எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 07

admin

Administrator
Staff member

மைனரு மனசுல மச்சினி 07​

இரவில் நேரம் கடந்தே தூங்கியதால் சோழா அந்த பெஞ்சில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். காலை மணி நான்கு ஆகியது.​

பெண்கள் அதற்கு முன்னே எழுந்து, ஆண்கள் சாம்பல் அள்ளிட சுடுகாட்டிற்கு செல்வதற்கு முன் படையல் போட தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர்.​

நித்யா"அத்த! அவ மட்டும் சொகுசா தூங்குறா, என்னைய மட்டும் எழுப்பி விட்ட" எனத் தூக்கத்திலே புலம்பினாள்.​

"அவ என்ன இந்த வீட்டு மருமகளாடி, நாளைக்கே ஓடிப்போறவ, ஆனா நீ அப்படியா.? இந்த வீட்டுக்கு நிரந்தரமா மருமகளா ஆகப் போறவ, போய் பானைக்கு தண்ணீ கொண்டாந்து ஊத்து, பாயாசத்துக்கு எல்லாம் ரெடிப் பண்ணனும்" என அதட்டினார்.​

அவர்களின் வேலைகள் தொடர, லெட்சுமி நித்யாவிடம்"அடியேய்! போ, போய் அத்தானை எழுப்பி விடு, ஊர்காரவங்க வந்துடுவாங்க, அவனும் எழுந்திரிச்சு கிளம்பட்டும்" என்றார்.​

"சரி அத்த!" என எழுந்து வாசலிற்குச் சென்றாள்.​

சோழா ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருக்க, அவன் முன் சென்ற நித்யா அசந்து தூங்கும் அத்தானை எழுப்ப மனமில்லாமல் அவனை ரசித்தப்படியே நின்றாள்.​

"அச்சோ பாவம்! அத்தான் இப்டி தூங்குறாரு எழுப்ப மனசே வரலையே, அவ மட்டும் மெத்தையில படுத்துகிட்டு அத்தானை வெளியில் அனுப்பிட்டாளே! பெரிய அழகினு நெனப்பு, என் அத்தான் அப்படியே மயங்கிடுவாருனு கற்பனைப் பண்ணிட்டா போல, இருக்கட்டும்" என வெட்கப்பட்டு சிரித்தப்படியே அவனையே பார்த்து ரசித்தாள்.​

படாரென்று ஏதோ அவள் மேல் நீர்துளிகள் விழுந்த நேரம், சோழா அரக்க பறக்க எழுந்தமர்ந்தான்.​

அவன் உடல் முழுவதும் நீரால் நனைந்திருக்க, எதிரில் நின்ற நித்யாவை முறைத்து"ஏய்! அறிவிருக்கா உனக்கு, எதுக்கு தண்ணியை ஊத்தின.?" எனக் கத்தினான்.​

"அத்தான்! நான் இல்ல" எனச் சுற்றிப் பார்க்க, நக்கலாக சிரித்தப்படி கவி வாளியுடன் நின்றுக் கொண்டு இருந்தாள்.​

"அவ தான் அத்தான்!" என நித்யா கை நீட்ட, திரும்பியவனை அலட்சியமாக பார்த்தாள் கவி.​

சோழா அவளை முறைக்க, நித்யா"ஏய்! எதுக்குடி அத்தான் மேல தண்ணீ ஊத்தின.? இப்டியா அசந்து தூங்குறவரை எழுப்புவாங்க" எனக் கேட்டாள்.​

"ஓ! டி போட்டு பேசுற அளவுக்கு தைரியம் வந்துட்டா, எழுப்ப வந்தா மரியாதையா எழுப்பிட்டுப் போகனும், அது என்ன பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பாக்குறது மாதிரி பாத்துட்டு நிக்கிற, அப்புறம் எழுப்ப வரேன், குளிப்பாட்ட வரேன், ஊட்ட வரேனு அத்தான் பொத்தானு பக்கத்தில் வரக்கூடாது, ஏனா! ஆறு மாசத்துக்கு இது என் ப்ராப்பர்டி, என் பர்மிசன் இல்லாம சீண்ட கூடாது, என் கிட்ட வந்துச் சொல்லு இந்தா இப்டி எழுப்பி விடுறேன்.இப்ப தான் நின்னு ரசிக்கிறா இவன் பெரிய மைனருனு. இவனும் இப்டி தான் ஏமாத்திட்டு ஊர் சுத்துறான் போல" என வாளியைத் தூக்கி எறிந்தவள், பாயாசம் காய்ச்சும் இடத்திற்குச் சென்றாள்.​

