எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை-அத்தியாயம் 4

Status
Not open for further replies.

_6832db50-2e2b-4870-b880-407cc371589a.jpg

அத்தியாயம் 4

மறுநாள் காலையில் வழக்கம் போல கிளம்பி வேலைக்கு சென்றாள். இன்று அவளுடைய அன்னை மேகவாணியுடனே மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.​

அவளுடேனே மருத்துவமனைக்குள் நுழைந்தவர் அவளிடம் விடைப் பெற்றுக்கொண்டு தனது அலுவலகம் நோக்கி சென்றுவிட அதிஷா தனது அறையை நோக்கி நடந்தாள்.​

நடந்து வந்தவளின் விழிகளில் ஆங்காங்கே மருத்துவமனை ஊழியர்களும், ஒரு சில இளம் பெண் தாதியர்களும், சில பெண் மருத்துவர்களும் நின்றுக்கொண்டு உலகம் மறந்து ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றிருப்பது தான் தெரிந்தது. அதில் அஷ்வினியும் அடக்கம்.​

அவர்களின் அந்த பார்வை அவளுக்கொன்றும் புதிதல்ல. இங்கே வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து பார்த்து பழகியது தான். அவர்களின் அந்த மெய்மறந்த பார்வைக்கு சொந்தக்காரன் வேறு யாருமல்ல யஷ்வந்த் சக்கரவர்த்தி தான் என்று அவர்களின் பார்வை செல்லும் திசையை பார்க்காமலே சரியாக யூகித்துவிட்டாள்.​

அழுத்தமான காலடிகளுடன், நிமிர்ந்த நடையுடன், கூரிய விழிகளுடன் மேலும் சில மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் புடை சூழ நடந்து வந்து கொண்டிருந்தான்.​

அருகே வந்து கொண்டிருந்த மற்றொரு மருத்துவரிடம் எதையோ கேட்டுக்கொண்டே நடந்து வந்தவனின் கேள்விக்கு கையில் இருந்த நோயாளியின் கோப்பை அவசரமாக புரட்டி பார்த்து பதில் சொல்லிக்கொண்டே அவரும் உடன் நடக்க சுற்றி இருப்பவர்களின் பார்வையை அவதானித்தாலும் அதையெல்லாம் பெரியதாக கண்டுகொள்ளாமல் அனைவரையும் கடந்து அறுவை சிகிச்சை அறையை நோக்கி நடந்தான் யாஷ்.​

அவனது ஆளுமையும் தோரணையும் அழகும் வசீகரமான அவனது புன்னகையும் அனைவரையும் ஒரு நொடி நின்று அவனை திரும்பி பார்க்க செய்வதாக தான் இருந்தது.​

அவனை பார்த்துக்கொண்டே பெருமூச்சொன்றை இழுத்து விட்ட அஷ்வினி "இவரை கட்டிக்க யாருக்கு கொடுத்துவச்சிருக்கோ தெரியலயே" என்று வாய்விட்டே புலம்ப "எனக்கு தான்" என்று சொல்லிக்கொண்டே அவள் பக்கத்தில் வந்து நின்றாள் அதிஷா.​

அவளின் குரலை வைத்தே அவளை கண்டுகொண்ட அஷ்வினியும் "அப்படிச் சொல்ல எனக்கும் ஆசைதான்" என்று சலித்துக்கொண்டே அவள் புறம் திரும்ப அதிஷாவின் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டன.​

அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாக "நிஜமாவா" என்று கத்தியே விட்டாள்.​

"ஷ்ஷ்ஷ்..." என்று ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்து விழிகளால் தாங்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிக்காட்டினாள் அதிஷா.​

அஷ்வினி போட்ட சத்தத்தில் அவர்களை கடந்து சென்றவர்கள் எல்லாம் அவரைகளை விசித்திரமாக பார்த்துவிட்டு சென்றனர்.​

அதை கவனித்த அஷ்வினி குரலை செருமி தன்னை நிலைப்படுத்திக்கொண்டே "சாரி...சாரி... நீ சொன்னது நிஜம் தானா?" என்று மீண்டும் கேட்டாள்.​

