எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 15

NNK-29

Moderator
💖உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!💖 அத்தியாயம் 15
 

NNK-29

Moderator

அத்தியாயம் 15​

“எங்கு செல்ல வேண்டும்? யாரை பார்க்க வேண்டும்?” என அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரவிந்தும் வந்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தான்.​

தேவா, அவனுக்கு தெரிந்த நண்பன் ஒருவனிடம் அலைபேசியில் “என்னென்ன செய்ய வேண்டும்?” என கேட்டுக்கொண்டான். அதன்படி, முதலில் சாருமதியின் அனைத்து வங்கி கணக்கையும் முடக்கிவிட்டான்.​

பின் சாருமதி குளித்து வர அவளுடன் சேர்ந்து அவளின் ஜிமெயில் அக்கவுண்ட்டை ரெக்கவர் செய்ய முயன்றான்.​

அவர்களால் எவ்வளவு முயன்றும் அவர்களின் அக்கௌன்ட்டை உபயோகிக்க முடியவில்லை.​

அந்த ஹேக்கர் முதலில் சாருமதியின் ஜிமெயில் அக்கவுண்டை தான் ஹேக் செய்திருக்கிறான். அதன் மூலம் அதில் இணைக்கப்பட்ட யூடியூப் சேனலையும் ஹேக் செய்து அவளின் பாஸ்வோர்ட், ரெக்கவரி மெயில் ஐடி என அனைத்தையும் மாற்றிவிட்டான்.​

அந்நேரம் அரவிந்தும் வந்தனாவையும் யஷ்வந்த்துடன் வந்துவிட்டனர்.​

“பேங்க் அக்கௌன்ட் லாக் பண்ணிட்டேன் அரவிந்த். சைபர்ல ஒரு கம்ப்லைன்ட் கொடுக்கணும். அது எதுவும் வேலைக்கு ஆகலைனா ஒரு டிடெக்ட்டிவை தான் பார்க்கணும்” என தேவா அவனுக்கு தெரிந்ததை சொன்னான்.​

“சரி” என்ற அரவிந்த், “நாங்க மூணு பேர் போய்ட்டு வரோம் வந்தனா. நீ பார்த்துக்கோ” என சாருவை பார்த்தான்.​

அழுகையில் கண்கள் கலங்கி நின்றிருந்தாள். ஆறு வருடங்களாய் ஒவ்வொரு வீடியோவிற்கும் கண்டெண்ட் யோசித்து, வீடியோ எடிட் செய்து எத்தனை நாட்கள் தூக்கத்தை இழந்திருக்கிறாள்.​

தற்சமயம் அவளின் சேனலிற்கு ஏழு லட்ச சப்ஸ்க்ரைபர்கள் இருந்தனர். ஆனால் இப்பொழுது அத்தனையும் ஒரே நொடியில் சரிந்தத்தை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.​

அனைத்தையும் யோசிக்க யோசிக்க பதட்டமும் கண்ணீரும் தான் சாருமதிக்கு கூடியது.​

‘முதல் முறை கிடைத்த சப்ஸ்க்ரைபர், போட்ட வீடியோவிற்கு வந்த கமென்ட், லைக்’ என அனைத்தையும் சாருமதியுடன் அரவிந்தனும் பார்த்திருக்கிறான். இப்பொழுது தங்கை கலங்குவது பொறுக்காமல், “பார்த்துக்கலாம் சாரு!” என்று அவளிடம் சமாதானமாக சொன்னான்.​

“அத்தை பாப்பாக்கு பால் கொடுத்துட்டேன். அழுதா பார்த்துக்கோங்க. நா…நாங்க போய்ட்டு வரோம்” என குரல் தழுதழுக்க செல்வராணியிடம் சொன்ன சாருமதி தேவாவுடனும் அரவிந்தனுடனும் கிளம்பிவிட்டாள்.​

கம்ப்ளைன்ட் கொடுக்க சென்ற இடத்தில், “இதை மாதிரி தினமும் நிறைய கேஸ் வருது. கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு போங்க… நாங்க விசாரிக்கிறோம்” என்ற பதில் அவர்களுக்கு உவப்பானதாக இல்லை.​

அங்கிருந்த ஒருவர், “இப்படி தான் சொல்லுவாங்க தம்பி, ஆனா இதை மாதிரி ஹேக் பண்ணி கண்டுபிடிக்காம போன கேஸ் தான் நிறைய இருக்கு…” என அவர் தேவாவிடம் கூறினார். பக்கத்தில் இருந்த சாருமதி அதைக்கேட்டு பதட்டத்தில் தேவாவின் கையை பிடித்துக்கொண்டாள்.​

