எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 10

NNK-106

Moderator

காதல் Not Out - 10​

அடுத்த நாள் விடிந்ததும் காலையிலே வீடு வழமைக்கு திரும்பியது போன்ற ஏதோ ஓர் உணர்வு அவனுள். எழுந்து பார்த்தால் அருகிலே இவனது தேனீர் கோப்பை இருக்க சிரிப்புடன் கீழே சென்றான். அங்கு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் சஞ்சீவின் தந்தை அறிவரசன்.​

"அப்பா நீங்க வாரதுன்னு சொல்லவே இல்லையே.." அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் இவன் கேட்க..​

"சொன்னா மட்டும் என்ன பன்னிருப்ப..?" இவன் தலையில் தட்டி விட்டு ஓடினாள் சந்தனா..​

"ஹே நீயுமா.. என்னமோ அங்க ப்ரன்ஸ் மிஸ் பன்னுவ வர மாட்டான்னு சீன் போட்ட.. ?" அவளை கலாய்த்துக்கொண்டே சமயலறைக்குள் சென்றான்.​

அங்கு தாமரை மீண்டும் ஒரு தேனீர் கோப்பையை நீட்ட..​

"சித்தி அதான் மேல வச்சிருக்கீங்களே.."​

"அது சூடா இருக்காது.. இதை குடி.." என்று அவனது கையில் திணித்தார்.​

இப்படி சின்ன விஷயங்களில் தொடங்கி எத்தனை அன்பு அவன் மேல் அவனது சித்திக்கு. அறிவரசன் இரண்டாவதாக மணந்து கொண்டதால் தான் சித்தி என்று இல்லை. சஞ்சீவின் அம்மா இயலரசியின் பெரியம்மா மகள் தான் தாமரை. இயலரசியின் மறைவின் பின் ஆறு வயது சந்தனாவையும் பதிமூன்று வயது சஞ்சீவையும் இரு பக்கமாய் பிடித்தவண்ணம் நிலைகுலைந்து நின்ற அறிவரசனையும் உடைந்திருந்த சஞ்சீவையும் அரவணைத்துக்கொண்டார் தாமரை. அன்று முதல் இன்று வரை அம்மா இல்லாத குறை சற்றேனும் தெரிந்து விடக்கூடாதே என்பது போல் தான் ஒவ்வொன்றையும் செய்வதும் அன்பை பொழிவதும். இருந்தாலும் பதிமூன்று வயது வரை அவன் தாயோடு இருந்த நினைவுகள் நிழற்படமாய் உள்ளே கீறிக்கொண்டு தான் இருந்தன சஞ்சீவிற்கு. "அம்மா ஆபரேஷன் முடிச்சிட்டு சீக்கிரம் வாரேன்.." என்று கூறி தலையை வருடி விட்டு வைத்தியசாலைக்கு சென்றவர் தான் பின் பார்த்தது கண்கள் மூடிய நிலையில் தான். அதுவும் ஏன் அம்மா பேசவில்லை என்று பயத்தோடே ஓரமாய் நின்று கூட்டத்தில் ஒதுங்கியதும் இன்றும் கண்ணிற்குள் இருந்தது. அந்த நாட்கள் அவன் மீள அவனது சித்தியும் ரமணின் மனைவி பானுவும் எவ்வளவு காரணமோ அதே அளவு தான் அவனது நண்பன் ஹர்ஷித்தும் எனலாம்.. ஏன் ஒருபடி மேலே என்று கூட சொல்லலாம்.​

