எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் _7

7

சரிப்பா..உன்னோடவே வந்து உமையாளை அழைச்சிக்கறேன்.

உமையாள கூப்பிடறதுக்காக உங்களை என்னோட வரச் சொல்லவில்லை.

பிறகு எதுக்கு..கேள்வி கேட்டவன் சட்டென்று நினைவு வந்தவராக ஓஓஓ கல்யாணத்துக்கா.. அதற்கு தான் நாள் நிறைய கிடைக்குதே அப்போ நானும் உமையாளும் கண்டிப்பா வர்றோம் என உறுதி அளித்தார்.

மெதுவாக சிரித்துக்கொண்டவன் என் அப்பாவி அத்தையே நான் கூப்படறது உமையாள நீங்க திரும்ப கூட்டிட்டு வர்றதுக்காகவோ இல்லை என் கல்யாணத்துக்காகவோ கிடையாது நிரந்தரமா என் வீட்ல இருக்கறதுக்காக.

என்ன ..?என அதிர்ச்சி அடைந்தவர் இதெல்லாம் சரியா வராது கதிர் என மறுப்பு தெரிவித்தார்.

எல்லாம் சரியா வரும் நீங்க எதுக்காக வர மறுக்கிறீர்கள் என்கிற விஷயம் எனக்கு நல்லாவே தெரியும் என் அம்மா தானே அவங்களை நான் பார்த்துக்கிறேன் இனிமே நீங்களா விரும்பினாலும் இந்த ஊருக்கு உங்களை விட முடியாது என கண்டிப்பாக கூறினான்.

இல்ல கதிர் என்னை கட்டாயப்படுத்தாத..உன் அம்மாவுக்காக மட்டும் நான் வரத் தயங்கவில்லை.

வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்பது போல பார்த்தான்.

இந்த வீடு கதிர் என்று சொல்லவும்.

யோசனையாக அவரை நோக்கியவன்

ரொம்ப பழைய வீடு யாராவது கத்தினா கூட கூரை இடிஞ்சு மேல விழுந்திடுமோன்னு பயமா இருக்கு இந்த வீட்டுக்காகவா நீங்க வர மாட்டேங்கறீங்க ஆச்சரியமாக கேள்வி எழுப்பினான்.

என்ன கதிர் இப்படி சொல்லிட்ட இது எத்தனை தலைமுறை வாழ்ந்த வீடு தெரியுமா வெள்ளைக்காரன் காலத்துல கூட எங்க குடும்பம் யாருக்கும் அடிபணிந்தது இல்லை அந்த மாதிரி வீராதி வீரர்கள் வாழ்ந்த வீடு இந்த வீட்ல நான் இருக்கறதையே பெருமையா நினைக்கிறேன் .

இந்த வீட்டை மீட்கத்தானே உன் அம்மாவோட வெறுப்பிற்கு கூட ஆளானேன் அப்படிப்பட்ட வீட்டை விட்டுட்டு என்னால எப்படி வர முடியும்.

என் பொண்ணுக்கு தற்காலிக பாதுகாப்பு கேட்டு உன் வீட்டுக்கு வந்தேன் ஆனா நீ நிரந்தரமாக அவளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்துட்ட.. இந்த ஒன்னே போதும் வேற எதுவுமே எனக்கு வேணாம்.

அத்தையை பாக்கணும்னு தோனினா இந்த வீட்டுக்கு வா பாரு ரெண்டு நாள் ஆசைக்கு தங்கிட்டு போ ஆனா என்னையும் இந்த வீட்டையும் பிரிச்சிடாத.. இந்த வீட்ல என் அம்மா,அப்பா,தம்பி,கணவர்னு எல்லாரோட நினைவுகளும் இருக்கு,
எல்லாத்தையும் விட உமையாள் தவழ்ந்து நடை பழகின வீடு.. இத்தனை நினைவுகளை விட்டுட்டு என்னால எப்படி வர முடியும் என்று கேட்கவும் .

அவரின் மனநிலையை புரிந்து கொண்டவன் சரி அத்தை நீங்க என்னோட நிரந்தரமா வரவேண்டாம்.. என் கல்யாணம் முடியற வரைக்கும் என்னோட இருங்க.

அதுக்குள்ள நானும் இந்த வீட்டை பராமத்து வேலை பார்த்து உங்க கையிலேயே கொடுத்துடுவேன்.

