13
அட ச்சீ கையை கீழ இருக்கு அதான் ஃப்ரெண்ட்னு சொல்லிட்ட இல்ல அப்பறம் எதுக்கு இந்த டிராமா என்று கோபம் கொண்டவள்.
உண்மையிலேயே இனிமே நீ அர்ஜுன் பெயரை சொல்லி உன் வாழ்க்கையை கெடுக்க மாட்ட தானே..?
நிஜமா யாமினி இதுக்கப்புறம் அவன் எனக்கு தேவை இல்லை அர்ஜூன் என்னை விட்டுட்டு போய் ஏழு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு.. இந்த நாட்கள்ல நான் எவ்வளவோ கஷ்டம் அவமானம் பாத்துட்டேன், என் உடம்போட ஆரோக்கியம் முழுசா போயிடுச்சு, குழந்தை இறந்தே பிறந்து,அப்பா செத்து,அம்மா அடிமையா வீட்டு வேலை செஞ்சிகிட்டு .எல்லாமே பாழாய் போன இந்த காதலால தானே .இனிமே இந்த காதலும் வேணாம் காத்திருப்பும் வேணாம்
சரி நான் உன்னை முழுசா நம்புறேன்..
ஆனா என் நம்பிக்கையை நீ முழுசா பூர்த்தி செய்வியா என கேள்வி எழுப்பிய யாமினி சந்தேகத்துடன் தோழியை பார்த்தாள்.
புரியுது யாமினி உன் சந்தேகம் நியாயமானது பலமுறை உன்னை நான் உதவிக்கு அழைச்சிட்டு காரியம் முடிந்ததும் ஊதாசீனப்படுத்தி அனுப்பிடுவேன்..
இந்த முறையும் அதேபோல நான் நடந்துப்பேனோன்னு நீ சந்தேகப்படுறது ரொம்ப சரிதான்.. இப்பவே உனக்கு நான் புரிய வைக்கிறேன் என்று அவளது மொபைல் ஃபோனை எடுத்தவள் அர்ஜுன் நம்பருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்.
அர்ஜுன் நான் வேதவல்லி.. ப்ளீஸ் இதை முழுசா கேட்டிடு..அதன் பிறகு என்னவோ பண்ணிக்கோ..என்றவன் நிதானமாக அர்ஜூ…சாரி மிஸ்டர் அர்ஜூன்
கண்டிப்பா உன்னை டிஸ்டர்ப் பண்றதுக்காக இந்த வாய்ஸ் மெசேஜ் அனுப்பல.. அதே சமயம் உன் நம்பரையும் பயந்து நீ மாற்ற வேண்டிய அவசியம் இனி இருக்காது.
அர்ஜூன் நீ என்னை விட்டுட்டு போனே நாளில் இருந்து இப்போ வரைக்கும் நான் ஒரு நாள் கூட நிம்மதியா இருந்தது இல்லை.
உன் காதலை மட்டுமே வச்சுக்கிட்டு காத்திருந்த எனக்கு ஏமாற்றத்தை மட்டும் நீ குடுக்கல..
நிறைய இழப்புகளையும் குடுத்துட்ட
இனி என்னைக்குமே எனக்காக நீ செலவு பண்ற தேவைகள் இருக்காது.
எப்படியும் நீ வருவன்னு பைத்தியக்காரி மாதிரி இவ்வளவு நாள் உன் வீட்டில் தங்கியிருந்தேன்.. நீ ஆர்ட்ர் போடற சாப்பாட்டை சாப்பிட்டேன் இந்த போன் நம்பரை கூட மாற்றாமல் உனக்காக காத்திருந்தேன்.
ஆனா எல்லாமே இலவு காத்த கிளி போலே என்கிற விஷயம் இப்போ தான் எனக்கு புரிந்தது.
சாரி உனக்கு இலவு காத்த கிளி பற்றிய கதை தெரியாது இல்லையா நான் கிராமத்தில் வளர்ந்த பொண்ணு அதனால இந்த மாதிரி கதை அம்மா நிறைய சொல்லி இருக்காங்க ஆனா என்ன பிரயோஜனம் விரலுக்கு இரைத்த நீர் போல வீணா போயிடுச்சு.
