எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை-அத்தியாயம் 7

Status
Not open for further replies.

_6b705543-12f5-42aa-829f-e409e60c38fd.jpg

அத்தியாயம் 7

அடுத்த மூன்று நாட்கள் எந்த தொந்தரவுமின்றி அவளுக்கு நலமாகவே கடந்திருந்தன. ஆதிஷை கூட அவள் இந்த மூன்று தினங்களில் பார்க்கவில்லை.​

ஆனால், இப்பொழுதெல்லாம் மருத்துவமனை ஊழியர்களின் பார்வை அவள் மீது வேறு ரகமாக படிவதை உணர்ந்துக் கொண்டாள். குறிப்பாக பெண் ஊழியர்களின் பார்வையில் தான் அந்த மாற்றம். முதலில் எதற்கென்று யோசித்தவளுக்கு பிறகு அது பொறாமையின் பார்வை என்று புரிந்துவிட்டது.​

அவர்களின் கனவு கண்ணன் டாக்டர் யஷ்வந்தின் மனைவியாகப் போகின்றாள் என்கின்ற பொறாமை. அதோடு இதுவரை அவளை பெரியதாக கண்டுகொண்டிராத மற்ற ஊழியர்களின் குலைவான பேச்சும் சேர்ந்துக்கொள்ள இப்பொழுதெல்லாம் அங்கே வேலை செய்வது சற்று அசௌகரியமாக இருந்தது அவளுக்கு.​

ஆனால், அதையெல்லாம் சாதாரணமாக கடந்து சென்று விடும் பக்குவமும் முதிர்ச்சியும் அவளிடம் இருக்க அந்த விடயத்தையும் அவள் சிறப்பாகவே கையாண்டிருந்தாள்.​

இப்படி அவளது தினசரி நாட்கள் சீராக சென்று கொண்டிருந்த சமயம் தான் அவள் வாழ்வை திசை திருப்பி போட்டிருந்த முதல் சம்பவம் நிகழ்ந்தது.​

அன்று அவள் மருத்துவமனைக்கு சற்று தாமதமாக சென்றிருந்தாள்.​

முதல் நாள் வேலை சற்று அதிகமாக இருக்க அந்த அசதியில் கடிகாரம் அலாரம் அடித்தது கூட தெரியாமல் தூங்கியிருந்தாள்.​

அன்று மேகவாணிக்கும் ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்க முதல் நாள் இரவே அவளை சுயமாக மருத்துவமனைக்கு சென்றுவிடும்படி சொல்லியிருந்தவர் காலையில் சற்று விரைவாகவே கிளம்பி விட்டார்.​

தாமதமாகியும் அதிஷா இன்னமும் எழுந்துகொள்ளாமல் இருப்பதை கவனித்த மலர், அவள் அறை கதவை தட்டியதிலேயே துயில் கலைந்தவள் அரக்க பறக்க கிளம்பி மருத்துவமனைக்கு சென்றிருந்தாள்.​

வேக எட்டுக்களுடன் உள்ளே நுழைந்தவள் அவசரமாக நடக்க அப்பொழுதுதான் மின்தூக்கியில் இருந்து வெளியில் தள்ளிக்கொண்டு வந்த ஸ்ட்ரெச்சரின் மீது மோதியிருந்தாள்.​

வெள்ளை துணியால் தலை வரை முடியிருந்ததை பார்த்தே அந்த உடலில் இருந்த ஆன்மா விடை பெற்றுவிட்டது என்று புரிந்து கொண்டவள் அந்த ஸ்ட்ரெட்ச்சரை தள்ளிக்கொண்டு வந்த வார்டு போயிடம் "சாரி சாரி..." என்று சொல்லிக்கொண்டே நகர போக அவள் இடித்ததில் அந்த வெள்ளை துணியின் நூல் அவள் கைக்கடிகாரத்தில் சிக்கி அவளுடன் இழுபட்டு சென்றது.​

சட்டென அதை உணர்ந்தவள் "ஐயோ.. சாரி.." என்று சொல்லிக்கொண்டே கடிகாரத்தில் இருந்து நூலை அறுத்து விட்டவள் நிமிர்ந்து பார்த்த நொடி அதிர்ந்தே விட்டாள்.​

