எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை-அத்தியாயம் 3

Status
Not open for further replies.

WhatsApp Image 2024-04-02 at 11.49.18 PM.jpeg

அத்தியாயம் 3

அலைபேசியை கைப்பையினுள் பத்திரப்படுத்தி விட்டு "சாரி அஷ்... லேட் ஆக்கிட்டேனா?" என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு பின்னால் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.​

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அம்மா, சித்தி வீட்டுக்கு போகணும்னு சீக்கிரம் வர சொன்னாங்க. அங்க போனா செம்ம போர்... நானே கொஞ்சம் லேட்டா போனா நல்லா இருக்கும்னு தான் நினைச்சிட்டிருந்தேன்" புலம்பிக்கொண்டே வண்டியை கிளப்பியிருந்தாள் அஷ்வினி.​

வீட்டை நோக்கிய பயணத்தில் எதிர்காற்று முகத்தில் வீச காற்றில் ஈரப்பதம் கூடியிருப்பது போன்று உணர்ந்தாள் அதிஷா.​

நிமிர்ந்து வானத்தை பார்த்தாள். வானம் மெல்ல கறுக்க தொடங்கியிருந்தது. மழைக் குருவிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. மழை வருவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட்டது.​

"மழை வரும்னு நினைக்குறேன் அஷ்" என்றாள்.​

"ஆமா, உன்னை வீட்டில் விட்டுட்டு நானும் சீக்கிரம் வீடு போய் சேரனும். இல்ல இன்னைக்கு மழையில் தான் குளியல்" என்று படப்படத்தவள் வண்டியின் வேகத்தை கூட்டியிருந்தாள்.​

அன்றைய தினத்து வேலை பளுவும் ராகவனுடனான உரையாடலுமாக அதிஷாவிற்கும் சோர்வாக இருக்க மெல்ல அஷ்வினியின் தோளின் மீது தலை சாய்த்துக் கொண்டாள்.​

வண்டியின் வேகத்தில் தங்களை கடந்து செல்லும் சாலையோர மரங்களில் அவளது பார்வை பதிந்தது. மரங்கள் கடந்து பின்னால் செல்ல செல்ல அவளது நினைவுகளும் அந்த மரங்களுடனே பின்னோக்கி நகர்ந்தன.​

தேனீ மாவட்டம்...​

தென்மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கியிருந்த தருணம்…​

கல்லூரியில் பயிலும் போது​

மருத்துவ முகாமிற்காக அங்கே சென்றிருந்தார்கள்.​

மருத்துவ முகாமின் இறுதி நாள் அன்று. அதோடு அவளது பிறந்த தினம் வேறு.​

கையில் சாக்லேட் பாக்சுடன் அவள் நின்றிருக்க அவளுக்கு எதிரில் ராகவன் வந்துக் கொண்டிருந்தான்.​

கையில் சிகப்பு நிற ஒற்றை ரோஜாவுடன் முகமெல்லாம் புன்னகை ஏந்தியிருக்க மற்றொரு கரத்தால் தலையை கோதிக்கொண்டே நடந்து வந்தான்.​

மெல்லிய சாரல் மழையில், வீசிய தென்றல் காற்றில் அவர்கள் இருவருக்கும் இடையேயிருந்த அடர்ந்த மரத்தின் இலைகள் அசைந்தாடி கீதம் படிக்க நடந்து வந்தவன் அவள் கண்களுக்கு கவிதையாக தான் தெரிந்தான்.​

ஒரு நொடி வந்த வேலையை விடுத்து இமைக்க மறந்து அவனை ரசித்தாள்.​

இயற்கையாகவே ரசனை அதிகமுள்ள பெண் அவள். கண்களுக்குப் புலப்படும் அழகிய காட்சிகள் யாவையும் இது நாள் வரை ரசிக்கத் தவறியதில்லை.​

இன்றும் அப்படித்தான். இயற்கை எழில் கொஞ்சும் அச்சூழலில் சுட்டிக்காட்டப் பிழையேதுமின்றி, அவனது வருகை மேலும் அவ்விடத்தை மெருகேற்றியிருக்க அழகோவியமாய் தெரிந்த காட்சி கண்களுக்கு விருந்தாகிய தருணத்தை மறவாமல் இதயத்திலும் சேமித்துக்கொண்டாள்.​

