எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை-அத்தியாயம் 5

Status
Not open for further replies.

WhatsApp Image 2024-04-03 at 12.06.49 AM.jpeg_beef9178-496b-4690-9321-3d1089a8afaf.jpg

அத்தியாயம் 5

நாட்கள் இப்படியாக நகர அதிஷா மற்றும் யாஷின் திருமண ஏற்பாடுகள் துரித கதியில் நிகழ்ந்து கொண்டிருந்தனவே தவிர அவர்களின் உறவில் ஒன்றாக வேலை பார்க்கும் சக மருத்துவர்கள் என்பதை தாண்டி பெரியதாக வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.​

திருமணத்தை அதிக செலவில் நடத்துவதை விட அந்த பணத்தை சில ஏழை நோயாளிகளின் நலனுக்காக பயன்படுத்தலாம் என்று மேகவாணியிடம் சொல்லியிருந்த யாஷ் கல்யாணத்தை எளிமையாக கோவிலிலேயே வைத்து கொள்ளலாம் என்றிருந்தான்.​

எளிமையான ஏற்பாடு தான் என்பதால் அதிஷாவிற்கும் திருமண வேலைகள் பெரியதாக இல்லாமல் இருக்க அவளும் வழக்கம் போல தனது மருத்துவ வேலைகளை எந்த தடையும் இல்லாமல் செய்துக்கொண்டிருந்தாள்.​

யாஷும் கூட பெரியதாக திருமணத்தை பற்றி அலட்டி கொண்டது போல தெரியவில்லை. அவனுக்கும் மருத்துவமனையும் நோயாளிகளுமே உலகமாக இருக்க அவர்கள் இருவருக்கும் இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம் என்று சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.​

தத்தமது வேலை காரணமாக இருவரும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்க இருவருக்கும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வாய்ப்பும் பெரியதாக கிடைக்கவில்லை.​

ஒரே ஒரு முறை வார்டில் ரௌண்ட்ஸ்ஸுக்கு சென்றிருந்தவனின் முன்னால் வந்து கொண்டிருந்த அதிஷாவை பார்த்து புன்னகைதான். அவளும் பதிலுக்கு புன்னகைக்க அவள் முன்னே சென்று நின்றவன் "தேங்க்ஸ் அண்ட் சாரி அதி" என்றான்.​

"எதுக்கு?" என்று அவள் கேட்க "என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதுக்கு தேங்க்ஸ். கல்யாணம் பண்ணிக்க கேட்டுட்டு உன் கூட பேசக் கூட நேரமில்லாமல் சுத்திட்டிருக்கேனே, அதுக்கு சாரி" என்றான்.​

அவனை பார்த்து மெலிதாக சிரித்தவள் "ஐ அண்டர்ஸ்டாண்ட் டாக்டர். உங்களோட தேவை என்னை விட நம்ம பேஷன்ஸ்க்கு தான் அதிகம் இருக்கு. அவங்களை கவனிங்க" என்றாள்.​

அவள் சொன்னதை கேட்டு தலை சரித்து சிரித்தவன் "ஐ மேட் தெ ரைட் சாய்ஸ்" என்று தன்னை அவள் சரியாக புரிந்துகொண்டதை பாராட்டினான்.​

"கல்யாணம் முடிய நிறைய பேசலாம் அதி. என்னை பத்தி நீ தெரிஞ்சிக்க இன்னும் நிறைய இருக்கு. எனக்கும் தான்" என்றவன் அடுத்து ஒரு அறுவை சிகிச்சைகாக சென்றுவிட்டான்.​

செல்லும் அவன் முதுகையே மென்னகையுடன் பார்த்திருந்தவள் "நானும் சரியான முடிவை தான் எடுத்திருக்கேன்னு நம்புறேன் டாக்டர்" என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு நகர்ந்திருந்தாள்.​

திருமண பேச்சுக்கு பிறகு அவ்வளவுதான் அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல். அதை தவிர சராசரி திருமண ஜோடிகளுக்குள் இருக்க கூடிய பேச்சு வார்த்தைகளோ, வெட்க பார்வைகளோ, ரகசிய புன்னைகளோ என்று வேறு எதுவும் இருக்கவில்லை.​

அதை பற்றி அவர்களுக்கு கவலையும் இருக்கவில்லை. அதே சமயம் காற்று வாக்கில் அவர்களின் திருமண செய்தியும் மருத்துவமனை பணியாளர்களிடம் பரவத் தொடங்கியிருந்தது.​