“நீங்க எதுக்கோ தனியா வெளியேயும் விசாரிங்க…” என சொல்லிவிட்டு அவர் நகர்ந்தார். அதற்குள் செல்வராணியிடமிருந்து வான்மதி அழுவதாக அழைப்பு வர வீட்டிற்கு வந்துவிட்டனர்.​

“இவ்வளவு நேரம் ஒரே அழுகையா அழுதிட்டு இப்ப தான் தூங்குறா சாரு. உங்க ரூம்ல தான் தூங்குறா” என்றார் செல்வராணி.​

அறைக்குள் சென்று மகளை பார்த்துவிட்டு கூடத்தில் வந்து அமைதியாக அமர்ந்தாள் சாருமதி. வெளியே தான் அமைதியாக தெரிந்தால் மனதிற்குள் எரிமலையே வெடிக்க காத்திருந்தது.​

அங்கு நடந்ததை செல்வராணியிடமும் வந்தனாவிடமும் தேவா தெரிவித்தான். அனைத்தையும் கேட்ட வந்தனா,​

“விடுங்க அண்ணி! புதுசா ஒரு சேனல் ஸ்டார்ட் பண்ணி வீடியோ போடுங்க. அவ்வளவு தான?” என சாதாரணமாக கூறினாள்.​

படக்கென்று இருக்கையில் இருந்து எழுந்த சாருமதி, “என்ன சொல்லுறீங்க நீங்க? இது ஸ்கூல் ஹோம்வர்க்கோ? இல்ல காலேஜ் அசைன்மென்ட்டோ இல்லை! காணாம போய்டுச்சி, தொலைஞ்சி போய்டுச்சின்னு இன்னொருவாட்டி பண்ணுறதுக்கு…” என எண்ணையில் இட்ட கடுகாக படபடவென பொறிந்தாள்.​

“சாரு! அவ தெரியாம சொன்னதுக்கு இப்படி கத்தணுமா?” என அரவிந்த் கேட்டான்.​

“நான் கத்துறது மட்டும் தான் உனக்கு தெரியும். அவங்க சொன்னதை நீ கேட்டியா? எவ்வளவு சாதாரணமா சொல்லுறாங்க?” என கையை வீசி அண்ணனிடமும் கத்திவிட்டு அறைக்குள் சென்றாள்.​

தேவா, அரவிந்தை பெயர் சொல்லி கூப்பிட்டாலும் இதுவரை மரியாதையுடன் வாங்க, போங்க என்றே விழிப்பான். ஆனால் இப்பொழுது சாருமதி அனைவர் முன்னும் அவனை வா, போ என பேசியது செல்வராணிக்கு பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை தானே! என்று எண்ணினார்.​

அரவிந்த், வந்தனா இருவரிடமும், “அவ எதோ டென்ஷன்ல பேசுறா விடுங்க” என சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தாழிட்டான் தேவா.​

“பொறுமையா பேசு மதி! எதுக்கு எல்லார்கிட்டயும் கத்து…” என்று அவன் முடிக்கும் முன்,​

“ஓ! நீங்களுமா…? போனது என்னோட சேனல் தான…?” என மீண்டும் குதித்தவள், ஒரு நொடி நிறுத்தி நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவளது பார்வையே எதையோ உணர்த்த தேவாவின் மனது படபடப்பாகியது.​

“தேவ்! உங்களுக்கு தான் நான் வீடியோ போடுறது, எடிட் பண்ணுறதுன்னு எதுவுமே பிடிக்காதே! இப்ப நீங்க இதுக்கு சந்தோசபடணும் தேவ்…” என கசந்த முறுவல் செய்தவளை விழிவிரிய பார்த்தான்.​

“என்ன மதி உளருற? கொஞ்சநேரம் அமைதியா இரு…” என அதட்டி அவளின் வாயை மூட வைக்க முயன்றான்.​