வயிற்று வலியென்று அங்கே அனுமதிக்க பட்டிருந்த மீரா தான் அது.​

பதினைந்தே வயதுடைய சிறுமி.​

முன்தினம் வேலை முடிந்து கிளம்புவதற்கு முன் அதிஷா பரிசோதித்த இறுதி நோயாளியும் இந்த மீரா தான்.​

அதீத வயிற்று வலி காரணமாக மூன்று நாட்களாக மருத்துவனையில் அனுமத்திக்க பட்டிருந்தாள். அதிஷாதான் அவளுக்கான மருத்துவராக இருக்க தேவையான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் அவளுக்கு அளித்திருந்தாள். அவளுடைய உடல் நிலையும் நன்றாக தேறியிருக்க முன் தினம் தான் இன்று காலையில் அவளை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பியிருந்தாள்.​

அவளுக்கு தெரிந்த வரையில் உடல் ரீதியாக நலமாக இருந்த மீரா திடிரென்று மரணமடைந்திருப்பது அதிர்ச்சியாக தான் இருந்தது. அதுவும் அவள் கண்காணிப்பில் இருந்த நோயாளி என்பதால் இன்னமும் நெருடலாக இருந்தது. ஒருவேளை அவள் தான் ஏதும் அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டாளோ என்கின்ற நெருடல்.​

அவளது கவனக்குறைவால் நிகழ்ந்த மரணமாக இருக்குமோ என்கின்ற சிந்தனை மூளையை எட்டும் பொழுதே அவள் இருதயம் நடுங்க தொடங்கி விட்டது.​

மரணத்தை கண்டு அவள் அஞ்சவில்லை. மரணங்கள் மருத்துவர்களுக்கு புதியதல்ல என்றாலும் அவர்களின் கவனக் குறைவால் நிகழும் மரணங்கள் கொலைக்கு சமன் அல்லவா. அதுவே அவளை நடுங்க செய்திருந்தது.​

'இது எப்படியாச்சு?' என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே அந்த பெண்ணின் உடலுக்கு அருகே அவள் சென்ற சமயம் "லேட் ஆகிடுச்சு டாக்டர். பார்மாலிட்டீஸ் முடிக்கணும்" என்ற வார்டு பாய் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் ஸ்ட்ரெச்சரை வேகமாகத் தள்ளிக்கொண்டு சென்றான்.​

அவன் அந்த ஸ்ட்ரெச்சரை தள்ளிய வேகத்தில் ஏற்பட்ட அதிர்வில் அந்த பெண்ணின் கை மூடியிருந்த துணிக்கு வெளியே வந்து விழுந்தது. அந்த கையையே புருவம் இடுங்க பார்த்துக்கொண்டே அந்த உடலை நெருங்க முற்பட்ட சமயம் "டாக்டர் அதிஷா" என்ற குரல் அவளுக்கு பின்னாலிருந்து கேட்டது.​

திரும்பி பார்த்தாள். யாஷ் தான் அழைத்திருந்தான்.​

"எஸ் டாக்டர்" என்று கேட்டுக்கொண்டே அவள் திரும்ப அந்த வார்டு பாயை பார்த்தவன் "யூ கோ எஹெட்" என்று சொன்னான்.​

"டாக்டர் யாஷ் அது..." என்று அவள் ஏதோ சொல்ல வர அவளை அழுத்தமாக பார்த்தவன் "கம் டு மை ரூம் அதி" என்று சொல்லியபடி முன்னே சென்றான்.​

இதழ்களில் எப்பொழுதுமே மென்புன்னகையும் ஸ்நேகமான பார்வையும் கொண்டவனின் அந்த அழுத்தமான பார்வை அவளுக்கு புதிதாக இருந்தது.​

அவனை பின் தொடர்ந்து சென்றவள் அவன் அறைக்குள் நுழைந்தாள்.​

கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெதஸ்கோப்பை கழட்டி மேசை மீது வைத்துக்கொண்டே தனது நாற்காலியை இழுத்து போட்டுகொண்டு​

