எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை-அத்தியாயம் 6

Status
Not open for further replies.

_1c9418e5-b16e-4c7d-9001-36607c642b1f.jpg

அத்தியாயம் 6

அந்த முன்னால் வார்ட் பாய் சுப்ரமணியை தேடிக்கொண்டு ஆதீஷ் சென்றிருந்த நேரம் அவன் ஜவுளி கடைக்குள் நுழைந்து விட அவனை பின் தொடர்ந்து உள்ளே சென்ற சமயம் தான் அவன் அதிஷாவை பார்த்தது.​

அதன் பிறகு, வந்த வேலையை விட்டுவிட்டு அதிஷாவிடம் தனது லீலைகளை புரிந்தவன் அப்படியே வெளியில் வந்திருக்க அந்த சுப்ரமணியின் கெட்ட நேரத்திற்கு மீண்டும் அவன் கண்களில் அகப்பட்டுக்கொண்டான்.​

வண்டியை உயிர்ப்பித்து அவன் சிட்டாக பறந்த நேரம் ஆதீஷின் வண்டியும் அவனை பின் தொடர்ந்து சென்றது.​

"இவனை தான் தேடிட்டு இருந்தேன். நாலு மாசமா எங்கையோ போய் தலைமறைவாகிட்டான். இன்னிக்கு தான் அவன் லவர்ரை பார்க்க திருட்டு தனமா ஊருக்குள்ள வந்திருக்கான். மிஸ் பண்ணிடாத... வேகமா போ" என்று ஆதீஷ் கட்டளையிட அதை சிரமேற்கொண்டு செய்தான் கதிர்.​

அவர்களின் வண்டி அவனை நெருங்கிய நேரம் அவனை அவர்கள் பின் தொடர்வதை உணர்ந்துகொண்டவன் வண்டியின் வேகத்தை கூட்டி முந்திக்கொண்டு செல்ல எங்கிருந்தோ அதி வேகத்தில் வந்த கருப்பு நிற ஜீப் ஒன்று அவனை மோதி தள்ளியதில் பறந்து சென்று விழுந்தான்.​

மோதிய வண்டியும் நிற்காமல் சென்று விட்டது.​

"ஷிட்" என்று கத்திய கதிர் வண்டியை ஓரங்கட்ட இருவரும் வண்டியிலிருந்து இறங்கி சாலையில் விழுந்து கிடந்த சுப்ரமணியின் அருகே சென்று பார்த்தார்கள்.​

விபத்து என்பதால் அங்கே கூட்டமும் கூட தொடங்கியிருந்தது.​

இரத்த வெள்ளத்தில் விழிகளை திறந்தபடி அசைவின்றி கிடந்த சுப்ரமணியின் நிலையே அவன் உயிர் அவனை விட்டு பிரிந்திருப்பதை உறுதிப்படுத்த "சுச்சுச்சு" என்று பரிதாபப்படுவது போல ஆதிஷ் உச்சுக்கொட்டினான்.​

"செத்துட்டான் ண்ணே...பாவம்" என்றான் கதிர்.​

திரும்பி ஜீப்பை நோக்கி நடந்து கொண்டே "அவன் செத்ததுக்கு வருத்தப் படுறேன்னா நினைச்ச?" என்று ஆதீஷ் கேட்க​

"இல்லையா பின்ன?" கேட்டான் மற்றயவன்.​

"என் கையில சிக்கியிருந்தா இதை விட மோசமா செத்துருப்பான். வாழவே தகுதி இல்லாத பொறம்போக்கு பயல்" என்று நாலு கெட்டவார்த்தைகளையும் சேர்த்து திட்டிக்கொண்டே வண்டியினுள் அமர்ந்தவனிடம் "அப்போ அதுக்கு உச்சுக்கொட்டலையா?" என்று கேட்டான் கதிர்.​

"பாவம் லவர்காக ஆசையா புடவை வாங்கினான். அந்த புடவை நடுரோட்டுல கிழிஞ்சு போய் கிடக்குதேன்னு வருத்தப்பட்டேன் டா" என்றான்.​

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தபடி "அதானே பார்த்தேன்" என்று இதழ்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டே அமர்ந்திருந்த கதிரிடம் "இப்போ நடந்தது வெறும் அக்சிடேன்ட் மாதிரி தெரியல. நம்மள போல இவன் உயிர் வேற யாருக்கோ தேவை பட்டிருக்கு" என்றான் ஆதிஷ் .​

