எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 01

admin

Administrator
Staff member

மைனரு மனசுல மச்சினி 01​

"ஏங்க! எங்க இருக்கீங்க.? என்னங்க..." எனப் பரபரப்பாக வீட்டிற்கு வெளியில் இருந்து ஓடிவந்தார் அரும்பு.​

"ஏய்! இங்க தான் பேப்பர் படிச்சுட்டு இருக்கேன், உள்ள வா, இன்னும் தான் பொங்கல் வைக்க நேரம் இருக்கே" என அதட்டினார் கணவர் சீனியப்பா.​

"எதிர்த்த வீட்டுல..." என மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கப் பேச்சினை நிப்பாட்டினார்.​

"என்ன அரும்பு, என்ன ஆச்சு.?" என பேப்பரை மடக்கி வைத்துவிட்டு எழுந்தார் சீனி.​

"அது! அது வந்து, பெரியப்பாக்கு முடிஞ்சுட்டு" என்றார் மெல்ல, அதைக் கேட்ட சீனி அப்படியே நாற்காலியில் அமர்ந்துக் கண்களை மூடித்திறந்தார்.​

"சரி! நீ போய் அடுப்படியை சாத்திட்டுக் கெளம்பு போகலாம், எங்க கவி.?" எனக் கேட்டார்.​

"அவ குளிச்சுட்டு இருக்கா, நான் தான் பொங்க வைக்கனுமுனு, போய் குளிச்சுட்டு வரச் சொன்னேன்" என அவர் முடிப்பதற்குள், "என்னமா நான் குளிச்சுட்டு வந்துட்டேன். இன்னும் தான் நேரம் இருக்கே!" எனக் கேட்டப்படி வந்தாள் சங்கவி.​

"கவி! பெரிய தாத்தாக்கு முடிஞ்சுட்டுடி" எனக் கண்கள் கலங்கி மகளிடம் அழுதார்.​

"என்னமா, நேத்து டாக்டர் வந்துப் பாத்துட்டுப் போனதா சொன்னாங்க, இப்பதைக்கு..." என இழுத்தாள்.​

"ம்ம்ம்! என்னச் செய்றது"​

"சரி! சரி! கெளம்புங்க" என முன்னே நடந்தார் சீனி.​

"அப்பா! நம்ம போகனுமா.?" எனத் தடுமாறிக் கேட்டாள் மகள்.​

"பின்ன என்னம்மா, உன் அம்மாக்கு சொந்த பெரியப்பா, எனக்கு தாய் மாமா போய் தான் ஆகனும், அந்தப் பேச்சிற்கே இடமில்லை" என முறைத்தார் மனிதர்.​

"இல்லப்பா! அந்த வீட்டுக்குப் போனா, நம்மளை..." என மென்று முழுங்கினாள்.​

"என்ன சொன்னாலும் சரி, போய் தான் ஆகனும். வா!" எனத் தந்தை கிளம்பினார்.​

"இருங்கப்பா, நான் ட்ரஸ் மாத்திட்டு வரேன், ஒன்னா போகலாம்" என வேகமாக அறைக்குள் சென்றாள்.​

அரும்பு அழுதுக் கொண்டு இருக்க, "அரும்பு! சோழா வந்தா தானே எடுப்பாங்க, அவன் எப்ப வரானு தெரியலையே!" என்றார்.​

"ஏங்க! அவன் ராத்திரியே வந்தாச்சாம், அவருக்கு ஒரு மாதிரி இருக்குனு ஃபோன் போட்டதும், விடியுறதுக்கு முன்னாடியே வந்துட்டான்."​

"ஓ! அதான் ஒரே சத்தமா இருந்துச்சா, நான் கூட எப்பவும் போல ஆளுங்க மாமாவைப் பாக்க வராங்கனு நெனச்சேன்."​

சோழா வந்துவிட்டான் எனத் தாய் கூறியதைக் காதில் வாங்கிக் கொண்டே சுடிதாரை மாட்டினாள் கவி.​

'ஓ! மைனரு வந்தாச்சா.? அவன் இருக்கும் போதா நம்ம போகனும்' என நொந்துக் கொண்டே வெளியில் வர, அவளைக் கண்ட அரும்பு"அடியேய்! போய் ஒரு புடவையை எடுத்துக் கட்டிட்டு வா" என்றார்.​

