எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 04

admin

Administrator
Staff member

அத்தியாயம் 4​

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்​

காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)​

***​

"என்னம்மா, என்னாச்சு?..." ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த மனைவியிடம் வினாவினார் ஆதி.​

"ஒன்னுமில்லிங்க மாமா..." என்றவருக்கு மனம் முழுவதும் மகன் பேசிய வார்த்தைகள் மட்டும் தான் ஓடியது.​

இத்தனை வருடங்களாக என் மகனுக்கு சத்தமாக அதட்டிப் பேச வராது என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இன்று தான் புரிந்தது அவரது மகனுக்கு அதட்டி மட்டுமல்ல மற்றவரின் அகத்திணை காயப்படுத்தும் அளவிற்கு பேசத் தெரியும் என்று.​

முதல் முறையாக மகனின் விசயத்தில் தாங்களாக முடிவெடுத்து தவறு செய்து விட்டோமென்று தாமதமாக உணர்ந்தார். கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தவரின் அருகில் வந்தமர்ந்தான் அகரன்.​

"ம்மா, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க ம்ம்மா,நான் வேணும்னு அப்படி பேசல, எனக்கு நிஜமாவே அவளைப் பிடிக்கலம்மா, எப்படி சொல்றது ஈவ்வென்ட் ஆர்கனிசரா இருக்கிறதாலோயோ என்னவோ எனக்குண்ணு நிறையா கனவு இருந்தது..."​

"என் ஒய்ஃப் எப்படியெல்லாம் இருக்கணும்னு பெரிய ஆசையே இருந்துச்சு. அதெல்லாம் இப்ப இல்லைன்னு ஆகும் போது ஒருவித கோபம், அதை யார்கிட்டேயும் சொல்ல முடியாத கோபம். அந்த கோபத்தை தான் அவள்ட காட்டிட்டேன்..." என மெல்லிய குரலில் கூறினான்.​

அக்குரலில் தன் மனதை தாய் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற படப்படப்பும், பரிதவிப்பும் அதிகமாகவே இருந்தது.​

ஆயிரம் சமாதானம் செய்தாலும் ராஜிக்கு மனம் ஒப்பவில்லை, அவன் பேசியது தவறு, பேசிய விதம் தவறு, அவளை மட்டம் தட்டியது அதைவிட தவறு, அவனது எண்ணமும், கற்பனையும் தவறு.இத்தனை வருடங்களாக இது எதுவுமே கவனிக்காமல் விட்டது தன் தவறு... என நினைத்தவருக்கு தன்னாலேயே நீண்ட நெடியப் பெருமூச்சு வந்தது. அதேகணம் மகனின் பரிதவிப்பான பேச்சிற்கு தன் மெளனத்தையே பதிலாக கொடுத்தார். அந்த மெளனம் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடரும் என்று அப்போது அகரன் நினைத்திருக்க மாட்டான்.​

*****​

நம் மனதில் இடம் பிடித்தவர்கள் பலர் இருப்பார்கள் அவர்கள் அனைவருமே நமக்கு பிடித்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது அத்தனை சாத்தியமில்லை அல்லவா. நாம் வெறுப்பவர்கள் கூட நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள்.​

அந்த வகையில் அகரனும் நுண்ணிடையாளின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டான் நிச்சியமாக விருப்ப பட்டியலில் இல்லை...​

தன் அறையில் அமர்ந்திருந்தவளின் நினைவுகள் முழுவதும் மறவோன் பேசிய வார்த்தைகளும், அருவருப்பான பார்வையுமே கண்களின் முன் வந்து தாண்டவமாடியது. இக்கணம் தந்தையின் அருகாமையை வெகுவாக தேடினாள்.​

நாற்காலியில் அமர்ந்திருந்தவள் எழுந்து தந்தையின் சட்டையை கையிலெடுத்தாள். நெஞ்சோடு அணைத்து பிடித்தவளின் கண்களிலிருந்து முத்து முத்தாய் கண்ணீர் துளிகள் சிதற ஆரம்பித்தது.​