"இப்போ என்ன பண்ணுறது" என்று கதிர் கேட்க "வண்டிய எடு. ஒரே டயர்டா இருக்கு ரெண்டு பாட்டில் சரக்கடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கணும்" என்றபடி சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்.​

அதே நேரம் வீட்டிற்கு வந்து சேர்ந்த அதிஷாவிற்கு ஜவுளி கடையில் நிகழ்ந்தது இன்னமும் உறுத்திக்கொண்டே இருந்தது.​

யாரையும் அவ்வளவு எளிதில் தன்னை நெருங்க விட மாட்டாள். அதுவும் ஆண்கள் என்றால் தீயாய் இருப்பவள். ஆனால் இன்று ஆதீஷ் அவளை எளிதில் நெருங்கியிருந்தான். அவளை தொட்டு பேசியும் இருந்தான்.​

அவனை அவள் விலக்கவும் இல்லை, விட்டு விலகவும் இல்லை. தன் மூளைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.​

இரவு உணவு வேண்டாமென்று சொல்லிவிட்டு சென்றவள் குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டாள். துாவாலைக்குழாயை திறந்து விட்டு அதற்கடியில் வெகுநேரம் நின்றிருந்தாள்.​

கொட்டும் நீர் உடலில் இறங்கி தரையை தொட மனதில் இருந்த அழுத்தம் சற்றே குறைந்தது போன்ற உணர்வு.​

உடை மாற்றி விட்டு அப்படியே படுக்கையில் விழுந்தவள் எப்பொழுது தூங்கி போனாள் என்றும் தெரியவில்லை.​

கையில் ரோஜா பூவுடன் நடந்து வந்த ராகவன் அந்த பூவை நீட்ட தனக்கு தான் என்ற எண்ணத்தில் கையை உயர்த்தியவளின் புருவம் யோசனையாக இடுங்கியது.​

அவன் அவள் நின்றிருந்த இடத்திற்கு சற்று தள்ளி இருந்த மரத்திற்கு முன்னால் நின்றபடி ரோஜா பூவை நீட்டியிருந்தான்.​

மரத்தின் மறைவிலிருந்து ஒரு கரம் நீண்டு அந்த மலரை பெற்றுக்கொண்டது. யாருடைய கரம் என்று அவள் யோசித்த நொடி மரத்தின் மறைவிலிருந்து வெளியில் வந்து அவனுடன் பேச தொடங்கியிருந்தாள் ஹெலினா.​

தனது பிறந்தநாளுக்கு மருத்துவ முகாமிற்காக உடன் வந்த நண்பிகள் அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தவள் ஹெலினாவை தேடினாள். அவள் இந்த பக்கம் சென்றதை பார்த்தாக தோழிகளில் ஒருத்தி சொல்ல அவளை தேடி கொண்டு அதிஷா அங்கே சென்றாள்.​

அவளை தேடி வந்தவளின் கண்களில் தான் அங்கே கையில் ரோஜாவுடன் வந்துக்கொண்டிருந்த ராகவன் விழுந்தான்.​

அவன் ரோஜாவை நீட்டியதும் அவன் மீது இருந்த ஈர்ப்பில் அன்னிச்சை செயலாக அதை பெற்றுக்கொள்ள கைகளை உயர்த்தியிருந்தாள்.​

அவள் மரத்திற்கு மறுபுறம் நின்றிருக்க ராகவனும் ஹெலினாவும் அவள் அங்கே நிற்பதை கவனிக்கவில்லை.​

அவனது மனம் ஹெலினாவிற்கு சொந்தமானது என்று தெரிந்தவுடன் மெல்லிய புன்னகையுடன் பின்னந்தலையில் தட்டிக்கொண்டவள் "நல்லவேளை அவங்க ரெண்டு பேரும் பார்க்கல. இல்லை மானம் போயிருக்கும். என்னாச்சு அதி உனக்கு?" என்று தனக்கு தானே முணுமுணுத்துக்கொண்டே திரும்பி நடந்தவளின் செவிகளில் ஹெலினாவின் பேச்சுக்குரல் கேட்க அவளது பாதம் அங்கேயே வேரூன்றி நின்றுவிட்டது.​

