எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் -5

5

அப்பா எல்லாம் ரெடி கிளம்பலாமா என ஊருக்கு செல்வதில் ஆர்வமாக இருக்கும் கதிரை ஏமாற்ற மனம் இல்லாதவர் கண்டிப்பா போய் தான் ஆகணுமா என கேட்டார்.

ம்ம்.. போய் தான் ஆகணும் என உறுதியுடன் கூறியவன் பிறகு யோசனையாக .. உங்களுக்கு அத்தையை சந்திக்கிறதுல பிரச்சனையா இல்ல அந்த ஊருக்கு வர்றது பிரச்சினையா எனக் கேட்கவும்.

ரெட்டும் தான் என்றவர் என் அக்கா என்னை எப்படி பார்த்தாலும் பேசினாலும் என்னால ஏத்துக்க முடியும் ஆனா அந்த ஊர்காரனுக என இழுத்தவர் ரொம்ப வருஷம் ஆயிடுச்சுப்பா அங்க வரனும்னா ஒரு மாதிரி இருக்கு.


ஏற்கனவே சொத்து பிரச்சினையில் அங்க இருந்த ஒருத்தன் கூட எனக்காக பேசல இப்போ நான் வரும் பொழுது அவனுக எப்படி பார்ப்பாங்கன்னு கூட தெரியல..

என்ன இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊர் இல்லையா அங்க என்னுடைய மரியாதை கொஞ்சமாவது இருக்கணும்னு எதிர்பார்க்கிறது மனித இயல்பு தானே என அவரின் பக்கத்து நியாயத்தை கூற முயற்சித்தார்.

ஓகே பா விருப்பம் இல்லாத உங்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பல என்றவன் உமையாள நான் வர வரைக்கும் நல்லா பாத்துக்கோங்க தயவு செஞ்சு எனக்கென்னன்னு அப்படியே விட்டுடாதீங்க.

வேளாவேளைக்கு சாப்பிடறாளா..? தூங்குகிறாளான்னு கவனிச்சுக்கோங்க உங்க அக்காக்கு தான் உங்களால எதுவும் செய்ய முடியாமல் போச்சு அக்கா மகளுக்காவது தாய் மாமனா மூணு வேளை சாப்பாடு போடுங்க.. நான் வர ரெண்டு நாள் ஆகும் அம்மா கேட்டா சொல்லிடுங்க என்ற தகவலை சொல்லிவிட்டு வாகனத்தை எடுத்துக் கொண்டு அத்தையின் ஊரை நோக்கி பயணித்தான்.

இரவு நேரத்தில் அவனது சொந்த கிராமத்தை நெருங்கியவன் வள்ளியின் இருப்பிடம் பற்றி விசாரித்தான்.

ஏற்கனவே தந்தையிடம் பயண விவரங்கள் அவனின் கிராமம் என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறான் இருந்தாலும் வள்ளியின் இருப்பிடம் அவனுக்கு தெரியவில்லை.

அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்றவன் காரை ஓரமாக இடம் பார்த்து நிறுத்தி விட்டு அவர்கள் கூறிய பழைய காலத்து வீட்டிற்குள் சென்றான்.

வீட்டை பார்க்கும் போழுது அவ்வளவு பிரமிப்பாக இருந்தது நன்கு வாழ்ந்த குடும்பத்தின் வீடு என்பதும் புரிந்தது. வீட்டை பராமரத்து செய்யவே பல லட்சங்கள் ஆகும் சரி செய்து விட்டால் மாளிகைக்கு மேலானது என்பதும் புரிந்தது.

அத்தை .. மெதுவாக அழைத்ததே வீடெங்கிலும் எதிரொலித்து பயத்தை கொடுத்தது.

மெதுவாக இருட்டு அறையில் இருந்து வள்ளி வெளியே வந்தார் யார் என கேட்டபடி..பிறகு ஸ்விட்ச் போட்டு பல்ப்களை எறியவிட்டவர்
கதிரைக்கண்டதும் உடனேயே அடையாளம் கண்டு கொண்டார்.
நீ..நீ ரத்தினம் பையனா..?

ம்ம்..என்னை பார்த்ததே இல்ல.. பிறகெப்படி என்னை பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிச்சீங்க.

என்னப்பா தாய்க்கு தான் பிள்ளையை அடையாளம் தெரியாதா ரத்தினத்தை நான் தானே பிள்ளை மாதிரி வளர்த்தேன் அப்படியே அச்சுல‌ வார்த்தது போல அவனையே உரிச்சு வச்சு வந்து நிக்குற உன்னை எனக்கு அடையாளம் தெரியாதா..?