"அம்மா! அது எனக்கு வசதியா இருக்காது, விடும்மா"​

"அரும்பு, அதுக்கு எல்லாம் நேரமில்ல, வா போகலாம்"​

மூவரும் வீட்டைப் பூட்டிவிட்டு எதிர் வீட்டை நோக்கி நடந்தனர்.​

"அப்பா! எனக்கு என்னமோ போக வேண்டாமுனு தோணுது" என்றாள் கவி.​

"என்னம்மா பேசுற, பேசாம வா, நல்லதுக்குப் போறமோ இல்லையோ, கெட்டதுக்குப் போகனும்" என மகளை அதட்டி அடக்கினார்.​

ஒப்பாரி வைக்கும் குரல்கள் மெல்லத் தொடங்கியிருந்தது.​

தாத்தா இறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்க, இப்பொழுது தான் வாசலில் பிணத்தைப் படுக்க வைக்க ஏற்பாடுச் செய்துக் கொண்டு இருந்தார்கள்.​

கவி வீட்டிற்கு எதிரில் சாலை, அதனைக் கடந்து சென்றால் சோழா வீடு, அவன் வீடும் கவி வீட்டினை நோக்கி இல்லாமல் வாசற்படி பின்னால் இருக்கும், சோழா வீட்டிற்கு சந்து வழியாக முன் பக்கம் செல்ல வேண்டும், அதாவது இருவருமே தெற்குப் பார்த்த வீடு, இரண்டிற்கும் நடுவே வண்டிகள் செல்லும் சாலை.​

அது வளர்ந்து வரும் கத்திரிபுரம் கிராமம். பேருந்து ஊருக்குள் வராது, பஸ் ஸ்டாப் தனியாக ஊருக்கே ஒன்று உள்ளது.​

இப்பொழுது இறந்தவர் பெயர் துரைமணி, அவரது தம்பி தங்கமணி, தங்கை ராஜாமணி. துரைமணிக்கு ஒரே பையன் சிவமணி, தங்கமணிக்கு ஒரே பொண்ணு அரும்புமணி, ராஜாமணிக்கு ஒரே பையன் சீனியப்பா.​

முதலில் சீனி செல்ல, பெண்கள் இருவரும் பின்னே சென்றனர்.​

ஊரின் ஆண்கள் சிலர் முன்னால் நிற்க, சீனியைப் பார்த்துத் தலை ஆட்டிக் கை கொடுத்தனர்.​

சீனியைப் பார்த்ததும் நொடியும் தாமதிக்காமல் துள்ளிக் குதித்து ஓடிவந்தனர் இருவர். ஆனால் ஒருவன் மட்டும் நின்ற இடத்திலே நின்றான்.​

"உங்களை எல்லாம் யாரு வரச் சொன்னா?" எனக் கேட்டவாறு இருவரும் எகிறினர்.​

"ஏய்! இருங்கப்பா" என இடையில் நின்றவர்கள் அவர்களைத் தடுத்தனர்.​

கவியின் முகம் கோபத்தில் சிவக்க, தாய் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் அருகே நின்றார்.​

"ஏப்பா! நீங்க எல்லாம் வளர்ந்தப் புள்ளைங்க, இன்னுமா வெவரம் புரியாம இருக்கீங்க? சாவு வீட்டுக்கு வரவங்களைத் தடுக்க கூடாது" என்றார் முதியவர் ஒருவர்.​

"எங்க ஜென்ம எதிரி இந்தக் குடும்பம், என்னதுக்கு வராங்க?" என்றான் நடுவில் பிறந்த வீரமணி.​

"அதானே! இங்க வந்தா நாங்க உள்ள விட மாட்டமுனு தெரிஞ்சும் இந்தாளு வந்து இருக்கார்." எனக் கடுப்படித்தான் இளையவன் சின்னமணி.​

"டேய்! பேசாம இருங்கடா, இப்ப அந்தாளு தானா போகலைனா, எப்படி போக வைக்கிறதுனு எனக்குத் தெரியும்" என்றான் மூத்தவன் சோழா என்கிற சோழமணி.​

