எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 09

NNK-106

Moderator

காதல் Not Out - 09​

ஏதோ அவள் வீடு போல அவள் படியேறிச்செல்வதை கண்களில் சிரிப்புடன் பார்த்துக்கொண்டே தானும் பின்னே சென்றான்.​

"இன்னும் யாரும் வரல்லையா சஞ்..சார் ?"​

"நீ சஞ்சீவ்னே கூப்பிடு பரவாயில்ல..இன்னும் வரல.."​

"சரி சஞ்சீவ்..சஞ்சீவ்..சஞ்..சீவ்..எப்போ வருவாங்க.." ஒரு முறைக்கு மூன்று முறை சிரிப்புடன் அழைத்துக்கொண்டே கேட்டாள்.​

"தெரிலையே.."​

பேசிக்கொண்டே அவளை ஒரு அறைக்கு அழைத்துச்சென்றவன் அங்கிருந்த அலுமாரியை திறந்து ஒரு செட் உடையை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை எடுத்துப்பார்த்துக்கொண்டே..​

"நீங்க இதெல்லாம் போடுவீங்களா.. ?" என்றாள் கண்களை விரித்துக்கொண்டே..​

"என் தங்கச்சி சந்தனாவோடது..உன்ன விட.. ஆமா உன் வயசு என்ன ?"​

"இப்போவாது கேட்டீங்களே.. இருபத்திரண்டு..உங்களுக்கு இருபத்தியேழு தானே ?"​

"ஆமா.. அப்போ சந்தனா உன்ன விட இரண்டு வயசு சின்னவ.. கரக்ட்டா தான் இருக்கும்.. போட்டுக்க.. அங்க குளிக்கிறதுன்னா குளிச்சிக்கலாம்.. டவல் உள்ள இருக்கும்.. ஓகே நானும் போய் ப்ரஷ் ஆகிட்டு வந்துடறேன்.." அறையின் உட்புறமாய் ஓரமாய் இருந்த குளியலறையை காட்டிவிட்டு வேகமாய் வெளியில் வந்தான் சஞ்சீவ்.​

ஒரு வாரமாக தான் அவளை தெரியும் இருந்தும் எந்த நம்பிக்கை ? அப்படியே இருந்தாலும் அவளை விலக்கி வைக்க நினைத்து விட்டு இப்போது தான் செய்வது சரிதானா.. இன்னும் நெருங்கியல்லவா செல்கிறாய்.. அந்த அணைப்பு வேறு.. அது ஒரு பாதுகாப்பு.. கண்ட வேகத்தில்.. அவனே கேள்வியை கேட்டு சமாளிப்பது போல் பதிலையும் அவனே தேடிக்கொண்டிருந்தான்.​

சஞ்சீவ் கொடுத்து விட்டு போன டாப்பை அணிந்து கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தாள் கவிதா. அவளுக்கு சரியாய் இருந்தது அப்போ அவளும் சந்தனாவும் கிட்டத்தட்ட ஒரே அளவாக தான் இருப்பார்கள் போல எண்ணிக்கொண்டாள். இதற்கு பதிலாக புதியதாக ஒன்றை கட்டாயம் வாங்கி கொடுக்க வேண்டும் என மனதில் பதித்துக்கொண்டாள். இதையே கொடுக்கலாம் தான் ஆனால் ஏனோ அவள் ஒரு முறை அணிந்ததை கொடுப்பது சரியில்லை என்பது போல் இருந்தது. அந்த அறையிலிருந்து வெளியில் வந்து சஞ்சீவின் அறையை எட்டி பார்த்தாள். கதவு சற்றே திறந்து தான் இருந்தது. போகலாமா வேண்டாமா என்பது போல் சற்று யோசித்தவள் பின்.. "நம்ம ஆளோட ரூம் தானே.." என்று கதவை நன்று அகலமாக திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.​

