எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை- அத்தியாயம் 9

Status
Not open for further replies.

_f701ab7e-d9a8-4f9e-aae6-1db23ab1979f.jpg_11f2fde7-587a-494a-8c1d-5a601a765702.jpg

அத்தியாயம் 9

"வெளில போகலாமா அதி. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். ஆனால் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டின்னர் டேட் கூட போனதில்லை" என்றான்.​

"ம்ம்ம்" என்று அவளிடம் ஒற்றை சொல்லில் பதில் வர முதல் முறை அவளை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான் யாஷ்.​

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றான். ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பான் போல அவர்கள் சென்ற சமயம் அவர்களுக்கான மேசை தயார் நிலையில் இருந்தது.​

அவளுக்கான நாற்காலியை இழுத்து விட்டவன் அவளை அமர சொல்ல அவளும் அமர்ந்துக்கொண்டாள். தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்ட யாஷ் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்தான்.​

இருவரும் பெரியதாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மருத்துவமனையை தாண்டி வெளியில் நிகழ்ந்த அவர்களின் முதல் சந்திப்பு இனிமையாகவே முடிந்திருந்தது.​

அவளை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டான். கார் கதவை திறந்து கொண்டு அவள் இறங்க சென்ற நேரம் "அதிஷா" என்றழைத்தான்.​

இரு புருவங்களை உயர்த்தி அவனை கேள்வியாக பார்த்த அதிஷாவிடம் "மை ஃபர்ஸ்ட் கிஃப்ட் ஃபோர் யூ" என்று சொல்லிக்கொண்டே அவளிடம் சிறியளவிலான பெட்டி ஒன்றை நீட்டினான்.​

அதை வாங்கிக்கொண்டவள் திறந்து பார்த்தாள். உள்ளே இரு மோதிரங்கள் இருந்தன.​

"எதுக்கு இதெல்லாம்" என்று கேட்டவளிடம் "எனக்காக எந்த ஆடம்பரமும் இல்லாமல் கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல வைக்க ஒத்துக்கிட்ட. ஒரு எங்கேஜ்மென்ட் கூட இல்லை. அதுக்கு தான். ஐ ஹோப் யூ லைக் இட்" என்றபடி அவள் கையில் இருந்த மோதிரத்தில் ஒன்றை எடுத்து அவள் விரலில் போட்டு விட்டான்.​

"ப்ரிட்டி. நவ் யுவர் டர்ன்" என்றபடி பெட்டியில் இருந்த மற்றொரு மோதிரத்தை விழிகளால் காட்டியவன் கரத்தை அவளிடம் நீட்டி மோதிர விரலை சற்று உயர்த்தி காட்டினான்.​

அவனை ஆழ்ந்து பார்த்தவள் மோதிரத்தை கையில் எடுத்துக்கொண்டாள். அவன் விரலை நோக்கி மோதிரத்தை கொண்டு செல்லும் போதே அவள் கரத்தில் ஒரு நடுக்கம். மனதில் ஒரு பதற்றம்.​

நாளை மறுநாள் அவன் கையால் தாலி வாங்கிக்கொள்ள வேண்டியவள் அவள். ஆனால், இன்று மோதிரம் அணிவிக்கவே யோசிக்கிறாள். குழப்பமாக இருந்தது.​

விழிகளை மூடி தன்னை சமன் செய்துக்கொண்டபடி அவன் விரலில் மோதிரத்தை அணிவித்திருந்தாள்.​

"குட் நைட் டாக்..." டாக்டர் என்று சொல்லவந்தவளை அவன் அழுத்தமாக பார்க்க " சாரி... குட் நைட் யாஷ்" என்றாள்.​

" குட் நைட் அதி" என்றவன் அவள் நெற்றியை நோக்கி குனிய அவன் நோக்கம் உணர்ந்தவள் அவன் மார்பில் கை வைத்து தடுத்தபடி மெதுவாக தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டாள்.​

அவன் அவளை ஏமாற்றமாக பார்க்க "யாஷ், எனக்கு கொஞ்சம் டைம் வேணும். எல்லாமே ரொம்ப வேகமா நடக்குற போல இருக்கு" என்றாள்.​