'உன்னோட நிமிர்வு பலருக்கு எரிச்சலைக் கொடுக்குதுன்னா அது தான் உன்னோட வெற்றி. உன்னை பலகீனப் படுத்த நினைக்கறவங்க முன்னாடி நிமிர்ந்து நில்லு, உன்னோட நிமிர்வும், துணிவும் தான் அவங்களுக்கு நீ கொடுக்கிற மிகப்பெரிய அடி...' பாவையின் மனம் அவளுக்கு தைரியத்தை கொடுத்தது. மனதின் ஆறுதலை விட வேறு ஆறுதல் வேண்டுமா என்ன?​

கண்களை அழுத்தித் துடித்துக் கொண்டவள் ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, தந்தையின் சட்டையை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு நிமிரவும், கங்கா அழைக்கவும் சரியாக இருந்தது.​

ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவள் வீட்டிற்கு வெளியில் வந்தான். அகரன் அவனது தாய், தந்தையோடு கிளம்பிக் கொண்டிருப்பது புரிந்தது. நேராக ராஜியிடம் சென்று நின்றாள்.​

காந்தையைக் கண்டதும் புன்னகைத்தவர் அவளது கேசத்தை அழுத்தமாக கோதி நெற்றியில் இதழ் பதித்தார். அந்த இதழ் ஸ்பரிசம் ஆயிரம் ஆறுதல் கூறியது காரிகைக்கு.​

அதே கணம் "அண்ணா, அவருக்கு இரண்டு மாசம் அடப்பு முடிஞ்சதும், இவளை..." என்று கங்கா ஆரம்பிக்கும் முன்பே அது புரிந்தது போல "சரிம்மா..." என்றார் ஆதி.​

****​

இன்று...​

இதோ இன்றோடு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. இந்த இரண்டு மாதங்களும் யாருக்கு எப்படி சென்றதோ இல்லையோ இவர்கள் இருவருக்கும் எதிர் எதிராக தான் சென்றது. அகரனுக்கு நேரம் நெட்டுத் தள்ளியது என்றால், அவளுக்கு நேரம் பனியாய் கரைந்தது..​

தந்தை இல்லையென்றாலும் தாயுடன் சேர்த்து அவர்களது தொழில் அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். இங்கு இவனோ தாயின் பாரா முகத்தில் அவளை ஏற்று கொண்டால் என்னவென்று எண்ண ஆரம்பித்திருந்தான்.​

அந்த எண்ணத்தின் முதலடியே காலையில் எழுந்ததும் தாயிடம் சென்று பேசினான். அதனை தான் நாம் முதல் அத்தியாயத்திலேயே பார்த்தோம் அல்லவா.​

இங்கு, பேருந்திலிருந்து இறங்கி வந்தவளின் எண்ணம் முழுவதும் கடந்தகால நினைவுகள் மட்டுமே அலைமோதிக் கொண்டிருந்தது.​

அக்கணம் "பாப்பா..." என்ற குரலில் தன்னிலைக்கு வந்தவள் குரல் வந்த திசையைப் பார்த்தாள்.​

எதிர்ப்புறம் அவளது தாய் கங்கா தான் இரு சக்கர வாகனத்தில் நின்றுக் கொண்டிருந்தார். தாயை கேள்வியாக பார்த்தாள்.​

மாயோளின் கேள்வி புரிந்தது போல "அத்தை, மாமா, அந்த தம்பி எல்லாம் வந்து இருக்காங்க..." வண்டியை லாவகமாக திருப்பியப்படி கூறினார்.​

"அடப்பு முடிஞ்சதும் உன்னை அனுப்பறேன் சொல்லி இருந்தேன்ல. அதைப் பத்தி பேச வந்திருக்காங்க போல..." என்றார் செய்தியாக.​