அவனது அறை நேர்த்தியாக இருந்தது. ஆனாலும் கட்டில் விரிப்பு முதல் அறையின் சுவர் வரை அனைத்திலும் வர்ணங்கள் தொலைந்திருந்தது போல் தான் வெள்ளையும் கறுப்பும் மட்டுமே இருந்தது. வேறு எந்த வர்ணங்களும் பார்க்கும் எந்த இடத்திலும் இல்லை. அவனது மேசை மேல் மேலதிக வெளிச்சத்திற்காய் அதுவும் மேசைக்கு மட்டுமென தனியாய் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஏதோ கடைசியாய் எழுதிக்கொண்டிருந்ததன் அடையாளமாய் ஒரு தாளின் மேல் பேனா வீற்றிருந்தது. அருகில் சென்று பார்க்க கடித உறை அருகிலிருக்க அந்த தாளில் "அன்புள்ள ஹர்ஷித்திற்கு.." என்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது அது ஒரு கடிதம் என்பதை காட்டியது. அந்த கடிதம் அந்த வரிகளை மட்டுமே கொண்டிருக்க அருகில் இன்னும் பல கடிதங்கள் உறையிட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் ஹர்ஷித்திடம் இருந்து வந்தது போல் தான் தெரிந்தது.​

"ஹேய் இங்க என்ன பன்னுற.." ஒலித்த சஞ்சீவின் குரலில் திரும்பினாள் கவிதா.​

"இந்த காலத்தில கடிதமா.. ? அதிசயமா இருக்கே.." என்றாள் அவனை பாரத்துக்கொண்டே. இன்று தான் முதல் முறையாக அவனை சாதரண டீஷர்ட் பான்ட்டில் பார்க்கிறாள். கோட்டில் பார்க்கும் போதே இவளுக்கு கண்களை நகர்த்துவது கடினம் என்கையில் இப்போது இமைப்பது கூட சுமையாய் தான் இருந்தது.​

"அது என்னோட சின்ன வயசு ப்ரன்ட் ஹர்ஷித்.. நாங்க பென் ப்ரன்ஸ்.." தலையை துவட்டிக்கொண்டே கூறினான்.​

"அப்போ நேர்ல மீட் பன்னதே இல்லையா ?"​

" ஹ்ம் இல்ல.. ஆனா ஆசை தான் மீட் பன்னும்னு..இரண்டு பேருக்கும் சந்தர்ப்பம் ஒரு நாள் கிடைக்கும்னு இருக்கோம்.. "​

"ஓஹ் இன்ட்ரஸ்டிங்.. " என்றவண்ணம் இப்போது அவன் வழியை மறைத்தாற் போல் நின்றிருந்தாள் கவிதா.​

"என்ன..?"​

"உங்களை ஒரு முறை ஹக் பன்னிக்கட்டுமா.. ?" பாவமாய் கவிதா கேட்க.. சஞ்சீவின் மூளை அதிர்ந்து பின் வேண்டாம் என்ற சொல்லை உதிர்த்திட பணிக்க இருந்தாலும் மனமோ அவள் முகத்தை பார்த்தால் வேண்டாம் என்று சொல்ல தான் வேண்டுமா.. என்று தான் கூறியது. இந்த போராட்டத்தில் அவன் அமைதியை ஏந்திட மௌனம் சம்மதம் தானே என்று சட்டென அவனை இறுக்க அணைத்து மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள் கவிதா. பல கடல் மலை ஆறு ஏன் பாலைவனங்கள் கடந்து பல இன்னல்கள் கடந்து தன் இடம் சேர்ந்து விட்ட நிம்மதி அவளிற்குள். அவன் இதயத்துடிப்பை ஆழமாய் கேட்டவண்ணம் அவனுக்கே உரித்தான வாசனையை நுகர்ந்தவாரு இனி இறந்தால் கூட சுகம் தான் என்று அசைவின்றி அனுபவித்திருந்தாள் கவிதா. சஞ்சீவிற்கு கைகள் அவளை சுற்றிட தானாக எழ சட்டென கட்டுக்குள் கொண்டு வந்து அவற்றை இருபக்கமாய் சேர்த்து நேராய் நின்றான். எவ்வளவு நிமிடங்கள் கடந்ததோ மெதுவாய் சஞ்சீவ் "கவிதா.." என்றழைக்கவுமே தன்னிலை உணர்ந்தது போல் விலகி நின்றாள்.​

