எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 05

NNK-106

Moderator

காதல் Not Out ! - 05


பனிரெண்டு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் ஆனால் உனக்காக நிற்க எல்லாம் முடியாது என இவளை பார்த்து கேலியாய் நகைத்துக்கொண்டே அவளது கைக்கடிகார முற்கள் நகர்வது; இல்லை வேகமாக நகர்வது போல் தான் இருந்தது கவிதாவிற்கு. கடிகாரத்தையும் இவளை விட இருமடங்கு உயரத்தில் நின்றிருந்த மதிலையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இருந்தாள்.​

"நிப்பு.. எதாவது சொல்லு.."​

"எதாவது.." மதிலில் சாய்ந்து சீரியசாக நட்சத்திரங்களை எண்ணியவாறே கூறினான் நிதன்.​

"டேய்.." தனது பையால் அவன் தலையிலே அடித்தவள்..​

"இதை எப்படி கடக்குறது.. டைம் வேற போய்ட்டே இருக்கு.."​

"எல்லாம் ப்ளான் பன்னியிருக்கனும்..சும்மா வாரேன்னு வந்திருக்கக்கூடாது.. அப்புறம் டைம் போகுதுன்னு..சரி சரி இரு யோசிப்போம்.. " சற்றே அவள் மேல் பரிதாபப்பட்டு சுற்றியும் நோட்டம் விட்டவன்.. ஏதோ ஒன்றை கவனித்து விட்டு..​

"அக்கா நீ மரம் ஏறுவல்ல.. ?" என்றான்.​

"ஆமா அதுக்கு.."​

"சூப்பர்.. இதோ இந்த மரத்தோட கிளைய பாரு.. நல்லா ஸ்ட்ரோங்கா தான் இருக்கு.. அது அப்படியே போய் நிக்கிது எங்க.. அந்த ரூமோட பால்கனில.. என் கணிப்பு சரின்னா அங்க ஒவ்வொரு ரூம் பால்கனியும் கனக்டட்டா இருக்கனும் சோ உனக்கு போய்டலாம்.."​

"சரி உன் கணிப்பு பிழைன்னா ?"​

"அப்படியே குதிச்சிரு.. ஏறு போ.. டைம் போய்ட்டே இருக்கு.." ஒருவாறு அடுத்த பத்து நிமிடத்திற்குள் மரத்தில் ஏறி கிளையில் தவழ்ந்து என பல இன்னல்களை கடந்து அந்த மூன்று மாடிக்கட்டிட வீட்டில் இரண்டாவது தளத்தின் பால்கனியை அடைந்திருந்தாள் கவிதா. அங்கிருந்து பார்க்கும் போது சற்றே மதிலை தாண்டி தூரமாய் வரிவடிவமாய் தான் நிதன் தெரிந்தான். அவனுக்கு கையை அசைத்து தான் உள்ளே செல்வதாக கூறிவிட்டு மெல்ல அவள் இருந்த பால்கனி அறையின் கதவை ஒரு நம்பிக்கையோடு தள்ள அதுவும் திறந்து கொண்டது. கூறப்போனால் இது அவளது திட்டத்தில் இல்லை தான்.. வாசல் வழியாக செல்வது தான் திட்டமாக இருந்தது. ஆனால் மதிலையும் மூடிய கேட் அருகில் இருந்த காவலாளி அதோடு ஓடிக்கொண்டிருந்த நேரம் என்பவை தானாகவே இப்போது நடப்பவற்றையும் திட்டத்தில் சேர்த்து விட்டன.​

கதவு திறந்துவிட்டதில் குதூகலமாய் மெல்ல காலை உள்ளே எடுத்து வைக்கப்போனவள் சற்றே நிதானித்து வலது காலையே வைத்தாள். உள்ளே திரும்பும் பக்கம் எல்லாம் இருள் நிலைத்திருக்க தன் போன் டார்ச்சை ஒளிர விடவும் அந்த அறையில் யாரோ ஸ்விச் போடவும் சரியாய் இருந்து. பதறிக்கொண்டு தான் திரும்ப வேண்டும் இருந்தாலும் தெரிந்தே வரும் போது வீணாக எதற்கு பதட்டம் என மெதுவாகவே திரும்பினாள். எதிர்பார்த்தது போலவே அங்கு நின்றிருந்தது சஞ்சீவ் தான்..​

