அத்தியாயம் - 01
“ஏய் புள்ள சிட்டு.. அடியே சிட்டு.. வீட்டுல இருக்கியா?..” என்று ஒருவித பதட்டம் படிந்த குரலில் அழைத்தவறே, தன் மிதிவண்டியை வீட்டு வாயிலின் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அரக்க பறக்க தன் தோழியின் இல்லத்திற்குள் நுழைந்தால் பூவழகி.
“வாம்மா பூவு என்னாச்சு?. வரும்போது என் பிள்ளையோட பேர ஏலம் விட்டுக்கிட்டே வர.” என்று சிட்டுவின் தாய் அன்னம் தன்மையாக கேட்கவும் சற்று நிதானித்தவள்,
“ஒன்னும் இல்லம்மா சிட்டு வீட்ல இல்லையா?.”
“உள்ளார தான் கண்ணு இருக்கா. அவங்க அப்பனுக்கு வயலுக்கு கஞ்சி கொண்டு போகணுமில்ல, அதுக்கு சமைச்சுக்கிட்டு இருக்கா?.”
“சரிங்க சரிங்கம்மா..” என்று உரைத்த பூவின் குரலில் ஒருவித தடுமாற்றம் தெரிய, புருவம் முடிச்சுகள் விழ பூவலகியை கூர்ந்து கவனித்தார் அன்னம்.
“ஏன் கண்ணு பூவு. எதுவும் பிரச்சனையா?. உன் குரலையும் வார்த்தைளையும் தடுமாற்றம் தெரியுதே!.”
வாடிய முகமாய் தன் தலையை மேலும் கீழும் ஆட்டி “ஆமாம்” எனும் விதமாய் தலையசைத்தவள் “ஆமாம்மா பிரச்சனை தான்!. அது வந்து என்னன்னா?.” என்று தான் சொல்ல வந்த வார்த்தை மொத்தமும் தன் தொண்டைக் குழியில் மூழ்கி விட, தன் உயிர் தோழியை பற்றி பஞ்சாயத்து தலைவரான பூவின் தந்தையிடம் கொடுக்கப்பட்ட பிராதுவை சொல்வதற்கு கூட உடம்பு கூச துவண்டு நின்றால் பாவையவள்.
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும் -புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
ஆம் தன் தோழி சிட்டுவின் மேல் கொடுக்கப்பட்ட பிராது, அவளையும் அவளின் வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாய் அழிக்கக்கூடியது. அதை அவள் எப்படி கையாள போகிறாள். ஊரார் பேச்சிலிருந்து எப்படி மீளபோகிறாள் என்று சிந்திக்கையிலையே பெண்ணவளின் விழிகளில் உவர் நீர் தேங்கி நிற்க.
பூவழகியை மேலும் சோதிக்கும் விதமாய் டம்.. டம்.. டம்.. என்ற பெரும் பறை சத்தத்துடன் தண்டோரா காரன் சிட்டு வசிக்கும் தெருவில் வந்து நிற்கவும் திடுக்கிட்டார் அன்னம். தண்டோரா காரன் எழுப்பும் பறை சத்தம் வந்த திசையையும், இளையவள் ஆன பூவையும் மாற்றி மாற்றி சில மணித்துளிகள் குழப்பமாய் பார்த்துவிட்டு, தண்டோரா காரன் சொல்லும் செய்தியைக் கேட்க விரைந்து ஓடினார் அப்பெரிய மனிதி.
“அதாவது ஊர் பொதுமக்களுக்கு சொல்ல போற செய்தி என்னன்னா! பழனி அன்னத்தின் இரண்டாவது மகளான மீனா, தன்னுடைய கணவரான தங்கராசுவுக்கு சிட்டுவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்குமாறு புகார் மனு கொடுத்து இருக்கிறார். இதற்கான காரணம் என்னன்னு ஊரார் முன்னாடி சொல்லுறேன்னு சொல்லி இருக்காங்க. அதனால மாலை அஞ்சு மணிக்கு பஞ்சாயத்து கூட்டம் கூடும். பெரியோர்கள் எல்லோரும் பஞ்சாயத்தின் முடிவை கேட்க கட்டாயம் வந்திடனும் சாமியோ.” டம்.. டம்..டம்.. என்று உரக்க கூறிவிட்டு இச்செய்தியை கூற அடுத்த தெருவிற்குள் நுழைந்தார் தண்டோரா காரர்.
