எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 02

admin

Administrator
Staff member

மைனரு மனசுல மச்சினி 02​

நித்யாவின் குரலில் தன்னிலைக்கு மீண்ட கவி உடனே பொங்கல் வைக்கும் வேலையைக் கவனித்தாள்.​

பால் ஊற்றிருந்ததால் பானையில் இருந்த நீர் பொங்கி வந்தது, அது அடுப்பிற்குள் கவிழ்ந்திட எரிந்துக் கொண்டு இருந்த நெருப்பு அணைந்து மீண்டும் எரியத் தொடங்கியது.​

பிறகு அரிசியை அள்ளி முதல் கையைக் கண்களில் ஒத்தியவாறு பானைக்குள் போட்டாள் கவி.​

"அக்கா! நீங்கச் சென்னையில வேலைப் பாக்குறீங்க, இது எல்லாம் தெரியாதுனு நெனச்சேன் ஆனா கரெக்டா பண்றீங்க, எப்படி.?" என ஆர்வமாகக் கேட்டாள் நித்யா.​

"நான் எந்த நாட்டுக்குப் போனாலும், இதான் பொறந்த ஊரு, என் அம்மா அரும்புமணி, அப்பா சீனியப்பா​

அது மாறாதுல, அந்த மாதிரி தான் இந்தப் பழக்க வழக்கங்களும் மாறாது."​

"ம்ம்ம்! ஆனாலும் நீங்கச் சென்னைக்குப் போய் கொஞ்சம் ஆளே மாறிட்டீங்க"​

அதுவரைப் பானையைக் கிண்டி கொண்டு இருந்த கவி, நித்யாவின் பேச்சில் புருவத்தைச் சுருக்கித் திரும்பி அவளைப் பார்த்து, "என்ன மாறிட்டேன்.?" எனக் கேட்டாள்.​

"ம்ம்ம்! எல்லாருக்கும் முன்னாடி என் அத்தானை மரியாதை இல்லாம பேசுறீங்க, அது எனக்குப் புடிக்கல" என முகத்தைச் சுளித்தாள்.​

"ஓ! அந்த மாற்றமா.? இங்கப் பாரு நித்யா, உன் அத்தான் தான் மொதல என் கிட்ட மரியாதை இல்லாம பேசினது"​

"இப்ப என்ன இல்லாததையா சொன்னார், உங்க அப்பா வாயே தொறக்கல, நீங்க முன்னாடி வந்துப் பேசுனீங்க, அதான் அத்தான் பேசினாரு" என சோழாவிற்குப் பரிந்துப் பேசினாள்.​

"நித்யா! நீயும் ஒரு பொண்ணு தான். நாளைக்கு உன்னையும் இப்டி தான் சொல்லுவாங்க, அதை கேட்டுட்டுப் பல்லைக் காட்டிட்டுப் போகாத, நானும் அந்தத் தப்பை முன்னாடி பண்ணி இருக்கேன். பொம்பளைனா முன்னாடி வரக் கூடாதுனு கிடையாது, தேவையான இடத்தில் பேசனும்"​

"அப்ப உங்கம்மா சொன்னப்ப பேசாம இருந்தீங்க"​

"அவங்க என் அம்மா, சொல்றதைக் கேட்டுத் தான் ஆகனும்" எனப் பானையில் இருந்த அரிசியை எடுத்துப் பார்த்தாள். அது வெந்திருக்க, நித்யா நசுக்கி கொடுத்த வெல்லம், தேங்காய், ஏலக்காயை பானைக்குள் போட்டோவிட்டு, பக்கத்து அடுப்பு வெண் பொங்கலையும் கிண்டி விட்டாள்.​

"நீங்க என்ன வேணா சொல்லுங்க, இனி என் அத்தானை நீங்கத் திட்டவே கூடாது.​

அப்படி திட்டினா நான் சும்மா இருக்க மாட்டேன், என்னைய பத்தி தெரியுமுல, என் அத்தானுக்காக என்ன வேணுனாலும் செய்வேன்." என மிரட்டும்படிக் கூறினாள்.​