அவர்களை போலவே அதன் பணியை செவ்வனே செய்துக்கொண்டிருந்த காலச் சக்கரமும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது.​

அப்படியாக ஒரு நாளில் எப்பொழுதும் போல வழமையாக தனது பணிகளை தொடங்கியிருந்தாள் அதிஷா.​

அதீத வயிற்று வலி காரணமாக அங்கே அனுமதிக்க பட்டிருந்த பதினைந்து வயதே நிரம்பியிருந்த மீராவுக்கு சிகிச்சையளித்து விட்டு வந்து கொண்டிருந்தாள் அதிஷா.​

அச்சமயம் அங்கே இருந்த அறைக்குள் ஒரே இரைச்சலாக இருந்தது. அறை கதவும் மூடப்படாமல் திறந்தே இருக்க உள்ளே இருப்பவன் போடும் சத்தம் வெளியே வரை கேட்டது.​

அறைக்கு வெளியில் ஓரிரு தாதிகளும் சில பயிற்சி மருத்துவர்களும் உள்ளே செல்லவே பயந்துக்கொண்டு நின்றிருந்தனர்.​

அந்த அறையை கடந்து சென்று கொண்டிருந்த அதீஷாவின் கவனத்தை அந்த காட்சி ஈர்க்க அங்கே நின்று கொண்டிருந்த தனது நண்பி அஷ்வினியின் அருகே சென்றவள் "என்னாச்சு" என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.​

"தெரியலடி. அந்த ரவுடி சார் இருக்காருல அவருதான் சட்டை எல்லாம் ரத்தமா வந்தாரு... நம்ம நர்ஸ் ரேணுகா இருக்காங்கல்ல அவங்க தான் ட்ரீட் பண்ண உள்ள கூட்டி போனாங்க. என்னாச்சோ தெரியல... திடிர்னு கத்த ஆரம்பிச்சுட்டாரு" என்று சொன்னாள்.​

“என்னாச்சுன்னு போய் பார்க்க வேண்டியது தானே டி" என்று அதிஷா கேட்க "எதுக்கு அந்த ரௌடி சார் கிட்ட சிக்கி சிக்கன் ஆகுறதுக்கா... மலைமாடு மாதிரி ஆர்ம்ஸ காட்டிட்டு சுத்துற நம்ம டியூட்டி டாக்டர் சூர்யாவே உள்ள இருக்குறது யாருன்னு தெரிஞ்சதும் நமக்கு எதுக்கு வம்புன்னு அப்படியே யூ-டர்ன் போட்டுட்டான்... இதுல நான் வேற போய் பார்க்கணுமா... ஆளை விடு தாயே" என்று அவளுக்கொரு கும்பிடு போட்டிருந்தாள் அஷ்வினி.​

"ம்பச்... டாக்டர் மாதிரியாடி பேசுற நீ?" அதிஷா சற்றே எரிச்சலாக கேட்டுக்கொண்டிருக்கும் போதே அறையினுள்ளே ஏதோ கண்ணாடிப் பொருள் விழுந்து உடையும் சத்தம் கேட்டது.​

இதற்கு மேலும் தாமதிக்க முடியாதென்று உணர்ந்துக் கொண்டவள் அங்கே கூடியிருந்தவர்களை விலக்கி கொண்டே அந்த அறையை நோக்கி சென்றாள்.​

"ஹேய் போகாத டி... எதுவும் வம்பாகிட போகுது" என்று அதிஷாவை தடுத்துவிடும் எண்ணத்தில் அஷ்வினியும் அவள் பின்னால் ஓடி சென்றாள்.​

அதனை எல்லாம் சட்டை செய்யாமல் அவள் அந்த அறைக்குள் நுழையும் போதே அவனது குரல் தான் கணீரென்று காதில் விழுந்தது.​

"ஏய் நர்சம்மா... ஏன் எங்களுக்கெல்லாம் உங்க டாக்டர்ஸ் டிரீட்மெண்ட் பார்க்க மாட்டாங்களா...நானும் அப்போத்திலிருந்தே டாக்டர கூப்பிட சொல்லிட்டிருக்கேன். ஆனால், நீயே எல்லாம் பண்ணிட்டிருக்க... உன்னை…" என்றபடி அருகே அவனுக்கு கட்டு போடுவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்தவன் அதை ரேணுகாவை நோக்கி ஓங்கியிருந்தான்.​