அத்தையோட நினைவுகள் இந்த இடிந்த வீட்டில் இருக்க வேண்டாமே என்று சிரித்தபடியும் சொல்லவும் சற்று யோசித்த வள்ளி உடனே ஒத்துக்கொண்டார்.


கல்யாணம் முடிஞ்ச உடனே உமையாளை கூப்பிட்டுட்டு நான் இங்க வந்துடுவேன் நீ என்னை தடுக்க கூடாது.

சரி அத்தை நாம உடனே கிளம்பலாம்..இப்போ புறப்பட்டா ராத்திரிக்குள்ள வீடு போயிடலாம்.. உமையாளோட சிகிச்சை சம்பந்தப்பட்ட பைல் ஏதாவது இருந்தா எடுத்துக்கோங்க அப்படியே வேற ஏதாவது முக்கியமானது இருந்தாலும் எடுத்துக்கோங்க.

வீட்டை பராமத்து பண்ணுவதால் பொருட்கள் எல்லாம் நீங்க திரும்பி வரும் பொழுது எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும்னு சொல்ல முடியாது என்று சொல்லவும் அடுத்த அரை மணி நேரத்தில் முக்கியமானதாக அவர் கருதப்படும் எல்லா பொருட்களையுமே ஒரு பையில் எடுத்து வைத்திருந்தார்.
அதன்பிறகு அவரை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினான்.

எப்படியும் அத்தையை தன்னுடன் பார்த்தால் கௌரி ஏதாவது சொல்வார் என எதிர்பார்த்து தான் சென்னை வந்தான் .

கௌரி பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை எப்படி இருந்தாலும் மகன் வள்ளியை உடன் அழைத்து வருவான் என்று ஓரளவுக்கு யூகித்திருந்தவர் எதற்கு திருமணம் சமயத்தில் பிரச்சனை.

என்ன இருந்தாலும் கணவரின் அக்காள் தானே எத்தனையோ பேர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள் அதுபோல இவரும் தங்கி விட்டுப் போகட்டும் என அவராகவே மனதை மாற்றிக் கொண்டார்.

அத்தையை உமையாள் தங்கியிருக்கும் அறையிலேயே தங்கிக் கொள்ளும் படி பணிந்து விட்டு தந்தையை தேடி சென்றான் .

என்ன பா அம்மா கிட்ட இருந்து இவ்ளோ பெரிய மாற்றம் ரெண்டு நாள்ல என்ன பண்ணுனீங்க என தந்தையை கேலி செய்தான்.

நான் ஒன்னுமே செய்யலடா அவளுக்கே புத்தி வந்து திருந்திட்டா போல என்றவர் உமையாள் பொண்ணை கூட ஒண்ணுமே சொல்லலைன்னா பார்த்துக்கோயேன்.

வேலைக்காரங்க எல்லார்கிட்டயுமே அவ இந்த வீட்டு பொண்ணு என்ன கேட்டாலும் செஞ்சு கொடுக்கணும் அப்படி இல்லன்னா யாரையும் வேலைக்கு வச்சிக்க மாட்டேன்னு மிரட்டி விட்டா என்று சொல்லவும் .

பரவாயில்லையேப்பா அம்மா புத்திசாலிதான். வேலைக்காரர்களை கூப்பிட்டு நான் எச்சரிக்கை பண்ணறதுக்கு முன்னாடி அம்மா செய்து அவங்களோட மரியாதையை காப்பாத்திக்கிட்டாங்க என்று பெருமைப்பட்டவன்.

சரிப்பா இப்போ விசயத்துக்கு வருவோம் கிராமத்து வீட்டை பராமத்து பண்றதுக்காக ஆள் ரெடி பண்ணிட்டு வந்துட்டேன் .

இடையில் ஒரு முறை எல்லாம் சரியா நடக்குதான்னு நீங்க போய் பாத்துட்டு வரணும் என்று கூற மறுப்பு ஏதும் சொல்லாமல் சரி என தலையாட்டினார்.அவருக்கும் பிறந்த வீட்டின் மீது அக்கறை இருக்கும் தானே.

அப்புறம் அப்பா உமையாளை நல்ல மருத்துவமனையில் காமித்து அவளை சரி செய்து விடனும் பொறுப்பை நீங்க எடுத்துகிறீர்களா இல்லை நான் எடுத்துக்கட்டுமா என கேட்கவும்.

திருமண சமயத்துல இது தேவையாப்பா என்று கேட்டார்.

