எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் -12

12

நெடுநாளைக்கு பிறகு வீட்டில் கல்யாணகளை கட்டத்தொடங்கியது.

நிவேதா உமையாளுக்கு மிகவுமே உதவியாக இருந்தாள்.

தினமும் வீட்டிற்கு வருவாள்..முடிந்த அளவிற்கு கௌரியின் மனதில் இடம்பிடிக்க முயன்றாள்.

உமையாளுடன் நெருங்கிப் பழகினாள்.முன்பு போல இப்பொழுது நிவேதாவின் மனதில் பொறாமையெல்லாம் கிடையாது.

வாழ்க்கை அவளுக்கு நிறைய விஷயங்களை புரிய வைத்து விட்டது உண்மையான அன்புக்கு முன்பு எதுவுமே ஈடாகாது என புரிந்து கொண்டதால் எல்லோரிடத்திலும் உண்மையான அன்பை காண்பித்தாள்.
இது கதிரையும் வெகுவாகக் கவர்ந்தது.

கதிரை நிவேதா உயர்ந்த இடத்தில் வைத்திருந்தாள்..கதிரைத்தவிர வேறு யாராக இருந்தாலும் அவளை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் கதிர் என்பதால் மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறான்.

அவளது அன்பை புரிந்து கொண்டிருக்கிறான் காதலை மதித்திருக்கிறான்.. திருமணத்தை கூட விரைவிலேயே நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
முடிந்த அளவுக்கு கதிரின் வீட்டில் சிறந்த மருமகளாக இருக்கவே விரும்பினாள் நிவேதா.

காலையில் வந்தால் மாலை வேளையில் கதிரை காணும் வரை அந்த வீட்டிலே தான் எதையாவது ஒரு வேலையை இழுத்து போட்டு செய்து கொண்டிருப்பாள்.. அவன் வேலை முடித்து வரும் பொழுது அவன் கண் பார்வையில் படும்படி எங்காவது நின்று கொண்டிருப்பாள் அவன் சினேகமாய் இவளை பார்த்து ஒரு புன்னகை சிந்திய பிறகுதான் வீட்டிற்கு திரும்பிச் செல்வது

முக்கியமாக உமையாளின் திருமண த்திற்கு தேவைப்படும் அத்தனை பொருட்களையும் வாங்கி குவித்தது நிவேதா மட்டுமே.

அடிக்கடி உமையாளை வெளியே அழைத்துச் செல்வது மருத்துவமனை அழைத்துச் செல்வது என அவளை தனிமையில் விடாத வண்ணம் பார்த்துக்கொண்டாள் நிவேதா.

உமையாள் விரைவிலேயே குணமாவதற்கு நிவேதாவும் ஒரு காரணம் என்றால் கண்டிப்பாக அதை மறுக்க முடியாது .

திருமண நாளும் நெருங்கி வந்தது வழக்கம் போல கதிரின் அறையை எப்பொழுதுமே உமையாள் தான் சுத்தம் செய்வது.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் பொழுதும் அதேபோல் கதிரின் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்க பெரியவர்கள் எல்லோருமே உமையாளை கடிந்து கொண்டனர் .

ஒரு இடத்தில் அடங்கி இருக்க மாட்டியா..?நாளை மறுநாள் திருமணம் ஞாபகம் இருக்குல்ல.. வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்கிறாய் ..அதற்கு தான் ஆட்கள் இருக்கிறார்களே என கௌரி கூட திட்டி விட்டார்.

ஆனால் உமையாளோ கண்கள் நீர் தளும்ப அத்தானோட ரூமை‌ கடைசியா ஒரு முறை சுத்தம் செய்ய அனுமதி கொடுங்க அத்தை.
நாளை மறுநாள் முதல் நான் வேறொருவர் மனைவி அதன் பிறகு இப்படி உரிமையாய் வந்து செய்ய முடியுமா..?

எப்படியோ ஆக வேண்டிய என் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி என் பாதையில் விளக்கேற்றி வைத்தவர் அவருக்கு என்னால் முடிந்த சிறு காணிக்கை இதை தடுக்காதீங்க.