"சோழா! நீ தான் மூத்தவன், நீயே இப்டி பேசலாமா?" என ஒருவர் கேட்க, "நான் மூத்தவனு கொஞ்சம் மரியாதைக் கொடுத்துச் சொல்றேன். சீனியப்பா! நீ ஒரு ரோசமுள்ள ஆம்பளைனா மரியாதையா வெளியில போ! எந்த முகத்தை வச்சுகிட்டு அதும் குடும்பத்தோட வந்த?" என்றான் அதிகாரமாக.​

"செத்தவரு எங்களுக்கும் சொந்தம், உங்களுக்கு முன்னாடியே என் அம்மா இவரைப் பாத்தவர், என் அப்பாவை வளர்த்தவர், எனக்கும் தாத்தா வேணும், அவர் விசயத்தில் எங்களை வரக்கூடாதுனுச் சொல்ல முடியாது"​

என அழுத்தமாக, அதே சற்றுக் கோபமாகவும் கூறினாள் கவி.​

சோழாவிற்கு அவளின் அழுத்தமான பேச்சுக் கோபத்தை தர, "அவரு எங்களுக்கு மட்டும் தான் தாத்தா, என் அப்பாவை மட்டும் தான் பெத்தார். ஏதோ ஒரு காலத்தில் வளர்த்தது எல்லாம் பாம்புகள், அதுங்க எல்லாம் வெசமா வளர்ந்து அவரு குடும்பத்துக்கே அந்த வெசத்தைக் கக்கிட்டுங்க. இப்ப யாரும் சொந்தம் கொண்டாடிட்டு இங்க வரக்கூடாது" என்றான்.​

"யாரு பாம்பு? உங்கக் குடும்பம் தான் அத்தனையும் வெசம்." எனக் கவியும் பதில் அளித்தாள்.​

சீனி"கவி! அமைதியா இரு, இது இறந்த வீடு" என்றார்.​

"அப்பா! மொதல இறந்த வீடுனு அவங்களுக்குத் தெரியனும். நல்லதுக்குப் போகலைனாலும் கெட்டதுக்கு வரவங்களை கைக்கொடுத்து துக்கம் அனுசரிக்கனும், அதைச் சொல்லிக் கொடுத்ததே இந்தத் தாத்தா தான். இவரு செத்ததுக்கே அது நடக்கல, இதுல தாத்தானு உரிமை வேற கொண்டாடுறாங்க" எனச் சோழாவை முறைத்துக் கொண்டே கூறினாள்.​

"ஏய்! உன் கிட்ட யாரும் இங்கப் பாடம் கேக்கல, பொம்பளைப் புள்ளையா அடக்கமா உன் அம்மா பின்னாடிப் போய் நில்லு, அத விட்டுட்டு முன்னாடி வந்து துள்ளாத, நான் பாட்டுக்கும் கோபம் வந்து கை, கால் தூக்கினா மொகரைப் பேந்துடும். வந்துட்டா வரலாறு பேசிட்டு" எனக் கண்கள் சிவக்க கவியை அடக்கினான்.​

'பொம்பளைப் புள்ளையா அடக்கமா' என்றதைக் கேட்டவளிற்கு எங்கிருந்து தான் அந்தக் கோபம் வந்ததோ"டேய்! என்னடா பொம்பளைப் புள்ளைனா அடக்க ஒடுக்கமா தான் இருக்கனுமா.? ஏன் பேச கூடாதா? என் வீட்டுக்கும் நான் தான்டா பொம்பள, ஆம்பள புள்ள. நான் தான்டா பேசுவேன், இப்ப என்னடா பண்ணுவ.?" என வேகமாக கேட்டாள்.​

கவி முதன் முதலில் சோழாவை இப்படி​

'டா' போட்டு பேசியிருக்கிறாள். இதுவரை எவ்ளோ சண்டை வந்திருக்கு, ஆனால் அவனிடம் மரியாதையின்றிப் பேசியதில்லை, ஏன் நேருக்கு நேர் போக மாட்டாள். சீனியப்பாவே தான் பேசிக் கொள்வார்.​

