எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை- அத்தியாயம் 13

Status
Not open for further replies.

அத்தியாயம் 13

பறவைகளின் கீச்சொலியில் துயில் கலைந்து எழுந்தாள் அதிஷா. தனது வெற்றுடலை போர்வை மட்டும் மூடியிருக்க அருகே ஆதிஷை காணவில்லை.​

தன்னை மூடியிருந்த போர்வையை உடலில் சுற்றிக்கொண்டே எழுந்து ஜன்னலுக்கருகே சென்று எட்டி பார்த்தாள்.​

அவன் வண்டியையும் காணவில்லை. வெளியில் சென்று விட்டான் என்று புரிந்தது. நிமிர்ந்து வானத்தை பார்த்தாள்.​

காலை சூரியனின் கதிர்கள் நிரம்பியிருக்க பஞ்சு போன்ற வெண்மேகங்கள் உலாவர ரம்யமாக காட்சியளித்தது.​

அவளை சூழ்ந்திருந்த கருமேகங்கள் எல்லாம் கலைந்து ஆதிஷின் அன்பில் வெண்மேகங்களாக உருமாறி அவளை அரவணைத்து கொள்வதாக காட்சிகள் அவள் கற்பனையில் உதித்தன.​

அவளை காணும் போதெல்லாம் அவன் கண்களில் ஏதோ இரு உணர்வை பார்த்திருக்கிறாள். அதை காதல் என்று மொழிபெயர்க்கும் தைரியம் தான் அவளிடம் இருக்கவில்லை.​

நேற்று அவன் தொடுதல்களிலும், வருடல்களிலும் காதலை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அந்த நினைவுகளை மீட்டும் போதே கன்னங்கள் சூடேற மெலிதாய் சிரித்துக்கொண்டாள்.​

முன் தினம் வெறும் பாலை மட்டும் அருந்தி விட்டு படுத்தவளின் சக்தியை எல்லாம் அவனும் அவனது சாகசங்களும் உறிஞ்சி எடுத்திருக்க பசி வயிற்றை கிள்ளியது. குளித்து உடை மாற்றி கீழே இறங்கிச் சென்றாள்.​

"வாங்க க்கா. இப்போ தான் உங்க ரூமுக்கே சாப்பாடு எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க" என்று புன்னகையுடன் அவளை வரவேற்றாள் கண்ணம்மா.​

"பசிக்குது கண்ணம்மா" என்று சொல்லிக்கொண்டே அவள் சாப்பாட்டு மேசையில் அமர அவள் தட்டில் தோசையும் சட்னியும் வைத்தாள் கண்ணம்மா.​

"சாப்பிட்டியா கண்ணம்மா?" என்று அதிஷா கேட்க "அதெல்லாம் முதல்லயே ஆச்சுக்கா" என்றவள் அதிஷாவையே பார்த்துக்கொண்டே நிற்க அவளை நிமிர்ந்து பார்த்தாள் அதிஷா.​

"என்னாச்சு கண்ணம்மா...இன்னிக்கு என்ன கேட்கணும்?" என்று கேட்டாள்.​

"கேட்டா கோவிச்சுக்குவீங்களே?" என்றாள் அவள்.​

"கோவிச்சுக்க மாட்டேன் கேளு" என்றாள் அதிஷா தோசையை பிட்டு வாய்க்குள் போட்டுக்கொண்டே.​

"நான் நேத்து கேட்டது சரி தானே?" என்றாள்.​

"என்ன கேட்ட?" அதிஷா கேட்க "அதுதான்...லவ் பண்ணுறீங்களா? நேத்து நைட் வந்தாரே அந்த சார் தானே?" என்று கேட்டாள்.​

"எப்படி சொல்லுற?" அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அதிஷா மறுக்கேள்வி கேட்க "உங்க முகம் நேத்து பார்த்ததை விட இப்போ தெளிவா இருக்கு. உங்க உதட்டளவுல இருந்த சிரிப்பு இன்னிக்கு கண்ணுல தெரியுது" என்றாள்.​