பறையடிப்பவர் சொன்ன விடயத்தில் ஓர் கணம் அரண்டு போன அன்னம், “ஐயோ என் சாமி என் புள்ள வாழ்க்கையை இப்படி கேள்விக்குறியாக்க பாக்குறாளே அந்தப் படுபாவி. நான் தான் இவருக்கு இரண்டாம் தரமா வாக்கப்பட்டு, ஊரார் வாய்க்கு எல்லாம் ரெண்டாம் தாரம் ரெண்டாம் தாரம்னு பேரோட திரியறனா, என் புள்ள வாழ்க்கையையும் அப்படியே மாத்த பாக்குறாளே பாவி. அவ நல்லா இருப்பாளா?.” என்று பெரும் குரல் எடுத்து மனம் உடைந்து கதறி அழ ஆரம்பித்திருக்க.
அன்னத்தின் கதறலில், தன் தோழியின் வாழ்க்கையை நினைத்து பூவழகியின் விழிகளிலும் தேங்கி நின்ற கண்ணீர் கரை உடைந்து கன்னங்களில் பயணித்தது, உதடு துடிக்க தன் தோழியை காண சமையலறைக்குள் நுழைந்தாள்.
கைகள் இரண்டிலும் சிறிய அளவிலான இரண்டு உருளை வடிவ கட்டையை பிடித்து இடப்புறம் வலப்புறம் என மாற்றி மாற்றி சுழற்றி கோதுமை கலியை வாகாக் கிண்டிக் கொண்டிருந்தவளை பார்க்க பரிதாபமாக தோன்றவும், சட்டென்று அவளை பின்னிருந்து ஆதரவாக அணைத்தவள்,
“உன் அக்கா உனக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்கா தெரியுமா?. சிட்டு. தண்டோரகாரன் சொன்னது இந்த தெருவுக்கே கேட்டுச்சு, உனக்கு கேட்காமையா இருந்திருக்கும்.” என்று குரலில் வேதனையுடன் வினவினால் சிட்டுவின் ஆருயிர் தோழி.
தன் நட்பின் வலி தனக்கு ஏற்பட்ட வலி என்று சிட்டுவிற்காக துடிக்கும் பூவைக் கண்டு மெல்லிய புன்னகை பூத்தவள், “ஏன் கேட்காம, தண்டோரா காரன் சொன்னது எனக்கும் நல்லாவே கேட்டுச்சு. ஆனா அவர் கடைசியா ஒன்னு சொல்லிட்டு போனாரே. பிராது கொடுப்பதற்கான காரணம் என்னன்னு பஞ்சாயத்தில் சொல்லப்படுமுன்னு. அந்தக் காரணத்தை பற்றி தான் யோசிச்சேன். ஏன் பூவு?. என் அக்காகாரி என்ன புகார் கொடுத்தான்னு உனக்கு முழுசா தெரியும் தானே!.” என்று சரியாக சிட்டு யூகித்திருக்க.
பூவலகி கலங்கிய முகமாய் “ம்ம் தெரியும் புள்ள. புருஷன் பெண்டாட்டி பஞ்சாயத்து, அப்பா ஆத்தா பஞ்சாயத்து, சொத்து பஞ்சாயத்து, இளவட்ட பசங்க பஞ்சாயத்துனா சுழுவா முடிச்சிடலாம். ஆனா! இது வயசு பொண்ண பத்தின காரியம். நீ எதுக்கும் உன் கைப்பட எழுதி தாமான்னு, என் அப்பா உங்க அக்கா கிட்ட எழுதி வாங்கிய புகார் கடிதத்தை நான் தான் படிச்சேன். படிக்கும் போதே உன் அக்காவை கொல்லுற அளவுக்கு வெறி வந்துடுச்சு. அவயெல்லாம் மனுஷியே கிடையாது. ச்சே..” என்றவளின் குரல் ஆதங்கமும் அழுகையுமாக ஒலித்தது.
“ம்ப்ச்ச் சும்மா சும்மா அழுக கூடாது பூவு. ஒரு பிரச்சனை வந்தாச்சுன்னா! அந்த பிரச்சனைக்கு தீர்வு என்னன்னு தான் தேடணும். சரி நேரடியா விஷயத்த சொல்லு, மீனா அப்படி என்னதான் என் மேல புகார் கொடுத்திருக்கா?.” என்று சிட்டு அழுத்தம் திருத்தமாக வினவவும். மீனா கொடுத்த மொத்த புகாரையும் கொட்ட துவங்கினால் பூவு.