இனிமே நீ இந்த வீட்டோட ரென்டல்
அக்ரிமெண்ட் புதுப்பிக்க வேண்டாம்.. தெருமுனையில் இருக்கிற ஹோட்டலுக்கு மாதாமாதம் என்னோட சாப்பாட்டு செலவு காண பணத்தை கொடுக்க வேண்டாம் இந்த போன் நம்பருக்கு வருஷம் முழுக்க ரீசார்ஜ் பண்ண வேண்டாம் ..ஏன்னா உனக்கு நான் அனுப்பற கடைசி மெசேஜ் இதான்.
நீ என்னை விட்டுட்டு போகும்போது ஒரு விஷயம் சொல்லிட்டு போனே ஞாபகம் இருக்கா என்னை எந்த காரணத்துக்காகவும் டிஸ்டர்ப் பண்ணாத என் நம்பரை தயவு செய்து மாற்ற வைத்து விடாதேன்னு சொன்ன.
அந்த ஒரு வார்த்தைக்காக என்னுடைய இக்கட்டான காலகட்டத்தில் கூட உன்னை நான் தொந்தரவு செய்யல உன் போன் நம்பரை மாற்ற நான் காரணமாகி விடக்கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருந்தேன்.
ஒரு முறை என் அப்பா உன்னோட பேசணும்னு ஆசைப்பட்டாங்க அப்போ கூட அவர்கிட்ட வேற நம்பரை குடுத்தேன் அந்த அளவிற்கு உன் வார்த்தைக்கு நான் மரியாதை கொடுத்து பொறுமை காத்தேன்.
உன் வார்த்தையை நான் மதித்த மாதிரி என்னோட காதலினையும் நீ மதிச்சு என்னை தேடி வருவேன்னு நினைச்சேன்.
இந்த நாலு சுவற்றை விட்டு நான் எங்கேயும் போகல.. நான் போற நேரம் நீ என்னை தேடி வந்து ஏமாற்றம் அடைந்திட கூடாது இல்லையா அதற்காக.
நீ எனக்கு ஆர்டர் பண்ணி அனுப்பி வைக்கற சாப்பாடு பல நாள் பிரிக்கப்படாமலே குப்பைக்கு போனது.
உன் அழைப்பை தவற விட்டிடுவேனோ என்கிற பயத்தில் இந்த போன்ல இருந்து யாருக்குமே நான் அழைத்தது இல்லை.
நீ என்னைக்காவது கூப்பிட்டு இந்த அர்ஜுன் உன்கிட்ட வந்திட்டு இருக்கேன்னு சொல்லுவ.. அப்படி இல்லனா இந்த அர்ஜுன் கிட்ட வந்திடு வேதான்னு நீயா கூப்பிடுவேன்னு இந்த ஃபோனை பைத்தியம் மாதிரி பார்த்துக்கிட்டு இருப்பேன்.
ஆனா அதெல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு காலம் எனக்கு உணர்த்திடுச்சு.
போதும் அர்ஜூன் உனக்காக நான் காத்திருந்தது அர்த்தம் இல்லாம போயிடுச்சு.. இனிமே இந்த உறவு என்னைக்கும் சேராதுன்னு புரிஞ்சிப்போச்சி.
நீ என்னை விட்டுட்டு போகும்போது என்கிட்ட ஒரு வார்த்தை சொன்ன…இப்போதான் அந்த வார்த்தைக்கான முழு அர்த்தம் எனக்கு புரிஞ்சது.
முழுசா உணர்ந்து அடிபட்ட வலியோட சொல்றேன் லெட்ஸ் பிரேக் அப்…யெஸ்.. வி ஆர் லெட்ஸ் பிரேக் அப்..மை லவ் இஸ் ப்ரோக்கன்,மை லவ் இஸ் டெத் .. இவ்ளோ இழப்புகளை சந்தித்ததற்கு பிறகும் இந்த வார்த்தைகளை நான் சொல்லவில்லை என்றால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் போயிடும்.
