எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 14

S.Theeba

Moderator
வரம் 14

யதுநந்தன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றபோது நிழல் போல அவன் கூடவே வந்துவிட்டான் சிவானந்த். இருவரும் சிறிய பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர்.

யதுநந்தன் தன் வாழ்வை ரசித்து வாழ்பவன். படிப்பதைக் கூட முழு ஈடுபாட்டுடன் விரும்பிப் படித்தான். படிப்பு தவிர்ந்த ஏனைய நேரங்களில் சும்மா இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. சிவானந்தோ படிப்பதற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விட ஊர் சுற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுத்தான். ஆனாலும் இயல்பாகவே அவனிடம் இருந்த புத்திக்கூர்மையால், கொஞ்ச நேரம் படித்தாலும் பரீட்சைகளில் சித்தியடைந்து வந்தான். யதுநந்தனுக்கோ ஊர் சுற்றுவதில் விருப்பம் இல்லை. சும்மா இருக்கும் நேரத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடித்தான். அப்போது அவன் மனதில் தோன்றியதே ஆன்லைன் பிஸ்னஸ். ஆன்லைன் மூலம் லண்டனில் இருந்து இந்தியாவிற்குப் பொருட்களை அனுப்புவதற்கும் அங்கிருந்து தருவிப்பதற்கும் ஏற்பாடு செய்தான். அதன் மூலம் நல்ல வருமானமும் வந்து கொண்டிருந்தது. அவன் படிப்பிற்கு எந்தத் தடையும் இல்லாமல் பிஸ்னஸை நடத்தி வந்தான்.

அன்று ஆன்லைன் மூலம் பெரிய டீல் ஒன்றை முடித்தவன் தன் சந்தோசத்தை சிவானந்திடம் பகிர்ந்து கொண்டான். அந்த சந்தோசத்தைக் கொண்டாட பார்ட்டி வைக்குமாறு சிவானந்த் வற்புறுத்தவும், அவனைக் கூட்டிக் கொண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றான்.

இரவு நேரம், நீலமும் சிவப்புமாக அலங்கார மின்விளக்குகள் அந்தக் கூடத்தையே வண்ணமயமாக்கியிருந்ததன. கூடத்தின் ஒரு முனையில் சிறிய மேடை போடப்பட்டிருந்தது. அந்த மேடையில் ஒரு இளைஞன் கிற்றார் வாசித்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் இன்னுமொரு மனிதர் பியானோவை இசைத்துக் கொண்டிருந்தார். இரு இசையும் இணைந்து அந்தக் கூடத்தையே இனிமையாக நிறைத்திருந்தது. அங்கே வந்த யதுநந்தனும் சிவானந்தும் அந்த இசையில் மயங்கி சிறிதுநேரம் அப்படியே இருந்தனர்.
அங்கே வந்த ஹோட்டல் ஊழியரிடம் இருவரும் தத்தமக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்துவிட்டு இசையில் மீண்டும் லயித்தனர்.

கிற்றார் இசை நிறுத்தப்பட அங்கே தோன்றினாள் ஒருத்தி. அவள் தன் காந்தக் குரலால் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் யதுநந்தனைக் கட்டிப் போட்டது. அவள் மேலைநாட்டுப் பாணியில் நவநாகரீக ஆடை அணிந்திருந்த போதும் அவள் உருவம் இந்தியப் பெண் என்பதையே பறைசாற்றியது.

அவள் பாடி முடிந்ததும் அவளை சந்தித்துப் பாராட்டத் தோன்றியது யதுநந்தனுக்கு. அவள் மேடையை விட்டு இறங்கி வரவும் எழுந்து அவளருகில் சென்றான்.
அவளிடம் கைக்குலுக்கிக் கொண்டவன், அவள் பாடியது மிகவும் இனிமையாகவும் ரசனையாகவும் இருந்தது எனப் பாராட்டினான். அவளும் இயல்பாக அவனிடம் பேசினாள்

சில நாட்கள் கழித்து இருவரும் மால் ஒன்றில் ஏதேச்சையாக சந்தித்துக் கொண்டனர். அன்று இருவரும் தங்களைப் பற்றிய விவரங்களைப் பரிமாறிக் கொண்டனர். அவள் பெயர் ஹரிணி. அவளின் பெற்றோர் சென்னையைச் சேர்ந்தவர்களே. ஹரிணிக்கு ஒரு வயது இருக்கும்போது லண்டன் வந்து அங்கேயே செட்டிலாகி விட்டார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருவருக்கும் விவாகரத்தாகி விட்டது. இப்போது தனித்தனியாக வாழ்கின்றனர்.

ஹரிணி ஆரம்பத்தில் தாயுடன் வசித்தவள், கடந்த இரண்டு வருடங்களாகத் தனியாக வசித்து வருகின்றாள். அவளுக்கு மாடலாக வரவேண்டும் என்பது பலநாள் கனவு. எனினும், இதுவரை சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்போது தன் தேவைகளை நிறேவேற்ற நட்சத்திர ஹோட்டல்களில் பாடல் பாடி வருகின்றாள்.

யதுநந்தனும் ஹரிணியும் தங்கள் விவரங்களைப் பரிமாறியதோடு தங்கள் தொலைபேசி இலக்கத்தையும் பரிமாறினர். காலப் போக்கில் இருவரது நட்பும் காதலாக மலர்ந்தது.

