எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 13- (திருத்தபட்டது) கதை திரி.

NNK-53

Member
(மென்பொறியின் குளறுபடியால் சில பத்திகள் விடுப்பட்டு விட்டன. அதனால் மறுபடியும் அந்த அத்தியாயத்தை இங்கே பதிவிடுகிறேன். தடங்களுக்கு மன்னிக்கவும்.)

தேன்மிட்டாய் 13

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த இட்லிக் கடை.

“அக்கா சாம்பார்ச் சாதம் இருக்கா?” கடைக்காரப் பெண்ணிடம் ஒரு வாடிக்கையாளன் கேட்க,

“இல்லத் தம்பி, சாம்பார்ச் சாதம் காலியா போச்சு, தயிர்ச் சாதம் லெமன் சாதம் இது தான் தம்பி இப்போதைக்கு இருக்கு.” ஒரு தட்டில் தயிர்ச் சாதத்தை அளந்து போட்டபடியே பதில் கொடுத்தாள் அப்பெண்.

“என்னக்கா அதுக்குள்ள காலியா போச்சுனு சொல்றீங்க?” இன்னொருவன் குறைபட்டுக் கொள்ள, “என்ன பண்ண சொல்றீங்க தம்பி, நான் எப்பவும் இந்த நேரத்தில் கடைப் போடுறதே இல்லை. இன்னைக்கு ஏதோ பொதுக் கூட்டம் என்பதால தான் கடைப் போட்டேன், கூட்டத்தில் இது கிடைச்சதே மிச்சம் னு பாருங்க தம்பி.”

“அதுவும் சரி தான்க்கா, சரி எனக்கு ஒரு லெமன் சாதம் கொடுங்க.” என்றவனுக்கு லெமன் சாதம் வைத்துக் கொடுத்தாள் அப்பெண்.

அந்நேரம் பார்த்துக் கையில் பையுடன் அவ்விடம் வந்து சேர்ந்தான் அல்உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ரசீத் என்பவன்.

வெடிகுண்டு இருக்கும் அந்தப் பையை அந்தக் கடையின் ஓரமாய் வைத்தவனுக்குப் பயத்தில் இதயம் வேறு படபடவெனத் துடித்தன.

அடுத்தவர்களுக்குத் தனது படபடப்பு தெரியாவண்ணம் தனது நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டவன், யாரேனும் தன்னைப் பார்க்கிறார்களா? என்று அக்கம் பக்கம் பார்ப்பதையும் நிறுத்தவில்லை.

கள்ளன் போல் அவனுடைய விழிகள் அங்கும் இங்கும் சென்று வந்தது.

பதற்றத்தில் வியர்வை வேறு தண்ணீராய் நெற்றியிலிருந்து வழிந்திட, தனது கைக் குட்டையால் அழுந்தத் துடைத்தவன் தன்னை ஒருவாறாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “அக்கா ஒரு தயிர்ச் சாதம் கொடுங்கக்கா.” என்று கேட்க, “என்ன பாய் என்னைக்கும் இல்லாத திருநாளா நீங்கத் தயிர்ச் சாதம் கேட்கிறீங்க?” இவன் சூது அறியாத வெகுளியாய் அப்பெண் பதில் வேள்வி கேட்டாள்.

அதற்கு, “ஏக்கா நான் தயிர்ச் சாதம் சாப்பிடக் கூடாதா?” குதர்க்கமாய் பதில் கேள்வி கேட்டான் ரசீத்.

முகத்தில் அடித்தாற் போல் சூடாக வந்த அவன் வார்த்தைகளில் அப்பெண்ணின் முகமோ சடுதியில் வாடியது.

“ஐய்யோ…! அப்படி இல்லப் பாய்…! என்னைக்கும் என் கடையில் வாங்க மாட்டீங்களே இன்னைக்குப் புதுசா அதுவும் தயிர்ச் சாதம் கேட்கிறீங்களே அதான் கேட்டேன்.” வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

“ஓஹ் அதுவா? கட்சி பொதுக் கூட்டம் இருக்கிறத மறந்து போய்க் காலையிலேயே நான் ஈரோடு கிளம்பிட்டேன். இப்ப பஸ்ஸு கிடைக்கல. மறுபடியும் வீட்டுக்குப் போயிட்டு வர நேரமாகும் அதான் இங்கேயே சாப்பிட்டுப் போகலாம்னு வந்தேன், தப்பில்லையே?” என்று ரசீத் பதில் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அவ்விடத்திற்குத் திவாகரின் புகைப்படத்துடன் வந்து சேர்ந்தாள் சுதா.

