எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 13

NNK-54

Moderator
வர்ணங்கள் 13

ஜெயந்தனுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று வண்டுபோல் மூளையில் குடைந்தது. தனது நிறுவனத்திற்காக வேலை செய்யும் துப்பறிவு நிறுவனத்திடம் சாயாவின் இங்கிலாந்து வாழ்க்கையில் ஆரம்பித்து இப்போது அவளது நிலை என்ன என்பதுவரை துப்பறிந்து தரும் வேலையை அவர்களிடம் ஒப்படைத்தபிறகு தான் கொஞ்சம் அவனுக்குள் நிம்மதி பரவியது.

தனது கனவுப் பெண் பற்றியும் விசாரித்துப் பார்த்தால்தான் என்ன ,அவளைப்பற்றி தெரிந்துகொண்டால் தவறில்லையே!என மனம் அவனிடம் பேசிப்பார்த்தாலும்,அவனது அறிவு அவனைக் காறி உமிழ்ந்தது.யாரென்றே தெரியாத பெண்ணைப்பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்யவேண்டும்? அதோடு அவளது புகைப்படம் கூட அவனிடம் இருக்கவில்லையே!

தனக்குளேயே சிரித்துக்கொண்டு வேலையைத் தொடர்ந்தான். எப்படியாவது சாயாவுக்கு அவளது வாழ்க்கையை மீட்டுத்தரவேண்டும்.ஏதோ ஒரு வகையில் இன்று அவள் பெற்றோருடன் வசிக்க முடியாமல் போனதற்கு தானும் காரணம் என்பதுதான் அவனுக்கு.இருக்கட்டும்.எல்லாவற்றையும் அவன் மட்டுமே யோசித்து முடிவுகள் எடுக்க முடியாதுதானே!


சாயா இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மகாபலிபுரம் நோக்கி சென்றுவிட்டாள்.அவளால் மனதை சமநிலைக்கு கொண்டே வர இயலவில்லை. ஏதோ நோய் பிடித்தவள் போல இருப்பவளை எல்லோரும் அலுவலகத்தில் துக்கம் விசாரித்ததன் விளைவு. அங்கே ஒரு ரிசார்ட்டில் ரூம் எடுத்துக்கொண்டு தங்கியும் விட்டாள் .வெளியே சுற்றிப்பார்க்க பிடிக்கவில்லை.ஆனாலும் பிடிவாதமாக கையில் கேமராவுடன் சுற்றவாரம்பித்தாள் .

தனது மகனுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பி வைப்பதில் அவளுக்கு அவ்வளவு ஆர்வம் வந்துவிட்டிருந்தது. வெறிபிடித்தவள் போல் புகைப்படங்களை எடுத்துத் தள்ளியவள் அன்று இரவே அவற்றை கணவனது மெயில் ஐடிக்கு அனுப்பியும் வைத்தாள் "ஐ மிஸ் யு கைஸ் " என்ற வாசகத்துடன். அவன் தனது மெயில்களை படிப்பானா..என்பதெல்லாம் அவளுக்கு இப்போது பெரியதாகத் தோன்றவில்லை.
அவளது ஒவ்வொரு நடவடிக்கையும் ஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தாரால் கண்காணிக்கப்பட்டது.அதை அவள் அறிந்து கொள்ளவும் இல்லை.அவளது இங்கிலாந்து வாழ்வுடன்,அவளது திருமணமும் குழந்தையும் பற்றிய தகவல்களையும் திரட்டி ஜெயந்தனிடம் அந்த நிறுவனம் தந்து விட அதைப் படித்துப்பார்த்த ஜெயந்தன் ஆழ்ந்த யோசனைக்கு உள்ளானான்.

பெண்ணின் இப்போதைய மனமாற்றம் அவனுக்கு தெளிவாகவே புரிந்தது.நல்லவேளை; தான் அவளுடனான திருமண உறவுக்கு சரி என்று சொல்லியிருக்கவில்லை என்று எண்ணியவன் அந்த கோப்பில் பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்த அவளது கணவனுக்கு அன்று மதியம் அழைத்துவிட்டான்.

தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஜெயந்தன் பேச ஆரம்பிக்கும் பொழுதே எதிர்முனையில் டாக்டர் என்று அழைத்து யாரோ பேசும் குரல் கேட்டது. ஜெயந்தனுக்கு வெகுவாக தயக்கமாகிப் போயிற்று,வேலை நேரத்தில் அழைத்துவிட்டோமே என்று.