நித்யா அழுதுக் கொண்டே"பாருங்க அத்தான்! எப்டி பேசிட்டுப் போறானு" எனக் கண்களைக் கசக்கினாள்.​

"அவ கிட்ட பேச்சைக் குறைச்சுக்கோ" என எழுந்துத் தலையை உதறி தட்டியப் படி நடந்து பின் பக்கம் சென்றான்.​

அவன் மனதில் கவி பேசியது லேசான சிரிப்பை வரவைத்திருந்தது.​

நித்யாவின் ஆத்திரம் அடங்காமல்"அத்த!" என அங்கு ஓடினாள்.​

அதற்குள் கவி பாயசம் காய்ச்சும் இடத்தில் இருந்த ஒரு பெண்மணியிடம்​

"சித்தி! வேலை எல்லாம் முடிஞ்சுட்டா" எனக் கேட்டப்படி அமர்ந்தாள்.​

லெட்சுமி"இவளை யாரு கூப்புட்டா" எனப் புலம்பியப்படி முறைத்தார்.​

"வா கவி! இந்தா முடியப் போகுது, உப்பு நிறையா போயிட்டுப் போல, இப்ப வர வெல்லம் உப்புச் சாந்து இருக்கு, இப்ப என்னத்த போட்டு கொறைக்குறதுனு தெரியல, இது பச்சப்பயறு பாயாசம் வேற" என்றார் சித்தி.​

"அதுக்கு என்னா சித்தி, தேங்காயும், ரவா வறுத்து வெந்நீர்ல கலந்துப் போட்டா போது, உப்பு குறையும்" என்றாள்.​

"அப்படியா!" எனக் கேட்டார் அவர்.​

"ம்ம்ம்!"​

"ஏய்! மாலா அவ சொல்றானு நீ பாட்டுக்கும் எதையும் போட்டுடாத, எம் புள்ளை கிட்ட கேட்டுச் சொல்றேன்" என்றார் லெட்சுமி.​

அந்த நேரம் சோழா பாத் ரூம் போக வர, நித்யாவும்"அத்த!" என ஓடிவந்தாள்.​

"இவ வேற இருடி, ஏன்பா தம்பி! பாயாசத்துல உப்பு..." எனத் தாய் ஆரம்பிக்க,​

"அதான் சொன்னாள, அதைப் போடுங்க" எனச் சட்டையைக் கழட்டியவன் உதறி கொடியில் போட்டுவிட்டு பாத் ரூமிற்குள் நுழைந்தான்.​

"இவன் என்னடி மழையில் நனைஞ்ச மாதிரி போறான். இவனுக்கு மட்டும் எங்க மழைப் பேஞ்ச்சு" என இழுத்தார் லெட்சுமி.​

"அத தான் சொல்ல வந்தேன், இவ..." என நித்யா நடந்ததைக் கூறி முடிக்க, "ஏன்டி! எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு, எம் புள்ள மேலயே தண்ணீ ஊத்துவீயா, பொம்பளைப் புள்ளைக்கு இவ்வளவு ஆகாதுடி, அடங்கிப் போ" என்றார்.​

கவி அவரைக் கண்டுக் கொள்ளாமல்,​

"சித்தி! அதான் நான் சொன்னது சரினு மைனரு சொல்லிட்டுப் போயிட்டாருல, அப்புறம் என்ன போடுங்க, எல்லாம் அவரு சொல்லி தந்தது தான், நாங்க ஒரே வீட்டில் இருந்தப்ப அவரு தான் எனக்கு பிரியாணி முதல் பீட்ஸா வரை சொல்லி தந்தார். ஆ! நித்யா நேத்துப் பொங்கல் வைக்கும் போதும் நீ கேட்டியே எப்டி தெரியுமுனு எல்லாம் உன் அத்தான் ட்ரைனிங் தான்மா, சந்தேகம்னா அத்தானுட்டயே கேளு, நான் போறேன்" என நக்கலாக கூறிவிட்டு எழுந்துச் சென்றாள்.​