ரசீத் பேசியது அவள் காதிலும் விழுந்தது. ‘இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே. ஹாங் அந்த ஹோட்டல எனக்குப் பக்கத்து டேபிளில் இவன் தானே இருந்தான்.’ என்றவளின் முகம் யோசனையில் ஆழ்ந்திட,

“என்னம்மா உனக்கு என்ன வேணும்?” என்ற அந்தக் கடைக்காரப் பெண்ணின் சத்தம் அவளை இயல்புக்குக் கொண்டுவந்தது.

“ஹாங்…” என்று அதிர்ந்து விழித்தவள், “அதுவாக்கா எனக்கு இந்தப் போட்டோவில் இருப்பவரைப் பத்தி தெரியனும். கொஞ்சம் பார்த்துச் சொல்றீங்களா?” தன்மையாகச் சுதா கேட்கவும் அப்பெண்ணின் இறுக்கமான முகம் சடுதியில் மலர்ந்தது.

“ஐய்யயோ வேலையா இருக்கேனேம்மா. நீ வேணா ஒன்னு பண்றீயா? செத்த நேரம் அங்க உட்காரு. நான் இந்த வேலைய முடிச்சிட்டு வந்து உனக்குச் சொல்றேன்.” கனிவாக அப்பெண் பேசவும் மறுத்துப் பேச மனமின்றி, “ம்ம்…! சரிக்கா.” சமத்துப்பிள்ளையாய் தலையாட்டிய சுதா, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்.

ரசீத் பாதியிலே கைகழுவிவிட்டு அவ்விடத்திலிருந்து கம்பி நீட்டிட, கூட்டத்தில் யாரும் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை.

பற்றாத குறைக்கு “அம்மாஆஆ…!” என்றபடி அப்பெண்ணின் மகளும் அவ்விடம் வர, சுத்தமாக ரசீத்தை மறந்தாள் அக்கடைக்காரப் பெண்.

“ஏன்டி பள்ளிக் கூடத்திலிருந்து சீக்கிரம் வந்துட்ட?” வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறியபடியே அப்பெண் தனது மகளை அரட்ட, “அம்மாஆஆ…! அது வந்துஉஉ…! ஸ்கூல்ல எனக்குப் பயங்கரக் காய்ச்சல்ம்மா, அதான் மிஸ்ஸு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க.” பதில் கொடுத்தபடியே சுதாவிற்கு அருகில் வந்தமர்ந்தாள் அச்சிறுமி.

“ப்ச்…! காலையிலேயே சூரம் வர மாதிரி இருக்கு பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா? சரி தலையைச் சீவு அம்மா உன்ன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன்.” அலுப்புடன் அப்பெண்மணி கூற, அச்சிறுமியும் கடையிலிருந்த சீப்பை எடுத்துத் தப்பும் தவறுமாகத் தலைவாரிட, “பாப்பா நான் வேணா உனக்குத் தலைச் சீவி விடவா?” என்று உதவிகரம் நீட்டிய சுதா அச்சிறுமிக்கு அழகாகப் பின்னலிட்டு ரிப்பன் வைத்துக் கட்டியும் விட, முகம் மலர்ந்தது அந்தச் சிறுமிக்கு. “தாங்கிஸ்க்கா…” நன்றிப் பகிர்ந்தாள் அச்சிறுமி.

இருவரும் சினேகமாகச் சிரித்துக் கொள்ள, “அம்மாடி அந்தப் போட்டோவ கொடும்மா. நான் யாருனு பார்த்துச் சொல்றேன்.” கூட்டம் குறைந்ததும் அப்பெண் இவளிடம் வந்து கேட்க, “ஓஹ்…! இந்தாங்கா…!” என்ற சுதா தனது தோள் பையிலிருந்து அவன் புகைப்படத்தை நீட்டினாள்.

அவனின் புகைப்படத்தை வாங்கிய அப்பெண்ணோ, “ஓஹ் இந்தத் தம்பியா?” என்றிட,

“ஹான்…! அக்கா இவரைப் பார்த்திருக்கீங்களா?” சந்தோசத்தில் பூவாய் மலர்ந்தது சுதாவின் முகம்.

