எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 20 (FINAL)

NNK-41

Moderator

அகம் 20​

படியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தவளை பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள். இலக்கியாவுக்கு தன் தோழி தன்னை அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும் என்ற அவா… கார்த்திக்கு அவள் சந்தோஷமாக இருந்தால் போதும். வாசுக்கு தன்னை அவள் அண்ணா என்று கூப்பிடாமல் இருந்தால் போதும் என்றிருந்தது.​

அனைவரின் வேண்டுதலுக்கு நேர்மாறாக அவளுக்கு பழைய நினைவுகள் என்றுமே திரும்பக்கூடாது என்ற தீவிர வேண்டுதலுடன் தடதடக்கும் இதயத்துடன் அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.​

ஹாலில் அமர்ந்திருப்பவர்களை அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்… புன்னகைத்துக்கொண்டே இலக்கியாவை நோக்கி செல்ல… சந்தோஷத்தில் எழுந்துவிட்டாள் இலக்கியா..​

‘என் மலர் என்னை மறக்கவில்லை’ என்ற குதூகலத்துடன் அவள் ஓரடி எடுத்து வைக்க… அதை பார்த்த மாறனின் கண்களில் வெறுமை.. இயலாமை… தவிப்பு. இனி தன்னை காதலோடு பார்ப்பாளா இல்லை வெறுப்புடன் பார்ப்பாளா?​“இனியாழ் உனக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருச்சா??” அதிர்வுடன் மாறன் கேட்க​

“ஆமாம் ஏன் குற்றம் செஞ்ச நெஞ்சு குறுகுறுக்குதோ?” குரூரமாய் அவள் சொல்ல அவனுக்கு கோபம் எட்டி பார்த்தது​

“தப்பு பண்ணிட்டேன் ஒத்துக்குறேன். ஏன் தப்பு பண்ணவன் திருந்த கூடாதா என்ன? உலகத்துல தப்பு செய்யாத ஒருத்தனை காட்டு பார்ப்போம்? ஏன் உன் அண்ணன்கூடத்தான் உன்னை கண்டுக்காம இருந்தான். அவன் செய்தது தப்பு இல்லையோ!!”​

“உண்மைதான் அண்ணனும் தப்பு செஞ்சான்தான். ஆனா நீங்களும் அண்ணனும் ஒன்னா?? நீங்க எனக்கு ஸ்பெஷல் இல்லையா?” என்று அவள் கண்கள் கலங்க கேட்க… குற்ற உணர்வு மாறனின் நெஞ்சை தாக்க “ஐ அம் ஸாரி… ஸாரி” என்று சொல்ல… அவனை உலுக்கினான் வாசு.​

“என்னண்ணா ஸாரி ஸாரினு சொல்லிக்கிட்டு இருக்கீங்க” என்று அவன் சொல்ல… சுற்றும் முற்றும் பார்த்த மாறனுக்கு அப்பொழுதுதான் தான் கற்பனையில் சஞ்சரித்துக்கொண்டு உளறியது புரிந்தது. ஒரு பெருமூச்சுடன் நடப்பதை கவணிக்கலானான்​

“இவங்க உங்க பொண்ணா? ரொம்ப கியூட்டா இருக்காங்க… எங்க பள்ளியில் அட்மிஷனுக்கு வந்திருக்கீங்களா?” என்ற மலரின் சொல்லில் அதிர்ந்து போனாள் இலக்கியா என்றால் ஆனந்த அதிர்ச்சியில் கண்களில் ஒரு வரி நீர்படலத்துடன் பற்கள் அனைத்தையும் காட்டி புன்னகைத்து கொண்டிருந்தான் ஆதித்யா நெடுமாறன். அதைபார்த்து குழம்பியவள்​

“வசந்தண்ணா ஏன் ஸார் சிரிக்கிறார். நான் ஏதும் தப்பா கேட்டுட்டேனா?” அருகில் நின்றிருந்தவனின் காதில் கிசுகிசுக்க… “ஐயோ நான் அண்ணா இல்ல!!” என்று அலறினான் வாசு. அதில் அனைவரும் புன்னகைக்க… வெட்கத்தில் சிவந்தவள் அருகில் சென்றான் மாறன்.​