பாத் ரூமிற்குள் இருந்த சோழாவிற்கு அனைத்தும் காதில் விழுந்தது.​

'படுத்துறாளே!' என எண்ணி அவன் வேலையை முடித்து வெளியில் வர,​

லெட்சுமி"டேய் நில்லுடா! உனக்கு ஊருல எவளுமே கெடைக்கலைனா இவளைப் புடிச்ச, போயும் போயும் இந்த ராட்சசியை கட்டிக்கிட்டு வந்தீயே பாவி! இப்ப பாரு எப்படி எல்லாம் பேசிட்டுப் போறானு. எல்லாம் என் தலையெழுத்து, என் உயிரை வாங்காம போக மாட்டா போல, சோழா! உன் அப்பனும் போயிட்டார், இந்தா கெழவனும் போயிட்டார். அடுத்து நான் மட்டும் தான் என்னையும் இந்த ஆறு மாசத்துல அனுப்பிடுவா போல" எனப் புலம்பினார்.​

சோழா எதுவுமே சொல்லாமல் அவரைக் கடந்துச் சென்றான்.​

அவனின் ஈர உடையை மாற்றிக் கொள்ள வேறு ஒன்றை எடுப்பதற்காக அறைக்குள் சென்றான்.​

கட்டிலில் அமர்ந்தப்படி ஃபோனில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தாள்.​

அவனின் சட்டையை எடுத்துக் கொண்டவன், கதவு வரைச் சென்று நிற்க, தாய் பேசியது நினைவில் ஓடியது.​

அவளைத் திரும்பி பார்த்துவிட்டுக் கதவை தாழிட்டவாறு, அவள் எதிரில் சென்றான்.​

அவனின் செய்கைகளை நிமிர்ந்துப் பார்க்கா விட்டாலும் அவள் உணர்ந்தாள்.​

"ஏய்!"​

கவி நிமிரவே இல்லை.​

"உன்னதான்டி!"​

"என்ன.?" என அலட்சியமாக கேட்டாள்.​

"என் அம்மா கிட்ட எந்தப் பேச்சும் வச்சுகாத, எதுவா இருந்தாலும் என்னோடு முடிச்சுக்கோ, சொல்லிட்டேன்"​

"ஏன் அப்டி.?"​

"அப்டி தான்!"​

"ஓ! நீங்க மட்டும் என் அப்பாவை வம்பிழுக்கலாம். உங்க அம்மா மட்டும் பொக்கிஷமா.? நல்லா கதையா இருக்கே. ஸி சோழா! இங்க என்னைய இருக்க வச்சது நீங்க, சோ! நான் இங்க இருந்தா இப்டி தான் இருப்பேன். புடிக்கலைனா இதோ இப்பவே கையெழுத்துப் போட்டுக் குடுங்க, நான் போயிட்டே இருக்கேன்."​

"ஏய்!" எனக் கோபத்தில் அவளின் கழுத்தில் கை வைத்தவன், அவள் முகத்தின் அருகே சென்றான்.​

"என்ன படம் காட்டுறீயாடி.? இப்டியே ஒரு அழுத்து அழுத்தினேன், நாளைக்கு உனக்கு பால் ஊத்தனும்."​

"நீயும் படம் காட்டுறீயாடா.? எங்க அழுத்துப் பாப்போம். உன்னை மாதிரி ஒருத்தனை காதலிச்சு, கட்டிகிட்டதுக்கு அது தான் சரியான தண்டனையா இருக்கும். அழுத்துடா! நான் பயப்புட மாட்டேன். சிரிச்சுட்டே இருப்பேன், ஐ லைக் திஸ் மைனரு!" எனச் சிரித்தாள்.​

அவளின் சிரிப்பிற்கும் முகத்திற்கும் தொடர்பே இல்லை, கண்களில் வெறுப்பு, இதழ்களில் அலட்சியம், முகத்தில் அனல் எரியும் கோபத்தின் பிரகாசம் ஆனால் சிரித்தாள்.​