"ஐ அம் சாரி மாமா. இதெல்லாம் நமக்குள்ள சரி வரும்னு தோணல" என்றாள் அவள்.​

"ஹேய், சும்மா விளையாடற தானே" என்று முயன்று வரவழைத்த சிரிப்புடன் கேட்டான் ராகவன்.​

அவனது அந்த வலிமிகுந்த சிரிப்பு அதிஷாவை என்னவோ செய்ய அடுத்தவர்கள் சங்கதி நமக்கெதுக்கு என்று அவளால் கடந்து செல்ல முடியவில்லை அவன் நினைப்பது போல் ஹெலினா விளையாட்டாகவே சொல்லியிருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.​

ஆனால், ஹெலினா சொன்ன பதிலில் அவர்கள் இருவரின் நம்பிக்கையும் பொய்த்து போனது.​

"இது விளையாடற விஷயமில்லை மாமா. நான் அப்பா கிட்ட எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் அவர் ஒத்துக்க மாட்டுறாரு. அத்தை அவர் பேச்சு கேட்காமல் ஓடிப்போய் மாமாவை கட்டிக்கிட்டதை அவரால இன்னமும் ஏத்துக்க முடியலயாம்னு சொல்லுறாரு. அதுவும் போன பொண்ணு நல்லா வாழ்ந்திருந்தாலும் பரவால்ல. ஆனால் குடி, ட்ரக்ஸ், பொம்பளைன்னு சுத்தி என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்துட்டு அல்பாயுசுல போய் சேர்ந்தவன் புள்ளையும் அவனை போல தான் இருப்பான்னு சொல்லி நம்ம காதலை அறவே மறுத்துட்டாரு" என்றாள்.​

"லினா... இதெல்லாம் நமக்கு முதல்லயே தெரிஞ்சது தானே. உங்கப்பா எங்கம்மாவை பேசுன பேச்சுக்கு தானடி அவர் முகத்துலையே முழிக்க கூடாதுன்னு இவ்வளவு தூரம் தள்ளி வந்தேன். எல்லாம் தெரிஞ்சும் நீ தானடி லவ் மண்ணாங்கட்டின்னு போன் மேல போன் போட்டு காதலை சொன்ன... இப்போ வந்து முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்?"​

என்று சீறினான்.​

அவள் பதில் ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்து நிற்க ஆழ்ந்த மூச்செடுத்து நிதானத்துக்கு வந்தவன் "லினா, நீ தேவை இல்லாமல் எதையோ நினைச்சு குழப்பிக்குற. நான் வந்து உங்கப்பா கிட்ட பேசிப் புரிய வைக்குறேன். கொஞ்சம் பொறுமையா இரு" என்றான் அவளுக்கு புரிய வைத்துவிடும் எண்ணத்தில்.​

"நீங்க தான் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. முதல்ல இந்த காதல் எல்லாம் நல்லா தான் இருந்தது. பட் வாழ்க்கைன்னு வரும் போது சரி வரும்னு தோணல. அப்பாவை மீறி உங்களை கல்யாணம் பண்ணுனா சொத்துல ஒரு பைசா கூட தரமாட்டேன்னு சொல்லிட்டாரு" என்றவளை அதிர்ந்து பார்த்த ராகவனின் விழிகள் கலங்கி விட்டது.​

மரத்திற்கு பின்னால் நின்று அவர்களை பார்த்துக்கொண்டிருந்த அதிஷாவிற்கும் அவனது நிலையை சகித்துக்கொள்ள முடியாமல் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. ஹெலினாவின் மீது ஏனோ கோபமாக வந்தது. சாக்லேட் பாக்ஸை பிடித்திருந்த கரங்களில் அழுத்தம் கூடின.​

"லினா, நீயா இப்படி... பணத்துக்காகவா..." என்று அடுத்த வார்த்தை வராமல் அவன் குரல் தழுதழுக்க மீதி வார்த்தைகள் அவன் தொண்டைக் குழிக்குள்ளேயே மடிந்து போயின​

