எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 14 - கதை திரி

NNK-53

Member
தேன்மிட்டாய் 14

அதன் பின் வந்த நாட்கள் எல்லாம் ஏன் வந்தது என்றிருந்தது சுதாவிற்கு.

நித்தமும் அவன் ஞாபகம்… நினைவெல்லாம் அவன் ரூபம்… கலங்கினாள், தவித்தாள், அவனது திருமுகம் காண எண்ணி தவம் கிடந்தாள்.

ஆனால் அவன், ஊடலில் அவளைத் தவிர்த்தான், தவிக்க வைத்தான்.

அவனைப் பார்க்காமல், பேசாமல் தூக்கம் வரவில்லைப் பெண்ணவளுக்கு.

அறுசுவை உணவு பிடிக்கவில்லை.

அடுத்தவர் முகம் காணப் பிடிக்கவில்லை.

யாரைப் பார்த்தாலும் கோபம் எரிச்சல். அப்பப்பா. காதல் அவளைக் கசக்கிப் பிழிந்தது.

இப்போதெல்லாம், ஏனோ வாழ்க்கை துவர்த்தது…

வயதோ கசந்தது…

பசலை நோய் கண்டு உடல் மெலிந்தது.

வளையல்கள் கையிலிருந்து நழுவின.

மோதிரம் கூட விரல்களிலிருந்து கழன்று விழுந்தன.

வெயில் கால வறண்ட நிலம்போல் வறண்டு கிடந்தாள் சுதா.

“என்னடா கண்ணு ஏன்டா உடம்புக்கு முடியலையா? ஏன் எப்படியோ இருக்க?” நலம் விசாரித்தார் தந்தை.

“ஏய் என்ன டி மசமசனு நிக்கிற? போ டி போய் வேலைய பாரு.” விவரம் தெரியாமல் விரட்டினாள் தாய்.

“இங்க பாரு சுதா. அவனை முழுசா தலை மூழ்கிட்டு ஆகுற வேலைய பாரு.” புத்தி கூறினான் கதிர்.

“இங்க பாரேன் சுதா..! எங்க பேங்க் மேனேஜருக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருச்சு போல. காலையில் கூட உன்னப் பத்தி தான் ஒரே பேச்சு.”, “அவருக்குச் சிகரெட் தண்ணினு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ரொம்ப நல்ல மனுசன். நம்ம குடும்பத்துக்கு ஏத்தவரு சுதா. அவரை மட்டும் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படி இருக்கும் தெரியுமா?” அடிக்கடி தனது மேலாளரின் புகழ் பாடினான் சிவதாஸ்.

இவளுக்கோ என்ன பதில் பேசுவது? எப்படிப் பேசுவது? என்று தான் தெரியவில்லை. அமைதியானாள்.

ஏதோ தனித் தீவில் மாட்டிக் கொண்டது போல் ஒர் ஏக்கம், தவிப்பு. அவனது நினைவுகள் அவளை அணுவணுவாக வதைத்தது.

தனது அறையே கதியென மெத்தையே அரண்யென அங்கேயே விழுந்து கிடந்தாள் சோகமாக…!

“ஏன்டி இவளே…! இம்முட்டு ஆசைய வச்சிக்கிட்டா டி இம்முட்டு நாளா அவனை அலகழிச்ச?” அவளை நன்றாகப் புரிந்து கொண்ட பாட்டியோ, அவளின் தோளை இடித்துக் கேட்க,

“அட நீ போ பாட்டி…! நான் வேற சரியான கடுப்புல இருக்கிறேன் நீ எதாவது சொல்லி நான் ஏதாவது திட்டிவிட்டுற போறேன்.” எரிச்சலுடன் எச்சரித்தாள் பேத்தி.