நொடியில் ஷாக் அடித்ததுப் போல் கையை எடுத்தவன், "கவி!" என்றழைத்தான்.​

அதே சிரிப்புடன்"கவி! கவியே தான்" என்றாள்.​

சோழாவிற்கு ஏதோ வித்தியாசமாக தெரிய, ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டு​

"என் பொண்டாட்டியா மட்டும் இருப்பீயா.?" எனக் கேட்டான்.​

"ஓ எஸ்! சிக்ஸ் மன்த் ஒன்லி, பட் இப்பவும் நான் சீனிப்பொண்ணு" என்றாள்.​

அடுத்த நிமிடமே சோழா வெளியேறியிருந்தான்.​

*​

சுடுகாட்டிற்குச் சென்று பால் தெளித்து வந்துக் குளித்தனர் ஆண்கள்.​

சீனி, அரும்பு இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. சோழா மீது கொலைவெறியில் இருந்தார் சீனி.​

மதியம் விரதத்திற்குச் சமைக்க தேவையானவற்றை வீரமணி வாங்கி வந்தான். பந்தலின் ஒரமாக தான் சமையல் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆதலால் ஓரமாக படுதா விரித்து அதில் காய்கறி பைகளை வைத்தான். சோழாவும் அங்கு ஒரு பக்கம் நேற்றைய செலவுகளை ஒருவருடன் அமர்ந்துச் சரிப்பார்த்துக் கொண்டு இருந்தான்.​

அதை நித்யாவிடம் கொடுத்து, பில்லில் உள்ள அனைத்தும் இருக்கிறதா எனச் சரிபார்க்க சொல்ல, அங்கு வந்த கவி,​

"கொழுந்தனாரே! இப்ப நான் தான் இந்த வீட்டுக்கு மருமகள் பிளஸ் உங்க அண்ணி, சோ! இனி இந்த மாதிரி விசயத்தை எல்லாம் என் கிட்ட குடுங்க" என நித்யாவின் கையில் பிடுங்கினாள்.​

சோழா திரும்பி அவர்களைப் பார்க்க, வீரமணி"அதை நீங்க எனக்குச் சொல்ல வேணாம், நித்யா! நீயே பாரு" எனக் கவியின் கையில் இருந்து வாங்கிக் கொடுத்தான்.​

"அப்படி எல்லாம் நீங்கச் சொல்லக் கூடாது கொழுந்தனாரே! திஸ் இஸ் மை ரைட்ஸ். அண்டர்சேன்ட்!" என்றாள் நக்கலாக.​

"நீங்க இங்கிலிஷ்ல சொன்னாலும் எனக்குப் புரியும், பட் அந்த ரைட்ஸ் இந்த வீட்டுக்கு முறையா வரப் போற நித்யாவுக்கு தான், உங்களுக்கு இல்ல!"​

"ஓ! அதை நீங்க ஆறு மாசம் கழிச்சுப் பேசிக்கோங்க, இப்ப இந்த கவிக்கு ஃபுல் ரைட்ஸ்" என நித்யாவிடம் அதைப் புடுங்கினாள்.​

"உங்களுக்கு சொன்னா புரியாதா, என்ன பெரிய ரைட்ஸ் பத்திப் பேசுறீங்க, யாருக்குமே தெரியாம என் அண்ணன் கூட ஒரே வீட்டில் குடும்பம் நடத்தின சீப்பான பொண்ணு நீங்க, ஒரு தேர்டு ரேட் கேர்ள்" என வார்த்தைகளைத் தடிமனாக விட்டான்.​

அவன் பேசி முடித்த நேரம் கன்னத்தில் பளார் என அடியைத் தாங்கி திரும்பி பார்க்க, அங்கு சோழா நின்றுக் கொண்டு இருந்தான்.​

"அண்ணே!"​

"யாரு தேர்டு ரேட் கேர்ள்.? அவ இங்க இருக்க வரை என் பொண்டாட்டி, அதுக்கு தகுந்த மரியாதைக் குடு, புரியுதா.?"​

"ம்ம்ம்! ஆனா நீ மாறிட்ட அண்ணே" எனக் கவியைப் பார்த்து பிறகு சோழாவைப் பார்த்தான்.​

நித்யா அதற்குள் ஓடிப்போய் லெட்சுமியை கூட்டிட்டு வர, அவர் வந்து​

"இவளுக்காக சொந்த தம்பியை அடிப்பீயா.? அப்ப என்னையும் அடிப்பீயாடா?" எனக் கத்தினார்.​

