எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 17 (இறுதி அத்தியாயம்) - கதை திரி

NNK-53

Member
அத்தியாயம் 17

அவனது அலுவலகம் மாநாடு பந்தலுக்கு அருகில் தான் இருந்தது.

சொல்லப் போனால் ஜான்சி நிற்கும் சுவருக்கு மிக அருகில் தான் இருந்தது. அவனது இரு சக்கர வாகனம் கூட அந்தச் சுவருக்கு முன்னால் தான் நிறுத்தப்பட்டிருந்தது.

எப்போதும் நிறுத்தும் இடம் தான் ஆனால் இன்றோ, மாநாடுக்கு வந்தவர்களின் வாகனங்களும் அங்கே நிறுத்தப்பட்டிருக்க, இவனுக்கோ தனது வாகனத்தைத் தேடுவதே பெரும் வேலையாகிப் போனது.

சிறு எரிச்சலுடன் தனது வண்டியைத் தேடிக் கொண்டிருந்த திவாகரின் மனி பர்ஸை யாரோ ஒரு திருடன் திருடிவிட்டு ஓட, “ஏய்…! என் பர்ஸ்…!” என்று கத்தியபடி அவனை விரட்டினான் திவாகர்.

அங்கே காவலுக்கு நின்றிருந்த ஜான்சியின் காதிலும் இவன் கத்திய சத்தம் விழ, போலிஸ் என்ற முறையில் அவளும் அவனுடன் சேர்ந்து திருடனை விரட்டினாள்.

இருவரும் சேர்த்து நாலே எட்டில் அந்தத் திருடனைப் பிடித்தனர். “பட்ட பகலிலேயே திருட்டுறீயா?” என்றபடியே லத்தியால் அவனை அடித்தாள் ஜான்சி.

“ஐயோ பிளீஸ் பிளீஸ் விடுங்க மேடம்.” என்று அலறிய அந்தத் திருடனிடமிருந்து திவாகரின் மனி பர்ஸை மீட்ட ஜான்சியோ, “இந்தாங்க சார் உங்க பர்ஸு. எல்லாம் சரியா இருக்கானு ஒரு தடவைச் செக் பண்ணி பாருங்க.” என்றபடி திவாகரிடம் கொடுக்க,

“ரொம்ப நன்றிச் சிஸ்.” என்றவனோ அவளுக்கு முன்னாடியே அப்பர்ஸைச் சோதித்திட, எதேச்சையாக அவன் பக்கம் திரும்பிய ஜான்சியின் கண்களில் அவனது மனி பர்ஸிலிருந்த சுதாவின் புகைப்படம் பட்டது.

பாஸ்போர்ட் அளவிலிருந்த அப்புகைப்படத்தில் தேவதையாகத் தெரிந்தாள் சுதா ராணி.

‘ஏய் இது சுதா தான? அப்ப…! அப்ப இவரு…! இவரு தான் திவாகரா?’ என்று எண்ணிய ஜான்சியின் விழிகளோ ஆனந்த அதிர்ச்சியில் விரிந்தன.

“ச…! சார் நீங்க…? உங்க பேரு…! திவாகர்த் தானே?” ஆச்சரியத்தில் அவள் புருவம் நெற்றி முடியைத் தொட்டது.

“ஆமா என் பேரு திவாகர்த் தான். ஆனா என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்.” புருவங்கள் இடுங்கினத் திவாகருக்கு.

“என்ன சார் இப்படிக் கேட்கிறீங்க உங்களை எப்படி எனக்குத் தெரியும்…! மாவா? சார்க் காலையிலிருந்து நான் உங்க பேரைத் தான் சார்க் கேட்டுகிட்டே இருக்கிறேன். திவா அப்படி நடப்பான் இப்படிப் பார்ப்பான் னு ஒரே உங்க புராணத்தைத் தான் கேட்டுகிட்டு இருக்கேன். உஃப்…! உங்க பேரைக் கேட்டுக் கேட்டு எனக்கு இப்ப காதே புளிச்சு போச்சு.” சிரிந்த முகமாய் அலுத்துக் கொண்டாள் ஜான்சி.

“என்ன சொல்றீங்க? புரியல?” புரியாமல் விழித்தான் திவாகர்.

“என்ன சார் உங்களுக்குப் புரியலையா? இருங்க நானே விளக்கமா சொல்றேன்? சார் உங்களுக்குச் சுதாராணியைத் தெரியுமா?”