அவளை சரியாக மதிப்பிட்டிருந்த கண்ணம்மாவை புருவம் உயர்த்தி பார்த்தவள் "நீ புத்திசாலி தான், கண்ணம்மா" என்றாள்.​

அப்படியே சிறிது நேரம் கண்ணம்மாவுடன் பேசிகொண்டிருந்து விட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தவள் அலைபேசியை கையில் எடுத்தாள்.​

ராகவனிடமிருந்து புலன செய்தி வந்திருந்தது. இன்று மாலை 5 மணிக்கு காபி ஷாப் ஒன்றில் சந்திக்கலாம் என்று அனுப்பியிருந்தான்.​

அவனுக்கு 'ஓகே' என்று பதிலனுப்பியவள் அறையில் இருந்த ஒரு நாவலை கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.​

ஆதிஷிற்காக காத்திருந்தாள். அவனிடம் சொல்லவும் கேட்கவும் அவளுக்கு நிறைய இருந்தன.​

வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்த ஆதிஷின் ஜீப் வாசலில் சறுக்கி கொண்டு வந்து நின்ற சத்தம் கேட்க நிமிர்ந்து நேரத்தை பார்த்தாள். மாலை மணி நான்கை தொட்டிருந்தது.​

ஐந்து மணிக்கு அவள் ராகவனை சந்திக்க வேண்டும்.​

எழுந்து சென்று ஜன்னலின் வழியாக எட்டி பார்த்தாள்.​

ஜீப்பிலிருந்து இறங்கி வந்தவனின் தோரணையே அவன் கோபமாக இருக்கின்றான் என்பதை பறைசாற்றியது.​

அவன் வீட்டிற்குள் நுழைந்த சில நொடிகளிலேயே ஆதிஷின் உரத்த குரல் தான் அந்த வீட்டின் எட்டு திக்கிலும் ஒலித்தது.​

"என்னாச்சு, எதுக்கு சத்தம் போடுறாரு?" என்று யோசித்துக்கொண்டே அறைக் கதவை திறந்து கீழே எட்டி பார்த்தாள்.​

அங்கே கதிரும் செல்வாவும் அவன் முன்னே தலை குனிந்து நின்றிருக்க கருப்பு நிற ஷர்டுடன் நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தவன் இருகைகளையும் இடுப்பில் குற்றியபடி அவர்களிடம் கத்திக்கொண்டிருந்தான்.​

"எப்படி...எப்படி இல்லாமல் போகும். ஒழுங்கா செக் பண்ணிங்களா?" என்று கேட்டான்.​

"யாஷ் வீட்டை சல்லடை போட்டு சலிச்சாச்சு அவனுக்கு எதிரா ஒரு எவிடென்ஸ் கூட கிடைக்கல சார் " என்றான் கதிர்.​

"டம்ன்... ஜஸ்ட் கெட் அவுட் ஒஃப் மை சைட்" என்று கத்திக்கொண்டே படியேறி மேலே வந்தவன் அங்கே நின்றிருந்த அதிஷாவை பார்த்துவிட்டு வேகமாக அறைக்குள் நுழைந்தான்.​

குற்றவாளி யாரென்று தெரிந்தும் அதற்கான ஆதாரங்கள் கிடைக்காத கடுப்பில் முன்னே இருந்த மேசையில் ஓங்கி குத்தியிருந்தான் ஆதிஷ்.​