“ஆமா பாப்பா. தினமும் காலையில் என் கடையில தான் இட்லி சாப்பிடும். என் இட்லினா அதுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அந்தத் தம்பி பேரு என்ன ஏதுனு எனக்குத் தெரியாது பாப்பா. நான் கடைக்கு வர்ரவங்க யார்கிட்டவும் அதெல்லாம் கேட்கிறது இல்ல.”

“பேரு தெரியலைனா கூடப் பரவாயில்லக்கா. அவரு எங்க தங்கியிருக்காருனாவது உங்களுக்குத் தெரியுமா?”

“ஐய்யோ அது தெரியாதேம்மா. ஆனா தினமும் என்கிட்ட தான் வந்து இட்லி சாப்பிடும் நீ வேணா நாளைக்கு வரியா? காலையில் ஒரு எட்டு மணிக்கு வந்தேனா அந்தத் தம்பியைப் பார்க்கலாம்.” என்று அப்பெண் கூறிட, இவளுக்கோ ஏமாற்றத்தில் முகம் கருத்தது.

“அப்படியா?” முகத்தில் சோகம் இழைந்தோடிட வார்த்தைகள் மங்கின.

“ப்ச்…! இங்க பாரு சுதா…! உனக்கு ஒரு நாள் தான் டைமு அதுக்குள்ள அவனைப் பார்த்து என்ன பேசுவியோ? எது பேசுவியோ? எனக்குத் தெரியாது. அவன் அடுத்த மாசத்திற்குள்ள வந்து உன்ன பொண்ணு கேட்கனும், இல்லைன என் பேங்க் மேனேஜர்த் தான் உனக்கு மாப்பிள்ள. வர்ர வைகாசியில உனக்கும் அவருக்கும் கல்யாணம், அத யாராலையும் மாத்த முடியாது நல்லா கேட்டுக்கோ.” என்ற நேற்று சிவதாஸ் கூறிய வார்த்தைகள் அசரீரி போல் அவள் செவிதனில் ஒலிக்க, கண்கள் கலங்கியது பெண்ணவளுக்கு.

“ஐய்ய நீ எதுக்கும் கவலைப்படாதம்மா. நாளைக்கே அந்தத் தம்பியைப் பார்த்திடலாம்.” ஆறுதல் கூறினாள் அப்பெண்.

“இல்லக்கா பரவாயில்ல. நான் பார்த்து விசாரிச்சிக்கிறேன்.” என்ற சுதா வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அப்பெண்ணிடமிருந்து விடைப்பெற்றுக் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினாள் சுதா.

வெறுமையான அவள் மனமோ எங்கேங்கோ அழைத்து அவனைத் தனியாகப் பார்த்த அந்நாளுக்கு வந்து நின்றது.

“என்ன நீங்க எதுக்குச் சாமி குப்பிடும்போது என்ன கூப்பிட்டீங்க. யாராவது பார்த்தா என்ன என்ன நினைப்பாங்க?” கோவிலுக்குப் பின்புறம் இருந்த மண்டபத்திலிருக்கும் தூணில் சாய்ந்தபடி அவன் நிற்க, கோபத்தில் கொந்தளித்தபடியே அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாள் சுதா.

“எவன் பார்த்தா எனக்கு என்ன? என் பொண்டாட்டிய நான் கூப்பிடுறேன்.”

“இங்க பாருங்க பொண்டாட்டி போண்டா டீ லாம் வேற எவ கிட்டயாவது வச்சுக்கோ. இப்ப எதுக்கு என்ன கூப்பிட்டிங்க அத மட்டும் சொல்லுங்க.” சூடாக வார்த்தைகள் வந்து விழுந்தன.

