எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை- அத்தியாயம் 8

Status
Not open for further replies.

_4d3026ee-ed3e-4762-aa5c-6b40bac100dc.jpg

அத்தியாயம் 8

அன்று அதிஷாவிற்கு விடுமுறை தினமாக இருந்தது.​

இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் என்றிருக்க அதற்கான உற்சாகம் தான் அவளிடமில்லை.​

ஏதோ ஒன்று மனதை உறுத்தி கொண்டிருப்பது போன்றே உணர்ந்தாள். தொலைக்காட்சியை திறந்து விட்டு சோபாவில் அமர்ந்தாள். தொலையியக்கி மூலம் அலைவரிசையை மாற்றிக்கொண்டே அமர்ந்திருந்தவளின் விழிகள் தொலைக்காட்சியை அன்றி எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தது.​

அந்தப் பக்கமாக வந்த மலர் அவள் அருகே சென்று அமர்ந்து அவள் கையில் இருந்த தொலையியக்கியை எடுத்து தொலைக்காட்சியை அணைத்தார்.​

அவரை கேள்வியாக திரும்பி பார்த்த அதிஷா "என்னக்கா?" என்றாள்.​

"டிவி சும்மா தானே ஓடிட்டிருக்கு. நீ பார்க்குறது போல தெரியலயே" என்று அவளிடம் பேச்சு கொடுத்தார்.​

"ம்ம்ம்... ஒன்னும் இன்டெரெஸ்ட்டிங் ஆஹ் இல்லக்கா" என்று சோம்பலாக பதிலளித்தவளின் கை மீது தனது கையை வைத்து அழுத்தம் கொடுத்தவர் " இந்த கல்யாண பேச்சு எடுத்ததிலிருந்து நீ நீயா இல்லை அதி. என்ன பிரச்சனை. என் கிட்ட சொல்லலாம்னா சொல்லு" என்றார்.​

தனது தாய் கூட அவளது மாற்றத்தை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் போது மலர் அதை கண்டுகொண்டு அவளிடம் விசாரிப்பது அவளுக்கு சற்று ஆறுதலாக தான் இருந்தது.அவரின் தோள் மீது சாய்ந்து கொண்டவள் " என்னன்னு எனக்கே தெரியல. ஏதோ வெறுமையா இருக்கு. ஏதோ தப்பா இருக்குன்னு உள் மனசு சொல்லிட்டே இருக்கு" என்றாள்.​

"உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா அதி? அப்படினா உன் அப்பா அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே" என்று கேட்டவரிடம் "இஷ்டமில்லைன்னு இல்லக்கா...பெருசா ஆர்வமில்லை. அதே சமயத்துல இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லவும் எனக்கு எந்தக் காரணமும் இல்லையே அக்கா. என்னிக்காவது ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்க தானே வேணும். வாழ்க்கையில் வர எல்லா அத்தியாயத்தை போல இதுவும் ஒன்னு தானே. இன்னிக்கு இல்லைனாலும் இன்னொரு நாள் நடக்க வேண்டியது தானே. அதுதான் அவங்க இஷ்டப்படி நடக்கட்டும்னு விட்டுட்டேன்" என்றாள்.​

"ஹ்ம்ம்… அப்போ எதுக்கு அதையே போட்டு மனசை குழப்பிக்குற. ஃப்ரீயா விடு எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்று சொல்லியவர் அவள் முகத்தை பார்க்க அது இன்னமும் சோர்வாகவே இருப்பதாக உணர்ந்தார்.​

"காலையில் இருந்து வீட்டுலையே அடைஞ்சு கிடந்தா இப்படித்தான் கண்டதும் நினைக்க தோணும். வா… கிளம்பு வெளில போகலாம்" என்றார் மலர்.​

"எங்க" என்று அதிஷா கேட்க "பீச் போகலாமா? கிஷோரும் ரொம்ப சந்தோஷ படுவான். அவனுக்கு பீச் அவ்வளோ பிடிக்கும்" என்றார்.​

கிஷோர் என்று சொன்னதும் அவனுடன் இப்பொழுதெல்லாம் அவள் செலவிடும் நேரம் குறைவே என்ற நிதர்சனம் நினைவுக்கு வர "போகலாம் க்கா. நான் கிளம்பிட்டு வரேன்" என்றவள் எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டாள்.​

கருப்பு நிற சல்வார் அணிந்து காதுகளில் குட்டி குட்டியாக வெள்ளி வண்ண ஜிமிக்கிகள் அணிந்து ஆயத்தமாகியிருந்தாள். மெல்லிய ஒப்பனை அவள் அழகுக்கு அழகு சேர்க்க தயாராகி வந்தவள் மலர் மற்றும் கிஷோரையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு சென்றாள்.​