“ஓஓ…! சுதாராணி ஃப்ரெண்டா? எப்படி அவளைத் தெரியும்? இரண்டு பெரும் ஸ்கூல்ல ஒன்ன படிச்சிங்களா?” விசாரித்தான் திவாகர்.

“எனது ஸ்கூல் ஃப்ரெண்டா? அட நீங்க வேற சார். நானும் அவளும் இன்னைக்குக் காலையில் தான் மீட் பண்ணினோம். ஆக்ச்சுவலி அவ உங்களைத் தேடித்தான் கோவைக்கு வந்திருக்கா.”

“என்ன சொல்றீங்க?” சந்தேகக் கண் கொண்டு அவன் பார்க்க,

“ஆமா சார்க் காலையிலிருந்து நானும் சுதாராணியும் உங்களைத் தான் தேடிகிட்டு இருக்கோம்.” பதில் கொடுத்தாள் ஜான்சி.

“என்ன என்ன தேடினீங்களா? அதுவும் ராணியா? அதுவும் என்ன தேடி அவ இங்க வந்திருக்காளா?” நம்பாமல் விளித்தாள் திவாகர்.

“ஆமா சார். இவ்வளவு நேரம் அவ இங்க தான் இருந்தா…! இப்ப…! இப்ப தான் உங்களைத் தேடி உக்கடம் கிளம்புனா.”

“உக்கடத்திற்கா அதுவும் என்ன தேடியா?”

“ஆமா சார். யாரோ உங்க சொந்தக்காரர்த் தான் நீங்க அங்க இருக்கிறதா தகவல் சொன்னாரு?”

“உண்மையிலேயே சுதா என்ன பார்க்கத் தான் வந்திருக்காளா?” இன்னுமே நம்பிக்கை வரவில்லை அவனுக்கு.

“அட நம்புங்க சார். அவ உங்களைத் தேடித் தான் கோவைக்கே வந்திருக்கா.”

“ஐயோ என்னால நம்பவே முடியல. சரி சிஸ்டர் அவ கிளம்பி எவ்வளவு நேரம் இருக்கும்?” என்று இவன் சந்தோஷத்தில் குதித்தபடி அடுத்த கேள்வியைத் தொடுக்க,

“ஜஸ்ட் ஃபைவ் டோ டேன் மினிட்ஸ் தான் இருக்கும். அனேகமா பஸ் ஸ்டாப் ல தான் இருப்பா.” தெளியாகப் பதில் கொடுத்தாள் ஜான்சி. “தாங்கயூ சிஸ்டர்.” என்றவன் அவளைத் தேடி ஓடிட,

ஜான்சியோ புதிதாகச் சிக்கிருக்கும் திருடனை அடித்து இழுத்த படியே அவ்விடத்தை விட்டு நகன்றாள்.

நேரம் அப்போது சரியாக 3:35.

அவர்கள் சென்றதும் தான் இயல்பு நிலைக்குத் திரும்பினார்ச் சையது. முழுவதுமாகத் திரும்பினாரா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னுமே அவரது உடல் பயத்தில் கிடுகிடுவென நடுங்கியது. உள்ளத்தின் பதற்றமோ இன்னுமே குறையவில்லை அவருக்கு.

அச்சத்தில் அகல விரிந்த விழிகளுடன் அவ்வறையைப் பார்வையிட்டவர், யாரும் அவ்வறையில் இல்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு, வேக வேகமாகத் தனது உடலில் கட்ட பட்டிருக்கும் கட்டுகளை அவிழ்க்க முயன்றார்.

போட்டிருப்பது சரியான சுருக்கு முடிச்சுபோல, அவிழ்க்கவே கடினமாகவே இருந்தது.

மணிக்கட்டைத் திருப்பித் திருகி முடிச்சை அவர் அவிழ்க்க முயல, கயிற்றிலிருக்கும் நைலான் இழைகளோ அவரது மணிக் கட்டைக் குத்தி கிழித்தது. அவ்விடத்தில் இரத்தம் கசிந்து ரணமாய் வலித்தது.