“இனியாழ் இது என் தங்கை இலக்கியா, இவர் அவளோட கணவர். இந்த குட்டியின் பெயர் இனியா. அண்ட் இன்னொரும் சர்பிரைசும் இருக்கு. அது… இந்த வசந்தன் வேறு யாருமில்ல… என் தம்பிதான். வாசுனு கூப்பிடுவோம்.” என்று சொல்ல.​

“ஓ.. ஸாரோட தம்பி ஸாரா?” ஏமாற்றத்துடன் அவள் சொல்ல​

“ஆமா ஸாரோட தம்பி மட்டும்தான். தம்பி ஸார் இல்ல. நானும் இங்கே ஒரு தொழிலாளி மட்டும்தான் மலர்” அவள் முகம் வாடுவது பொறுக்காமல் வாசு சொல்ல… இடையில் புகுந்தான் மாறன்​

“நீதான் வீட்டு ஆளா இவங்களை கவணிக்கனும்..”​

“நான் வீட்டு ஆளா!!”​

“ஆமா இந்த வீட்டில் குடியிருக்கும் ஆளு யாரு?”​

“நான்தான்… ஆனா நான் வேலைக்கு இல்ல..”​

“நான் மட்டும் இல்லனா சொன்னேன். இதுவும் நான் கொடுக்கும் வேலைதானே. நான் சொல்லும் வேலையை மறுப்பாயா இனியாழ்?”​

“இல்ல இல்ல” உடனடியாக அவள் மறுக்க​

“பிறகென்ன?” என்றவனின் குறும்பு பார்வையில் பூத்தாள் மலரினியாழ்.​

இத்தனை நாட்களாக இறுகி போயிருந்த அண்ணன் முகத்தில் மலர்ச்சியை கண்ட உடன்பிறந்தவர்களின் உள்ளம் நெகிழ்ந்தன.​

எத்தனை கோடி பணமிருந்தாலும் அன்பை பகிர துணை வேண்டும். இதோ அதுக்கு இவன் ஒரு சான்று. பணத்தால் கோடீஸ்வரன் அன்புக்காக ஏங்கும் ஏழை.​

********************​

“என்னடி இப்படியாப்பட்டவனை காதலிச்சிருக்கே!! இதுல இந்த அயோக்கியன்தான் வேணும்னு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்துட்டுபோய் ஊரு தெரிய மானத்தை வாங்கி வச்சிருக்க!!”​

“வாயை மூடு ம்மா. குத்திக்காட்டி பேசதான் இப்போ வந்தீயா?”​

“குத்திக்காட்டலடி நடந்ததை சொன்னேன். இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணை அழைக்க வந்திருவாங்களே என்னடி பண்ணப்போற?? இன்னும் அவனை கட்டிக்கனும்னு முடிவுலதான் இருக்கிறீயா??”​

“ஏதே!! முடிஞ்சா நீயே என்னை அந்த பாழும் கிணத்துல தள்ளி விட்டிருவ போலிருக்கே!! பெத்தப்பொண்ணு ஒரு அயோக்கியன் கையில மாட்டியிருக்கா… ஒரு தாயா அவளை காப்பாத்த பார்ப்பீயா…”​

“அடியேய்… இது நீயா இழுத்து வச்சிக்கிட்ட வினைதானடி!!”​

“அதுக்கு காப்பாத்தாம கைகழுவ பார்ப்பீயா?” தாயும் மகளும் தீவிர விவாதத்தில் இருக்க இடையில் நுழைந்தான் நிலவன்​

“என்ன செய்ய பூமி… நம்ம குடும்பத்துக்கு அதான பழக்கம்!! ஏன் மலர் காணாமல் போனதும் நாம அவளை கைகழுவிட்டு அவங்கவங்க வேலையை பார்த்திக்கிட்டோம்தானே!! நான் என் வாழ்கையை பார்த்துக்கிட்டேன்… நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கிட்டே… இதுல அம்மா என்ன பண்ணுவாங்க?”​