கண்டிப்பா தேவைப்பா. நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா உமையாளுக்கு இப்படி ஒரு நிலையே வந்திருக்காது உங்க கடமைல இருந்து நீங்க தவறுனதுனால தான் அத்தைக்கு சரியான வாழ்க்கை அமையல.

அவளோட அப்பா சரியா இல்லாததால இன்னைக்கு உமையாளுக்கு இந்த ஒரு நிலை தாய் தகப்பனுக்கு மேலான உறவு தாய் மாமன் உறவுன்னு சொல்லுவாங்க ஆனா நீங்க ஒரு சதவீதம் கூட நிறைவேற்றவில்லையேப்பா.

இனியாவது அவளுக்கு ஒரு சிறந்த தாய் மாமனா இருக்க பாருங்க அவளோடு டிரீட்மென்ட் ஒரு பக்கம் போகட்டும் என் கல்யாண வேலை ஒரு பக்கம் போகட்டும் இதையும் அதையும் ஏம்பா போட்டு குழப்பிக்கிறீங்க என்று தந்தைக்கே புத்தி சொல்லும் மகனானான்.

மறுநாளே உமையாளை பிரபல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அவளது முந்தைய பரிசோதனைகளை எல்லாம் பார்த்துவிட்டு பின்மண்டையில பலமா அடிபட்டு இருக்கிறதால தான் அவர்களுக்கு பழசு எல்லாம் மறந்து போய் குழந்தைத்தனம் வந்திருக்கும்னு நினைக்கிறேன் எல்லாத்தையுமே சரி செஞ்சுரலாம் என்ன கொஞ்சம் செலவாகும் என்று சொல்ல எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர் எங்க வீட்டு பொண்ணு பழையபடி எங்களுக்கு திரும்பி வரணும் என்று கூறவும் பக்கத்தில் நின்ற வள்ளி கண்களில் நீருடன் அவனை கையெடுத்து கும்பிட்டார்.

அத்தை…என சலித்துக்கொண்டவன் அவரின் கையை கீழே இறக்கிவிட்டான்.

ஒரு பக்கம் திருமண வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருக்க இந்தப் பக்கம் அலுவலக வேலைகளை தந்தையிடம் ஒப்படைத்து விட்டு உமையாளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்து கொண்டிருந்தான் கதிர்.

இது நிவேதாவின் காதுகளுக்கும் சென்றது அடிக்கடி ஒரு அழகிய பெண்ணுடன் கதிர் வலம் வருவதாக அவளுடைய தோழிகள் உறவினர்கள் என அடுத்தடுத்த புகார் வாசிக்க என்ன விஷயம் என்று தெரிந்து கொள்வதற்காக கதிரை நேரில் சந்திக்க அலுவலகம் சென்றாள்.

லேப்டாப்பில் ஷேர் மார்க்கெட்டை ஆராய்ந்து கொண்டிருந்தவன்.. நிவேதாவை காணவும் ஆச்சரியத்தை காட்டினான்.

ஹேய் நிவி வாட் அ சர்ப்ரைஸ் வா..வா..முதல்ல உட்காரு என்று அமர வைத்தவன் என்ன சாப்பிடுற ஹாட்‌ ஆர் கோல்ட் என்று ஃபார்மலாக கேட்டு வைத்தான்.

எதுவும் வேணாம் என எரிச்சலை காட்டியவள் உன்னை பத்தி என்னென்னமோ கேள்விப்படறேன் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள்.

நீ என்ன கேள்விப்படறன்னு எனக்கென்ன தெரியும் இலகுவாக பதில் கொடுத்தான்.

விளையாடாத கதிர் நான் எதைப் பத்திப் பேசறேன்னு உனக்கு தெரியாது.. கோபத்தில் அவளின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

ப்ளீஸ் நிவி இது ஆபிஸ் கத்தாம என்ன கேட்க வந்தாயோ அதை பொறுமையா கேளு பதில் சொல்றேன் எதுக்கு தேவையில்லாம கோபப்பட்டு உன் அழகான முகத்தை அசிங்கமா மாத்திக்கிற..!

இப்போ என்ன சொல்ல வர்ற என் முகம் கேவலமா இருக்குன்னு சொல்ல வர்றியா..?