"ப்ளீஸ் பி பிராக்டிகல் மாமா.காதலிக்கும் போது வெறும் காதல் மட்டும் போதும். ஆனால், வாழ்க்கைன்னு வரும் போது பணம் அவசியமில்லையா? நீங்களே யோசிச்சு பாருங்க சொத்து சுகம் எதுவும் வேண்டாம்னு உங்கம்மா உங்கப்பாவை கட்டிக்கிட்டாங்க. ஆனால், அவர் இல்லாத தப்பை எல்லாம் பண்ணிட்டு செத்து போனதுக்கப்புறம் அந்த பணமில்லாமல் தனியாளா உங்களை வளர்க்க அத்தை எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க. அதை எல்லாம் யோசிச்சு பார்க்கும் போது அப்பா சொல்லுறது சரின்னு தான் தோணுது" என்று கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் அவள் பேசிவிட கோபத்தில் அவள் கழுத்தை பற்றி மரத்தோடு சாற்றியிருந்தான்.​

அவன் வலிய கரம் கொடுத்த இறுக்கத்தில் வலி தாளாத மங்கையவளின் கையில் இருந்த ரோஜா மலர் தரையில் விழுந்து அவர்கள் காதலை போலவே புழுதி படிந்து அனாதையாக கிடந்தது.​

"பேசாத டி, பேசாத. இன்னும் ஒரு வார்த்தை பேசினா உன்னை கொன்னு இங்கையே புதைச்சிடுவேன்.போன்ல விடிய விடிய கதை பேசினோம்ல, ஆயிரம் முத்தம் கொடுத்தும் கேட்டும் காதல் பண்னோம்ல அப்போ தெரியலையாடி உனக்கு உங்கப்பன் ஒத்துக்கமாட்டான்னு...இப்போ வந்து அப்பன் சொன்னான் ஆத்தா சொன்னான்னு வேண்டாங்குற. என்ன பார்த்தா கேணையன் மாதிரி இருக்கா?" என்று கேட்டவனின் பிடி இறுக மூச்சுக்கு திணறியவள் இரும தொடங்கிய சமயத்திலேயே தான் செய்துக்கொண்டிருந்த விபரீதம் உணர்ந்தவன் சட்டென்று அவள் கழுத்தை விட்டிருந்தான்.​

"உங்கப்பன் என்னா லூசாடி...எங்கப்பனை வச்சு என்னை ஜட்ஜ் பண்ணுறான். ஏன் நான் என்ன படிச்சிருக்கேன், என்ன வேலை செய்யுறேன்னு அவனுக்கு தெரியாதா? பயித்தியம் மாதிரி உளறிட்டிருக்கான்" என்று அவன் கோபத்தில் மரியாதை அனைத்தையும் மறந்து தனது தாய் மாமனையே ஒருமையில் பேச துவங்கியிருந்தான்.​

"ஸ்டாப் இட் ராகவன். என் அப்பாவை மரியாதை இல்லாமல் பேசுறீங்க" என்று ஹெலினா சொல்ல "அறைஞ்சேன்னா, அவனுக்கெல்லாம் என்னடி மரியாதை வேண்டி கிடக்கு?" என்று கையை ஓங்கியவன் பற்களை கடித்து தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தபடி ஓங்கிய கையை அப்படியே தலையில் வைத்து சிகையை அழுந்த கோதிக் கொண்டான்.​

கண்களில் ஒரு துளி கண்ணீர் உருண்டு விழ அதை துடைத்து கொண்டான்.​

"போடி, போ. உங்கப்பன் எவனாவது லூசு பயல பார்த்து வைப்பான் அவனையே கட்டிக்கோ. இனி ஒருமுறை என் கண் முன்னாடி வந்துறாத. சாவடிச்சிடுவேன் உன்னை" அன்று கத்தியபடி திரும்பி நடக்க அவன் கொடுத்த ரோஜா மலர் அவன் காலிலேயே மிதிப்பட்டு சிதைந்து போனது.​

செல்லும் அவன் முதுகையை பார்த்துக்கொண்டே கைகளை கட்டிக்கொண்டு கண்களில் கோர்த்திருந்த கண்ணீர் விழுந்து விடாமல் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்த ஹெலினாவை விசித்திரமாக பார்த்த அதிஷா அவள் அருகே சென்று அவள் தோள் மீது கை வைத்தாள்.​

அதற்குமேலும் தாங்க முடியாமல் ஹெலினா உடைந்து அழ தொடங்கிவிட "அவரை ஹர்ட் பண்ணிட்டு நீ எதுக்கு அழற?" என்றாள்.​