"சரி மா, இன்னும் கொஞ்ச நேரத்துல நானே வந்துருப்பேன். நீங்க எதுக்கு வந்தீங்க..." அவர் கூறியதை காதில் வாங்காதவள் போல தனது கேள்வியை கேட்டாள்.​

"அவங்க வந்து ரொம்ப நேரமாச்சு டி , இன்னைக்குன்னு பார்த்து கடையில ஒருத்தனும் இல்லை, ராஜி அவரை(அகரனை ) தான் போயி கூட்டிட்டு வான்னு சொல்லிட்டு இருந்தாங்க, நான் தான் உங்களுக்கு அவள் வர சந்து பொந்தெல்லாம் தெரியாது.நானே ஒரெட்டு போயிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு வந்தேன்..." என்றவர் மேலும்​

"வீட்டுல ஒன்னுக்கு இரண்டா காரும், பைக்கும் இருக்கு, அதெல்லாம் விட்டுட்டு பஸ்ல தான் போவேன்னு ஆடுனா என்ன பண்றது, நான் தான் வந்தாகனும், எல்லாம் அந்தாளை சொல்லணும், செல்லம் குடுத்து குடுத்து கெடுத்து வைச்சு இருக்காரு..." முணுமுணுப்பாக கூறினார்.​

தந்தையைப் பற்றி கூறியதுமே இதழோரமாய் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது அவளுக்கு. அக்கணம் 'எல்லாம் நீங்க குடுக்கற செல்லம் தான் மாமா, அதான் பஸ்ல போறேன்னு ஆடிட்டிட்டு இருக்கா,​

இவ வேலைக்கு போறதே வேண்டான்னு சொல்லிட்டு இருக்கேன். இதுல பஸ்ல போறேன்னு சொல்லிட்டு இருக்கா,​

அதெல்லாம் வேண்டாம், நம்ம கார்லயே போயிட்டு வர சொல்லுங்க... ' அத்தனை கண்டிப்பாக கூறினார் கங்கா.​

மனைவி எதற்காக கூறுகின்றாள்​

என்று அறியாதவர் இல்லையே மாதேஷும். இப்போதைய காலம் அப்படி. பெண் பிள்ளைகளை தனியாக விடவே பயமாக தான் இருக்கிறது. ஒரு வயது குழந்தையிலிருந்து வயதான மூதாட்டி வரை ஒருவரையும் விடுவதில்லை இந்த சாக்கடை புழுக்கள்.​

இருந்தும் எத்தனை நாளைக்கு பயந்து பயந்து பொத்தி வைத்து பாதுக்காக முடியும். சிறு பிள்ளையா அவள், இருபது இரண்டு வயதாகி விட்டது அல்லவா' நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் தனியாக நின்று சமாளிக்க கற்று கொள்ளட்டும், என எண்ணியவாறு​

மனைவியிடம் கண் சிமிட்டு விட்டு​

'காருல போறவங்களுக்கு தெரியுமா பஸ்ல போற சுகம். ஜன்னல் சீட்டு, இளையராஜா பாட்டு, சைட்டடிக்க நாலு சிட்டு, இதெல்லாம் உன்னை மாதிரி மாட்டு வண்டியில போறவளுக்கு எங்க தெரிய போகுது.​

நீ பஸ்லையே போயிட்டு வா மயிலு, உங்கம்மா கிடைக்கிறா, எத்தனை பணம், புகழ் வந்தாலும் நம்ம எங்க இருந்து வந்தோம்ங்கறதை மறக்க கூடாது . உங்கம்மா அடிக்கடி அதை மறந்துடுவா..." எனக் கூறியவர் மனைவியின் முகத்தைப் பார்த்தார். அவரோ செல்போன் ஏந்திய பத்ரகாளியாய் நின்றார். அவரது முறைப்பிற்கு பயந்தவராய்​

"கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு மா, வேற ஒன்னுமில்லை..." எனக் கூறிக் கொண்டே வெளியில் சென்றது இப்போதும் நினைவு வந்தது இவளுக்கு...​