‘ஸ்ஸ்ஆஆஆ…! என் கையே அறுபட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது இங்கிருந்து தப்பிக்கனும்.’ ஒரு முடிவுடன், அந்தக் கயிற்றுடன் அவர்ப் போராட, இவரின் உறுதிக்கு முன் அவைகளோ தோற்றுப் போயின. அவர் இழுத்த இழுப்பில் அறுந்தன.

அவரது கரம் முழுவதிலும் இரத்தம். வலி இருந்தாலும் மொஹரம் அன்று அவர்ப் பார்க்காத இரத்தமா? பொறுத்துக் கொண்டார்.

இருப்பினும் சிறிது நேரத்திற்கு விரலைக் கூட அசைக்கவே அரும்பாடுபட்டார். கால்கள் கூடச் சோர்ந்தன. அவர்கள் அடித்ததால் தலையில் பட்ட காயம் இப்போது கூடச் சுருக் சுருக்கென்று குத்தியது.

முதலில் நடக்கக் கூட வலுவின்றிச் சுவரைப் பிடித்து நடந்தவருக்கு எங்கிருந்து தான் அந்த உத்வேகம் வந்ததோ, ‘எப்படியாவது நடக்கப் போகும் பெரும் துயரைத் தடுத்த நிறுந்த வேண்டும்’ என்ற எண்ணம் தான் அத்தகைய உத்வேகத்தைக் கொடுத்ததோ என்னவோ! நடையின் வேகத்தைக் கூட்டினார்.

பரிச்சயமான இடம் என்பதால் மை இருட்டு அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. நான்கே எட்டில் அவ்வறையின் காதவருக்கே வந்தார்.

கடினப்பட்டு முறுக்கிய கரத்துடன் அக்கதவில் தொடர்ந்து தட்டிப் பார்த்தும் திறக்கத் தான் ஆள் இல்லை.

“யா அல்லாஹ்…! இது என்ன இவ்வளவு பெரிய சோதனை. எப்படியாவது நான் வெளியே போயே ஆகணுமே, இல்லைனா இங்க ஒரு பெரிய அழிவே வரும். மாஷா அல்லாஹ் நீ தான் ஜனங்க எல்லாரையும் காப்பாத்தணும்.” வாய் விட்டே புலம்பினார்.

“இல்ல என்ன ஆனாலும் பரவாயில்ல நான் இங்கிருந்து போயே ஆகணும்…! யாக்குதாஆஆஆ…!”என்று தொண்டைக் கிழிய கத்தியவருக்கு எங்கிருந்து தான் அவ்வளவு பலம் வந்ததோ, சராசரி எடை கொண்ட ஐம்பது வயதினருக்கு, எப்படியாவது ஜனங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு யானை பலத்தை நல்கிட, “மாஷா அல்லாஹ்ஆஆஆ…!” கத்தியபடியே தனது தோளால் அக்கதவை இடித்து உடைத்துத் திறந்தார்.

மரத்தலான அக்கதவோ இரண்டாக உடைந்துவிட, அதை உடைத்த இவருக்குமே சரியான அடி. அக்கரத்தை அசைக்கக் கூட இயலவில்லை. அந்தக் கையை மறு கையால் பிடித்தபடியே வெளியேவர அவர்க் கடையிலோ இப்போது யாருமே இல்லை. ‘அன்சாரி தான் அனைவரையும் வீட்டிற்குப் போகச் சொல்லிருப்பான் போல’ நினைத்துக் கொண்டார்.அந்த உணவு விடுதியின் முகப்பிலிருந்த இரும்பு ஸட்டரைச் சாதாரண நாட்களில் தூக்குவதே மிகக் கடினம் இப்போது நாம் இருக்கும் நிலையில் முடியுமா? என்று முதலில் தயங்கினாலும், ‘கண்டிப்பா இங்கிருந்து போயே ஆகணும்’ என்ற முடிவில் அவர் உறுதியாக நின்றதால் தனது முழு பலத்தையும் ஒன்று திரட்டித் தூக்கினார்.

எவ்வளவு முயன்று இரண்டடிக்கு மேல் அவரால் முடியவில்லை. ‘போதும் இது போதும் இங்கிருந்து தப்பிச்சிடலாம்’ என்று நினைத்தவர் அவ்வாறே குனிந்த படியே தப்பிக்கவும் செய்தார்.

கடைக்கு வெளியே சற்று தொலைவில் தான் காவலர்கள் நின்றனர்.