அதற்க்கு சற்றும் அவசியமில்லாமல்,"மிஸ்டர் ஜெயந்தன்,இன்னும் அரைமணிநேரத்தில் என்னோட ஒர்க் முடிஞ்சுடும். திரும்ப கூப்பிடவா.." என்றான் சாயாவின் கணவன். இதமாகவே கேட்டான். சரி என வைத்துவிட்டான் ஜெயன். என்னவென்று பேசுவது என்றெல்லாம் ஜெயன் ஒத்திகை பார்க்கவில்லை.இருவரையும் எப்படியாவது சேர்த்துவைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. அவனுள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக அரைமணி நேரத்தில்இங்கிலாந்திலிருந்து அழைப்பு வந்துவிட்டது. இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சின் இறுதியில் அவன் இந்தியா வர ஒப்புக்கொண்டான் தனது குடும்பத்துடன். பேசிமுடித்து மிகவும் ஓய்ந்து போனான் ஜெயந்தன். ஆனாலும் மனதில் ஒரு சந்தோஷம் . அதே சமயம் ,"இப்படி எனக்கும் கூட யாராவது பாலமா இருந்து என்னை அந்த பெண்ணோட சேர்த்து வைப்பார்களா"என்று யோசித்தவனுக்கு ஒருவேளை அந்தப்பெண் திருமணம் முடிந்து கணவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளாக இருப்பின் நான் பிறன்மனை நோக்கியவன் ஆகிவிட மாட்டேனா..அது எவ்வளவு பெரிய பிழை என்று தனக்கு தானே வருத்தமும் கொண்டான்.

அவளுக்கு திருமணம் ஆகியிருந்தால் என்ற எண்ணமே அவனுக்கு உள்ளே கசந்தது. அதுபோல் எதுவும் இருக்கக்கூடாது கடவுளே என்று அவசரமாய் ஒரு விண்ணப்பம் வைத்துவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தான்.

பெங்களூருவில் விடுப்பு கூட எடுக்காமல் மிகவும் பிரயத்தனம் கொண்டு தனது வேலையை செய்து முடித்துவிட்டு ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தாள் பெண். அலுப்பை மீறி அவளுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. இனி தனது மகளுடனும் அம்மாவுடனும் இருக்கலாம் என்று குதூகலம். அன்று காலை பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் அமர்ந்தவளுக்கு பறந்து வரமாட்டோமா எனும் அளவுக்கு எண்ணங்களின் அலை .

நேரே வீட்டுக்கு சென்றவள் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டாள்.மாலை பள்ளியிலிருந்து வந்த தியாவையும் தன் அம்மாவின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. இருவரும் ஒரே மாதிரி உடை அணிந்துகொண்டு அவர்கள் அடுக்ககத்தின் அருகில் இருக்கும் மாலுக்கு கிளம்பிவிட்டார்கள்.இரவு அங்கேயே சாப்பிட்டு வருவதாக திட்டம்.
அம்மாவுடன் வெகு நாட்கள் கழித்து இயல்பாய் வெளியே சுற்ற வந்திருக்கும் தியா, மாலில் அங்குமிங்குமாக குதித்துக்கொண்டு ஓடினாள்.

எஸ்கலேட்டரில் ஏறும்பொழுதும் கூட அவளை சற்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. சந்தோஷ மிகுதியில் அந்தக் குட்டிப்பெண்ணுக்கு மலாய் மொழி வந்துவிட்டது. தமிழில் அவ்வளவாக தனது உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத தியா மலாயில் தன் அம்மாவுடன் அரட்டை அடித்துக்கொண்டு வந்தாள் . மேலே இரண்டாம் தளத்திற்கு வந்தவர்கள் நேரே உணவகம் அருகே இருக்கும் ஐஸ் க்ரீம் கடைக்குள் நுழைந்தார்கள்.

பில் போட்டு பனிக்கூழ் வாங்கவேண்டும். அதற்காக குட்டி தியாவை அங்கிருந்த வெளி நாற்காலி ஒன்றில் அமர வைத்துவிட்டு பில் வரிசையில் சுபா நிற்க , அதற்குள் ஒரு விபரீதம் நடந்து விட்டது. அமர்ந்திருந்த சிறுமியிடம் அங்கு மாலுக்கு வந்த ஒரு நடுவயது ஆண் பட்டாளம் சுற்றி வளைத்தது போல் நின்று கொள்ள, அதில் இருக்கும் ஒருவன் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான்.

தியா எவ்வளவு பெரியதாக அழுதும் அங்கே இருந்த மேற்கத்திய இசையின் சத்தத்தில் சுபாவுக்கு காதில் ஒன்றும் விழாமல் போனது. துரதிஷ்ட வசமாக அவர்கள் ஐந்துபேரும் போதைமருந்தை வேறு உட்கொண்டிருந்தார்கள். பெரிய இடத்து பிள்ளைகள் என்று பார்த்தாலே தெரிந்தது.அதோடு மிரட்டும் வகையில் உடற்கட்டு வேறு.