அமர்ந்தான் யாஷ்.​

மேசை மீது இருக்கரங்களையும் ஊன்றி விரல்களை கோர்த்தபடி அமர்ந்து அவளை அழுத்தமாக பார்த்தவனின் விழிகள் அவள் கையில் மாட்டியிருந்த வெள்ளை கோர்ட், ஸ்டெதஸ்கோப் மற்றும் கைப்பையில் பதிந்தது.​

"இப்போ தான் வேலைக்கு வரியா?" என்று தனது கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தபடி கேட்டான்.​

"சாரி டாக்டர். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" மன்னிப்பு கேட்டாள்.​

"கொஞ்சம் லேட் இல்லை அதி. ஒன்றரை மணி நேரம் லேட். இந்த ஒன்றரை மணி நேரத்துல எத்தனை பேஷன்ஸுக்கு உன் சர்வீஸ் தேவை பட்டிருக்கும். எத்தனை உயிர் மரணத்துக்கு பக்கத்துல போயிருக்கும். இல்லை மரணமே கூட நடந்திருக்கலாம். ஒரு டாக்டர் ஆஹ் இருக்குற உனக்கு ஒவ்வொரு செகண்ட் ஓட மதிப்பு என்னன்னு தெரிஞ்சிருக்க வேணாமா?" என்று கேட்டவனின் குரலில் கண்டிப்பு மிகுந்திருந்தது.​

"சாரி டாக்டர், இனி இப்படி நடக்காமல் பாத்துக்குறேன்" என்றாள்.​

"சாரி அதிஷா, ஐ நீட் டு கிவ் யூ வார்னிங் லெட்டர் ஃபோர் லேட் இன். இந்த மாதிரி அட்டிடியூட் எல்லாம் என்னால அல்லோவ் பண்ண முடியாது" என்றான்.​

"அண்ட் முதல்ல அங்க என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.​

"அது அந்த பொண்ணு, நேத்து நான் கடைசியா செக் பண்ணுனப்ப கூட நல்லாத்தான் இருந்தா. இன்னிக்கு சடன் ஆஹ் அவள் இறந்து போனதை பார்த்ததும்..." என்று அவள் சொல்ல​

"கம் ஓன் அதி, நம்ம பீல்டுல டெட் ஒன்னும் புதுசில்லையே. நடக்கிறது தானே. சில சமயம் நல்லா ஆரோக்கியமா இருக்குறவங்களே சடன் ஹார்ட் அட்டாக் வந்து இறக்குறது ரொம்ப சாதாரணமாகிட்டு வருது. ஒரு டாக்டரா இது உனக்கே தெரிஞ்சிருக்கும். அது போல தான் அந்த பொண்ணுக்கும். வயித்து வலின்னு அட்மிட் ஆனா. நீ அதுக்கான ட்ரீட்மெண்ட் கொடுத்த, அவளும் குணமாகிட்டா. பட் நேத்து நைட் அவளுக்கு சடன் ஆஹ் சீஷெர்( வலிப்பு) வந்துருச்சு. அன்னோன் ஒன்செட் சீஷெர் ( unknown onset seizure - வலிப்புத் தாக்கத்தின் ஆரம்பம் தெரியாதபோது கூறப்படும் மருத்துவ சொற்கூறு). அதுதான் அவள் மரணத்துக்கு காரணம்" நீண்ட நெடிய விளக்கமளித்தான் யாஷ்.​

இன்னமும் அதிஷாவின் முகம் தெளிவடையாமல் இருப்பதை பார்த்தவன் இருக்கையிலிருந்து எழுந்துகொண்டான்.​

அவள் அருகே சென்று அவள் கரத்தை எடுத்து தனது கரத்தின் மீது வைத்து மற்றொரு கரத்தால் மென்மையாக வருடிக்கொடுத்தவன் "இன்னும் ஏதோ ஒன்னு இந்த மூளையில் குடைஞ்சிட்டிருக்கு போலயே" என்று சொல்லியபடி அவள் நெற்றியை ஒற்றை விரலால் தொட்டு காட்டினான்.​

