது முதல் கணவன் ஆண்மையும் கம்பீரமும் ஒருங்கே கொண்டவன் தான். ஜெயந்தனை விடவும் உயரமும், அழகும் கொண்டவன்.இவளிடம் பேசும்பொழுது காணப்படும் இலகுத்தன்மையை அவன் வேறு யாரிடமும் காண்பித்து சாயா கண்டது இல்லை. இவளை அவன் எவ்வளவு விரும்பினான் என்பது சாயாவுக்கு நன்றாகவே தெரியும்.அவன் காதல் சொன்னதால் அவனை ஏற்றாளே தவிர அவனிடம் மனம் லயித்ததா என்று கேட்டால் சாயாவுக்கு அதை பற்றி நிச்சயம் தெரியாது.ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் கூட இப்படி ஒரு ஈர்ப்பு ஜெயந்தனிடம் எப்படி வந்தது?இது சாத்தியமா.. இது சரியா?என்று குழம்பினாள் சாயா.திருமண பந்தத்திலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டு வந்துவிட்டவளுக்கு அது தொடர்பான விஷயங்களை தவிர்க்க முடியவில்லை.அவளது மனமே பல சமயங்களில் ஏடாகூடமாக கேள்விகளை அடுக்கி அவளை திணற செய்யும் பொழுது வேறு விரோதி வேண்டுமா என்ன?


முழு மனதுடன் வேலையை மட்டும் செய்தவளுக்கு உண்மையிலேயே ஜெயந்தன் பற்றிய யோசனைகளே இல்லை. அன்றுஇவளுக்கு வேலைகளை பற்றி சொல்லிக்கொடுக்கும் ஸ்ரீஜா கூட வியந்துதானே போனாள் . இந்த பெண் இவ்வளவு திறமைசாலியாக இருந்துகொண்டு எதற்க்காக பயிற்சி காலத்தின் ஒரு முழு வாரத்தை வீண் செய்தாள் என்று கோவம் கூட வந்தது.

எப்படியோ இன்னமும் இவளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்காமல் தனது வேலைகளை நிம்மதியாக பார்க்கலாம் என்று ஆஸ்வாசம் கொண்டாள் ஸ்ரீஜா. அலுவலகத்தில் சாயா நடந்து கொள்ளும் முறையை ஜெயந்தனும் கூட பார்த்துக்கொண்டிருக்கிறான்.தான் இன்னமும் முன்பே அப்பாவிடம் பேசி இருந்திருக்க வேணும் என்று தான் அவனுக்கு தோன்றியது.


சாயாவின் நிர்வாகத் திறமை நிஜமாகவே எல்லோரையும் அசர வைத்தது . எந்த ஒரு வேலையை ஆரம்பித்தாலும் விரைவாக முடிப்பதும்,சரியான திட்டமிடலும் சாயாவை பற்றிய முந்தைய ஜெயந்தனது மதிப்பீட்டை மாற்றியதும் நிஜம்.ஒருமாத பயிற்சி காலம் அவளுக்கு தேவை படவில்லை.ஸ்ரீஜா புதிய பொறுப்புகளை கவனிக்க சென்றுவிட்டாள்.


ஏதாவது சந்தேகம் தோன்றினால் மட்டும் ஸ்ரீஜாவை அழைத்துக் கேட்டுக்கொள்வாள் சாயா ,மற்றபடிக்கு வேறு யாரிடமும் அனாவசியமாக நின்று பேசி கூட யாருமே பார்த்திருக்க முடியாது. தனக்கென இருக்கும் அறையிலேயே மதிய உணவைக்கூட முடித்துக்கொண்டு வேலைகளை செய்பவள்,என்ன ஆனாலும் மாலை ஆறு மணிக்கு கிளப்பிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.அதற்குப் பிறகு ஜெயந்தனுக்கு வரும் வேலைகளை அவனது மற்றைய காரியதரிசிகள் தான் செய்வார்கள். அதேபோல் காலை ஒன்பது மணிக்கு முன்னரே வேலை தளத்திற்கு வந்து தனது வேலைகளுடன் மற்றவர்களுக்கும் ஏதாவது வேலை செய்யவேண்டியிருந்தால் அதையும் செய்து கொடுப்பதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தாள் சாயா. இத்தனைக்கும் அவளது வேலை நேரம் பத்து மணிதான்.


அதனாலேயே கூட வேலை செய்பவர்கள் யாரும் இவளை பற்றி எதுவும் சொல்வது இல்லை. எல்லோருக்கும் சாயாவை பிடித்திருந்தது. அவளை பற்றி தெரிந்து கொள்ள முதலில் ஆசை பட்டவர்கள் கூட இப்போது அவளிடம் மரியாதையாக பழக ஆரம்பித்திருந்தார்கள். எல்லோரும் அறிந்திருந்தது அவள் சாதாரண குடும்ப பின்னணியில் வந்தவள் இல்லை.இன்னமும் சொல்ல வேண்டுமானால் அவள் வேலைக்கு வரும் வர்கம் இல்லை..வேலை கொடுக்கும் நிலையில் இருப்பவள் அவள்.