எப்படி இருக்க .தம்பி எப்படி இருக்கான்..உன் அம்மா.‌என நலம் விசாரித்தவர்..யோசனையாக திடீர்னு ஏன் என்னை தேடி வந்திருக்க எனக்கேட்டவர் அடுத்த நொடியே பயந்தபடி உமையாளுக்கு அங்க ஏதும் என வார்த்தைகள் திணற அவனின் முகம் பார்த்தார்.

நீங்க பயப்படுற மாதிரி எதுவுமே இல்ல‌அத்தை.. எனக்கு கல்யாணம் அதான் பத்திரிகை குடுக்க வந்தேன்.. கூட அப்பாவும் வர்றதா தான் இருந்தது ஆனா உமையாளை பாத்துக்கணும் இல்லையா அதனால அப்பா அங்கேயே இருக்கிறேன்னு சொல்லிட்டு என்னை மட்டும் அனுப்பினாங்க என தந்தையை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.

நல்லது..நல்லது என ஆசிர்வதித்தவர்.
முதல்ல உட்காரு நான் தண்ணீர் கொண்டு வர்றேன் என உள்ளே சென்றார்.

இலகுவாக அங்கிருந்து ஒரு நாற்காலியில் தூசி தட்டிக் கொண்டு அமர்ந்தான் கதிர்

அறை முழுவதிலும் தந்தையும் அத்தையும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நிறைய மாட்டி வைக்கப்பட்டிருந்தது .

அவனுடைய பாட்டியின் புகைப்படம் தனியாக ஒன்று இருந்தது .

அப்படியே வள்ளியை நினைவுபடுத்தியது.

தாத்தா பாட்டி,தந்தை அத்தை நால்வரும் குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ,பாட்டியின் கையில் தந்தை மட்டும் குழந்தையாக இருக்கும் புகைப்படம் அத்தையின் பூப்புநன்னீராட்டு விழா புகைப்படம் என பழைய நினைவுகள் அந்த வீடெங்கிலும் கொட்டிக் கிடந்தது.

அதை ஆர்வமுடன் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பின்னால் இருந்து வள்ளியின் சத்தம் கேட்டது.

இதையெல்லாம் மீட்கணும்னு தான் உன் அப்பா கிட்ட சண்டை போட்டு அவ்வளவு பணத்தை வாங்கி இந்த வீட்டை மீட்டேன் என்று சொல்லவும் திரும்பி அவரைப் பார்த்தவன் புரியல அத்தை என்றான்.

முதல்ல கை கால் அலம்பிட்டு வா சாப்பிடு அதுக்கு அப்புறமா என்ன விவரம் என்பதை தெளிவா சொல்றேன் என்றார்.

சரி என பின்கட்டிற்கு சென்றான்.
பின்னாலே சென்றவர் கிணற்றில் இருந்து நீரை இறைத்து கொடுத்தார்.மறுப்பு சொல்லாமல் வாங்கியவன் முகம் கழுவ ஆரம்பித்தான்.

பிறகு உள்ளே வந்தவன் அவனுடைய பேக்கில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டே தந்தைக்கு அழைத்து ஊர் வந்து சேர்ந்ததை கூறிவிட்டு வைத்தான்.

அவனருகில் முகம் பார்த்து நின்றவர் ரத்தினமோடவா பேசின என ஆர்வமாக கேட்டார்.

கதிருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.அவர் பேச ஆசைபட்டிருக்கிறார் இது தெரியாமல் இவனே பேசிவிட்டு வைத்து விட்டான்.

சாரி அத்தை இப்போ லேட் ஆகிடுச்சு காலைல போன் பண்ணி தரேன் அப்போ அப்பாகிட்ட பேசுங்க.

ரத்தினம் என்னோட பேசுவானா..?எதிர்பார்ப்போடு கேட்டார்.

பேசாம..என கேட்டவன் அவர் நீங்க வளர்த்த உங்க தம்பி..முதல்ல அது தியாகம் இருக்கட்டும்..என்றவன் பசிக்கிது அத்தை சாப்பாடு தர்றேன்னு சொல்லிட்டு இன்னும் எவ்ளோ நேரம் நிற்க விடுவீங்க கேலி பேசினான்.