“நான் எதுக்கு அமைதியா இருக்கணும்? உண்மைய தான சொல்லுறேன்…” என சீறியவள் மேலும்,​

“நான் ஒன்னும் உளரல தேவ்! தெளிவா தான் சொல்லுறேன். இனி நீங்க சொல்லுற மாதிரி தான் நடந்துப்பேன். உங்க கூடவே டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். நீங்க சொல்லுறதெல்லாம் செய்வேன். இதோ பாப்பா வந்ததுல இருந்து நான் வேலைக்கும் போறதில்லையே?” என அவ்வளவு நாள் மனதில் உறுத்தியதை கண்ணீருடன் குற்றச்சாட்டாய் வெளியேற்ற தொடங்கினாள்.​

அவளின் குற்றச்சாட்டு தேவாவை சுட்டாலும் அழுகையில் கரையும் தன்னவளின் கண்ணீரை துடைத்து அவளின் கைகளை பிடித்தவன்,​

“பைத்தியம் மாதிரி பண்ணாத மதி! சேனல் போனது எனக்கு மட்டும் சந்தோசமா என்ன?” என அடுத்து அவனின் நெஞ்சை சொல் அம்புகளால் குத்த போவதை அறியாமல் தேவா கேட்டான்.​

“ஆமா… நான் பைத்தியம் தான்! நான் பைத்தியம் தான்!” என வெறிப்பிடித்தவள் போல் கத்திக்கொண்டே அவன் பிடித்திருந்த அவளின் கையை உதறினாள். அவளின் இந்த செயலில் உறங்கும் குழந்தையையும் போட்ட தாழ்பாளையும் ஒருமுறை சரி பார்த்துக்கொண்டவன் மனதெல்லாம் வலித்தது.​

“சொல்லுங்க? என்னோட சேனலுக்காக என்ன செய்திருக்கீங்க? ஹான்? சொல்லுங்க தேவ் சொல்லுங்க?” என அவனின் சட்டையை பிடித்து கேட்டவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.​

இப்படி ஆகும் என்று அவன் கனவா கண்டான். இதுவரை சொன்னது பத்தாது என்றுணர்ந்தாலோ என்னவோ இறுதியாக, “சேனல் போனது வருத்தம்ன்னு சொல்லுறீங்க? சொல்லுங்க? இதுவரைக்கும் என்னோட சேனலை சப்ஸ்க்ரைபாவது பண்ணீருக்கீங்களா? சொல்லுங்க தேவ் சொல்லுங்க? அதுக்கூட பண்ணதில்லை தான?” என பிடித்திருந்த சட்டையை மேலும் உலுக்கி தேவாவை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்தது போல் சரமாரியாக கேள்வி கேட்டாள்.​

விளையாட்டாய் அவன் செய்தது வினையாகி அவனையே பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அவளின் கேள்வி ஒவ்வொன்றிலும் தேவா உள்ளுக்குள்ளே இறுகி கொண்டிருந்தான். இருந்தும் உடைந்து விடாமல், “மதி! ரிலாக்ஸ்! என்ன செய்யலாம்னு பார்க்கலாம்…” என அவளை தேற்ற முயன்றவனை தடுத்தவள்,​

“அதான் அவங்க சொல்லிட்டாங்களே… சே…சேனல் கிடைக்கிறது க…கஷ்டம்னு…” என முழுதாக உடைந்த குரலில் சொன்னவள்,​

சிறு குழந்தை போல், “ஆறு வருஷம் தேவ்…! ஆறு வருஷம்…! என்னோட சேனலை குழந்தை மாதிரி வளர்த்திருக்கேன்! இதுக்காக நமக்குள்ள கூட எவ்வளவு சண்டை வந்திருக்கு? இன்னைக்கு எவனோ ஒருத்தன் எங்கிருந்தோ அ…அதை எடுத்துகிட்டான்…” என உதட்டை பிதுக்கி தேம்பியபடியே உடல் குலுங்க அவனை கட்டிப்பிடித்து கதறி அழுதாள்.​

இது தானே! இதற்கு தானே ஓரளவு மேல் அதனை உபயோக படுத்தவிடாமல் அவளை கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ‘இன்று இப்படி உடைந்திருப்பவளை எப்படி சரி செய்ய?’ என்று அவனுக்கு சுத்தமாக புரியவே இல்லை.​

அவ்வளவு நேரம் அவனை குற்றம் சொன்னவள் இப்பொழுது அவனின் மார்பிலே சாய்ந்து அழுது தீர்த்தாள். சிறிது நேரத்தில் சற்று தெளிந்தவள் அவனின் முகம் பார்க்க கண்கள் இரண்டும் சிவந்து இறுக்கமாக இருந்தான்.​