மாலை நேரம் என்பதோடு அற்புதமான வானிலையும் அமைந்திருக்க மக்கள் தத்தமது குடும்பத்துடன் அந்த பொழுதை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டிருந்தனர்.​

குழந்தைகள் இங்கும் அங்கும் ஓட, ஐஸ் கிரீம் வண்டிக்காரனோடு, சுண்டல் விற்கும் பையனின் குரலும் அந்த சூழலை நிறைத்துக் கொண்டிருந்தது.​

கிஷோருக்கும் கூட கடற்கரையை பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொள்ள கை தட்டி துள்ளி குதித்து தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தினான்.​

அவனுடன் சேர்ந்து அலைகளில் கால் நனைத்து, மணல் வீடு கட்டி , பனிக்கூழ் உண்டு என்று கவலைகள் மறந்து மழலையோடு மழலையாக கலந்து விளையாடியதில் அதிஷாவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு.​

அப்படியே மணலில் அமர்ந்தவள் மலரும் கிஷோரும் மணலில் மேலும் சில உருவங்களை அமைத்துக்கொண்டிருப்பதை பார்த்து புன்னகைத்துக் கொண்டாள். கண்களை தன்னை சுற்றி சுழல விட்டவளின் விழிகள் இறுதியாக வந்து அந்த வானில் நிலைத்தது.​

மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் தங்கமென மின்னிய வானம் மஞ்சள்,ஆரஞ்சு, சிகப்பு, நீலம் என்று வண்ணக்கலவையாக தோற்றமளித்தது.​

நிலவும், இருளும், குளிரும் மட்டுமல்ல சூரியனின் வெம்மையும் கதிர்களும் தீட்டும் வண்ணங்களும் கூட அந்த வானுக்கு அழகு சேர்ப்பதை வியந்து பார்த்தாள்.கண்களுக்கும் மனதிற்கும் நிறைவான காட்சியாக அமைத்திருந்தது.​

இதழ்களில் புன்னகையும் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொள்ள "அக்கா, நான் கொஞ்ச நேரம் அப்படியே நடந்துட்டு வரட்டுமா" என்றாள்.​

வீட்டில் இருந்ததை காட்டிலும் அவளது முகம் இப்பொழுது வெகுவாக மலர்ந்திருப்பதை பார்த்தவருக்கு மனதில் நிம்மதி பரவ "சரி அதி. நீ போய்ட்டு வா" என்றார் இதழ் பிரித்து சிரித்துக்கொண்டே.​

ஆடையில் ஒட்டியிருந்த மணலை தட்டி விட்ட படியே எழுந்துக்கொண்டவள் கடலை நோக்கி நடந்தாள்.​

சூரியனின் வெப்பம் உடலை தழுவ குளிர்ந்த கடல் நீரில் கால் நனைத்துக்கொண்டே நடப்பது அலாதி சுகம் அல்லவா. அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டே நடந்துச்சென்றாள்.​

சற்று நேரத்தில் சுற்றி இருந்தக் கூட்டத்தை விட்டு தள்ளி வந்து விட்டாள். அதிக தூரம் வந்து விட்டது போன்று தோன்ற திரும்பி நடக்க எத்தனித்தவளின் காதுகளில் "விடு டா, விடு டா என்னை" என்று பெண்ணின் குரல் கேட்டது.​

பதறிப்போய் திரும்பிப் பார்த்தாள். கண்கள் சுற்றும் முற்றும் குரல் வந்த திசையை தேடி அலைந்தது.​

அவள் நின்றிருந்த இடத்திற்கு சற்று தூரத்தில் ஒரு ஜீப் நின்றிருந்தது.​

இப்பொழுதெல்லாம் அவள் அடிக்கடி பார்த்து பழகியதாலோ என்னவோ பார்த்தவுடன் அந்த வண்டி யாருடையது என்று தெரிந்துகொண்டாள்.​

"விடு டா என்னை. இல்ல கத்தி சத்தம் போடுவேன். கூட்டத்தை கூட்டி உன் மானத்தை வாங்கிடுவேன்" என்று அந்த பெண் குரல் மேலும் உரக்க ஒலித்தது.​

ஜீப்பிற்கு மறுபுறத்தில் இருந்து தான் சத்தம் வந்துக்கொண்டிருந்தது​

ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்று மூளையில் மணியடித்ததும் பதறிக்கொண்டு அந்த ஜீப்பை நோக்கி ஓடினாள்.​