'ஆம்' என்னும் ரீதியில் அவள் தலையசைக்க ஒரு கணம் அதிர்ந்து நின்ற அஷ்வினியை பார்த்து இடவலமாக தலையாட்டிவிட்டு ஒரு மென்புன்னகையுடன் கடந்து சென்றாள் அதிஷா.​

உணர்வுக்கு வந்த அஷ்வினி "திடிர்னு இப்படி எல்லாம் அதிர்ச்சி கொடுத்தா பிறகு என்னையும் இதே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட வேண்டியது தான்" என்றபடி அதிஷாவின் பின்னோடு ஓடி வந்தவள் "என்னாச்சு, எப்படி திடிர்னு...நேத்து தானே பார்க்கிங்ல பார்த்தோம். அப்போ கூட இதை பத்தி நீ ஒன்னும் சொல்லலையே" என்று கேள்வி கணைகளை தொடுத்தபடி அவளுடன் நடந்தாள்.​

அவளின் கேள்விகள் செவிகளுக்குள் நுழைந்தாலும் அதற்கான பதில்களை சொல்லாமலே தனது அறை கதவை திறந்துக்கொண்டு அதிஷா உள்ளே நுழைய அவளை அதிருப்தியாக பார்த்துக்கொண்டே அஷ்வினியும் அறைக்குள் நுழைந்தாள்.​

தனது கைப்பையை உரிய இடத்தில வைத்து பத்திரப்படுத்தியவள் மேசை மீதிருந்த ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டி கொண்டே வெளியேற போக அவள் கையை பிடித்து தடுத்திருந்தாள் அஷ்வினி.​

"என்னடி...பிறகு நேரம் கிடைக்கும் போது சொல்லுறேன். இப்போ கையை விடு,வேலை இருக்கு " என்ற அதிஷாவை முறைத்த அஷ்வினி "எனக்கும் தான் இருக்கு " என்றாள்.​

"அப்போ போய் செய்" என்றாள் சாதாரணமாக.​

"அதெல்லாம் முடியாது இப்போவே சொல்லு. இப்படி ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்லிட்டு விளக்கம் கொடுக்காமல் நீ பாட்டுக்கு பேஷன்ஸை பார்க்க கிளம்புனா எப்படி?" என்றாள் அஷ்வினி.​

"இப்போ என்ன?" என்று அதிஷா கேட்க​

"என்ன, எப்படின்னு விளக்கமா சொல்லிட்டு போ. இல்லன்னா என் தலையே வெடிச்சிடும். பிறகு பம்மல் கே சம்மந்தத்துல கமல் வயித்துல சிம்ரன் வாட்ச் வச்சு தைச்ச மாதிரி நான் யார் வயித்துல எதை வச்சு தைப்பேன்னு தெரியாது" என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு.​

"இன்னிக்கு உனக்கு ஏதும் ஆபரேஷன் இருக்கா என்ன...அப்படியே இருந்தாலும் அஸ்சிஸ்ட் தானே பண்ண போற... அதெல்லாம் எதையும் மாத்தி வச்சு தைக்க வாய்ப்பே இல்லை" என்று அதிஷா சொல்ல "இப்போ அது ரொம்ப முக்கியம்" என்று கடுப்பாக ஆரம்பித்து "ப்ளீஸ் டி வழக்கம் போல சஸ்பென்ஸ்ல விடாமல் என்னன்னு சொல்லிட்டு போ" என்று கெஞ்சுதலாக முடித்தாள் அஷ்வினி.​

நண்பியையும் பார்க்க பாவமாக இருக்க மணிக்கட்டை திருப்பி நேரத்தை பார்த்தாள். நோயாளிகளை காக்க வைக்க எப்பொழுதுமே அவள் விரும்புவதில்லை. அதனால் தான் நேரத்தை சரியாக பின்பற்ற நினைப்பாள். வார்டிற்கு ரௌண்ட்ஸ் போக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள் "அது நேத்து ராத்திரி..." என்று அதிஷா ஆரம்பிக்க அண்ணார்ந்து விட்டத்தை பார்த்தாள் அஷ்வினி.​