“நமது சிறப்பு விருந்தினர் எல் கே அம்பானி சற்று நேரத்தில் நமது மாநாடு பந்தலுக்கு வந்துவிடுவார். விமானத்தின் பழுதின் காரணமாக அவர் வரத் தாமதமாகிவிட்டது அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நமக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்…” என்ற ஒலிபெருக்கியின் சத்தத்தில் அவருக்குச் சிறிது நிம்மதி வந்தாலும், அவர்களின் திட்டம் முழுதாகத் தெரியாதவருக்குக் கலக்கம் இன்னுமே குறையவில்லை. ‘கிட்டதட்ட இருபது இடத்தில் வச்சிருப்பதாகச் சொன்னானே? ஒரு ஆளைக் கொல்லறதுக்கு எதுக்கு இருபது குண்டு?’ என்ற சிந்தனையே மேலோங்க வேகவேகமாக அங்கே நின்ற காவலர்களை நோக்கி ஓடத் துவங்கினார்.

சுதாராணியைத் தேடிய திவாகரோ நேராக அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி வந்தான்.

நீல நிற ரவிக்கையும் ஊத நிற தாவணியும் அணிந்திருந்தவளைத் தூரத்திலிருந்தவரே கண்டுகொண்டான் திவாகர். அவனின் அவள் அங்குத் தான் இருக்கிறாள் என்று.

அவளைப் பார்க்கும் வரை அவனுக்கு இருந்த கோபம் அவளைக் கண்டதும் காலைப் பனியாய் மறைந்து போயின.

அவனைத் தேடி அலைந்ததில் உடல் சோர்ந்து, அனலில் இட்ட மலராய் அவள் வாடி வதங்கிப் போய் இருக்க, அந்நிலையில் அவளைக் கண்டவனுக்கோ உள்ளம் உருகியது.

ஒரு பக்கம் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பது அவனுக்குச் சந்தோஷத்தை நல்கினாலும், மறுபக்கமோ இப்படித் தன்னைத் தேடி தனியாக வந்திருக்கிறாளே அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன ஆவது என்ற கவலையும் அவனை ஆடிப்படைக்க மொத்தமாய் கலங்கித் தான் போனான் திவாகர்.

அந்நேரம் பார்த்து, உக்கடம் செல்லும் பேருந்தும் அவ்விடத்திற்கு வந்து விட, அவளும் அந்தப் பேருந்தில் ஏற வேண்டி அதை நோக்கி விரைய, அதில் கலவரமானவன், “ஏய் ராணிஇஇ…!” என்று அதீதச் சத்தத்தில் கூவினான்.

அது என்ன மாயமோ அந்தனை ஜனங்களுக்கு மத்தியில், அவ்வளவு இரைச்சலுக்கு இடையில் அவன் சத்தம் மட்டும் துண்டாக அவள் காதில் வந்து விழுந்திட, “திவாகர்...?” சந்தேகமாக முணுமுணுத்தன அவளது அதரங்கள்.

“ராணிஇஇ…” எப்போது இன்னுமே தெளிவாக அவள் காதில் விழ, ‘ஒருவேலை அவர்த் தான?’ சந்தேகமும் சந்தோஷமும் ஒருங்கே வந்து அவளைக் குழப்பிட, சத்தம் வந்த திசை நோக்கி முகத்தை மட்டும் திருப்பினாள் சுதாராணி.

அவளுக்கு முன்பாகச் சிறிது தூரத்திற்கு அப்பால் அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான் திவாகர்.

“திவாஆஆ…” வாயெல்லாம் பல் அவளுக்கு. உவகையில் உள்ளம் குதித்தது. கண்கள் கூட ஆனந்தத்தில் கலங்கின.

கலங்கின விழிகளை அழுந்தத் துடைத்தவள் அவனது பெயரைக் கூவியபடியே அவனை நோக்கி ஓடினாள்.

மாநாடு நடக்கும் இடத்தில் இப்போது சையதோ அங்கே காவலுக்கு நின்ற அகமது மற்றும் சாந்தகுமாரியின் அருகில் வேகமாக ஓடி வந்தார்.

இருவரும் அவரைப் பார்த்துப் புருவம் சுருக்கிட, “ஸ…! சார்.” என்றவருக்கோ ஓடிவந்ததில் மூச்சு வாங்கியது.