“ஆமா டி உன் கோபம் எல்லாம் என் மேல தான்…!” அலுத்துக் கொண்டபடியே பெரியவள் அவள் அருகில் அமர்ந்து கொள்ள, “ம்கும்…!” ஆற்றாமையில் முகத்தைத் திருப்பினாள் சின்னவள்.

இவளின் கோபத்தைப் பொருட்படுத்தாத பாட்டியோ, “அட கூறுகெட்டவளே…! ஆம்புள்ள ஒரு அளவுக்குத் தான்டி இறங்கிப் போவான். நாம ஓவரா தலைக்கு மேல ஏறுனா சரிதான் போடீனு போயிருவான். இங்க பாருடி சுதா, நாம தான்டி பார்த்துச் சூதானமா நடந்துக்கனும்.” பழைய பஞ்சாங்கமாகப் பாட்டி நிற்க, சிறுசோ எகிறியது.

“நீ போ பாட்டி, அவன் பண்ணது மட்டும் சரியா?”

“சரினு யாருடி சொன்னா? தப்புத்தே, யாரு இல்லைனு சொன்னது? ஆனா திருந்தி வந்தவனைத் திருப்பி அனுப்புறது அதைவிட தப்பில்லையாடி.” தலைக் கொதியபடியே அன்பாக அவள் கேட்க,

செல்லக் கடிதலுடன், “நீ எப்பவும் என்ன தான் குத்தம் சொல்லுவ? பண்றதை எல்லாம் பண்ணிட்டுச் சாரினு மட்டும் ஒரு வார்த்தைச் சொல்லிட்டா போதுமா?” கோபத்தில் இவள் மூக்கை உரிஞ்சினாள்.

“ஏடி ஆம்புள்ள இவ்வளவு இறங்கினதே பெரிய விசயம் டி. என் காலத்திலிருந்த ஆம்பிள்ளைங்க எல்லாம் இவ்வளவு கூட இல்லையே. உதாரணமா என்ன எடுத்துக்கோ, உன் தாத்தென்…! என்னவெல்லாம் பண்ணான்னு உனக்குத் தெரியுமா? வயக்காட்டுல வேலைய பார்த்துக்கிட்டு இருந்தவளைத் தான டி தூக்கிட்டு வந்து தாலி கெட்டினான். உனக்காவது பஞ்சாயத்துல ஒரு வாய்ப்பாவது கொடுத்தாங்க ஆனா எனக்கு…! அதுவும் இல்லையே…! கேப்பாரு இல்லாம தானே அந்த மனுசன் கூட வாழ்ந்தேன். என் புருசனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்தப் பையன் ரொம்ப நல்லவன் தான்டி.”

“இப்ப என்ன தான் என்ன பண்ண சொல்ற?”

“என்ன பண்ணலாம் னு நீ தான் டி யோசிக்கனும்.” என்று பாட்டி கூறவும், சிறிது நேரம் அவ்வறையோ அமைதியில் கரைந்தது.

ஒரு சில நிமிட யோசனைக்குப் பின், “அண்ணன்ங்களுக்கு அவனைப் பிடிக்கலையே பாட்டி.” கவலைத் தோய்ந்த முகத்துடன் பேச்சைத் துவங்கினாள் சுதா.

“அட லூசு சிறுக்கி.” என்ற பாட்டியோ செல்லமாக அவளின் கன்னத்தை இடிக்க,

“எதுக்கு இப்ப இடிக்கிற?” சுறுக்கென்று கோபம் வந்தது பேத்திக்கு.

“அவனுங்களாடி கட்டிக்கப் போறாங்க, நீ தான கட்டிக்கப் போற? உனக்குப் பிடிச்சா போதாதா?” பாட்டியும் லேசுப்பட்ட ஆளா, சரியாகப் பாயிண்ட்ப் பிடித்துப் பதில் கேள்வி கேட்க,

“எனக்குப் பிடிச்சா மட்டும் போதுமா? வீட்டுல இருக்கினவங்களுக்குப் பிடிக்க வேண்டாமா?” சோகமாகப் பதில் கொடுத்தாள் சுதா.