ஆனாலும் அந்த அலுவலகத்தில் எல்லோருக்குமான கேள்வி ஒன்று இருந்தது.அது இவள் இங்கே இந்த பொறுப்பில் வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? சாயா வின் பார்வை மாறியிருந்தது.ஜெயந்தனை அவ்வளவு ஆர்வமாகவெல்லாம் இப்போது பார்ப்பது இல்லை.ஆனாலும்,அவன் பார்வை எந்த பெண்ணையும் ஆர்வமாக கண்டு அவள் பார்க்கவில்லை.அதுவே ஜெயந்தன் மீது அவளின் ஈடுப்பாட்டை அதிகம் செய்தது.அவனது மீட்டிங்குகளை திட்டமிட்டுவிட்டு அவனிடம் அதை பற்றி சொல்ல செல்லும் சமயங்களில் அவனது நேர்த்திமிகு பாங்கு அவளை வியப்படைய செய்தது. மீட்டிங் சம்மந்தமாக இவள் சொல்லும் தகவல்களுக்கு முன்னரே அவன் பல விஷயங்களை திரட்டி வைத்திருப்பான்.எப்படி இவனால் இத்தனை தொழில்களையும் அது சம்மந்தமான விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்க முடிகிறது?இவனுக்கு காரிய தரிசியே அவசிமில்லை என்று கூட நினைத்திருக்கிறாள்.

சுபா மலேசியாவில் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு சிங்கப்பூர் வந்துவிட்டாள் .இந்தியாவிற்கு வருவதற்க்கு தியா சம்மதிக்காமல் ஆடம் செய்தாள் . அவளுக்கு புரிய வைக்கவே முடியவில்லை. "நீ வேணும்னா அங்கே பொய் உன்னோட வேலையை முடிச்சிட்டு வா.நானும் பாட்டியும் இங்கேயே இருக்கோம். நா பாட்டியை படுத்தாமல் குட் கார்ல்லா இருப்பேன். நோ ஒற்றிஸ் .பட் டோன்ட் போர்ஸ் மீ டு கம்."என்று அழுது தீர்த்தாள்.

குழந்தை அழுகிறாள் என்று விட்டு விட முடியாதே! எவ்வளவு சமாதானங்கள் ! இரண்டே வருஷங்கள் .மீண்டும் இங்கே தானே வரவேண்டும்.என்று பலமுறை சொல்லியபிறகு ஒருவழியாக ஒத்துக்கொண்டாள் தியா. அவள் படித்த பள்ளியில் சென்று அவளது தோழமைகளை பார்த்து அவர்களுக்கு சோக்கலேட் கொடுத்து, 'மீண்டும் இங்கே வந்துடுவேன்' என்று உதட்டை பிதுக்கி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பும் முன்னர் மீண்டும் அழுது என தியாவுடன் சுபாவுக்கு மூச்சு முட்டியது.சிறு குழந்தையை சமாளிப்பது இவ்வளவு கடினமாக இருக்கும் என்று அவள் நிச்சயம் நினைத்திருக்கவில்லை.இது இப்படியே முடியாது என்று தான் அவளுக்கு தோன்றியது.இந்தியா சென்ற பிறகு நிச்சயம் தியா சிங்கப்பூரை பற்றியும் தோழர்களை பற்றியும் பேசிக்கொண்டே இருப்பாள்.அதைவேறு திசை திருப்பியாகவேண்டும்.ஒரு வழியாக இருக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களில் பாதியை கழித்துவிட்டு , தேவையானவற்றை மட்டும் பேக் செய்து இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு,கையில் லக்கேஜுகளுடன் இந்தையவை நோக்கி மீண்டும் எட்டு வைத்தது அந்த குடும்பம்.


சுபாவை சென்னையில் இருக்கும் ப்ரொஜெக்ட்டுக்கு நேராக அனுப்பாமல் பாதி முடிந்திருக்கும் பெங்களூரு ப்ரொஜெக்ட்டுக்கு சென்று ரிப்போர்ட் செய்யும்படிக்கு சொல்லியிருந்தது மேலிடம். இவளும் எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டாள் . அதனால் முதல் மூன்று மாதங்களுக்கு சுபா பெங்களூரு செல்ல வேண்டும். பெண் என்பதால்,சில அடிப்படை விஷயங்களை சுலபமாக்கி கொடுத்தார்கள் நிறுவனத்தின் சென்னை ஊழியர்கள். இவர்களது சென்னை அலுவலகம் சோழிங்க நல்லூரில் இருக்கிறது.அங்கேயே அலுவலகத்தின் மூலமாக ஒரு பிரபல பள்ளியில் தியாவுக்கு இரண்டாம் வகுப்புக்கான அட்மிஷன் வாங்கிக் கொடுத்ததுடன்,அங்கே அலுவலகத்தின் பிளாட்டுகளில் ஒன்றை இவளுக்கு வாடகைக்கு என ஒதுக்கியும் கொடுத்துவிட்டார்கள். காஸ் கனெக்ஷன் பைப் மூலம் வருகிறது.அது சம்மந்தப்பட்ட விஷயங்களை அடுக்ககத்தின் நிர்வாகப் பிரிவு செய்து கொடுத்துவிட்டது.


