எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 07

NNK-106

Moderator

காதல் Not Out - 07​

அன்றிரவு அவனை உறக்கம் தழுவிட மறுத்து தனியாய் தான் விட்டிருந்தது கூடவே நிலவும் விட்டுச்சென்றிட வீட்டில் இருப்பதற்கே மூச்சடைப்பது போல் இருந்தது. ஜன்னல்களை திறந்து வீட்டிற்குள் காற்றிற்கு அடைக்களமளித்து வெளியில் அமர்ந்திருந்தான் சஞ்சீவ். மனதில் இன்னும் குழப்பங்கள் தீராமல் தான் இருந்தன. ஒரு முடிவிற்கு வர முடியாமல் இருந்தான். கண்டிப்பாக இவனால் இதை செய்ய முடியாது. ஏன் என்று கேட்டாலும் பதில் இருக்காது அவனிடம். நாளையே அவளை சந்தித்து தெளிவாய் கூறிட வேண்டும் என்ற உறுதியோடு உள்ளே சென்று கதவை தாளிட்டு மேலே செல்ல போனவன் கண்களில் பட்டது அவள் இறங்கும் போது கொடுத்துவிட்டு சென்ற அந்த பரிசுப்பொதி.​

அழகான சிவப்பு நிற தாளில் சுற்றி இருந்தது. அவ்வளவு பெரிதாக இல்லை இவனது கைக்குள் அடக்கிவிட முடியுமாய் இருந்தது. அதை எடுத்து ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு அதனை தாள் கிழியாவண்ணம் பிரித்தான். குட்டியாய் ஒரு பெட்டி உள்ளே இருந்தது. சற்றே ஆர்வம் எட்டி பார்க்க அதனை திறக்க அதனுள் ஏதோ ஒரு படத்தை சிறு துண்டுகளாக அடுக்கியிருந்தது. ஒன்றை எடுத்துப்பார்க்க அப்போதுதான் புரிந்தது அது ஒவ்வொன்றையும் சரியாக பொருத்தினால் முழு படமும் கிடைக்கும் என்று. வித்தியாசமாக இருக்கிறதே என்றவண்ணம் அவன் அதனை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று மேசையில் பரப்பி அவற்றை ஒன்றாக பொருத்த ஆரம்பித்தான். பத்து நிமிட போராட்டத்தின் பின் அனைத்தையும் பொருத்திவிட்டு சற்றே பின்னே நகர்ந்து பார்த்தான் சஞ்சீவ். அங்கே அழகாய் சிரித்துக்கொண்டிருந்தது அவனும் அவன் பத்து வயதில் இழந்த அவனது அம்மாவும் தான். இப்போது அவனோடு அவன் அம்மா இருந்தால் எப்படி இருக்கும் என்பது போல் இருவரையும் சேர்த்து வைத்தது போல் வரையப்பட்டிருந்தது அந்த படம். சஞ்சீவின் சொல்ல முடியாத மனநிலை; அப்படி என்ன இருக்கப்போகிறது என முதலில் பார்த்தவன் இப்போது அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தான்.​

அடுத்த நாள் காலை முதல் வேலையாய் அவசரமாய் காரை எடுத்துக்கொண்டு கவிதாவின் வீட்டின் முன் நின்றிருந்தான் சஞ்சீவ். அன்றைய தினத்தை வைத்து கணித்துப்பார்த்தால் இந்த நேரத்திற்கெல்லாம் வந்து விடுவாள் என்று பார்த்திருக்க அவன் நினைத்தது போலவே வீட்டிலிருந்து வெளியே பாதைக்கு வந்தாள். ஒரு இரண்டடி நடந்திருப்பாள் இவனும் இறங்கி பேசுவதற்காய் முன்னேற சட்டென இருவரையும் நிறுத்தியது "ஏய்.. இந்தா.." என்று ஓங்கிய பெண் குரல்.​