ஹெலினா அவளை அதிர்ந்து பார்க்க "எல்லாமே கேட்டுட்டு தான் இருந்தேன்" என்று விளக்கம் சொன்னாள்.​

"வேணும்னு ஹர்ட் பண்ணல. இந்த காதலை வேண்டாம்னு சொல்லலைன்னா அவரை கொன்னுடுவேன்னு எங்கப்பா மிரட்டுறாரு" என்றவளிடம் "அதை அவர் கிட்டையே சொல்ல வேண்டியது தானே. எதுக்கு இப்படி பண்ணுன?" அடுத்த கேள்வி கேட்டாள்.​

"எங்கப்பாவை பத்தி உனக்கு தெரியாது அதிஷா. அவர் நினைச்சது நடக்கணும்னா அவர் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவாரு. ராகவன் மாமாவோட அப்பா ட்ரக்ஸ் ஓவர் டோஸ் ஆகி தான் இறந்துட்டதா எல்லாரும் நினைச்சிட்டிருக்காங்க. ஆனால், அது உண்மையில்லை. எங்கப்பாவை மீறி அவரு தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டதை அவங்களுக்கு ராகவன் மாமா பிறந்த பின்னாடியும் கூட அவரால ஏத்துக்க முடியல. அதுனால எங்கப்பா தான் மாமாவுக்கு இருந்த ட்ரக்ஸ் பழக்கத்தை பயன்படுத்தி அவரை கொன்னுட்டாரு. அவரோட பண பலத்தை பயன்படுத்தி அதை யாருக்கும் தெரியாமல் மறைச்சிட்டாரு. எனக்கே இங்க வரதுக்கு முன்னாடி தான் இந்த விஷயம் தெரியும். எங்க காதலை பத்தி அப்பா கிட்ட பேசுன நேரம் தான் இதை என் கிட்ட சொன்னாரு. இப்போ நானும் அவரை மீறி நடந்தா நிச்சயமா எங்கப்பா ராகவன் மாமாவை ஏதும் பண்ணிடுவாரு. அவர் எனக்கு கிடைக்கலன்னாலும் பரவால்ல. பட் அவர் உயிரோட வாழனும். அது போதும் எனக்கு" என்று அழுதாள்.​

அவளின் முதுகை ஆறுதலாக வருடி விட்ட அதிஷாவிடம் "அழுத்தம் தாங்க முடியாம நீ கேட்டதும் எல்லாத்தையும் சொல்லிட்டேன். ப்ளீஸ் இதை யார்கிட்டையும் சொல்லிடாதே, அதி" என்றவள் "அவரை ஹர்ட் பண்ணிட்டேன். அவர் அழுததை பார்த்தப்போ மனசு என்னவோ மாதிரி ஆகிடுச்சு. அவரை ஹர்ட் பண்ணினத்துக்கு எனக்கு இந்த ஜென்மத்துல மன்னிப்பே இல்லை" என்று புலம்பியபடி திரும்பி நடந்தாள்.​

அவள் இருக்கும் மனநிலையில் அவளை தனியே விடுவது சரியில்லை என தோன்ற "ஹெலினா, எங்க போற?" என்று கேட்டாள் அதிஷா.​

"மனசு சரியில்ல. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்" என்று சொல்லியபடி நடந்தாள்.​

அவள் ஒரு புறம் நடக்க மற்றைய புறம் திரும்பி ராகவனை பார்த்தாள் அதிஷா. அவனது காரில் ஏறி அமர்ந்தவனுக்கு நிலைக்கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட காரின் ஸ்டெரிங்கில் தலை சாய்த்து படுத்தபடி தனது சக்தியெல்லாம் திரட்டி எடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முயன்றுக் கொண்டிருந்தான்.​

நான்கு வருட காதல் ஆயிற்றே. தொலைபேசியில் காதல் வளர்த்திருந்தாலும் காதல் காதல் தானே. அவளை மனதார நேசித்துவிட்டான். மனமெங்கும் ஹெலினாவே வியாபித்திருக்க அவள் பேசிய பேச்சுக்களை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.​

பணத்திற்காக அவனை வேண்டாம் என்று அவள் சொல்லியதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.​

இரு காதல் மனங்களும் மூன்றாம் நபரின் வன்மத்துக்காக பலியாகிக்கொண்டிருப்பதை பார்த்த அதிஷாவிற்கும் மனதில் பாரம் ஏறி போனது.​

