எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் -கதை திரி 12

NNK-50

Moderator
மிஞ்சியின் முத்தங்கள் - 12

1709995469051.jpeg


“ஆதி இதைப் பாருப்பா” என்றார் பார்வதி தன் கையில் இருந்த தாலிக்கொடியை காண்பித்து, வீடியோ காலில் இருந்தவன் விழிகள் கொடிமலரின் இருந்து மீண்டு தாயின் கையில் இருந்த செயினில் பதிந்தது அவர் வைத்திருந்த ஐந்து செயினில் ஒன்றை கைக்காண்பித்தான்.

நகை எடுக்க வந்திருந்தார்கள் இன்று, இரண்டு நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் உடைகள் எடுத்திருந்தனர் இத்தனை பவன் வேண்டும் இந்த மாதிரிச் சீர் வேண்டும் என்றெல்லாம் எந்த நிர்பந்தமும் வைக்கவில்லை.

சுகுமாரும் முத்துவும் தங்கைக்கென்று முடிவு செய்ததை அவர்களின் மனைவிகள் உடன் நின்று தேர்ந்தெடுத்தனர்


தாலிக்கொடியை எடுத்தபிறகு “கொலுசையும் எடுத்துடலாம் இன்னைக்கே” என்றாள் செல்வி.

“அதுவும் சரிதான் இங்கேயே எடுத்துடலாம்” என்றார் பார்வதி.

நல்ல சலங்கை கொலுசாகப் பார்த்து எடுக்க “மா கொலுசுல முத்து இல்லாம எடுங்க” என்றான் அதிவீரன்.

அவனை நிமிர்ந்து பார்த்தாள் கொடிமலர் “என்ன” என்றவனின் புருவம் உயர்த்தலில் சட்டென்று குனிந்துகொண்டாள்.


“ஏன்பா சலங்கை கொலுசு போட்டாத்தானே நல்லா இருக்கும்” என்றார் பாரதி.

“வேண்டாம்மா சத்தம் வராத கொலுசு எடுங்க” என்றவன் அங்கிருந்த டிசைனில் ஒன்றை தேர்வு செய்தான், சின்ன சின்ன மணிகள் கோர்த்து முன்னிலும் பின்னிலும் இரண்டே இரண்டு பூக்கள் மட்டும் உள்ள கொலுசு, அந்தப் பூக்களில் நீல நிற கற்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

“அதை எடுங்க” என்றான்.

அவனின் தேர்வில் அனைவரும் மெச்சிக்கொண்டனர் “தம்பிக்குச் சத்தம் பிடிக்காது போல” என்றாள் வள்ளி மெல்ல, அனைவரும் சிரிக்க கொடிமலர் அதிகமாகச் சிவக்க தொடங்கினாள்.

“அப்படியே நல்ல டிசைன்ல மெட்டி காட்டுமா” என்றார் பார்வதி.


“நிறைய முத்துக்கள் இருக்குற மெட்டி காட்டுங்க” என்றவனை அவள் ஆச்சர்யமாக மீண்டும் நிமிர்ந்து பார்க்க வசீகரிக்கும் புன்னகையோடு கண்சிமிட்டினான் அவளைப் பார்த்து.

“அடிதூள் தம்பி ஒரு முடிவோடதான் இருக்கார் நமக்குத்தான் ஒன்னும் தெரியல செல்வி” என்றாள் சுமதி.

வெட்கத்தை எங்கே ஒளித்துவைக்க என்று தெரியாமல் அக்காவின் பின்னால் ஒளிந்துகொண்டாள் கொடிமலர்.

அவன் விருப்பப்படியே முத்துக்கள் நிறைந்த மெட்டியை எடுத்துக்கொண்டார் பார்வதி, கல்யாண கனவுகள் பெண்ணவளின் நெஞ்சத்தை நிறைக்க திருமணநாள் அழகாக விடிந்தது.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே ஊருக்கு வந்துவிட்டாலும் அவளைப் பார்க்க வீட்டிற்கு செல்லவில்லை அதிவீரன், காத்திருந்தான் இந்த நொடிக்காக… அவளை நேரில் பார்ப்பது திருமணக்கோலத்தில் மட்டுமே என்ற பிடிவாதத்தோடு.