இந்த வீட்டில் நீங்க வெறுத்த பொழுதும் கூட என் மீது பாசம் காண்பித்தவர், என்னுடன் துணை நின்றவர்..என்னை படிக்க வைத்து அழகு பார்த்தவர்..அப்படிபட்டவர் வாழும் இந்த வீடு எனக்கு கோவில்..அவர் தங்கும் அறை உங்களுக்கு எப்படின்னு தெரியலை எனக்கு கோவில் கற்பகிரகம் என உணர்ச்சி தளும்ப பேசவும் கௌரியால் எதுவுமே சொல்ல முடியவில்லை.

அதன்பிறகு யாருமே உமையாளை தடையும் செய்யவில்லை.

அறை முழுவதையும் துடைத்து தூசு தட்டி பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து திருப்திபடுத்திக்கொண்டவள் கடைசியாக அவனது வாட்ரோப்பை சுத்தம் செய்யலாம் என்று நினைத்தாள்.

ஒருமுறை கதிரின் கலைந்த துணிகளை மடிக்கலாம் என பிரோவைத் திறந்த பொழுது , உள்ளே வந்தவன் கோபமாக இதையெல்லாம் உன்னையாரு செய்யச்சொன்னது..என் வேலையை நான் பார்த்துக் கொள்வேன் இனியொரு முறை அறைக்குள் வந்து பிரோவைத் திறந்தால் நான் மனிதனாக இருக்க மாட்டேன் என்று சத்தமாக பேசி அறையை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறான்.

அதன் பிறகு பிரோவை திறந்து துணிகளை மட்டும் அடுக்கி கொடுத்ததில்லை மீதி எல்லா வேலைகளையும் செய்வாள்.

இன்று தான் கடைசி முறை என்பதால் தன்னை எதுவும் சொல்ல மாட்டான் என நினைத்து கலைந்த துணிகளை எல்லாம் கட்டில் மேல் தூக்கிப் போட்டு அழகாக மடித்து அடுத்த தொடங்கினாள்.

ஒவ்வொரு அடுக்கையும் சுத்தம் செய்து வந்தவள் கடைசி அடுக்கில் இருந்து துணிகளை அள்ளிப் போடும் பொழுது அதன் உள்ளே இருந்து ஒரு டைரி வெளியே விழுந்தது எடுத்துப் பார்க்க அது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பதாக இருந்தது அத்தானுக்கு டைரி எழுதற பழக்கம் இருக்கா என்ன..? ஆச்சர்யமாக திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது.

எத்தனை முறை சொல்லி இருக்கேன் என் கபோர்டை திறக்காதன்னு என கதிரின் குரல் கோபமாக ஓலிக்க அதை விட கோபமாக அவனைப் பார்த்து முறைத்தவள் டைரியுடன் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

உமையாள் நில்லு சொன்னா கேளு முதல்ல அதை என்கிட்ட கொடுத்துட்டு போ அடுத்தவங்க டைரியை படிக்கிறது நல்ல பழக்கம் கிடையாது என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தான் எதற்கும் மதிப்பு கொடுக்காதவள்.

மேற்க்கொண்டு ஏதாவது பேசினீங்க இதை எல்லார்கிட்டயும் படிக்க கொடுத்துடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றவள்.

அதன் பிறகு அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை சரியாக இரண்டு நாட்கள் கழித்து இதோ அவனது அறையில் புதுமணப் பெண்ணாய் முதலிரவை அவனுடன் சேர்ந்து கொண்டாட கட்டிலில் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

கையில் மீண்டும் அதே டைரி அன்று கோபமாக படித்தவள் இன்று நிதானமாக புன்னகையுடன் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த இரண்டு நாட்களில் எத்தனை முறை படித்திருப்பாள் என்று கேட்டால் அவளுக்கே சொல்லத் தெரியாது அந்த அளவிற்கு படித்திருக்கிறாள்,படித்த பிறகு அழுத்திருக்கிறாள்,அதன் டைரிக்கு முத்தமிட்டிருக்கிறாள், தலையணை போல தலையில் வைத்து தூங்கிருக்கிறாள்.ழ

இதோ இப்பொழுது ஒருமுறை படித்தாகிவிட்டது..கீழே வைக்க மனமின்றி..நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் இதை முதல்முதலில் படித்ததை நினைவு கூட்ந்தாள்.