“என் கணவர் தங்கராசுவும், என் தங்கையும் காதலிக்கிறாங்க. என் புருஷனுக்கு என்னைய விட என் தங்கச்சியை தான் ரொம்ப பிடிச்சிருக்கு. நானும் மனசு ஒத்து இவங்க ரெண்டு பேரோட திருமணத்தையும் நடத்தி வைக்கிறேன். இதுக்கு என் அப்பா ஆத்தா சம்மதம் வேணும்னு. அதுக்காக பஞ்சாயத்தை நாடுறேன்னு எழுதிக் கொடுத்திருக்காங்க.” என்று புகார் மனுவை மொழியும் போதே பூவின் குரல் தழுதழுத்து ஒலித்தது.
தண்டோரா காரர் மொழிந்து விட்டு சென்ற செய்தியை கேட்டதும், தெருவில் குழுமியுள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி முணுமுணுக்கத் துவங்கி விட, அதைப் பார்க்கவும் கேட்கவும் இயலாமல் துவண்டு போய் வீட்டிற்குள் நுழைந்த அன்னத்திற்கு, பூவலகி சொன்ன செய்தி பெரும் இடியாக இறங்கவே, உடைந்தே போய் ஒரு தாயாய் அரற்ற துவங்கிவிட்டார். “கருப்பா கேட்டியா! என் புள்ள மேல இப்படி அபாண்டமா பழியை தூக்கி போட்டுருக்காளே, அந்த சிறுக்கி. கட்டின பொண்டாட்டியே தான் புருஷன் இன்னொருத்தி கூட பழகுறான்னு சொன்னா இந்த ஊரு நம்பாம இருக்குமா!. இந்தப் பிள்ளையை இனிமேல் யார் கல்யாணம் பண்ணிக்குவா. என் புள்ள வாழ்க்கையே அழிச்சிட்டாலே. இனிமேல் அவளை சும்மா விடமாட்டேன். எனக்கு தாலி கட்டி இந்த வீட்டுக்கு மூத்த குடி பிள்ளையை பார்த்துகோன்னு கூட்டிட்டு வந்தானே என் புருஷன், அவன் இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்.” என்று தன் கேசத்தை அள்ளி இறுககொண்டையிட்டு தன்னவனிடம் முறையிட கிளம்ப எத்தனித்த தன் தாயை தடுத்திருந்தால் சிட்டு,
“இங்க பாரும்மா நீ அழுது ஒப்பாரி வைக்கிறதுனால இங்க ஒன்னும் மாறிட போறதில்ல. அதே மாதிரி நீ அப்பாகிட்ட போய் நியாயம் கேட்டேன்னா, அவரு எனக்காக பேசுறதா! மீனாக்காக பேசுறதுதான்னு தெரியாம முழிக்கத்தான் செய்வாரு. அதுவுமில்லாம மீனாவே அவ புருஷனை கட்டி வைக்கிறேன்னு சொல்லும்போது நீயேன் தடுக்குறேன்னு உன் வாயை அடைப்பாரு. எப்பவுமே அவருக்கு மீனா ஒசத்தி தான். இந்த தடவை மீனாவுடைய முகத்திரையை கிழிக்கணும். அதுக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும்மா. இந்த ஊர் முன்னாடியே அவ கொடுத்த பிராது பொய்யின்னு நிரூபிக்கிறேன்.” என்று அழுத்தமாக மொழிந்த தன் மகளிடம்,
“அது எப்படி முடியும் சிட்டு. நீ என்னதான் சொன்னாலும் பஞ்சாயத்துல அவ்வளவு எளிதா எதையும் நம்ப மாட்டாங்க கண்ணு. நீ வாட்டுக்கு ஊர்ல படிச்சிட்டு இருந்த. நான் தான் வம்படியா லீவுக்கு வானு உன்னை இழுத்து, இப்படி ஒரு பிரச்சனையில் சிக்க வச்சுட்டேன்.” என்ற அன்னத்தின் அழுகை ஓய்ந்த பாடில்லை.