அடர் பச்சை நிற புடவையில் அவன் மனதை பறித்தாள் கொடிமலர், தங்களின் குட்டி தங்கையின் திருமணத்தை விமர்சியாகவே செய்தனர் சுகுமாரும் முத்துவும், பெரிய மண்டபம் நகை நட்டு வண்டி நிறைய சீர் அருமையான விருந்து என்று அமோகமாகச் செய்தனர்.

காத்திருந்து கரம் பிடித்துவிட்டான் அவன் தேன்மிட்டாயை, மெட்டியை கால் விரலில் மாட்டும்போது அந்த மச்சத்தை மெல்ல வருடியது அவன் விரல்கள், இந்தமுறை பாதத்தை இழுத்துக்கொள்ள முடியாமல் இதழ் கடித்தாள் மலர்.

பெண்ணை அழைத்துச்செல்ல நேரம் நெருங்க நெருங்க அனைவரின் விழிகளும் நிறைய தொடங்கியது சுமதியும் கஸ்தூரியும் தங்கையைக் கட்டிக்கொண்டு அழுதனர்.

“பாப்பா கூட்டுக்குடும்பம் அப்படி இப்படி இருந்தாலும் கொஞ்சம் அனுசரிச்சு போடா உனக்குச் சொல்ல வேண்டாம் இருந்தாலும் சொல்றேன் பெரியவங்க ஏதாவது பேசினாலும் முகம் காட்டாத உன் அத்தை நல்ல விதமா இருக்காங்க அவங்களை பிடிச்சுக்கோ, மாப்ள பத்தி கவலை இல்லை உன்னைத் தங்கமா தாங்குவாரு, தினமும்

போன் போடு” என்று அழுகையுடன் சொல்லி முடித்தார்கள்.


சுகுமாரும் முத்துவும் அழுகையை அடக்கி நிற்க அந்த அழுத்தம் அவர்கள் உடல் மொழியில் தெரிந்தது, கண்கள் சிவந்து உள்ளேயே உணர்வுகளை அடக்கி வைத்திருந்தனர், மகளாகப் பாவித்து வளர்த்தவர்கள் அவளின் பிரிவு சிறிய வலி அல்லவே.

அக்கா மாமா அனைவரிடமும் ஆசி வாங்கிக்கொண்டாள் கொடிமலர், நேரே அண்ணன்களிடம் வந்தவள் “அண்ணா…” என்றழைக்க அவளை அப்படியே தோளோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான் சுகுமார், முத்துவும் அந்தப் பக்கம் அணைத்துக்கொண்டான்.


“சந்தோஷமா போய் வாழுங்க பாப்பா எந்தக் குறையும் இல்லாம நல்லா இருடா இங்க பாரு எதுனாலும் ஒரு போன் போடு உடனே வந்துடுவோம் சரியா, உனக்கே புள்ள பொறந்தாலும் நீ எங்களுக்கு எப்போவும் சின்னப் பிள்ளைதான் பத்திரமா இருங்க” என்றவன் “பாத்துக்கோங்க மாப்ள” என்றபோது குரல் இடறியது இருவருக்கும்.

அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டான் அதிவீரன் ஆதரவாக,

இன்று காலை மண்டபம் வந்தபிறகு மச்சான் இருவரையும் அவர்களின் மனைவியரோடு சேர்த்து நிறுத்திக் கல்யாணப்பரிசை கொடுத்திருந்தான், இத்தனை நாட்களாக அலைப்பேசியில் மட்டுமே அவனிடம் பேசியிருந்தனர் செல்வியும் வள்ளியும், இந்தக் குறுகிய நாட்களிலே உடன் பிறந்தவன் போல அன்பால் அவர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டான் ஆதி.