கண்களை மூடி தான் சற்று முன் பார்த்ததை நினைவு படுத்திக்கொள்ள முயன்றவளாக "அது அந்தப் பொண்ணோட மாணிக்கட்டுல யாரோ அழுத்தமா பிடிச்சது போல சிவந்த தடம் இருந்தது. அப்புறம் நகக்கீறல் இருந்த மாதிரி கூட ..." என்று அவள் மெதுவாக சொல்லிக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

அவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டே நின்றவன் "உனக்கு நல்ல அப்செர்வேஷன் அபிலிட்டி இருக்கு. குட், ஒரு டாக்டர்க்கு இருக்க வேண்டியது தான். பட் நீயே யோசிச்சு பாரு, அவளுக்கு வலிப்பு வந்ததுன்னு சொன்னேன். உடம்பும் கைகால்களும் தூக்கி போடும் போது என்ன செய்யுறதுன்னு தெரியாம பயந்து போய் அவளை அழுத்தி பிடிச்சு கொண்ட்ரோல் பண்ண பார்த்திருக்காங்க அவளுக்கு துணையா தங்கியிருந்த அட்டெண்டென். அதுல உண்டான மார்க்ஸ் தான் அதெல்லாம்" என்றான்.​

வலிப்பு என்பது நரம்பியல் சம்மந்த பட்ட நோயல்லவா. நரம்பியல் நிபுணன் அவனே அதற்கான விளக்கத்தையும் கொடுத்துக்கொண்டிருக்க அதற்குமேல் அவளுக்கு சந்தேகப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கவில்லை.​

"ம்ம்ம், ஓகே டாக்டர் புரியுது" சொன்னாள் அவள்.​

"அதி, எனக்கு தெரியும் நீ நோயாளிகள் மேல காட்டுற அக்கறை. நோயாளிகளை நாம கேர் பண்ணிக்குறதுல தப்பில்லை. பட், டோன்ட் கெட் டூ அட்டச்ட் (attached) வித் தேம். பிறகு இந்த மாதிரி இழப்புகள் நடக்கும் போது அது நம்மை பெர்சனல்லா பாதிக்கும்" என்று அவன் மருத்துவ துறையில் நிகழ கூடிய இதுப்போன்ற மரணங்களை எப்படி கையாள்வது என்று அவளுக்கு சொல்லிக்கொடுத்தான்.​

"ம்ம்ம், ஓகே டாக்டர் " என்று சொல்லிக்கொண்டே அவன் கரத்தில் இருந்து தனது கரத்தை விடுவித்து கொண்டவள் கதவை நோக்கி சென்றாள்.​

"அதிஷா " என்று அழைத்தான்.​

"எஸ் டாக்டர்" என்று அவள் திரும்பி பார்க்க " உன்கிட்ட ஹார்ஷா பேசியிருந்தா சாரி. ஐ நீட் டு பி ஃபேர் டு எவேரிபடி" என்றான்.​

மெல்லிய புன்னகையுடன் "புரியுது டாக்டர்" என்றவள் அங்கிருந்து வெளியேறுவதற்காக கதவை திறக்கப் போன சமயம் அறைக்கு வெளியில் இருந்து கதவு திறக்கப்பட்டது.​

ரோஷன் தான் வந்திருந்தான்.​

அதிஷாவை பார்த்து மென்மையாக சிரித்தவன் "ஹாய் அண்ணி, என்ன ஹாஸ்பிடல்லயே டேட்டிங் ஆஹ்?" என்றான்.​

"ஹாய் ரோஷன், அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல " என்று சிரித்தவள் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு வெளியேறியிருந்தாள்.​

யாஷின் விளக்கத்திற்கு பிறகு தான் தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக்கொள்கிறோமோ என்கின்ற எண்ணத்தில் மீராவின் மரணம் பற்றிய சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வேலையை தொடங்கினாள்.​

அவளுக்கு உதவியாக நர்ஸ் ரேணுகாவும் உடன் செல்ல வார்டுக்கு ரௌண்ட்ஸ் சென்றிருந்தாள்.​

ஒவ்வொரு நோயாளிகளாக பார்த்துக்கொண்டே வந்தவள் மீரா தங்கியிருந்த அறையை கடக்கும் போது சற்றே தயங்கி நின்றாள்.​