இதோ என அவர் சாப்பிட வைத்திருந்த சாதத்தை கொண்டு வந்து வைத்தார்..பிசைந்து சாப்பிட மோரும் தொட்டுக்க ஊறுகாயும் இருந்தது.

மதிய வேளையிலே சாதத்தை அதிகம் உண்ணாதவன் இரவு வேளையில் நைந்து போயிருந்த உணவு அவனுக்கு.. அத்தையின் நிலை அவனுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவன் இந்த உணவை உட்கொண்டால் அத்தைக்கு இரவில் பட்டினி கிடப்பார் என்பதை நன்றாகவே உணர்ந்தான்.
கடையில் வாங்கி வந்து உண்ணவும் மனம் ஒப்பதில்லை அத்தைக்கு வாங்கி வரலாம் என்றாலும் அவர் அனுமதிக்கவில்லை முகம் உடனே சோர்ந்து விட்டது.

மாடமாளிகையில் வேளைக்கு பல வகைகள் சமைத்து சாப்பிடுபவனுக்கு பழைய சோறும் மோரும் தருகிறோமா என அந்த தாய் உள்ளம் பதறியது.

அதை வெகுவாக கவனித்தவன் யோசிக்காமல் அந்த சாப்பாட்டில் மோரின் முழுவதுமாக உற்று பிசைந்தான் .
அதை இருவருக்கும் சம அளவில் பகிர்ந்து அத்தைக்கு ஒன்றும் அவனுக்கு ஒன்றுமாக எடுத்துக் கொண்டார் எவ்வளவோ மறுத்து பார்த்தார் வள்ளி ஆனால் கதிர் கேட்கவே இல்லை அத்தை சாப்பிட்டால் தான் நானும் சாப்பிடுவேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் அவர் சாப்பிட தொடங்கினார்.

கதிர் இத்தனை நாட்களில் இதுபோல நிறைவான உணவை உட்கொண்டதில்லை அந்த பழைய வீடும் ஏழ்மையான உணவும் சீக்கிரமாகவே உறக்கத்தை வரவழைத்தது .

ஆனாலும் அத்தையிடம் பேச வேண்டியது நிறைய இருந்ததால் உறக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பேச்சை தொடர்ந்தான்.

இப்போ சொல்லுங்க அத்தை எதனால் உங்களுக்கு இவ்வளவு ஏழ்மை அப்பா உங்களுக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்திருக்கிறார் அதை நீங்க வீட்ல வைத்து சாப்பிட்டாலே இனி ஓரு தலைமுறைக்கு வருமே அத்தனை பணமும் எங்க போச்சு..?

என்னனு சொல்லறது கதிர்..ஒரீ பொண்ணுக்கு அப்பா என்கிற உறவு சரியா இருக்கனும் இல்லையா அண்ணன் தம்பி உறவாவது திடமா இருக்கனும் எனக்கு ரெண்டும் சரியா இல்ல.. அப்பா என் அம்மாவை காரணம் காட்டிக்கிட்டு குடித்து வீணா போனாங்க..

சரி நமக்கு தம்பி இருக்கானே அவனை நல்லவிதமா வளர்த்தினா குடும்பத்தை தூக்கி நிறுத்துவான்னு கனவுகளுடன் வளர்த்தேன் ஆனால் அவனும் சுயநலமா அவனோட படிப்பு வேலை கல்யாணம்னு செட்டில் ஆயிட்டான் .

தகப்பன் தம்பி ரெண்டு உறவும் சரியா அமையாதப்போ புருஷன் மட்டும் சரியா அமைஞ்சிடுவானா ..?

அப்படித்தான் எனக்கும் கணவர் அமைஞ்சாரு..எவனாவது ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்தா போதும்னு ஒரே நாள் ராத்திரியில் முடிவு பண்ணி கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க அவருக்கு ஏற்கனவே பல பொம்பளைகளோட தொடர்பு ,பத்தாததுக்கு குடி வேற..ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருந்தாலே கட்டிகிட்ட பொண்ணுக்கு நிம்மதி இருக்காது ஆனா இங்கே எல்லாமே இருக்கு எப்படி நான் சந்தோஷமா இருக்க முடியும் சொல்லு.

நான் படிக்கவும் இல்லை அப்பாவும் கொஞ்ச நாள்ல செத்துட்டாங்க தம்பி நான் இருக்கேனா செத்துட்டேனான்னு கூட நினைச்சு பாக்கல.. பத்தாததற்கு மலடி பட்டம் வேற..கிடைச்ச வாழ்க்கையை கெட்டியா பிடித்துக்கொண்டு மீதி வாழ்க்கையை வாழ்ந்துடலாம்னு நினைக்கும் பொழுது என் கணவர் இந்த வீட்டை விலை பேசிட்டாரு.