ஆனாலும்,நேரே சென்னையில் வேலையில் சேராமல் பெங்களூரு செல்லவேண்டும் என்பது அவளுக்கு சலிப்பாக இருந்தது. ஆண்களுக்கு எப்படியோ நான் அறியேன்.பெண்களுக்கு இது கடினமான விஷயம்தான். குழந்தையை பிரிந்து வேலை செய்வது தாய்மார்களுக்கு நிச்சயம் பிடிக்காத விஷயம்தான்.சரிதானே மக்களே!


சென்னை வந்து வீட்டை ஒழுங்கு செய்து தேவையானவற்றை எல்லாம் செய்துவிட்டு,குழந்தையை பள்ளிக்கு செல்ல ஏற்படுகள் செய்து, பள்ளியில் போய் நிர்வாகத்தினரிடம் பேசி,புத்தகம் சீருடை எல்லாவற்றையும் தயார்செய்து ,புத்தகங்களுக்கு அட்டை போட்டு என்று சுபாவுக்கு முதுகெலும்பு வலியை கொடுத்தது. ஒரே ஆளாக தாயாகவும்,தந்தையாகவும் ஒரு பெண் சுழல்வது அசாதாரணம்.வார்த்தைக்கு வேண்டுமானால் சுலபமாக சொல்லிவிடலாம்.'பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று'.அனுபவிப்பவர்களுக்கு நன்றாக தெரியும் அதன் வலி. அந்த வலியை கணவன் மீதான காதலுக்காக இங்கே ஒரு பெண் தனியாக அனுபவிக்கிறாள்,ஒரு தவம் போல. இந்த தவம் பலிக்குமா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.


அவளது காதல் மிக வலிமையானது..அவர்கள் நிறுவனம் கட்டும் பிரம்மாண்ட கட்டிடங்கள் போலவே!


அம்மாவின் நிலைமையை புரிந்து கொள்ளாத வயதிலிருக்கும் தியா,அம்மா தனது சூட்கசுகளை தனியாக அடுக்கி வைப்பதை பார்த்து மீண்டும் அழ தொடங்கிவிட்டாள் . ஏற்கனவே அம்மாவை மலேசியாவில் விட்டுவிட்டு சிங்கப்பூரில் இருந்த நாட்களை நினைத்து விடாமல் அழுது தீர்த்தாள் பெண்.


சுபாவின் அம்மா எவ்வ்ளவு சமாதானம் செய்தும் கேட்கும் நிலையில் இல்லை குழந்தை. சுபாவுக்கோ, தன்னிடம் "நா பாட்டியுடன் சிங்கப்பூரிலே இரண்டு வருஷம் இருக்கேன்.நீ இந்தியா போ"என்று பெரியமனுஷத் தனமாய் சொன்னவளை எண்ணிப் பார்த்து,இப்போது அவள் அழுவதை பார்த்து தான் அழுவதா..சிரிப்பதா என்று தெரியாமல் திகைத்தாள். விடாமல் அழுததில் குழந்தைக்கு சளியும் ஜூரமும் வேறு வந்து தொலைத்தது.


திங்கள் அன்று சுபா பெங்களூரு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். வேறு வழி இன்றி வாராவாரம் சனிக்கிழமைகளில் சென்னை வருவதாக குழந்தையிடம் சத்தியம் செய்துவிட்டு ஞாயிறு அன்று மாலையில் அலுவலக காரில் கிளம்பி பெங்களூரு அலுவலகத்தின் கெஸ்ட் ஹவுஸ் சென்று சேர்ந்தாள்.


பேசாமல் சாப்ட்வேர் என்ஜினியராக பணிக்கு சென்றிருக்கலாம் என்று கூட சுபாவுக்குத் தோன்றியது.ஆனால் ,அவள் சிவில் படித்தது,ஜெயந்தனின் கல்வி தகுதியை வைத்து தானே? ஏதோ ஒருவகையில் அவளது துன்பங்களுக்கு ஜெயந்தன் காரணமாக இருக்கிறான். இன்னும் எவ்வளவு காத்திருக்கிறதோ?

 
Top