இன்னும் சற்று நேரத்தில் அதே அழகிய காட்சி அகோரமாக மாறிவிடப்போகின்றது என்று தெரியாமல்.​

அவனது இதழ்களில் தவழ்ந்த புன்னகை, அவனை ரசித்துக்கொண்டு நின்ற அவளது இதழ்களிலும் தொற்றிக்கொள்ள மெல்ல இதழ் பிரித்து சிரித்தாள்.​

நடந்து வந்தவன் அவளுக்கு எதிரே நின்று ரோஜா மலரை நீட்டியிருந்தான்.​

திடிரென்று ஒரு அதிர்வு, உடல் குலுங்கி சமநிலை தவறுவது போன்ற உணர்வில் சட்டென்று கண்களை திறந்து பார்த்தாள்.​

அஷ்வினியின் தோள்களை அழுந்த பற்றிக்கொண்டாள்.​

அந்த அழுத்தத்தை உணர்ந்த அஷ்வினி "சாரிடி, ஸ்பீட் பிரேக்கர் இருந்தது…கவனிக்கல" விளக்கமளித்தாள்.​

"பரவால்ல, பார்த்துப் போ அஷ்" என்றவளுக்கு நினைவுலகம் கலைந்து நிஜ உலகம் திரும்பியிருந்தது.​

இன்றும் ராகவன் அன்று பார்த்தது போல் அப்படியே தான் இருப்பானா என்று சிந்தித்தவள் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு கடந்தக்கால நினைவுகளை நெட்டி தள்ளினாள்.​

****​

அந்தி சாய்ந்த வேலையில் மழை இருள் சூழ்ந்திருக்க வானத்தில் மின்னல்களும் இடிகளும் படையெடுக்க மழைத்துளி மெல்ல​

பூமியை நனைக்க ஆரம்பித்திருந்தது.​

அமைதியின்றி காணப்பட்ட வானத்தை போலவே அங்கே இருந்த சூழலும் அமைந்திருந்தது.​

மழை பெய்ய தொடங்கியிருந்தாலும் அங்கே இருந்த கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் கோவிலுக்கு வெளியில் போட்டிருந்த கடைகளுமாக ஓரளவு மக்கள் கூட்டம் நிறைந்து தான் காணப்பட்டது.​

சுற்றியிருந்த அனைவரும் கிடைத்த இடத்தில் ஒதுங்கி நின்று அங்கே நடு தெருவில் முகமெல்லாம் அடிபட்டு மழை நீருடன் கலந்து குருதி வழிய, போட்டிருந்த காக்கி சட்டையினாலேயே கைகள் முதுகுக்கு பின்னால் கட்டப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக மண்டியிட்டு அமர்ந்திருந்தவனை பயத்துடனே பார்த்துக்கொண்டிருந்தனர்.​

மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் பெயர் கமலேஷ். அந்த வட்டார இன்ஸ்பெக்டர் அவன்.​

அவனுக்கு நேரெதிரே ஒரு ஜீப் நின்றிருந்தது.​

ஜீப்பின் பானெட்டின் மீது சாய்ந்து படுத்தபடி கால் மேல் கால் போட்டு கொண்டே சிகரெட்டை வாயில் வைத்து இழுத்து புகையை வட்ட வட்டமாக வெளியில் விட்டுக்கொண்டிருந்தான் ஆதிஷ்.​

ஆதிஷ் என்கின்ற ஆதிசேஷன்.​

சென்னையில் அதிகம் கொட்டமடித்துக் கொண்டிருந்த ரௌடி ரங்காவை போட்டு தள்ளி அவன் இடத்தை பிடித்துக் கொண்டவன். பலசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூடக். அதனால் தான் ரங்காவுக்கு ஆதரவாக இருந்த கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவன் பக்கம் சாய்ந்து விட இப்பொழுது அவ்விடத்தை அவன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.​

ஜீப்பிற்கு அருகே நின்றிருந்த அவனுடைய வலது கை கதிரின் கைகளில் இருந்த வானொலியில் ' என் நிழலில் மிருகம் தெரியுது ஏனென என்னை கேட்காதே… நான்தான் நான்தான் முழுதும் நான்தான்..' என்ற பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தன.​