தடுக்க எவ்வளவோ முயற்சி செஞ்சேன் முடியல.. கைமீறி போயிருச்சு பல தலைமுறை வாழ்த்த வீடு நானும் என் தம்பியும் பிறந்த வளர்ந்த வீடு..
ஓடிப் பிடித்து விளையாடிய வீடு.. என் தம்பி பெருந்தன்மையா எனக்காக விட்டுக் கொடுத்துட்டு போன வீடு.

அதை நான் விட்டுட்டேன்னு நினைக்கும் பொழுது என்னையே என்னால மன்னிக்க முடியல கணவரோட சண்டை போட்டேன் இந்த வீட்டை எப்படியாவது மீட்டுக் குடுங்கன்னு கால்ல விழுந்து கெஞ்சினேன் .

அடியும் மிதியும் தாராளமா கிடைச்சது..அப்போ தான் என் கணவர் வீட்டு ஆளுக இந்த வீடு உனக்கு வேணும்னா அவனுக்கு தேவைப்படுற பணத்தை வாங்கி கொடுன்னு கேட்டார்கள் .

முடியாதுன்னு சொன்னப்போ அடிச்சி வெளிய துரத்திட்டாங்க ..
அப்போ தான் நான் கருவுற்றிருந்தேன் மலடின்னு பட்டம் வாங்கினவளுக்கு தான் தெரியும் ஒரு குழந்தை வயித்துல வரும்போது எந்த அளவிற்கு சந்தோஷமா இருக்கணும்னு.

என் பொண்ணு பொறக்கும் பொழுதே பிறந்த வீட்டை முழுங்கிட்டு பொறந்தாங்கற கேட்ட பெயர் அவளுக்கு வரக்கூடாது அதுக்காகவாவது இந்த வீட்டை மீட்கணும் முடிவு செஞ்சு என் கணவர் சொன்னதை நான் கேட்டுக்கிட்டு.

என் தம்பி மேல கேஸ் போட்டேன் பெரிய தொகையை பணமா கேட்டேன் அவனும் வந்தான் பணம் பத்தலைன்னு சொன்னப்போ மனசாட்சியே இல்லாம உன் அம்மா தாலி வரைக்கும் கழட்ட வச்சேன். அந்தப் பாவம்தான் என் தாலியை பறிச்சிடுச்சு என முகத்தை மூடிக்கொண்டு அழுதார்.

பிறகு அந்த பணமெல்லாம் நான் தொட்டு கூட பாக்கலப்பா.. இந்த வீட்டை மட்டும் மீட்டு கொடுத்தா போதும் அது மட்டும் தான் என் தேவையா இருந்தது..


வீடு என் பெயருக்கு வந்தது.
உமையாளும் பொறந்தா..அந்த சந்தோஷமே போதும்னு கணவரை பற்றி கவலையே படலை.

உமையாள் பிறக்கும் வரை ஓழுங்கா இருந்த கணவர் பணத்தை எடுத்துகிட்டு அடிக்கடி வெளியூர் போக ஆரம்பிச்சாரு.. பணம் தீர்ந்ததும் வருவாரு மறுபடியும் பணத்தை எடுத்துக்கிட்டு போவாரு எதையும் நான் கேட்க மாட்டேன் கண்டுக்கவும் மாட்டேன் என் உலகமெல்லாம் உமையாள் மட்டும் தான்.

உமையாள் ரொம்ப புத்திசாலி.. சீக்கிரமாகவே பேசிட்டா..நடைபழகினதும் அப்படிதான்.
என்ன சொன்னாலும் டக்குனு புரிஞ்சிப்பா இந்த அடி முட்டாளுக்கு இப்படி ஒரு புத்திசாலி பொண்ணான்னு பார்த்து பார்த்து பூரித்து போவேன்.

அப்படின்னா உமையாள் பிறக்கும்போது நார்மலா தான் பிறந்தாளா அத்தை..?

என் பெண்ணை பைத்தியம்னு நினைச்சிட்டியா கதிர் ..என கதறியவர்.
படிப்பு சுட்டுத்தனம் எல்லாத்தையுமே முதல் இடம் தான்..