“க்கும்…!” ஒரு நமுட்டுச் சிரிப்புடன், “எப்ப உனக்குத் தாலி கட்டினேனோ அப்பவே நீ என் பொண்டாட்டி நான் உன் புருசன் தான். இதுல எந்த மாற்றமும் இல்ல. இங்க பாரு ராணி நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. அன்னைக்கு நான் பண்ணது தப்பு தான், உன் விருப்பம் இல்லாம தாலி கட்டினது ரொம்ப பெரிய தப்பு தான், அதே தப்பா நான் மறுபடியும் பண்ண விரும்பல. நீ சொன்ன மாதிரியே டிகிரி பாஸ் பண்ணிட்டேன். வேலைக்கும் போயிட்டேன். நாளைக்கே உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்க வரலாம்னு இருக்கேன் ஆனா அதுக்கு முன்னாடி உன் மனசுல என்ன இருக்குதுனு எனக்குத் தெரியணும் டி. ம்ம் சொல்லு டி உனக்கு என்ன பிடிக்கும் தானே!?” முகத்திற்கு நேராக அவன் கேட்க, வெட்கத்தில் வார்த்தைகள் வர மறுத்தது சுதாவிற்கு.

"இங்க பாரு ராணி உன் தயக்கம் எனக்கும் புரியுது. நீ நேரா கூடச் சொல்ல வேண்டாம். இங்க பாரு." என்றவன் ஒரு அழகான பச்சை நிற பட்டுப் புடவை எடுத்துக் காட்டினான்.

அந்த அழகிய வேலைப் பாடுகள் நிறைந்த அப்புடவையைக் கண்டதும் தானாகச் சுதாவிற்கு முகம் மலர்ந்திட, 'எதுக்கு?' என்பது போல் அவனைப் பார்த்துப் புருவம் உயர்த்தினாள் சுதா.

"இது உனக்காகப் பல கடைக்கள் ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து வாங்கினது டி. இத நீ வாங்கிகிட்டா உனக்கும் என்ன பிடிச்சிருக்குதுனு நான் எடுத்துக்கிறேன். ஒருவேலை நீ இதை வாங்கலைனா உனக்கு என்ன பிடிக்காது னு முடிவு பண்ணிக்கிறேன்” அவன் முகம் ஏனோ இவ்வார்த்தைகளைச் சொல்லும்போது வாடியது.

“உனக்கு இந்தப் புடவையும் பிடிக்கும் என்னையும் பிடிக்கும் என்று நம்புறேன் ராணி. பிளீஸ் இந்தா ராணி இத வாங்கிக்கப் பிளீஸ்... பிளீஸ்..." கெஞ்சும் மொழியில் அவன் அந்தப் புடவையை அவள் முன் நீட்ட, கூச்சத்தில் உடல் நடுங்கியது சுதாவிற்கு.

"இங்க பாருடி நான் ஒன்னு சொல்லட்டுமா? உனக்காக...! உன் பதிலுக்காக நான் காலம் முழுவதும் காத்திருப்பேன் டி. அதில எனக்குத் துளி கூட வருத்தமில்ல, சந்தோஷம் தான். ஆனா…! ஆனா பாரு, நம்ம வீட்டில் இருக்கிறவங்க காத்திருக்க மாட்டாங்க டி. இங்க பாரு எனக்கு இந்தச் சாஸ்திரம் சம்பிரதாயம் மேல எல்லாம் பெருசா நம்பிக்கை இல்ல. இருந்தாலும் உனக்காக உன்ன முறையா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப் படுகிறேன் டி. ம்ம் சொல்லு ராணி, உனக்கும் என்ன பிடிக்கும் தான? என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதம் தான? உன் வாழ்க்கையை என்கூட பகிர்ந்து கொள்ள உனக்கும் விருப்பம் தான?" ஆண்மையுடன் அவன் அவளிடம் சம்மதம் கேட்க, அவளின் ஆப்பிள் கன்னம் ஏனோ வெட்கத்தில் சிவந்தது, நாணத்தில் தளிர் மேனி கூட நடுங்கியது. வெட்கமும் நாணமும் போட்டி போட, அந்நொடி அந்த நொடி நா எழவில்லைப் பெண்மைக்கு.

‘இதெல்லாம் என்கிட்ட கேட்டா நான் எப்படிப் பதில் சொல்றது.’ மனதிற்குள் அவனைக் கருவினாள்.

‘ஆமாம் எனக்கும் உன்ன பிடிச்சிருக்கு.’ என்ற வார்த்தை அவளது தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டனவோ என்னவோ? வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன.

‘சே…! நான் இவ்வளவு பெரிய கோழையா?’ தன்னையே கடிந்து கொண்டாள் மாது.