"நீ என்ன சத்தம் போட்டாலும் என்னை கேட்க இங்க ஒருத்தன் வரமாட்டான். சொன்னா கேளு. தேவையில்லாமல் முரண்டு பிடிக்காத. பிறகு சேதாரம் உனக்கு தான்" ஒரு ஆணின் குரலில் வந்தது மிரட்டல்.​

அவனது குரல் தான். அவளுக்கு நன்றாக தெரியும்.​

இருதயம் இன்னும் அதிகமாக படபடத்துக்கொள்ள வேகமாக ஓடிச்சென்று ஜீப்பின் மறுபக்கம் எட்டி பார்த்தாள்.​

ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான் ஆதிஷ். சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு பள்ளி மாணவியின் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். அவள் அணிந்திருந்த பள்ளி சீருடையே அதற்கு சான்று.​

அந்த பெண் கரத்தை வளைத்து நெளித்து அவனிடம் இருந்து விடுவித்து கொள்ள போராடிக்கொண்டிருக்க அவனும் விடாமல் அவள் கரங்களை இறுக பற்றிக்கொண்டிருந்தான்.​

அவனிடம் போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் பார்வை அங்கே வந்த அதிஷாவில் படிய "அக்கா, அக்கா... ப்ளீஸ் காப்பாத்துங்க. இந்த ஆள் என் கிட்ட தப்பா நடக்க பாக்குறான்.பன்னண்டாவது படிக்குற பொண்ணுன்னு கூட பார்க்காமல் கையை பிடிச்சு இழுக்குறான் " என்றாள்.​

"அடிங்க...அவன் இவன்னு பேசுனா வாயை உடைச்சிடுவேன்" என்று அந்த பெண்ணிடம் சீறினான் ஆதிஷ்.​

அதிஷாவின் பார்வை அவளின் மீது அழுந்த படிந்து மீள இப்பொழுது ஆதிஷை பார்த்தாள். அவள் கையை பிடித்துக்கொண்டிருந்த அவன் கரங்களை பார்த்தாள்.​

அதை உணர்ந்துக்கொண்டவன் "என்ன?" என்று கேட்டான் திமிராக.​

"அவளை விடுங்க" என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே.​

"உனக்கு எதுக்கு இந்த வேலை, போய்டு" என்றான்.​

இல்லை என்று அவள் அழுத்தமாக தலையசைக்கவும் கடுப்பானவன் இதழ் குவித்து ஊதிக்கொண்டே "இவளால நீ தப்பிச்ச" என்று அந்த பெண்ணிடம் சொன்னவன் அவள் கையை அழுந்த பற்றி அவள் கையில் வைத்திருந்த எதையோ பறித்து தனது பாண்ட் பாக்கெட்டுக்குள் திணித்திருந்தான்.​

"இன்னொரு முறை உன்னை இங்க பார்த்தேன்னா உன் கதை முடிஞ்சிடும்" என்று மிரட்டிய பின்னரே அவளை விட்டான்.​

விட்டால் போதுமென்று அந்த பெண்ணும் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.​

இப்பொழுது ஆதிஷின் பார்வை அதிஷாவின் மீது படிய வழக்கமான அவளது ஊடுருவும் பார்வையை அவன் மீது வீசிவிட்டு நகர முயன்றாள் அவள்.​

"ஹேய், அந்த பொண்ண விட சொல்லிட்டு நீ பாட்டுக்கு கிளம்புனா என்ன அர்த்தம். இப்போ என்னை யாரு என்டேர்டைன் பண்ணுறது?" என்றபடி அவளின் கையை எட்டி பிடித்து இழுத்தவன் அவளை அப்படியே தனது ஜீப்பின் மீது சாய்த்துக்கொண்டான்.​

ஒரு கரத்தை ஜீப்பின் மேற்பகுதியில் ஊன்றியிருந்தவனின் மருக்கரத்தை அவள் இடைக்கு அருகே ஊன்றியிருந்தான். அவன் கைகளுக்குள் சிறைப்பட்டிருந்த அதிஷா அவன் செயலில் சற்றே அதிர்ந்து அவனை விழி விரித்து பார்த்தாள்.​

அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான் ஆதிஷ். அவள் காதுகளில் அசைந்தாடிய ஜிமிக்கி அவன் கவனத்தை ஈர்க்க அவளது இடைக்கருகே இருந்த அவனது கரம் மெல்ல உயர்ந்து அவள் காது மடலை தீண்ட முற்பட்ட சமயம் கண்களை இறுக மூடியவள் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.​