இன்று ஊர் பொதுவில் அனைவருக்கும் முன் சோழாவின் வார்த்தைகளில் கோபம் வந்து அவளை அறியாமல் பேசிவிட்டாள்.​

அவளின் அந்த 'டா' வில் சோழாவிற்கு மிகுந்த மரியாதை இழுக்கு ஏற்பட, அதுவும் அவன் தந்தையின் இறப்பிற்குப் பின் ஊரின் முக்கியவர்கள் பட்டியலில் இருப்பவன். அவள் பேசி முடித்த வேகத்தில், பாய்ந்து சென்றவன்"யாரடி டா சொன்ன" என அவளின் கன்னத்தில் பளார் என்ற ஒரு அடியை வைத்தான்.​

சீனியப்பாவும் தன் மகளின் பேச்சைக் கண்டிக்க திரும்புவதற்குள் சோழா அடித்திருந்தான்.​

"சோழா! என்ன இது?" எனச் சீனி அவனை முறைக்கவும், "ஆமான்டா! உன்னைய தான்டா சொன்னேன்" என்றாள் கவி மீண்டும், கன்னத்தில் கை வைத்து கண்கள் சிவக்க.​

"ஏய்!" என சோழா மீண்டும் பாய, சுற்றி இருந்தவர்கள் பிடித்தனர்.​

"கவி! அமைதியா இரு, இது பொது இடம்" என மகளை அதட்டினார்.​

"பொது இடமுனு அந்தப் பக்கமும் தெரியனும்பா, இதுக்கு தான் சொன்னேன் வர வேண்டாமுனு"​

"போடி! போ! உங்களை யாரும் இங்க வெத்தலைப் பாக்கு வச்சுக் கூப்புடல, நீங்க எல்லாம் யாருனு தெரியாதா? நன்றிக் கெட்ட குடும்பம். அது மட்டுமா?" எனச் சீனியைப் பார்த்தான்.​

அவரோ தலைக் குனிந்து நின்றார்.​

"அப்பா! நம்ம ஒரு தப்பும் பண்ணல, இவங்க தான் பணம், சொத்துனு பேராசைப் புடிச்சு திரியுறாங்க. நீங்க ஏன் அவங்க முன்னாடி அமைதியா நிக்கிறீங்க.? வாங்கப் போகலாம். தாத்தா நம்மளை ஏத்துப்பார், அவருக்குத் தெரியும் எல்லாம்" என்றாள் கவி.​

"உஷ்ஷ்ஷ்! ஏய் ரொம்ப பேசாம போடி! என் பிரஷர் ஏத்திட்டு நிக்கிற, எங்களுக்கு அடுத்த வேலை இருக்கு" எனச் சீறினான் சோழா.​

"நீ ஏன் அண்ணா இதுங்க கிட்ட பேசிட்டு நிக்கிற, விடு நாங்க வெளியில் புடிச்சுத் தள்ளிட்டு வரோம்" என தம்பிகள் அவர்கள் முன் போக, சோழா"டேய்! பேசாம இருங்க, நான் பேசிக்கிறேன்" என அதட்டினான்.​

அரும்பு"தம்பி! ஆயிரம் ஆனாலும் என்னைய வளர்த்தவரு, தயவுச் செஞ்சு உள்ள விடுங்கப்பா" எனக் கெஞ்சினார்.​

"அம்மா!" எனக் கவி தாயை முறைக்க, "அடிச்சுப் பல்லை உடைச்சுடுவேன். நீ வாயை மூடிட்டு நில்லு, பொம்பளைப் புள்ளைனு இல்லாம எங்கிருந்து இவ்ளோ வாய் வந்துச்சு உனக்கு, படிச்சு வேலைக்குப் போற திமிரா!" என மகளை முறைத்தவர், "இதுக்கு மேல பேசின, பிச்சுடுவேன்" என அவளின் வாயிற்குப் பூட்டுப் போட்டார் தாய்.​

"ஏதோ என் மவன் பேசுறானு நான் பொறுமையா இருந்தேன். உன்னைய வளர்த்ததுக்கு தான் அந்தப் பேச்சு பேசினீயா.?" எனக் கேட்டார் சோழாவின் தாய் லெட்சுமி.​