"ச்சுச்சுச்சு... என்னடா பாட்டு போடுற... மிருகம், பேயின்னு..." என்று சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தமர்ந்த ஆதிஷ் கையில் இருந்த சிகெரெட் துண்டை சுண்டிவிட்டான்.​

அது அங்கே வலியிலும் வேதனையிலும் முனகிக் கொண்டிருந்த காமலேஷின் முகத்தில் பட்டுத் தெரித்தது.​

சிகெரேட்டின் நெருப்பு துகள்கள் அவன் கன்னத்தை பதம் பார்த்திருக்க "ஸ்ஸ்ஸ்" என்று பற்களை கடித்து வலியை பொறுத்துக்கொள்ள முயன்றான் அவன்.​

"இப்படி பாட்டு போட்டா ஏற்கனவே பயந்து போயிருக்குற நம்ம இன்ஸ் இன்னும் பயந்துற மாட்டாரா? கொஞ்சம் சாஃப்ட் ஆஹ் ஏதும் போடுடா" என்றான் ஆதிஷ்.​

பக்கத்தில் நின்றவனோ "என்ன பாட்டுண்ணே போடணும்?" என்று தலையை சொரிந்தப்படி கேட்க ஒரு கணம் கண்களை சுற்றி சுழல விட்டவன்​

"சுத்தி பாருடா, மழை தூறல்ல கலர் கலரா எத்தனை பொண்ணுங்க நிக்குறாங்க. புடவையும், சுடிதாருமா ஒவ்வொன்னும் சும்மா லட்டு மாதிரி..." என்று அவன் சத்தமாக சொல்ல அங்கே நின்ற பெண்கள் அவன் கழுகுப் பார்வையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள அருகே நின்ற அப்பா,அண்ணன், தம்பி என்று உடன் வந்திருந்த துணையின் பின்னாலோ அல்லது தூணுக்கு பின்னாலோ மறைந்துக்கொள்ள முயன்றனர்.​

அவர்களை பார்த்து ஏளன புன்னகை ஒன்றை சிந்தியவன் "அதுக்கேத்த மாதிரி நல்ல பாட்டா ஒன்னு போடுடா... போட்டு தள்ளறதுக்கும் நல்ல மூட் வேணும்ல" என்று சொல்லிக்கொண்டே முதுகில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து லோட் செய்தான்.​

சரியாக அந்நேரம் "ஆஹ் அம்மா…" என்ற அலறல் சத்தம்.​

சத்தம் கேட்ட திசையில் திரும்பி பார்க்க அஷ்வினியும் அதிஷாவும்தான் ஸ்கூட்டரோடு கீழே விழுந்திருந்தனர்.​

அதிஷாவின் வீட்டிற்கு செல்ல அந்த பாதையில் தான் செல்ல வேண்டும். அங்கே நடந்துக்கொண்டிருந்த கலவரம் தெரியாமல் வழக்கம் போல அந்த பாதையில் நுழைந்த அஷ்வினி அங்கே ஆதிஷ் கையில் துப்பாக்கியோடு அமர்ந்திருப்பதை பார்த்து பயத்தில் ஏற்பட்ட நடுக்கத்தில் தடுமாறியவள் ஸ்கூட்டரோடு கீழே விழுந்திருந்தாள்.​

அது எதையும் கவனிக்காத அதிஷா "என்ன அஷ் இப்படி தள்ளிவிட்டுட்ட" என்று கேட்டபடி கீழே விழுந்ததில் அடிப்பட்டிருந்த கையை தேய்த்துவிட்டுக்கொண்டே எழுந்து நின்றாள்.​

அங்கே அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்த ஆதிஷ் ஒற்றை புருவத்தை உயர்த்தி கண்களாலேயே அவ்விடத்தை விட்டு நகர சொல்ல பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிய அஷ்வினி " பேசாம வாடி...எல்லாம் அப்புறம் சொல்லுறேன்" என்று அவள் கையை பற்றி இழுத்துச்சென்று அருகே இருந்த பூக்கடையில் நின்றுக்கொண்டாள்.​