"அம்மா புரியாம பேசாத, நீ உள்ள போ" என்றான் சோழா.​

"அது எப்படிடா, இவ ராஜ்ஜியம் தான் இங்க நடக்குமா.? அப்ப நாங்க எல்லாம் வெளியில் போகனுமா.? அதுக்கு தான் இவ திட்டம் போடுறா, நல்லா தெரியுது. நீயும் இவ கிட்ட மயங்கிட்டீயா சோழா.​

அய்யோ! சனியன் மாதிரி வீட்டுக்குள்ள வந்து, என்னை எம் புள்ளைங்களுக்கு சண்டையை மூட்டுறாளே" எனக் கத்தி ஒப்பாரி வைத்தார்.​

கவி, சோழாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, பில்லைத் தூக்கிப் போட்டு, வந்த வேலை முடிந்ததுப் போல் உள்ளே சென்றாள்.​

லெட்சுமி ஓய்ந்த பாடியில்லை. சோழா வீட்டில் இருந்து வெளியேறினான்.​

*​

அவனிடம் நக்கலாக சிரித்தாலும், அறைக்குள் நுழைந்த நொடி முதல் கவி கண்களில் நீர் ஊற்றியது.​

'யார பாத்து தேர்டு ரேட் பொண்ணுனு சொன்னான், நானா.? ரெண்டுப் பேருமே மனசுக்குப் புடிச்சுக் காதலிச்சோம், கல்யாணம் பண்ணோம், ஒரே வீட்டில் வாழ்ந்தோம், அதுல நான் மட்டும் எப்டி தேர்டு ரேட் பொண்ணா ஆவேன்.​

அவன் அண்ணன் தானே என்னைய காதலிச்சுக் கல்யாணம் பண்ணது சொத்துக்காகனு சொன்னான், அப்ப யாரு தேர்டு ரேட்.? நான் எப்படி.?' என வீரமணிப் பேசியதை நினைத்து நினைத்து அழுதாள்.​

சோழா வீட்டை விட்டுச் சென்று திரும்பவே இல்லை, தாத்தாவிற்கு அவன் கொள்ளி வைத்ததால், அவன் தான் வந்து விரதம் செய்ய வேண்டும் என்று வந்த பங்காளிகள் காத்திருக்க, சின்னமணி அண்ணனுக்கு ஃபோன் செய்தான்.​

சிறிது நேரத்திலே வீட்டிற்கு வந்தவன், அனைவருடனும் சேர்ந்து விரதத்தை முடித்துக் கொண்டு வீரமணியைத் தேடினான்.​

லெட்சுமி மகனிடம் முகம் கொடுக்காமல் அதை தூக்கி வைத்தவாறு அமர்ந்திருந்தார்.​

சின்னமணியிடம்"வீரா சாப்புட்டானா.?" என்க, "இல்லண்ணே! வீரா அண்ணே, அதோ அங்க உட்காந்திருக்கு" என சோழாவிடம் கூறினான்.​

வீட்டின் பக்கவாட்டில் ஒரு நாற்காலியில் தனியாக அமர்ந்திருந்தவன் அருகில் சென்ற சோழா,​

"வீரா! போய் சாப்புடு" என்றான்.​

"எனக்கு வேணாம்!"​

"வீரா! போய் சாப்புடு, வீம்பு பண்ணாத"​

"அவங்களுக்காக என்னைய அடிச்சல, நேத்து நீ கண்ணைக் காட்டினனு தான் அந்த கத்தி அருவாளை கையில் எடுத்தேன். இல்லைனா அவங்க குத்திட்டுச் சாவுறதில் எனக்கு என்ன வந்துச்சு" என்றான் கடுப்பாக.​