"அண்ணி! அப்ப நடந்தது எல்லாம் வேற, இப்ப என் பெரியப்பாவைக் கடைசியா பாத்துக்கிறேன். உயிருக்குப் போராடும் போதும் பாக்க விடல, இப்பவாச்சும் விடுங்க" என்றார் அரும்பு.​

"இப்படியே பேசிட்டு இருந்தா பொணத்தைச் சுடுகாட்டுக்குத் தூக்க வேணாமா? அட ஒரு முடிவுக்கு வாங்கப்பா, இவர் சாம்பல் அள்ளும் வரை அவங்க வந்தா எதிர்க்க கூடாது. இது கெட்டச் சடங்கு, யாரையும் தடுக்க கூடாது" என்றார்கள் ஊர் பெரியவர்கள்.​

அனைவரும் பேசி சோழா, லெட்சுமி குடும்பத்தை சரிசெய்ய, சீனி குடும்பம் அங்கு நிற்க இடமளிக்கப்பட்டது.​

அரும்பும், கவியும் சென்று தாத்தா அருகில் அமர்ந்து அழுதார்கள். கவிக்கு இறந்த தாத்தாவைப் பார்க்க, பழைய நினைவுகள் தோன்றியது.​

அரும்புவின் அப்பா இறந்து பல வருடங்கள் ஆகியது. பாவம்! சோழாவின் தாத்தா, இன்று தைப்பொங்கல் நாளில் இறந்து விட்டார்.​

ஒருவர்"சோழா! என்ன நடந்தாலும் நம்ம தைப்பொங்கலை நிறுத்தக் கூடாது. அதனால நடைமுறையில் உள்ளதைப் பண்ணிடலாம்" என்றார்.​

"சரி சித்தப்பா!" என்றான் அவன்.​

சோழா கேட்டரிங் படித்து முடித்து சென்னையில் சொந்தமாக ஒரு உயர்தர ஹோட்டலை நடத்தி வருகிறான். அப்படி இருந்தும் ஊரில் நடக்கும் அனைத்து முறைகளிலும், முக்கிய நிகழ்விலும் பங்கெடுத்து விடுவான். அதன் வழியில் இந்த முறையை அறிந்தவன் ஆவான்.​

பொங்கல் அன்று ஊரில் யார் இறந்தாலும், இறந்தவரை அப்படியே வைத்துவிட்டு வாசலில் பொங்கல் வைத்து இறக்கிய பிறகு தான் இறந்தவருக்கான சடங்குகள் நடைப்பெறும். அதன்படி பொங்கல் பானை இறந்த வீட்டிலும், ஊர் மக்கள் வீடுகளிலும் வைக்கப்படும்.​

தாத்தா இறந்ததும் அவரை அவர்கள் வீட்டின் வராண்டாவில் கிடத்தி விட்டு, வாசலில் பொங்கல் வைக்க ஏற்பாடுத் தொடங்கியது.​

ஆண்கள் எல்லாம் இறந்த வீட்டில் இருக்க, பெண்கள் அவரவர் வீட்டிற்கு பொங்கல் வைத்து இறக்கி விட ஓடினர்.​

அரும்பு"கவி! நீ இங்கயே இரு, நான் போய் பொங்கல் வச்சுட்டு வரேன்" என்றார்.​

"நீ இரும்மா, நான் போறேன்" என்றாள்.​

"உனக்கு தனியா செய்ய முடியாதுடி, நான் உடனே முடிச்சுட்டு வரேன்" என வேகமாக சென்றார்.​

லெட்சுமி பொங்கல் வைக்க பானைகளை எடுத்துக் கொடுக்க, தன் அண்ணன் மகள் நித்யாவிடம்"நித்யா! போ, நீ போய் பொங்கலை வச்சு இறக்கு, நாளைக்கு என் புள்ளைய கட்டிகிட்டு நீ தானே வைக்கனும்" என்றார்.​

"அத்த! தனியாவா"​

"இதுக்காக நான் துணைக்கு ஆளா புடிக்க முடியும், போடி!"​

அருகில் அமர்ந்திருந்த பாட்டி"ஏட்டி அரும்பு மவளே! சும்மா தானே நிக்கிற, வந்து இவளுக்கு ஒத்தாசைப் பண்ணுடி" என்றது.​