"ஹேய் டோட்டலி அன்டெர்ஸ்டெண்ட். எல்லாமே கல்யாணத்துக்கப்புறம் பொறுமையா பார்த்துக்கலாம் " என்று ஒற்றை கண் சிமிட்டி சொன்னவன் "நோ ஒர்ரிஸ்" என்றான்.​

"தேங்க்ஸ்" என்றவள் கதவை திறந்து இறங்கிக்கொள்ள செல்லும் அவள் முதுகையே அழுத்தமாக பார்த்தப்படி பெருமூச்சொன்றை எரிந்து விட்டு வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.​

அதிஷாவின் மனதில் குழப்பங்கள் எல்லையை கடக்க ஆரம்பித்திருந்த தருணம் அது. ஆதிஷ் அவளை இயல்பாக நெருங்குவதையும் முத்தமிடுவதையும் தடுக்க தோன்றாத மனதுக்கு யாஷின் ஒற்றை நெற்றி முத்தத்தை ஏற்க முடியவில்லை.​

அதையும் தாண்டி உள்ளுணர்வு தவறு நடக்க போகின்றது என்று உறுதியாக சொல்லிக்கொண்டே இருந்தது. கையில் யாஷ் போட்ட மோதிரத்தை அடுத்த கரத்தால் சுழற்றிக்கொண்டே யோசனையுடன் நடந்தவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.​

சேகரனும் மேகவாணியும் மட்டும் தான் அங்கே இருந்தனர். அவளது திருமண ஏற்பாடுகளை பற்றின கலந்துரையாடல் என்று அவர்கள் பேச்சில் புரிந்தது.​

அவர்கள் முன்னே இருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள் "கொஞ்சம் பேசணும்" என்றாள்.​

அவளின் முகபாவனையே ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த சேகரனும் மேகவாணியும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.​

"என்னாச்சு அதிமா? ஏதும் பிரச்சனையா முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கே" சேகரன் தான் ஆரம்பித்தார்.​

கண்களை மூடித்திறந்து தன்னை நிதானப் படுத்திக்கொண்டாள் அதிஷா.​

"இந்தக் கல்...கல்யாணம் வேண்டாம் ப்பா" தயங்கி சொன்னாலும் அவள் குரலில் தெளிவும் அழுத்தமும் இருந்தது.​

மேகவாணிக்கு ஆத்திரம்.​

"ரெண்டு நாள்ல கல்யாணம். திடிர்னு வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்? உன்னை கேட்டு தானே..." மேகவாணி எண்ணை சட்டியில் விழுந்த கடுகாய் வெடிக்க "வாணி" என்று அடக்கினார் சேகரன்.​

"என்னாச்சு டா...ஏன் கல்யாணம் வேண்டாம்?" பொறுமையாக விசாரித்தார் சேகரன்.​

"தெரியலப்பா, ஏதோ தப்பா இருக்குற போல உள்ளுக்குள்ள சொல்லிட்டே இருக்கு. என் மனசு சொல்லுறதை மதிக்கணும்னு நினைக்குறேன்" என்றாள்.​

"இதெல்லாம் ஒரு காரணமா? உள்ளுணர்வு மண்ணாங்கட்டின்னு பேசிட்டிருக்க" மறுபடியும் மேகவாணிதான் குதித்தார்.​

"வாணி, அவளை எதுக்கு போர்ஸ்..." என்று சேகரன் ஆரம்பித்த நேரம் அவர் அலைபேசி மணியடிக்க எடுத்து பார்த்தார்.​

முகம் கலவரமாக மாறியிருக்க "பேசிட்டு வந்திடுறேன்" என்று அலைபேசியை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துவிட்டார்.​

தாயும் மகளும் மட்டுமே தனித்திருக்க இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த மேகவாணி "போன்ல யாரு தெரியுமா? உங்கப்பாவோட பார்ட்னர் தான். அப்பாவோட பிஸ்னெஸ்ல பிரச்சனை...கடன் அதிகமாயிடுச்சு. அப்பாவோட தவறுதானாம் உடனே பணத்தை திருப்பி தரச்சொல்லி கேட்குறாங்க...எப்படி எப்படியோ முயற்சி பண்ணியும் செட்டில் பண்ண முடியல. கடைசியா அந்தாளோட மகனுக்கு உன்னை கட்டி கொடுத்து கடனை கழிச்சுக்க சொல்லி கேட்டாங்க... வேற வழியில்லாமல் நாங்களும் ஒத்துக்கிட்டோம்" என்றார்.​