“ஏன்டி நீ உன் வீட்டாளா கேட்டுக்கிட்டா அவனை ரேட்டுல வச்சி அடிச்ச? அவன் கட்டின தாலியை கழட்டி அவன் முகத்துல எறிஞ்ச? அவனை வேணாம்ங்கிறதுக்கு ஆயிரம் காரணம் சொல்றவ, அவன் வேணும்ங்கிறதுக்கு ஒரு காரணம் கூடவா டி உனக்கு இல்லாம போச்சு? நல்லா நாலு போடு, போட்டேன்னா தெரியும்.” செல்லமாக அவள் கை ஓங்க, “ஐய்யோ பாட்டி என்ன அடிக்காத?” சிரித்தபடியே பயப்படுவது போல் நடித்தாள் சுதா.

“இங்க பாருடி…! எந்த ஒரு உறவுக்கும் இரண்டு பேருடைய அன்பும் அரவணைப்பும் வேணும் டி. ஒருத்தர் மட்டும் அன்பு காட்டிட்டு இன்னொருத்தர் வெறுப்பு காட்டுன அந்த உறவு ரொம்ப காலம் நிலைக்காதுடி. இவ்வளவு நாளா மனசில இருக்கிறதக் காட்டிக்காம அவனைக் கஷ்டப்படுத்திட்ட, இனியாவது அவனுக்கு உன் அன்பையும் காதலையும் கொடு டி. இவ்வளவு நாளா அவன் தானே இந்த உறவைக் காப்பாத்திக்க இறங்கி வந்தான், இனி கொஞ்சம் நீயும் தான் இறங்கி வாயேன் டி.” பெரியவளின் புத்திமதி சரியாகப் பட்டது சுதாவிற்கு.

“அப்ப மனசில் இருக்கிறத அவன் கிட்டச் சொல்லலாம் னு சொல்றீயா பாட்டி.”

“ஏன்டி முதலிருந்தே இதைத் தான்டி சொல்கிட்டு இருந்தேன். சீக்கிரமா அவனைப் பார்த்து உன் காதலைச் சொல்ற வழிய பாரு…”

“நீ சொல்றதும் சரிதான் பாட்டி. ஆனா என்னனு சொல்லிட்டு அவனைப் போய்ப் பார்க்கிறது?”

“ஏடி இதெல்லாமா என்கிட்ட கேட்கிறது? என்ன வயசு புள்ள நீ? அது வேணும் இது வேணும் னு ஏதாவது காரணம் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டியது தானே.” என்று பாட்டி வாய் மூடும் முன் சுதா, திவாகரின் பங்களாவிலிருந்தாள்.

“என்ன அதிசயம் என்ன புதுசா காத்து இந்தப்பக்கம் அடிக்குது?” என்று கேலி பேசிய கனகவேலிடம், “ஹாங்…! அதெல்லாம் சோழியன் குடும்பி சும்மா ஆடாது. எல்லாம் காரணமா தான் வந்திருக்கிறோம்.” பதிலுக்கு விடாமல் லாவணி பாடினாள் சுதா.

“அப்படி என்ன தான் காரணம்னு நாங்களும் தெரிஞ்சிக்கலாமோ?”

“சொத்த மட்டும் கொடுத்துட்டா போதுமா? கணக்கு வழக்கெல்லாம் சொல்ல வேண்டாமா?” ஏட்டிக்குப் போட்டியாகச் சுதா நிற்கவும், மென்மையாகச் சிரித்துக் கொண்டார் ஜமீன்தார் கனகவேல்.