பத்தாவது வரைக்கும் உள்ளூர்ல படிச்சவ பக்கத்து ஊர்ல பதினொன்றாவது சேர்த்து இருந்தேன் நல்லா தான் ஸ்கூல் போயிட்டு வந்துட்டு இருந்தா .

ஒருநாள் தீடிர்னு யாரோ அவ பின்னாடி இருந்து வாயை பொத்தி பக்கத்திலிருந்த சோள காட்டுக்குள்ள இழுத்துட்டு போயிட்டாங்க இவ எப்படியோ அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டா .

பிறகு என்கிட்டயும் அவ அப்பா கிட்டேயும் சொல்லி அழுதா உடனே அவங்க அப்பா கோபமாக வெளியே கிளம்பி போனாரு கொஞ்ச நேரத்துல ரயில் தண்டவாளத்தில் பிணமா கிடைக்கிறதா செய்தி வந்தது என்ன நடந்ததுன்னு எதுவுமே தெரியாது.

அப்புறம் அவ அப்பா காரியம் முடியவும் தான் எனக்கு தெரியவந்தது.

உமையாள் அப்பா வீட்ல இருக்கிற எல்லா பணத்தையும் எடுத்து செலவு பண்ணி முடிச்ச பிறகு இந்த வீட்டு மேல நிறைய கடன் வாங்கி வச்சிட்டார் அது மட்டும் கிடையாது அவர் தொடர்ந்து போற சாராயக்கடைல ஒருத்தன் கிட்ட பணத்தை வாங்கிகிட்டு அவனுக்கு கல்யாணம் செய்து தர்றேன்னு வாக்கு கொடுத்திருக்காரு.

அவன் தான் உமையாளை ஸ்கூல் முடிச்சி வரும் போது தூக்கிட்டு போயிருக்கான்..இது தெரிஞ்சதும் வீட்டு மேல பணம் கொடுத்தவனும் அப்போ பொண்ணை எனக்கு கட்டிகுடு காசு வேணாம்னு பேரம் பேச ஆரம்பிச்சிட்டான்.


பொண்ணுக்கு பாதுகாப்பில்லாத நிலமை ..வறுமையின் பிடி வேற..

அப்படியிருந்தும் அவளை பொத்தி
பொத்தி பாதுகாத்தேன்.

தினமும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் விடுவேன் மறுபடியும் நானே கூட்டிட்டு வருவேன் எப்படியோ என் பொண்ணு படிச்சி முடிச்சிட்டா அவ வாழ்க்கை நல்லாயிருக்கும்னு நினைச்சு செஞ்சேன்.

பரிச்சை சமயத்துல அரைநேரம் ஸ்கூல்னு சொன்னா ..வேலைக்கு அரைநாள் லீவு போட முடியாதுன்னு மத்த பிள்ளைகளோட ஸ்கூலுக்கு அனுப்பி வச்சேன்.

அதுதான் நான் செஞ்ச தப்பு பரீட்சை எழுதிட்டு வெளிய வந்த என் புள்ளை வீட்டுக்கு வரவே இல்ல.. சாயங்காலம் வீட்டுக்கு வந்து புள்ளையை காணோம்னு தேடினேன்.

ஊர் புல்லா தேடினோம் கடைசியில ஊருக்கு ஓதுக்கு புறமா தலையில பயங்கரமா அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலைல கண்டு புடிச்சாங்க.

யாரோ அவளை பலாத்காரம் பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க..அவ போராடிருக்கா..கடைசியில பின் மண்டைல எதையோ வச்சி தாக்கிருக்காங்க..இவ ரத்தவெள்ளத்தில் மயக்கம் ஆகிட்டா..இறந்துட்டான்னு நினைச்சு விட்டுட்டு போயிட்டாங்க..அவ உடம்புல இருந்த காயங்களை பார்த்தா கண்டிப்பா‌ ஒருத்தர் இதை பண்ணிருக்க முடியாதுன்னு
டாக்டர் என்னன்னவோ சொன்னாங்க எதுவுமே எனக்கு புரியல..என் மக முழுசா உயிரோட வந்துட்டா அது பொதும்.. அவளுக்கு எதுவும் ஆகலன்னு தெரிந்ததும்
எனக்கு போன உயிர் திரும்பி வந்தது..ஆனா என் மக
என அழ ஆரம்பித்தார்.

அதிர்ச்சியில் ஆறுதல் சொல்ல முடியாமல் மரத்துப்போய் அமர்ந்திருந்தான் கதிர்.
 
Top