"வீரா!" எனக் கோபமானவன், பொறுமையடைந்து"நீ பேசின வார்த்தைத் தப்புடா" என்றான்.​

"அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன், அதானே உண்மை, அவங்க தேர்..." என ஆரம்பிக்கப் போனவனைத் தடுத்த சோழா, "வீரா! நிறுத்து, அவ தேர்டு ரேட்னா அப்ப நான் யாருடா.? அவளைக் காதலிக்கிறேனு அவ பின்னாடி சுத்தனது நான், என்னைக் காதலிக்க வச்சு கல்யாணம் பண்ண கன்வின்ஸ் பண்ணது நான், ரெண்டுப் பேரும் சேந்து தான் கல்யாணம் பண்ணோம், ஒரே வீட்டில் வாழ்ந்தோம் அப்படியிருக்க, அவளுக்கு மட்டும் ஏன்டா அந்தப் பட்டத்தைக் குடுத்த, உன் கணக்குப்படி பார்த்தால் நானும் தேர்டு ரேட் ஆளு தான்டா"​

"அண்ணே! நீ ஒன்னும் அவங்களைக் காதலிக்கல, காதலிக்கிற மாதிரி ஏமாத்திக் கல்யாணம் பண்ண, நம்ம அப்பா சொத்துக்காக, அவங்க அப்பா அந்தாளு சீனி நம்ம தாத்தா கிட்ட கையெழுத்து வாங்கிட்டு அப்பா இடத்தை ஏமாத்தினாரு, அவரு பொண்ணு உங்கக் கிட்ட ஏமாந்தாங்க, பழிக்குப் பழி முடிஞ்சுட்டு, அவங்கள எதுக்கு நீ ஆறு மாசம் இருக்க வச்ச, அந்த இடத்துக்கு கையெழுத்தை வாங்கிட்டு, டைவர்ஸ்ல பேப்பர்ல கையெழுத்துப் போட்டு அனுப்பி விடு,​

அவங்க வந்ததில் இருந்து வீட்டுல அம்மா, நித்யா, என் கிட்டனு வரிசையா வம்பு பண்றாங்க, ஏன் உன் மேல காலையில தண்ணீ ஊத்தல. அடுத்து சின்னமணி, இப்டியே தினமும் அவங்க கூட போராட முடியாது அண்ணே!" என வேகமாக பேசி முடித்தான்.​

சோழாவிற்குத் தம்பியின் பேச்சில் ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மறுபக்கம் கவியின் இந்த நிலைக்குத் தான் மட்டுமே முக்கிய காரணம் என தன்னிலை சுய அறிவைப் பெற்றான்.​

"வீரா! நீ நெனைக்கிற மாதிரி இல்ல, எங்களுக்குள்ள நடக்குறது உனக்கு முழுசா தெரியாது, நீ சொன்ன முழு தேர்ட் ரேட் நான் மட்டும் தான். உனக்கு இப்ப நான் சொல்லி புரிய வைக்க முடியாது, கொஞ்சம் பொறுமையா இருடா" என்றான் தம்பியிடம்.​

"நீ செய்றது எதுவுமே புரியல, அவங்களை எதுக்கு கல்யாணம் பண்ணியோ அதை செஞ்சுட்டு அனுப்பி விடாம, வீட்டுக்குள்ள விட்டு இருக்க, அவங்களும் ரொம்ப ஆடுறாங்க, அம்மா மனசு வருத்தப்படுது, உனக்குப் புரியுதா.?" என அவன் குடும்பம், அம்மா என மட்டுமே யோசித்துப் பேசினான்.​

ஆழ்ந்த முச்சினை இழுத்து விட்டவன்,​

"டேய்! அவளை நான் மனசால காதலிச்சு கல்யாணம் பண்ணேன்டா, அப்ப அந்த இடம் எல்லாம் எனக்குப் பெருசாவே தெரியல, நீ நெனக்கிற மாதிரி கவி இப்படி பேசுற பொண்ணு இல்லை, இதுக்கு மேல உனக்கு நான் விளக்கம் தர முடியாது, இந்த ஜென்மத்துல பொண்டாட்டினா அவ மட்டும் தான்." என்றான் அழுத்தமாக.​

"அப்ப நித்யா.?"​

"நித்யா கிட்ட நான் எப்பவாச்சும் நெருங்கிப் பேசி நீ பாத்து இருக்கீயா.?"​

"இல்ல!"​

"அப்புறம், அவ மேல எனக்கு எந்த ஃபீலிங்ஸ் இல்லடா, அம்மா கிட்ட பல தடவைச் சொல்லிட்டேன். அவ மனசுல ஆசையை வளர்த்து விடாதனு"​