கவிதா அந்த பக்கமாய் திரும்ப சஞ்சீவின் பார்வையும் அந்த இடத்தில் பதிந்தது. அங்கு நின்றிருந்தது ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான். பார்ப்பதற்கு ஏனோ அவ்வளவு நன்றாக ஒரு எண்ணம் வரவில்லை இருந்தாலும் ஒரு புத்தகத்தை வெளித்தோற்றம் வைத்து கணிப்பிட கூடாதே என்பதை மனதில் கொண்டு நடப்பதை பார்த்திருந்தான்.​

"என்ன கைய வீசிட்ட போனா சாப்பாடு தானா நடந்து வருமா.. ?" எதற்காக இப்போது இத்தனை கடுமை அதுவும் நாலு பேர் பார்க்கும் இடத்தில் என்று தான் இருந்தது அவனுக்கு. அதுவே தான் அவளுக்கும் என்பது போல் சற்றே சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு..​

"மறந்துட்டேன்.. கொடுங்க.." என்று அந்த பெண்ணின் கையில் இருந்த பொட்டலத்தை வாங்கினாள்.​

"ஆமா நீ மறந்துடு அப்புறம் சாப்பாட்டுக்குன்னு காச கரச்சிருவ.. அப்படியே உங்க அப்பா கட்டி வச்சிட்டு போயிருக்காரு பாரு மகாராணிக்கு ஹோட்டல் சாப்பாடு வாங்க.. இந்தா பிடி.." கையில் திணித்து விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து மறைந்தாள். கவிதாவின் பார்வை ஓரமாய் நின்று வேடிக்கையோடு சேர்த்தே பரிதாபப்பார்வை வீசிக்கொண்டிருந்த சிலரை சங்கடமாய் மொய்த்து மீண்டது. கையில் அந்த பெண் திணித்து விட்டு போன பொட்டலத்தை பைக்குள் வைத்தாள். சஞ்சீவிற்கு அப்போதே சென்று அவள் முன் நின்றாள் அது அவன் பார்த்து விட்டான் என்று இன்னும் அவளை சங்கடமாய் உணரச்செய்யும் என்றதால் அவள் முன்னே நடந்து அந்த பாதையில் இருந்து மறையும் வரை அங்கிருந்த மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான். ஆனால் மனம் இந்த பெண் தாயாகவா இருக்கக்கூடும் என்று தான் யோசிக்க வைத்தது. எதனால் இத்தனை கடுமை அவள் மீது என்பதும் அவன் அறிவை எட்டாததாய் தான் இருந்தது.​

அவள் பாதையிலிருந்து மறைந்ததும் காரை கிளப்பிக்கொண்டு அவள் வீட்டுப்பாதையை சுற்றி வந்து அவளுக்கு எதிரே இருந்து வருவது போல் காரை நிறுத்தினான்.​

"ஹாய் கவிதா..ஏறு" என்றான் கதவை திறந்து விட்டபடியே..​

சட்டென முகம் பிரகாசமாகிட.. "சார்.. நீங்களா.." என்றவாரு மறுவார்த்தை இன்றி சட்டென ஏறி அமர்ந்தாள்.​

"ஆமா நானே தான்.. ஏன் உனக்கு பார்த்தா வேற யாரும் மாதிரியா தெரியுது.. ? அதென்னா தூங்குறவங்கள்கிட்ட தூங்குறீங்களான்னு கேட்குறது போல யாரையும் தெரிஞ்சவங்கள பார்த்தா நீங்களான்னு கேட்குறது.. லாஜிக் வேணாமா.. ?" காரை எடுத்தவண்ணம் கேள்வியாய் கேட்டான் சஞ்சீவ்.​

"இல்ல தூங்குறவங்க தூங்குற மாதிரி நடிக்கலாம்ல.. அதே போல உங்களை போல யாராவது வேஷம் போட்டு வரலாம்ல.." என்றாள் அப்பாவியாய்.​