"தாங்ஸ்.. " என்று கவிதா புன்னகைக்க.. வெறுமனே ஒரு புன்னகையோடு "போகலாம்.." என்று வேகமாய் அங்கிருந்து நடந்தான் சஞ்சீவ்.​

காரில் இருவரும் ஏறி அமர்ந்தும் அங்கே மௌனமே தலை தூக்கியிருந்தது. பாதையில் வாகனங்கள் இன்று அவ்வளவாக இல்லை என்று எண்ணியவண்ணம் ஓட்டிக்கொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் நினைவில் உதித்தது அவள் இன்று செய்த காரியம்.​

"கவிதா.." என்றான் சற்றே கடுமையாய்..​

"வாட் வாட்.. சஞ்சீவ் ?"​

"எதுக்கு காலையில இருந்து அங்கேயே இருந்த ? நான் உன்கிட்ட காலைல பேசிட்டு போன அப்புறம் உன்ன பார்க்கலன்னு நிதன் சொன்னான் ? ஏன் இப்படி நடந்துக்குற ப்ளாக் மெயில் பன்ன பார்க்குறயா ??"​

"இல்ல சஞ்சீவ் அப்புறம் என்ன வீட்டுக்கு வர சொன்னாங்க கோல் பன்னி.. நான் போய்ட்டு தான் அங்க போனேன்.."​

"எதுக்கு..?"​

"எதுக்குன்னா.." ஆரம்பித்தவள் சட்டென நிறுத்தி..​

"நிதன் தான் உங்ககிட்ட வந்து சொன்னானா ?" என்றாள்.​

"ஆமா..சொல்லு எதுக்கு.." மீண்டும் அவன் அதிலே வந்து நிற்க..​

"எதுக்குன்னா..அவ்ச்.." சட்டென அவள் கையை பிடித்துக்கொண்டு வலியில் சத்தமிட..சட்டென காரை பாதையிலேயே நிறுத்தியவன் அவள் பக்கம் பதட்டமாய்.. "என்னாச்சு கவிதா.." என்று திரும்பினான்..​

"வளையல் உடைஞ்சு கையில குத்திடுச்சு.." அவள் தன் இடது கையை காட்ட அதில் அவளது கண்ணாடி வளையல் உடைந்து குத்தியிருந்தது. அது எப்படி உடைந்தது இப்போது என்று அவன் அந்த நேரத்தில் யோசிக்கவில்லை மாறாக தன் காரில் இருந்த மருந்து மற்றும் ப்ளாஸ்டர் கொண்டு அவளது கைக்கு மருந்திட்டு கட்டு போடுவதில் தான் கவனமாய் இருந்தான்.​

அடுத்த அரைமணி நேரத்தில் கவிதாவின் வீட்டின் முன் நிறுத்திய சஞ்சீவ்.. "கவிதா.." என்று ஏதோ கூற வர.. "நீங்க எதுவும் யோசிக்க வேண்டாம்.. குட் நைட்.. " மேலும் தாமதிக்காமல் அவனுக்கு பேசவும் அவகாசமளிக்காது சட்டென இறங்கி தன் வீடு நோக்கி நடந்தாள் கவிதா.​