கடவுளே.. என தலையில் அடித்துக்கொண்டவன் கேட்க வந்த விஷயத்தை விட்டுட்டு தேவையில்லாததை பேசற.. முதல்ல நீ வீட்டுக்கு கிளம்பு எனக்கு நிறைய வேலை இருக்கு ஈவினிங் நாம பேசிக்கலாம்.

நோ.. எனக்கு இப்பவே பதில் தெரிஞ்சாகணும் என் முகம் உனக்கு அசிங்கமா இருக்கா நீ பின்னாடி சுத்துறியே அவ முகம் தான் ரொம்ப அழகா இருக்கா..?

ஓஓ இதான் உன் பிரச்சனையா.என சலித்துக்கொண்டவன் நான் யார் பின்னாடியும் சுத்தலை நிவி யாரோ உனக்கு தவறான தகவல்களை சொல்லி இருக்காங்க.

யாரோ சொல்லியிருந்தா நம்பி இருக்க மாட்டேன் சொன்னது என் அம்மா போன வாரம் ஹெல்த் செக்கப்புக்காக ஹாஸ்பிடல் போனவங்க உன்னை வேற ஒரு பொண்ணோட பார்த்து இருக்காங்க அது மட்டும் இல்ல என் பிரண்ட்ஸ்சும் சில பேரு உன்னை வேற ஒரு பொண்ணோட பார்த்ததா சொல்றாங்க.

சரி உன் அம்மா பிரெண்ட்ஸ் கிட்ட போய் சொல்லு..அது யாரோ ஒரு பொண்ணு இல்லை கதிரோட சொந்த அத்தை மகள்..உடம்பு சரியில்லாம இருக்கா அவ ட்ரீட்மென்ட்காக அடிக்கடி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறாருன்னு சொல்லிடு என வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

குழம்பியவள் உனக்கு அத்தை இருக்காங்களா..?

ஏன் இருக்கக் கூடாதா..?

ம்ப்ச் ..இல்ல அங்கிள் மட்டும் தான்னு நினைச்சேன்.

என் அப்பாக்கு ஒரு அக்கா இருக்காங்க அவங்களுக்கு கணவர் கிடையாது..ஒரு மகள் இருக்கா அவளுக்கு உடம்பு சரியில்லை இவ்வளவு நாள் கிராமத்துல தங்கி இருந்தாங்க என் கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க போகும் போது..கொஞ்ச நாள் எங்களோட தங்கியிருங்கன்னு கூட அழைச்சிட்டு வந்திருக்கேன் .. திருமணம் முடிந்ததும் மறுபடியும் கிராமத்துக்கே போயிடுவாங்க..

இங்க தங்கியிருக்கற வரைக்கும் உமையாளை மருத்துவமனையில் காட்டலாம்னு சொல்லியிருக்கேன் போதுமா வேற ஏதாவது தகவல் தெரியனுமா என்று அவள் முகம் பார்த்து கேட்கவும்.

சாரி நான் தான் அவசரப்பட்டு உங்க மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்.. கிளம்பறேன் பசையிழந்த முகத்துடன் வெளியேறினாள்.

திருமணத்திற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்க நிவேதாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது என்ன டிரஸ் போடுவது எந்த மாதிரியான போட்டோ சூட் வைப்பது மெஹந்தி,ஃப்ரீ வெட்டிங் என அவள் பாட்டுக்கு நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே சென்றாள்.

கதிர் எல்லாவற்றையுமே அவளது பொறுப்பிற்கே விட்டுவிடுவது நீ பார்த்து எது வேணாலும் செய்.

அந்த ஓட்டாத தன்மை அவளுக்கு சுவாரஸ்யம் இழக்கச் செய்தது கதிர் ஏதாவது கூறுவான் அவனிடம் வாக்குவாதம் செய்து தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் அப்படித்தான் அவள் நினைத்து சொல்வது ஆனால் கதிரோ முழு சரணாகதியாக எல்லாம் உன் விருப்பம் உன் இஷ்டம் என்று அவள் பக்கமே திருப்பிவிட என்ன இது என்பது போல் சலிப்புத் தட்டியது.

கடைசியாக பத்திரிக்கை அடித்து வந்தது உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என்று பெரியவர்கள் தனித்தனியாக பத்திரிக்கையை பிரித்துக் கொண்டிருக்க நிவேதாவோ அவள் நண்பர்களின் வட்டத்திற்கு நேரடியாகவே இருவரும் சென்று கொடுக்க வேண்டும் என அடம் பிடித்தாள் கண்டிப்பாக கதிரால் அதை செய்யவே முடியாது.