இனிமே என்னைக்கும் இந்த வேதா உன் வாழ்க்கைல குறுக்கே வரமாட்டா.. உன் நிழல் இருக்கிற பக்கம் கூட என் நிழல் திரும்பிப் பார்க்காது.. அதேபோல் நீயும் என்னைக்கும் எனக்கு எதிர்ல வரக்கூடாதுன்னு இந்த பிரபஞ்சம்கிட்டேயும், இயற்கை கிட்டேயும் வேண்டிக்கிறேன்.
இந்த உலகம் உருட்டையானது, ரொம்ப சிறிது யாரும் யாரையும் சந்திக்காமல் இருக்க முடியாதுன்னு சொல்லுவாங்க.. அதனாலதான் கடவுள் கிட்ட வேண்டிக்காம இயற்க்கை கிட்டேயும் .. பிரபஞ்சத்து கிட்டேயும் வேண்டிக்கிறேன்.
நீ எனக்கு வேணவே வேணாம் அர்ஜுன் எப்போவுமே, என் வாழ்க்கைக்குள்ள, என் மனசுக்குள்ள, எனக்குள்ள நீ மறுபடியும் வர வேண்டாம்..
இந்தக் கண்ணீரும் ,இந்த கெஞ்சலும்,கதறலும் உன்னை அசைக்காதுன்னு உறுதியா நம்பறேன்.
அந்த நம்பிக்கையோட
மொத்தமா உன்னை விட்டு இந்த வேதவல்லி போறா..குட் பை என்று சொன்னவள் வாய்ஸ் மெசேஜ் அர்ஜுனுக்கு அனுப்பி வைத்தாள்.
அது சென்றதாக காட்டவும் அடுத்த நொடியே மொபைலில் இருந்து சிம்கார்டை வெளியே எடுத்து அதை உடைத்து குப்பை தொட்டியில் போட்டவள் யாமினியை பார்த்து இப்போ நீ என்னை நம்புகிறாயா அவன் இல்ல அவன் மட்டும் அவன் நம்பர் கூட என் நினைவில் இல்லை நீ நம்பனும் என்று கண்ணீருடன் கூறினாள்.
அவள் பேசியவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு தானே இருந்தாள்.
இதன் பிறகும் எப்படி தோழியை சந்தேகிக்க முடியும் ..சாரி வேதா ஒரு நிமிஷம் நான் உன்னை சந்தேகப்பட்டுட்டேன் என்னை மன்னித்துவிடு என்று கண்களை அழுத்தி துடைத்துவிட்டு சரி ரொம்ப முக்கியமானது மட்டும் எடுத்துக்கோ நாம் இப்போது உடனே கிளம்பனும் என்றாள்.
மறுபேச்சு பேசாத வேதா எங்கே போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று எதையும் கேட்கவில்லை இந்த வீட்டில என்னோட பொருள்ன்னு எதுவுமே இல்லை.
எல்லாமே அர்ஜுன் எனக்காக வாங்கி கொடுத்தது தான் அதனால போட்டுக்க மட்டும் ஒரு ரெண்டு ட்ரெஸ் எடுத்துக்கிறேன் மீதி எதுவும் வேண்டாம் என்று சொல்லவும்.
சரி அப்படின்னா தனியா பேக் எதுவும் வேணாம் என் பேக்லேயே உன் டிரஸ் வச்சுக்கலாம் சர்டிபிகேட்ஸ் உன் ஹெல்த் சம்பந்தப்பட்ட பைல்ஸ் ஏதாவது இருந்தா எடுத்துக்கோயேன் என்று சொல்லவும் ம்ம் என தலையசைத்தவள் யாமினி சொன்னவற்றை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
நீ இருக்கிற கண்டிஷன்ல கண்டிப்பா உனக்கு ட்ரீட்மென்ட் தேவை முதல்ல ஒரு நல்ல ஹாஸ்பிடல் போய் உன் ஹெல்த் பார்த்துவிட்டு அதுக்கப்புறம் பெங்களூர் போகலாம் என்றாள்.