"அத நித்யா கிட்ட நீ நேராவே சொல்லி இருக்கலாம் அண்ணே!"​

"நித்யாவை நான் மைன்ட்டுக்கு கொண்டு வந்ததே இல்லடா, அப்புறம் அவ கிட்ட போய் என்னத்த சொல்ல.?"​

"நீ அவங்களை தான் இப்பவும் விரும்புறனா அப்புறம் என்னதுக்கு இந்த ஆறு மாசம் பேச்சு எல்லாம்.?" என விடாமல் கேட்டான்.​

"உனக்கு அது தேவையில்ல, நீ போய் சாப்புடு"​

"நீ எதும் தப்பு பண்றீயா அண்ணே!"​

"இல்லனு சொல்ல மாட்டேன், ஆனா அது உங்க யாரு வாழ்க்கையும் பாதிக்காது, நீ போய் சாப்புடு, இனிமே அவளைப் புடிக்கலைனா நீ பேசாம ஒதுங்கிடுடா, ப்ளீஸ்! எனக்காக"​

"ம்ம்ம்!" என எழுந்து வீரமணி வாசலை நோக்கிச் சென்றான்.​

அதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த நித்யாவால் அதை தாங்க முடியவில்லை.​

தன்னை ஒரு ஆளாக மைன்டில் வைக்காதவனைப் போய் இத்தனை நாள்கள் 'அத்தான்' என்று சுற்றினோம் என எண்ணி வேதனையுற்றாள்.​

நித்யா அழுதுக் கொண்டு இருக்க, அந்தப் பக்கம் போன வீரா அவளைக் கண்டுவிட்டான்.​

"நித்யா!"​

சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், கண்களில் நீருடன் உள்ளே ஓடிவிட்டாள்.​

ஏனோ வீராவிற்கு கஷ்டமாகிட, தலையைக் குலுக்கிவிட்டு நகர்ந்தான்.​

*​

சோழா பேசியதைக் கேட்ட மற்றொரு ஜீவன் கவி. சோழாவின் அறை அவர்கள் நின்றுப் பேசிய இடத்தின் அருகே தான் இருந்தது, கவி அறைக்குள் இருந்த பாத் ரூமிற்கு சென்ற போது தான் அனைத்தையும் கேட்டது.​

அவனின் பேச்சில் சற்றேக் குழம்பி தவித்தாள். 'உண்மையில் காதலித்துக் கல்யாணம் பண்ணானா.? அப்ப என்னைய கொடுமைப்படுத்தியது எல்லாம்' என யோசித்தப்படியே கட்டிலில் படுத்திருந்தாள்.​

சோழா, லெட்சுமியை சமாதானம் செய்து சாப்பிட வைத்துவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தான்.​

கவி, காலையில் இருந்து வெளியில் வரவில்லை என உறவினர் மூலம் அறிந்து தான் வந்தான்.​

அவன் வரும் சத்தம் கேட்டுக் கட்டிலில் கண்களை மூடிப் படுத்திருந்தவளைக் கண்டவன், அவளின் முகம் அழுது வீங்கிருந்ததைக் கவனித்தான்.​

மூடிய கண்களில் விழிகள் நகர்ந்திட, அவள் உறங்கவில்லை எனத் தெரிந்துக் கொண்டவன், "நீ தூங்கலைனு தெரியுது, போய் சாப்புடு" என்றான்.​

கண்களை விழித்தவள், "தேர்டு ரேட் பொண்ணு எல்லாம் நேரத்துக்கு சாப்புடனுமுனு அவசியம் இல்லை, உங்களுக்கு ஏன் கவலை.? போங்க! அதான் மொத்தமா என் வாழ்க்கையை அழிச்சுத் தொங்க விட்டீங்களே, இதுல சாப்பாடு ஒன்னு தான் கொறைச்சல்"​

சோழா எதுவும் பேசவில்லை, அவள் படுத்திருந்த கட்டிலின் மறுபக்கம் சென்று அமர்ந்தப்படியே பின்னால் சாய்ந்து, கண்களை இறுக மூடினான்.​

அவனின் செயலை அமைதியாக நோக்கியவள், கண்கள் மூடியிருந்த அவனைக் கண்டுப் புரியாமல் பார்த்தாள்.​