அவளை புருவம் இடுங்க பார்த்த அதிஷா "கதை கேட்டுட்டு மேல என்னடி பார்க்குற" என்று கேட்க "ஃபிளாஷ்பாக் சொன்னா மேல பார்க்கணும்ல" என்ற நண்பியை முறைத்து பார்த்தாள் மற்றையவள்.​

"நீயும் பாருடி அப்போதான் ஒரு ஃபீல் கிடைக்கும்" என்றவள் அதிஷாவின் முகத்தை பற்றி மேலே பார்த்தபடி நிமிர்த்தியும் விட்டிருந்தாள்.​

"இம்ம் இப்போ சொல்லு" என்றாள் அஷ்வினி.​

நண்பியை பக்கவாட்டாக திரும்பி பார்த்து முறைத்த அதிஷா முந்தைய நாள் இரவு நிகழ்ந்த சம்பவத்தை சொல்ல தொடங்கியிருந்தாள்.​

முதல் நாள் இரவு...​

குளித்து விட்டு வந்த அதிஷா அஸ்வினியிடம் பேசிவிட்டு அலைபேசியை அணைத்தவள் அன்றைய நாளில் நிகழ்ந்த நிகழ்வுகளில் இருந்து தன்னை மீட்டெடுத்து நிதானப்படுத்திக்கொள்ள நினைத்தவளாக விழிகளை மூடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.​

அப்பொழுது அவளது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து சென்று கதவை திறந்தாள்.​

அங்கே நின்றிருந்தார் அதிஷாவின் தந்தை சேகரன்.​

"ஹாப்பி பர்த்டே டா அதி" என்று அவள் தோளோடு அணைத்து வாழ்த்து கூறியவர் அவள் கையில் சிறு நகை பெட்டியையும் கொடுத்தார்.​

"சாரி இன்னிக்கு காலையிலிருந்து உன்னை காண கிடைக்கல. அப்பாவுக்கு முக்கியமான பிசினெஸ் மீட்டிங் இருந்துச்சுடா கண்ணா. அதுதான் இப்போ விஷ் பண்ணுறேன்" என்று தாமதமாக வாழ்த்தியதுக்கு மன்னிப்பும் கேட்டார்.​

"நீங்க இப்போவாவது விஷ் பண்ணிட்டீங்க. அம்மா இன்னும் அதை கூட பண்ணல" என்றாள்.​

"இப்போ கொஞ்சம் வேலை அதிகமா இருக்குன்னு சொல்லிட்டிருந்தா. வேலை பிசியில் மறந்திருப்பா டா. பட் இப்போதான் உனக்கு ஏதோ ஸ்பெஷல் கிப்ட் ரெடி பண்ணிருக்கேன்னு சொல்லிட்டிருந்தா" என்று மனைவிக்காக விளக்கம் கொடுத்தார் அவர்.​

ஒரு மென்புன்னகையுடன் தலையை மட்டும் ஆமோதிப்பாக அசைத்துக்கொண்டே அவர் கொடுத்த நகை பெட்டியை திறந்தாள்.​

உள்ளே மெலிதாய் அதிஷா என்று அவள் பெயர் பொறிக்கப்பட்டிருந்த பிரெஸ்ட்லெட் இருந்தது.​

"பிடிச்சிருக்கா" என்று கேட்டார்.​

"அழகா இருக்கு.தேங்க்ஸ் ப்பா" என்றாள்.​

"இம்ம்...போட்டுக்கோ" என்றபடி அதை எடுத்து அவள் கையில் போட்டு விட்டவர் "இப்போ தான் இன்னும் அழகா இருக்கு" என்றார்.​

அவரை ஆழ்ந்து பார்த்தவள் "உங்களை ஏன் அம்மா இவ்வளோ லவ் பண்ணுறாங்கன்னு இப்போ புரியுது" என்று சிரித்தாள்.​

அவள் சொன்ன தோரணையில் இதழ் பிரித்து சத்தமாக சிரித்தவாறு "சரி வா சாப்பிட போகலாம்" என்று அவளையும் அழைத்து கொண்டே சாப்பாடு மேசையில் வந்து அமர்ந்தார்.​