சஞ்சீவிற்கு பிடித்தமான ஒரு விஷயம் தான் பேனா நண்பர்கள். அவ்வளவாக தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் யாருடனும் பேசிக்கொள்ள மாட்டான். எதாவது வித்தியாசமான விடயங்கள், அனுபவங்கள், அவரவர் ஊர் பற்றிய சிறப்பானவை என்பன தான் கடிதங்களில் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த கட்டுப்பாட்டை கூட மறக்க செய்தது ஹர்ஷித் தான். முதலாவது அவனிடம் இருந்து கடிதம் வந்தது இவன் உடைந்து போய் இருந்த இந்த காலத்தில் தான். ஆர்வமின்றி ஏதோ என பதில் எழுதியவன் என்ன தோன்றியதோ மனதில் உள்ளவற்றை மெதுவாக காலப்போக்கில் பகிர்ந்திட ஆரம்பித்தான். பதிலாக வரும் ஹர்ஷித்தின் வார்த்தைகளும் ஆறுதலாய் இருக்கும். வலியை மறந்து சிரிக்கச்செய்யும். இப்படியே காலம் செல்ல தன்னை சுற்றி இருந்த நண்பர்களை விடவும் ஹர்ஷித் முக்கியமான நண்பன் என்று ஆனது. இதுவரை சந்திக்கவில்லை ஏன் தொலைபேசியில் கூட பேசிக்கொண்டது கிடையாது. இருவரிற்கும் தோன்றியதுமில்லை கேட்கவும் இல்லை; காரணம் இருவரிற்கும் கடிதங்களில் பேசிக்கொள்ள தான் பிடித்திருந்தது அதை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே இருந்தது.​

தேனீரை அருந்தி முடித்தவன் சமயலறையில் இருந்து வெளியே வர.. "ஹாய் அங்கிள்.." என்ற குரலில் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தான். அங்கு வாசலில் நின்றிருந்தது கவிதா தான். சஞ்சீவிற்கு அய்யோ என்றிருந்தது. இதற்குள் அறிவரசன் யார் என்று கண்ணாடியை சரி செய்து பார்க்க.. அதற்குள் அவளை அனுப்பி விடலாம் என பின்னால் இருந்து போ என்று கையால் சைகை செய்தான் அவன்.​

அவனது கையசைவை பார்த்த கவிதா.. " என்ன சஞ்சீவ்..காலைலயுமா நுளம்பு இருக்கு இங்க ? எங்க ஏரியால இருக்கும் சரி ஆனா இங்க ஏன் இருக்கு.. ஆனா இந்த நுளம்புன்னாலே எனக்கு பிடிக்காது அங்கிள்.. அப்படியே அடிக்கனும் போல இருக்கும்.. ஆனா பாவம் பாருங்க.. அதுக்கும் அம்மா அப்பா அக்கா அண்ணா தங்கச்சி தம்பி இருக்கும்.. எல்லாரும் பார்த்துட்டு இருப்பாங்க அப்படின்னா அப்படியே போ போ ன்னு நானும் சஞ்சீவ் மாதிரியே வெளில விரட்டிருவன்.." சஞ்சீவிடம் தொடங்கி அறிவரசனிடம் பேசி முடித்தவள் அவளே சிரித்தும் விட்டு.. புரியாது பார்த்துக்கொண்டிருந்த அறிவரசனிடம் மீண்டும்.. "உள்ள வரலாமா அங்கிள்.. ?" என்றாள்.​

"போச்சு எல்லாம் போச்சு.." என்றவண்ணம் சஞ்சீவ் மறுபக்கம் சட்டென திரும்பிட.. "ஆஹ் உள்ள வாம்மா.." என்றவண்ணம் அவளை உள்ளே அழைத்து விட்டு சஞ்சீவை திரும்பி பார்த்தார் அறிவரசன். இவனோ அவர் பார்வை உணர்ந்தும் அதே நிலையில் அவருக்கு முதுகு காட்டியே நின்றிருந்தான். மேலிருந்து வந்த தாமரையும் சந்தனாவும் யார் இது என்பது போல் அறிவரசனை பார்க்க அவர் மெதுவாய் கண்களாவே சஞ்சீவை காட்டி சிரித்தார்.​

"ஹாய் ஆன்ட்டி.. ஹே நீங்க சந்தனா தான.. ?"​

"ஆமா.." என்றாள் சந்தனா மெதுவாய்.​

"உங்க ட்ரெஸ் நான் போட்டுட்டேன் அதுனால அது வேணாம்.. நான் உங்களுக்கு என்கிட்ட இருந்த ஒரு புது ட்ரெஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்.." சந்தனாவிடம் கவிதா ஒரு பார்ஸலை நீட்ட.. சஞ்சீவோ இப்போது கைகளால் முகத்தை மூடிக்கொண்டான்.​