"அம்மா, அந்த மிஷ்ரா அங்கிள் பையனுக்கா? அவன் கடைஞ்செடுத்த அயோக்கியன். ஊருக்கே தெரியும். அவனுக்கு போய்..." என்று அதிஷா ஆதங்கமாக கேட்கும் போதே "வேற வழித் தெரியலடி... இருபத்தஞ்சு லட்சம் எங்க போறது...? அந்த பணத்தை கொடுக்க முடியலன்னா உங்கப்பா பண மோசடி பண்ணிட்டாருன்னு கேஸ் போட்டு மானத்தை வாங்கிடுவோம்னு மிரட்டுறாங்க... எப்படி தப்பிக்குறதுன்னு தெரியல..." மேகவாணி சொல்லிக்கொண்டே போக அவரை ஒருவகை அருவருப்புடன் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் அதிஷா.​

கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. அவ்வளவு எளிதில் அழுது விடக்கூடியவள் அல்ல. ஆனால், பண நெருக்கடியை சமாளிக்க தன்னை பகடையாக பயன்படுத்திக்கொள்ள நினைத்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.​

"அதுக்காக என்னை வித்துடலாமுன்னு முடிவு பண்ணிட்டீங்க... சரி ஓகே. நடுவுல யாஷ் எப்படி வந்தார்?" கேட்டாள். அவளுக்கு தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம்.​

"கடைசி முயற்சியா வேற எங்கையும் பணம் ஏற்பாடு பண்ண முடியுமான்னு கூட வேலை செய்யுற மாலினிகிட்ட கேட்டுட்டிருந்தேன். அப்போ அங்க வந்த யாஷ் அதை கேட்டிருப்பார் போல. அன்னிக்கு உன்னை பார்கிங்கில பார்த்துட்டு உன்னை கட்டி கொடுக்க சொல்லி கேட்டார். ஏற்கனவே உனக்கு மாப்பிள்ளை பிக்ஸ் பண்ணியாச்சுன்னு சொன்னேன். அப்போதான் மிஷ்ராவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அவர் கொடுக்குறேன்னு சொல்லி அவர் பையனோட பேசுன கல்யாணத்தை கேன்சல் பண்ண சொன்னார். யோசிச்சு பார்த்தா அவனை விட டாக்டர் யாஷ் ரொம்ப நல்ல பையன். அவரை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்பாவோட பிரச்சனையும் தீரும் உனக்கும் நல்ல வாழ்க்கை அமையுமுன்னு நினைச்சு தான் சரின்னு சொன்னேன்" நீளமாக விளக்கமளித்தார் மேகவாணி.​

பெற்ற தாயே தன்னை யாருக்கு விற்கலாம் என்று யோசித்து முடிவெடுத்திருப்பதாக சொல்லும் நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டவளின் கண்களில் துளி நீர் உருண்டு விழுந்தது.​

"நாம வேறெதுவும் ஏற்பாடு பண்ணலாமே. இந்த கல்யாணம் வேண்டாம்மா" என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க கொதித்தெழுந்த மேகவாணி "உன் சொந்த அப்பாவா இருந்தா இப்படி பேசுவியா?" என்று அவள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டினார்.​

ஆம், அதிஷாவின் பதிமூன்றாம் வயதில் அவளின் தந்தை விபத்தில் இறந்துவிட மேகவாணிதான் அவளை தனியாக வளர்த்து வந்தார். வேலைக்கு போகும் பெண் என்பதால் மற்றவர் உதவியை நாடாமல் தனியாகவே அவளை வளர்த்து வந்தவரின் மனவுறுதி பிடித்துப்போக சேகரன் அவரை மறுமணம் புரிந்துக்கொள்ள கேட்டார். முதலில் சமுதாயத்தை நினைத்து மறுத்தாலும் பிறகு சேகரனின் தொடர் முயற்சி அவர் மனதை மாற்றியிருந்தது. அதன் பிறகு நடந்த அவர்களது திருமணத்தில் கிடைத்த பொக்கிஷம் தான் கிஷோர்.​