அவள் வரும் போதே அவளுடைய பத்து வயதேயான தம்பி கிஷோர் அங்கே அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தான். அவனை கவனித்துக்கொள்ளும் அவனுடைய பிரத்தியேக பணியாளரான​

மலரும் உடன் இருந்து அவனுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்தார்.​

டவுன் சின்ட்ரோம் எனப்படும் மன நலிவு நோயால் பாதிக்கப்பட்டவன் அவன். மேகவாணியின் தாமதமான கருத்தரிப்பின் விளைவாக அந்த நோயுடன் பிறந்தவன். இந்த நோயால் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கண்காணிப்பும் கையாளுதலும் தேவை. வேலைக்கு செல்லும் மேகவாணியால் அவனை தனியாக கவனித்து கொள்வது சாத்தியமில்லை என்று அவனுக்காக பிரத்தியேக பராமரிப்பாளரை நியமிப்பது என்று முடிவு செய்து ஆட்களை நியமித்தார்கள்.​

ஆனால், வருபவர்கள் எல்லாம் இரண்டு மூன்று மாதங்களே தாக்கு பிடித்துவிட்டு பிறகு முடியவில்லை என்று கிளம்பி விட்டார்கள். அப்படி​

நியமிக்க பட்டவர்களில் கடந்த எட்டு வருடங்களாக நிலைத்து நிற்பது என்னவோ மலர் தான். மிகவும் பொறுமையுடனும் அன்புடனும் மலர் அவனை கவனித்து கொள்வதை பார்க்கையில் அதிஷாவிற்கு பிரம்மிப்பாக இருக்கும்.​

அவள் நோயாளிகளிடம் காட்டும் பொறுமையும் கனிவும் ஒருவகையில் மலரிடம் இருந்து கற்றுக்கொண்டது தான் என்று கூறினால் அது மிகையாகாது.​

சேவை மனப்பான்மை கொண்டவர் அவருக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை என்பதோடு திருமணத்திலும் பெரியதாக ஈடுபாடு இல்லாமல் இருக்க தனது முப்பதாவது வயதில் அவர்களிடம் வந்து சேர்ந்தவர் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே மாறியிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.​

காலையில் அதிஷாவிற்கு முதல் பிறந்தநாள் வாழ்த்தும் கூட அவர் தான் கூறியிருந்தார்.​

இப்பொழுதும் கிஷோருக்கு பொறுமையாக உணவு கொடுத்துக்கொண்டு இருந்தவரை நெகிழ்வாக பார்த்துக்கொண்டே வந்தவள் அவர் அருகே அமர்ந்திருந்த தம்பியின் உச்சந்தலையில் முத்தம் பதித்துவிட்டு அவனுக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டாள்.​

அனைவரிடமும் அவ்வளவு எளிதில் பேசிவிட மாட்டான் கிஷோர். அவனுடனே இருப்பதினாலோ என்னவோ மலருடன் ஒட்டிக்கொள்பவன் அவருக்கு அடுத்து நெருங்குவது அதிஷாவை மட்டும் தான்.​

அதிஷா அவன் அருகே அமர்ந்ததும் "ஹாப்பி பர்த்டே" என்று சொல்லிக்கொண்டே அவளுக்காக மலரின் உதவியுடன் அவன் வரைந்த பிறந்தநாள் வாழ்த்தட்டையை அவளிடம் நீட்டினான்.​

அதை வாங்கி பிரித்து பார்த்தாள் "ஹாப்பி பர்த்டே டு தெ பெஸ்ட் சிஸ்டர் இன் தெ வெர்ல்டு" (உலகத்திலேயே மிக சிறந்த அக்காவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ) என்று எழுதியிருந்தது.​

சாதாரண குழந்தைகள் போல இல்லை அவன். உறவுகளை பற்றிய அவனுக்கான புரிதல் மற்றவர்களை விட வேறு பட்டதாகவும் சில சமயங்களில் குறைவானதாகவும் தான் இருக்கும்.​

அப்படியிருக்க அவளை அவன் உலகில் மிக சிறந்த அக்கா என்று குறிப்பிட்டிருந்தது அவனுடைய மனதில் அவளுக்கான இடம் என்ன என்பதை உணர்த்தியிருக்க ஏனோ அவளின் கண்கள் கரித்துக்கொண்டு வந்தன.​