முதல்முறையாக அவனுடன் ஒன்றாகப் பயணம், காரில் அமர்ந்திருந்தவளிடம் அதிகப்படியான பதட்டம் அமைதியாக அமர்ந்திருந்தவன் மெல்ல கை நீட்டி அவள் கரங்களைக் கோர்த்துக்கொண்டான் ‘நான் இருக்கிறேன்’ என்பதாக.

“என்ன செய்யப் பையன் ஜாதக்கத்தோட இந்தப் பொண்ணு ஜாதகம் தான் சேருது, அவனுக்கும் இந்தச் சித்திரை மாசம் வந்தா முப்பது வயசு ஆகுது அதான் இந்தத் தடவ அவன் ஊருக்குப் போறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுடலாம்னு செஞ்சிட்டேன்” என்று பெருமை பேசினார் ராஜவேலு வந்திருந்த உறவுகளிடம்.

“பொழப்பற்ற நாசுவன் பொண்டாட்டி தலையைச் செரச்சானாம்… அப்படிதான் இருக்கு உன் புருஷன் கதை” என்றார் பார்த்திபன் தன் அக்கா பார்வதியிடம்.

“ஏலே உன் மாமாடா” என்றவர் தமையனை முறைக்க.

“அப்போ அப்போ ஞாபகப்படுத்து இல்லனா மறந்துடுவேன்” என்றவர்.

“இவர் என்ன சாதனை செஞ்சிட்டார்ன்னு இப்போ அவருக்கு அவரே போஸ்டர் ஓட்டுறாரு” என்றார் மாமனை பார்த்துக்கொண்டே.

“அட சும்மா இருடா ஏதோ இப்போதான் என் மகனுக்கு ஒரு நல்லது நடந்திருக்குன்னு நானே நிம்மதியா இருக்கேன், கடைசில தங்க விக்கிரகம் மாதிரி ஒரு மஹாலக்ஷ்மியை வீட்டுக்குக் கொண்டுவந்துருக்கான்”.

“ஆனாலும் தம்பி நீ கொண்டு வந்த சம்பந்தம் ரொம்ப அருமை, மருமவளை எனக்கு அவ்ளோ பிடிச்சுருக்கு” என்றார் மகிழ்ச்சி தளும்ப.

“சரியாப்போச்சு நா கொண்டுவந்த சம்பந்தமா?? என் மாப்ள அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டான் கொடிமலர்தான் அவன் பொண்டாட்டின்னு”.

“அவன் நடத்திக்கிட்ட அவனோட கல்யாணத்துக்கு எல்லாரும் பட்டுக்கட்டி பல்ல ஈன்னு காமிச்சு போஸ் கொடுத்து வயிறார சாப்பிட்டு வந்து வம்பு பேசிட்டு இருக்காங்க” என்க.

தமையனை ஆச்சர்யமாகப் பார்த்த பார்வதி “அஞ்சு வருஷமா!!!! என் புள்ள மனசுல இந்த ஆசை இத்தனை வருஷமா இருந்திருக்கா!, ஏண்டா அஞ்சு வர்ஷம் முன்னாடியே உனக்குத் தெரியும்னா அப்போவே என் மவனுக்கு கல்யாணம் பண்ணிருக்கலாம்ல இப்போ ரெண்டு புள்ள இருந்துருக்கும்”.

“எப்போவும் என்னைச் சொல்லுவ உனக்குத்தான் புத்தி இல்ல” என்ற அக்காவை எதைக் கொண்டு அடிக்க என்று பார்த்த பார்த்திபன்.

“அந்தப் புள்ள அப்போ பத்தாப்பு படிச்சுட்டு இருந்துச்சு, சின்னப் புள்ளய கல்யாணம் பேசினாங்கன்னு உன் புருஷனையும் உன்னையும் தூக்கி உள்ள வெச்சிருப்பாங்க” என்க.