"பிடிங்க சந்தனா.." என்று மீண்டும் இவள் நீட்ட..​

"என் ட்ரெஸ் எப்படி..?"​

"அது.. சஞ்சீவ் தான்.." கவிதா ஆரம்பிக்க.. "அய்யோ" என்று மனதால் பதறியவண்ணம் சட்டென நடுவில் வந்தவன்.. "இருங்க வந்திடுறேன்.." என்று பொதுவாய் அனைவரிடமும் கூறிக்கொண்டு கவிதாவை கைபற்றி.. "வா" என்று மேலே இழுத்துக்கொண்டு படியேறினான். "இது நல்லா இருக்கு.." என்று மனதால் எண்ணிக்கொண்டு.. "சந்தனா.. ஆன்டி.. அங்கிள்.. நான் தான் சஞ்சீவ கல்...." சத்தமிட்டுக்கொண்டே மேலே சென்றவள் முழுதாக கூறும் முன் அவளது வாயை கையால் மூடியிருந்தான் சஞ்சீவ்.​

கீழே இருந்தவர்களுக்கோ ஓரளவு என்ன என்பது புரிய.. சரியான ஆள் தான் சஞ்சீவிற்கு என்று சிரித்துக்கொண்டனர். அவனது வாழ்வில் இப்படி ஒன்று நடக்க வேண்டும் என்பது தானே அவர்களது ஆசையும். ஆனால் அவர்கள் நினைப்பது போல் மாறாக அவர்கள் அப்படி நினைத்திட கூடாது என்பது தான் இப்போது சஞ்சீவின் கவலையாக இருந்தது.​

"உன்ன யாரு இங்க வர சொன்னது.." சுள்ளென வந்து விழுந்தது வார்த்தைகள்.​

அவனது கையை எடுத்துவிட்டு.. "அப்படியே இந்த பக்கமா போனேன்.. வந்தேன்.. யாரு வர சொல்லனும்.. ?" கண்களை சுருக்கி கேட்டாள்.​

"நீ இங்க வர கூடாது.. மொதல்ல இங்க இருந்து போ.. ஈவ்னிங் வந்து பார்க்குறேன்.. வா " என்று அவளது கையை பிடித்து அழுத்தி இழுக்க.. "அவுச் சஞ்சீவ் கை.." என்று உறுவிக்கொண்டாள் கவிதா.​

அப்போதுதான் அவளது கையிலிருந்த காயம் நினைவில் வர.. "ஹே சாரி.. " என்றான் சஞ்சீவ் கவலையாய், இவளும் முகத்தை அழுவது போன்ற பாவனையோடு வைத்திருக்க.. "வலிக்கிதா ? இரு வாரேன்.." என்று அவன் அறைக்கு செல்ல.. இதுதானே வேண்டும் என்று அடுத்த நொடி அங்கிருந்து பறந்திருந்தாள் கவிதா. திரும்பி வந்தவனை பார்த்து வெற்றிடம் தான் பல்லைக்காட்டிக்கொண்டிருந்தது. என்ன சொல்வது என்ற யோசனையோடு இவன் படியிறங்க ஹாலில் அறிவரசன் வந்த சிரிப்பை விழுங்கிக்கொண்டு பேப்பரில் கண்ணை வைத்திருந்தார். சமயலறைக்குள் இவன் எட்டிப்பார்க்க அங்கு மேசையில் கவிதா அமர்ந்திருக்க தாமரையும் சந்தனாவும் கதை பேசிக்கொண்டிருந்தனர். இப்போதுதானே பார்த்தார்கள் என்று சந்தேகமாய் தான் இருந்தது அவனுக்கு. பிறகு விளக்கம் கூறிக்கொள்ளலாம் என்று ஆபிஸ் செல்ல தயாராக மேலே சென்றான் சஞ்சீவ்.​

வாய் ஓயாமல் கதை பேசும் கவிதாவை தாமரைக்கும் சந்தனாவிற்கும் மிகவுமே பிடித்திருந்தது. அதிலும் கல்யாணமே வேண்டாம் என்று நிற்கும் சஞ்சீவ்.. பெண்களை கண்டாலே அறுவருப்பான பார்வையை வீசும் சஞ்சீவ்.. இன்று கவிதாவிடம் பழகுகிறான் என்றால்.. அவளை ஏனையவர்களுக்கு பிடிக்காமல் இருக்காதே.. இதையே வெளிப்படையாகவே கவிதாவிடம் கூறினாள் சந்தனா.​