அந்த வாழ்த்து அட்டைக்கு பின் புறம் திருப்பி பார்த்தாள். அதில் அக்காவுடன் காகித கப்பல் ஒன்றில் ஆகாயத்தில் மிதந்து போவது போன்று படமும் வரைந்திருந்தான்.​

நமக்கெல்லாம் சாதாரணமாக தாண்ணீரில் மிதக்கும் காகித கப்பல் அவன் கற்பனைக்கு ஆகாசத்தில் மிதந்து கொண்டிருந்தது.​

அவன் பயணிக்க விரும்பும் உலகில் அக்காவும் உடன் வரவேண்டும் என்று அவன் நினைப்பதாக தோன்றியது. அதேசமயம் இப்பொழுது அவளுக்கு இருக்கும் வேலை பளுவின் காரணமாக அவனோடு செலவிடும் நேரம் வெகுவாக குறைந்திருப்பதை உணர்ந்த நொடி தனது அன்பிற்காக அவன் ஏங்குகின்றானோ என்ற கேள்வி மூளையில் உதிக்க நெஞ்சில் பாரம் ஏறிப் போனது அவளுக்கு.​

கட்டுப்படுத்த நினைத்து கண்களில் தேக்கி வைத்த கண்ணீர் துளிகளில் ஒன்றிரண்டு உதிர்ந்து கன்னத்தை நனைக்க "சாரி டா செல்லம்...இனி அக்கா உன் கூட முடிஞ்ச வரை அதிக நேரம் ஸ்பென்ட் பண்ணுறேன். சரியா?" என்றபடி அவன் முகத்தை திருப்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.​

அவள் தோளில் கை வைத்து தள்ளிவிட்டவன் அவள் எச்சில் செய்த கன்னத்தை துடைத்தபடி மீண்டும் சாப்பாட்டில் கவனமாகிவிட்டான்.​

அதை பார்த்து சேகரன், அதிஷா மற்றும் மலர் என்று அனைவரும் இதழ் பிரித்து சிரித்த நேரம் "இனி தான் அவன் கூட நீ செலவு பண்ணுற நேரம் இன்னும் கம்மியாக போகுது" என்றபடி அங்கே வந்து சேர்ந்திருந்தார் மேகவாணி.​

அவளும் அவரை புருவம் இடுங்க பார்க்க சேகரனுக்கு மறுபுறம் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தார்.​

அந்நேரம் தனது தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்த சேகரன் மேகவாணியின் தட்டிலும் உணவை வைத்துவிட்டு அதிஷாவிற்கு வைக்க போக "நான் வச்சுகிறேன் ப்பா" என்றவள் தனக்கான உணவை தட்டில் வைத்துக்கொண்டே "ஏன் அப்படி சொல்லுறீங்க?" என்று தாயை பார்த்து கேட்டாள்.​

"அது..." மேகவாணி ஆரம்பித்த நேரம் மேசை மீது இருந்த அவரின் கரத்தை அழுந்த பற்றிய சேகரன் கண்களால் ஏதோ சாடை காட்டினார்.​

அதிஷாவின் கண்களிலிருந்தும் அது தப்பவில்லை.​

தலையை குனிந்தபடி விரக்தி புன்னகை ஒன்றை சிந்திக்கொண்டாள்.​

கணவனின் கண் சாடையில் தான் நினைவு வந்தவராக "சாரி அதி... ஹாப்பி பர்த்டே. வேலையில மறந்தே போய்ட்டேன்...ரொம்ப சாரி டா" என்றார் குலைவான குரலில்.​

நிமிர்ந்து அவர் கண்களை பார்த்தாள் அதிஷா. அவளின் ஆழமான பார்வைக்கு அர்த்தம் அவருக்கும் புரிந்தது தான். நிஜமாக உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றாரா அல்லது வெறும் வாய் வார்த்தை தானா என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நின்றது.​

அவளது பார்வையை தவிர்த்தபடி சேகரனை பார்த்தார். அவரும் நிலைமையை சமாளிக்க எண்ணியவராக "சரி...சரி அதிக்கு ஏதோ பரிசு வச்சிருக்கேன்னு சொன்னியே...அதை முதல்ல என்னனு சொல்லு வாணி" என்று அனைவரின் ஆர்வத்தையும் திசை திரும்பியிருந்தார்.​