டைரியின் முதல் பக்கத்தில் வெளிர்மஞ்சள் புடவை அணிந்தபடி உமையாளின் உருவம் வரையப்பட்டிருந்தது.

யோசனையுடன் அடுத்த பக்கத்தை திருப்ப…கனவில் வந்த தேவதை இன்று முதல் என் வீட்டில் வாசம் செய்கிறாள் என எழுதியிருந்தான்.

எதுவும் புரிய வில்லை குழப்பத்துடனே மீண்டும் அடுத்த பக்கத்தை திருப்பினாள்.

என்னை விட ஏன் இவ்வளவு சிறு பெண்ணாக பிறந்தாய்.. உன்னை நோக்கி வரும் என் மனதை கடினப்பட்டு இழுத்து பிடிக்கிறேன் முடியாமல் மீண்டும் உன் பக்கமே திரும்புகிறது என்ன மாயம் செய்தாய் என எழுதியிருந்தான்.

அதுமட்டுமின்றி அவளது வாழ்க்கையில் என்னென்ன நடந்திருந்தது என்பதை எல்லாம் எழுதியிருந்தான் அதை படிக்க படிக்கத்தான் அவளுக்கு அவளைப் பற்றி புரியத் தொடங்கியது.

தனக்கு நேர்ந்து கொடுமை தான் சில காலம் புத்திபேதலித்து இருந்தது எல்லாவற்றையுமே அவன் மிகவும் வேதனையுடன் எழுதுகிறான்.

கூடவே அவனுடைய காதலையும் எழுதி இருந்தான்.

நீ எனக்கானவள் என்பதை ஏன் இவ்வளவு காலதாமதமாக எனது கனவில் வந்து தெரியப்படுத்தினாய்..?

நீ முன்பே தெரியப்படுத்தியிருந்தால் நான் உன்னை தேடி வந்திருப்பேன் உனக்காக நடந்த கொடுமைகள் எதையும் நடக்க விட்டிருக்க மாட்டேன் ஆனாலும் பரவாயில்லை இப்பொழுது உன்னை காத்து விட்டேன் இனி எப்பொழுதுமே கண்ணின் இமை போல காப்பேன் இன்று மட்டுமல்ல என்றுமே.

நீயும் நானும் சேர வேண்டும் என்பது விதி அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளும் முன்பே என் கனவில் வந்து ஞாபகப்படுத்தி இருக்கிறாய் நீ மட்டும் வராமல் இருந்திருந்தால் உன் முகத்தை நான் எந்த பெண்ணிடத்தில் தேடி இருக்க மாட்டேன்.

தேடித்தேடி தோற்றுப் போனதால் தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவும் ஒத்துக் கொண்டேன் இப்பொழுது நீ வந்த பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கெதற்கு..?
எனதன்பை புரிந்து கொண்டு எனை ஏற்பது எப்பொழுது..?

இப்படி பல எழுதி வைத்திருந்தான்.. வார்த்தை மட்டும் தான் வேறுவேறு.. பொருள் ஒன்றே ஒன்று தான்..அது கதிர் உமையாளை உயிருக்கு உயிராய் காதலிப்பது.

இத்தனை காதலை மனதிற்குள் வைத்துக்கொண்டு எப்படி இயல்பாய் இவ்வளவு நாட்கள் உமையாளுடன் பழக முடிந்தது..அவன் வாய் திறந்து சொன்னால் மட்டுமே தெரியவரும்.

படித்த முடித்த பிறகு உமையாளுக்கு புரிந்த விஷயம் நான் இங்கு வருவதற்கு முன்பே கதிரின் கனவில் வந்திருக்கிறேன்.