“ப்ச்…!” என்று அலுத்துக் கொண்டபடி சாந்தகுமாரி தனது கைக் கடிகாரத்தைப் பார்க்க, அப்போது நேரமோ சரியாக 3:49.

அந்த மாநாடுக்கு வெளியே இருந்த ஜோடிகளோ ஒருவரை ஒருவர் விழுங்கும் பார்வை ஒன்றைப் பார்த்துக் கொண்டனர்.

இருவருக்கும் ஓடிவந்ததில் மூச்சு வாங்கியது.

பெரும் பெரும் மூச்சுகளை விழுத்து விட்டபடியே திவாகர்த் தான் முதன் முதலில் பேச்சைத் துவங்கினான்.

“ம்ஹூம்ம்ம் ம்ஹூம்…! ம்ம் சொல்லு…! ஏ…! எதுக்காக…! எ…! என்ன ப்…! பார்க்க வந்த? ஹாங்…!”

“ம்ஹூம்ம்ம் ம்ஹூம்…! அ…! அது…! அதுவந்து…! சாரி திவா…! நான் உங்களைத் தப்பா, பு…! புரிஞ்சுகிட்டேன்…! நான் உங்களை ரொ…! ரொம்பவே கஷ்ட படுத்திட்டேன், சாரி…!” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனிடம் மன்னிப்பு வேண்டினாள் சுதா.

“இதுக்குத் தான் அவ்வளவு தூரத்திலிருந்து என்ன பார்க்க வந்தியா?” மார்புக்குக் குறுக்கே கைக் கட்டிய படி விசாரித்தான் திவாகர்.

“ம்ஹும் இல்ல…! அதுஉஉ…! வந்து…!” கன்னம் சிவந்தது சுதாவிற்கு.

“அது வந்து…” புருவம் உயர்த்தினான்.

“அது… நான்…”

“நீ…?”

வெட்கத்தில் தானாக அவள் கால் விரல்கள் தரையில் கோலமிட்டன.

“அது வந்து… ஐ…”

“ஐ…” இதழ் விரிந்தது திவாகருக்கு.

“ஐ லவ்…!” என்று அவள் வாக்கியத்தை முடிக்கும் முன்பே, “டமார்…” என்ற பெரும் சத்தம் அவர்களது காதைக் கிழித்தது. நேரம் அப்போது சரியாக 3:50.

ஒரு நிமிடத்திற்கு முன்பு தான், “என்னைய்யா வேணும்?” என்று அலுத்துக் கொண்ட அகமதிடம்,“ “சார் நம்ம ஊருல பல இடங்களில் குண்டு வச்சிருக்கலாம் சார்.” என்று கூவிய சையதின் கண்கள் பயத்தில் மிரண்டன.

“வாட்?” என்று அகமது அதிரவும் “டமார்…” என்ற சத்தத்துடன் குண்டு வெடிக்கவும் சரியாக இருந்தது.

குண்டு வெடித்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் பயத்தில் அலறினார்.

அது என்ன சத்தம் என்று புரியாமல் அவர்கள் பார்க்க, ஒரு மீதி வண்டி மட்டும் பட்டாசு போல் வானத்தில் போய் வெடித்துச் சிதறியது.

அதைப் பார்த்த சுதாவின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்தன. பயத்தில் அவள் உச்சி முடியோ நட்டுக்கொண்டு நின்றது.

உடல் அதிரக் கண்களோ தன்னையும் அறியாமல் கண்ணீரைச் சிந்தின.

அதிர்ந்து உறைந்து போய் அவ்விடத்திலேயே சிலையென அவள் நிற்க,

“ராணிஇஇ…! வா இங்கிருந்து போகலாம்.” அவளது கரத்தைப் பிடித்து இழுத்துச் சென்றான் திவாகர். அவன் கண்கள் கூடப் பயத்தில் மிரண்டு தான் இருந்தது. அவன் கைகள் கூடக் குளிர்ந்து நடுங்கின.

அடுத்தும் அதே போல் ஒரு சத்தம், சாலையோரம் இருந்த அந்த இட்லிக் கடை வெடித்துச் சிதறியது. ரிப்பனுடன் அந்த இட்லி கடைக்கார பெண்மணியின் மகளுடைய தலை மட்டும் அவள் முன்னால் வந்து விழ, “ஆஆ பாப்பாஆஆ.” என்று அலறினாள் சுதா. அச்சத்தில் கால்கள் அவ்விடத்தை விட்டு வர மறுத்தன.