எதற்கு வம்பு என்று அங்கே அவர்கள் அருகே யாரும் செல்லவில்லையா,இல்லை உயிர் பயம் காரணமோ ,யாரும் தியாவின் அருகே கூட செல்ல முயலவில்லை.ச்ச் ..பாவம்,சின்ன குழந்தை. என்ன பண்னுவானுகளோ என்று சிறிய குரலில் பேசிக்கொண்டு சென்றார்கள்.சிலர் சற்று தூரத்தில் நின்று பார்த்தும் பார்க்காத மாதிரியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.


தனது கடைகளை நேரடியாக பார்வையிட வந்த ஜயனின் காதுகளில் ஏதோ ஏடாகூடமாக விழ ,தியாவின் கொஞ்சம் தொலைவில் சென்று நின்றுகொண்டான். குழந்தையின் அழுகுரலும் ,வேற்று மொழியில் ஏதோ சொல்வதும் அவன் காதுகளில் விழ ,தாமதிப்பது தவறு என்று உணர்ந்தவனாக வேகமாக தியாவின் அருகே சென்றான்.

தியா அருகே மண்டியிட்டு நின்றிருந்தவன், ஒரு கையால் அவளின் பிஞ்சு கைகளை பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் குழந்தையின் அந்தரங்க பாகங்களை தொட முயற்சி செய்து கொண்டிருக்க,குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது. சட்டென உள்ளே புகுந்த ஜெயந்தன் குழந்தையை பிடித்துக்கொண்டிருந்தவன் மூக்கில் குத்த, அவன் தடுமாறி விழுந்தான். மற்ற நால்வரும் ஜயனை அடிக்கப் பாய, அதற்குள் சுற்றி வேடிக்கை பார்த்த சிலருக்கு திடீரென வீரம் வந்துவிட்டது போலும்.

இவை எல்லாமே நடந்து முடியும் பொழுது, ஸுபா அங்கே கைகளில் ஐஸ் கிரீமுடன் வந்து சேர்ந்தாள்.குழந்தை ஜயனின் தோள்களில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். சுபாவின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. குழந்தைக்கு என்னவாயிற்று என்று வேகமாக ஜயனின் அருகில் வந்தவள் முதலில் அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை.

சுபாவின் முழு கவனமும் குழந்தையிடம் குவிந்திருந்தது. குழந்தையின் அழுகையை பார்த்தவளுக்கு ஏதோ புரிய,அவளது முழு உடலும் வியர்வையில் நனைந்துவிட்டது. கண்கள் குளமாக குழந்தையை வாங்க கைகளை நீட்ட ,தியா அம்மாவை பார்த்தவுடன் அவளிடம் தாவியது. என்னவென்று புரியாவிட்டாலும் குழந்தை வெகுவாக பயந்திருந்தாள் .அவளுடைய அழுகைக்குரல் லேசில் ஓய்வதாக இல்லை. மாலில் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் இவர்களையும் ஒரு பரிதாப பார்வை பார்த்துவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

தியாவை தூக்கிக்கொண்டு வெகுநேரம் சுபாவால் நிற்க முடியவில்லை. அருகே இருக்கும் நாற்காலியில் அமரலாம் என்று குழந்தையை சற்று இறக்கிவிட நினைத்தால் தியா அதற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. நல்லவேளையாக மாலின் சில கடை உரிமையாளர்கள் அந்த ஐவர் மீதும் போலீஸ் புகார் கொடுக்க, போலீஸ் அவர்களை அழைத்து சென்றுவிட்டது.


சுபா தவித்துப்போனாள் . அவளை அணுவணுவாக கவனித்துக் கொண்டே நின்றவனுக்கு மனதில் முணுக் எனும் வலி .அதைத் தவிர்க்க முடியவில்லை. குழந்தையின் நிலைவேறு அவனை கலவரம் கொள்ளச் செய்தது. தியாவை நிதானமாய் தன் கைகளில் வாங்கிக்கொண்டான். சுபாவின் கழுத்தை கட்டிக்கொண்டு அத்தனை நேரமாக நடுங்கிக்கொண்டிருந்த தியா இப்போது ஜெயனின் கைகளில் தாவினாள் . சுபா கண்களில் நீருடன் அங்கேயே அமர்ந்துவிட்டாள் .