"ஆமா அப்படியே வேஷம் போட்டு வந்தாலும் நீ நீங்களான்னு கேட்டா இல்ல நான் அவங்க போல வேஷம் போட்டிருக்கேன்னு சொல்லிருவாங்களா.. ?"​

"அய்யோ சார்.. இப்போ இதை கேட்டு என்னை டெஸ்ட் பன்னதான் வந்தீங்களா நீங்க ?"​

"இல்ல இந்த வழியா.." சஞ்சீவ் கூற வருவதை முன்னே கணித்து விட்டது போல்... "ஸ்டாப் ஸ்டாப்.. ஏது இந்த வழியால வந்தப்போ நீங்க என்ன கண்டு நிறுத்தினதா சொல்ல போறீங்களா.. சார் எதுக்கு.. இந்த வழியால இது போல கார் வர்ரதே குறைவு அப்படியே வந்தாலும் அது மெக்கானிக் ஷாப்க்கு தான்.. நீங்க என்ன தான் பார்க்க வந்தீங்கன்னு வெளிப்படையாகவே சொல்லுங்களேன்.." என்றாள் கவிதா.​

"ஓகே ஓகே உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா.. உன்னை பார்க்க தான் வந்தேன்.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. ப்ரீயா ?" பாதையில் கவனமாய் தன் பார்வையை பதித்தவாறே கேட்டான் சஞ்சீவ்.​

"இப்போ மணி எட்டு.. ஒன்பது வரை ப்ரீ தான் சார்.. அப்புறம் தான் ரமண் அங்கிள் வீட்ல டியூஷன் இருக்கு.." தன் கைக்கடிகாரத்தை பார்த்தவாறே கூறினாள்.​

"குட்.." என்றவண்ணம் காரை ரோஜா வீதி என்ற பெயர் பலகை தாங்கியிருந்த பாதை வழியே ரோஜா பூங்காவை நோக்கி திருப்பினான் அவன்.​

அடுத்த பதினைந்து நிமிடமாக இவளும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்க பேச வேண்டும் என்றவனோ பேச்சை மறந்து அமர்ந்திருந்தான். மரங்களில் இருந்த இலைகளை எண்ணுகிறானோ என்று தான் எண்ணும்படியாக இருந்தது அவளுக்கு.. இதற்கு மேல் முடியாது என்பது போல்.. "சஞ்..சார்.." என்றாள் மெதுவாய் அவனை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்துவிட.​

சட்டென இவள் பக்கமாய் திரும்பியவன்.. எதையோ இவ்வளவு நேரம் ஒத்திகை பார்த்து வைத்ததை போல பேச ஆரம்பித்தான்.​

"கவிதா நான் பேசுறதை இடையில பேசாம கேளு..நானும் நீயும் பார்க்குறது இதுதான் கடைசியா இருக்கனும்.. நீ ரொம்ப நல்ல பொண்ணு தான்.. ஆனா உனக்கான ஆள் நான் இல்ல.. உன் மேல முன்ன போல கோபம்கூட வருதில்ல.. ஆனா அதுக்காக நீ கேட்குறத என்னால கொடுக்க முடியாது.. அப்படி நான் சரி சொன்னாலும் அது உன்னை ஏமாத்துறது போல தான்.. சோ உனக்கு நான் சொல்ல வர்ரது ஒன்னு தான்.. நான் சரியான ஆள் இல்லை.. நீ உன் நேரத்தை வீணாக்காமல் உன் லைப் பாரு..இப்போ திரும்பி போய்ட்டேன்னா உன் பக்கம் நானும் திரும்ப மாட்டேன்.. நீயும் வேணாம்..டிஸ்டர்ப் பன்னாத" படபட என பேசி முடித்தவன் எழுந்து மீண்டும் இவளை பார்த்து.." என் அம்மா பத்தி உனக்கு எப்படி தெரியும் தெரில.. ஆனா அது ரொம்ப அழகா இருந்தது.. நன்றி." கூறியதை நிறைவேற்றுபவன் போல் அடுத்த நொடி நடந்து இவள் பக்கம் கூட திரும்பாமல் காரை எடுத்துக்கொண்டு பறந்திருந்தான் சஞ்சீவ்.​