“ஆமால!” என்று அசடு வழிந்தவர் “ஆனா இந்த மனுஷன் கல்யாணத்துக்கு பொண்ணு பாத்தேன் ஜாதகம் சரியா இல்ல, சரியா இல்லன்னே நாலு வருஷமா சொல்லிட்டு இருந்தாரேடா, ஒரு வேலை உண்மையா இருக்குமோ” என்ற அக்காவைப் பார்த்த பார்த்திபன் தலையில் அடித்துக்கொண்டு.

“ஊரையே அடிச்சு ஓலைல போடுற மனுஷனுக்கு…… உரியோடு சேந்து ஊறுகாயும் பறந்துச்சுன்னு சொன்னா நம்புற பொண்டாட்டி” என்றார் கடுப்பாக.

அப்படியென்றால் தன் கணவர் இத்தனை நாட்களாகப் பொய் சொன்னாரா?, மகனுக்குத் திருமணம் செய்ய அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததா “ஏன்” என்ற கேள்வி பார்வதியின் மண்டையை குடைந்தது.

அதிவீரன் ராஜவேலுவை அவதானித்தான், உண்மை யாருக்கும் தெரியாது என்ற தைரியமா இல்லை யாரிடமும் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கையா எது இவரை இப்படி சாதாரணமாக நடமாட வைக்கிறது என்ற யோசனை ஓடியது.

அந்த வீட்டிற்கு இப்பொழுதும் போகிறாரா என்பது அவனுக்குத் தெரியவில்லை, வேறு ஒருவரிடம் கூறி கண்காணிக்க முடியாதே அப்படியான தவறு அல்லவே அது, மீண்டும் என்ன தவறு செய்கிறார் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற சிந்தனையே அவனிடம்.“மாப்ள…” என்று பார்த்திபன் உலுக்க “ஆங் என்ன மாமா” என்றான் உணர்வுபெற்றவனாக.

“சரியாப்போச்சு போ எவ்ளோ நேரமா கூப்பிடுறோம் என்ன கனவா!” என்றவர் “ரூமுக்கு போய்க் கொஞ்சம்நேரம் தூங்கி எழு மலர் வீட்டில இருந்து சீர் கொண்டுவருவங்க சாயந்திரம் அவங்களுக்கு விருந்து இருக்குல்ல” என்க.

அவன் திரும்பி மனைவியைப் பார்த்தான் “மலர் என்கூட இருக்கட்டும் ஆதி நீ ரூமுக்கு போ” என்ற ஆதிலட்சுமி அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.

நிர்மலா தாய் வீட்டில் இருக்கிறாள் காலைத் திருமணத்திற்கு வந்தவள் சோர்வாக இருப்பதாகக் கூறி வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

“இங்கேயே இரு இன்னைக்கு ஒருநாள், நாளைக்கு இல்லனா சாயந்திரம் போகலாம் விருந்து இருக்கு” என்றார் பார்வதி.

“இல்லத்த இங்க ஒரே சத்தமா இருக்கும் ஆளுங்க வந்து போய் இருப்பாங்க எனக்குத் தூங்கணும்” என்றாள்.

“மா…” என்ற ஆதியின் அழைப்பில் அவனைப் பார்த்த பார்வதி புரிந்துகொண்டு “உன் இஷ்டம்மா” என்றுவிட்டு அடுத்த வேலை பார்க்கச் சென்றுவிட்டார்.

‘தன்னை கெஞ்சுவார்கள் கொஞ்சம்நேரம் போவதாக நாடகம் போடலாம்’ என்று எண்ணியிருந்தாள், இங்கானால் ‘போகிறாயா போ’ என்றுவிட உடனே கிளம்பிவிட்டாள்.

“நங்கள் இரவுதான் வருவோம் பத்திரமாக இரு” என்று அனுப்பிவிட்டார் அவளின் தாயார்.