"ப்ளீஸ் டோன்ட் டச் மீ" என்றாள்.​

மெலிதான புன்னகை அவன் இதழ்களில்.​

விரல்களால் அவள் ஜிமிக்கியை சுண்டி விட்டான்.​

அது அசைந்தாடும் அழகை ரசித்து பார்த்தான்.​

மெல்ல இமைகளை திறந்தவள் அவன் விழிகளுக்குள் ஊடுருவி பார்க்க முயன்றாள்.​

"ம்பச், என்ன கண்ணுடி உனக்கு. அப்படி பாக்குற. இப்போ நான் அந்த பொண்ணுகிட்ட நடந்துக்கிட்ட விதத்துக்கு இதே வேற ஒரு பொண்ணா இருந்தா என்னை அறுவறுப்பா பார்த்திருக்கும். ஆனால், உன் கண்ணுல அப்படி ஒன்னும் தெரியலையே. என்னை பார்க்குற நேரமெல்லாம் இப்படி தான் பார்க்குற. அந்த பார்வையை பார்த்தாலே எனக்கு அப்படியே காண்டாகுது.அதுக்கு தான் அன்னிக்கு துணிக்கடையில வச்சு உன் கிட்ட அப்படி பேசிட்டு வந்தேன்.அதுக்கு பிறகு என் பக்கம் கூட திரும்ப மாட்டேன்னு பார்த்தா இப்பவும் அதே பார்வை தான்" என்றான்.​

அவளது பார்வையின் வேற்றுமையை அவன் கண்டுக்கொள்வான் என்று அவள் நிச்சயமாக எதிர் பார்க்கவே இல்லை. இமைகளை தாழ்த்தி கொண்டாள்.​

அவள் தாடையை பற்றி நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன் "என் மேல அவ்வளோ ஆசையா உனக்கு. அப்போ அன்னிக்கு கேட்டது போல ஒரு நாள்…” என்று இழுக்க அவனை முறைத்து பார்த்தாள் அதிஷா.​

“வேண்டாமா? அட் லீஸ்ட் ஒரு வன் நைட் ஓகே வா? " கண்களை சிமிட்டிய படி கேட்டான்.​

"அசிங்கமா பேசுறீங்க" என்றாள். அவள் குரலில் அழுத்தமும் கோபமும் கலந்திருந்தது. .​

"இனி என்னை இப்படி வச்ச கண் வாங்காம பார்த்தா இதை விட மோசமா பேசுவேன்" என்றான்.​

"சரி.இனி பார்க்க மாட்டேன்" என்றாள்.​

"குட். கிளம்பு" என்று அவளை தனது கைச்சிறையிலிருந்து விடுவித்தான்.​

அங்கிருந்து அவள் நகர போன நேரம் மீண்டும் அவளுக்கு இருபக்கமும் கைகளை வைத்து வழி மறைத்தவன் " உன் மாப்பிளைகிட்ட கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லிட்டியா?" என்று கேட்டான்.​

இல்லை என்று தலையசைத்தாள்.​

"அப்போ, கல்யாணம் பண்ணிக்க போறியா?" என்றான்.​

"ம்ம்ம்" என்றாள் அவள்.​

"காங்கிராட்ஸ்" வாழ்த்தியவனின் விழிகள் அவள் இதழ்களில் படிந்திருந்தது. மெல்ல அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.​

அவன் பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவள் எச்சிலை கூட்டி விழுங்கியபடி குரலை செருமிக்கொண்டாள்.​

அந்த சத்தத்திலேயே தன்னிலை அடைந்தவன் சட்டென்று அவள் இருபுறமுமிருந்து கைகளை அகற்றியிருந்தான்.​

"போ, இனி நான் உன்னை பார்க்காமல் இருக்குறது தான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது" என்றபடி தலையை ஒற்றை கரம் கொண்டு கோதியபடி திரும்பி நின்றுக்கொண்டான்.​

எத்தனையோ பெண்களை கடந்திருக்கிறான். ஆனால், அவளை பார்க்கும் போது மட்டும் அவன் அவனாக இருக்க முடிவதில்லை. ஏதோ ஒன்று அவளை நெருங்க சொல்லி சொல்லிக்கொண்டே இருக்கின்றது.​

அவளை காணச் சொல்லி விழிகள் அலைகின்றன. அவளை தீண்ட சொல்லி கரங்கள் பரபரக்கின்றன. அன்று இரவு அவள் வீட்டு தெருவில் அவன் ஜீப்பில் பயணம் போனது கூட அவளை காண கிடைக்காதா என்ற எண்ணத்தில் தான்.​