'கெழவிக்கு ஒன்னும் புரியல போல, இங்க நடந்தது எதுவுமே தெரியாத மாதிரி பேசுது. எனக்கு வரக் கோபத்துக்கு தாத்தாவோட சேத்து இதையும் சுடுகாட்டுக்கு அனுப்ப போறேன்' என மனதில் கொந்தளித்தாள் கவி.​

அவள் அமைதியாகவே நிற்க, மற்றொரு பெரியவர்"போ! போய் அந்தப் பொண்ணுக்கு சித்த துணைக்கு நில்லு பேத்தி." என்றார்.​

அவள் மனமோ'என்ன அடுத்த டெட் பாடியை சுடுகாட்டுக்கு ரெடிப் பண்ணப் போறீயா.?' எனக் கேட்டது.​

அவளுக்குச் சிரிப்பு வர, ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், "எனக்குப் பொங்கல் வைக்கத் தெரியாது" என்றாள்.​

"உன்ன விட சின்னப் பொண்ணு நித்யா, அவ தனியா வைக்கப் போறா, நீ போய் ஏதாச்சும் கூட மாட நில்லு" என வற்புறுத்தி அனுப்பினார் அத்தை முறையில் உள்ள ஒருவர்.​

மற்றவர்கள் தாத்தா சடங்கிற்குத் தேவையானதை செய்ய, ஆண்களும் அதே வேலையில் இருந்தார்கள். பந்தல், தப்பாட்டம், கரகாட்டம், பந்தலுக்குத் தேவையான மின் விளக்குகள், படுதாக்கள் என அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கியிருந்தான் சோழா.​

பொங்கல் வைக்க தயார் செய்பவர்களை அவன் கவனிக்கவில்லை. தாத்தாவைச் சிறப்பாக அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கியிருந்தான்.​

கவி வேறு வழியில்லாமல் நித்யாவுடன் சென்று நின்றாள்.​

நித்யா அடுப்பிற்கு அருகில் விறகைப் பொறுக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.​

கவிக்கு அனைத்து வேலைகளும் தெரியும், கற்றுத் தேர்ந்தவள், ஆனாலும் பொறியாளராக கம்யூட்டர் சயின்ஸ் படித்து சென்னையில் ஐடி கம்பேனியில் பணிப்புரிகின்றாள்.​

பொங்கலை முன்னிட்டு வீட்டிற்கு வந்திருந்தாள்.​

அவரவர் வீட்டிற்கு பொங்கல் வைக்கச் சென்றதால் பெரும்பாலான பெண்கள் இல்லை. பாட்டி வயசில் சிலர் அங்கு அமர்ந்து பக்குவம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.​

கவி மனதில்'நம்ம ஏன் செய்யனும்? அதான் செய்ய ஒருத்தி நிக்கிறாளே!' என எண்ணி ஒரமாக சும்மா வேலைச் செய்வது போல் பாவ்லா செய்தாள்.​

நித்யா கவியை விட இளையவள், ஆனால் அத்தையின் பாசக்காரி என்பதால் சோழாவின் மீது அளவில்லாத காதல் கொண்டவள்.​

"அக்கா! இப்டி தான் செய்யனுமா.?" என நித்யா, கவியிடம் கேட்க, "ம்ம்ம்! எனக்கும் தெரியாது" என்றாள்.​

அவளோ புரியாமல் ஒரு பாட்டியிடம் கேட்க, அது கண் தெரியாமல் ஆமா! என்றது.​

அடுப்பை அரைகுறையாக பற்ற வைத்த நித்யா வெறும் பானையைத் தூக்கி அடுப்பில் வைக்கப்போனாள்.​

அதைக் கவனித்த கவி"ஏய் லூசு! என்ன பண்ற.?" என அவள் கையில் இருந்த பானையை வாங்கி, அருகில் தாத்தாக்காக கொண்டு வந்து வைக்கப்பட்ட வைக்கோலில் ஒரு சிறிய தடிமனா பகுதியை கிள்ளி பானையில் போட்டாள்.​