"ஏய்! என்ன விட்டா ரொம்ப பேசுற, உனக்கு அத்தான் முக்கியமுனா உன்னோட வச்சுக்கோ, அவன பத்தி எனக்கு என்ன வந்துச்சு, போய் உன் அத்தானிடம் என்ட்ட வால் ஆட்ட வேண்டாமுனு சொல்லு, இல்லனா இதைவிட அசிங்கமா பேசுவேன். போ! மஞ்சக்கொத்தை எடுத்துட்டு வா" என்றாள்.​

கழுத்தை நொடித்தவள் சற்றே தூரமாக இருந்த மஞ்சள் கொத்தை எடுத்து நீட்டினாள்.​

அதை வாங்கி இரண்டுப் பானைகளிலும் கட்டி, இரண்டையும் தூக்கி திட்டாணிக்கு எதிரில் இருப் பக்கமும் வைத்தாள்.​

"சோழா! பொங்கல் வச்சு முடிச்சாச்சு, வாசலுல கண்ணாடிப் பொட்டியை வைக்கச் சொல்லுய்யா" என்றார் அவனின் உறவுப் பாட்டி பட்டம்மா. பட்டம்மா, இறந்துக் கிடக்கும் தாத்தா மனைவியின் தங்கை. சோழாவின் பாட்டி இறந்துவிட்டார். அவரின் மச்சினிக்கு அவரோட குடும்பத்துடன் ஆதரவில்லை, ஆதலால் பட்டம்மா இங்கயே தங்கிவிட்டார். லெட்சுமிக்கு உதவியாக இருக்க, கூடவே வைத்துக் கொண்டார் சின்ன மாமியாரை.​

அதுவரை உள்ளே அக்கா கணவரின் பிணத்திற்கு அருகில் அமர்ந்திருந்தவர் எழுந்து வெளியில் வந்து அமர்ந்தார்.​

அவனும் வாசலிற்கு வந்து"பாட்டி! அவ்ளோ தானே எல்லாம் முடிஞ்சுட்டா.?" எனக் கேட்டான்.​

"ம்ம்ம்! அந்தப் பொங்க பானையைத் தூக்கிட்டுப் போய் உள்ள வைங்கடி" என்றார் கவி மற்றும் நித்யாவிடம்.​

கவி எனக்கு என்னவென்று நிற்க, நித்யா ஒரு பானையைத் தூக்கிவிட்டாள்.​

சோழா, அவளின் திமிரான தோற்றத்தைக் கண்டு சட்டென்றுக் குனிந்து வெண் பொங்கல் பானையைத் தூக்கினான்.​

"அதுசரி! ஜோடியா தான் தூக்கிட்டுப் போறீங்க, போய் வைங்க" என்றார் பட்டம்மா பாட்டி.​

கவி அதைக் கண்டுக்கொள்ளாமல் ஓரமாக நிற்க, அவளைக் கடந்த நித்யா கால் இடறி பானையை நழுவ விடப் போக, உடனே கவி பதறியப்படி கையில் வாங்கிவிட்டாள்.​

"அதான் வாங்கிட்டீயே கொண்ட வச்சுட்டு வா கவி" என்றார் ஒருவர்.​

கவி இதழைச் சுளித்துவிட்டு, உள்ளே சாமி அறையில் கொண்டு வைக்க, பின்னால் சென்ற சோழாவும் இறக்கி வைத்தான்.​

சாமி அறையில் எவருக்கும் வேலை இல்லாததால் அந்தப் பக்கம் யாருமில்லை.​

"எல்லாமே முறைப்படி நடக்குதுல" என்றான் அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம்.​