காதலிக்கும்போது ஹரிணி அவனிடம் தினமும் ஏதாவது ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டே இருப்பாள். யதுநந்தனும் முகம் சுளிக்காமல் வாங்கிக் கொடுப்பான்.
சிவானந்த் கூட சிலவேளைகளில் யதுநந்தனிடம் கேட்டிருக்கான் "ஏன் மச்சி, உன்கிட்ட இருந்து தினமும் ஏதாவது வாங்கணும் என்று ஹரிணி கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காள் போல.."
"சே சே... அப்படியில்ல மச்சி"
"இல்ல மச்சி.. அவள் உன்னை லவ் பண்ணுறதே இதுக்காகத்தானோ என்று தோணுதடா..."
"என்ன மச்சி நீ... அவளே பாவம். அம்மா அப்பா இருந்தும் அநாதை மாதிரி வாழுறாள். அவள் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்கக் கூட ஆளில்லை. நான் வாங்கிக் கொடுக்கவும் தன் ஏக்கத்தையெல்லாம் தீர்த்துக்கிறாள். நானும் உழைக்கிறேன் தானே."
"என்னவோ போடா..." என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

காதலிக்கத் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்து விட்டன. அடுத்த மாதம் இறுதிப் பரீட்சை. எனவே, அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தான். திடீரென ஒருநாள் தன்னை உடனேயே கல்யாணம் பண்ணுமாறு வந்து நின்றாள் ஹரிணி. அவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். பரீட்சை முடியட்டும் என்றான். அதைக் கேட்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. அவளின் பெற்றோரிடம் பேசுவோம் என்றதற்கும் வேண்டாம் என்றுவிட்டாள். அவர்கள் தனக்குத் தேவையில்லை என்றாள். தன் பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்கிவிட்டுக் கல்யாணம் பண்ணுவோம் என்றான்.
“அவர்களைக் கேட்டா என்னை லவ் பண்ணினாய். என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? அல்லது என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா?" என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள். அவனும் அவளுக்குப் புரியவைக்க எவ்வளவோ முயன்றான். ஆனால், அவளோ " நீ என்னை ஏமாற்றத்தான் பார்க்கிறாய். நான் சாகப் போகின்றேன்" என்றே திரும்பத் திரும்பக் கூறினாள். அவனும் வேற வழி தெரியாது கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவித்தான்.

இரண்டு நாட்களில் தான் நினைத்தமாதிரியே பதிவுத் திருமணத்தை முடித்து விட்டாள் ஹரிணி. அவன் தரப்பில் சிவானந்த் மட்டுமே வந்திருந்தான். அவள் சார்பாக நான்கு நண்பர்கள் மட்டுமே.

திருமணம் முடிந்ததும் அங்கேயே ஹரிணி அவனைக் கட்டிப் பிடித்து அழுதாள்.
"நந்து பேபி, எனக்கு யாருமில்லை என்று லோன்லியா ஃபீல் பண்ணன். இப்போ நான் ரொம்ப ஹாப்பி. இப்போ நான் மிஸ்ஸிஸ் யதுநந்தன்" என்றாள். அவள் சந்தோசத்தில் அழுவதைப் பார்த்ததும், தான் எடுத்த முடிவு சரிதான் என்று அவன் உறுதியாக நம்பினான்.

திருமணம் முடிந்ததும் ஹரிணியைத் தான் தங்கியிருந்த ஃபிளாட்டுக்கு அழைத்து வந்தான். அவர்களுக்குத் தனிமை கொடுத்து சிவானந்த் இன்னுமொரு நண்பனுடன் சென்று தங்கி விட்டான்.

ஒரு மாதத்தில் பரீட்சை முடிந்தது. நல்லபடியாக தேர்வை எழுதிய யதுநந்தன் இனி அடுத்து நடக்கவேண்டிய விடயங்களைப் பற்றி யோசித்தான். அவனது யோசனையின் முடிவாக இந்தியா செல்லாம் என ஹரிணியிடம் கேட்டான்.
"என்னால் இந்த நாட்டைவிட்டு எங்கும் வரமுடியாது. நீ வேண்டுமென்றால் போய்வா" என்றாள். “ஹரிணி என் பூர்வீகம், என் அடித்தளம் எல்லாமே இந்தியாதான். நான் இங்கு வந்ததே படிப்பதற்கு. அதை முடிச்சாயிற்று. இனி புறப்பட வேண்டியதுதானே”
“நோ, என்னால் அங்கெல்லாம் வரமுடியாது” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்வோம் என்று அமைதியாக இருந்துவிட்டான்.

திடீரென ஒருநாள் ஹரிணி மயக்கமாகி விழவும் அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்றான். பரிசோதித்துவிட்டு அவர் யதுநந்தனுக்கு வாழ்த்தைத் தெரிவித்ததோடு ஹரிணி கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். யதுநந்தன் சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறை. இனிமேலும் தாமதிக்க முடியாது. எப்படியாவது அப்பா, அம்மாவிடம் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதைத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தான்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சிவானந்துக்கு அழைத்து தான் அப்பாவாகிவிட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான். சிவானந்தும் ஊருக்கு செல்லவில்லை. சிலகாலம் லண்டனிலேயே இருக்கப் போவதாகக் கூறி அங்கேயே தங்கி விட்டான். யதுநந்தன் கூறிய தகவலைக் கேட்டதும் மகிழ்ச்சியில் வாழ்த்துக் கூறியவன், வீட்டிற்கு எப்படியாவது நடந்ததை உடனேயே தெரியப்படுத்துமாறு கூறினான். மாலையில் சந்திக்க வருவதாகவும் பார்ட்டி கட்டாயம் வைக்கணும் என்றும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

யதுநந்தனும் ஹரிணியிடம் கூறிவிட்டு வீட்டிற்கு அழைத்து நடந்ததைக் கூறுவோம் என்று நினைத்தான். சோர்வுடன் படுத்திருந்த ஹரிணியிடம் சென்றவன், தான் எடுத்த முடிவைக் கூறினான். அப்போதுதான் ஹரிணி அவன் தலைமீது இடியை… ம்கூம் அணுகுண்டையே போட்டாள்.
 
Top