சிவமணி இறந்த பின் சோழாவின் கோபம் அவனை மிகுந்த வெறித்தனம் மிகுந்தவனாக மாற்றி இருந்தது உண்மை தான், அதன் தாக்கமே கவியிடம் நடந்த அனைத்தும். ஆனால் நாள்கள் ஆக அவனோட கோபம் குறையவில்லை, ஆனால் வெறி அடங்கியது, சீனிப் பெண் அவனின் மனைவி, காதலி எனப் புரிந்த போது அவன் கவிக்கு செய்த பாவம் அனைத்தும் வரிசைக் கட்டியது.​

கவியை மட்டும் யோசிக்கும் போது மனம் வலிக்கும், ஆனால் சீனிப்பெண் என்கிற போது கோபம் மட்டுமே மிஞ்சும் அதற்கிடையே அவனால் அவளிடம் நெருங்க முடியாத தூரத்தில் அவள் மனதில் இருந்து விரட்டப் பட்டிருந்தான்.​

தாத்தா இறப்பில் சீனியின் மகளைப் பற்றிய கல்யாணப் பேச்சில் லேசாக அடங்கிய அவன் மனம் மீண்டும் துளிர்த்தது. ஆதலால் தான் அனைவருக்கும் முன்னும் கவி அவன் மனைவி என போட்டுடைத்தான். ஆனால் இன்று, அடுத்து என்ன.? என்ற நிலையில் தவிக்க தொடங்கி இருக்கிறான்.​

கண்களை மூடிக் கொண்டே"நீ என் பொண்டாட்டி, எனக்கு மட்டும் தான் சொந்தம், அந்த சீனிக்குப் பொண்ணு இல்லைனு சொல்வீயா மச்சினி.?" எனக் கேட்டான்.​

அவனின் அந்தக் கேள்வியில் புருவத்தைச் சுளித்தவள், "ம்ம்ம்! ஆ..." என அடுத்து அவள் தொடரும் முன்னே அவளின் இதழோடு இதழ் பதித்திருந்தான் அவன்.​

அந்த தாக்குதலை எதிர்பார்க்காதவள், விழிகள் விரித்திட அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருந்தாள்.​

அவனோ கண்களை மூடியவாறு விழியோரத்தில் நீர் வழிய இதழ் முத்தத்தில் அவளிடம் ஆறுதல் தேடிக் கொண்டு இருந்தான்.​

அவனின் கண்ணீர், அவனின் தேடல் இரண்டையும் ஆச்சரியமாக, அதிர்ச்சியாக நோக்கியவள் புரியாத புதிராக அமைதியாகிட, அவனும் பழைய மைனராக நிதானத்தில் அவளிடம் முத்தத்தில் தஞ்சமானான்.​

அவனைத் தள்ளிவிட மூளை எச்சரித்தும் மனமோ அதைச் செய்யாமல் தடுக்க இரண்டின் போராட்டத்தில் கவி கண்களை மூடித் திறக்க, அவள் கண்களிலும் நீர் வெளியேறியது. ஆனால் உணர்வை மீட்டவள், பட்டென்று அவனை விலக்கிவிட்டு எழுந்து அறையை விட்டு வெளியேறினாள்.​

தொடரும்...​

 

Mathykarthy

Well-known member
கவி சூப்பர்... 👌
இன்னும் சோழாவையும் அவன் குடும்பத்தையும் வச்சு செய்....

வீரமணி 🤬🤬🤬 எதிரி குடும்பத்து பொண்ணுன்னா என்ன வேணாலும் பேசுவியா ஏமாத்துன உன் அண்ணனை கேளேன் இன்னும் கேவலமா... 😈
இவன் அம்மா, நித்யா க்கு வலிச்சா மட்டும் கஷ்டமா இருக்கா... 😡😡😡😡

சோழா பண்ணதெல்லாம் பண்ணிட்டு இப்போ குத்துதே குடையுதே ன்னு கஷ்டப்பட்டா... 😡
 

Shamugasree

Well-known member
Kavi ah love pannitha kalyanam senjana. Apram yen apdi nadanthukitan. Seeni ethum perusa senjutara avan appa irantha neram. Lakshmi over ah perusing.
 
Top