அவன் நினைத்தால் அவளை தன்னவளாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு பெண்ணின் விழிகளுக்குள் சிறைப்பட விரும்பவில்லை அவன். அவனை ஆட்டி வைக்கும் சக்தி அவள் பார்வைக்கு இருக்கின்றது என்று அறிவான். அது தான் அவளை விளக்கி வைக்க நினைக்கின்றான்.​

வரைமுறையற்ற பேச்சுக்களால் அவளை எட்ட நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்துவிட்டான். நிறுத்தியும் விட்டான்.​

அந்த நேரத்துக்கெல்லாம் அவளை தேடிக்கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தனர் மலரும் கிஷோரும்.​

"அதிஷா, இங்க இருக்கியா, அப்பா போன் பண்ணுனாரு அதி. டைம் ஆகிடுச்சு. வா போகலாம்" என்று வந்து நின்றார் மலர்.​

அவர் குரலில் அதிஷா மற்றும் ஆதிஷ் இருவரும் சேர்ந்தே திரும்பி பார்க்க மலரின் பார்வை ஆதிஷில் நிலைத்தது.​

"என்னோட ஃபிரென்ட்" என்றாள் அதிஷா.​

அவனை மேல் இருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்த மலர் "ஓஹ்... ஹலோ" என்று மட்டும் சொன்னார்.​

"ஹாய் பே..." பழக்க தோஷத்தில் 'பேபி' என்று சொல்ல வந்தவன் அதிஷா பார்த்த பார்வையில் பிடரியை வருடிக்கொண்டே குரலை செருமிக்கொண்டான். அவனின் விழிகள் கிஷோரில் படிந்தது.​

"இந்த பையன்..." என்று அவன் இழுக்க "கிஷோர், என் தம்பி". "ஓஹ் உனக்கு இவ்வளோ குட்டி தம்பி இருக்கானா?" என்று கேட்டான்.​

சற்று வித்யாசமாக தெரிந்த கிஷோரின் முக அமைப்பிலேயே அவனுக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கின்றது என்று புரிந்துகொண்டான் ஆதிஷ்.​

"ஹலோ அங்கிள்" என்ற கிஷோர் தனது கையில் வைத்திருந்த சுண்டல் பாக்கெட்டை அவனிடம் நீட்டினான். மெதுவாக புன்னகைத்து கொண்டே அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்துக்கொண்ட ஆதிஷ் அதை அப்படியே தனது வாயில் போட்டு கொண்ட நேரம் "நீங்க...நீங்க தான் அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற அங்கிளா? மலர் ஆன்ட்டி சொன்னாங்க அக்காவுக்கு கல்யாணமாம். அக்கா உங்க வீட்டுக்கு வந்துடுவாங்கலாம். இனி...இது போல அக்கா கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதுன்னு. அதுதான் அக்காவோட இன்னிக்கு பீச் வந்தோம். இங்கையும் நீங்க வந்துட்டீங்க" என்று சலித்துக்கொண்டான்.​

அவன் இவ்வளவு நீளமாக பேசியதே ஆச்சரியமாக தான் இருந்தது மலருக்கும் அதிஷாவிற்கும். அவன் மற்ற குழந்தைகள் போல பேச கூடியவன் தான். ஆனால், அதிகம் பேசமாட்டான். அதிலும் புதியதாக பார்ப்பவர்களிடம் பழக நேரம் பிடிக்கும்.​

ஆனால், ஆதிஷிடம் இவ்வளவு பேசுகின்றானே என்று மலரும் அதிஷாவும் ஆச்சரியமாக பார்த்தாலும் அவன் ஆதிஷ் தான் அவளுக்கு வரப்போகும் கணவன் என்று தவறாக புரிந்துக் கொண்டிருப்பதை திருத்த வேண்டிய கடமையும் இருக்க "கிஷோர்... இவர்" என்று அதிஷா ஆரம்பிக்கும் போதே அவன் தலையை கோதி கலைத்து விட்ட ஆதிஷ் "அப்படின்னு யாரு சொன்னா? அக்காவுக்கு கல்யாணமானா கூட நீ அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்" என்றான்.​

"எப்படி…அவங்க தான் உங்க வீட்டுக்கு வந்திடுவாங்களே?" என்று அவன் மருக்கேள்வி கேட்க "அக்காவுக்கு நேரம் கிடைக்குறப்போ உன்னை வந்து பார்த்துப்பாங்க, இல்லன்னா நீ கூட அக்கா வீட்டுக்கு போகலாமே" என்றான் ஆதிஷ்.​