நேரில் வந்த பிறகு தன்னை காதலிக்க தொடங்கி இருக்கிறான் ஆனால் அதை இன்று வரை எந்த சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்டவில்லை எதனால் அப்படி..?
இதுவும் கதிர் வாயைத் திறந்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியவில்லை.

இதையெல்லாம் படித்தபிறகு உமையாளால் எப்படி வெறோருவரை மணம் செய்ய முடியும்.

கதிர் கெஞ்சியும் கூட டைரியை அவளுடனே எடுத்துச் சென்றவள்.
நேராக கௌரியின் முன் வந்து நின்றாள் .

அப்பொழுது நிவேதாவும் அங்கேதான் இருந்தால் உமையாளின் திருமணத்திற்கு எந்த மாதிரியான ஆடை அணிகலன்கள் தேர்வு செய்யலாம் என இருவருமே கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.

உமையாளைப் பார்த்ததும் இருவருமே புன்னகையுடன் உமையா நாங்க இந்த புடவையை தான் அணியலாம்னு இருக்கோம் நல்லா இருக்கா என இருவரும் ஒரு போல கேட்டனர்.

ம்ம் ..என தலையசைத்துக் கொண்டவள்..கௌரியை பார்த்து அத்தை என்னை உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டாள்.

ஏன் இப்படி கேட்கிறாள் என்று புரியாமல் பார்த்த கௌரி என்ன உமையாள் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்..?

பிடிக்குமா இல்லையா அதை மட்டும் சொல்லுங்க..?

பிடிக்கும் உமையாள்.

எந்த அளவுக்கு பிடிக்கும்.

என்ன கேள்வி இது..? கதிரை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவிற்கு உன்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என் அம்மாவை உங்களுக்கு பிடிக்காது தானே.. அப்புறம் எப்படி என்னை உங்கனுக்கு பிடிக்கும் என்று மடக்கினாள்.

அதெல்லாம் பழைய கதை இன்னிக்கு நானும் உன் அம்மாவும் எவ்வளவு க்ளோசா இருக்கிறோம் நீ பாத்துட்டு தானே இருக்க அதுக்கு அப்புறம் ஏன் உனக்கு இந்த மாதிரியான சந்தேகம்..?

ம்ம் ..சரி நான் உங்களுக்கு யாரு..?

என்ன ஆச்சி உனக்கு சலித்துக் கொண்டார்.

இல்ல..சொல்லியே ஆகனும் நான் உங்களுக்கு யாரு..?

என் நாத்தனார் பொண்ணு..பொறுமை காற்றில் பறக்க ஆரம்பித்தது கௌரிக்கு.

நான் கடந்து ஐந்து வருஷமா இங்க தான் இருக்கேன்..ஏன் உங்களுக்கு என்னை‌ மருமகளா எடுத்துக்கணும்னு தோணல என்று கேட்கவும் கௌரி அதிர்ந்தாரோ இல்லையோ நிவேதா அதிர்ந்து எழுந்து விட்டாள்.இவள் என்ன கூற வருகிறாள் என்பது போல

உமையாள் என்ன பேச்சி இது.. கேட்கும்போதே நிவேதாவின் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.

ஆனால் உமையாள் நிவேதாவை பார்த்து அக்கா ப்ளீஸ் தயவு செஞ்சு கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என கூறிவிட்டு இந்த பக்கமாக பார்த்தவள்.

நான் ஒருத்தி வீட்ல இருக்கும்போது அத்தானுக்கு எதுக்காக வெளியே பெண் பார்த்தீங்க என்று கேட்க பதில் சொல்ல முடியவில்லை கௌரியால்.

சரி நான் இங்க இருக்கும்போது எனக்கேன் அத்தானை பேசி முடிக்காம ஏன் வெளிய மாப்பிள்ளை பார்த்தீங்க.

ஏய்..நீ தானே..என்றவர் பேசாமல் தவிப்புடன் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த கதிரை பார்த்தார்.

பிறகு டேய் கதிர் என்ன நடக்குது இங்க.. இவ பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கா நீ என்னடான்னா தள்ளி நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க என்னடா நடந்துட்டு இருக்கு என்று சத்தமாகவே கேட்டார்.