"அதை தான் சொல்ல வந்தேன். அதி நம்ம டாக்டர் யாஷ் பத்தி என்ன நினைக்குற?" என்று ஆரம்பித்தார்.​

அவள் புருவங்கள் முடிச்சிட மேகவாணியை பார்க்க அவரே மேலும் தொடர்ந்தார் "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாஷ் கால் பண்ணியிருந்தார். கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காராம். பொண்ணு தேடுற ப்ரோசெஸ்ல இருந்திருக்காரு போல. அப்போ தான் உன்னை பார்க்கிங்ல பார்த்தாராம். தெரியாதா பொண்ணை தேடி கட்டிக்குறதை விட அவருக்கு நல்லா தெரிஞ்ச உன்னை கட்டிக்கிட்டா என்னனு தோணியிருக்கும் போல. அதுதான் சம்மதம் கேட்டு கால் பண்ணினார்" விளக்கமளித்தார் மேகவாணி.​

"நீங்க என்ன சொன்னிங்க... " என்று அதிஷா கேட்க "ஹ்க்கும்" என்று குரலை செருமிக்கொண்டே "உன்னை கேட்டு சொல்லுறேன்னு தான் சொன்னேன்" என்றவர் உண்மையில் அதிஷாவிடம் கேட்கும் முன்னரே அவனிடம் சம்மதம் சொல்லியிருந்தார்.​

அவரின் தடுமாற்றத்திலேயே அதை புரிந்து கொண்டவள் அவரை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க மீண்டும் மனைவிக்கு ஆபத்பாந்தவனாக இடைப்புகுந்திருந்தார் சேகரன்.​

மேசை மீது இருந்த அவள் கையை அழுந்த பற்றி "அதி, நீ தெளிவான பொண்ணு. உனக்கு நான் சொல்லணும்னு இல்லை. இந்த விஷயத்துல நான் பேசலாமான்னு கூட எனக்கு தெரியல..." என்ற சேகரனின் குரல் ஒரு மாதிரி தழுதழுக்க "அப்பா" என்றாள் அழுத்தமாக.​

குரலை செருமிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர் "டாக்டர் யாஷ் பத்தி உனக்கு நல்லா தெரியும். வெளியில அவருக்கு ரொம்ப நல்ல பெயர் இருக்கு. ஏன் நீயே கூட அவரை பத்தி என் கிட்ட நல்ல விதமா சொல்லியிருக்க தானே. அப்படி பார்குறப்போ உங்கம்மா அவரை உனக்கானவராக தேர்ந்தெடுத்தது எனக்கு தப்பா தோணல. மோரோவர், நீயும் டாக்டர் அவரும் டாக்டர். சோ, உன் வேலையை பத்தி அவருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் அதுனால கல்யாணத்துக்கப்புறம் உன் கெரியர்லயும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்ல" தனக்கு தெரிந்த நியாயங்களை எடுத்து கூறினார் சேகரன்.​

எதுவுமே பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள் அதிஷா.​

விரல்கள் தட்டில் இருந்த உணவை அளைந்துக்கொண்டிருந்தன.​

அவள் யோசிக்க அவகாசம் கொடுக்க எண்ணியிருப்பார்கள் போல அமைதியாக தத்தமது தட்டில் இருந்த உணவினை உட்கொண்டனர்.​

நொடிகள் கடந்து நிமிடங்களாக "அதி..." என்று ஆரம்பித்தார் மேகவாணி.​

"வாணி, அவள் யோசிச்சு சொல்லட்டும்" என்று மனைவியை அடக்கினார் சேகரன்.​

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தப்படி சேகரனை பார்த்த அதிஷா "நீங்க பிரெஸ்லெட் கொடுத்துட்டு பிடிச்சிருக்கான்னு கேட்டிங்க, இவங்க மாப்பிள்ளையை செலெக்ட் பன்னிட்டு வந்து பிடிச்சிருக்கான்னு கேட்குறாங்க. அதுவும் அவருக்கு சம்மதம் சொன்ன பின்னாடி. இதுல தேர்ந்தெடுக்க எனக்கு எங்கிருக்கு வாய்ப்பு" என்றாள்.​