அவனை அப்படி பார்த்த சாருமதியின் நெஞ்சுக்கூட சில்லிட்டது. “தே…தேவ்!” என சாரு அழைக்கவும் அவர்களின் குழந்தை அழவும் சரியாக இருந்தது.​

“பாப்பா அழுவுற பாரு” என அவளை நகர்த்திவிட்டு கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தான். உடை மட்டுமில்லாமல் அவனின் முகமும் அகமும் கூட கசங்கியிருந்தது.​

எப்பொழுதும் சரசமாக காதலாக கசக்கும் அவனின் சட்டையை இன்று கோபத்திலும் வலியிலும் கசக்கி தள்ளியிருந்தாள் அவனின் மனைவி. நொடியில் சட்டையை மாற்றிவிட்டு வெளியேறிவிட்டான்.​

அவ்வளவு நேரம் மனதின் குமுறல்களை கொட்டுவிட்ட தெளிவில் முகம் கழுவி வந்த சாருமதி அழுத பிள்ளைக்கு அமுதூட்டினாள்.​

மார்பை முட்டி முட்டி பால் குடிக்கும் சின்னவளின் செயலில் அவளின் மனபாரம் குறைவதை போல் உணர அப்படியே கண்ணை மூடி சுவற்றில் சாய்ந்தமர்ந்தாள்.​

செல்வராணி வற்புறுத்தி அவளை சாப்பிட வைக்க, “அவர் எங்க அத்தை? அண்ணா, அண்ணிலாம் சாப்டாச்சா?” என்றாள் யாரையும் காணாமல்.​

“தேவா ஃபோன் பேசிட்டு வெளிய பக்கத்துல போய்ட்டு வரேன்னு போனான். எல்லாரும் சாப்பிட்டாச்சி சாரு. நீ சாப்பிடு” என அவளை சாப்பிட வைத்தார்.​

“வாழ்க்கைல சில விஷயம் நம்மலையும் மீறி நடக்கும் சாரு. அதுக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எதிர்த்து போராடனும்” என அழுகையில் கலங்கியிருந்தவளின் முகத்தை பார்த்து சொன்னார். ‘சரி!’ என்று சாரு தலையசைக்க,​

“இனி மாப்பிள்ளைய எல்லார் முன்னாடியும் வா, போன்னு பேசாத சாரு!” என்று அவர் கண்டித்ததும் தான் வருத்தத்தில் அனைவரையும் வருத்தியிருப்பது உரைத்தது.​

அமைதியாக உண்டுவிட்டு அறைக்குள் வந்தவளிற்கு அனைவரிடமும் பேசியது, கத்தியது என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்தது.​

விளையாட்டாக சொன்னாலும் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவளின் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துவிட்டான் தேவா. ஆனால் சாருமதி தான் “வேண்டாம் தேவ்!” என கூறி தடுத்துவிட்டாள்.​

அதே போல், “வான்மதிக்கு ஒரு வயது முடிந்ததும் வேலைக்கு செல்கிறேன்…” என்று அவள் தான் தேவாவிடம் தெரிவித்திருந்தாள். ஆனால் இப்பொழுது எல்லா பழியையும் தூக்கி அவன் மேல் போட்டதில் தன் மீதே கோபம் வந்தது.​

பிரசவத்திற்கு பின் இருந்த அழுத்தம், சேனல் கைவிட்டு சென்ற ஏமாற்றம் என எல்லாவற்றிற்கும் சேர்த்து தேவாவை பேசியதை அவளால தாளமுடியவில்லை.​

மதியம் உணவிற்கும் தேவா வராமல் மாலை கடந்துதான் வந்தான். அவனின் முகம் மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் அதில் உள்ள சோர்வு சாருவின் கண்களுக்கு தப்பவில்லை.​

இரவில் தேவாவிடம் மன்னிப்பு கேட்டாள் சாருமதி. அவளின் முகம் பார்க்காமல், “விடு மதி. முதல்ல சேனலை மீட்டு கொண்டு வரலாம்” என்றான்.​

“ஆனா… அவங்க…” என சொல்ல முடியாமல் சாருமதி மென்று முழுங்கினாள்.​

“தப்பு பண்ணுறவங்களே இவ்வளவு யோசிக்கிறப்ப, நேர்மையா உழைச்ச உன்னோட உழைப்பு வீண் போகாது மதி!” என திடமாக அவளிடம் சொன்னவன் குழந்தை உறங்கியதை உறுதி செய்துவிட்டு படுத்துவிட்டான்.​