அம்மா அவ பேசறதை காதுல போட்டுக்காதீங்க நீங்க கல்யாண வேலைகளை பாருங்க என்றவன்..நிவேதாவை பார்த்து அவ ஏதோ டிஸ்டர்ப்ல இருக்கா நீ கண்டுக்காத என்று சொல்லவும் சற்று அமைதியானாள்.

பிறகு உமையாலை பிடித்து தன் பக்கமாக திருப்பி என்ன ஆச்சு உனக்கு..பைத்தியம் பிடிச்சிடுச்சா..நல்லா தான் இருந்த.. திடீர்னு ஏன் கண்டதை பேசி எல்லாரையும் குழப்பற.

நாளை மறுநாள் உனக்கு டாக்டர் கிஷோரோட திருமணம் நினைவு இருக்குல்ல சற்று அழுத்தியே சொன்னான்.

பைத்தியம் என்ற வார்த்தை உமையாளை அசைத்துப் பார்த்தது.
அந்த வார்த்தையை கதிரின் வாயிலிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை.

எத்தனையோ பேர் அவளை பல நேரங்களில் அழைத்தது தான் அப்பொழுதெல்லாம் வலிக்கவில்லை கதிர் சொல்லவும் வலித்தது மிகமிக கடுமையாக வலித்தது.

கண்களில் குளம் கட்ட
கதிரைப் பார்த்து ஆமாம் அத்தான் ஞாபகம் இருக்கு எனக்கு நாளை மறுநாள் கல்யாணம் தான் ஆனா அந்த கல்யாணம் கிஷோரோட இல்ல உங்களோட.

பைத்தியமான்னு கேட்டீங்க இல்ல ஆமா பைத்தியம் தான் இந்த டைரியை படிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் நான் பைத்தியமா தான் இருந்தேன் .

எப்போ இதை படிச்சேனோ அப்பவே என் பைத்தியம் எல்லாம் காணாம போயிடுச்சு.

நான் இங்கே வருவதற்கு முன்னாடியே என்னை கனவுல பார்த்து காதலிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க ஆனா இப்போ வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்ல.

இப்போ நானும் இதை வெளிய சொல்லாம மௌனமா போயிட்டேனா உங்களுக்கு எவ்வளவு பெரிய அநியாயம் அது.

உங்களுக்கு என் உணர்வுகள் புரியலையா..?யார் என் பக்கத்துல வந்தாலும் பயப்படறேன், கோர்வையா நாலு வார்த்தை பேச முடியல, சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபப்படுறேன், மத்தவங்கள அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக தெரியல.

ஆனா உங்க கிட்ட பேசும் போதோ, பழகும் போதோ இது எதுவுமே தோணறது இல்லை, உங்க பக்கத்துல மட்டும் தான் என்னால பயம் இல்லாம பேச முடியுது.

அப்போவே நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா என் மனசுலயும் நீங்கதான் இருக்கீங்கன்னு நான் புத்தி சரியில்லாத போதே என்னை அறியாமல் என் மனசுக்குள்ள வந்துட்டீங்க அதனாலதான் என்னால இத்தனை வருஷம் இந்த வீட்டுக்குள்ள உங்க கிட்ட இயல்பா இருக்க முடியுது.

கிஷோர் எனக்கானவர் இல்லை. அவர் ஒரு டாக்டர் நான் ஒரு பேஷண்ட் அதைத் தாண்டி எங்களுக்குள்ள வேற எதுவும் வராது அதை என்னால உறுதியா சொல்ல முடியும்.

அவர் டாக்டர் என்பதை தாண்டி எப்போ என் பக்கத்துல வந்தாலும் ஷ்யாம்கிட்ட நான் எப்படி நடந்துக்கிட்டேனோ அதே போல்தான் கிஷோர் கிட்டேயும் நடந்துப்பேன் .