அவனைத் திரும்பி முறைத்தவள், "முறையா நடக்க வாய்ப்பே இல்ல, அதுவும் உங்களுக்கு வாய்ப்பே இல்ல, நீங்கப் பண்ணின பாவத்துக்கு பச்ச தண்ணீக் கூட கெடைக்காது"​

"உன் குடும்பத்துக்கே பச்ச தண்ணீ கெடைக்கும் போது, எனக்குத் தாராளமா கெடைக்கும், போடி!"​

"போடினு சொல்ற நாக்கை கட் பண்ணிடுவேன்டா" என்றாள் வேகமாக.​

"ஏய்! என்னடி வர வர வாய் ரொம்ப நீளுது" என அவள் கைகளை அழுத்தினான்.​

பற்களை அழுந்த கடித்தவள், வலியைப் பொறுத்துக் கொண்டு கண்களை உக்கிரமாக மாற்றினாள். "கையை விடுடா!" என்றாள் வேண்டுமென்றே.​

அவன் கைகளை முறித்தவன்"மறுபடியும் டா சொல்லாதடி!"​

"நீயும் டி! சொல்லாதடா" என்றாள் வலியை அடக்கிக் கொண்டு.​

"உனக்கு ரொம்ப வாய் அதிகமாகிட்டு" என்றான் அவளின் கண்களில் தெரிந்த சீற்றத்தைக் கண்டு.​

"ஆமா! நான் அமைதியா இருந்து ஒரு தடவை வெறிநாய் கடிச்சுட்டு, அதான் இப்ப வெறிநாயைப் பாத்தாலே நானே கத்த ஆரம்பிச்சுடுறேன், எல்லாம் தற்காப்பு தான். அந்த நாயிக்கும் தெரியனுமுல" என்றாள் வீம்பாக.​

அவளின் கையை அப்படியே மடக்கி, தன் மார்புடன் இழுத்து, கழுத்தில் கைவைத்து அழுத்தியவன்"இப்டியே நங்கூரமா ஒரு அழுத்து அழுத்தினேன் வை, அப்புறம் தாத்தாக்குப் பக்கத்துல உனக்கும் பாடைக் கட்ட வேண்டியது தான். ஏன் தாத்தா பக்கத்துலனு உனக்கே தெரியும். சோ! என் கிட்ட உன் நாய் கதையை எல்லாம் வச்சுகாத, அப்புறம் கொதறிடுவேன்." எனக் கூறி அதே வேகத்தில் அவளை விட தடுமாறிப் போய் விழாமல் எதையோப் பிடித்து நின்று நிமிர்ந்தப் போது, சோழா அந்த இடத்தில் இல்லை.​

'போடா! போ! உனக்கு எந்தளவு கோபம் வருதோ அதைவிட எனக்கு கூடுதலா வரும். எனக்கும் உனக்கும் ஒரே குடும்பத்து ரத்தம் தானே ஓடுது.' எனக் கையை உதறினாள்.​

*​

பொங்கல் வைத்தப் பெண்கள் எல்லாம் துக்கம் அணுசரிக்க லெட்சுமி வீடு வந்துச் சேர்ந்தனர்.​

தாத்தாவைத் தூக்கி வந்து குளிர்சாதன கண்ணாடிப் பேழையில் வாசலில் தெற்கு வடக்காக படுக்க வைத்தனர்.​

அவர் தலைமாட்டில் காமாட்சி விளக்கு ஏற்றி, தென்னங்குருத்து படியில் வைத்து, சாம்பிராணிப் புகைக்கவிட்டு ஒவ்வொன்றாக செய்து முடித்தனர்.​

கவியின் கைகளில் சோழா அழுத்தியதால் வளையல் குத்தி இரத்தம் வழிந்துக் காய்ந்திருந்தது, அதை அவள் உணரவே இல்லை. அந்தளவு சோழா மேல் கோபம் வந்தது.​