"நிஜமாவா?" என்றான் கிஷோர்.​

"நிஜம்ம்ம்மா" ஆதிஷ் அவனை நம்ப வைக்க அந்த வார்த்தையில் கூடுதல் அழுத்தத்தை கொடுத்து சொன்னான்.​

"அப்போ நீங்க அக்காவை கூட்டி வரமாட்டீங்களா.அக்கா வீட்டுக்கு வரும் போது நீங்களும் கூட வாங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு" என்க அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன் " உன் மாமா கிட்ட சொல்லி அக்காவை அழைச்சிட்டு வர சொல்லுறேன் சரியா? அப்படி வரலைன்னா என் கிட்ட சொல்லு நான் உன் மாமாவை மிரட்டி வைக்குறேன்?" என்று சொன்னான் ஆதிஷ்.​

அனைவரையும் அதட்டி மிரட்டி பேசுபவன் அந்த குழந்தையிடம் அன்பாக பேசுவதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த அதிஷாவிற்கு அவர்களின் உரையாடலை கெடுக்க மனமில்லாமல் பார்த்துக்கொண்டே நின்றாள்.​

அதிஷாவே எதுவும் பேசாத போது தானும் இடைப்புகுவது சரியில்லை என்று எண்ணிய மலரும் அமைதியாக தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்.​

"அப்போ நீங்க அக்காவை கட்டிக்க போறதில்லையா?" என்று கிஷோர் ஏமாற்றமாக கேட்க 'இல்லை' என்று அழுத்தமாக தலையாட்டிய ஆதிஷின் விழிகள் ஒரு கணம் அதிஷாவில் படிந்து மீண்டது.​

"ம்பச்... எனக்கு உங்களை தானே பிடிச்சிருக்கு. நீங்களே கட்டிக்குறிங்களா? அந்த மாமா வேணாம்" என்று கிஷோர் மனதில் பட்டத்தை பட்டென கேட்டு விட அதற்கு ஆதிஷ் பதில் சொல்லும் முன்னரே "அக்கா, கிஷோரை அழைச்சிட்டு போங்க. வந்துடுறேன்" என்று மலரிடம் சொன்னாள் அதிஷா.​

ஆதிஷையும் அவளையும் இணைத்து அவன் பேசப் பேச அவளுக்கு உள்ளுக்குள் என்னோவோ உருத்துவது போன்ற உணர்வு. இதயத்தின் மீது எதோ பாரத்தை வைத்து அழுத்துவது போல் இருந்தது. ஒருவழியாக முரண்டு பிடித்துக்கொண்டிருக்கும் மனதை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு தயாராகியிருக்கும் நேரத்தில் வேறு எதுவும் சலனம் உண்டாவதை அவள் நிச்சயமாக விரும்பவில்லை.​

'சரி' எனும் தோரணையில் தலையசைத்த மலரும் கிஷோரை அழைத்து கொண்டு கிளம்பி விட "உன்னை கட்டிக்க போறவன் யாருன்னு கூட உன் தம்பிக்கு காட்ட மாட்டியா?" என்று கேட்டான் ஆதிஷ்.​

"மறந்துட்டேன்" என்று சொன்னவள் திரும்பி நடக்க "மறந்துட்டியா... இல்லை கட்டுறதுக்கு மனசில்லையா?" அவனுக்கு முதுகுகாட்டி நடந்தவளிடம் உரத்த குரலில் கேட்டான்.​

ஒரு கணம் நடையை நிறுத்தி கண்களை மூடி திறந்தவளுக்கு மீண்டும் அவள் மனதை சரியாக படித்துவிட்டானே என்று தான் தோன்றியது.​

திரும்பி பார்க்காமல் முன்னேறி நடந்தாள்.​

"இன்னும் டைம் இருக்கு தானே. இப்போ நினைச்சாலும் கூட கல்யாணத்தை நிறுத்திடலாமே. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா? கஷ்டமா இருந்தா சொல்லு உன் ஆளை போட்டு தள்ளிடுறேன். கல்யாணம் தானா நின்னுடும்" மீண்டும் அவன் குரல்​

உரக்க ஒலிக்க அதில் கேலியும் சிரிப்பும் கலந்திருந்தது.​

நின்று அவனை திரும்பி பார்த்தாள்.​

"அதுக்கு அவசியமிருக்காது. இந்த கல்யாணம் காதலோட தொடங்கலனாலும் காதலோட முடியும்னு நம்புறேன்" என்றவள் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.​

சற்று முன்பு சிரிப்பு இழையோடிய அவன் முகம் இறுகி போயிருந்தது. என்ன மாதிரி உணர்கிறான் என்றே அவனுக்கு விலங்கவில்லை.​