ஆனால், சேகரன் அதிஷாவை சொந்த மகள் போல தான் கவனித்துக்கொண்டார். மேகவாணியை விட அவளிடம் அதிக அக்கறை காட்டுபவர். அவரின் கடனுக்காக அதிஷாவிற்கு திருமணம் நடத்தி வைப்பதை முதலில் மறுத்தவரை மேகவாணி தான் கிஷோரின் நிலையை காரணம் காட்டி அவர்கள் இல்லாவிட்டால் அவனின் நிலை என்று அச்சுறுத்தி சம்மதிக்க வைத்திருந்தார்.​

"அம்மா" என்று அழுத்தமாக அழைத்தாள் அதிஷா.​

"நான் எப்பவும் அவரை என் சொந்த அப்பாவா தானே நினைச்சிருக்கேன். அவரை வேற மாதிரி பார்த்திருக்கேனா?" என்று கேட்டவளிடம் "இப்போ பாக்குறியோன்னு தோணுது" என்று மனசாட்சியை கொன்றுவிட்டு பேசினார்.​

"என்ன பேசுறீங்க…” என்று அதிஷா சீற “இந்தக் கல்யாணம் நடக்கலன்னா நிச்சயம் அப்பாவோட கடனை அடைக்க முடியாது. மிஷ்ரா ஓட பையன் கூட பேசுன கல்யாணத்தை கேன்சல் பண்ணியிருக்கோம் வேற. எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு அந்தாளு நம்மளை கண்டிப்பா நடுத்தெருவுல நிறுத்தாமல் விடமாட்டாரு. அப்படி ஏதும் நடந்தா குடும்பத்தோட தூக்குல தொங்குறதை விட வேற வழித் தெரியல. நான் குடும்பம்னு சொன்னது நான், அப்பா அப்புறம் கிஷோரை மட்டும் தான். எங்களை தூக்கி கொடுத்துட்டு நீ உன் மனசு சொல்லுறதை கேட்டுட்டு நிம்மதியா இரு" என்றார் தழுதழுத்த குரலில்.​

அந்த நேரத்திற்கெல்லாம் சேகரனும் போன் பேசிவிட்டு வந்துவிட அவரை ஆழ்ந்து பார்த்த அதிஷா "கவலை படாதீங்க. கல்யாணம் நடக்கும்" என்றபடி எழுந்து அறைக்குள் நுழைந்துவிட்டாள்.​

திருமண நாளும் வந்து சேர்ந்தது. காலையில் கோவிலில் மிக எளிமையான திருமணம். யாஷின் கையால் அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது. அங்கேயே பதிவு திருமணமும் முடிந்திருந்தது.​

அவளின் குடும்பமும் அஷ்வினியும் மட்டுமே அதிஷாவின் சார்பாக வந்திருக்க யாஷின் சார்பாக ரோஷன் மட்டுமே வந்திருந்தான். அவனுடைய தாயார் லீலாவும் கூட வரவில்லை. அவளிடம் வீடியோ காலில் பேசியவர் முக்கியமான பிஸ்னஸ் மீட்டிங் இருப்பதாகவும் தவிர்க்க முடியவில்லை என்றும் கூறினார். திருமணம் முடிய ஒரு நாள் அதிஷாவை அழைத்துக்கொண்டு அமெரிக்கா வரும்படி யாஷிடம் சொல்லியவர் அவர்களை வாழ்த்திவிட்டு வைத்திருந்தார்.​

கழுத்தில் தொங்கிய தாலியை குனிந்து பார்த்தவளுக்கு என்ன உணர்வென்று புரியவில்லை.​

நன்கு படித்து சொந்தக்காலில் நின்றாலும் கூட பெண்களால் சுயநலமாக எப்பொழுதுமே முடிவெடுக்க முடிவதில்லையே. எப்பொழுதும் அடுத்தவர்களை முன்னிறுத்தி யோசிக்கும் குணம் அவர்கள் மரபணுவிலேயே கலந்திருப்பதுவோ என்னவோ என்று நினைத்துக்கொண்டாள். மனம் வேண்டாம் வேண்டாம் என்று அடித்துக்கொண்ட பொழுதும் தனது குடும்பத்திற்காக அவன் கொடுத்த தாலியை ஏற்றுக்கொண்டாள்.​