"ஆனா ஏன் சந்து அப்படி ?" ஆர்வமாய் கதை கேட்கும் பாவனையில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொண்டாள் கவிதா.​

"அது ஒரு கதை.. எங்க அண்ணா காலேஜ் படிக்கிறப்போ லவ் பன்னிச்சி.. ரொம்ப சீரியஸ் லவ்.. அவ பெயர் பாவனா.. அண்ணா அவங்க கேட்குறதை எல்லாம் பன்னி கொடுத்தான் அண்ணாக்கு பாவனான்னா ரொம்பவே பிடிக்கும்.. கார் கூட வாங்கி கொடுத்தான்..எங்க வீட்டுக்கு கூட வந்தா.. கல்யாணம் பிக்ஸ் பன்னிடலாம்னு பேசி டேட் பிக்ஸ் பன்னி அதுக்கான வேலை எல்லாம் நடந்துட்டு இருந்திச்சி.. ஒரு வாரத்துக்கு முன்ன அவங்க வீட்ல இருந்து கோல்.. பாவனாவ காணோம்னு.. அங்க போய் பார்த்தா அண்ணா வாங்கி கொடுத்த கார்ல இருந்து அவளோட பொருட்கள் எதுவுமே இல்ல.. எல்லாம் நல்லா ப்ளான் பன்னிருக்கா.. அப்புறம் தான் தெரியும் அண்ணாவ யூஸ் பன்னி அவளும் அவளோட லவ்வர் அவனும் அண்ணாவோட ப்ரன்ட் தான்.. ரன்னிங்.."​

"சந்து நீ கதை சொல்லுறது நல்லா இருக்கு தெரியுமா.. ஷார்ட்டா ஸ்வீட்டா சொல்லுற.." சம்மந்தமே இல்லாமல் கவிதா கூட தாமரை சிரித்தே விட்டார்.​

"ஏஹ் நான் எங்க அண்ணாவோட லவ் பெயிலியர் கதை சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா கதைன்னு சொல்லுற.. " சந்தனா சற்றே கோபம் போல் பேச..​

"சந்து சந்து கூல்.. நீயே சொல்ற லவ் பெயிலியர்னு அப்புறம் அந்த கதை எதுக்கு பீல் பன்னும்.. உங்க அண்ணாவ நான் நல்லாவே பார்த்துக்குற ஒரு பொண்ணு கிடைப்பாங்க பாரேன்.." கவிதா கூறவும்..​

"ஆமா கிடைச்சி கூட இருக்கலாம் இல்ல கவிதா.." என்று சந்தனா கண்ணடிக்க பேசாமல் சிரித்து வைத்தாள் அவள்.​

"இந்த சாப்பாட கொண்டு போய் சஞ்சீவ்கிட்ட கொடுத்துடும்மா.." தாமரை கையில் கொடுக்க.. ஓகே என்று அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து பறந்தாள் அவள்.​

அவள் போவதையே பார்த்திருந்த தாமரை.."சந்தனா உண்மையிலே சஞ்சீவ்க்கு ரொம்பவே கரக்ட் தான்.. அவன் பேசவே மாட்டான்.. இவ அவனுக்கும் சேர்த்தே பேசுவா போல.."​

"ஆமா சித்தி அதோட நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன் எங்க அந்த இனியாவ அண்ணா கூட்டிட்டு வந்து எப்போவாது மை வைப் அப்படின்னு இன்ரோ கொடுத்துருவானோன்னு.."​

என்றாள் ஒரு நிம்மதியோடு.​

மேலே சென்றவள் ஏதோ அவளது அறை போல் அனுமதியின்றியே திறந்து கொண்டு உள்ளே நுழையவும் சஞ்சீவ் முறைத்துக்கொண்டு கண்ணாடி முன் நின்றிருந்தான்.​