அவள் வேறொருவனுக்கு சொந்தமாக போகின்றாள் என்பது மனதை உருத்திக்கொண்டே இருக்கின்றது. இடப்பக்க மார்பில் ஏதோ வலி ஊடுருவுவது போன்ற உணர்வு. கையை மார்பின் மீது வைத்து நீவிக்கொண்டான்.​

"இனி அவள் பக்கமே போக கூடாது" என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டவன் ஜீப்பை எடுத்துக்கொண்டு புழுதி பறக்க கிளம்பிவிட்டான்.​

***​

திருமண நாள் நெருங்கி கொண்டிருந்த சமயம் அது. இன்னும் இரு தினங்களே எஞ்சியிருந்தன.​

நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்த அதிஷாவின் அலைபேசி அலறியது.​

அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் "ஹாய் அதி" மறுமுனையில் யாஷின் குரல் கேட்டது.​

"சொல்லுங்க டாக்டர்" என்றாள்.​

"டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? பேஷன்ஸ் இருக்காங்களா?" என்று கேட்டான்.​

"இல்லை, முடிய போகுது டாக்டர். லாஸ்ட் பேஷன்ட் தான்" என்றாள்.​

"ஓகே தென், வேலை முடிய என் ரூமுக்கு வர முடியுமா?" என்று மென்மையாக கேட்டான்.​

"ஓகே டாக்டர்" என்றவள் அலைபேசியை துண்டித்துவிட்டு அந்த நோயாளியை கவனித்து அனுப்பிய பின் யாஷின் அறையை நோக்கி நடந்தாள்.​

அவள் எதிரே வந்து கொண்டிருந்த அஷ்வினி "ஹேய் அதி. எனக்கு கொஞ்சம் லேட்டாகும் போல இருக்கு. இன்னும் கொஞ்சம் பேஷன்ஸ் பார்க்க வேண்டியிருக்கு. இன்னிக்கு உன் அம்மா கூட போயிடுறியா?" என்று கேட்டாள்.​

"அம்மா அப்போவே கிளம்பிட்டாங்கன்னு மெசேஜ் போட்டாங்க. இட்ஸ் ஓகே அஷ். நான் பார்த்துக்குறேன். யூ கேர்ரி ஒன்" என்றாள்.​

"அதுக்கென்ன உன் புருஷனும் இங்க தானே இருக்காரு அவரை ட்ரோப் பண்ண சொல்லு" என்று அஷ்வினி கிண்டலடிக்க "இன்னும் புருஷனாகல" என்றாள் அதிஷா.​

"அதுதான் இன்னும் ரெண்டு நாள்ல ஆக போறாரே பிறகு என்ன? ஆனாலும் புருஷனும் பொண்டாட்டியும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு இன்னும் இங்கயே சுத்திட்டிருக்கிங்க பாரு இந்த மாதிரி பொருத்தம் வேற எங்கையாவது கிடைக்குமா?" என்று நொடித்து கொள்ள " அஷ், யுவர் பேஷன்ஸ் ஆர் வெயிட்டிங். முதல்ல அவங்களை போய் பாரு" சொன்னாள் அதிஷா.​

"சரிங்க முதலாளியம்மா" அஷ்வினி கிண்டல் செய்ய "உன்னை..." என்று அவளை அடிப்பது போல் அதிஷா கையை ஓங்கிய நேரம் "ஐயோ, மீ எஸ்கேப்" என்று ஓடிவிட்டாள்.​

தலையை இருப்பக்கமும் ஆட்டியபடி சிரித்துக்கொண்டே யாஷின் அறையை நோக்கி நடந்தாள் பெண்ணவள்.​

அவன் அறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை ஏறிட்டு பார்த்த யாஷ் "சிட் அதி. ஒரு ஃபைவ் மினிட்ஸ் இந்த ரிப்போர்ட் முடிச்சிடுறேன்" என்று சொன்னான்.​

"ஓகே டாக்டர்" என்றவளை பார்த்து சிரித்தவன் " யாஷ்ன்னு கூப்பிடலாமே. நாம மட்டும் தானே இருக்கோம்" என்றான்.​

'ம்ம்ம்' என்று சம்மதமாக தலையாட்டிக்கொண்டாள்.​

டாக்டர் என்றே அழைத்து பழகிவிட்டாள். உடனே மாற்றிக்கொள்வது கஷ்டம் தான் என்றாலும் அவனுக்கு மனைவியாகும் பட்சத்தில் மாற்றிக்கொண்டுதானே ஆகவேண்டும் என்று நினைத்தவள் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்திருந்தாள்.​