அவள் தயக்கத்தை உணர்ந்துகொண்ட ரேணுகா தான் " பாவம் அந்த பொண்ணு டாக்டர். வெறும் பதினஞ்சு வயசு தான். அப்பா இல்லாத பொண்ணு அவளோட அம்மாவும் அக்காவும் மட்டும் தான். அந்த பொண்ணு இறந்து போனது தெரிஞ்சு அவளோட அம்மா கதறி அழுதது இன்னமும் கண்ணுலயே இருக்கு" என்றார் நடுத்தர வயதுடைய அந்த தாதி.​

"ம்ம்ம். ஆனால் நாம செய்யுற வேலைக்கு இது போல இறப்பை எல்லாம் சகிச்சுக்க தானே வேணும் சிஸ்டர்" என்று அதிஷா சொல்ல​

"உண்மை தான் டாக்டர். ஆனால், ரொம்ப சின்ன பொண்ணு. எனக்கும் அவள் வயசுல ஒரு பொண்ணு இருக்கா. அதுதான் என்னவோ போல இருக்கு. இதே மாதிரி தான் நாலு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு செத்து போச்சு, இருந்தா அவளுக்கு ஒரு பதினேழு வயசு தான் இருக்கும்.தலைவலின்னு அட்மிட் ஆனா. டாக்டர் சூர்யா தான் அட்டென்ட் பண்ணுனாரு. எல்லா டெஸ்ட்டும் எடுத்து முடிச்சு அந்த பொண்ணுக்கு எதுவும் இல்லை சாதாரண தலைவலிதான் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு போனாரு. மறுநாள் காலையில் அந்த பொண்ணு திடிர்னு செத்துப்போச்சு" என்று சொன்னார்.​

அதிஷாவின் புருவங்கள் இடுங்கின.​

"அந்த பொண்ணுக்கு என்னாச்சு, எப்படி இறந்து போனா?" என்று அதிஷா கேட்க​

"காரணம் தெரியல டாக்டர். அன்னிக்கு எனக்கு நைட் ஷிஃப்ட். மறுநாள் டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய பேஷன்ஸ் லிஸ்ட் எல்லாம் செக் பண்ணிட்டிருந்தேன். டாக்டர் சூர்யா அந்த பொண்ணுக்கு மறுபடியும் ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சொன்னதா சொல்லி கூட்டி போனாங்க. மறுநாள் காலையில் அந்த பொண்ணை பிணமாதான் பார்த்தேன்" என்றார்.​

"வாட், எப்படி இறந்து போனாள்?" என்று கேட்டாள்.​

"தெரியல டாக்டர். ஆனால் இந்த பொண்ணு மாதிரியே அந்த பொண்ணுக்கும் திடிர்னு வலிப்பு வந்துச்சாம்ன்னு தான் சொன்னாங்க" என்றார்.​

அதிஷாவிற்கு ஏதோ நெருடலாக இருந்தது. தற்செயலாக நடந்த ஒரே மாதிரியான இறப்புகளா அல்லது திட்டமிட்ட கொலையா என்கின்ற யோசனை வேறு மனதை ஆட்கொண்டது. ஏதோ தவறாக இருப்பது போன்று உணர்ந்தாள்.​

"அன்னிக்கு அந்த பொண்ணை யாரு ஸ்கேன் எடுக்க அழைச்சிட்டு போனாங்கன்னு நினைவிருக்கா?" விசாரித்தாள் அதிஷா.​

"அது நம்ம நர்ஸ் சித்ராவும் அப்புறம் வார்டு பாய் சுப்ரமணியும் தான்" என்றவர் மேலும் தொடர்ந்து "ஆனால், அந்த பொண்ணு இறந்து ஒரு வாரம் இருக்கும், நர்ஸ் சித்ராவும் இறந்துட்டாங்க. தற்கொலை பண்ணிகிட்டாங்க. சுப்ரமணியும் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு போயிட்டான். அவனுக்கும் அவங்களுக்கும் ஏதோ தப்பான தொடர்பு இருந்ததாம். அது சித்ரா புருஷனுக்கு தெரிஞ்சு போனதால தான் அவங்க தற்கொலை பண்ணிகிட்டதாகவும் அந்த பயத்துல தான் சுப்பிரமணி ஊரை விட்டு ஓடிட்டதாகவும் பேசிக்கிட்டாங்க" என்று விளக்கமளித்தாள்.​