மறுநாள் டிடெக்ட்டிவ் ஒருவரை சென்று பார்த்தனர். “உங்க ஜிமெயில் பாஸ்வார்ட் எப்ப மாத்துனீங்க?” என்றார்.​

“இப்ப கடைசியா ஒரு வருடம் முன்னாடி மத்தினது” என்றாள் சாருமதி.​

“உங்க மெயிலுக்கு வந்த லிங்கை எதாவது கிளிக் பண்ணீங்களா?”​

“எனக்கு ப்ரோமோஷன் பண்ண சொல்லி நிறைய மெயில்ஸ் வரும். ஆனா நான் இதுவரைக்கும் என்னோட சேனல்ல ஒரு ப்ரோமோஷன் வீடியோ கூட போட்டது இல்லை. சேனல் ஹேக் ஆகுற முன்னாடி நாள் கூட ஒரு ப்ரோமோஷன் மெயில் வந்துச்சி அத தெரியாம ஓபன் பண்ணிட்டேன். ஆனா வேற எதுவும் பண்ணல…” என சாரு சொல்லிமுடித்தாள்.​

“என்னங்க நீங்க இவ்வளவு சாதாரணமா சொல்லுறீங்க? லிங்கை கிளிக் பண்ணேன்னு?” என்று சாருவை கேட்டார்.​

சாருமதிக்கு நன்றாக நினைவில் இருந்தது. அன்று ஜெயந்தியிடம் பேசும்பொழுது வான்மதி அழுதாள். உடனே ஃபோனை அணைக்கும் பொழுது தவறுதலாக அங்கிருந்த மெயிலை சரியாக பார்க்காமல் கிளிக் செய்து உள்ளே சென்றுவிட்டாள். ஆனால் அது இப்படியொரு விபரீத விளைவை உண்டு பண்ணும் என்றவளுக்கு தெரியவில்லை!​

‘அப்ப நான்தான்! என்னால தான்!’ என்ற குற்றவுணர்ச்சியில், “எ…எனக்கே தெ…தெரியாம பண்ணிட்டேன்…” என்றவளின் கையை அழுத்தி பிடித்துக்கொண்டான் தேவா.​

“ஹேக் பண்ணுறவங்க என்ன? நாங்க ஹேக் பண்ண போறோம்னா மெயில் போடுவாங்க? எல்லாம் ப்ரோமோஷன், விளம்பரம்னு தான் வரும் மேடம்” என்று சொன்னவர் மேலும் அவர்களுக்கு தேவையான தகவல்களை வாங்கிக்கொண்டு, “ரெண்டு நாள்ல என்னனு சொல்லுறோம்” என்றார்.​

சாருமதிக்கு நம்பிக்கையே இல்லை. இருந்தாலும் தேவாவின் கைபிடித்து அமர்ந்திருந்தவள், “சரி!” என்று கூறினாள்.​

இரண்டு நாட்களும் இரண்டு யுகமாக அவளுக்கு கடக்க, அந்த டிடெக்ட்டிவ் சேனல் மீட்டதாக தகவல் கொடுத்தார். உடனே சாருமதியும் தேவாவும் சென்றனர்.​

“உங்க சேனலை ஹேக் பண்ணி, உங்க வீடியோஸ் டெலிட் பண்ணிட்டு அவங்களோடதை அப்லோட் பண்ண பாத்திருக்கான். நாங்க ரெகவர் பண்ணதும் அதெல்லாம் எடுத்துட்டோம். உங்க வீடியோஸ் இப்ப ரெகவர் ஆகுது. ஆனா சப்ஸ்க்ரைபர் பாதியா குறைஞ்சிட்டாங்க! ஹேக் ஆனதால அன்சப்ஸ்க்ரைப் பண்ணிருக்கலாம்” என்று அனைத்தையும் படபடவென கூறிவிட்டு அவர்களின் மடிக்கணினியில் சாருமதியின் சேனலை காண்பித்தார்.​

நான்கு நாட்களுக்கு பிறகு சாருமதியின் முகத்தில் கீற்றுபோல் புன்னகை வந்தது. “ரொம்ப தேங்க்ஸ் சார்!” என்று கண்கலங்க கூறினாள்.​