'எவ்வளவுத் திமிர் பிடித்தவன்' என மனதில் மருகி வெந்து நொந்தாள்.​

இறந்த வீட்டிற்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். வாசலில் சோழா நின்றுக் கொண்டு இருந்தான்.​

அவன் மனதிலும் கவி திமிர் பிடித்த ராட்சசியாக சிம்மானசனமிட்டாள்.​

கவி ஓரமாக அமர்ந்திருந்தாள். லெட்சுமி ஒரு பக்கமும், அரும்பு ஒரு பக்கமும் அமர்ந்திருந்தார்கள்.​

எத்தனைச் சண்டையானாலும் மகன் முறைக்கு லெட்சுமிக் குடும்பமும், மகள் முறைக்கு அரும்புக் குடும்பம் மட்டுமே இறந்துக் கிடக்கும் கிழவனிற்கு உடன் சொந்தங்கள் ஆவர். ஆதலால் சுற்றுப்பட்ட கிராமங்களில் இருந்து வரும் உறவுகள் இருவரையும் தனிதனியாக போய் கட்டி ஒப்பாரி வைத்தனர்.​

அதே போல் சோழாவிடமும், சீனியப்பாவிடமும் ஆண்கள் கைக்கொடுத்தனர்.​

நீண்ட பந்தலில் ஒரு பக்கம் தப்பாட்டம் நிகழ்ந்தது. மறுபக்கம் இரண்டுப் பெண்கள் வீதம் சில ஆண்களும் ஒப்பாரி வைத்து ஆட்டம் ஆடினர்.​

உறவு முறைகளில் கோடித்துணி எடுத்து வருபவர்கள் வெடிவெடித்து வந்தனர்.​

யார் பேசுவதும் காதில் விழாது, அருகில் நிற்பவரே கத்தி தான் பேச வேண்டும்.​

பொங்கல் வாசலில் வைத்ததோடு சரி, யாரும் வாயில் போட்டுக் கொள்ளவில்லை.​

ஆனால் சம்பந்தம் செய்தவர்கள், கல்யாணம் செய்துக் கொடுத்த பெண்கள் பாயாசம் செய்து, டீ எனப் போட்டுக் கொடுப்பர். அதன்படி அரும்பு கவியை அழைத்து"பச்சபயிறு இருக்கு மற்ற தேவையானதை வாங்கிட்டுத் துணைக்கு யாராச்சும் வச்சுகிட்டுப் பாயாசம் வச்சுக் கொண்டு வாடா" என மகளைக் கொஞ்சினார்.​

"உனக்கு வேலை ஆகனுமுனா கொஞ்சிப் பேசு, இல்லைனா பொம்பளைப் புள்ளைனு அடக்கி வை" எனச் சீறினாள் கவி.​

"அத அப்புறம் பேசிக்கலாம், இப்ப போயிட்டு வா கவி"​

"ம்ம்ம்! போறேன்" என எழுந்துப் பக்கத்துக்கு வீட்டு அண்ணி லதாவை துணைக்கு அழைத்துக் கொண்டுத் தன்வீட்டிற்கு நடந்தாள்.​

வாசலில் சோழா நிற்க, அவனைக் கடந்து தான் போக வேண்டும்.​

கவி அவனைக் கண்டுக்கொள்ளாமல் போக, லதாவிடம் யாரோ"எங்கப் போற.?" எனக் கேட்டார்.​

"கவி பாயாசம் வைக்கப் போறா, அதான் துணைக்குப் போறேன், வந்துடுவேன்" எனக் கூறிவிட்டுச் சென்றது அரைகுறையாக சோழா காதில் விழுந்தது, ஆனால் புரிந்தது.​

நேரம் கடக்க, கவி அனைவருக்கும் பாயாசம் கப்பில் ஊற்றி வழங்கினாள். லதா கவியிடம்"நீயும் குடி கவி" என நீட்டினாள்.​