“ம்ம்… வாங்கிக்க ராணி.” ஊக்கினான் திவாகர்.

விரல்கள் கூச்சத்தில் நர்த்தனமாடத் தயங்கியபடியே இவள் அவன் நீட்டிய புடவையை வாங்க எத்தனிக்கும் நேரம் எங்கிருந்து தான் வந்தானோ அவள் அண்ணன் சிவதாஸ்.

வந்ததும் வராததுமாக அவன் கையிலிருந்த பட்டுப் புடவையைக் கோபத்துடன் தட்டிவிட்டான். அவன் தட்டிய வேகத்தில் அப்புடவையோ அருகிலிருந்த சேரில் விழுந்தது நாசமானது.

“ஏய்…! சிவா…!” என்று திவாகர்க் கத்த, “டேய்…! உன்ன…!” என்றபடி திவாகரின் சட்டையைப் பிடித்தான் சிவதாஸ்.

“அண்ணாஆஆ…!” என்று மறுபக்கம் கத்திய சுதாவைப் பார்த்த சிவதாஸ், “இங்க நிக்காத வீட்டுக்குப் போ, சுதா…” என்று கத்தி ஆணையிட, “அண்ணா அதுவந்துஉஉ…” தயங்கினாள் அவள். காதல் அவளை நகர விடாமல் தடுத்தது.

“சுதா அவன் சொல்றதக் கேட்காத! உனக்கு நான் வேணும்னா இங்கேயே நில்லுடி.” என்று திவாகரும் அவன் பங்குக்குக் கத்த, செய்வது அறியாது தவித்தாள் சுதா.

“என்ன சுதா இன்னும் எதுக்கு இங்க நிக்கிற? இவன் ஒரு பொறுக்கி இவன் சொல்றதையா நம்புற? அண்ணன் நான் சொல்றேன்ல போ…” என்று சிவதாஸும்,

“ஏய் நீ மட்டும் இப்ப போனா, அதுக்கு அப்பறம் உன் முகத்தில் கூட முழுக்க மாட்டேன் டி. உனக்கு யாரு வேணும்னு நீயே முடிவு பண்ணிக்க, நானா? உன் அண்ணனா?” என்று திவாகரும் மாறி மாறிக் கத்திட, குழம்பித் தவித்தாள் பேதை.

அண்ணனும் வேணும் அவனும் வேணும் என்ற இரண்டும் கெட்டான் நிலை அவள் நிலை.

அண்ணனா? அவனா? என்ற குழப்பத்திலிருந்தவளைப் பிடித்து இழுத்து சென்றான் கதிர்.

“அண்ணா எதுக்குண்ணா என்ன இப்படி இழுத்துட்டு வர்ர…” அதட்டினாள்.

“இங்க பாரு சுதா. அந்தப் பொறுக்கி உனக்கு வேணாம். நான் சொல்றதக் கேளு, உனக்கு நாங்க வேற மாப்பிள்ளைப் பார்த்து வச்சிருக்கிறோம். அவன் தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்.” என்று கதிர் அவளை அடக்க, “என்னண்ணா இப்படிப் பேசுற? நீ எப்பவும் உன் விருப்பம் தான் என் விருப்பம் னு சொல்லுவ. இன்னைக்கு என்னன்னா ஆச்சு?” கலங்கிய விழிகளுடன் சுதா கேள்வி எழுப்ப, “இப்பவும் நான் அதைத் தான் சொல்றேன், அவனைத் தவிர வேற யாரை வேணுமென்றாலும் விரும்பு, நானே முன்னிருந்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன், ஆனா அவன் வேணாம், உனக்குப் புரியுதா சுதா, அவனால தான் நம்ம குடும்பத்துடைய மானம் மரியாதை எல்லாம் போச்சு. அப்பா எவ்வளவு தூரம் கவலைப்பட்டாரு. அது எல்லாம் உனக்கு மறந்து போச்சா? ஹாங்...! இப்ப சொல்லு சுதா அந்தப் பொறுக்கிபயத் தான் உனக்கு வேணுமா?” அவளின் தோளைக் குலுக்கி அவன் கேட்க, கலங்கிய விழிகளுடன் அமைதியானாள் சுதா.

தொடரும்..

பிளீஸ் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க ஒத்துழைப்பு என்றும் எனக்கு தேவை.. நன்றி..
 
Top