“இதை யாரு பண்ணான்னு தெரியுமா சார்?” என்றான் தேவா.​

“இத மாதிரி வேலைய பண்ணுறவனுங்க திருட்டு லேப்டாப், ஃபோன்னு தான் யூஸ் பண்ணுவானுங்க… அதுனால சரியான ஆள் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் சார். இப்பலாம் இத மாதிரி நல்லா போகிட்டு இருக்கிற சேனலை ஹேக் பண்ணி அவனுங்க யூஸ் பண்ணிக்கிறானுங்க… ஃபிராடு நாய்ங்க” என்று திட்டினார்.​

“நீங்க பாஸ்வோர்ட் மாத்திட்டு யூஸ் பண்ணி பாருங்க. எதாவது சின்னதா வித்தியாசமா தோணினாலும் மறக்காம கேளுங்க…” என்று மேலும் கூறினார்.​

“ஹ்ம்ம் ஓகே” என்ற சாருமதி அங்கேயே அவளின் ஃபோனில் அதனை சரி செய்து பார்த்தவள் தேவாவிடம் ‘ஓகே!’ என்னும் விதமாக தலையை அசைத்தாள்.​

“மெயில் பாஸ்வோர்ட், பேங்க் அக்கௌன்ட் பாஸ்வார்ட் எல்லாத்தையும் மாத்திடுங்க. இப்ப மட்டுமில்ல முடிஞ்சளவுக்கு மூணு மாசத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு மாசத்துக்கு ஒரு முறைன்னு மாத்தி பழகுங்க. அது தான் நல்லது. வேலை செய்யுற இடத்துலேயே மாசம் மாசம் பாஸ்வோர்ட் மாத்துவோம். நம்ம சொந்த தகவலை பாத்துகிறதும் நம்ம வேலை தான்” என்றார் அறிவுரையாக. ‘சரி!’ என்று தலையசைத்து அவர்களுக்கான தொகையை செலுத்திவிட்டு விடைபெற்றனர்.​

சேனலை மீட்டு ஒருவாரம் சென்றிருந்தது. “சேனல் எப்படி மீட்கப்பட்டது?”, “தெரியாத லிங்கை கிளிக் செய்யாதீர்கள்!” என இரண்டு வீடியோக்களை சாருமதி பதிவேற்றினாள்.​

சிலர் அவளிடம் நலம் விசாரித்தார். சேனலை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் அதில் இணைந்தனர். ஆனால் இது அனைத்தையும் விட அவளுடன் உறுதுணையாக இருந்து சேனலை மீட்டுக்கொடுத்த தேவாவின் பாராமுகம் அவளை மிகவும் வாட்டியது.​

என்னதான் தேவா, குழந்தை, வீட்டு நிலவரம், அவளின் உடல்நிலை என பேசினாலும் அவனிடம் ஒரு விலகலை உணர்ந்தே இருந்தாள் சாருமதி.​

‘என்னோட சேனலுக்காக என்ன செஞ்சீங்க?’ என்று சொல் அம்புகளால் தேவாவின் இதயத்தை துளைத்தவளை சேனலை மீட்டு அவனின் செயல்களால் பதில் கூறிவிட்டான். ஆனால் சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாமல் சாருமதி தான் திணறி போனாள்.​

வேண்டுமென்றே இரவில் மடிக்கணினியில் அவள் அமர்ந்திருந்தாலும் அவன் கண்டுகொள்ளவில்லை. அன்று அவள் சொன்ன சொல் ஒவ்வொன்றும் அவனை மிகவும் காயப்படுத்தியிருந்தது.​

ஒருநாள் இரவு குழந்தையை தொட்டிலில் போட்டவிட்டு படுக்கைக்கு வந்த சாருவிடம், “நம்ம வீட்டு மாடில நீ ஏரோபிக் க்ளாஸ் எடுக்கிற மாதிரி கட்டலாம்னு இருக்கேன் மதி! உனக்கு ஏதாவது ப்ளான் இருந்தா சொல்லு…” என்று கேட்டான் தேவா.​

அவன் சொன்னதில் அதிர்ந்து விழித்தவள், “இப்ப எதுக்கு தேவ்? நான் தனியா க்ளாஸ் எடுக்கிற ஐடியால இல்லை!” என்றாள்.​

“இப்ப கட்ட ஸ்டார்ட் பண்ணா தான் பாப்பாவுக்கு ஒரு வயசு முடியுறப்ப முடியும். நீயும் யாருக்காகவும்… எதுக்காகவும்… உன்னோட வேலையை செய்யாம இருக்கவேணாம் மதி!” என்று அவளின் முகம் பார்க்காமல் சொன்னான். அன்று அவள் சொன்னதன் எதிரொலி தான் இது என்று சாருமதிக்கு நன்றாக புரிந்தது.​