"இல்ல அண்ணி, வேணாம்!"​

"ஏன், சாப்புடாம கெடக்குறதுக்கு இத குடிச்சுக்கோ, தெம்பா இருக்கும்"​

"பரவாயில்ல, இது தாத்தாக்காக இருப்பது. தானா தெம்பு கெடைக்கும்" என்றாள்.​

"ம்ம்ம்! அது சரி, நான் ஆம்பளைங்க பக்கம் குடுத்துட்டு வரேன்" என வாசலிற்கு எடுத்து சென்றாள் லதா.​

சோழா வேண்டாம் என மறுக்க, கவியிடம் நிகழ்ந்த அதே உரையாடல் நடந்தது.​

"தம்பி! ஆயிரம் சண்டைப் போட்டாலும் பேரனும், பேத்தியும் தாத்தாக்கு விரதம் இருக்கீங்க" எனச் சிரித்தாள்.​

"என்ன அக்கா சொல்ற.?"​

"ம்ம்ம்! கவியும் இதே தான் சொன்னா." என அடுத்த ஆளிற்கு பாயாசம் வழங்கச் சென்றாள் லதா.​

சோழா அதை காதில் வாங்காததுப் போல் தலையைக் குலுக்கி கொண்டான்.​

தொண்ட வறண்ட மாதிரி இருக்க, தண்ணீர் குடிக்க வீட்டின் சந்திற்குச் செல்ல அங்கு சீனியும், மற்றொருவரும் பேசிக் கொண்டு நின்றனர்.​

மைக் சத்தம் அங்கு மிதமாக தான் கேட்டது.​

"என்ன சீனி பொண்ணுக்கு வரன் எதும் பாக்கலையா.?"​

"ம்ம்ம்! பாக்கனும் மச்சான். மொதல லேட் ஆகட்டுமுனு சொன்ன பொண்ணு, இப்ப தான் சரினுத் தலை ஆட்டி இருக்கா, பாத்துட்டு தான் இருக்கேன். நல்ல இடமா இஞ்சினியரிங் படிச்ச மாப்பிள்ளையா இருந்தா சொல்லுங்க"​

"அது என்னய்யா இஞ்சினியர் படிச்ச மாப்புள்ள தான் வேணுமா! உன் மச்சான் வீட்டுல மூணு பயல்க இருக்கானுங்க, ஒருத்தனை முடிக்க வேண்டியது தானே"​

"எல்லாம் தெரிஞ்ச நீயே இப்டி பேசலாமா?"​

"அடபோய்யா! யாரு வீட்டுல தான் சண்டை இல்ல, எல்லாம் ஒரு கட்டத்தில் இந்த மாதிரி உறவாகும் போது மாறிடும் சீனி"​

"அது சரிப்பட்டு வராதுப்பா, மூணுப் பேருல சோழா மட்டும் தான் அவ வயசுக்கு சரியா வருவான், ஆனா அவனுக்கு கவியைக் கட்டி வைக்கிறதும், கெணத்துல தள்ளுறதும் ஒன்னு தான். அப்படியே அப்பா குணம், யாரையும் அனுசரணையா வச்சுக்க தெரியாதவன், நம்ம கவிக்கும் ஏத்தப் படிப்பு இல்ல, படிப்பு வரலைனு சமையல் வேலைக்குப் படிச்சு ஏதோ பிஸ்னெஸ் பண்றான். என் மனசுக்கு சொந்தமே வேணாமுனு தோணுது"​

"அவன் குணம் கொஞ்சம் முரட்டுதனம் தான். ஆனா கல்யாணம் ஆனா மாறிடுங்க, உன் பொண்ணு மட்டும் என்ன, அந்தப் பேச்சு பேசுது?"​

"கவி அப்டி எல்லாம் பேசுற புள்ள இல்லப்பா, அவனோட பேச்சில் ஏதோ கோபம் வந்துட்டுப் போல, இல்லைனா என்னையே அமைதியா போங்கனு சொல்ற பொண்ணு தான்."​