"வா..ட்.." இரு புருவங்களும் முடிச்சிட்டிட குழப்ப இரேகைகள் முகத்தில் படர்ந்தன.​

"சார் ப்ளீஸ்.. ஒரு இரண்டே நிமிஷம்.." என்று விட்டு அவன் பதிலை எதிர்பாராமலே அருகில் வந்து.. "சாரி.." என முன்னதாகவே ஒரு சாரியுடன் அவனை பற்றி மறுபக்கம் திருப்பி நிற்க வைத்தாள். சஞ்சீவிற்கு புரியாத மனநிலை தான் இருந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதால் சற்றே பொருத்திருந்து என்னதான் என்று பார்ப்போம் என்ற மனநிலையை தற்காலிகமாக தத்தெடுத்திருந்தான்.​

தன் பின்னே ஏதேதோ சத்தம் மட்டுமே செவியை தீண்டிக்கொண்டிருந்தது.. " என்ன பன்னிட்டு இருக்க சில்லியா.." சற்றே கடுப்பான குரலில் கேட்டான்.​

"த்ரீ டூ..ஒன்.. ஹப்பி ஹப்பி பர்த் டே சஞ்சீவ்..இப்போ திரும்புங்க.."​

இன்னதென்று இல்லாத மனநிலை அவனுக்கு.. அன்று அவனுக்கு பிறந்த நாள் அவன் அறிவான் ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் அதை அவன் பெரிதாக யோசித்திடவில்லை. ஆனால் இவள் அதுவும் அவளை சந்தித்து முழுதாக மூன்று நாட்கள் கூட இருக்காது.. முதலில் காதல் என்றால்.. நினைத்து பார்த்தால் தொல்லை மட்டும் தான் கொடுத்தவண்ணம் இருந்தாள் எனலாம்.. ஆனால் இப்போது இந்த நொடி அவற்றை யோசிக்கையில் அவையும் ஒன்றின் மேல் கொண்ட அளாதிப்பிரியத்தில் அதற்காகவென்று மேற்கொள்ளும் எத்தனிப்பு போன்றது தானே என்று தோன்றியது.​

எந்த அசைவும் இன்றி சிலையாக நின்றவனை கலைத்தது வீட்டில் ஒலித்த அழைப்பு மணி..​

"தாங்ஸ்..க..கவிதா.. இதோ வந்துர்ரன்.." போக திரும்பியவனை நிறுத்தினாள்.​

"இதை மட்டும் ஊதி அணைச்சிட்டு போங்க ப்ளீஸ்.." அவள் கண்களை சுருக்கி கேட்ட விதம் முடியாது என்பதற்கு கண்டிப்பாக மனம் கொடுக்காது என அறிந்து ஒரு புன்னகையோடு அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டு கீழே சென்றான். அவன் சென்று ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க..இவளும் மெதுவாக அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள். கண்கள் நான்கு பக்கமும் சுழல.. அவள் கண்டுபிடித்தது அதை வீடு என்று சொல்ல முடியாது.. மாளிகை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும் என்று தான். இருபக்கமும் விரிந்த படுக்கட்டுக்கள் கீழ்தளத்தில் நேரெதிரே சந்தித்திருக்க அதில் வலது பக்கமாய் சென்றாள். அதற்குள் சஞ்சீவ் வெளியே யாருடனோ பேசி அனுப்பி விட்டு கையில் ஒரு பெட்டியுடன் இவள் பக்கம் திரும்பினான்.​