"என்னாச்சு அஷ்?" அதிஷா கேட்க "ஆதிஷ்... பெரிய ரவுடி... பார்த்ததில்லையா?" எங்கே அவனுக்கு கேட்டு விடப் போகின்றது என்ற பயத்தில் பற்களை கடித்துக்கொண்டே கிசுகிசுத்தாள் அஷ்வினி.​

"கேள்விப் பட்டிருக்கேன்… பார்த்ததில்ல" சொன்ன அதிஷா திரும்பி ஆதிஷை பார்த்தாள்.​

ஆதிஷின் பார்வையும் இன்னும் அவர்கள் மீதே படிந்திருக்க​

சரியாக அந்த நேரம் பார்த்து மின்னல் வெட்டியது.​

மின்னல் ஒளியில் அதிஷா அவனை பார்த்த சமயம் ஆதிஷும் அவள் முகத்தை பார்த்தான்.​

கதிரும் 'எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... ஏதோ..அது ஏதோ உன்னிடம் இருக்கிறது...' என்ற பாடலை ஒலிக்கவிட்டிருந்தான்.​

அப்படியே மெதுவாக தலையை திருப்பி கதிரை பார்த்தான்.​

"சிச்சுவேஷன் சோங்கா டா…ஆனாலும், நல்ல பட்டுல...." என்றவனின் தோட்டா யாருமே எதிர் பார்க்காத நேரத்தில் காமலேஷின் நெற்றி பொட்டில் இறங்கியிருந்தது.​

அதிர்ந்த துப்பாக்கி சத்தத்தில் ஒருகணம் கண்களை மூடிந்திருந்தாள் அதிஷா.​

மண்டியிட்டு அமர்ந்திருந்த கமலேஷின் உயிர் பிரிந்திருக்க அப்படியே சரிந்துத் தரையில் வீழ்ந்தான்.​

சாலையில் ஓடிக்கொண்டிருந்த மழை நீரோடு அவன் இரத்தமும் கலந்து குருதி ஆறாக ஓடியது.​

சுற்றியிருந்த கூட்டத்தினருக்கு பயமும் பதட்டமும் கூடியதே தவிர குறையவில்லை. அவனைத் தட்டிக் கேட்கவும் யாருக்கும் தைரியமுமில்லை.​

அவனை எதிர்த்த காவல் அதிகாரியான காமலேஷுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களான அவர்களின் நிலை என்னவாகும் என்கின்ற பயம்.​

நடுத்தெருவில் ஒரு காவல் அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு அவன் துணிந்திருக்கும் பொழுது அவர்களின் உயிர் எல்லாம் அவனுக்கு துச்சம் என்று நினைத்துக்கொண்டவர்கள் உயிரற்று பிணமாக கிடந்த காமலேஷையே பரிதாபமாக பார்த்திருந்தனர்.​

துப்பாக்கியை எடுத்து முதுகில் சொருகிக்கொண்டே "என் விஷயத்துல தலையிட்டா உயிர் போய்டும்னு சொன்னேன்ல… இப்போ பாரு அனாமத்தா போய்டுச்சு" என்று ஒரு உயிரை எடுத்ததை சர்வ சாதாரணமாக சொல்லியவனின் விழிகள் அங்கே கூடியிருந்த கூட்டத்தினரின் மீது படிந்தது.​

அவன் சொல்லியது காமலேஷிற்கு மட்டுமல்ல அவனை காட்டிக்கொடுக்க நினைக்கும் யாருக்கும் இதுதான் கதி என்று மறைமுகமாக மிரட்டுகிறான் என்பதும் அங்கிருப்பவர்களுக்கு புரிந்துப்போக அனைவரும் பயத்தில் தலையை கவிழ்ந்துக் கொண்டார்கள்.​

பார்வையை அவ்விடத்தை சுற்றி சுழல விட்டபடியே அவர்களை பார்த்து ஒரு இளக்கார புன்னகை சிந்தியவனின் பார்வையில் கீழே விழுந்து கிடந்த ஸ்கூட்டர் தென்பட "சுச்சுச்சு" என்று உச்சுக் கொட்டிக்கொண்டே ஸ்கூட்டரை நோக்கி நடந்துச் சென்றவன் ஒற்றை கரத்தால் அதை தூக்கி நிறுத்தியிருந்தான்.​