அவன் வேலையில் மும்முரமாக இருக்க அவனுக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தவள் விழிகள் அவனை ஆழ்ந்து பார்த்தன.​

நீல நிற ஷார்ட் அணிந்திருந்தான். ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் ஜெல் வைத்து வாரிய கேசமும் மூக்கு கண்ணாடியுமாக அழகனாக தான் இருந்தான். அங்கே வேலை செய்யும் பெண்களின் கண்கள் அவனை வட்டமடிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்துக்கொண்டாள்.​

அவளுக்கு மட்டும் ஏன் அப்படியான உணர்வு தோன்றவில்லை என்றும் யோசித்து பார்த்தாள். காரணமேயின்றி ஆதிஷின் முகம் கண் முன்னே தோன்றியது.​

அடர்ந்து வளர்ந்த தாடியும், கலைத்து விட பட்ட கேசமுமாக இருப்பவன் அணிந்திருக்கும் ஆடைகள் ஸ்டைலாக இருந்தாலும் சட்டையின் மேல் இரு பட்டன்களை திறந்து விட்டுக்கொண்டுதான் திரிவான். போதாதற்கு வாயில் சிகரெட்டும் கையில் பாட்டிலும் கட்டாயம் இருக்கும்.​

அவன் உருவம் மனக்கண்ணில் தோன்ற சட்டென்று தலையை உலுக்கி வலுக்கட்டாயமாக அவன் நினைவை துரத்தியடித்தாள்.​

கட்டிக்கொள்ள போகிறவன் முன்னே அமர்ந்திருக்க அவனிடம் இலயிக்காத மனம் யாரோ ஒரு முரடனிடம் சென்று நிற்பதை நினைக்கும் போதே அவளுக்கு பதறியது.​

தவறு செய்கிறோமோ என்ற யோசனை அவளிடத்தில். யாஷிற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டே தனது கவனத்தை திருப்ப அந்த அறையை சுற்றி விழிகளை சுழல விட்டாள்.​

அறை அவனை போலவே நேர்த்தியாக இருந்தது.​

ஒரு ஷெல்ஃபில் புத்தகங்களும் சில அழகு பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.​

ஒவ்வொரு பொருளாக பார்த்துக்கொண்டே வந்தவளின் பார்வை அங்கே இருந்த பெண் வடிவ பொம்மையின் மீது படிந்தது. வெள்ளை நிறத்தில் செராமிக்கில் செய்த பெண் சிலை. ஆனால், அவள் கவனத்தை ஈர்த்தது அந்த சிலையல்ல அந்த சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சங்கிலி தான்.​

எழுந்து அருகே சென்று பார்த்தாள். மெல்லிய தங்க சங்கிலியில் ஃபோர் லீவ்ஸ் கிலோவர் (FOUR LEAVES CLOVER) வடிவத்தில் பெண்டண்ட் கோர்க்கப்பட்டிருந்தது.​

அந்த சங்கிலியை அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. மீராவின் கழுத்தில் அதை பார்த்திருக்கிறாள். அது எப்படி இங்கே என்று யோசித்தபடி இருக்க அவள் பின்னே வந்து நின்றான் யாஷ்.​

"என்ன பார்க்குற அதி" என்று அவனது குரல் அவளின் பின்னே கேட்கவும் திரும்பியவள் "ஆஹ்...ம்ம்ம்...ஒண்ணுமில்ல. இந்த கலெக்ஷன்ஸ் எல்லாம் அழகா இருக்கு" என்றாள்.​

"ஹ்ம்ம் தேங்க்ஸ்" என்று சிரித்துக்கொண்டே சொன்னவனின் விழிகள் அந்த சங்கிலியில் படிய "அட, இந்த செயின் இன்னும் இங்கயே இருக்கே. இது மீராவோடது. அவள் ரூம் கிளியர் பண்ணுற நேரம் வார்டு பாய் கையில கிடைச்சுது. நான் தான் ரிசெப்ஷன்ல கொடுத்து மீரா அம்மாவுக்கு கால் பண்ணி கலெக்ட் பண்ணிக்க சொல்லிடுறேன்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன். அதுக்குள்ள வேற வேலை வந்துருச்சு. எங்கேயும் மிஸ் பண்ணிட கூடாதுன்னு இந்த சிலை கழுத்துல மாட்டி விட்டேன். அப்படியே மறந்துட்டேன்" விளக்கம் கொடுத்தான்.​

அவள் பதில் ஏதும் பேசவில்லை வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.​

 
Status
Not open for further replies.
Top