“இவ்வளவு நாள் இல்லாம இன்னைக்கு என்ன புதுசா கணக்கு வழக்கு எல்லாம் கேட்கிற?” மென்னகையுடன் அவர் புருவம் உயர்த்த, “விவரம் வர வேண்டாமா? அப்பச் சின்னப் பிள்ள, இப்ப விவரம் வந்திருச்சுல. அதான் கேட்கிறேன்.” இவளும் மென்னகையுடன் பதில் கொடுக்க, “சரி தான் மேடம்…! கொஞ்ச நேரம் அடியேன் வீடுல காத்திருக்க முடியுமா? நான் போய்க் கணக்கு நோட்டை எடுத்துட்டு வரேன்.” பவ்வியமாக அவர் கூற, கலகலவெனச் சிரித்தாள் சுதாராணி.

“ரொம்ப வாயடிக்கிறேனா? சாரி அங்கிள்.” சிரித்தபடியே சுதா அவரிடம் மன்னிப்பு வேண்ட,

“சே சே… இல்லம்மா…! இப்ப தான் வீட்டுக்கே வெளிச்சம் வந்த மாதிரி இருக்கு. உன் மனசு மாறி நீ இங்க வந்ததே போதும். சரிங்க மேடம் நான் போய்க் கணக்கு நோட்டை எடுத்துட்டு வந்திடுவா?”

“ஐய்யோ நான் சும்மா தான் கேட்டேன். அவரு இருக்காரா?”

“ம்ம். மேல தான் இருக்கான். போய்ப் பாரு.” என்று அவர் ஒப்புதல் கொடுக்கவும் சிட்டாக அவனது அறைக்குப் பறந்தாள் சுதாராணி பெரும் காதலுடன்.

அங்கே அவனது அறையில் ஏதோ ஒரு பெண்ணின் குரல் கேட்க, சுதாவிற்கோ புருவம் முடிச்சிட்டது யோசனையில்.

‘யாரா இருக்கும்?’ யோசனையுடன் சுதா அவனது அறையை இவள் எட்டிப் பார்க்க, நவ நாகரிக உடையுடன் ஒரு பெண் அவனது மெத்தை மேல் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அவனும் தான்.

“ஹேய் லாவண்யா…! சொன்னா கேட்க மாட்ட?” சிரித்தபடியே அவன் அப்பெண்ணின் தலையில் கொட்டு வைக்க, “ஹேய்…! திவா…!” என்று கிங்கிணியாய் சிணுங்கினாள் அப்பெண்.

அதைப் பார்க்கப் பார்க்கச் சுதாவிற்கோ வயிறு பற்றிக் கொண்டு வந்தது.

உடல் இறுகி கோபத்தில் கண்கள் சிவந்தன.

‘எப்படி அவ அவன்கிட்ட பேசலாம்? இவனும் எப்படி அவளைப் பார்த்துச் சிரிக்கலாம்?’ மூக்கு விடைத்தது பெண்ணவளுக்கு.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது போல் என்ன ஏது என்று விசாரிக்காத சுதாவோ, வேகவேகமாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“ஏய்… நீயா?” என்று கேட்கத் திவாகரின் வார்த்தைகள் ஏனோ அவள் காதில் விழவேயில்லை. அவள் கண்களுக்கு அந்தப் பெண் தான் தெரிந்தாள் அதுவும் ஜென்ம பகையவர்ப் போல.

கோபம் கொப்பளிக்க அப்பெண் அருகில் வந்தவள் அவளது பட்டுக் கன்னத்தில் தனது கரத்தைப் பதித்தாள்.

இவள் அடித்த அடியில் அப்பெண்ணிற்கோ கதி கலங்கி, கன்னம் சிவந்து வீங்கியது.

அதைப் பார்த்ததும் அவனுக்கும் கோபம் வந்துவிட, “ஏய்…!” என்று கத்தியபடி திவாகரும் பதிலுக்குச் சுதாவை அறைய, இன்னுமே ஆத்திரம் கூடியது பெண்ணவளுக்கு.