அடுப்பினை நன்றாக பற்ற வைத்துவிட்டு, இடதுப் பக்கம் வைக்கோல் கீற்றுப் போட்ட சர்க்கரை பொங்கல் வைக்கப் போகும் பானையையும், வலதுப் பக்கத்தில் வெள்ளைப் பொங்கல் வைக்கப் போகும் பானையையும் தூக்கி வைத்தாள்.​

கவி பானையை அடுப்பில் வைத்த நேரம் சோழா யாரிடமோ ஃபோனில் பேசியவாறு திரும்பிய நொடியில் பார்த்தான்.​

மனதில்'திமிரு புடிச்சவ!' என எண்ணி ஃபோனில் கவனத்தைச் செலுத்தினான்.​

"அக்கா! இப்டி தான் செய்யனுமா?"​

"ம்ம்ம்! ஏன் உங்க அம்மா வச்சுப் பாத்ததில்லையா?" என சர்க்கரைப் பானையில் பால் கொஞ்சம் ஊற்றி, தண்ணீரை எடுத்து ஊற்றினாள்.​

அதன் மேலே மிதந்து வந்த வைக்கோல் கீற்றை வெளியில் எடுத்து அடுப்பிற்குள் வீசினாள்.​

"ஐ! உங்களுக்கு நிறைய தெரியுது"​

"ம்ம்ம்! தெரியனும்" என அடுத்தடுத்த வேலைகளில் அவளை அறியாமல் மூழ்கினாள் கவி.​

பந்தலுக்குத் தேவையான பொருட்கள் வந்திறங்க, சோழா அவற்றை சரிப் பார்த்து எடுத்து வைக்கச் சொல்லிக் கொண்டு வாசல் அருகே நின்றான்.​

கவி அடுப்பினை எரித்துவிட்டு, திரும்பி எதையோ எடுக்கப் போக, அவளின் துப்பட்டா நெருப்பு அருகே பறந்தது.​

எதேச்சையாக திரும்பிய சோழா, அவள் புறம் வந்து"உனக்கு அறிவு இருக்கா? அடுப்பு பக்கத்தில் இந்த மாதிரி ட்ரஸ் போட்டு நிக்காதனு..." என நிறுத்தி முறைத்தான்.​

கவி திரும்பி பார்க்க, துப்பட்டா நெருப்பு அருகே படர்ந்து கிடந்தது. உடனே அதை எடுத்து முடிச்சுப் போட்டவள், "அறிவு எனக்கு இருக்கு!" எனத் திரும்பி வேலையைத் தொடங்கினாள்.​

அவரவர் வேலைகளில் இருக்க, இவர்களை யாரும் கவனிக்கவில்லை.​

திரும்பி நடக்கப் போன சோழா, கவியிடம்​

"விதி எப்டி எல்லாம் விளையாடுதுப் பாரு, நீ வந்து இந்தப் பொங்கல் வைக்கிற" என்றவன், அந்த இடத்தில் நிற்காமல் நகர்ந்தான்.​

அதைக் கேட்ட கவி அப்படியே நின்றாள்.​

"அக்கா! பொங்குது பாருங்க" என எதையோ எடுக்க உள்ள போன நித்யா ஓடி வந்தாள்.​

தொடரும்...​

 

Mathykarthy

Well-known member
மைனரு மனசுல மச்சினி... 🤣🤣🤣 தலைப்பு கலக்கலா இருக்கு..

ஆரம்பமே அடிதடியா இருக்கே... 😳😳😳😳

அப்படி என்ன சண்டை ரெண்டு குடும்பத்துக்கும்....🤥🤥

சோழா சட்டுனு கை நீட்டிட்டான்.. 😱 கவியும் செம விடுறதா இல்லைனு வறிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு நிக்குறா....🤭

என்ன தான் அவ குடும்பத்தையே கேவலமா பேசுனாலும் தம்பிங்களை பேச விட மாட்டேங்குறான்... என்னமோ இருக்கு... 😝
 

Shamugasree

Well-known member
Mani mani ya pillaiya pethurukanga pa. Enna vayu intha kavi ku. Enna prachanai rendu ku veetukum.
Chola kavi ku idaiye thaniya etho sandai irukum pola.
 
Top