********​

"டேய் யார்ரா நீ.. தைரியம் இருந்தா என் கண் கட்ட எடுத்து விட்டு முன்னாடி வாடா.." ஒரு மணி நேரமாக அந்த கட்டிடம் முழுவதும் அவனது சத்தமே தான் மீண்டும் எதிரொலிக்க கேட்டுக்கொண்டிருந்தது. கடைசியாய் யாரிடமோ பேசினான் பின் எதுவும் நியாபகத்தில் இல்லை அவ்வளவு தான்..அவன் தான் கடத்தியிருக்க வேண்டும் ஆனால் அவனை அதுதான் முதல் தடவை பார்க்கிறான். எண்ணங்களை அப்போதைக்கு எரித்து விட்டு மீண்டும் சத்தமிட ஆரம்பித்தான். இம்முறை அவன் குரலிற்கு பதில் போல் பலமாய் ஒலித்தது நெருங்கி வரும் காலடியோசைகள்.​

"டேய் வாடா.. நான் யாரு தெரியுமா..?" காலடிகளுக்கு சொந்தக்காரன் எங்கிருக்கிறான் என்பதை ஊகிக்க முடியாமல் எல்லா பக்கமுமாய் திரும்பி பேசினான் அவன். சட்டென இருள் விலக கண்கட்டு அவிழ்க்கப்பட்டதை உணர்ந்து வெளிச்சத்தை சமன் செய்தவண்ணம் தன் முன்னால் இருந்த உருவத்தை உற்று நோக்கினான்.​

அவனே தான் இவன் கடைசியாய் பார்த்த முகம். "யார்ரா நீ.. எதுக்கு என்ன கடத்தியிருக்க.. பணம் வேணுமா உனக்கு.." ஆவேசமாய் கேட்டான். ஆனால் அவனோ பொறுமையாய் தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து எதையோ எடுத்து தரையில் அடுக்கிக்கொண்டிருந்தான்.​

"சொல்லுடா எவ்வளோ வேணும்.. கேவலம் இந்த பணத்துக்காக தான எல்லாம்.. என் அப்பா யாரு தெரியுமா..?"​

அடுத்த கணம் அவன் உதட்டிலிருந்து பீறிட்டு பாய்ந்தது செங்குருதி. அலறிக்கொண்டு சரிந்தவனை கண்களில் திருப்தியோடு பார்த்து விட்டு கையிலிருந்த அவன் உதட்டை கிழித்த அதே ப்ளேடோடு அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான். அவன் ஒரு காலை தன் பக்கமாய இழுத்து அந்த ப்ளேடை பாதத்தினுள் பத்திரப்படுத்தினான். பலனாய் நிற்காமல் ஒலித்தது அவன் அலறல் அந்த கட்டிடம் எங்குமே. ஒரு தோள் குலுக்கலோடு எழுந்து தண்ணீர் போத்தலை கையால் காட்டிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் அவன்.​

கால் போன போக்கில் அவன் அலறல் காதில் இருந்து தேயும் வரை நடந்து கொண்டிருந்தான். இந்த பகுதிக்கே அவனும் அந்த கட்டிடமும் தான் தனியாக நின்று கொண்டிருந்தது. அதை அறியாத அவனோ உதவி கேட்டு கதறுவதை கேட்டால் சற்றே வேடிக்கையாக தான் இருந்தது. அந்த அலறல் மனதில் ஒரு வித திருப்தியை அளிப்பதை உணர்ந்து ஆழமாய் மூச்சை இழுத்து விட்டு நேரத்தை பார்க்க அது ஒன்றை தொட்டுக்கொண்டிருந்தது. டீச்சர்.. என்று சற்றே சிரிப்போடு முணுமுணுத்துவிட்டு தன் பைக்கில் ஏறி அந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான் ஹர்ஷித்.​

 
Top