ஓங்கிய அவன் கையை சட்டென்று எட்டி பிடித்திருந்தாள் அதிஷா. அவன் கையை யாரோ தடுத்து பிடித்திருப்பதை உணர்ந்தவன் சட்டென்று அவளை திரும்பி பார்த்தான்.​

அனல் தெறித்த அவனது பார்வையை தாங்கி நின்ற அணங்கவள் "கத்தரிக்கோலை கொடுங்க சார்" என்று சொல்லியபடி ஓங்கியிருந்த அவன் கையை கீழே இறக்கியிருந்தாள்.​

அவன் விரல்கள் இன்னமும் அதிகமாக கத்தரிக்கோலை இறுக்கி பிடிக்க "கொடுங்க சார்" என்று சொல்லிக்கொண்டே இறுகியிருந்த அவனது விரல்கள் ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து கத்தரிக்கோலை அவனிடமிருந்து பறித்திருந்தாள் அதிஷா.​

"இப்போ சொல்லுங்க சார்… என்னாச்சு" கேட்டாள் அவள்.​

அவள் கோபப்படவில்லை.அவள் பேச்சில் மென்மை இருந்தாலும் விழிகளில் அழுத்தம் இருந்தது. முரணான பெண்ணாக இருந்தாள்.​

"நீ யாரு? " என்ற கேள்வி அவனிடம்.​

விழிகள் இடுங்க அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே கேட்டான்.​

"டாக்டர்" ஒற்றை சொல் பதிலாக வந்து விழுந்தது அவளது வார்த்தை.​

அவளை கூர்ந்து பார்த்தவன் சட்டென நினைவு வந்தவனாக "ஹேய், நீ அந்த ஸ்கூட்டர் பேபி தானே. அதுதான் அன்னிக்கு அந்த ஏரியா இன்ஸ் ஆஹ் கூட...." என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே​

"நான் தான். இப்போ உங்களுக்கு என்ன வேணும். அதை மட்டும் சொல்லுங்க" என்றாள்.​

சட்டென்று போட்டிருந்த ஷர்ட்டை விலக்கியவன் இடது பக்க மார்பு பகுதியை கண்களால் சுட்டி காட்டினான்.​

அங்கே லேசான வெட்டு காயத்தில் இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. காயத்தின் அளவை பரிசோதிக்க அதிஷா கையை அவன் மார்பில் வைக்க சென்ற நேரம் "வெயிட்" என்று சொல்லி கொண்டே எட்டி அவளுக்கு பின்னால் நின்றிருந்த அஷ்வினியை பார்த்தவன் "அந்த பேபியும் டாக்டர் தானே" என்று கேட்டான் ஆதீஷ்.​

"ம்ம்ம்" என்றாள் அவளுக்கு பின்னால் நின்ற அஷ்வினியை திரும்பி பார்த்துக்கொண்டே.​

"அப்போ நீ வேணாம்... அவளை பார்க்க சொல்லு" என்றான்.​

அவனை புருவம் சுருக்கி பார்த்த அதிஷா "ஏன்" என்று கேட்க​

"ம்ம்...உன்னை விட அவள் அழகா இருக்கா அதான்" என்றான் அவன் நக்கலாக.​

அவன் சொன்னதை கேட்டு விழிகள் வெளியில் வந்து விழும் அளவுக்கு அவனை பார்த்த அஷ்வினி "சிஸ்டர் என்னை பிடிச்சிக்கோங்க. மயக்கம் போட்டு விழ போறேன்" என்று பக்கத்தில் நின்றிருந்த ரேணுகாவிடம் கிசுகிசுத்துக்கொண்டே அவள் மீதே மயங்கி சரிந்தாள்.​

"என்னடா மயங்கிட்டா?" என்று சற்றே பின் புறமாக சாய்ந்து தன்னுடன் வந்திருந்த அவனது அல்லக்கை கதிரிடம் கேட்டான் ஆதீஷ்.​

"அந்த பொண்ணை விட இந்தக்கா பெட்டர் ஆஹ் இருக்குண்ணே ... இவங்களையே பார்க்க சொல்லுங்க" என்றான் அவன்.​

"அப்படியா சொல்லுற" என்று கேட்டுக்கொண்டே அதீஷாவை மேலிருந்து கீழே பார்த்தவன் "இம்ம்... நல்லாத்தான் இருக்கா... சரி உன் நல்ல நேரம்... நீயே பாரு" என்றான் சலிப்பாக.​