“தேவ்! எதுக்கு இப்படிலாம் பண்ணுறீங்க? நான் அன்னைக்கு எதோ தெரியாம…” என்று முடிக்கும் முன் அவளை பார்த்தவன்,​

“அவ்வளவு நாள் அதெல்லாம் உன்னோட மனசுல இருந்திருக்கு மதி. அதான் அன்னைக்கு முழுசா வெளிய வந்துடுச்சி. இனி உன்னோட யூடியூப் பத்தி நான் எதுவும் பேசபோவது இல்லை!” என்றவன் அலைபேசியில் அவளின் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ததையும் காண்பித்தான்.​

தேவா அவளிடம் எதோ மூன்றாவது நபர் போல் நடந்துகொள்ள அவளுக்கு அழுகையாக வந்தது. அவனை பாய்ந்தணைத்தவள், “இப்படிலாம் பண்ணாதீங்க தேவ்! எனக்கு கஷ்டமா இருக்கு…” என்றாள் அவனின் மார்பில் முகம்புதைத்து.​

அவள் இப்படி மேலே விழுவாள் என அறியாதவன் பாலன்ஸ் இல்லாமல் கட்டிலில் விழ அவன் மேல் அவளும் விழுந்தாள். அவனின் மேல் நன்றாக படுத்த சாரு கையை அவனின் மார்பின் மேல் முட்டுக்கொடுத்து நிமிர்ந்து,​

“சா…சாரி தேவ்! நான் அப்படி பேசியிருக்க கூடாது!” என அவள் சொல்லின் வீரியம் அவளையே குத்திக்கிழித்தது.​

‘முடிந்தத்தை பற்றி எதற்கு பேச வேண்டும்’ என்று நினைத்தவன் “விடு மதி சரியாகிடும்” என்றான் பட்டும் படாமல்.​

“எப்படி தேவ் இவ்வளவு ஈஸியா சொல்லுறீங்க? நான் பேசுனதை என்னாலையே யோசிக்க கூட முடியல…” என கண்கள் கலங்கினாள். அவளின் அழுகையை பொருக்காதவன், தலை குனிந்தவளின் தடையை பிடித்து உயர்த்தி,​

“என்ன பண்ணுறது மதி? பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரம் ஏறணும்னு சொல்லுவங்களே அத மாதிரி தான்” என சொல்ல அழுகையை மறந்து அவனை முறைத்தவள்,​

“என்ன பேய்ன்னு சொல்லுறீங்களா?” என அவன் மார்பிலே குத்தினாள்.​

“ஆ! வலிக்கிது டி. நீ பேயே தான்” என்று அலறியவன்,​

“கல்யாணத்து பிறகான வாழ்க்கைன்றது எப்பவும் கொஞ்சிக்கிட்டே இருக்கிறதா மதி? இப்படி ஏதாவது தவறு நடக்கும் போது, ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லும் போது பொறுமையா இருந்து அந்த நிகழ்வை கடக்க முயலனும் மதி!” என்றவன்,​

“கிட்டத்தட்ட இதுவும் ஸ்டாக் மார்க்கெட் மாதிரி தான். எப்பவும் ஏற்றம் மட்டுமே இருக்காது தான? ஸ்டாக்ல சரிவு வரப்ப பொறுமையா இருந்தா மட்டும் தான் நாம எதிர்பார்க்கிற லாபம் வரும்” என்றான்.​

“நாடி நிரம்பு முழுக்க ஸ்டாக் மார்க்கெட் தான் ஊறி போயிருக்கும் போல…” என கிண்டலுடன் சொல்லிவிட்டு,​

“நான் திரும்பி கொஞ்சநாள் கழிச்சி சண்டை போட்டாலும் இப்ப மாதிரி அமைதியா இருப்பீங்களா?” என்றும் வேறு கேட்டாள்.​

“தெரியலை மதி. இப்ப நடந்ததுல நீ நீயாவே இல்ல! சேனல் போனதுல அவ்ளோ ஸ்ட்ரெஸ்ல இருந்ததால உன்னை ஈஸியா மன்னிச்சிட்டேன். ஆனா இதே மாதிரி எப்பவும் இருப்பனானு தெரியல…” என கண்ணடித்து கூறினான்.​