பெங்களூர் என்பதும் கடைசியாக அர்ஜுன் வேலைக்காக சென்ற இடம் ஆயிற்றே என்று வேதா சற்று யோசித்தாள்.
என்ன என்று யாமினி கேட்கவும்.
இல்ல பெங்களூர்ல தான் அர்ஜுன் என்று சொல்லி முடிக்கும் முன்னே கோபமான யாமினி.
இப்போ தான் அவன் யாருமே இல்லன்னு ஆயிடுச்சுல்ல அவ்ளோ பெரிய பெங்களூர்ல யார் வேணாலும் தங்கலாம் அப்படி பல்லாயிரக்கணக்கான பேர்ல ஒருத்தன் தான் அந்த அர்ஜுன் அவனை ஒருவேளை நேரில் பார்த்தா கூட யாரோன்னு நினைச்சு கடந்து போயிடு.
அவன் அங்க இருக்கிறான் என்பதற்காக எங்கேயுமே போகாம இருக்க முடியுமா என்று கடிந்து கொண்டவள் ஆம்புலன்ஸ்க்கு அழைத்து இருந்தாள்.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவும் பேக்கை எடுத்துக் கொண்டவள் சுமாரான மருத்துவமனையில் சேர்த்து அவளின் உடல் உபாதைகளை பற்றி கூறி சிகிச்சை அளிக்கும் படி பணிந்தாள்.
அந்த மருத்துவரும் பகுதி நேரமாக தான் இந்தக் கிளினிக் நடத்தி வருகிறார் அவரும் ஒரு அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் தான் அதை தெரிந்து தான் அங்கே வேதாவை அழைத்து வந்திருந்தாள் யாமினி.
அவர் சிகிச்சை அளிக்க தயங்கவும் இங்கு பாருங்கள் மேம் அவ குழந்தை இறந்து பிறந்ததால அந்த வேதனையில ஹாஸ்பிடல்ல பிராப்பரா சொல்லாம செல்ஃப் டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டா.
நீங்க அவளுக்கு ட்ரீட்மென்ட் குடுங்க கண்டிப்பா நாங்க போய் அந்த ஹாஸ்பிடல்ல ஒரு அப்பாலஜி லெட்டர் கொடுத்துட்டு தான் ஊரை விட்டு கிளம்பி போவோம் நம்புங்க அப்படி இல்லன்னா இப்போ கூட அந்த ஹாஸ்பிடல் போய் மன்னிப்பு கடிதம் கொடுக்கிறோம்.
அங்கிருந்து டிஸ்சார்ஜ் கடிதம் வாங்கிட்டு வந்து நான் உங்களுக்கு கொடுக்கிறேன் இப்போ ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க மேம் எங்களால் எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது என்று கெஞ்சி அவரை சிகிச்சை அளிக்க வைத்தாள்.
இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி அவள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏற்றப்பட்டது..
அதன் பிறகு மருத்துவரும் அவரின் துறை ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அவர்களை பிரச்சனையில் இருந்து காப்பாற்றினார்.
யாருக்குமே இது போல நான் செய்ததே இல்லை என்னவோ இந்த பொண்ணோட உடல்நிலையை பார்க்கும் பொழுது மனசு கேட்கல அதனாலதான் இவ சொல்லிக்காம டிஸ்சார்ஜ் ஆனதை கூட மறைத்து அவங்களா வேற மருத்துவமனைக்கு எழுதிக் கொடுக்கிறது போல லெட்டர் ரெடி பண்ண சொல்லி பிரச்சனையை ஒன்னும் இல்லாம செய்திருக்கிறேன்.
உங்க நல்ல நேரமோ என்னவோ தெரியல இவளுக்கு ட்ரீட்மென்ட் பார்த்தது என் கூட படித்த ஃபிரெண்ட் தான் அதனால கோபப்பட்டாலும் எனக்காக இந்த உதவியை செய்ய முன் வந்திருக்கிறார்.