“பாப்பாஆஆ…” என்ற இவள் கத்தி கதறக் கதற வலுக்கட்டாயமாக அவளை இழுந்து சென்றான் திவாகர்.

இருவரும் தப்பிக்க மார்க்கம் தேடி அலைய, அவள் சற்று முன் உபயோகப் படுத்திய அத்தொலைப்பேசி சாவடியோ அவள் கண் முன்னால் வெடித்துச் சிதறியது.

அதற்கு முன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரு காவலர்கள் வண்டியின் பின் புறமோ நெருப்பு எரிய, அதைப் பார்த்தவளுக்கோ வியர்வையில் உடல் நனைந்தது.

அங்கிருந்த ஒரு காரின் மேல், சற்று

முன் அவளுக்கு உதவிய அவளின் காயத்திற்கு மருந்திட்ட, அழகான அம்மோதிரத்திற்குச் சொந்தக்காரியான அப்பெண்ணின் கரம் மட்டும் ரத்த காயத்துடன் கிடக்க, அதைப் பார்த்தவள் பயத்தில் அவனை இறுகப் பற்றிக் கொண்டாள்.

அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஒற்றின் மேல் ஒன்றாகக் குவிந்து கிடக்க, அந்தக் குவியலுக்குலிருந்து ஒரு பெண்ணின் முனங்கல் சத்தம் மட்டும் தொடர்ந்து வந்த வன்னமே இருந்தது.

அந்த முனங்கல் சத்தம் சுதாவிற்கு ஜான்சியை ஞாபகப்படுத்த, “ஜான்சி ஜான்சி…” அரட்ட விழிகளுடன் அவளைத் தேடினாள் சுதா.

அவள் எங்குத் தேடியும் ஜான்சி கிடைக்காமல் போக, “ஜான்சிஇஇ… ஜான்சிஇஇ…” தொண்டை கிழிய கத்தினாள் சுதா.

அவள் கத்த கத்த அந்த வண்டி குவியலுக்குலிருந்து சத்தம் வந்திட, அதைக் கேட்ட திவாகரோ, வேக வேகமாக அந்த வண்டிகளை அப்புறப்படுத்தினான்.

அந்தக் குவியலுக்குள் காலில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்தும் சுதாவிற்கோ கண்ணீரில் உடல் குலுங்கியது. ‘ஆம் ஜான்சி தான். ஜான்சியே தான்.’ என்ற நிதர்சனம் அவளுக்குப் புரிந்து போக, “ஜான்சிஇஇ…” என்று கத்தினாள் சுதா.

கண்ணீரோ மடைத் திறந்த வெள்ளமாய் வழிந்துகொண்டிருந்தது.

“அழாத ராணி.” நாத்தளதளக்க அவளை அழைத்த திவாகரோ, ஜான்சியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, சுதாவை ஒரு கையால் பிடித்தபடி பாதுகாப்பான இடம் தேடி ஓடினான்.

“எல்லத்திற்கும் காரணம் இதோ இவனுங்க தான்டா.” அக்கட்சியைச் சேர்ந்த சிலர்க் கலவரத்தில் அங்கும் இங்கும் ஓடி முடிந்தளவு மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்த சையத்தைப் பார்த்துக் கோபத்தில் கத்தினார்கள்.

“இவங்களை சும்மா விடக் கூடாது.” என்றவர்கள் அவரை விரட்டிப் பிடித்து அடிக்க ஆரம்பித்தனர்.

“ஐயோ பிளீஸ் என்ன அடிக்காதீங்க. நான் யாரையும் கொல்ல வரல. பிளீஸ் என்ன விட்டுட்டுங்க.” என்று அவர் அலற, அவரைக் காக்கும் பொருட்டு அவ்விடத்திற்கு வந்த அகமதும் சாந்தகுமாரியும், அக்கலவரகாரர்களிமிருந்து அவரைக் காக்கப் போராட, இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் சிலரோ, பதிலுக்கு அந்தக் கட்சிக்காரர்த் தாக்கினர்.