“அதெல்லாம் முடியாது அப்பவும் அமைதியா தான் இருக்கணும்.​

அதிகமா யோசிக்கிற மதி!​

அமைதியா இருக்கிற தேவ்!​

மேக்ஸ் பெஸ்ட் கப்பில்!” என்று கூறி அவனின் இரு கன்னத்தை கிள்ளி சிரிக்க, தேவாவும் உடன் சிரித்துவிட்டான்.​

அந்த சத்தத்தில் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த வான்மதி காலை உதைத்து லேசாக சிணுங்கினாள். சாருவின் வாயை வலக்கையினால் பொத்தியவன் அந்த தொட்டிலையே பார்த்தான்.​

சிறிது நேரத்தில் குழந்தை மீண்டும் உறங்க தொடங்கினாள்.​

அவளின் மூச்சு காற்று அவனின் கையை தீண்டி அவனுக்குள் பல உணர்வுகளை தட்டி எழுப்பியது.​

“உனக்கு கொழுப்பு கூடிடிச்சி மதி. அதான் அன்னைக்கு அவ்வளவு பேசியிருக்க? நம்ம வேற கலோரி பார்ன் பண்ணி ரொம்ப நாளாச்சே…?” என்றான் உல்லாசமாக கண்சிமிட்டி.​

“ஹான்! பொய் பொய் ஹேக் ஆகுறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி கூட…” என்று அரம்பித்தவள் அவனின் மோக பார்வையில் அப்படியே அமைதியாகிவிட்டாள்.​

அவ்வளவு நேரம் அவளின் தாக்குதலை தாங்கியவன் ஒரு இழுவையில் அவளை கீழிழுத்து அவளின் மேல் படர்ந்தான்.​

இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று கொய்திருக்க மெல்ல அவர்களின் இதழ்களும் இணைந்தன. நேரம் செல்ல செல்ல முத்தத்தின் வேகமும் தீவிரமும் கூடியது.​

இருவருமே மூச்சு காற்றுக்கு தவிக்க, ஒருவரின் மூச்சு காற்றான உயிர்காற்றை மற்றவர் ஏற்று கொண்டு முத்தத்தை மட்டுமில்லாமல் மொத்தத்தையும் கொள்ளைக்கொண்டனர்.​

கண்ணுக்கே தெரியாத ஓர் அற்ப பதரினால் அவர்களுள் உருவான சூறாவளியான ஊடல் அவர்களின் அன்பையும், புரிதலையும் சோதித்துவிட்டு கூடலில் கரையை கடந்து வலுவிழந்து நின்றது!​


 
Last edited:

Mathykarthy

Well-known member
தேவா சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

இவளுக்கு எப்போவும் இதே வேலை தான் யோசிக்காம அப்படி சொல்ல முடியாது அதிகமா யோசிச்சு வார்த்தையை கொட்டிட்டு அப்புறம் சாரி கேட்கிறது... 😬😬😬😬🥶🥶🥶🥶
பெஸ்ட் காம்போ வாம்... 😤😤😤

Super update ❣️
 

NNK-29

Moderator
தேவா சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

இவளுக்கு எப்போவும் இதே வேலை தான் யோசிக்காம அப்படி சொல்ல முடியாது அதிகமா யோசிச்சு வார்த்தையை கொட்டிட்டு அப்புறம் சாரி கேட்கிறது... 😬😬😬😬🥶🥶🥶🥶
பெஸ்ட் காம்போ வாம்... 😤😤😤

Super update ❣️
என்ன பண்ணுறது அவளோட டிசைனே அப்படி தான்😅😅😅

நன்றி dear❤️❤️❤️
 

Eswari

Active member
Nallaa sonnaa best combo nu oruththarey vittukkuduththu ponaa athukku peru vera. Yetho yenga dev nallavanaa erukkaan athanaala nee pozhachchi pora 😏😏😏😏
 

santhinagaraj

Well-known member
தேவா ஒவ்வொன்றையும் அழகா செயல்ல காட்டுகிறான்

இந்த மதிப்பு இதே வேலையா போச்சு எப்பவும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு எல்லாரையும் காயப்படுத்துறது
 

NNK-29

Moderator
தேவா ஒவ்வொன்றையும் அழகா செயல்ல காட்டுகிறான்

இந்த மதிப்பு இதே வேலையா போச்சு எப்பவும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு எல்லாரையும் காயப்படுத்துறது
நன்றி dear❤️❤️❤️
 
Top