அதனால் உறுதியாக மறுத்து விட்டான் முதல்முறையாக நிவேதாவிற்கும் கதிருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் நடந்தது நிவேதா எவ்வளவோ கெஞ்சியும் கூட கதிர் கடைசி வரை இறங்கி வரவே இல்லை.

கோபம் அவமானம் என ஒன்று சேர்ந்து நிவேதாவை கலங்கியடிக்க.. திருமணத்தின் மீதே வெறுப்பு வந்தது.

எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுக்கத்தை காண்பிக்க தொடங்கினாள் அந்த சமயத்தில் கதிரை உமையாளுடன் பார்த்ததாக மீண்டும் தோழிகள் வட்டாரம் அவளுக்கு செய்தியை அனுப்பி வைக்க கடும் கோபம் கொண்டாள்.

தன்னுடன் வருவதற்கு நேரம் இருக்காது ஆனால் அத்திப் பெண்ணுடன் செல்ல மட்டும் நேரம் இருக்குமா என ஆத்திரம் கொண்டவள் நேரடியாகவே வீட்டிற்குச் சென்று கதிரிடம் சண்டையிட்டாள்.

கதிர்..கதிர் வெளிய வாங்க.

வாம்மா நிவேதா உட்காரு..ஏன் தனியா வந்திருக்க.. எனக்கேட்டபடி கௌரி வந்தார் அவரை திருத்திப் பார்த்து முறைத்தவள்.

நான் உங்க பையனை தான் கூப்பிட்டேன் உங்களை கூப்பிடல சோ கொஞ்சம் உள்ள போறீங்களா என முகத்தில் அடித்தது போல கூறினாள்.

முகம் தொங்கிப் போக அதிர்ச்சியுடன் கௌரி அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வேகமாக வெளியில் வந்த கதிர் என்னாச்சு நிவேதா எதுக்காக சத்தம் போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்டான்

என் பிரண்ட்ஸ்க்கு பத்திரிக்கை கொடுக்கணும் வாங்கன்னு கூப்பிட்டா உங்களுக்கு நேரம் இருக்காது ஆனா உங்க அத்தை பொண்ணு கூட ஊர் சுத்த மட்டும் நேரம் இருக்கும் இல்லையா என்று நடுக்கூடத்தில் இருந்து கத்தினாள் .

சுற்றும் முற்றும் பார்த்தவன் கோபமாக அவளிடத்தில் வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க நிவேதா நீ படிச்ச பொண்ணு தானே அதுவும் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிற பொண்ணு இப்படித்தான் நடு வீட்டுல வேலைக்காரங்க முன்னாடி கத்தி அசிங்கம் பண்ணுவியா.
நாளைக்கு நீ இந்த வீட்டுக்கு வந்தா உனக்குன்னு ஒரு மரியாதை வேண்டாமா என்று கேட்க.

வேண்டாம் கதிர் எனக்கு அந்த மாதிரியான மரியாதை எதுவுமே தேவையில்லை.. அதுவும் கேவலம் வேலைகாரங்ககிட்ட இருந்து.

என்ன பேச்சு நிவேதா இது..சக மனிதர்களை மரியாதை கொடுத்து பேசி பழகு.

இங்க பார் கதிர் யார்கிட்ட எப்படி பேசணும்னு நீ எனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம் நான் எப்படி இருப்பேனோ அப்படித்தான் இருப்பேன் எனக்கேத்த மாதிரி வேலை செய்வதற்காக தான் வீட்டில் வேலைக்காரங்க ..அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கற ஆள் நான் கிடையாது முதல்ல நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு என்னோட வர்றதுக்கு உனக்கு நேரம் இருக்காது ஆனால் மத்தவங்களுக்காக உன்னோட நேரத்தை செலவிடுவாய்.

என்னை பத்தி அக்கறை பட மாட்ட ஆனா வீட்ல வேலை செய்றவங்களுக்காக அக்கறைப்படுவ என்ன மாதிரியான மனுஷன் நீ.

நிவேதா ப்ளீஸ் என்ன டைம்ப்ட் பண்ணாத.. உன் பிரச்சனை என்ன அதை மட்டும் சொல்லிட்டு கிளம்பு..?