உங்களையும் ஏமாத்திக்கிட்டு என்னையும் ஏமாத்திக்கிட்டு ஏன் ரெண்டு பேர் வாழ்க்கையையும் அழிச்சுக்கனும் எனக்கேட்டவள் நேராக நிவேதாவிடம் சென்று கையெடுத்து கும்பிட்ட படி அக்கா இப்போ நான் பேசுனதை வைத்து உங்களால ஓரளவுக்கு யூகித்திருக்க முடியும்.

இருந்தாலும் மறுபடியும் ஒருமுறை உங்க கிட்ட சொல்றேன் அத்தான் உங்களை என்னைக்குமே காதலிக்கல அக்கா.

இனிமேலும் அவரால உங்களை காதலிக்கவும் முடியாது.. அவரோட காதல் என்கிட்ட மட்டும் தான் ப்ளீஸ் அக்கா அவரை எனக்கு கொடுத்துடுங்க நீங்க அழகா இருக்கீங்க படிச்சு இருக்கீங்க பணக்காரங்க வேற கண்டிப்பா உங்களுக்கான ஒருத்தர் வருவாருக்கா..நான் ஏழை..இதுல பைத்தியம் வேற.. மேற்கொண்டு பேசாமல் அழுதவள் ப்ளீஸ் என்று அவள் கைப்பிடித்து கெஞ்ச ஆரம்பித்தாள்.

நிவேதா என்ன செய்வது என்று தெரியாமல் கதிரையும் உமையாளையும் மாறி மாறி பார்த்தவள் அங்கிருந்து டைரியை எடுத்து முதல் பக்கத்தை மட்டும் திருப்பி பார்த்தாள்.

உடனே புரிந்து விட்டது கதிரின் மனதில் தான் இல்லை அதனால் தான் முதல் தடவை நான் போகிறேன் என்று சொல்லும் பொழுது விட்டுவிட்டார்.

இப்பொழுது மீண்டும் வந்த பொழுது காதலாக தன்னை எடுத்துக் கொள்ளவில்லை பரிதாபப்பட்டு ஏற்றுக்கொண்டிருக்கிறார் .

பரிதாபம் எத்தனை நாளைக்கு வாழ்க்கைக்கு கூட வரும் என உணர்ந்தவள் .

அங்கேயே அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு கதறி கதறி அழுதாள்.

யாராலும் அவளகில் செல்ல முடியவில்லை.ஆறுதலும் கூற முடியவில்லை.. மனம் கேட்காமல் சென்ற கௌரியை பார்த்து ப்ளீஸ் என்னை கொஞ்ச நேரம் அழ மட்டுமாவது விடுங்க எனக்கெஞ்சவும் நகர்ந்து விட்டார்.

ஒருபக்கம் உமையாள் அழுதுகொண்டே பார்வையால் கதிரை கெஞ்சிக் கொண்டிருக்க அவனாள் அவளைத்தாண்டி நிவேதாவிடம் செல்ல முடியவில்லை.

சத்தம் கேட்டு அங்கு வந்த வள்ளி ரத்தினம் கெளரிடம் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சியில் கதிரையும் உமையாளையும் மாறி மாறி பார்த்தனர்.

நிவேதாவே அழுகையும் கதறலும் அவர்களை காயப்படுத்தினாலும் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் கதிர் இருப்பதால் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

சற்று நேரம் வரை அழுது கலைத்த நிவேதா கண்களை அழுத்த துடித்துக் கொண்டு கதிரையும் உமையாளையும் பார்க்க அவர்கள் பார்வை இரண்டும் பின்னிக்கொண்டு செய்வது அறியாது தவிப்பதைக் கண்டவுடன் புரிந்து விட்டது.

இதற்கு பிறகு இவங்களை பிரிக்க நினைப்பது முட்டாள்தனம்.. விட்டுச் சென்றவளின் மனம் நோகக்கூடாது என்பதற்காக மீண்டும் அவளை சேர்த்துக்கொண்ட அந்த மனதிற்காகவாவது
அவனது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்.

இவர்களுக்கு நடுவே நான் குறுக்கே இருந்து முட்டுக்கட்டை போடக்கூடாது..என தீர்க்கமான முடிவை எடுத்தவள் கதிரை நோக்கி நடந்தாள்.
 
Top