'அப்பாடா தப்பிச்சேன்' என்று ஒற்றை விழி மட்டும் திறந்து அவர்களை பார்த்த அஷ்வினி அப்படியே மெல்ல நகர்ந்து ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டாள்.​

ஒரு பெருமூச்சுடன் தலையை இருபக்கமும் ஆட்டிக்கொண்ட அதிஷா அவனது காயத்தை பரிசோதித்து விட்டு " சின்ன காயம் தான் மிஸ்டர்..." என்று அவள் இழுக்க "ஆதீஷ்" என்று முடித்திருந்தான் அவன்.​

"ஆதீஷ்... சின்ன காயம் தான்... தையல் போடுற அளவுக்கெல்லாம் ஒன்னும் இல்லை. கிளீன் பண்ணி மருந்து போட்டு இன்பெக்ஷ்ன் ஆகாம இருக்க ஒரு இன்ஜெக்ஷன் போட்டா போதும் " என்று அவனிடம் சொன்னவள் ரேணுகாவிடம் "சிஸ்டர் நீங்களே பண்ணிடுங்க" என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்.​

சட்டென்று அவள் கையை எட்டி பிடித்தவன் "இந்த ரேணு ஆண்ட்டி கட்டு போடவா நெஞ்சில வெட்டு காயம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம். நீயே போட்டு விடு பேபி" என்றான்.​

"நானும் அதை தான் டாக்டர் சொல்லிட்டிருந்தேன். ஆனால், இவர் தான் டாக்டர் தான் வந்து பார்க்கணும்னு வம்பு பண்ணிட்டிருந்தாரு" என்று ரேணுகா சற்று முன் நிகழ்ந்த கலவரத்திற்கு விளக்கம் சொல்ல "ஏய் ஆண்ட்டி" என்று ஆதீஷ் அவளை முறைத்து பார்த்ததுதான் தாமதம் ரேணுகாவின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது.​

"சரி, நீங்க போங்க சிஸ்டர் நான் பார்த்துக்குறேன். அப்படியே வெளியே நிக்குற கூட்டத்தையும் கலைஞ்சு போக சொல்லுங்க" என்றவளின் கரம் அவனது காயத்தை சுத்தப்படுத்தி மருந்திடும் வேலையில் இறங்கியிருந்தது.​

அவளது பார்வை அவன் விழிகளிலேயே நிலைத்திருந்தது.​

அவனை பார்த்தாலே பயந்து ஒதுங்கும் பெண்களுக்கு நடுவில் அவனை விழிகளுக்குள் பார்க்கும் ஒரு பெண். புதிதாக இருந்தது. ஆளை விழுங்கும் பார்வை தான். அதை மறுக்க முடியாது. ஆனால், அவ்வளவு எளிதில் அவனை விழுங்கி விட முடியுமா, விடாக்கண்டன் ஆயிற்றே.​

அவனுக்கான சிகிச்சை அனைத்தையும் முடித்து அவள் நிமிர்ந்த சமயம் அவள் கரத்தை பிடித்து "எவ்வளோ சாஃப்ட் ஆஹ் இருக்கு பேபி உன் கை... மருந்து போடும் போது வலியே தெரியல. சமைச்சு போட்ட கைக்கு மட்டுமில்லை கட்டு போட்ட கைக்கு கூட முத்தம் கொடுக்கலாம்" என்று சொன்னவன் அவளே எதிர்பாராத வண்ணம் குனிந்து அவள் புறங்கையில் இதழ் பதிக்க அதிர்ந்த பெண்ணவள் சட்டென்று அவனிடமிருந்து தனது கரத்தை உருவிக்கொண்டாள்.​

அந்தக் காட்சியை பார்த்திருந்த அஷ்வினி தான் "என்ன ரவுடி சார் இப்படி பண்ணிட்டீங்க? கல்யாணம் ஆக போற பொண்ணு சார் அவ" என்றாள் அதிர்ச்சியாக.​

"ச்சே இதை முதல்லயே சொல்லியிருக்க கூடாதா?" என்று வருத்தம் போல சொன்னவனிடம் "சொல்லியிருந்தா கிஸ் பண்ணிருக்க மாட்டிங்களா?" என்று அஷ்வினி கேட்க "ச்சே ச்சே...கைக்கு பதில் இங்கே கொடுத்திருப்பேன்" என்றவன் அதிஷாவின் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்துவிட்டு விசிலடித்தபடி வெளியேறியிருந்தான்.​