“பிளீஸ் எனக்காக யாரும் அடிச்சிக்காதீங்க.” என்று ஒரு இமாமாக அவர்க் கெஞ்ச, அவர்கள் அவர்ப் பேச்சைக் கேட்கணுமே. மாறி மாறி ஒருவரை ஒருவர்த் தாக்கிட, ஒரு சிறு மத போரே அவ்விடத்தில் நிகழ ஆரம்பித்தது.

“ஏய் ஏய்…” என்று கத்தியபடியே சாந்தகுமாரியும் அகமதும் அவ்விரு சாராரையும் அடித்து விலக்கினார்.

“ஏய் நீயும் முஸ்லிம் தான…! எங்களுக்குச் சப்போர்ட் பண்ணாம அவனுக்களுக்குச் சப்போர்ட் பண்ற?” என்று இஸ்லாமியர்கள் சிலர் அவரைச் சாட, “ஆமா டா…! நானும் ஐந்து வேலைத் தொழுற இஸ்லாமியன் தான். அதுக்கு இப்ப என்னங்கிற? அதுக்காக எல்லாரையும் சுட்டு கொல்லனுமா? இதைத் தான் அல்லாஹ் குரான் ல சொன்னானா? கருணைக் கடல் டா அவன். அல்லாஹ்யும் நபிகள் நாயகமும் விட்டுச் சென்ற மார்க்கத்தில் பிறந்துட்டு, சைத்தானா நடந்துக்கிறீங்களே டா சே…” கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவர்த் தொடர்ந்து அவர்களை லத்தியால் அடித்து விரட்டினர்.

மறு பக்கம் சையத்தை அடித்துக் கொண்டிருந்த அந்தக் காவி துண்டு காரர்களை, “அன்பே சிவம்னு சொல்ற ஹிந்து மதத்தில் பிறந்துட்டு என்னங்கடா இதெல்லாம். எதுக்கு அந்த அப்பாவி மனுஷனைப் போட்டு அடிக்கிறீங்க?” என்று கேட்டபடியே அவர்களை அடித்து விரட்டினாள் ஏட்டு சாந்தகுமாரி.

அங்கிருந்த விளையாட்டு மைதானத்திற்கு ஜான்சியைத் தூக்கி வந்தான் திவாகர். அவன் கரமோ சுதாவை இறுகப் பற்றியிருந்தது.

“ஐயோ… அம்மாஆஆ…!” என்று அலறிக் கொண்டிருந்த ஜான்சிக்கோ, ‘தனது கால் இவ்வாறாக உடைந்து விட்டதே இனி ஒலிம்பிக் கனவு நடக்குமா?” என்ற கலக்கம். அவளின் கண்களோ கண்ணீருக்குள் மிதந்தது.

அவளைப் பத்திரமாக ஒரு இடத்தில் அமரவைத்தான் திவாகர்.

ஜான்சி அங்கே குலுங்கிக் குலுங்கி அழ, “ஜான்சி பிளீஸ் டி பிளீஸ் அழாத என்ன?” என்ற சுதாவிருக்கும் கண்ணீர் நிற்காமல் வழிந்து உடையை நனைத்தது. இருந்தும் தோழியைச் சமாதானம் செய்ய முயன்றாள்.

“ஒலிம்பிக் ல ஓடி மெடல் வாங்கணும் னு ஆசைப்பட்டேன். இனமே அது நடக்காதுல்ல.” ஜான்சியின் விழியிலிருந்து கண்ணீரோ சாரைக் கட்டி நின்றது.

“ஏய் உனக்கு ஒன்னும் இல்லடி.” அவளை அமைதிப் படுத்த விழைந்தாள் சுதா.

“மஹும்…! ஏன் டி பொய் சொல்ற? எனக்கு எல்லாம் தெரியும்? என் காலை நகற்ற கூட முடியல…! என்னால எப்படி டி ஓட முடியும்? ஏன்டி எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இனிமே எனக்குக் கல்யாணம் நடக்குமா டி?” விரக்தியுடன் அவள் கேட்க, உடல் குலுங்கினாள் சுதா.

“சிஸ்டர் நீங்கச் சாதாரண ஆள் கிடையாது போலீஸ். நீங்களே இப்படிக் கலங்கினா எப்படிச் சிஸ்டர். நான் சொல்றேன் ல, நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க…! எல்லாம் நல்லா படியாகவே நடக்கும்.” என்று நம்பிக்கைக் கூறினான் திவாகர்.