“ஏமாந்து போய்ட்டேன் ண்ணா!! அவன் அழகும் பணமும் என் கண்ணை மறைச்சிருச்சிண்ணா!! நான் என்ன பண்ணுவேன். நம்ம குடும்பத்துல நான் ஒன்டிதான் ஏமாறதுக்குன்னே பொறந்திருக்கேன் போல…” சட்டென கண்ணீருடன் செண்டிமெண்டால் நிலவனை தாக்கினாள்.​

“நீ என்ன சொல்ல வர?” நிலவன் புருவம் சுருக்கி கேட்க​

“இது கூடவா புரியலங்க… நீங்களும் மலரும் அதிர்ஷ்டசாலியாம். பூமி மட்டும் அதிர்ஷட்டக்கட்டையாம்… அப்படித்தானே பூமி/” மஞ்சரி இடைபுக… தன்னிடம் மௌன போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மனைவியின் முகத்தை காதலுடன் நோக்கினான் நிலவன். அதில் காண்டான சாவித்திரி​

“உண்மையைதானே சொல்லுறா!! தனிக்குடித்தனம் போகுற அளவுக்கு உன் புருஷன் நல்லா வாழ்றான்… சின்னவளை எங்களுக்கு தெரியாம எங்கேயோ சுகம்மா நாடு கடத்தியாச்சி!! இவதானே ஏமாந்தவ. அவளை கட்டிக்கப்போறவன் கெட்டவன்னு தெரிஞ்சும் கல்லாட்டம் நிக்கிறான் உன் புருஷன். ஓடிப்போனவ வாழ்க்கையை சரிபடுத்துவானாம் வீட்டில இருக்கிறவள கண்டுக்க மாட்டானாம்” சாவித்திரி கரித்துக்கொட்ட… நிலவன் முகத்தில் சலிப்பு. இவர்கள் எல்லாம் திருப்தி படுத்த முடியாத ஜென்மங்கள்..​

நீலகண்டன் பரபரப்புடன் உள்ளே நுழைந்தார். “நிலவா போலீஸ் வந்திருக்காங்க” என்க… அந்த இடமே கலவரமாக இருந்தது. கல்யாணத்துக்கு வந்த சொந்த பந்தங்கள் கிசுகிசுக்க… நீலகண்டனுக்கு அவமானமாகி போனது.​

பூமிகாவின் வருங்கால கணவனை தேடி வந்திருந்தனர். போதை பொருள் கடத்தல் விஷயமாக அவனை கைது செய்யும் பொழுது தந்திரமாக தப்பித்து ஓடிவிட்டானாம். அதை தெரிவிக்க வந்திருக்க… மணக்கோலத்தில் நின்ற மகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையுற்ற சாவித்திரி தன் அண்ணன் காலில் விழுந்தார்.​

சில அதிருப்திகள் எல்லாம் பல மன்னிப்புகள் மூலம் சமாதானமாகி குறிப்பட்ட முகூர்த்தத்தில் பூமிகாவின் கழுத்தில் தாலி கட்டினான் சுதீஷ். நிம்மதி பெருமூச்சிவிட்டனர் அனைவரும்… அந்த நிம்மதி சில கணங்களே. மறுபடியும் போலிஸார் உள்ளே நுழைந்தனர். இந்த தடவை பூமீகாவின் காதலன் அவர்களுடன் இருக்க… ஆடிப்போன பூமிகா சட்டென தாயின் கையை பிடித்துக்கொண்டாள்.​

“சார் இவ என்னை ஏமாத்துனதும் இல்லாம அவளோட தங்கச்சிய என் தம்பிக்கு கட்டி கொடுக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டா… நான் டிரக் டீலர்தான் நானே ஒத்துக்குறேன். ஆனா இவளை சும்மா விடமுடியாது ஸார். என் தம்பிக்கு பதில் சொல்ல சொல்லுங்க!!” அவன் கண்கள் பழிவெறியில் பளபளத்தன.​

“கல்யாணம் ஆனவளை எப்படி ஸார் இவன் கட்டிக்க கேட்க முடியும்? அவ அவளோட புருஷனோட இருக்கா… மேலும் அவன் தம்பி ஒரு டிரக் அடிக்ட். என் தங்கச்சிங்க வாழ்க்கையை நாசப்படுத்த பார்த்தவனுங்களை அரெஸ்ட் பண்ணுங்க ஸார்!!” நிலவன் பொங்கியெழ​

“என்ன? ஒன்னு சேர்ந்துட்டாளா!! பாருமா இந்த பைத்தியக்காரியும் அண்ணனும் சேர்ந்து நம்மக்கிட்ட விஷயத்தை மறைச்சிட்டாங்க!!” பூமி மறுபடியும் ஆரம்பிக்க​

“அடியேய் உன் வாழ்க்கையே இங்க ஊசலாடிக்கிட்டு இருக்கு… அதை முதல்ல கவணி.. போ!! போய் சுதீஷ் பக்கத்துல நில்லு!!” சாவித்திரி சொல்ல… அப்படியே செய்தவளை பார்த்த அவளின் பழைய காதலன் காண்டானான்.​

“சரி ஸார். நாங்க கெட்டவங்களாகவே இருந்துட்டு போறோம். ஆனா ஒவ்வொரு தடவையும் அவளை சந்திக்கும்போது என் வீட்டு பரம்பரை நகையை அவகிட்ட கொடுத்து வச்சிருந்தேன். அதை மட்டும் கொடுக்க சொல்லுங்க ஸார். அது என் குடும்பத்தோடது” என்றதும் அதிர்ந்து போய் அனைவரும் பூமிகாவை பார்க்க... கையை பிசைந்துக்கொண்டிருந்தாள் அவள். இது சாவித்திரிக்கே தெரியாத விஷயமல்லவா.​

“ச்சீ!! நியெல்லாம் ஒரு பொண்ணா!! உன்ன மாதிரி கேவலமானவளை நான் பார்த்ததே இல்ல… இதை மட்டும்தான் மறைச்சியா இல்ல இன்னும் இருக்கா?? வாடி வீட்டுக்கு உன்னை வச்சி செய்யுறேன்” என்ற சுதீஷின் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. ஊர் மேய்ந்தாலும் தனக்கென வருபவள் சுத்த பசும் நெய்ப்போல் இருக்க வேண்டும் என்று நினைப்பில் இடி விழுந்ததை தாங்க முடியவில்லை அவனால்.​

பூமிகாவின் வாழ்க்கை அமோகமாக ஆரம்பிக்க… தங்களின் செல்ல மகளின் வாழ்வை எண்ணி கலங்கி போயினர் நீலகண்டனும் சாவித்திரியும்.​

மகனை தூக்கி நின்றிருந்த மஞ்சரியை பார்த்தான் நிலவன். அவளின் பாராமுகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாரமேறிய உணர்வு அவனுள். மனைவி தன்னை என்றேனும் ஒருநாள் மன்னிப்பாள் என்ற நம்பிக்கையுடன் ஒதுங்கிபோனான்.​

******************​

அன்று அவளோடு கூடிகளித்த காலம் யாவும் இன்றும் பசுமையாய் மனதில் இருக்கிறது. இன்றுகூட யோசித்தால் ஒருவித வெட்கம் வரவைக்கிறது. அன்று பார்த்த பார்வை வேறு… இன்று விலகி நின்றாலும் அலையாய் அவளை தொட்டு செல்கிறது பார்வை. அவளின் எண்ணவோட்டத்தை உணர… நூலருந்த பட்டமாய் ஆக அவன் விரும்புகிறான். கை நீட்டி அவள் அந்நூலை பிடிக்க வேண்டி.​

வெகு நேரம் பால்கனியில் நின்றிருந்தவனை கலைத்தது அவளின் குரல் “கூப்பிட்டீங்களாமே..”. ராகமாய் இழுத்தாள். என்ன ராகம் என்றுதான் அவனுக்கு தெரியவில்லை. சிந்தனைகள் ஒரு பக்கம் ஓட கண்கள் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.​

“இனியாழ்….” அழைத்தான். அவனின் ஹஸ்கி குரல் அவளை சிலிர்க்க வைத்தது. மென்மையாக அவள் நகக்கண்களை அவன் கைகள் கொண்டு ஆராய்ந்தான். கால் நகம் முதல் தலை உச்சிவரை போதை அடித்துகொண்டு சென்றது அவளுக்கு. தென்றல் வருடிச்சென்றாலும் எங்கிருந்தோ காய்ச்சல் வந்து போர்த்தியதுபோல் சூடானது இருவரின் தேகம்.​

உயிரில் ஊஞ்சலாட முடியுமா… இதோ அவளுக்குள் அதுதான் நடந்துக்கொண்டிருந்தது. நடக்கவைத்தான் அவளின் மாறன்.​

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு இனியாழ்..” விழிவிரித்தாள். உதடுகள் துடிக்க உயிர் துடிக்க அவனை பார்த்திருந்தாள். நிலவென குளிர்கிறான்.. சொல் பொறுக்காமல் சில நேரம் சூரியனாய் காய்கிறான். பெயரும் சூரியனை ஒத்திருக்க காய்வது அவன் இயல்போ.​

“என்ன மா” என்றவனின் ஒரே சொல்லில் வசமிழந்தாள் பெண்.​

“என்னை என்னவோ செய்றீங்க ஸார் நீங்க…”​

“ஸார் இல்ல மாறன்… உன் மாறன் இனியாழ்”​

“எனக்கு குறைகள் நிறைய இருக்கு”​

“யாருக்கு குறை இல்லை.. ஏன் எனக்கும்தான் குறை இருக்கு. என்னுடன் வாழ வா இனியாழ் இருவரின் குறைகளை எல்லாம் சம பங்காக்கி நிறையாக்கிக்கலாம்” மனதை மயக்கினான்.​

“என் வாழ்வில் எதுவோ பெருசா நடந்திருக்கு என்று மனம் சொல்லுது. ஆனா எதுவும் என் நினைவில்லையே..” உதட்டை பிதுக்கி சொன்னவளின் அழகில் பித்தானான் மாறன்.​

“என்னை டெம்ப்ட் பண்ணாதடி’ மனதோடு சொன்னவன்​

“உன்னை பார்த்ததிலிருந்து நான் நானாக இல்லை. உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் என் உயிர் துடிக்கிது. உனக்கும் அப்படித்தானே? அப்போ நமக்குள்ள ஒர் அழகான சம்பந்தம் இருக்குத்தானே?” அவள் கேள்வியை அழகாக புறக்கணித்தான்.​

“இல்ல… எனக்கு ஆட்டிசம் இருக்கு. உங்களுக்கு தெரியும்தானே? அப்புறம் எப்படி நாம சாதாரண வாழ்க்கை வாழ முடியும். நீங்க சொல்லுறதை புரிஞ்சிக்கவே எனக்கு நேரமெடுக்கும். உங்களுக்கு ஒன்னுமில்லாம இருக்காலாம் ஆனால் இதனால் வெளி உலகில் நீங்க அவமானப்பட நேரிடலாம்… இந்த வலி உங்களுக்கு தேவையா??”​

உதடு துடிக்க கேட்டவளை ஆழ்ந்து பார்த்தான் மாறன். இவளால் எனக்கு அவமானமா? இவளுக்கு தெரியுமா இன்றிரவு அந்த சுதீஷ் அவனின் முதலிரவை மருத்துவமனையில்தான் கழிக்க போகிறான் என்று. என் மனைவியை களங்கப்படுத்த நினைத்தவனை சும்மா விட நான் என்ன மடையனா!! டேய்!! சுதீஷ்… இனி எந்த பொண்ணையும் நீ தொட முடியாதுடா!!” முகம் ஆவேசத்தில் ஜொலித்தது.​

“ஏ.. ஏன் உங்க முகம் இப்படி..” பயத்துடன் அவள் கேட்க… சிந்தனையில் இருந்தவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.​

தான் சொன்னவைக்கு சிலிர்க்கிறாள்… நாணுகிறாள்… கன்னம் சிவக்கிறாள்… ஆனால் சம்மதம் மட்டும் சொல்ல மறுப்பதின் காரணம் புரியாமல் தவித்தான் மாறன். உயிர் சுமந்து பிரசவிக்கும் தாயின் வலிக்கு ஈடாக வலித்தது அவன் உள்ளம்.​

அவளும் குழம்பி தவித்து கொண்டிருந்தாள். இதயம் துடிப்பது அவள் செவிக்கே கேட்டது. தொண்டக்குழி ஏறி இறங்கியது. உடல் நடுங்குவதில் வளையலும் இணைந்து நடுங்க.. கிங்கினி சத்தம் மெல்ல கேட்டது.​

அவளின் நெடுமரத்தை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் எதுவோ ஒன்று தடுக்க… சொல்ல முடியாமல் தவித்தாள். உள்ளே புதைக்கப்பட்ட விருப்பங்கள் மெல்ல துளிர்விட அச்சம் கொண்டாள்.​

“உங்களுக்கு என்னைப்பற்றி தெரியாது. என் மாமன் மகன் சுதீஷால் நா.. நான்…” என்றவளின் பேச்சை கைதூக்கி தடுத்தான் மாறன்.​

"மலரினியாழ்… உன் பெயரை போலவே நீ ஒரு இனிமையான மலர். இங்கே பூத்திருக்கும் மலர் போன்றவள் நீ. மலர்கள் களங்கப்படுமா இனியாழ்??”​

“புரியலையே?” இதழ் பிதுக்கியவளை என்னென்னவோ செய்ய தோன்றியது அவனுக்கு. குரலை செறுமியவன்​

“மலர்களின் அனுமதி இல்லாமலேயே அதுல இருக்கும் தேன் உரிஞ்சப்படுகிறது. அதனால இந்த மலர்கள் எல்லாம் பாவப்பட்டவை என்று ஒதுக்கி விடுகிறோமா என்ன? பறித்து தலையில் சூடிக்கிறோம்தானே? இல்ல இவை எல்லாம் பாவப்பட்டவைனு ஒதுக்கி வச்சி கடவுளுக்கு மாலைக்கட்டி போடாமல் இருக்கோமா?? கடவுள் சன்னதியில் எப்படி இந்த மலர்கள் தூய்மையானதோ அதே போலதான் நீ எனக்கு இனியாழ்” என்றான் உறுதியாக​

நானும் அதுவும் ஒன்றா என்று அவள் நினைத்து முடிக்கையில் “ஓன்றுதான்” என்று அவன் சொன்னான். விழி விரித்தவளை பார்த்து கன்னம்குழி விழ சிரித்தவன்… அவள் நெற்றியை சுட்டி காட்டி​

“நீ இங்கு நினைப்பது என்னால் இங்கு உணர முடியும்" என்று அவன் நெஞ்சை தொட்டு காட்ட… சிலிர்த்து சிவந்தது அவள் கன்னம்.​


அவனின் அரவணைப்பான பார்வையிலும் தெளிவான பேச்சிலும் தொனித்த அன்பும் காதலும் அவள் மனதை புரட்டி போட்டன. அகத்தில் இருந்த திரைகள் விலகின போலும். குழப்ப முகம் இப்பொழுது கொண்டவனின் முகம் காண நாணி சிவந்தது.​

மாறனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. அவன் எதிர்பார்த்த அவளின் சம்மதம் அவள் முகத்தில் பட்டவர்த்தமாக தெரிந்தது.​

விரல் நகக்கண்களோடு விளையாடிக் கொண்டிருந்தவன் இப்பொழுது அவள் கண்களோட விளையாட முற்பட்டான். “என்னை பார் இனியாழ்..” என்றான்.​

அவனை பார்ப்பதும் பின்பு பார்வையை தாழ்த்துவதுமாக அவள் பார்வைகள் தாலாட்டிக்கொண்டிருந்தன.​

“பார்க்க மாட்டியா?” நெருங்கி வந்தான். அவனின் நெருக்கம் அவளுக்கு பிடித்திருந்தது போலும். அவள் நகரவில்லை. அது கொடுத்த தைரியத்தில் சுற்றி சுழன்றிடும் அந்த இரண்டு இசைத்தட்டு விழிகள் மேல் தன் இதழ் கொண்டு மரியாதை செய்தான்.​

இன்னும் வேண்டுமென அவள் உள்ளம் தடுமாற அவள் கைகள் இரண்டும் அவன் தோளை அழுந்த பற்றின.​

“லெட்ஸ் கெட் மேரிட் இனியாழ்… என்னோட சேர்ந்து என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு” என்றான்.​

அவள் உள்ளம் பேரானந்தம் கொண்டது. அவன் விழிகளை நோக்கி சம்மதமென தலையசைக்க… அகத்தில் இருக்கும் திரைகள் விலகி பேரமைதி கொண்டது இருவர் உள்ளம்.​

அதிலும் அத்தனை வருடங்களின் தேடலும் காத்திருப்பும் கை சேர்ந்துவிட்ட ஆசுவாசமும், ஆனந்தமும் கண்ணீராய் பிரதிபலித்தது. ஆழ்மனதில் ஆற்றாத காயங்களை கண்ணீர் ஆற்றிக்கொடுத்தது போலும்.​

“எனக்கு நீ பிராமிஸ் பண்ணு இனியாழ். எந்த பிரச்சினை நமக்குள் வந்தாலும் என்னை விட்டு நீ பிரியக்கூடாது. அப்படி நீ போகனும்னு விருப்பப்பட்டா என்னை கொன்னுட்டு போயிடு!! நீ இல்லாமல் நான் வாழமாட்டேன்” என்றவனின் இதழை தன் விரல்கொண்டு மூடினாள்.​

“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? இனி இப்படி பேசுனா..” கோபத்தில் அவள் தடுமாற​

“பேசுனா என்ன பண்ணுவ இனியாழ்?” என்றவனின் அணைப்பிலிருந்து விலக பார்த்தவளை தன் புறம் இழுத்தான். அவன் மார்பில் கன்றாய் முட்டினாள். இன்ப அவஸ்த்தை உடலெங்கும் பரவ இதழை ஈரப்படுத்தியவன். இதுவரை அவனை இம்சை படுத்தியதை தன் வசமாக்கிக்கொண்டான். மேலுதடும் கீழுதடும் வசமாக அவனிடம் மாட்டிக்கொண்டு இன்பவதை பட்டன.​

“இனிமேல் நான் அப்படி பேசுனா இப்படிதான் தண்டனை கொடுக்கனும்” என்று அவளை மயக்கத்துடன் பார்க்க… மூச்சடைத்து போனாள் இனியாழ். என்ன மாதிரியான பார்வை இது. இப்பொழுது அவள் பார்வை அவன் கன்னத்துகுழியை தொட்டு மீண்டது. பார்வை பட்டதும் அவனின் திண்மையான மார்பு ஏறி இறங்கியது. அவளின் பார்வை வீச்சில் சகலத்தையும் மறந்தான் மாறன். கண்கள் மோதிக்கொண்டன. இனிய நெருப்பு ஒன்று இருவரையும் பற்றிக்கொண்டது.​

“யூ ஆர் கில்லிங் மீ இனியாழ்..” என்றவன் சட்டென அவள் பின்னந்தலையில் கைகொடுத்து அவள் இதழில் கவி படித்தான்.​

சில்லென வீசும் காற்றோடு சிலிர்த்திடும் மழையின் தூறல் சேர்ந்துக்கொண்டது. மெல்ல அவர்களை தழுவ ஓருருவமாய் நின்றனர் இருவரும்.​

*************​

மணக்கோலத்தில் நின்றிருந்தனர் ஆதித்ய நெடுமாறனும் மலரினியாழும். இந்த நான்கு வருடங்களில் பத்து வயது மூப்படைந்தவன் போலிருந்தவனின் முகம் இப்பொழுது விகசித்திருந்தது. விட்டுப்போன காதலை மீட்டெடுத்த களிப்பில் கம்பீரமாக நின்றிருந்தான்.​

நிலவனும் மஞ்சரியும் தாலி எடுத்து கொடுக்க… மாறனின் பெற்றோர் இறைவன் பாதத்தில் வைத்து எடுத்து மாறனிடம் கொடுக்க… தன்னவளின் பார்வையை தாங்கி இரண்டு முடிச்சு போட்டவன் மூன்றாவதை இலக்கியாவிடம் விட்டு கொடுக்க… தன் தோழி வாழ்வு சீர்பெற்றதில் புன்னகையுடன் மூன்றாவது முடிச்சை போட்டு தோழியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.​

“ஏய் வாலு!! ஷீ இஸ் மைன்” என்ற மாறன் இனியாழின் மறுகன்னத்தில் முத்தமிட்டு இழுத்துக்கொள்ள…​

“அடிப்பாவி ஒரு நாளாவது எனக்கு இப்படி ஒரு டைட் கிஸ் கொடுத்திருப்பீயா!!” என்று கார்த்திக் முறுக்கிக்கொள்ள… வந்து சேர்ந்தார் மல்லிகா டீச்சர் தன் கணவருடன்.​

டீச்சரை கண்டதும் குழந்தையாய் மாறிய தன் மனைவியை ஆசையுடன் பார்த்தான் மாறன்.​

“இவங்கதான் நான் உனக்கு கொடுக்கும் கல்யாணப்பரிசு. இனி நம்ம ஸ்கூலை இவங்கதான் பார்த்துக்க போறாங்க. இனி அடிக்கடி நீ உன் டீச்சரை பார்த்துக்கலாம். கொஞ்சிக்கலாம்.. என் பரிசு பிடிச்சிருக்கா இனியாழ்…” என்றவனின் கன்னம் ஈரமானது இலக்கியா கொடுத்த முத்தத்தினால்.​

“ஏய்!! மை மாமா..” என்று சொல்லிக்கொண்டு இனியா மாறனின் மடியில் அமர்ந்துக்கொள்ள… இன்னொரு பக்கம் “நானும்.. நானும்.. மை அத்தை” என்று சொல்லிக்கொண்டு வருண் இனியாழின் மடியை எடுத்துக்கொள்ள… கொள்ளை கொள்ளையாய் சந்தோஷ சாரல் மழையாய் தூவி ஆசீர்வதித்தன அவர்களை.​

முற்றும்​

 
Last edited:

santhinagaraj

Well-known member
உணர்வுகள் நிறைந்த அருமையான கதை சூப்பர்👌👌
வாழ்த்துக்கள்💐💐
 

NNK-41

Moderator
உணர்வுகள் நிறைந்த அருமையான கதை சூப்பர்👌👌
வாழ்த்துக்கள்💐💐
மிக்க நன்றி டியர். உங்களின் கருத்துகள் எல்லாம்தான் எனக்கு உற்சாகம் அளித்தன. கருத்து சொன்னமைக்கு மறுபடியும் மிக்க நன்றி டியர்
 
உணர்வுப்பூர்வமான கதை!!... அருமையான கொண்டு போனீங்க!!... எப்படியோ கடைசில மலர் ஹாப்பி!!... அருமையான கதை!!... வாழ்த்துகள்!!..
 

Saranyakumar

Active member
அருமையான கதை ஆட்டிசம் உள்ளவங்களும் சதாரண வாழ்க்கை வாழ முடியும் என்று சொல்லும் கதை 😍😍😍போட்டியில் வெற்றிபெற வாழித்துகள் சிஸ்
 

NNK-41

Moderator
உணர்வுப்பூர்வமான கதை!!... அருமையான கொண்டு போனீங்க!!... எப்படியோ கடைசில மலர் ஹாப்பி!!... அருமையான கதை!!... வாழ்த்துகள்!!..
மிக்க நன்றி டியர். ஒவ்வொரு எபிக்கும் நீங்க கொடுத்த ஆதரவுதான் என்னை முடிக்க வைத்தது. மிக்க நன்றி டியர்😍
😍😍🥰🥰🥰😘😘😘
 

NNK-41

Moderator
அருமையான கதை ஆட்டிசம் உள்ளவங்களும் சதாரண வாழ்க்கை வாழ முடியும் என்று சொல்லும் கதை 😍😍😍போட்டியில் வெற்றிபெற வாழித்துகள் சிஸ்
மிக்க நன்றி டியர். உங்களின் கருத்துகள் வழியாக கிடைத்த ஊக்கத்தினால்தான் என்னால் கதையை முடிக்க முடிந்தது. மிக்க நன்றி டியர்😍
😍😍🥰🥰🥰😘😘😘
 
Top