‘எப்பொழுது போவது’ என்று வாசலையே பார்த்து நின்ற சுகுமார் “ஏங்க நேரமாச்சு போலாமா” என்ற செல்வியின் குரலில் வாசலுக்கு ஓடினான், அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே பின்னில் வந்தார்கள் வள்ளியும் முத்துவும்.

தனியாக வேன் ஒன்று சொல்லியிருக்க சொந்தங்கள் அனைவரும் ஏறிக்கொண்டனர், காலையிலிருந்து தோழியுடனே நின்றாள் கயல்விழி, அவளுக்கு மலர் திருமணம் முடிந்து செல்வதில் பெரிதாக வருத்தமெல்லாம் இல்லை.

தோழி விரும்பிய வாழ்வு… அது கைகூடியதில் இவளும் மகிழ்ச்சியாக இருந்தாள், தாய் தந்தையுடன் கயல்விழியும் புறப்பட்டுவிட்டாள் வந்தவர்களுக்குச் சிறப்பான கவனிப்பே அதிவீரன் வீட்டில்.

பொருட்களை இறக்கி வைத்து விட்டு ஆண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, பெண்கள் உள்ளே சென்று மலருடன் அமர்ந்தனர் வந்தவர்களுக்குத் தோட்டத்தில் தடபுடலாகச் சமயல் நடந்துகொண்டிருந்தது.

விருந்து முடிந்து அனைவரிடமும் கூறிக்கொண்டு விடைபெற்றனர் மலரின் வீட்டினர், ஆதவன் நிர்மலாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டான் ஆதிலஷ்மியின் கணவன் அவள் வந்தே ஆக வேண்டும் என்று நிற்க அவளை அனுப்பி வைத்துவிட்டார் பார்வதி.

மருமகளை அவரே மாடிப்படியின் மேல் வரை கூட்டிச்சென்றுவிட்டு “அந்த ரூம்தான் இனிமே உன் ரூம் போமா” என்று அவளை அனுப்பிவைத்துவிட்டு கீழிறங்கினார்.

அறை வாயிலை நெருங்கியவள் வெளியில் நின்றே உள்ளே எட்டி பார்த்தாள் அறை நன்றாகத் திறந்தே இருந்தது சிறிய அளவிலான அலங்காரத்தோடு, கால்கள் அதற்க்கு மேல் அசைய மறுத்தது ‘இப்படியே கீழ போய்டலாமா’ என்றவள் யோசனையோடு திரும்ப அவளை ஒட்டிநின்றான் அவன்.

“எங்க தப்பிக்க பாக்குற தேன்மிட்டாய்” என்றான் அவள் செவிமடலில் மீசை உரச, மொத்தமாகச் சில்லிட்டது பெண்ணவள் தேகம் கையில் இருந்த பால் சொம்பு நழுவாமல் தன்னுடைய கையையும் வைத்துப் பிடித்துக்கொண்டான்.

அப்படியே அவளை நகர்த்தி அறையின் உள்ளே விட்டுக் கதவடைத்தவன் பால் சொம்பை மேசைமேல் வைத்துத் திரும்பி அவளைப் பார்த்தான், அதற்குள் வேர்த்துவிட்டது அவளுக்கு அழுத்துவிடுபவள் போல நின்றவளை பார்க்கப் பார்க்க அள்ளிக்கொள்ள ஆசை மூண்டது.

அவளைத் தாண்டிச் சென்றவன் பால்கனி கதவைத் திறந்து வைத்தான் சில்லென்ற காற்று மேனியை தழுவக் கொஞ்சம் நிதானித்தாள் கொடிமலர்.

“கொடி” என்றான் அங்கிருந்தே, அவள் நிமிர்ந்து பார்த்ததும் கை நீட்டினான் மெல்ல அடிவைத்து அவனை நெருங்கினாள், அருகில் பிடித்து நிறுத்தியவன் “என்னைப் பாத்தா அவ்ளோ பயமா இருக்கா கொடி” என்றான் மெல்ல.