“ஓஹ் அவளுக்காக நீ என்ன அடிச்சிட்டீல்ல. போ டா போ எங்க அண்ணன் படிச்சி படிச்சி சொன்னான் அவன் ஒரு பொம்பள்ளப் பொறுக்கி, பொம்பிள்ளப் பொறுக்கினு…! இன்னும் அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை அதற்குள் அவனோ, “ஏய் வாயை மூடுடி” அறை அதிரக் கர்ஜித்தான்.

அவன் போட்ட சத்தத்தில் இவளுக்கோ பயத்தில் ஈர கொலை நடுக்கியது.

“ஏய் யாரைப் பார்த்து என்ன வார்த்தைப் பேசுற? ஆமா டி நான் பொம்பிள்ளப் பொறுக்கி தான் அதுக்கு எப்ப என்னங்கிற? நீ எதுக்குடி இந்தப் பொம்பிள்ளப் பொறுக்கி வீட்டுல நிக்கிற? போடி வெளியே.” நறநறவெனப் பற்களை அரைத்து அவன் உறும, அவமானத்தில் முகம் கருத்தது சுதாவிற்கு.

‘சரி தான் போடா…’ என்பது போல் வெடுக்கெனத் திரும்பியவள், எதிரில் வந்த கனகவேலிடம் கூட எதுவும் பேசாது அவனது பங்களாவிலிருந்து வெளியேறினாள் அதீதக் கோபத்துடன்.

அவமானத்தில் கருத்த முகமும், கோபத்தில் சிவந்த கண்களுமாகச் சுதா தனது வீட்டிற்கு வர, அங்கே நடுக் கூடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தான் சிவதாஸ் வேலைப்பார்க்கும் வங்கியின் மேலாளர்.

அவன் முன் அமர்ந்திருந்த சதாசிவமோ சுதாவைப் பார்த்து, “அம்மாடி தம்பிக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறாரு. நீ என்னம்மா சொல்ற?” என்று கேட்க,

“உங்களுக்குச் சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான்ப்பா.” அவன் மேலிற்கும் வன்மத்தில் முன் யோசனை எதுவுமின்றிப் பதில் கொடுத்தவள் தனது அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டாள்.

இவையெல்லாம் மனத்திரையில் நடமாட, யோசனையுடன் வந்த அவளது கால்கள் ஓர் இடத்தில் சட்டென்று நின்றது.

அவளுக்கு முன் டெலிபோன் பூத் இருக்க, ‘ரவிக்கிட்ட கேட்டுப் பார்த்தா நிச்சயமா அவனுடைய ஆபிஸ் அட்ரஸாவது கிடைக்கும்.’ புதிதாய் முளைத்த யோசனையில் அந்தப் பூத்திற்குள் சென்றவள் அவனது வீட்டுத் தொலைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள்.

எடுத்தது அவனது அம்மாபோல, அம்முனையில் பெண் குரல் கேட்டது.

“ஹலோ உங்களுக்கு யாரு வேணும்?”

“ஆண்ட்டி நான் சுதா பேசுறேன். ரவி இருக்கானா?”

“ஐய்யோ இல்லையேம்மா. இப்ப தான் கடைக்குக் கிளம்பினான் நீ வேணா ஒரு பத்து நிமிசம் கழிச்சி பேசிறீயா?” என்று ரவி அம்மா கூற, “ஒஹ்…! அப்படியா?” நெற்றிச் சுருங்கப் பதில் கொடுத்தவள், “ம்ம்…! சரியாண்ட்டி. நான் பத்து நிமிசம் களிச்சே போன் போடுறேன்.” உயிர்ப்பே இல்லாமல் பதில் கொடுத்து விட்டு தொலைப்பேசியை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு வெளியே வர, இடுப்பில் கட்டிய குண்டுடன் அவளைத் தெரியாத்தனமாக இடித்தான் ஆயுப்.

தொடரும்...

லைக் அண்ட் கமெண்ட் பிளீஸ்..
 
Top