செல்லும் அவன் முதுகையே அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அதிஷாவின் பக்கத்தில் வந்த அஷ்வினி "என்னடி இப்படி ஆச்சு?" என்று அவள் தோளில் கையை வைக்க அவன் எச்சில் செய்துவிட்டு போன கன்னத்தை புறங்கையால் அழுந்த துடைத்துக்கொண்டே அஷ்வினியை முறைத்தவள் "எல்லாம் உன்னால தான்... இந்த விஷயம் வெளிய லீக் ஆச்சு கொன்னுடுவேன் உன்னை" என்று திட்டி விட்டு சென்றிருந்தாள் அதிஷா.​

அவன் அவளுக்கு முத்தமிட்டது மனதை நெருடிக்கொண்டிருந்தாலும் அந்த எண்ணத்திலேயே உழன்று கொண்டிருக்க நேரம் இல்லாமல் போக சுறுசுறுப்பாக அடுத்தடுத்த நோயாளிகளை கவனிக்க தொடங்கியிருந்தவளுக்கு தற்காலிகமாக அவன் நினைவு மறந்து போயிருந்தாலும் அன்று மாலையே அவனை மீண்டும் சந்திக்க நேரிடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.​

வேலை நேரம் முடிய அவளது அறையை தேடி வந்திருந்தார் மேகவாணி.​

"அதி உனக்கு கல்யாண புடவை எடுக்க போகணும். யாஷ் தான் உன்னை அழைச்சு போறேன்னு சொன்னாரு பட் அவருக்கு இந்த வாரம் முழுக்க பிஸியாம். அதுதான் உன்னை அழைச்சுட்டு போய் உனக்கு பிடிச்ச போல புடவை எடுத்து தர சொல்லி இப்போதான் என்கிட்ட சொல்லிட்டு போனாரு. எனக்கும் இன்னிக்கு வேலை கொஞ்சம் ஏர்லியா முடிஞ்சுது. வா அப்படியே ஜவுளி கடைக்கு போய் கல்யாணத்துக்கு தேவையானதை எல்லாம் வாங்கிட்டு போகலாம்" என்றார்.​

அவளும் அந்த நேரத்திற்கெல்லாம் நோயாளிகளை பார்த்து முடித்திருக்க மறுப்பேதும் சொல்லாமல் மேகவாணியுடன் கிளம்பி விட்டாள்.​

கடைக்குள் நுழையும் போதே ஆதீஷின் ஜீப் வெளியில் நிற்பதை பார்த்தவளின் கண்கள் தன்னிச்சையாக ஜீப்பின் பின்னால் எழுதியிருந்த வாசகத்தில் சென்று நின்றது.​

திருமணத்திற்கு சம்மதித்து விட்ட போதிலும் ஏதோ வெறுமையான உணர்வே மனதை ஆக்ரமித்திருக்க ஒரு அழுத்தத்துடன் திருமண ஜவுளி எடுக்க கடைக்குள் நுழைய போனவளுக்கு அந்த வாசகமே புது தெம்பை அளித்திருக்க இதழ் வளைத்து சிரித்துக்கொண்டே கடைக்குள் நுழைந்திருந்தாள் பெண்ணவள்.​

பலதர வகை பட்டுகளும் வண்ணங்களும் கொண்ட திருமண புடவைகள் அவள் கண்களுக்கு விருந்தாக்க பட அதை பார்த்துக்கொண்டே நின்றவளுக்கு எதுவும் கவர்ச்சியாக தோன்றவில்லை.​

மேகவாணி தான் அவருக்கு நன்றாக இருக்கின்றது என்று தோன்றிய புடவைகளில் ஒவ்வொன்றாக எடுத்து அவள் மீது வைத்து பார்த்துக்கொண்டிருந்தார். சரியாக அந்த நேரம் பார்த்து அவரின் அலைபேசி ஒலிக்க எடுத்து பார்த்தவர் "ஆபீஸ்ல இருந்து தான். நீ பார்த்துட்டிரு அதி. நான் பேசிட்டு வந்திடுறேன்" என்றபடி அழைப்பை ஏற்று காதில் வைத்துக்கொண்டே சென்றுவிட்டார்.​