இனிமே என்னைக்கும் இந்த மாதிரி முட்டாள் தனத்தை செய்யாதே பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் மருத்துவமனையில் சொல்லி அவங்களோட விருப்ப கடிதத்தோட வெளியே வா என்று கடிந்து கொண்டார் மருத்துவர்.
அவருக்கு பல நன்றிகள் தெரிவித்த யாமினி அவர் கேட்ட தொகையை விட அதிகப்படியான தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு செலுத்தினாள்.
பிறகு அங்கிருந்து மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வேதவை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு கிளம்பினாள்.
இரண்டு நாட்கள் மருத்துவமனை கவனிப்பு, நல்லா ஆகாரம், அன்பான தோழி அக்கறையான செவிலிய பெண்கள் என்று உடலையும் மனதையும் தேற்றி இருந்த வேதாவின் முகம் தெளிவாக இருந்தது.
ஆனாலும் தோழி தனக்காக செய்யும் செலவுகளை பார்க்கும் பொழுது மிகவும் கலங்கினாள்.
என்னால உனக்கு நிறைய சிரமம் இல்லையா என படுத்திருந்தவாறே தோழியிடம் வேதா கேட்கவும் என்ன சிரமம் ஒருவேளை நான் இதே மாதிரி ஒரு நிலைமையில் இருந்தா நீ கண்டுக்காம போயிடுவியா என்ன..?
என்னை விட அதிகமா துடித்து போயிருப்ப தெரியுமா..உன் நட்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல வேதா என்றவள்.
அவளை கலகலப்பாக்கும் நோக்கில் கை நிறைய சம்பாதிக்கிறேன் எப்படி செலவு பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் இப்படித்தான் செலவு பண்ணனும்னு நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிற அவ்வளவுதான் என்று சிரித்தபடியே கூறியவள் உன்னால எழுந்து உட்கார முடிஞ்சா கொஞ்ச நேரம் எழுந்து உட்காரு உன்னோட கொஞ்சம் பேசனும் என்று தோழியை செவிலியப் பெண்ணின் உதவியோடு எழுந்து அமர வைத்தாள்.
பிறகு சற்று தயங்கிப்படியே வேதா நான் உன்னை என்னோட வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறேன் ஆனா என் அம்மா ரொம்ப கட்டுப்பெட்டி.
நீ கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தனோட தங்கியிருந்தது அவனால கர்ப்பமானது குழந்தை பிறந்தது உன் ஆரோக்கியம் கேட்டு போனது இதெல்லாம் சொன்னா உன்னை வீட்டுக்குள்ள சேர்த்துக்க மாட்டாங்க அதனால சில பொய்களை நான் சொல்லணும் அதுக்கு நீ ஒத்துழைக்கணும் என்று சொல்லவும்.
புரியுது யாமினி உன் அம்மா மட்டும் இல்ல எந்த அம்மாவும் சுலபமா ஏத்துக்க முடியாத விஷயங்களை தானே நான் பண்ணியிருக்கேன் நீ என்ன சொல்றியோ அதுக்கு நான் கட்டுப்படுகிறேன்.
கொஞ்ச நாள் தான் அதுக்கப்புறம் ஒரு வேலையை தேடிக்கிறேன் உனக்கும் உன் குடும்பத்துக்கும் தொல்லை கொடுக்காத மாதிரி தூரமா போயிடறேன் நீ எனக்காக செலவு பண்ணற பணத்தை கூட கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடறேன்.
ஐயோ வேதா எப்படி உன்னால இவ்வளவு வீக்கான நேரத்தில் கூட இவ்ளோ பேச முடியுது நான் உன்கிட்ட என்ன சொன்னேன் என் அம்மாகிட்ட கொஞ்சம் பொய் சொல்ல போறேன் நீ ஒத்துழைக்கணும்னு தான் சொன்னேன்.
அதுக்கு நீ இவ்வளவு எல்லாம் பேச வேணாம் டி எதா இருந்தாலும் என் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் இப்போ நீ தயவு செஞ்சு தூங்குடி என தோழியின் பிதற்றலை கேலி செய்தாள் யாமினி.