“அப்படியில்ல” என்றாள் உடனே…

“ம்ம்…” என்றவன் சுவரில் சாய்ந்து அமர்ந்தான், அவன் கையைப் பிடித்துக்கொண்டே அவள் நிற்க “உக்காரு கொடி” என்றான்.

அவன் அருகில் அவள் அமர வர .

“அங்கயில்ல இங்க” என்று அவனின் எதிர்புறம் காண்பிக்க யோசனையாக அவனைப் பார்த்துக்கொண்டே எதிரில் அமர்ந்தாள்.

இமைக்காமல் அவளையே அவன் பார்த்திருக்க புடவை முந்தியை இறுக்கமாகப் பிடித்து அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.

அவன் கரங்கள் மெல்ல நீண்டு அவள் பாதங்களைப் பிடித்தது, கொடிமலர் அதிர்வோடு அவனைப் பார்க்கத் தன் மடிமீது அவள் பாதங்களை வைத்துக்கொண்டான், பேச்சே வரவில்லை அவளுக்கு வார்த்தைகள் உள்ளேயே சிக்கிக்கொண்டது.


முத்துக்கள் நிறைந்த அந்த மிஞ்சிய தட்டி மெல்ல ஓசையெழுப்பினான், விரல் கொண்டு மச்சத்தை வருடினான் அவள் பாதத்தை கைகளில் அழுத்திப் பிடித்துக்கொண்டு விழிமூடி சுவற்றில் சாய்ந்தான்.

‘என்னவாயிற்று!’ என்று அவனையே அவள் பார்த்திருக்க “பைத்தியம் பிடிச்சுடுச்சுன்னு தோணுதா” என்றான் அவளிடம் விழிகளைத் திறக்காமல்.

“இல்லை” என்று அவள் சிரம் ஆட “என் வாழ்க்கையிலே நான் ரொம்ப ஆசைப்பட்டு காத்திருந்து என்னை வந்து சேர்ந்தது நீ மட்டும்தான்” என்றான் ஆழ்ந்த குரலில்.

பெண்ணிற்கு அழுகை வந்தது விழிநீர் அவள் கண்ணாடி வளவிகளில் பட்டுத் தெரிந்தது, விழிகளைத் திறந்தவன் அவளைப் பார்த்துக்கொண்டே அழுத்தமாக அந்த மிஞ்சியில் தன் முதல் முத்தம் பதித்தான்.

முகத்தை மூடிக்கொண்டாள் கொடிமலர் “கொடி…” என்றவன் அழைப்பு வெகு அருகில் கேட்கக் கரங்களை விலக்காமல் அப்படியே இருந்தாள் அவள்.

“என்னோட பல வருஷ ஏக்கம் நீ” என்றவன் முடிக்கத் தேம்பலுடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் கொடிமலர், அவன் கைகளில் மிதந்ததையோ கட்டிலில் சரிந்ததையோ உணரவில்லை, அவள் விழிகளில் இதழ் பதித்தவனின் விரல்கள் மெல்ல மெல்ல அவளுள் தேடலைத் தொடங்கியது.

மிஞ்சியின் நாதம் சங்கீதமாய் அந்த அறையை நிறைக்க கொடிமலரில் தன்னை தொலைத்துக்கொண்டிருந்தான் அதிவீரன்.


மின்சாரம் போல்

எனை தாக்குகிறாய்

மஞ்சத்தை போர்க்களம்

ஆக்குகிறாய்

கண்ணே உன் கண்ணென்ன

வேலினமோ

கை தொட்டால் மெய் தொட்டால்

மீட்டிடுமோ

கோட்டைக்குள் நீ புகுந்து

வேட்டைகள் ஆடுகிறாய்

நானிங்கு தோற்று விட்டேன்

நீ என்னை ஆளுகிறாய்…..
 
Last edited:

Eswari

Active member
Lovely update dear 🥰🥰🥰🥰🥰
Antha rajaveluvaala yethuvum prachchanai vanthura koodaathu athi ku...anthaalukku seekkiram oru mudivu kattunga 😡😡😡😡
 
Top