**********​

இருள் கவ்வியிருந்த அந்த காட்டுப்பாதையை சட்டென பல டார்ச் வெளிச்சங்கள் மொய்த்தன. ஒன்றன் பின் ஒன்றாகவும் ஒவ்வொரு திசையிலும் எதையோ தேடி அவை சுற்றிக்கொண்டிருக்க.. ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் கிடைத்ததாக இல்லை. முதலில் இருந்த துள்ளல் சற்றே அந்த வெளிச்சங்களில் குறைந்தது போல் தான் இருந்தது இப்போது. ஒவ்வொன்றும் மரத்தையும் வானத்தையும் என பெயர்க்கு சுற்றி வந்துகொண்டிருந்தன. சட்டென.. "சார்.. இங்க.." என்ற ஒரு அலறலில் மொத்த குழுவின் இதயமும் வேகமாய் துடிக்க மீண்டும் டார்ச் வெளிச்சங்களில் துள்ளல் தெரிந்தது. வேகமாய் அலறல் வந்த திசைக்கு அனைத்தும் ஒன்றாய் மொய்க்கவென விரைந்தன. குவிந்த வெளிச்சத்தில் தெரிந்தது ஒரு இரத்தக்கறை படிந்த.. இல்லை இரத்தத்தில் குளித்திருந்த ஒரு சாக்குப்பை தான். அங்கு சுற்றியிருந்த பத்து பேரும் அதை அவிழ்க்க வேண்டுமா இல்லை வேண்டாமா என்ற யோசனை கூட இன்றி சாக்கில் உறைந்திருந்த இரத்தம் போல் மூளையிலும் உறைந்தது விட்டது என்பதாக நின்றிருந்தனர்.​

"இளங்கோ.." அங்கிருந்த காக்கிச்சட்டைகளில் பல நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டு தலைமை பதவியில் திகழ்ந்த துணை ஆணையர் கார்த்தியின் குரல் உறைந்த இரத்தங்களை உயிர்ப்பித்திடவென ஓங்கி ஒலித்தது. இளங்கோ என அழைக்கப்பட்ட காவல் அதிகாரி சட்டென முன்னே ஒரு அடி வைக்கவும்.. " ஓபன் இட்.." என்றான் மீண்டும் அதே குரலில் கார்த்தி.​

இளங்கோ அந்த சாக்கை கட்டியிருந்த கயிற்றை அகற்றி மெதுவாக விரிக்க சட்டென அங்கு படர்ந்தது அடர்ந்த குருதி வாடை. காய்ந்த அந்த வாடையே கொலை நடந்து பல மணித்துளிகள் கடந்துவிட்டது என்பதை துணிந்து சொன்னது. இளங்கோ பின்னடைய சாக்கிலிருந்து வந்து விழுந்தது ஒரு உடல். மீண்டும் கார்த்தி அவனை பார்க்க.. அந்த பார்வையில் அர்த்தத்தை உணர்ந்தவனாக கையுறைகளை அணிந்து கொண்டு முழுவதாக அந்த உடலை வெளியில் எடுத்தான். எதாவது அடையாளத்திற்கென இருக்கிறதா என இளங்கோவுடன் இன்னொரு காவல் அதிகாரியும் இணைந்து தேடலை ஆரம்பித்தனர்.​

"சார்.. ஐடி இருக்கு.." அந்த ஐடி யாருடையாது என்பதை அடையாளம் கண்டதற்கான பதட்டம் இளங்கோவின் பேச்சில் தெரிந்தது. அதை வாங்கிப்பார்த்த கார்த்தி; அது இத்தனை நாட்களாக அவர்கள் தேடிக்கொண்டிருந்த பிரபல செல்வந்தர் மகன் சுதாகர் என்பதை உறுதி செய்தான்.​

"சார்.." முன்னிலும் அழைப்பில் இப்போது கூடுதல் பதட்டம் தொற்றியிருந்தது. இளங்கோவின் கையில் இருந்த தாளை கேள்விக்குறியோடு நோக்கிய கார்த்தி அதை வாங்கிப்பார்த்தான். "ஓயாது இந்த வேட்டை; ஓயும் வரை" என்று சிறியதாக ஐடி அளவான ஒரு தாளில் இரத்தத்திலே எழுதி அது லேமினேட் செய்யப்பட்டிருந்தது.​

அடுத்தடுத்து அனைத்தும் அவசரமாய் நடந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை முடிவுகள் தரப்படுவதாக இருக்க.. அங்கே தானே இருப்பதாக காத்திருந்தான் கார்த்தி. பெரிய இடமாக இருந்ததால் தேடுதலின் போதே காரத்திக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் அதிகமாக இருந்தது. இப்போது தேடல் முடிந்தது தான் ஆனால் நல்லவிதமாக முடியவில்லையே, அழுத்தம் பல மடங்காக இருந்தது. அந்த அழுத்தம் எதற்காக கொடுக்கிறோம் என்பதை கொடுப்பவர்கள் கூட அறியார்கள் என்பது புலப்படுவதற்கில்லை.​