அடுத்து அடுத்தும் “டமார் டமார்…” என்ற சத்தமும் மக்களின் அலறல் சத்தமும் அவர்கள் காதில் விழுந்த வன்னமே இருந்தது.

ஒவ்வொரு முறைச் சத்தம் கேட்கும் போதும் பயத்தில் வெடித்து அலறினாள் சுதா. கண்களோ மிரட்சியில் விரிந்தன.

“ஏய் ராணி பிளீஸ் டி அழாத டி. நான் நீ அழனும் னு நினைச்சது ஒரு காலம் டி. ஆனா நீ ஆளும்போது எனக்கு எப்படியோ இருக்குடி. ஏதோ என் உயிரே போற மாதிரி…! ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு டி, பிளீஸ் புரிஞ்சுக்கோ. பிளீஸ் டி அழாத.” எவ்வளவோ எடுத்துக் கூறி தேற்ற முயன்றான் திவாகர்.

என்றுமே அழாதவள், இன்று தொடர்ந்து கண்ணீர் வடிக்க, அவனுக்கோ இதயம் ரணமாய் வலிக்கத் துவங்கியது. “பிளீஸ் அழாத டி…” என்று கெஞ்சிப் பார்த்தான், “பிளீஸ் டி.” கொஞ்சி பார்த்தான். எதற்கும் அவள் மசிந்தால் இல்லை. கெஞ்சி, கொஞ்சி, அரட்டி பார்த்தும் அவள் பிடி கொடுக்காமல் போகவும், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் அவளை இழுத்து அனைத்து இதழோடு இதழ்க் கோர்த்தான்.

அவன் கொடுத்த மருத்துவ முத்தத்தில் அவள் அனைத்தையும் மறந்து விட, மெல்ல அவளின் இதழிலிருந்து இதழ்ப் பிரித்து, அவளது நெற்றியில் தனது நெற்றியை வைத்து, “இப்ப பரவாயில்லையா?” மெலிதாய் சிரித்தவன் கண்களோ கலங்கி இருந்தன. அந்தச் சம்பவம் அவனையும் தாக்கி இருக்கக் கூடுமோ?!

“ம்ம்…!” மெலிதாய் சிரிக்க முயன்றவள் கண்களிலிருந்து கண்ணீர்ப் பெருகி அவளது பட்டுக் கன்னத்தை நனைத்தது. அதைத் தனது இரு கட்டை விரலால் துடைத்தவன், “இங்க பாரு ராணி…! இந்த உலகத்தில் நீயும் நானும் மட்டும் தான் இப்ப இருக்கோம். வேற யாரும் இல்ல னு நினைச்சுக்கோ, நேற்று நாளை எதுவும் நமக்கு இல்ல, இன்று இந்த நொடி மட்டும் தான் நமக்கானது. அந்த நொடி உனக்காக நானும் எனக்காக நீயும் நமக்காக இந்தக் காதலும் இருக்கும் அவ்வளவு தான் அது போதும். இந்த நொடியை ரசிச்சு வாழனும் அதை மட்டும் நினைச்சுக்கோ டி போதும்.” என்றதும் அவள் தனது விழிகளை மூடிக்கொள்ள, “சிரி…” காதோரம் ஆணையிட்டான் திவாகர்.

அவளும் கண்களைத் திறந்து மெலிதாக அவனைப் பார்த்துச்ச சிரிக்க, உயிராய் அவளை ஏற்றுத் தனது மார்பு கூட்டுக்குள் அவளைப் புதைந்து கொண்டான் திவாகர்.

குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவள் உடல் அதிர, அவனோ அவள் அதிர அதிர அவளை இறுக அணைத்தான்.


ஜனங்கள் சிலர்ப் பாதுகாப்பு கருதி அவர்களிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்குள் வந்து குவிந்தனர்.நன்றி வணக்கம்.இதுவரை படித்து எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்த வாசகர்களுக்கும் இந்த தளத்தில் எழுத அனுமதித்த நறுமுகை தளத்திற்கும் நன்றி நன்றி நன்றி...
 
என்ன இப்படி பட்டுன்னு முற்றும் போட்டுட்டீங்க!!... ஆனால் கடைசி வரைக்கும் பதட்டத்துலயே வச்சுருந்தீங்க!!... செம இன்ட்ரஸ்டிங்!!... அருமையான கதை!!... வாழ்த்துகள்!!..
 
Top