இங்க பார் கதிர் என் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் நீயும் நானும் தான் நேர்ல பத்திரிக்கை கொடுக்கணும் அவங்களுக்காக ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் அதுல நீ கலந்துக்கணும் இவ்வளவுதான் என் டிமாண்ட்.. ஆனா நீ இப்போ வரைக்கும் பத்திரிக்கை கொடுக்க என் பின்னாடி வரலை.. பார்ட்டி ரெண்டு தடவை கேன்சல் ஆயிடுச்சு இப்போ மூணாவது அரேஞ்ச் பண்ணி இருக்கேன் இதுவும் போஸ்ட்பான்ட் ஆச்சி அப்புறமாப. பிரண்ட்ஸ் என்னை மதிக்கவே மாட்டாங்க என்று பற்களை கடித்தபடி கூறினாள்.

நாம ஏற்கனவே இது பத்தி பேசிட்டோம் நிவேதா பிரண்ட்ஸ் எல்லாருக்குமே இ- இன்விடேஷனை வாட்ஸ் அப்ல அனுப்பிடு அப்புறம் பார்ட்டி எனக்கு ட்ரிங்க்ஸ் அடிக்கிற பழக்கம் கிடையாது நீ அரேஞ்ச் பண்ணி இருக்கிறது ட்ரிங்க்ஸ் பார்ட்டி சோ அதுக்கு ஒரு காலமும் நான் வரவும் மாட்டேன் உன்னை போகவும் அனுமதிக்க மாட்டேன் என உறுதிப்பட கூறினான்.

யூ..யூ.. கோபத்தில் வார்த்தைகளை தேடியவள்..முடிவா என்ன சொல்லற..?

உன்னோட அற்ப சந்தோஷத்திற்காக தேவையில்லாம என்னோட நேரத்தை விரயம் செய்ய முடியாது.. நான் இப்படித்தான் .

உனக்கு ஏத்த மாதிரி என்னை வளைக்கனும்னு முயற்சி செஞ்சு இந்த உறவை முறிச்சுக்காத .

உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கல்யாணம் ஆன பிறகும் கூட நான் இப்படித்தான் முடிந்த அளவு உன்னோட இணக்கமாக போக பார்ப்பேன் அப்படி இல்லையா உன் போக்குல விட்டுட்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பிச்சிடுவேன்.

அப்புறம் உனக்கு இதுதான் முதலும் கடைசியுமான எச்சரிக்கை ..இந்த மாதிரி கத்தி பேசுறது பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கிறது சக மனிதர்களை ஏளனமாக பார்க்கிறது இதெல்லாம் எனக்கு பிடிக்காது உன்னை நீ மாத்திக்கோ இல்ல மாத்துவேன் என்று சொல்லவும் அங்கிருந்து வேகமாக சென்றவள் அடுத்த பத்தாவது நிமிடம் தந்தையின் மூலமாக செய்தி அனுப்பினாள் இந்த திருமணம் நடக்காது நிறுத்தி விடலாம் என்று.


கதிருக்கு எதிலோ தப்பித்த உணர்வு அப்பாடா என நிம்மதி பெரும் மூச்சு விட்டான்.

ஆனால் ரத்தினமும் கௌரியும் கவலையில் உழன்றனர்.

நிவேதாவை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.

எதற்குமே நிவேதா செவி சாய்க்கவில்லை இங்கிருந்தால் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்று உடனடியாகவே வேர்ல்டு டூரை ஏற்பாடு செய்தவள் மூன்று மாதத்திற்கு வெளிநாடு பறந்து விட்டாள்.

ரத்தினத்திற்கு நிவேதாவின் பேச்சு உவர்ப்பை ஏற்படுத்த மகன் தப்பித்தான் என்று நினைத்துக் கொண்டார்.

ஆனால் கௌரியால் இதை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை மகனின் திருமணம் நின்றது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது .

நிவேதா சிறு பெண் பேச தெரியாமல் பேசுகிறாள் ஒரு குடும்பம் என்று வந்துவிட்டால் மாற்றிக் கொள்வாள் இல்லையென்றால் மாற்றி விடலாம் என்று பெரும் நம்பிக்கையாக இருந்தார் எல்லாம் கானல்நீரா
கிப் போக ஏனோ உமையாள் மீது தான் அவரின் கோபம் திரும்பியது .

அவளையும் வள்ளியையும் பார்க்கும் நேரமெல்லாம் வறுத்தெடுக்க ஆரம்பித்தார்.
 
Top