"அப்படி பார்க்குறப்போ நீ ரொம்ப அழகா இருக்க சஞ்சீவ்.." என்றவண்ணம் அருகே சென்றாள்.​

"என்னது நீயா ?? "​

"ஆமா நீதான்.. அதுல என்ன.. என்னைவிட ஜஸ்ட் வைப் இயர்ஸ் தானா நீ பெரியவ சொல்லு.." என்றவாரே அவனுக்கும் கண்ணாடிக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியையும் அடைத்துக்கொண்டு நிற்க.. சஞ்சீவிற்கு அவளது நெருக்கம் பேச்சையும் தடுமாற வைத்தது.​

"ஆமா..இ..ல்..ல ஹ்ம்.. ப்ரேக் பர்ஸ்ட கொண்டு வந்தா என்கிட்ட தரனும்.." என்று அவள் கையில் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு சட்டென விலகிச்சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான். கண்ணை மூடி ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் தன் காலை யாரோ பிடித்து இழுக்கவும் சட்டென கண்ணை திறந்தான்.​

கவிதா தான் கீழே அமர்ந்து இவனது கால்களுக்கு சாக்ஸ் போட்டுவிட்டுக்கொண்டிருந்தாள். இவளது செயல் சட்டென தன் தாயை கண் முன் காட்டியது. அவரும் இப்படி தான் செய்வார். இவன் தடுக்காமலிருக்கவும் இவளே போட்டு விட்டு எழுந்து.. "டன், சாப்பிடு சஞ்சீவ்.." என்று சாப்பாட்டையும் எடுத்து கொடுத்தாள். மனதில் ஆயிரம் குழப்பங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அப்போதைக்கு சாப்பிட்டு விட்டு அவளையும் அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுச்சென்றனர். அவனது குடும்பத்தினர்.. அடிக்கடி வர வேண்டும் என்ற அன்புக்கட்டளையும் விதிக்க சஞ்சீவ் தான் எதையும் தடுக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அப்போதைக்கு எதையும் பற்றி சிந்திக்காமல் இருந்தான்.​

இருவரும் காரில் அமர்ந்து சற்று தூரம் வந்தும் கவிதா என்றுமில்லாமல் அமைதியாய் வர.. "எங்க போகனும் ?" முதலில் சஞ்சீவ் கேட்டான்..​

"ரமண் அங்கிள் வீட்டுக்கு.." என்று விட்டு மீண்டும் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.​

எப்போதும் பேசிக்கொண்டே வருபவள் இன்று அமைதியாய் இருப்பது ஏதோ போல் இருக்க.. மீண்டும் எதாவது கேட்கலாம் என்பது போல் இவன் திரும்பவும் அவனது கார் முன்னே யாரோ குறுக்கே பாயவும் சரியாய் இருந்தது. திடீரென குறுக்கே பாய்ந்த நபரை மோதிவிடாமல் ஒருவாரு ப்ரேக் போட்டு திருப்பி நிறுத்தினான் சஞ்சீவ்.​

நிமிர்ந்து பார்க்க அங்கு நின்றிருந்தது அவனை ஒத்த வயதுடைய ஒரு ஆண். கோபமாய் இவன் காரிலிருந்து இறங்கபோக சட்டென அவன் கைபிடித்து நிறுத்தினாள் கவிதா. அதற்குள் கவிதா அமர்ந்திருந்த பக்கமாய் வந்த அவன்.. "ஏஹ்.. இறங்குடி கீழ.. " என்றான் கர்ஜனையாய்.​

மீண்டும் கோபமாய் சஞ்சீவ் கதவை திறக்க.. அவனை இழுத்த கவிதா.. "ப்ளீஸ் சஞ்சீவ் எது நடந்தாலும் நீங்க எதுவும் பேச வேண்டாம்.. ப்ராமிஸ் பன்னுங்க.." என்றும் அவன் பார்த்திராத பதட்டமும் பயமும் அவள் முகத்தில் மோதிட என்ன என்று புரியாவிட்டாலும் அவள் கேட்டதை மறுக்க அறியாத அவன் மனம்.. "ப்ராமிஸ்.." என்று உதிர்க்கச்செய்தது.​

 
Top