திடிரென்று ஒரு சத்தம்.​

வேகமாக வந்து கொண்டிருந்த மணல் லாரி ஒன்று கிரீச்சிட்டு பிரேக் அடித்து நின்றது. லாரியை ஓட்டி வந்த சாரதிக்கு அசதியில் தூக்கம் வந்துவிட தூங்கி விழுந்ததில் வண்டி தடம் மாறியிருந்தது.​

சுதாகரித்துக்கொண்டு அவன் வண்டியை பிரேக் அடித்து நிறுத்த எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த கருப்பு நிற கார் அந்த லாரியின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சுழன்று வந்து சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த ஹெலினாவின் மீது மோதியிருக்க தூக்கி எறியப்பட்ட பெண்ணவளோ "ஆஅஹ்ஹ்ஹ" என்ற மரண ஒலத்தோடு இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தாள்.​

அந்த காட்சியை கண்ணெதிரில் கண்ட அதிஷா அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவள் கையில் வைத்திருந்த சாக்லேட் பாக்ஸ் கீழே விழுந்து சிதறியது.​

காருக்குள் அமர்ந்திருந்த ராகவனும் சத்தம் கேட்ட திசையை நோக்கி திரும்பிய சமயம் அவன் கண்களில் அந்த கருப்பு நிற கார் ஹெலினாவை மோதி அவள் தூக்கி எறியப்படும் காட்சியே புலப்பட "நோ" என்று கத்தியபடி அவசரமாக கார் கதவை திறந்து கொண்டு ஓடினான்.​

வழியில் உறைந்து நின்ற அதிஷாவை கடந்து ஹெலினாவிடம் ஓடினான்.சுற்றியிருக்கும் எதையும், யாரையும் கவனிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.​

சாலையில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தவளை மடியில் ஏந்தியவனின் முகம், உடல் என்று அவள் குருதி நனைத்திருந்தது.​

அழுதான். கதறி அழுதான்.​

அவன் கதறலே உறைந்திருந்த அதிஷாவை நிஜ உலகிற்கு மீட்டிருக்க வேகமாக ஓடியவள் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.​

ராகவன் அவளுக்கு முதுகுக் காட்டி அமர்ந்திருக்க அவன் மடியில் கந்தளாய் கிடந்தாள் ஹெலினா.​

இரத்தம் தோய்ந்த கரத்தால் அழுதுக்கொண்டிருந்த ராகவனின் கன்னம் வருடி எதையோ சொல்ல முற்பட்டாள். வாயை மட்டுமே அவளால் அசைக்க முடிந்ததே தவிர அவள் பேசுவது எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.​

"கால் தி ஆம்புலன்ஸ். ப்லீஸ், சம்படி கால் தி ஆம்புலன்ஸ்" என்று கத்தினான் அவன்.​

கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க அவனையே பார்த்திருந்த ஹெலினாவின் கண்களுக்கு அவனுக்கு பின்னால் நின்றிருந்த அதிஷா தென்பட கண்களால் ராகவனை காட்டி "மன்...மன்னி...ச்சிட சொல்லு" என்று இதழசைத்தவளின் விழிகள் அதிஷாவிடமே நிலைத்திருக்க அவள் ஆழ்ந்து எடுத்துக்கொண்ட இறுதி மூச்சுடன் அவளது உயிர் ராகவனின் மடியிலேயே பிரிந்திருந்தது.​

தனது மடியில் பிணமாய் கிடந்தவள் கன்னம் தட்டி அவளை எழுப்ப முயன்றான். முடியவில்லை. அவள் இறந்துவிட்டாள் என்று புத்திக்கு உரைத்தது. ஆனால், மனதிற்கு புரியவில்லை.​

தேடித் தேடி காதலித்துவிட்டு பாதியில் விட்டு செல்கிறேன் என்று அவள் சொல்லியதில் கோபம் இருந்தாலும் இப்படி ஒரேடியாக அவள் அவனை மட்டுமின்றி உலகத்தை விட்டே சென்று விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை.​

அடுத்த நொடி நிரந்தரமில்லா வாழ்கை அல்லவா இது​

"லினா, லினா எழுந்திரு...எழுந்திரு... ஹெலினா..." என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கதறினான்.​