அவன் பின்னால் சென்று நின்றவள் "என்னாச்சு, ஏன் இவ்வளவு கோபம்?" என்று கேட்டாள்.​

"எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கையை சீரழிச்சிருப்பான் அவன். அவனுக்கு எதிரா ஒரு எவிடென்ஸ் கூட கிடைக்கலன்னு நினைக்கும் போது கடுப்பாகுது. அன்னிக்கு கூட ஒரு பிளஸ் டூ பொண்ணு, அவள் கிட்ட ட்ரக்ஸ். எப்படி கிடைச்சுதுன்னு விசாரிச்சு பார்த்தா ஐ.டியில் நல்ல வேலையில் இருக்குற பசங்களை வச்சு சப்லை பண்ணுறானுங்க. யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவனுங்க மாதிரி படிச்ச பசங்களை யூஸ் பண்ணிக்குறானுங்க. அவனுங்களும் எக்ஸ்ட்ரா பணம் கிடைக்குதேன்னு பேராசையில் இந்த சாக்கடையில் இறங்கிடுறானுங்க. பெரிய நெட்வேர்க் உருவாக்கி வச்சிருக்கான். வெளியில் டாக்டர் வேஷம் போட்டு உள்ளுக்குள்ள ட்ரக் லார்ட் வேலை பார்த்திருக்கான். அவனை மட்டும் பிடிச்சு ஒன்னும் பண்ண முடியாது. இந்த மொத்த சிண்டிகேட்டையும் ஒழிக்கணும். நிறைய பெரிய மனுஷங்களோட தலையீடு இதுல கண்டிப்பா இருக்கும். அப்படி இல்லாமல் அவனால இவ்வளவு நாள் இதை பண்ணிருக்க முடியாது. ஒரு எவிடென்ஸ் கிடைச்சாலும் போதும். பட் ஹி இஸ் எ ஸ்லீக் கிரிமினல். மாட்டிக்க கூடாதுன்னு ரொம்ப கவனமா வேலை பார்த்த்திருக்கான்" என்று கர்ஜனையாக சொன்னான்.​

அதிஷா எதுவும் பேசவில்லை மௌனமாகவே நின்றிருந்தாள்.​

தனது கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தவன் "எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. ஒருத்தர மீட் பண்ணனும் போய்ட்டு வந்திடுறேன்" என்று சொல்லியபடி அவள் இதழில் சடுதியாக இதழ் பதித்து விலகியவன் அறைக் கதவை நோக்கி நடந்த சமயம் "ராகவன், என்னை இங்க விட்டுட்டு அங்க யாரை மீட் பண்ண போறீங்க?" என்று கேட்டாள்.​

சட்டென்று நின்று திரும்பி பார்த்தான் ஆதிஷ்.​

அவன் விழிகளில் அதிர்ச்சி. நிச்சயமாக அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை.​

"என்னனு கூப்பிட்ட?" என்று கேட்டான்.​

அவனை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்துக்கொண்டே நடந்தவள் "ராகவன், ஏ.சி.பி விஜய ராகவன்" அவன் விழிகளை பார்த்துக்கொண்டே சொன்னாள்.​

"நான் அதிஷா. ஹெலினா ஓட ஃபிரென்ட்" என்றாள்.​

அவளை புருவம் இடுங்க பார்த்தவனுக்கு இப்பொழுது எல்லாம் புரிவது போன்று இருந்தது. யோசித்து பார்த்தான். அவனை காணும் நேரங்களிலெல்லாம் அவன் மீது படிந்த அவளது அழுத்தமான பார்வைகளும், அவன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் ஏன் என்று யோசித்திருக்கிறான்.​

இப்பொழுது அர்த்தம் விளங்கியது.​

அவன் காவல் அதிகாரி என்று இந்த இரு தினங்களிலேயே புரிந்து கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு தெரியும். ஆனால், இதுவரை அதை பற்றி அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. அதற்கு காரணமும் இப்பொழுது புரிந்தது.​

"என்னை உனக்கு எப்படி தெரியும்?" என்ற கேள்வி அவனிடம்.​

"உங்களை மட்டும் இல்லை, உங்களுக்கு தெரியாத விஷயமும் தெரியும்" என்றாள்.​

அவன் கரங்களை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவள் முன்னே நிமிர்ந்து நின்றவன் "ம்ம்ம்...அதுக்கு தானே என்னை மீட் பண்ண கேட்ட. இப்போ சொல்லு" என்றான்.​

"ஹெலினாவை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்..." என்று தொடங்கியவள் ஹெலினா அவனுடனான காதலை முறித்த காரணம் தொடங்கி கனவில் துரத்தும் அவள் நினைவிவுகள் வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள். அதில் அப்பொழுதே அவனுக்காக அவள் மனதில் தோன்றியிருந்த ஈர்ப்பையும் சேர்த்தே சொல்லியிருந்தாள்.​

அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றவனின் கண்கள் கலங்கியிருந்தன.​

ஒரு துளி கண்ணீர் உருண்டு அவன் கன்னம் நனைத்தது. இது நாள் வரையிலும் ஆறாமல் இருக்கும் காயமல்லவா. இத்தனை நாட்களும் ஹெலினா விட்டு சென்றதில் கோபமிருந்தாலும் அவளுக்கான காதலை மனதில் சுமந்துகொண்டு தானே இருந்தான்.​

அதிஷாவை பார்க்கும் வரை.​

அதிஷாவை பார்த்ததும் அவளில் விழுந்துவிட்டான். ஆனால், அடுத்த அடி எடுத்து வைக்க அவனுக்கு தடையாக இருந்தது ஹெலினாவின் மீது அவன் கொண்ட காதலும் அவள் தந்த காயங்களுமே.​

எதிரிகளை சுலபமாக எதிர்த்து நிற்பவனுக்கு இன்னொரு காதல் கொடுக்கும் வலியை தாங்க முடியாது என்று தோன்றவே அதிஷாவை விட்டு விலகி நின்றான்.​

அவனை நெருங்கி நின்ற அதிஷா ஒற்றை கரம் கொண்டு அவன் கன்னம் வருடினாள். அவன் கண்ணீரை பெருவிரலால் துடைத்து விட்டாள்.​

"அன்னிக்கு எதுக்கு என்னை அப்படி பார்க்குறன்னு கேட்டிங்கல்ல, உங்களை முதல் முறை பார்க்கும் போதும் அப்படி தான் பார்த்தேன். ஆனால், அப்போ ஹெலினா உங்க வாழ்க்கையில் இருந்தா..." என்றாள்.​

"என்னை மறுபடி பார்த்த நேரமாவது உன் மனசுல இருக்கறதை சொல்லியிருக்கலாம்ல. ஏன் சொல்லல... " என்று கேட்டான்.​

"தெரியல... அன்னிக்கு உங்க கூட போன்ல பேசுன நேரம் ஹெலினா கொடுத்த காயம் இன்னும் ஆறலன்னு சொன்னிங்க. இன்னமும் உங்க மனசுல ஹெலினா தான் இருக்கான்னு புரிஞ்சுக்கிட்டேன். ஹெலினாவோட ராகவனை நான் எப்படி எடுத்துக்குறது. அதுதான் ஒதுங்கி போக நினைச்சேன். சரியா அந்த நேரம் வீட்டுல கல்யாணம் பத்தி பேசனதும் சம்மதிச்சுட்டேன்" என்றாள்.​

"கல்யாண ஏற்பாடு எல்லாம் நடந்துட்டிருக்கும் போது தான் எனக்கே நான் உங்களை எவ்வளவு லவ் பண்ணுறேன்னு புரிஞ்சுது. ஹெலினாவோட ராகவன் எனக்கு வேணாம். ஆனால், என்னோட ஆதிஷ் எனக்கு கண்டிப்பா வேணும்னு தோணுச்சு. கல்யாணத்தை நிறுத்த நினைச்சு வீட்டுல சொன்னேன். ஆனால், அவங்க பணத்தேவைக்காக என்னை எமோஷனல் ப்ளாக்மெயில் பண்ணாங்க. ஒத்துக்க வேண்டியதா போய்டுச்சு" என்றாள்.​

இத்தனை வருடங்களாக அவனுக்காக தனது மனதில் சேர்த்து வைத்திருந்த காதலை மொத்தமாக அவனிடம் சொல்லிவிட்டாள்.​