அவரை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவளின் பார்வை மீண்டும் புடவையில் பதிய கைகள் கொண்டு அதை வருடி கொண்டே நடந்தாள். திடீரென்று புடவையின் மீது இருந்த வேறொரு கரத்தின் மீது அவள் கரம் படிய சட்டென்று கையை விலக்கியவள் "சாரி தெரியாம பட்டிருச்சு" என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தாள்.​

"தெரிஞ்சே கூட படலாம். நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்" சொன்னவனின் இதழ்களுக்குள் புன்னகை.​

அதிஷா பதில் ஏதும் பேசாமல் அவனை அழுத்தமாக பார்க்க "கல்யாண புடவை எடுக்க வந்திருக்க போல?" என்று கேட்டான்.​

அவனைக் கண்டுக்கொள்ளாமல் முன்னே இருந்த புடவைகளில் கவனமானாள்.​

புடவைகளை பார்த்தாளே தவிர அவள் பார்வையில் ரசனை இல்லை. வெறும் வெற்று பார்வை மட்டுமே.​

அதை சரியாக புரிந்துக்கொண்டவன் "எதுவுமே பிடிக்கலையா?" என்று கேட்டான்.​

அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லாவிட்டாலும் ஏனோ தெரியவில்லை அவனிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது "பிடிக்கல" என்றாள் பார்வை இன்னமும் முன்னே இருந்த புடவையின் மீது தான் படிந்திருந்தது.​

அவள் காதருகே குனிந்தவன் "புடவை பிடிக்கலையா? இல்லை கல்யாணமே பிடிக்கலையா?" என்று கேட்டான்.​

சட்டென்று அவனை திரும்பி பார்த்தாள்.​

"கரெக்ட்டா சொல்லிட்டேன் போல" என்றபடி புன்னகைத்தவன் கையில் இருத்த புடவையை அவள் தோள் மீது வைத்து விட்டு "இது ரொம்ப நல்லா இருக்கு" என்றான்.​

அவன் பேசுவதையும் செய்வதையும் தடுக்க வேண்டும் என்று நினைக்கின்றாள். ஆனால், முடியவில்லை.​

எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவனையே அழுத்தமாக பார்த்துக்கொண்டே நிற்க "அட, நிஜமா நல்லா இருக்கு பேபி" என்றபடி அவள் தோள் பட்டையை பிடித்து திருப்பியவன் அருகே இருந்த கண்ணாடியின் முன் நிறுத்தினான்.​

அவளுக்கு பின்னால் அவள் தோள்களை பற்றியவாறு அவன் நின்றிருக்க தங்களது பிம்பத்தை கண்ணாடியூடு பார்த்துக்கொண்டே நின்றவளின் தோள் வளைவில் நாடியை பதித்தவன் "நீயே பாரு... பொருத்தமா இருக்குல்ல" என்றான்.​

அவள் சட்டென்று பக்கவாட்டாக திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.​

"புடவையை சொன்னேன் பேபி" என்றான்.​

இரவு நேரம் மற்றும் நல்ல நாள் என்று எதுவும் பாராமல் புடவை வாங்க வந்ததினால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தாலும் ஆதிஷ் செய்து கொண்டிருந்த சில்மிஷங்களை பார்த்து அதிர்ந்து நின்றது என்னவோ அங்கிருந்த பெண் ஊழியர் தான்.​

திரும்பி அந்த பெண்ணை பார்த்தவன் "ஷ்ஷ்ஷ்ஷ்" என்று இதழ்களில் ஒற்றை விரலை வைத்து சைகை செய்ய அந்த பெண்ணும் "யாருகிட்டயும் சொல்ல மாட்டேன் ண்ணா" என்றாள்.​

"அடிங்... அண்ணா கிண்ணான்னா பிச்சிடுவேன். வேணும்னா டார்லிங்னு சொல்லிக்கோ" என்றான்.​

"ஆத்தி" என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்ட அந்த பெண் "நான் இல்லை. முடிஞ்சதும் சொல்லுங்க மேம் வரேன்" என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.​

"ஆதிஷ்..." அழுத்தமாக அழைத்தாள் அதிஷா .​

"ரிலாக்ஸ் பேபி" என்று சொல்லிக்கொண்டே அவள் புறம் திரும்பியவன் "பிடிக்கலைன்னா பிடிக்கலன்னு சொல்லிடு. அது புடவையா இருந்தாலும் சரி புருஷனா இருந்தாலும் சரி" என்று அவள் விழிகளை பார்த்து கொண்டே சொன்னவன் அவள் கன்னத்தை ஒற்றை கரத்தால் பற்றி முன்னே திருப்பி மீண்டும் கண்ணாடியை பார்க்க செய்தான்.​