"ஹெலினா" என்று கத்தியபடி பதறிக்கொண்டு மெத்தையில் எழுந்தமர்ந்தாள் அதிஷா.​

முகமெல்லாம் வியர்த்து வழிந்தது.​

கனவு.​

அவளை இத்தனை வருடங்களாக துரத்தும் கனவு. நிகழ்ந்த சம்பவம் மீண்டும் மீண்டும் கனவாக வந்து அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தது.​

கண்களை மூடி திறந்தாள். விழிகளில் தேங்கியிருந்த நீர் கன்னம் நனைத்தது. துடைத்துக்கொண்டாள்.​

அலைபேசியை எடுத்து நேரத்தை பார்த்தாள்.​

இரவு பன்னிரெண்டு மணியென்று காட்டியது.​

மேசையில் இருந்த பாட்டிலை எடுத்து நீரை அருந்தி தன்னை நிதானப் படுத்திக்கொண்டாள். ராகவனுக்கு அழைக்கலாமா என்றும் கூட ஒரு கணம் யோசித்தாள்.​

இரவு நேரம் என்பதோடு அவனே கூப்பிடுகிறேன் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வர அந்த எண்ணத்தை கைவிட்டவள் பால்கனியில் சென்று நின்றுக்கொண்டாள்.​

நிமிர்ந்து வானத்தை பார்த்தாள்.​

அவள் மனதை சூழ்ந்திருந்த கவலையை போல் கருமேகங்கள் நிறைந்திருந்தன. நிலாவும் நட்சத்திரங்களும் அதில் மறைந்திருந்தன.​

தூரத்தில் வண்டி சத்தம் கேட்டது. வண்டி வரும் திசை நோக்கி திரும்பி பார்த்தாள். ஆதீஷின் ஜீப் வந்துகொண்டிருந்தது.​

பகல் வேளைகளில் அடிதடி கட்ட பஞ்சாயத்து என்று திரிபவனுக்கு இரவின் தனிமையில் மெல்லிசையோடு கூடிய பயணம் தான் பொழுதுபோக்கு.​

பகலில் ராட்சசன் வேடம் பூண்டவன் இரவுகளில் ரசிகனாக மாறிவிடுகின்ற முரணானவன்.​

அவன் ஜீப்பையே பார்த்துக்கொண்டு நின்றாள்.​

சாலையில் பார்வையை சுழல விட்டு கொண்டே கையில் பீர் பாட்டிலுடன் இரவு நேர பயணத்தை ரசித்துக்கொண்டு வந்தவனின் கண்களில் பால்கனியில் நின்றுகொண்டிருந்த அதிஷா தென்பட வண்டியின் வேகத்தை குறைத்து வானொலியின் ஒலியை கூட்டினான்.​

தாம் தூம் திரையிலிருந்து யாரோ மனதிலே என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.​

வண்டியை அவள் வீட்டின் முன் சற்று நேரம் நிறுத்தி அவளை பார்த்தபடியே பீர் பாட்டிலை வாய்க்குள் சரித்தான்.​

பாடலின் வரிகள் அவள் செவிகளுக்கு நன்றாகவே கேட்க அவள் விழிகளும் அவன் விழிகளில் படிந்திருந்தன.​

மனம் மனம் எங்கிலும்

ஏதோ கணம் கணம் ஆனதே

தினம் தினம் ஞாபகம் வந்து

ரணம் ரணம் தந்ததே

அலைகளின் ஓசையில் கிழிஞ்சலாய் வாழ்கிறேன்

என்ற பாடல் வரிகள் அவளுடைய தற்போதைய நிலையை விளக்கும் வரிகளாகவே அமைந்திருந்தன. தற்செயலாக ஒலித்த பாடல் தான் என்றாலும் அவளின் நிலையை ஒவ்வொரு முறையும் அவன் சரியாய் கணித்து விடுவது போலவே அவளுக்குள் பிரம்மை எழுந்தது.​

ரகசியங்கள் புதைந்து கிடக்கும் பெண் அவளின் மனதை அவன் ஊடுருவி பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு.​

இமைக்காது அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். சற்று நேரம் அவள் விழிகளை ஆழ பார்த்தவன் வண்டியை கிளப்பிக்கொண்டு சிட்டாக பறந்துவிட்டான்.​


 
Status
Not open for further replies.
Top