"அதி... அது அப்படி இல்லை டா..." சேகரன் விளக்கம் கொடுக்க விளைய "இட்ஸ் ஓகே ப்பா... இது நாள் வரை நீங்க சொல்லி நான் எதையும் கேட்காமல் இருந்ததில்லை. எனக்கு நீங்க நல்லதை தான் செய்விங்கங்குற நம்பிக்கையும் இருக்கு. அதோட டாக்டர் யாஷை வேண்டாம்னு சொல்லுறதுக்கு எனக்கும் பெருசா எந்த காரணமும் இல்ல" என்றவளின் விழிகளில் ஒரு நொடி ராகவனின் முகம் வந்து போனது.​

அது அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தாலும் தலையை உலுக்கி அவன் நினைவுகளை உதறி தள்ளினாள். முன்பு அவன் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாகவும் இன்று அவனுடன் பேசியதன் விளைவாகவும் அவனின் எண்ணம் வருகின்றது போல என்று நினைத்துக்கொண்டாள்.​

"அப்போ உனக்கு சம்மதமா?" என்ற மேகவாணியின் குரலில் அப்படியொரு மகிழ்ச்சி.​

"ம்ம்ம்…சம்மதம் சொல்லிடுங்க " என்று உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் சொன்னவள் பாதி சாப்பாட்டில் எழுந்துக்கொண்டாள்.​

சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு அவள் சமயலறைக்குள் நுழைய போக மலரும் சாப்பிட்டு முடித்திருந்த கிஷோரை அழைத்துக்கொண்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டார்.​

அங்கே சேகரனும் மேகவாணியும் மட்டும் தனித்திருக்க " இது கண்டிப்பா வேணுமா? நாம வேணும்னா வேற எதுவும் முயற்சி பண்ணி பார்க்கலாமே" என்றார்.​

"எல்லாம் முயற்சி பண்ணி தோத்து போய் தானே இப்போ இந்த முடிவுக்கு வந்திருக்கோம். அதுவும் யாஷ் மாதிரி ஒரு வரன் எல்லாம் அவ்வளோ சுலபமா கிடைச்சிடுமா? அவளே ஓகே பண்ணிட்டா தானே. நீங்க எதுவும் குழப்பாம சும்மா இருந்தாலே போதும் எல்லாமே நல்லாத்தான் நடக்கும்" என்றார்.​

தட்டை கழுவி வைத்துவிட்டு சமையலறையிலிருந்து வெளியில் வந்த அதிஷாவின் செவிகளில் மேகவாணி பேசியது விளங்கினாலும் அவர்களிடம் மேலும் வாக்குவாதம் செய்ய அவளுக்கு உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கவில்லை.​

கண்டுகொள்ளாதது போல் கடந்துச் சென்றுவிட்டாள். கட்டிலில் சரிந்தவளின் காதுகளில் மேகவாணி சொல்லியதே மீண்டும் மீண்டும் எதிரொலிக்க 'நிறைய முயற்சி பண்ணி தோத்துட்டாங்களா? என்ன சொல்லுறாங்க? ஒருவேளை எனக்கு நிறைய இடத்துல மாப்பிள்ளை பார்த்திருப்பாங்களோ. என்னை இந்த வீட்டை விட்டு துரத்துறதுல அவ்வளோ ஆர்வம் போல" என்று நினைத்துக்கொண்டே தூங்கியும் விட்டாள்.​

நடந்த அனைத்தையும் தன்னிச்சையாக மனதில் மீட்டி பார்த்தாலும் அஷ்வினி தெரிந்துக்கொள்ள வேண்டிய விடயங்களை மட்டுமே மேலோட்டமாக அவளிடம் சொல்லி முடித்த அதிஷா மறந்தும் ராகவனை பற்றி எதுவும் பேசவில்லை.​