அப்போது பாவையின் இதழ்களில் மலர்ந்த சிறு புன்னகை பெரும் புன்னகையாய் மாறியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மகளின் முகத்தில் மலர்ந்த புன்னகையை பார்த்தவருக்கு கண்ணீர் வந்தது. அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல்​

"உங்கப்பனை பத்தி பேசிட்டா போதுமே மூஞ்சி முழுக்க சிரிப்பு வந்துடுது அம்மணிக்கு..." நெடித்து கொண்டப்படி மகளை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.​

உள்ளே நுழைந்ததும் முற்றத்தில் அமர்ந்திருந்த இராஜியிடம் "சொன்ன மாதிரியே மெயின் ரோட்டுல வராம சந்துல புகுந்து தான் வந்துட்டு இருந்தாளுங்க அண்ணி, தம்பி போயிருந்தாலும் கூட்டிட்டு வந்திருக்க முடியாது..." என்றவர்​

"ராணிம்மா, வந்தவங்களுக்கு​

ஜூஸ் குடுக்க சொன்னேனே குடுத்தீங்களா?.." வீட்டு வேலையாள் ராணியம்மாவிடம் கேட்டப்படி சமையலறைக்குள் நுழைந்தார்.​

கண்ணீரை துடைத்துக் கொண்டே செல்லும் தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு சோபாவில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தவள்​

"எப்படி இருக்கீங்க..." எனக் கேட்டாள்.​

"நாங்க நல்லா இருக்கோம் மா, நீ எப்படி இருக்க..." மெல்லிய புன்னகையோடு கேட்டார் ராஜி.​

"நான் நல்லா இருக்கேன் ஆன்டி..." என்றவள் ஆதியை பார்த்தாள். அவர் எப்போதும் போலவே அலைபேசியை தன் பெரிய தொந்தியில் வைத்தபடி அதில் கவனமாக இருக்க,​

"எப்படி இருக்கீங்க அங்கிள்..." எனக் கேட்டாள்.​

அவளது குரலில் நிமிர்ந்தவர் "க்குக்கும்,.." என்று குரலை செருமி நிமிர்ந்து அமர்ந்தப்படி "மாமான்னு கூப்பிடு, அதென்ன நாலாவது மனுஷனை கூப்படற மாதிரி கூப்பிட்டுட்டு இருக்க..." பெரியதாக அதட்டல் போட்டவர் பின் "நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க மா." எனக் கேட்டார்.​

"நல்லா இருக்கேன் அங்கிள்..." என்றவளை புருவம் உயர்த்தி பார்த்தார் ஆதி.​

பெருமூச்சுடன் அவரை நேருக்கு நேர் பார்த்தபடி "நீங்க இவ்வளவு சொல்லியும் இப்படி கூப்படரேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அங்கிள். அப்பா இறந்த அன்னைக்கே இதை பத்தி உங்ககிட்ட பேசிடணும்னு தான் இருந்தேன். அப்ப இருந்த சூழ்நிலையில உங்ககிட்ட பேச முடியல, அண்ட் அப்பாவுக்காக பண்ணது அவருக்கு காரியம் முடியற வரைக்காவது இருக்கட்டுமேன்னு தான் இத்தனை நாளாய் அமைதியா இருந்தேன்..." என்றவள் அவர்களை அடுத்து யோசிக்க விடாது கழுத்திலிருந்த கயிற்றை கழட்டி அவருக்கு முன் நீட்டினாள்.​

" ரொம்ப ரொம்ப நன்றி அங்கிள், நீங்க பண்ண உதவியை காலத்துக்கும் மறக்க மாட்டேன். மரணப் படுக்கையில இருக்கிற ஒருத்தரோட ஆசையை நிறைவேத்த வேணும்னு நினைக்கிறதே பெரிய விஷயம். ஆனா நீங்க என் அப்பா ஆசைக்காக உங்க பையனோட சம்மதத்தை கூட கேட்காம என் கழுத்துல இதை கட்ட வைச்சது ரொம்ப பெரிய விஷயம் அங்கிள்.​