ரேணுகா சொன்ன விடயங்கள் எல்லாம் அந்த மருத்துவமனையில் ஏதோ ஒன்று தவறாக நடப்பது போன்ற உணர்வை கொடுக்க அதிஷா யோசனையில் ஆழ்ந்த சமயம் "டாக்டர், எமெர்ஜென்சி. இருபதாம் நம்பர் ரூம் பேஷன்ட்டுக்கு தீடிர்னு மூச்சு விட முடியல" என்று அங்கே ஓடி வந்த நர்ஸ் ஷாமினி அழைக்க ரேணுகா சொன்ன விடயங்களை ஒதுக்கி வைத்து விட்டு தனது கடமையை செய்ய விரைந்தாள்.​

தனது பணிகளுக்கு இடையில் கிடைத்த சில நிமிட ஓய்வு நேரத்திலும் ஓய்வெடுக்காமல் முந்தைய தின இரவு வேலை பார்த்த தாதி யாரென்று விசாரித்தவள் அவருக்கு அழைப்பெடுத்திருந்தாள்.​

"ஹலோ"மறுபுறத்தில் அழைப்பு ஏற்க பட்டிருக்க "ஹலோ மெர்சி, நான் டாக்டர் அதிஷா" என்றாள்.​

"சொல்லுங்க டாக்டர்" என்று அவள் கேட்க​

"மெர்சி, நேத்து மீரான்னு ஒரு பேஷன்ட் இறந்து போய்ட்டா உங்களுக்கு தெரியும் தானே?" என்று ஆரம்பித்தாள் அதிஷா.​

"ஆஹ் அந்த பதினஞ்சாம் நம்பர் ரூம்ல இருந்த பொண்ணு தானே டாக்டர்?" என்றாள் மெர்சி.​

"ஆமாம், அந்த பொண்ணு தான். அவளுக்கு என்னாச்சு?" என்று கேட்டாள்.​

"அந்த பொண்ணுக்கு விடியக்காலையில் திடிர்னு வலிப்பு வந்துச்சு டாக்டர். என்னென்னவோ ட்ரை பண்ணியும் நிறுத்த முடியல..." என்றாள்.​

"எந்த டாக்டர் அட்டென்ட் பண்ணுனாங்க?" என்று அவள் கேட்க​

"டாக்டர் சூர்யா. ஒரு இருபது நிமிஷம் அந்த பொண்ணுக்கு கைகால் உடம்பெல்லாம் தூக்கி போட்டு வலிப்பு வந்துச்சு, டாக்டர் சூர்யா எவ்வளோவோ ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியல" என்றாள்.​

"ஓஹ்... இடைப்பட்ட நேரத்துல அந்த பொண்ணை வேற எங்கையும் அழைச்சு போனாங்களா? ஐ மீன் ஏதும் டெஸ்ட் எடுக்க?" என்று மெதுவாக விசாரித்து பார்த்தாள்.​

"இல்லையே டாக்டர். எனக்கு தெரிஞ்சு அப்படி எதுவும் இல்லை. அந்த பொண்ணு ரூம்ல தான் தூங்கிட்டிருந்துச்சு. திடிர்னு தான் வலிப்பு வந்துச்சு..." என்று மெர்சி விளக்கப்படுத்தினாள்.​

"ஓஹ்... சரி அதை கேட்க தான் கால் பண்ணினேன். அப்போ நான் வச்சிடுறேன்" என்று அதிஷா சொல்ல​

"ஏன் கேட்குறீங்க டாக்டர். ஏதும் பிரச்சனையா?" கேட்டாள் மெர்சி.​

"இல்லை... அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. நான் அட்டென்ட் பண்ணின பேஷன்ட் இல்லையா...அதுதான் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க கேட்டேன்" என்று அழைப்பை துண்டித்தவளுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு.​

அவள் சந்தேக பட்டது போல் எதுவுமில்லை. இரு பெண்களின் மரணமும் ஒரே மாதிரி நிகழ்ந்தது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.​


 
Status
Not open for further replies.
Top