"ம்ம்ம்! சோழாவோட ஹோட்டல் பிஸ்னெஸ் நல்லா போகுது சீனி, சாதரணமா எடைப் போடாத, உம் மவளுக்கு லக்கியான மாப்புள்ள தான்" என அவரும் விடாமல் கொக்கிப் போட்டார்.​

"அந்த விசயத்தையே விடுப்பா, நமக்கு தோதுபடாது, நல்ல படிச்ச இஞ்சினியர் மாப்புள்ள இருந்தா சொல்லு" என முடித்தார்.​

தண்ணீர் அருந்த வந்த சோழா அனைத்தையும் கேட்ட பின் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.​

*​

"சோழா! நாலு மணிக்குத் தூக்கிடலாம், எல்லாரு கோடியும் வந்துட்டா, அடுத்த ஏற்பாட்டை பண்ண ஆரம்பிக்கலாம்" என்றார் உறவினர்.​

"ஏப்பா! துரை ஐயா பொண்டாட்டி வீட்டுக் கோடி வரனும், அது நம்ம சீனிக் குடும்பம் தான். அவங்க சம்பந்தம் கொண்டு வரப் போய் இருக்காங்க" என்றார் மற்றொருவர்.​

சோழா பதிலின்றி நின்றான், "சரி! சரி! வரட்டும், வந்ததும் பாடியைக் குளிப்பாட்ட தயார் செய்வோம்."​

சீனி, அரும்பு தலைமையில் தட்டுகள் சுமந்து சம்பந்தம் வர, வெடிகள் முழக்கமிட்டது.​

அவர்கள் கொண்டு வந்த பட்டுவேஷ்டியை தாத்தா மேல் போட்டுவிட்டு, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.​

அடுத்து கண்ணாடிப் பேழையைத் திறந்து தாத்தாவைத் தூக்கி கொண்டு குளிப்பாட்டும் இடத்திற்கு ஓரமாக செல்ல, சோழாவை உடலில் தண்ணீர் ஊற்றி வரச் சொன்னார்கள்.​

சோழா வெள்ளை வேஷ்டி, துண்டுடன் உடல் எங்கும் நீர் ஒழுக வந்து நின்றான்.​

தாத்தாவின் அருகில் சோழா நிற்க, அவரை குளிப்பாட்டி தலையில் நல்லெண்ணெய் வைத்து, அரப்பு(சிகைகாய்) வைக்கத் தொடங்கினர். முதலில் சோழா செய்ய, அவனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும், பங்காளிகள், சீனி குடும்பமும் அதைச் செய்தனர்.​

எண்ணெய், அரப்பு வைத்துவிட்டு ஓரமாக சென்று நின்றாள் கவி.​

சோழாவும் அவளின் பக்கவாட்டில் நின்றான். கூட்டமாக நின்றதால் தாத்தாவிற்குச் செய்யப்படும் சடங்குகளை அனைவரும் கவனித்தனர்.​

நெற்றியில் மஞ்சள், ரூபாய் நாணயத்தை வைத்து, கோடி வேஷ்டியை அவர் மேல் போட்டு, தென்னங்கீற்று படுக்கைத் தயார் செய்து கொண்டு வந்து தாத்தாவை அதில் படுக்க வைத்தனர்.​

வீட்டு வாசற்படிக்கு நேராக பாடையை வைத்து, அடுத்த முறைக்குத் தயார் ஆகினர்.​

விளக்குப் பிடிப்பது, அதை தம்பதிகளாக செய்ய வேண்டும். லெட்சுமி தனி ஆள். மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே அரும்பு மகள் முறை என்பதால் சீனியுடன் விளக்குப் பிடித்துச் சுற்றி வருமாறு ஊரார் கூறினர்.​

அரும்பு கணவனையே பார்த்தார். கவியும் பெற்றோரிடம் சம்மதமா என பார்வையால் வினவினாள்.​