***********​

வழமை போல் பஸ் நிற்க இன்று மஞ்சள் நிறத்தில் அவனது ரோஜா இறங்கியது. இறங்கியதுமே இவன் வழமையாய் நிற்கும் இடத்தில் இவனிடம் திரும்பி மீண்டது அவளது பார்வை. அப்போ என்னை எதிர்பார்க்கிறாளா.. சந்தோஷக்குமிழ் வெடிக்க பைக்கை நிறுத்தி சாவியை எடுத்துக்கொண்டு அவள் பின்னே நடந்தான். அந்த பாதை முடிந்து அவளது ஹாஸ்டல் இருக்கும் பாதை வர.. பெயர் சொல்லி அழைக்கலாமா என யோசித்து விட்டு பின் வேண்டாம் என்பது போல் மெதுவாய் பின்னிருந்து.. "டீச்சர்.." என்றான். எந்த துலங்களும் இன்றி அவள் நடந்து கொண்டே இருக்கவும்..மீண்டும் "டீச்சர்.." என முதல் முறை அழைத்தது கேட்கவில்லையோ என்பது போல் சற்றே நெருங்கி மீண்டும் அழைத்துப்பார்த்தான் ஹர்ஷித்.​

சட்டென வேல்விழிகள் கொண்டு இவனை நின்று திரும்பி முறைத்தாள் அவள்..​

"என்கூட ஒரு முறை வருவீங்களா.." தயக்கமாய் அவன் கேட்க..​

"என்னங்க உங்க பிரச்சனை ? எங்க வரனும்..ஏன் இப்படி தொல்லை பன்னிட்டே இருக்குறீங்க.." இயலாமையுடன் ஒலித்தது அவள் குரல்.​

"ஒரு தடவை நான் சொல்லுறதை மட்டும் கேளுங்க.."​

"சரி சொல்லுங்க.." கைகட்டி அங்கேயே நின்றாள். அவள் நின்ற பாவனை அவள் மனநிலை கோபமாய் இருக்கிறது என்றது. இதுவும் அறியாதவனா அவன். அவளது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் அறிந்தவனாயிற்றே. அவனது அவளல்லவா அவள்..​

"இல்ல வேண்டாம்.."​

"இங்க பாருங்க.. இதையே பன்னிட்டு இருக்காதீங்க.. எதாவது சொல்லனும்னா சொல்லலாம்.." கோபமாய் தான் பேசினாள்.​

"இல்ல.. ஏன் என்னைய தெரியாதது போலவே நடந்துக்குறீங்க.. உங்களுக்கும் என்னை பிடிச்சது.. ஆனா இப்போ என்ன ?" ஒருவாரு மனதில் உறுத்தியதை கேட்டே விட்டான் ஹர்ஷித்.​

"வாட்.. சார் உங்களை எனக்கு தெரியாது.. அதுவுமில்லாம உங்களை எப்போ எனக்கு பிடிச்சிருந்தது ?? நான் சொன்னேனா" பட பட என கோபத்தில் வந்து விழுந்தது வார்த்தைகள்.​

"டீச்சர்.. "​

"லுக் மிஸ்டர்.. இதை இதோட விட்றுங்க.. " என கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நடந்தாள். ஆம் சென்றே விட்டாள் தான். தன்னை அறியாதே கண்ணீர் துளிகள் கன்னத்தில் விளையாடுகிறதோ.. கையை உயர்த்தி தொட்டு பார்த்தான். ஆம் அழுகிறான் அவன். அவள் அவனை தெரிந்தும் தெரியாதது போல் தான் நடிக்கிறாள். பொய் சொல்லுகிறாள் அதுவுமில்லாமல் பிடித்தது இப்போது ஏன் கசக்கிறது.. வற்புறுத்தி காதலை வரவழைக்க முடியாதே ஆனாலும் அவளை மறப்பது என்ற எண்ணமே உயிருடனே இதயத்தை பிடுங்கி எடுப்பது போல் வலிக்கிறது. அந்த எண்ணத்தை கூட எண்ணம் தானே என்றளவு கூட நினைக்க முடியவில்லை அவனால். அவன் மனதின் போராட்டங்களையும் வலிகளையும் அறிந்தது போல் வானும் அழுதது அவனிற்காய்.. ஆனால் என்ன பயன் என்பது போல் அவள் சென்ற திசையையே பார்த்திருந்தான்.​

 
Top