பெண்கள் இருவரின் மீதும் படிந்த அவன் பார்வையிலேயே புரிந்துகொண்ட அஷ்வினி "எனக்கு பயமா இருக்கு…நீயும் வாடி" என்று அதிஷாவை முன்னுக்கு விட்டு அவளுக்கு பின்னால் மறைந்தபடியே அவன் அருகே சென்றாள்.​

பெய்துக்கொண்டிருந்த மழையில் நனைந்தபடி நின்றிருந்த அதிஷாவை ஆழ்ந்து பார்த்தவன் "ம்பச்... சாரி பேபி... புது வண்டியா? விழுந்ததுல கொஞ்சம் நசுங்கிடுச்சு. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, நம்ம பசங்களே சரி பண்ணி கொடுத்துடுவானுங்க...ஓகேயா பேபி?" என்று அவன் சொல்லிக்கொண்டே போக "வேணாம்... நாங்க பார்த்துக்குறோம்" என்றாள் அதிஷா தீர்க்கமான குரலில்.​

"என்னது… என்ன சொன்ன?" என்று அவன் உதவியை அவள் மறுப்பதில் கடுப்பானவன் ஒற்றை புருவத்தை ஏற்றியபடி கேட்க அதிஷா அவனது பார்வையை தாங்கி நின்றாள் என்றால் அஷ்வினிக்குத் தான் பயத்தில் வியர்த்து வழிந்தது.​

ஆதிஷை பற்றி பத்திரிகை நிருபராக இருக்கும் அவளுடைய அண்ணன் சொல்லி நிறைய கேள்விப் பட்டிருக்கிறாள். அதுதான் அவனைக் கண்டதும் அவளுக்கு கால்கள் ஆட்டம் கண்டுவிட்டன.​

"இல்லங்க ரவுடி சார்...நீங்களே பண்ணிக்கொடுங்க...அவ ஏதோ பயத்துல உளருறா..." என்றாள் அஷ்வினி.​

"அது…” என்று மிரட்டலாக சொன்னான்.​

“இந்த பேபிய விட” அதிஷாவைக் கண்களால் காட்டியவன் “நீதான் குட் பேபி" என்று உதடு குவித்து அஷ்வினிக்கு முத்தமொன்றை பறக்க வேறு விட்டான்.​

அவன் செயலில் அதிர்ந்த அஷ்வினி "ஆத்தி..." என்று சொல்லிக்கொண்டே மேலும் அதிஷாவுடன் ஒட்டிக்கொண்டாள்.​

அதிஷா எதுவும் பேசவில்லை. ஆனால், அவளின் பார்வை அவன் மீதே படிந்திருந்தது. அதில் பயமில்லை, குருட்டு தனமான தைரியமும் இல்லை.​

ஒருவகை ஆராய்ச்சி அவள் பார்வையில். அவனுக்குள் ஊடுருவி பார்க்க முயல்வதை போன்ற உணர்வு அவனுக்கு.​

ஒற்றை கரத்தால் முகத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த தாடியை தடவியவன் அவளை மேலிருந்து கீழே பார்த்தான்.​

'ப்பா... என்ன கண்ணுடா இந்த பொண்ணுக்கு... பார்வையாலையே எக்ஸ்-ரெ(x-ray) எடுப்பா போல' என்று மனதில் நினைத்துக் கொண்டே"கதிர்" என்று சத்தமாக அழைத்தான்.​

அவன் அருகே வந்ததும் "இந்த வண்டியை என்னனு பார்த்து கொடுதிடு...பாவம் பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா என் மனசு தாங்காது" என்று ஒரு மார்க்கமான குரலில் சொன்னவன் "வரட்டா பேபி" என்று அதிஷாவின் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றான்.​

ஜீப்பை எடுத்துக்கொண்டு ஆதிஷ் கிளம்ப அவன் வண்டியின் பின்னால் எழுதியிருந்த வாசகம் தான் அதிஷாவின் கவனத்தை ஈர்த்தது. ‘Keep calm the sky is not falling” என்று எழுதியிருந்தது. அவன் செய்கின்ற காரியத்திற்கும் எழுதியிருக்கும் வாசகத்திற்கும் முரணாக இருப்பது போன்று தோன்ற அவளது புருவம் மெலிதாக இடுங்கியது.​