இளங்கோவிற்கு கார்த்தியின் நிலை நன்றாக புரியும். காவல் அதிகாரி அவனுக்கு இருக்கும் அழுத்தமே கஷ்டமாக இருக்கையில் இந்த கேஸை எடுத்து நடத்தும் கார்த்தியின் நிலை கஷ்டம் தான் அதிலும் இப்போது இது தொடரும் என்று வேறு கமா வைத்தாகிவிட்டான் கில்லர். யோசனையோடு இளங்கோ பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே நின்றிருந்தான். கார்த்தி உள்ளே ரிப்போர்ட் பற்றிய கலந்துரையாடலில் இருந்தான். ஒருவாரு அவன் அரைமணி நேரம் கழித்து வெளியில் வர கஷ்டம் தான் போல என்று இளங்கோவை எண்ணவைத்தது அவன் முகமாறுதல்.​

"இளங்கோ.."​

"சார்.."​

"என்னன்னே புரில இளங்கோ.. நீங்களே இந்த ரிப்போர்ட் பாருங்க.." அந்த ரிப்போர்ட்டை அவன் கையில் கொடுத்தான் கார்த்தி. சற்றே மேலோட்டமாக பார்த்து முடித்த இளங்கோ..​

"என்ன சார் ப்ளேடா.. " அங்கு குறிப்பிடப்பட்டிருந்தவை எல்லாம் கண்முன் விரிய சற்றே நடுக்கத்தோடு கேட்டான் இளங்கோ.​

"ஆமா இளங்கோ.. பதினொரு நாளுமே அவன் கட்டுப்பாட்டுல தான் வச்சிருக்கான்... ப்ளேட் தான் அவனோட மெய்ன் ஆயுதமா இருந்திருக்கு இந்த கொலைல..மொத்தமா கை, கால், முகம்ன்னு உடம்புல ஒரு பகுதி கூட விடாம இருபத்தி இரண்டு ப்ளேடு எடுத்ததா டாக்டர். சதா சொல்றாரு.. "​

"எல்லா இடமும்.." கார்த்தி எதையோ அந்த எல்லா இடம் என்றதில் அழுத்தி கூறியது போல் இருக்க ஒரு முறை தான் நினைப்பது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டான்.​

"யெஸ் இளங்கோ.. இந்த பதினொரு நாள்ல நிறைய ப்ளாட் லொஸ் ஆகி அதுக்கு ப்ளட் வேற ஏத்தியிருக்கான்.. ஐ கான்ட் பிலிவ் திஸ் மேன்.. ப்ரஸ் மீட்னு இவங்க வேற இப்போ.. எனக்கு இதை எப்படி சொல்றதுன்னே புரில.. இது தொடரும்னு வேற தெளிவா எழுதியிருக்கான்.. ஒரு தகவல் கூட இந்த பாடிய வச்சி ட்ரேஸ் பன்ன முடியல இளங்கோ.." கார்த்தி எப்போதும் போல இளங்கோவிடம் புலம்பிக்கொண்டிருந்தான். இளங்கோவும் கார்த்தியும் வெவ்வேறு நிலை என வேலையில் இருந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு நல்ல நட்பு எப்போதும் இருந்தது.​

இருவரது மனநிலையையும் கலைத்தது அடுத்து வந்த தொலைபேசி அழைப்பு.. அதில் கூறியதை கேட்ட கார்த்தி.. "வாட் ?? எப்போ ?" என்றான் பதட்டமாய் அடுத்த புயலை எதிர்நோக்கி.​

 

Mathykarthy

Well-known member
பிறந்த நாளைக்கு விஷ் பண்ணத் தான் இப்படி பண்ணினாளா.... பரவாயில்லை நிஜமாவே சஞ்சீவ்க்கு சர்ப்ரைஸ் தான் குடுத்துருக்கா.... 😊😊😊😊

murder ஆ.... 😱 தொடரும் ன்னு வேற கில்லர் சொல்றான்... 😰😰😰😰😰😰
பயங்கரமா கொன்னுருக்கான்... 🥵🥵🥵🥵🥵🥵🥵
என்னவா இருக்கும்... 🧐
 
Top