அவளது உடலும் நடுங்கிக்கொண்டிருந்தது. அவளது நிலைமையை பார்த்த ஜெயனுக்கோ ,அவளை தலை கோதி ஆறுதல் சொல்ல மனம் துடித்தது.தன்னை அடக்கும் வழிதெரியாமல் குழந்தையின் தலை கோதி சமாதானம் செய்தான்.அந்த நொடி தான் யார்,தனது சமூக நிலை என்ன என்பது பற்றியெல்லாம் அவன் சிறிதும் யோசித்திருக்கவில்லை.

எல்லாமே,தானே நிகழ்ந்தது. குழந்தைக்கு அவள் அம்மா வாங்கி வைத்திருந்த பனிக்கக்கூழை ஊட்டி விட்டான். குழந்தை அதை சாப்பிடத் தொடங்கியதில் கொஞ்சம் சமாதானம் அடையத் தொடங்க, தியாவின் அழுகை சிறு விசும்பலில் வந்து நின்றது. தியாவின் கை மணிக்கட்டு சிவந்திருந்ததை பார்த்த ஜயனுக்கு கண்கள் கோவத்தில் சிவந்துவிட்டது.


அத்தனை நேரமாக குழந்தையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தவள் இப்போது குழந்தையை ஏந்திக்கொண்டிருந்தவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி. மயக்கம் கூட வந்துவிட்டது.
'யாரைப் பார்க்கக்கூடாது' என்று எழுதி வாங்கிக்கொண்டு நாட்டைவிட்டே அனுப்பி வைத்தார்களோ, யாரை பார்க்க ஆவலுடன் சென்னை வந்து சேர்ந்தாளோ அவன் அவள் எதிரில், அதுவும் அவர்களது குழந்தையை கையில் ஏந்தியபடி!

என்ன இந்த விதி!என்று அவள் எழுத்தை சபித்தாள். இந்த நிலைமையிலா அவர்கள் மூவரும் சந்திக்க வேண்டும் என்று கடவுளிடம் வாதம் செய்தாள் . கால்கள் நடுங்க எழுந்து நிற்கும் திராணி கூட அவளுக்கு அந்நேரம் இருக்கவில்லை.

ஜெயந்தனிடம் ஆயிரம் கேள்விகள் உண்டு அவளிடம் இப்போது, இந்நொடி கேட்க..குழந்தையை தனியே விட்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன?என்பதுதான் அவனது முதல் கேள்வி. ஆனால்,அதை இப்போது கேட்டால் பெண் மீண்டும் உடைந்து போய்விடுவாள் என்று தோன்றியதால் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டான் .

நேரம் இரவு பத்தை தாண்டிவிட்டது. மூவருக்குமே பசிதான். பெரியவர்கள் இருவரும் அதை உணரும் நிலையில் இல்லை. நடந்த கலவரத்தில் பசி மந்தித்து போய் விட்டது. குழந்தை அம்மாவிடம்,"ம்மா..தியாவுக்கு குட்டி தொப்பை பசிக்குது"என்றாள் மழலைத் தமிழில்.

சுபா தன் கணவனின் முகத்தை பார்த்தாள். அவன் "சரி..எனக்கும் பசிதான். பக்கத்துல இருக்குற ரெஸ்டாரெண்ட் வேணாம். மூணாவது பிளோர் போலாம்"என்று தானே முடிவெடுத்து குழந்தையுடன் முன்னேறினான்.எதுவும் சொல்லாமல் அவனை தொடர்ந்தாள் அவன் மனைவி.

ஆனால்,அதற்குள் மாலில் நடந்த விஷயங்கள் ஜெயந்தனின் பெற்றோர் காதுகளை எட்டிவிட்டது.அதோடு,
மீடியாவுக்கும் விஷயம் காட்டுத்தீ போல பரவ, தியாவும் ஜெயனும் அடுத்த நாளின் பேசு பொருளானார்கள். நல்லவேளையாக தியாவின் புகைப்படம் அவர்களிடம் இல்லை.


வேறென்ன சொல்வது?
 
Last edited:
நிஜமா நிறைய இடத்துல இப்படி நடக்குறதை கேள்வி படுறோம்!!... எல்லா இடத்திலும் கவனமாவும், எச்சரிக்கையாவும் கண்டிப்பா இருக்கனும்!!... அவ பார்ததுட்டா!!... இனி என்ன ஆகப்போகுதோ!!... இன்ட்ரஸ்டிங்!!..
 

NNK-54

Moderator
நிஜமா நிறைய இடத்துல இப்படி நடக்குறதை கேள்வி படுறோம்!!... எல்லா இடத்திலும் கவனமாவும், எச்சரிக்கையாவும் கண்டிப்பா இருக்கனும்!!... அவ பார்ததுட்டா!!... இனி என்ன ஆகப்போகுதோ!!... இன்ட்ரஸ்டிங்!!..
🙏
 
Top