"பட் நீ வேண்டாம்னு சொன்னாலும் உன் வருங்கால புருஷன் சரின்னு விட்டுட்டு போய்டுவான்னு எனக்கு தோணல. அவ்வளோ அழகு பேபி நீ. நானா இருந்தாலும் விட மாட்டேன்.வாழ்க்கை முழுக்க இல்லேன்னாலும் ஒரு நாளாச்சும்..." என்று அவன் சொல்லிக்கொண்டே போக விழிகளை அழுந்த மூடிக்கொண்டவள் "ப்ளீஸ் லீவ்" என்றாள்.​

குரல் தழுதழுத்தது.​

"சூப்பர் சாய்ஸ்" என்று சொல்லியபடி மேகவாணி அவள் தோள் மீது கை வைத்த பின்னரே விழிகளை திறந்து பார்த்தவள் சுற்றும் முற்றும் தேடி பார்க்க அங்கே அவன் இருக்கவில்லை. அந்த விற்பனை பெண் மட்டுமே நின்றிருந்தாள்.​

"இந்த புடவையையே பேக் பண்ணிடட்டுமா மேம்" என்று அவள் கேட்க "இல்லை வேணாம்" என்றாள்.​

"ஏன் அதி. இதுவே நல்லா தானே இருக்கு" என்ற மேகவாணி "இதையே பில் போட்டுடு மா" என்றார்.​

அதே சமயம் ஜீப்பில் ஏறி அமர்ந்தவனை அருகில் இருந்த கதிர் "என்ன ண்ணே வர வர அந்த பொண்ணு மேலயே உங்க கண்ணு போகுதே" என்று ஒரு மார்க்கமாக கேட்டான்.​

"என்னமோ தெரியல டா… என்னை பார்த்தாலே பயந்து போகுற பொண்ணுங்க மத்தியில அவள் மட்டும் என்னை ஒரு மாதிரி பார்க்குறா டா. அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னே தெர்ல...ஆனால், அவள் அப்படி பாக்கும் போதெல்லாம் உள்ளுக்குள்ள ஒரு மாதிரி காண்டகுது...அதான் இனி என் பக்கமே திரும்பாத அளவுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு வந்திருக்கேன்" என்றான்.​

"ஆஹ் பாத்தேன் பாத்தேன்" என்று கேலியாக சொன்ன கதிர் " ஆனால் எனக்கொரு சந்தேகம் ண்ணே" என்றான்.​

முதுகில் சொருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டே அவனை புருவம் சுருங்க பார்த்தவன் "என்ன டா" என்றான்.​

"இல்ல... அந்த பொண்ண பார்த்தா உங்களுக்கு காண்டாகுதா இல்ல காதலாகுதா?" என்று கேட்டான்.​

“ஹாஹாஹா” என்று இதழ் பிரித்து சிரித்துக்கொண்டே கையில் இருந்த துப்பாக்கியை சுற்றி சுற்றி பார்த்த ஆதிஷ் "என் கையில இருக்குற துப்பாக்கியில் ஏதோ ஒரு தோட்டால உன் பேர் எழுதியிருக்குன்னு நினைக்குறேன்" என்க "ஐயோ அண்ணே" என்றபடி நெஞ்சில் கை வைத்து கொண்டான் மற்றையவன்.​

"ஹேய், ஹேய் ...அங்க பாரு அவனை தேடி தான் வந்தேன்" என்றான் அவர்கள் ஜீப்பை தாண்டி அங்கே நிறுத்தி வைக்க பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்து சென்றவனை பார்த்துக்கொண்டே.​

"அவன் அந்த பொண்ணு வேலை செய்யுற ஹாஸ்பிடல்ல வார்டு பாய் தானே" என்று கேட்டான் கதிர்.​

"முன்னால் வார்டு பாய். அவன் வேலையை விட்டு நின்னு நாலு மாசம் ஆச்சு. பைக்ல ஏறிட்டான் பாரு. வண்டியை எடு, அவனை ஃபொல்லோவ் பண்ணு” என்றான்.​


 
Status
Not open for further replies.
Top