உணர்ச்சி பெருக்கில் அவளது கண்களிலும் கண்ணீர்.​

அவளை இழுத்தணைத்தவன் "பைத்தியம். என் காயத்துக்கு மருந்தே நீதான். ஹெலினாவுக்கும் எனக்கும் இடையில ஏதோ ஒன்னு மிச்சமா இருக்குன்னு தோணுச்சு. உன் கிட்ட என் காதலை சொல்லுறதுக்கு முன்னாடி அதை என்னனு தெரிஞ்சுக்கிட்டு அவள் நினைவுகளை மொத்தமா மனசு ஓரத்துல பூட்டிவச்சுடலாம்னு நினைச்சு தான் இன்னிக்கு உன்னை மீட் பண்ண கேட்டேன்" என்றான்.​

"நீங்க மெசேஜ் பண்ணப்பவே உங்க மனசுல இப்போ நான் தான் இருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் தான் நேத்து நமக்குள்ள நடந்ததுக்கெல்லாம் சம்மதிச்சேன்" என்றாள்.​

மென்மையாக புன்னகைத்தவன் "ஐ லவ் யூ திஷா" என்றான்.​

அவனை பதிலுக்கு இறுக்கமாக கட்டிக்கொண்ட காரிகையவள் "ஐ லவ் யூ மோர்" என்றபடி எம்பி அவன் இதழ்களில் முத்தம் பதித்திருந்தாள்.​

"உங்களுக்கு ஒரு காதல் பரிசு கொடுக்கணுமே" என்று அவள் சொல்ல "கொடுக்கலாமே" என்ற அவன் விழிகள் மஞ்சத்தில் படிந்து மீண்டது. அவன் மார்பில் மெல்ல அடித்தவள் "இதே நினைப்பு தானா?" என்று கேட்டாள்.​

"இனி அதை விட வேற என்ன வேலை?" அவன் கேட்க மெல்ல சிரித்தவள் "இனிதான் உங்களுக்கு நிறைய வேலை இருக்கு" என்று சொல்லியபடி தனது அலைபேசியை எடுத்தவள் அதில் போடப்பட்டிருந்த கவரை மெல்ல திறந்தாள்.​

அதற்குள் மறைத்து வைத்திருந்த நானோ ட்ரைவை வெளியில் எடுத்தாள்.அதை அவனிடம் நீட்ட அதை வாங்கி கொண்டவன் "என்னது இது" என்று கேட்டான்.​

"எவிடென்ஸ் கேட்டிங்களே. யாஷ் வீட்டிலிருந்து தப்பிச்சு வரும் போது மேசையிலிருந்த என் போனை எடுத்த நேரம் அங்க இருந்த அவன் லெப்டோப்ல இந்த நானோ டிரைவ் இருந்தது. அதையும் எடுத்துட்டு வந்துட்டேன்" என்றாள்.​

அவளை விழி விரித்து பார்த்தவன் அதை மேசையில் இருந்த அவனது லெப்டோப்பில் போட்டு பார்த்தான்.​

யாஷின் போதை பொருள் சிண்டிகேட்டின் மொத்த விவரங்களும் அதில் தான் இருந்தது.​

"வெல் டன் திஷா" என்றவன் அவள் கன்னம் பற்றி அழுந்த முத்தமிட்டான்.​

"இதை வச்சு யாஷுக்கு தண்டனை வாங்கி கொடுத்துடலாம்ல?" என்று அவள் கேட்க "அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க எவிடென்ஸ் தேடுறேன்னு நினைச்சியா? அவனுக்கெல்லாம் கோர்ட் கொடுக்குற தண்டனை பத்தாது. இந்த எவிடென்ஸ் எல்லாம் அவன் உருவாக்கி வச்சிருக்கிற கூட்டத்தை மொத்தமா காலி பண்ணத்தான்" என்றான்.​

அவனை ஒரு மார்கமாக பார்த்தவள் "இப்போ யாஷ் எங்க?" என்று கேட்டாள்.​

பதில் சொல்லவில்லை அவன். ஆனால், இதழ்களில் ஒரு மர்ம புன்னகை.​

கிடைத்த தகவல்களை சற்றும் தாமதிக்காமல் அவன் உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியவன் "வேலை இருக்கு அதிஷா... வர லேட்டாகும்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.​

 
Last edited:
Status
Not open for further replies.
Top