இவ்வளவு ரிஸ்க் எடுத்து இதை கட்ட வைச்ச உங்களுக்காகவும், என் அப்பாவோட கடைசி ஆசைக்காகவும் உங்க வீட்டு மருமகளா வரது தான் சரி. ஆனா இன்னொருத்தருக்காக பிடிக்காத ஒன்ணை ஏத்துக்கிட்டு வாழ்ந்தா... எங்க லைஃப் நல்லா இருக்குமா சொல்லுங்க..." நிதானமாக கேட்டவளை ஆழ்ந்து பார்த்தார் ஆதி.​

"இப்படி தாலியை கழட்டி குடுத்துட்டா உன் வாழ்க்கை என்ன ஆகறது டி..." தாயாய் பதறிய கங்காவை பார்த்தவள்​

"என் வாழ்க்கை என்ன ஆகப் போகுது மா, நீங்க பயப்படற அளவுக்கு என்ன நடந்து போச்சு சொல்லுங்க, அப்பாவுக்காக ஒரு சின்ன டிராமா நடந்தது அவ்வளவு தான். மத்தபடி இது மேரேஜ் லிஸ்ட்லயே இல்லை, அண்ட் நாங்க மேரேஜ் பண்ணிட்டோம்ன்னு கவர்மென்ட்ல ரெஜிஸடர் கூட பண்ணல, சோ கோர்ட்டு,டிவர்ஸ்ன்னு சுத்த வேண்டிய அவசியம் கூட எங்களுக்கு இல்லை,ஈசியா மூவ் ஆன் ஆயிடலாம்.அண்ட் யாராவது கேட்டாலும் அப்பாவுக்காக இப்படி பண்ணோம்ன்னு சொல்ல வேண்டியது தான்...." என்றவள் 'இதென்ன புது டிராமா...' என்ற லூக்கை விட்டபடி நின்ற அகரனை சட்டென உதிர்த்த அலட்சிய புன்னகையோடு பார்த்தாள்.​

"தேங்க்ஸ் மிஸ்டர் அகரன். நீங்க பண்ண உதவி ரொம்ப ரொம்ப பெருசு. தேங்க்ஸ் அ லாட்... அண்ட் ஒபனா சொல்லனும்னா எல்லாமே நார்மலா இருந்து, உங்களை கல்யாணம் பண்ணிக்க என்கிட்ட சம்மதம் கேட்டிருந்தா நிச்சியமாக யூ ஆர் ரீஜெக்ட்டெட் மிஸ்டர் அகரன். நீங்க இந்த அக்னிதாவுக்கு வேண்டாம்னு சொல்லி இருப்பேன்..." என்றவள் கையில் வைத்திருந்த மஞ்சள் கயிற்றை அவன் முன் நீட்டி​

"இந்த கயிறு தான் மனுசன் வாழ்க்கையை தீர்மானிக்க போகுதா என்ன? ஃபீல் ஃப்ரீ, மூவ் ஆன் மிஸ்டர் அகரன் ஆதித்தன். அண்ட் குட் பாய்..." என்று அவனது கையில் பத்து ரூபாய் மஞ்சள் கயிற்றை வைத்துவிட்டு, உறைந்து நின்ற மூவரையும் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்து விட்டு நிமிர்ந்த நடையோடு தன் அறையை நோக்கி நடந்தாள் அக்னி.​

மலரட்டும் சிறு புன்னகை..​

 
சூப்பர்... 🤩💞

பெரிய தியாகி மாறி வந்து இப்போ அவங்க பேச்சுல வாயடச்சி போய்ட்டாரு... 😏
😂😂வாயை அடச்சுட்டு நிக்கல.. அவள்ட நாங்க பேசுவோமான்னு. நிக்கிறான் டோலி
 
Top