மாலையும் கழுத்துமாக புதுமணத் தம்பதிகள் இருவரும் கோவிலுக்கு வெளியில் காலெடுத்து வைத்த கணம் எங்கிருந்தோ வந்து ஒருவன் அதிஷாவின் பாதங்களுக்கருகே விழுந்திருந்தான்.​

அடுத்த நொடியே அவனது ஷர்ட்டை பிடித்து இழுத்து எழும்ப செய்திருந்தான் ஒருவன். அது வேறு யாருமல்ல அனல் கக்கும் விழிகளுடன் நின்றிருந்த ஆதிஷ் தான்.​

அந்தப் பக்கமாக அவனை துரத்திக்கொண்டு வந்த ஆதிஷ் அவன் முதுகில் விட்ட உதையில் தான் அவன் அதிஷாவின் பாதங்களில் வந்து விழுந்திருந்தான்.​

அவனை வேகமாக இழுத்து எழும்ப செய்தவன் கைமுஷ்டியை மடக்கி அவன் முகத்தை நோக்கி கொண்டு சென்ற கணமே அந்த ஆடவனுக்கு பின்னால் நின்றிருந்த அதிஷாவை பார்த்தான்.​

மணக்கோலத்தில் இருந்த அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு ஊஞ்சலாட அந்த தாலியில் நிலைத்த அவன் பார்வை சற்றே உயர்ந்து பக்கத்தில் நின்ற யாஷில் படிய அவனை அழுத்தமாக பார்த்தவனின் இறுகியிருந்த கைமுஷ்டி இன்னமும் இறுகி போக ஓங்கி அவன் பிடியில் இறந்தவனின் முகத்தில் குத்தியிருந்தான்.​

அவனின் அந்த ஆக்ரோஷமான செய்கையில் ஒரு கணம் கண்களை மூடித்திருந்த அதிஷா அவன் விழிகளை ஏறிட்டு பார்க்க அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அவனுக்கு பளார் பளார் என்று இன்னும் இரு அறைகளை விட்டான்.​

ஆத்திரம் அவனுக்கு. கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் மொத்த கோபத்திற்கும் வடிகாலாய் மாறிப்போனது பாவம் அவன் பிடியில் சிக்கியிருந்த அந்த ஆடவன் தான்.​

அலுவலக ஆடையில் இருந்த அந்த ஆடவனை பார்க்க ஐடியில் பணிப்புரிபவன் போல இருந்தான். அவனை எதற்காக ஆதிஷ் அடிக்கிறான் என்ற எண்ணம் அங்கே இருக்கும் அனைவருக்கும் எழாமலில்லை. ஆனால், அதை அவனிடம் கேட்கும் தைரியம் தான் யாருக்கும் இல்லையே. வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தனர்.​

"எதுக்கு இப்படி காட்டு மிராண்டி தனமா நடந்துக்குற" என்று கேட்டான் யாஷ்.​

அவனை புருவம் உயர்த்தி பார்த்த ஆதிஷ் "புது மாப்பிள்ளையா அந்த வேலைய மட்டும் பாரு. தேவையில்லாததுல எல்லாம் மூக்கை நுழைச்சா வாழ்க்கை ஆரம்பிக்குறதுக்குள்ள முடிச்சு வச்சுருவேன்" என்று விரல் நீட்டி மிரட்டியபடி அதிஷாவையும் அழுந்த பார்த்தவன் அவன் அடித்து துவைத்ததில் முகமெல்லாம் குறுதி வழிய நின்றிருந்த அந்த ஆடவனை தர தர வென இழுத்து சென்று தனது ஜீப்பிற்குள் ஏற்றியிருந்தான்.​

வண்டியை எடுக்கும் முன் ஒரு கணம் அதிஷாவை திரும்பி பார்த்தவனின் பார்வை அவளுக்கு ஏதோ சொல்ல அவளால் தான் இந்த முறை அவன் பார்வையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.​

கண்கள் கலங்க சீறிப்பாய்ந்து சென்ற அவன் ஜீப்பை பார்த்துக்கொண்டு நின்றவளின் விழிகளில் "கீப் காம்... தெ ஸ்கை இஸ் நோட் ஃபால்லிங்' என்ற வாசகம் விழுந்தது.​