சோழா"இது, தாத்தாக்கு எங்க வீட்டுல செய்ற முறை, கண்டவங்க செய்யக் கூடாது" என்றான்.​

"சோழா! நீ பண்ண முடியாதுப்பா" என்றனர்.​

"அதுக்கு என்ன, என் புள்ளைய கட்டிக்கப் போறது என் அண்ணன் பொண்ணு நித்யா தான், அவங்க சேந்து செய்வாங்க" என்றார் லெட்சுமி.​

"லெட்சுமி! புரியாம பேசாத, அது எப்டி தாலிக் கட்டாம, இந்தச் சடங்குச் செய்ய முடியும்.?"​

"அதுக்கு என்ன, இப்பவே தாலிக் கட்டிட்டுச் செய் சோழா, நித்யா இங்க வா" என்றார் லெட்சுமி. அவருக்கு அரும்பு இதை செய்யக் கூடாது.​

ஊரார் அவர்களுக்குள் பேச, ஒரே சலசலப்பாக இருந்தது.​

"இப்ப என்ன தாலிக் கட்டனும் அவ்ளோ தானே, தாலிக் கட்டிட்டா இந்தச் சடங்கை செய்யலாம், அப்டி தானே" எனக் கேட்டான் சோழா.​

"ஆமா தம்பி! ஆனா இப்ப எப்டி.?" எனத் தயங்கினார் உறவுச் சித்தப்பா.​

சீனி நமக்கு ஏன் இது என ஓரமாக ஒதுங்கி நிற்க, அரும்பும் விட்டுக் கொடுத்து ஓரமாக நின்றார்.​

நித்யா மகிழ்ச்சியில் மிதங்க, லெட்சுமி அருகில் இருப்பவரிடம்"அடியேய்! போய் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் வச்சுக் கட்டி கொண்டா" எனச் சந்தோஷத்துடன் கூறினார்.​

"அம்மா! கொஞ்சம் பொறு. அது எல்லாம் தேவையில்ல"​

"ஏன்பா! அப்டி பண்ணா தான் கல்யாணம்"​

"இரும்மா, நீ வேற" எனக் கண்களால் யாரையோ துலாவினான்.​

அந்தக் கூட்டத்தில் கண்களில் மிரட்சியுடன் ஓரமாக ஒதுங்கி நின்ற கவியை கண்டவன், வேகமாக சென்று அவள் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.​

அரும்பு, சீனியும்"என்ன பண்ற சோழா.?" என பின்னாடியே நடந்தனர்.​

அவளை தாத்தா முன் நிறுத்தி, "இப்ப என்ன நான் கல்யாணம் பண்ணி தம்பதியா இந்தச் சடங்கைச் செய்யனும் அவ்ளோ தானே, இவளோட செஞ்சா அது நிறைவேறும்" என்றான்.​

அனைவரும் ஒன்றும் புரியாமல் முழிக்க, சீனி, அரும்பும் மகளை நோக்கினர்.​

"என்ன சோழா சொல்ற.?" என்றார் உறவுச் சித்தப்பா.​

"ஆமா! இவ தான் என் பொண்டாட்டி. எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகப்போது." என்றான் சாதரணமாக. கவியோ அவனின் கையை உதறிக் கொண்டு இருந்தாள். ஆனால் சோழா அவளை விடுவித்த பாடியில்லை.​

தொடரும்...​

 

admin

Administrator
Staff member
கிறுக்கு பய பொண்டாட்டிக்கு தான் அப்படி பாஞ்சி அறை விட்டானா..
 

Mathykarthy

Well-known member
என்னடா ரெண்டு பேரும் இப்படி சண்டைக் கோழியா சிலிர்த்துட்டு நிக்குறாங்க ன்னு பார்த்தா புருஷன் பொண்டாட்டியா... 😯😯😯😯😯😯😯😯
முறை எல்லாம் சரியா தான் செஞ்சுருக்காங்க... 😒
 
Top