"ச்சே, ஜஸ்ட் மிஸ்ஸு. நானும் தானே நேத்து பார்க்கிங்ல இருந்தேன். உனக்கு பதிலா என்னை பார்த்திருக்க கூடாதா" என்று அஷ்வினி புலம்ப அவளை பார்த்து சிரித்த அதிஷா "இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. வேணும்னா உனக்கும் அவரை பிடிச்சிருக்குன்னு போய் சொல்லிட்டு வரட்டுமா" கேட்டாள் அதிஷா.​

"ம்ப்ச் விடு. அவருக்கு என்னை கட்டிக்க கொடுத்து வைக்கல. உன்னை மாதிரி சிடுமூஞ்சியை தான் பிடிச்சிருக்கு போல. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று அஷ்வினி சொல்லிக்கொள்ள அவள் தோளில் அடித்த அதிஷா "நான் சிடுமூஞ்சியா?" என்று போலியாக முறைத்தாள்.​

"இல்லையா பின்ன. நீ ஒரு வார்த்தை பேசுறதுக்கே காசு கொடுக்கணுமே" என்று அதிஷாவின் காலை வாரியவள் "ஆனாலும் டாக்டர் யாஷை கட்டிக்குறதுக்கு நீ இவ்வளவு எல்லாம் பிகு பண்ண கூடாது. எத்தனை பேரு இப்ப கூட அவரை கட்டிக்க போட்டிக்கு இருகாங்க தெரியுமா? நம்ம ஹாஸ்பிடல்லயே பேஷன்ஸ் முதற்கொண்டு டாக்டர்ஸ் வரை எல்லா பொண்ணுங்க கண்ணும் அவர் மேல தான். ஹி இஸ் எ மோஸ்ட் எலிஜிபல் பேச்சிலர் இன் டவுன். படிப்பு, பணம், குணம்னு எல்லாமே இருக்கு. ஆனால், நீ மட்டும் இப்படி சலிச்சுக்கிறியே" என்றபடி அதிஷாவை அதிருப்தியுடன் பார்த்தாள் அஷ்வினி.​

"ஹ்ம்ம்... நீ சொல்லுறது சரி தான். மெய்பி, இப்போ கல்யாணம் பண்ணிக்க நான் இன்னும் மென்டலி ரெடி ஆகல போல" என்று தரையை வெறித்துப்பார்த்தபடி சொன்னவளுக்கும் அஷ்வினி சொல்வது எல்லாம் புரிந்தாலும் ஏன் யாஷுடனான இந்த திருமண ஏற்பாடு மனதில் ஒருவித நெருடலை ஏற்படுத்துகின்றது என்றும் புரியவில்லை.​

ஆனால் பெற்றவர்களிடம் சம்மதம் சொல்லிவிட்டு இப்பொழுது பின் வாங்குவதும் சரியில்லை என்று தோன்றவே நடப்பது எதுவாகினும் நல்லதாகவே நடக்கட்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டாள்.​

"அதை விடு. டைம் ஆகுது நான் ரௌண்ட்ஸ் கிளம்புறேன். நீயும் போய் வேலைய பாரு" என்று சொல்லிக்கொண்டே அதிஷா திரும்பி நடக்க "சரிங்க முதலாளியம்மா" என்று கை கட்டி வாய் பொத்தி பவ்யமாக குனிந்துக் கொண்டே கேலி போல சொல்லி சிரித்தாள் அஷ்வினி.​

"முதலாளியம்மா வா? " கேள்வியாக பார்த்தாள் அதிஷா.​

"அப்புறம், இந்த ஹாஸ்பிடலுக்கு சொந்தக்காரரை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ தானே அடுத்த முதலாளியம்மா" என்று அஷ்வினி சொல்ல அவளை விசித்திரமாக பார்த்தவள் "லூசு" என்று முணுமுணுத்தபடி அறையிலிருந்து வெளியேறியிருந்தாள்.​

"உண்மையை தானே சொன்னேன். அதுக்கு எதுக்கு லூசுன்னு திட்டிட்டு போறா?" என்று தனக்கு தானே கேட்டுக்கொண்ட அஷ்வினியும் தனது சந்தேகங்கள் தீர்ந்துவிட்ட திருப்தியுடன் வேலையை பார்க்க கிளம்பி விட்டாள்.​

 
Status
Not open for further replies.
Top