தன் தாயின் அழுகையைக் காண சகியாமல் நீண்ட பெருமூச்சு ஒன்று இழுத்து விட்ட சிட்டு,
நானும் என் மாமாவும் காதலிக்கிறோமா?. ஒருத்தர் திருமணத்திற்கு பிறகு இன்னொரு உறவை நாடும் போது அது காதல் ஆகுமா!. என் அக்கா புகார் கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சு கொடுத்திருக்கலாம் என்ற சிந்தனையில் லயித்திருந்தவள், “இந்த புகாருல என் மாமாவும் கையெழுத்து போட்டு இருக்காரா? பூவு.” என்று கூர்மையாக வினவவும், இல்லை எனும் விதமாய் இருபுறமும் தலையாட்டி மறுப்பு தெரிவித்தால் பூவு.
உன் கூட நடக்கறேன்
உன்ன சுத்தி நடக்கறேன்
வேறேதும் தோனால
இப்போ நானும் நான் இல்ல
எத்தனை எத்தனை நட்சத்திரம்
எண்ணி தானா பாக்கணுமே
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்
வாழ்ந்து காட்டுனுமே
அழகா படச்சி குடுத்தேன் உயிரே
அது தான் வரமும் கொடுக்கும் உறவே
என்று பவானியில் இருந்து குறிச்சி செல்லும் பேருந்தில் சத்தமாக பாடல் ஒலித்துக் கொண்டே வரவும். தான் தன்னவளுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்ட பாடலைக் கேட்க கேட்க முகம் இறுக, ஜன்னல் வலியாக நுழைந்து தன்னை தழுவும் தென்றலைக் கூட ரசிக்க மனம் இல்லாமல் உணர்ச்சி துடைத்து அமர்ந்திருந்தான் அரவிந்த்.
“டிக்கெட் டிக்கெட்” என்று நடத்துனரின் குரல் கேட்கவும் இலகுவானவன் “ஒரு குறிச்சி தாங்க அண்ணா.” என்று கேட்க.
“என்ன அரவிந்த் தம்பி எப்பயும் போல அசலூரில் வேலை போல.”
“ஆமா அண்ணா பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்க ஆள் இல்லைன்னு கூப்பிட்டாங்க. அதான் போயிட்டு வரேன்.”
“நம்ம ஊர்ல இல்லாத வேலையாப்பா?. நீ எதுக்கு அவ்வளவு தூரம் போற.” என்று நடத்துனர் அரவிந்தின் மேல் உள்ள அக்கறையில் கனிவாக வினவவும்,
“அட ஏண்ணா நீங்க வேற. இங்க எந்த தோட்டத்துக்கு வேலைக்கு போனாலும் அவனை பொட்ட பொட்டனு தான் கூப்பிடுவாங்க. அந்தப் பெயரைக் கேட்க பிடிக்காம தான் அவன் ஊரை விட்டு ஓடி போறான்.” என்று பின்னாடி இருக்கையில் இருந்து ஒருவன் குரல் கொடுக்கவும், அரவிந்தின் முகம் மீண்டும் இறுக்கத்தை தழுவியது.
“எவன்லே அவன். பொண்டாட்டி ஓடிப் போனா அவன் பொட்ட பையன் தானா. அவ கொழுப்பு எடுத்து போனதுக்கு இவன் என்னலே செய்வான்.” என்று அரவிந்திற்காக குரல் கொடுத்த நடத்துனரை தடுத்தவன்,
“வேணாம் அண்ணா. இவனுங்க எல்லாம் என்னதான் சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள். அவனுங்க சாதி பெயரை காப்பாத்த போட்டுட்டு திரியிற முகமூடி இது.” என்று அழுத்தமாக மொழிந்தவனை அர்த்தமாக பார்த்தவர், “என்ன தம்பி சொல்லுற நீ.”
“இத்தனை வருஷம் இந்த ஊர் வழியில பஸ் கண்டக்டரா இருக்கீங்க. உங்களுக்கு இந்த ஊர் மனுஷங்களை பத்தி தெரியாமையா இருக்கும். கண்டிப்பா எல்லா உண்மையும் ஒருநாள் வெளியே வரும் அண்ணா.”
“சரிதான் தம்பி. நிச்சயம் உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.” என்று தன்மையாக மொழிந்தவர் அடுத்த பயணியிடம் பயணச்சீட்டு கொடுக்க நகர்ந்து விட்டார் நடத்துனர் அன்பழகன்.
Last edited by a moderator: