எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை-அத்தியாயம் 2

Status
Not open for further replies.

WhatsApp Image 2024-04-02 at 11.21.31 PM.jpeg

அத்தியாயம் 2

அன்றைய தினம் வழமை போல மருத்துவமனையில் பரபரப்பாக​

ஆரம்பமாக துரத்தும் நினைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.​

எறும்புபோல் சுறுசுறுப்பாக இயங்கியவளின் நேரத்தை நோயாளிகளும் அவர்களுக்கான சிகிச்சைகளும் விழுங்கிக்கொள்ள காலை பொழுதின் கவலையை தவிர அன்றைய தினம் அவளுக்கு இனிதாகவே நிறைவு பெற்றிருந்தது.​

வேலை நேரம் முடிந்திருக்க அதிஷாவை தேடி சென்றாள் அஷ்வினி.​

அவளின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே எட்டி பார்க்க அவளோ அங்கே ஒரு நோயாளியை பார்த்துக்கொண்டிருந்தாள்.​

"சாரி, அதி, என் டியூட்டி முடிஞ்சுது. கிளம்பப் போறேன். நீயும் வரியா இல்லை அம்மா கூட போயிடுவியா?" என்று கேட்டாள்.​

அதிஷாவின் தாயும் அந்த மருத்துவமனையில் தான் பணியாற்றுகிறார். மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளும் குழுவில் உயர்பதவி வகிப்பவர் ஆவார்.​

"அவங்க அப்போவே கிளம்பிட்டாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணு இந்த பேஷண்ட்டை அனுப்பிட்டு வந்திடுறேன்" என்று சொல்லியவளின் கவனம் என்னவோ நோயாளியின் மீது தான் இருந்தது.​

"ஓகே, அப்போ நான் கஃபே ல இருக்கேன். நீ முடிச்சிட்டு வா" என்று சொல்லியபடி சென்றுவிட்டாள் அஷ்வினி.​

வேலைகள் அனைத்தும் முடிய கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பியவள் நேரே கஃபேக்குள் நுழைந்தாள்.அங்கே அஷ்வினி டாக்டர் சூர்யாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.​

சூர்யாவை பார்த்ததும் சற்றே சலிப்பாக தலையை இருபுறமும் ஆட்டியவள் ஒரு பெருமூச்சுடன் அவர்களை நெருங்கினாள்.​

சூர்யா பெயருக்கு ஏற்றாற் போல பளிச்சென்ற தோற்றமுடையவன். நல்ல உயரம், வாகான முகம், அதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போன்ற அவனது முறுக்கேறிய தேகம்.பார்க்க கதாநாயகன் போல் இருந்தாலும் பழகுவதற்குத்தான் ஏற்றவன் இல்லை. அனைவரிடமும் சகஜமாக பேசுபவனின் இயல்பு பெண்களிடம் மட்டும் சற்று அதிகமாகவே இருக்கும்.​

அதுவும் அதிஷா என்றால் போதும் அவனது புன்னகை காது வரை நீளும்.​

அவனது இந்த குணம் தான் அதிஷாவிற்கு சுகிப்பதில்லை.​

அருகே சென்றதும் "ஹேய் அதி" என்று பல்லைக் காட்ட அவனை பிடிக்கவில்லை என்றாலும் நாகரிகம் கருதி பதிலுக்கு "ஹாய் டாக்டர்" என்றாள்.​

சிரித்துக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென்று சுருங்க "என்ன அதி, யாரோ போல டாக்டர்னு கூப்பிடுற. டிஸ்டன்ஸ் ஆஹ் ஃபீல் ஆகுதுல. சூர்யான்னு கூப்பிட சொல்லி எத்தனை முறை சொல்லுறது?" என்று செல்ல கோபம் கொண்டான்.​

ஏதோ உரிமை இருப்பவன் போல தொனித்த அவன் பேச்சு எரிச்சலை கொடுத்தாலும் அதை முகத்தில் காட்டாமல்" பழகிடுச்சு டாக்டர்" மென்னகையுடன் அவனிடம் சொல்லியவள் "கிளம்பலாமா​

அஷ்" என்று அஷ்வினியிடம் கேட்டாள்.​

அவர்கள் இருவரின் சம்பாஷணையையும் பார்த்துக்கொண்டே கையில் இருந்த காபியை குடித்துக்கொண்டிருந்த அஷ்வினி "இருடி காபி குடிச்சிட்டு போகலாம். என்னோட ட்ரீட். இன்னிக்கு உன் பிறந்த நாள் வேற" என்று சொல்லியவாறு காபி வாங்க சென்றவளை "அஷ் வேணாம். ஏற்கனவே லேட் ஆகிடுச்சு. வீட்ல எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க" என்று நிறுத்தினாள் அதிஷா.​

"வாவ் அதி, உனக்கு பார்த் டே வா இன்னிக்கு. ஏன் சொல்லவே இல்லை?" என்று கேட்டான்.​

புன்சிரிப்பொன்றே அதிஷாவின் பதிலாகயிருக்க 'ம்க்கும் நீ என்ன அவளுக்கு மாமனா மச்சானா? பிறந்த நாளுன்னதும் ஓடி வந்து உங்கிட்ட சொல்ல' என்று அஷ்வினி தான் அவன் பேச்சுக்கு மனதுக்குள் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.​

"சரி அதை விடு. மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஒஃப் தி டே" என்று கையை நீட்டினான் சூர்யா.​

அவனின் நீட்டிய கரத்தை பற்றி அவனது வாழ்த்தை ஏற்க அதிஷா ஒரு கணம் தயங்கி நின்றாள்.​

அவளின் காதருகே குனிந்த அஷ்வினி "ஏற்கனவே எப்போ எப்போன்னு பார்த்துட்டிருப்பான். இதுல சான்ஸ் கிடைச்சா விடுவானா. கையை நீட்டுறான் பாரு. கொடுத்திரு இல்லன்னா விட மாட்டான்" என்று கிசுகிசுப்பாய் சொன்னாள்.​

அவளை பக்கவாட்டாக பார்த்த அதிஷா "ம்பச்... கொஞ்சம் சும்மா இருடி" என்று அவளை போலவே கிசுகிசுக்க நீட்டிய கையை நீட்டிய படியே வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த சூர்யா "என்னவாம்?" என்று கண்களால் அஷ்வினியை காட்டியபடி கேட்டான்.​

"அது..." என்று அதிஷா இழுக்க 'அச்சோ சிக்கிட்டோமோ' என்று மனதுக்குள் புலம்பிய அஷ்வினி "அது ஒண்ணுமில்ல டாக்டர். நீங்க ரொம்ப நேரமா கையை நீட்டிட்டிருக்கிங்களே, சீக்கிரமா கையை கொடுக்க சொல்லி சொல்லிட்டிருந்தேன்" என்றவள் சட்டென்று அதிஷாவின் கையை பிடித்து அவன் கையில் திணித்திருந்தாள்.​

அவள் செயலில் சற்றே அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "தேங்க்ஸ் டாக்டர்" என்ற அதிஷா அவன் கையிலிருந்து தனது கையை உறுவிக்கொள்ள முயல இன்னும் இறுக்கி பிடித்தான்.​

அவன் செய்கையில் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்த அஷ்வினி 'ஆத்தி...என்ன பண்ணுறான் இவன்...கையை மாவு பிசையுற போல பிசயுறானே' என்று நினைத்தபடி அதிஷாவை நிமிர்ந்து பார்த்தாள்.​

அவனது தொடுகை ஒருவகை அசௌகரியத்தை கொடுக்க​

அவனை ஒரு கணம் முறைத்த அதிஷா அடுத்த நோடியே முகத்தை சிரித்தாற்போல் வைத்துக்கொள்ள 'இவள் என்ன சிரிக்குறா?' என்று அஷ்வினி மேலும் குழம்பிய நேரம் அதிஷா தனது ஹீல்ஸ் காலால் அவன் காலை ஓங்கி மிதித்து பதம் பார்த்திருந்தாள்.​

"ஐயோ பாவம்..." என்று அதிர்ச்சியில் சத்தமாகவே சொன்ன அஷ்வினி வாயை கைகளால் பொத்திக்கொண்டாள்.​

அவன் காலணி அணிந்திருந்த போதிலும் அவள் மிதித்த வேகத்தில் சுறுக்கென்று வலிக்க சட்டென அவள் கையை விட்டவன் "அதி" என்று அலற "அவுச்...சாரி சாரி டாக்டர். தெரியாமல் பட்டிருச்சு" என்றாள்.​

அவன் கீழே குனிந்து மிதிபட்ட அவன் காலை பரிசோதித்த நேரம் சற்றே குனிந்து அவனருகில் சென்றவள் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து நகர, செல்லும் அவள் முதுகையே பேயறைந்தது போல் பார்த்திருந்தான் சூர்யா.​

அவனை திரும்பி பார்த்தபடியே அதிஷாவின் வேக எட்டுக்களுக்கு ஈடுக்கொடுத்து நடந்த அஷ்வினி " கடைசியா அவன் காதுக்குள்ள என்னடி சொன்ன? பாவம் டாக்டர், பேயறைஞ்ச போல நிக்குறான்" என்று கேட்க அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள் "அடுத்த முறை இது போல நடந்தா, கால் தெரிஞ்சே படும்னு சொன்னேன்" என்றாள்.​

"அதுக்கா இப்படி முழிக்குறான்?" அஷ்வினி குழப்பமாக கேட்க 'இல்லை' எனும் தோரணையில் தலையாட்டினாள் அதிஷா.​

"அப்புறம்?" அதிஷாவின் முகத்தை பார்த்த அஷ்வினியின் புருவம் இடுங்கியது.​

"இந்த முறை கீழ உதைச்சேன், அடுத்த முறை கொஞ்சம் மேலன்னு சொன்னேன்" என்றாள்.​

"அடிப்பாவி" என்று வாயில் கை வைத்து கொண்டாள் அஷ்வினி.​

பேசிக்கொண்டே இருவரும் வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்திருந்தனர்.​

"இருந்தாலும் உனக்கு ரொம்ப அழுத்தம் தான்டி. அவன் கோவத்துல ஏதும் பண்ணிட்டா என்னடி பண்ணுவ?" ஸ்கூட்டரின் இருக்கையை உயர்த்தி தனது உடைமைகளை உள்ளே திணித்த படியே கேட்டாள் அஷ்வினி.​

"எதுவும் பண்ண மாட்டான். ஏன்னா இப்படி முகத்துக்கு நேரா மிரட்டுற எனக்கு அவனை பத்தி கம்பளைண்ட் பண்ணவும் தைரியம் இருக்கும்னு அவனுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும்" என்றாள் அதிஷா.​

"ஹ்ம்ம்…நீ சொல்லுறதும் சரி தான். பொண்ணுங்க எல்லாத்துக்கும் பயந்து போறதால தான் இவனை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் துளிர் விட்டு போகுது. இனி அவன் உன் கிட்ட வாலாட்டாமல் இருந்தா சரி தான்" என்றபடி அஷ்வினி ஸ்கூட்டரை உயிர்ப்பித்த நேரம் அவளின் அலைபேசி சினுங்க அதை ஏற்று காதுக்கு கொடுத்தாள்.​

"ஆஹ்...கிளம்பிட்டேன் மா. அதிஷாவை வீட்டில விட்டுட்டு வந்திடுறேன்" என்று சொல்லிவிட்டு வைத்தாள்.​

காலையில் கிளம்பும் போதே தனது தங்கை வீட்டு விசேஷதிற்கு செல்ல வேண்டுமென்றும் மாலையில் நேரத்திற்கே வீடு திரும்ப சொல்லியும் அஷ்வினியின் அன்னை சொல்லியனுப்பியிருந்தார்.​

அதுதான் அவள் மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டளா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அழைப்பெடுத்திருந்தார்.​

"ஏறு அதி, கிளம்பலாம்" அதிஷாவிடம் சொல்லிக்கொண்டே அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்து விட்டு நிமிர அப்பொழுதும் அசையாமல் நின்றிருந்தாள் அதிஷா.​

அவளை கேள்வியாக பார்த்த அஷ்வினி "அதி " குரலில் அழுத்தம் கொடுத்து அவளின் தோள் மீது கையை வைத்து உலுக்கினாள்.​

தூக்கத்திலிருந்து அப்பொழுதான் எழுந்தவள் போல ஒரு நொடி திடுக்கிட்டு விழித்த அதிஷா " சாரி, கொஞ்சம் இருடி ஒரு போன் பேசிட்டு வந்திடுறேன்" என்றவள் கைப்பையில் அலைபேசியை தேடி துளாவியபடியே சற்று தள்ளி சென்று நின்றுக்கொண்டாள்.​

காலையிலேயே ராகவனுக்கு அழைப்பெடுக்க நினைத்திருந்தாள். ஆனால், நோயாளிகளை பார்ப்பதும் சிகிச்சையளிப்பதுமாக அவளது நேரம் முழுமையாக ஆக்ரமித்துக்கொள்ளப்பட அந்த விடயத்தை மறந்தே போய்விட்டாள். இப்பொழுது அஷ்வினி அலைபேசியில் பேசியதை பார்த்ததும் தான் நினைவு வந்தது அவளுக்கு.​

அவனது எண்ணை தேடி எடுத்தவளுக்கு அந்த எண் இன்னமும் உபயோகத்தில் உள்ளதா என்பது கூட சரியாக தெரியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் சேமிக்கப் பட்ட எண் அல்லவா? இன்னமும் அதே எண்ணை தான் பயன்படுத்துகிறானா என்ற சந்தேகம் வேறு தோன்ற சிறு குழப்பத்துடனே அவனுக்கு அழைத்திருந்தாள்.​

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படாமல் மணி அடித்து ஓய்ந்ததில் முதல் முயற்சி தோல்விக் கண்டது.​

மீண்டும் முயற்சித்தாள். இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை. ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு.​

ஒரு பெருமூச்சுடனே திரும்பி நடந்தவள் ஆஜானுபாகுவான ஒருவன் மீது மோதி நின்றாள்.​

எதிர்பாராமல் அவன் மீது மோதியதில் கையில் இருந்த திறன்பேசி தவறி கீழே விழுந்திருந்தது.​

குனிந்து அவளது திறன்பேசியை எடுத்து அவளிடம் ஒரு மந்தகாச புன்னகையுடன் நீட்டினான் அந்த நெடியவன்.​

அவன் யஷ்வந்த் சக்ரவர்த்தி. பிரபல நரம்பியல் நிபுண மருத்துவன். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ள செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன். இந்த மருத்துவமனையும் அவன் குடும்ப சொத்துக்களில் ஒன்றாகும். அதோடு கூட சில மருந்தகங்களும் இருக்கின்றன.​

இவ்வளவு இருந்தும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவன் என்பதோடு நோயாளிகளை அவன் கனிவுடன் கவனித்து கொள்ளும் விதமும் சேர்ந்து கொள்ள அதிஷாவிற்கு மட்டுமல்ல அங்கே பணிபுரியும் அனைவருக்குமே அவன் மீது பெரிய மரியாதை உண்டு.​

நல்ல உயரமும், சிவந்த மேனியும், ஜெல் வைத்து வாரிய கேசமும், முகத்திற்கு எடுப்பான மூக்கு கண்ணாடியும் அணிந்திருப்பவனின் இதழ்களில் என்றுமே மறையாமல் பூத்திருக்கும் சினேக புன்னகையுமாக பார்ப்பவர்களின் கண்களுக்கு இனிமையானவனாகவே தோற்றமளிப்பவன்.​

"டாக்டர் யாஷ்... சாரி கவனிக்கல..." என்றாள்.​

"தட்ஸ் ஓகே அதி...யுவர் போன்" என்று நீட்டியிருந்த அவனது கரத்தை மேலும் அவளை நோக்கி உந்தினான்.​

"ஓஹ் சாரி... ஐ மீன் தேங்க்ஸ்" என்றபடி அவனிடமிருந்து அலைபேசியை பெற்றுக்கொண்டாள்.​

அவன் பக்கத்தில் அவன் சாடையிலேயே ஒருவன் நின்றிருந்தான். உயரம் யஷ்வந்த்தை விட சற்று குறைவு தான். மூக்கு கண்ணாடி அணியவில்லை அவன். அதை தவிர பார்ப்பதற்கு யஷ்வந்த்தை போலவே இருந்தான்.​

அவனை புருவம் சுருங்க பார்த்த அதிஷாவின் முக பாவனையிலேயே அவளது கேள்வியை புரிந்து கொண்டவனாய் " இது என் தம்பி ரோஷன்...இவ்வளவு நாள் அப்பா கூட ஸ்டேட்ஸ்ல இருந்தான்" என்றான்.​

"ஓஹ்... ஹாய்" சினேகமாக புன்னகைத்தாள் அதிஷா.​

"ஓகே அதிஷா...யூ கேர்ரி ஓன். சீ யூ..." என்ற யாஷ் அவளை கடந்து செல்ல "டாக்டர்” என்று அழைத்திருந்தாள் அவள்.​

அவளை திரும்பி பார்த்து என்ன எனும் தோரணையில் அவன் புருவம் உயர்த்த " மை டீப் கொண்டொளென்சஸ் போர் யுவர் ஃபாதர்..." என்றாள்.​

ஒரு மென்னகையை மட்டும் அவளுக்கு பரிசாக தந்தவன் சிறு தலையசைப்புடன் சென்றுவிட்டான்.​

சமீபத்தில் அவனது தந்தை இயற்கை எய்தியிருந்தார்.​

கணவனுடன் அமெரிக்கா சென்றிருந்தாலும் தனக்கென அங்கே சில வியாபாரங்களை தொடங்கியிருந்த அவனது தாயார் லீலாவுக்கு மீண்டும் தாய்நாடு திரும்பும் எண்ணமில்லை என்பதால் இறுதி காரியத்தை அமெரிக்காவிலேயே முடித்துவிட சொல்லிவிட்டார்.​

அவரின் இறுதி காரியத்திற்காக அவன் அமெரிக்கா சென்றுவிட்டு இப்பொழுதுதான் நாடு திரும்பியிருந்தான்.​

தனியாக சென்றவன் வரும் போது தனது தம்பியையும் உடன் அழைத்து வந்திருந்தான்.​

தங்களது வியாபாரத்தை பெருக்குவதற்காக அமெரிக்கா சென்ற அவனது தந்தை சக்கரவர்த்திக்கு அந்த நாடு பிடித்து போய்விட அங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டதாகவும் யஷ்வந்த் மட்டுமே அவன் படித்த டாக்டர் படிப்பு, தன் சொந்த நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று எண்ணியதால் இந்தியாவிற்கே திரும்பிவிட்டதாகவும் அதிஷாவின் தாய் மேகவாணி சொல்லி கேள்விப் பட்டிருக்கிறாள்.​

அதுனாலேயே அவளுக்கு அவன் மீது மரியாதை கூடியிருந்தது.​

இந்த இளம் வயதில் அவனது பொறுப்பும், நாட்டு பற்றும் அவளை வியக்க செய்வதாகவே இருக்க செல்லும் அவன் முதுகை பார்த்து புன்னகைத்தவள் திரும்பி நடந்த நேரம் அவளது அலைபேசி அலறியது.​

கையில் இருந்த அலைபேசியைத் திருப்பி பார்த்தாள். ராகவன் என்று மிளிர்ந்தது.​

ஒருநொடி விழி விரித்து அவனது பெயரை பார்த்தவள் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.​

"ஹலோ" என்றாள்.​

"ஹலோ, ராகவன் ஹியர். கால் பண்ணிருந்திங்க.என்ன விஷயம்... நீங்க யாரு?" என்று கேட்டான்.​

"ஹலோ ராகவன், நான் ஹெலினாவோட ப்ரெண்ட் பேசுறேன்…நான் அதி… ”​

அவளின் அறிமுகம் முழுமையாக முடியும் முன்னவே இடைப்புகுந்து பேசத் தொடங்கியிருந்தான் அவன்.​

"இதோ பாரு, வாழ்க்கையில் சில புத்தகங்கள் மூடினது மூடினதாகவே இருக்கனும். மறுபடியும் திறந்து வாசிக்க ஆரம்பிச்சா காயப்படப் போறது நாம தான். சொல்லுறது புரியும்னு நினைக்குறேன்" என்று நிறுத்தினான்.​

"புரியுது. உங்க காயம் கால போக்குல ஆறியிருக்கும்னு நினைச்சேன். அதுதான் கால் பண்ணினேன். உங்கள காயப்படுத்துறது என் நோக்கமில்லை ராகவன். பட், உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். ரொம்பவும் முக்கியமான விஷயம். நான் சொல்லப்போற விஷயம் ஹெலினாவுக்கும் எனக்கும் மட்டும் இல்லை உங்களுக்கும் நிம்மதி கொடுக்கலாம். ப்ளீஸ், ஒரு முறை உங்களை மீட் பண்ண அனுமதி கொடுங்க. அதுக்கு பிறகு நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்றாள் கெஞ்சுதலாக.​

அவனிடம் மௌனம். அலைபேசி வழியே கேட்ட அவன் சுவாசத்தின் சத்தம் மட்டுமே அவன் இன்னமும் இணைப்பில் இருக்கின்றான் என்று உணர்த்தியது அவளுக்கு.​

"ராகவன்..."என்றழைத்தாள்.​

அவனை காயப்படுத்திவிட்டோமோ என்கின்ற எண்ணம் மனதில் மெல்ல தலைத்தூக்கியது.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து அவன் தன்னை நிதானப்படுத்திக் கொள்வது அலைபேசியின் வழி அவனது சுவாசத்தை அவதானித்து கொண்டிருந்தவளுக்குப் புரிந்தது.​

கண்களை ஒரு கணம் மூடித் திறந்துக்கொண்டாள்.​

"ஐம் சாரி ரகவான். நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். வச்சிடுறேன்" அதற்கு மேலும் அவனை வறுத்த பிரியமில்லாமல் அழைப்பை துண்டிக்க விளைந்தாள்.​

"ஒரு நிமிஷம், காலப்போக்குல காயம் ஆறியிருக்கும்னு நினைச்சேன்னு சொன்னல்ல... ஆறல... ஆத்தக்கூடிய மருந்தையும் நான் இன்னும் பார்க்கல" என்று சொல்லியவன் ஒரு நொடி மௌனத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தான்.​

"மூனு வருஷத்துக்கு முன்ன கால் பண்ணியிருந்த. இப்போ மறுபடியும்... முக்கியமான விஷயம்னு புரியுது. ஓகே... மீட் பண்ணலாம். பட், இப்போ முடியாது.கண்டிப்பா நானே ஒரு நாள் உனக்கு கூப்பிடுறேன்...ஐ நீட் சம் டைம்" என்றான்.​

"டேக் யுவர் டைம் ராகவன். ஐ வில் வெயிட்... வச்சிடுறேன்" என்று அழைப்பை துண்டித்திருந்தாள்.​

காதிலிருந்து அலைபேசியை எடுத்து அதன் திரையை பார்த்தான். அழைப்பு துண்டிக்கக்ப்பட்டிருந்தது.​

ஆனால், அவனுக்குள் ஒருவித நிம்மதி பரவுவதை உணர்ந்தான். யாரிடமும் அவன் மனம் திறந்து பேசியிராத விடயத்தை அவளிடம் பேசியதன் விளைவோ என்று கூட தோன்றியது. ஒருவேளை அவளை சந்திப்பது தான் அவன் காயத்துக்கு மருந்தாக இருக்க கூடுமோ என்ற கேள்வியும் மனதில் உதிக்க அப்படியே விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.​


 
Status
Not open for further replies.
Top