அவளின் கவனம் ஆதிஷின் மீது படிந்திருக்க கதிர் அஷ்வினியின் ஸ்கூட்டரையும் அவளது அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு கிளம்பி விட்டான். அதன் பின்னர் பெண்கள் இருவரும் ஆளுக்கொரு ஆட்டோ பிடித்து தத்தமது வீட்டிற்கு திரும்பியிருந்தார்கள்.​

பிறந்தநாள் அதுவுமாக இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாமே சேர்ந்து அவளை சோர்வடைய செய்திருந்தது.​

அதுவும் ஒரு காவல் அதிகாரியின் கொலையை நேரில் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள். உயிரை காக்கும் தொழில் செய்பவள் அவள் கண் முன்னே ஒரு உயிர் போயிருந்தது.​

ஒரு ஆயாச பெருமூச்சுடன் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள் மழை பெய்து ஓய்ந்திருந்தது. மின்சார கம்பிகளில் மழைத்துளிகள் தொட்டில் கட்டி ஆடிக்கொண்டிருந்தன... மழையில் நனைந்திருந்த சாலைகளும் மரங்களும் ஒருவகை அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.​

சற்றே நிமிர்ந்து வானத்தை பார்த்தாள். அடர்ந்திருந்த கருமேகங்கள் நீர்துளிகளாக உருமாறி பூமியை முத்தமிட்டதன் விளைவாக வானம் தெளிந்திருந்தது.​

வளர்ந்திருந்த மூன்றாம் பிறையுடன் ஆங்காங்கே தூரத்தில் வைர மூக்குத்தி போல மின்னிய நட்சத்திரங்களும் கண்களை நிறைத்தன.​

சோர்ந்திருந்த மனதிற்கு கொஞ்சமாக தெம்பு கிடைத்தது போன்ற உணர்வு.​

ஈர உடைகளை களைந்த பின் குளிக்கச் சென்றாள்.​

குளித்து விட்டு வந்தவளின் அலைபேசி அதிர்ந்து ஓய்ந்தது.​

ஈர கூந்தலை துவட்டிக்கொண்டே அலைபேசியை எடுத்து பார்த்தாள். அஷ்வினி தான் எடுத்திருந்தாள்.​

மீண்டும் அஷ்வினிக்கு அழைத்தாள் அதிஷா.​

"வீட்டுக்கு பத்திரமா போயிட்டியா ?" என்றுத்தான் ஆரம்பித்தாள் அஷ்வினி.​

"ம்ம்ம்... வந்துட்டேன். நீ?" விசாரித்தாள் அதிஷா.​

"வந்துட்டேன் அதி. ஆனால், மனசுக்கு தான் ஒரு மாதிரி இருக்கு. கண்ணு முன்னாடி நடந்த கொலைய பார்த்துட்டு எதுவும் பண்ணாம இருக்கோமேன்னு தோணுது" என்றாள் அஷ்வினி.​

"ப்ராக்டிக்கல் ஆஹ் யோசிச்சு பாரு... இதுல நீயும் நானும் என்ன பண்ண முடியும்னு நினைக்குற?" கேள்வி அதிஷாவிடமிருந்து.​

"போலீஸ் கிட்ட போகலாமா... " என்று அஷ்வினி ஆரம்பிக்க "அவன் போட்டு தள்ளுனதே போலீஸ்க்காரனை தான்" என்றாள் அதிஷா.​

"ம்ம்…இதையே தான் அண்ணாவும் சொன்னான்" அஷ்வினி சொல்ல "மனச போட்டு குழப்பிக்காமல் ஃபிரீயா விடு அஷ். குட் நைட். நாளைக்கு பார்க்கலாம்" என்று அழைப்பை துண்டித்திருந்தாள் அதிஷா.​

ஆதிஷின் துப்பாக்கி சத்தமும் குண்டடிப்பட்டு கமலேஷ் சரிந்து விழுந்த காட்சியும் ஒரு நொடி கண் முன்னே வந்து போனது.​

மனதிற்கு என்னவோ போல இருந்தாலும் அவனை எதிர்ப்பது சரியல்ல எனும் நிதர்சனம் புரிய அமைதியாக அந்த சம்பவத்தை கடந்து விட நினைத்துகொண்டாள் பாவையவள்.​


 
Status
Not open for further replies.
Top