தனது சக்தியெல்லாம் இழந்தது போன்று உணர்ந்தவளுக்கு அந்த வாசகமே தெம்பளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவள் உடைந்து போகும் நேரமெல்லாம் அவனின் தரிசனமும் அந்த வாசகமும் அவளுக்கு உயிர்ப்பை கொடுப்பதை போன்று உணர்ந்தாள்.​

எவ்வளவு அழுதாலும் இப்பொழுது எதையும் மாற்ற முடியாது என்கின்ற நிதர்சனம் நெற்றி பொட்டில் அறைய கண்களில் கசிந்த நீரை மற்றவர் பார்க்கும் முன்னே துடைத்துக்கொண்டாள்.​

யாஷின் வீட்டில் அவன் மற்றும் அவன் தம்பியென்று ஆண்கள் இருவரும் மட்டுமே இருக்க மற்ற சம்பிரதாயங்களை முடிக்க அதிஷாவின் வீட்டிற்கு செல்வதாக முடிவாகியிருந்தது. ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்து சென்று பால் பழம் கொடுப்பது போன்ற சடங்குகள் தொடங்கியிருக்க பிடிக்கவில்லை என்றாலும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் ஏற்றுக்கொள்ள முயன்றாள்.​

அவள் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவள் உடலில் தெரிந்த இறுக்கத்தில் அவள் மனதை புரிந்துக்கொண்டார் மலர்.​

எல்லா சடங்குகளும் முடிய சேகரன் மற்றும் மேகவாணியிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தான் யாஷ் .​

அவன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு காசோலையை எடுத்து மேகவாணியின் கையில் கொடுத்ததை பார்த்த அதிஷாவிற்கு நெஞ்சில் அப்படி ஒரு வலி. தன்னை வைத்துத் தொடங்கிய வியாபாரம் முடிந்து விட்டது போல என்று நினைத்துக்கொண்டாள்.​

அவள் அருகே அமர்ந்து அவள் தோளில் கை வைத்த மலரை பார்த்து ஒரு வெற்று சிரிப்பு சிரித்தவள் " பிஸ்னஸ் முடிஞ்சுதுக்கா. இனி என் ஓனர் கூட போக வேண்டியது தான் பாக்கி" குரல் உடைந்து ஒலித்தது.​

அந்த குரலை முதன் முறையாக கேட்கிறார் மலர். அவருக்கும் அழுகை முட்டிக்கொண்டு வர அவளை கட்டியணைத்தவர் "ஏன் இப்படியெல்லாம் பேசுற அதி. எதையும் போட்டுக் குழப்பிக்காமல் சந்தோஷமா புருஷன் வீட்டுக்கு போயிட்டு வா. உனக்கு எல்லாம் நல்லதே நடக்கட்டும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்" என்றார்.​

அந்நேரம் கிஷோரும் அவள் அருகே வந்திருக்க அவனை அணைத்து விடுவித்தபடி "கிஷோரை பார்த்துகோங்கக்கா" என்று மலரிடம் சொன்னவள் " கிஷோர் நீயும் இவங்களை நல்லா பார்த்துக்கணும் சரியா?" என்றாள்.​

"ம்ம்ம்" என்றவன் முகத்தை தொங்க போட்டுக்கொள்ள அவனைத் தனக்கருகே அமர்த்திக்கொண்டவள் "என் கிஷோருக்கு என்னாச்சு?" என்று அவன் கன்னம் வருடிக்கேட்டாள்.​

"எனக்கு அந்த பீச் அங்கிள் தானே பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ஏன் அவரை கட்டிக்கல. இந்த அங்கிளை பிடிக்கல எனக்கு" என்றான்.​

அதிஷாவிடம் மௌனம்.​

"ஷ்ஷ்ஷ்...அப்படி எல்லாம் சொல்லக்கூடாது கிஷோர். இந்த அங்கிளும் நல்லவர் தான். போக போக உனக்கு பிடிக்கும் சரியா?" என்று மலர் தான் அவனுக்கு சமாதானம் சொன்னார்.​

மதிய உணவிற்குப் பின் அன்றைய தினமே அதிஷாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு கிளம்பிவிட்டான் யாஷ்.​


 
Status
Not open for further replies.
Top