எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சராங்கே சந்தரவதனா - கதை திரி

Status
Not open for further replies.

NNO7

Moderator
(ஹாய் டியர்ஸ்! புது கதையுடன் வந்துவிட்டேன். கதையில் வரும் அனைத்துக் கதாப்பாத்திரங்களும், கதைக் கருவும் கற்பனையே யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட வில்லை. இந்தக்கதை முழுக்க என் சொந்தக் கற்பனையால் எழுதப்படுகிறது என்பதை உறுதியாக கூறுகின்றேன்)

சராங்கே சந்தரவதனா

அத்தியாயம் – 1

“நான் என் முடிவில் உறுதியா இருக்கேன். கண்டிப்பா டெல்லி போகத்தான் போறேன்” என்று கூண்டில் இருந்து வெளியே பறக்க இருக்கும் கிளியைப் போல் மிகவும் மகிழ்ச்சியாக தன் தோழிகளிடம் பேசிக்கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி சந்தரவதனா சுறுக்கமாக வதனா.

அவளைப் பார்த்து சுற்றி இருந்த அனைத்து தோழிகளும், அவள் சொல்வதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

உடனே முகத்தை சிறியதாக வைத்துக் கொண்ட வதனா, “இப்ப எதுக்காக இப்படி சிரிக்குறீங்க?. கேம்பஸ் இண்டர்விவ்ல முதல் ஆளா வந்துருக்கேன். நம்ம ஹச்ஓடி கூட என்னைக் கூப்பிட்டு பாராட்டுனார் தெரியுமா” என்று தன் சட்டையில் இல்லாத காலரை தூக்கிவிட்டாள்.

அதில் ஒரு தோழியோ, “எல்லாம் சரி தான். உன் பாசமான அண்ணனுங்க, பக்கத்தில் இருக்கும் ஊட்டிக்கே காலேஜ் டூர் விடலையாம், இதில் உன்னை டெல்லிக்கு, அதுவும் வேலைக்கு அனுப்பிட போறாங்களாக்கும்” என்று சொல்ல அவளுடன் சில தோழிகளும் இணைந்து கொண்டனர்.

அதில் வதனாவின் முகமே வாடிய கொத்தமல்லி தழை போல் மாறிவிட்டது. அதைத் தன் தோழிகள் பார்த்துவிடாமல் இருக்க, வேகமாக தன் முகத்தை மாற்றியவள், “அவங்களுக்கு என் மேல ரொம்ப பாசம். அதான் அப்படி. ஆனா நான் அடம்பிடிச்சி கேட்டா அவங்க இதுக்கு கண்டிப்பா சம்மதிப்பாங்க” என்று தீபஒளியைப் போல் பிரகாசித்தாள்.

“ஆனா உன்னைப் பார்த்தா எங்க எல்லாருக்கும் பொறாமையா இருக்கு வதனா. ஒன்னுக்கு ரெண்டு அண்ணன் உன்னை தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க. நீ வீட்டுக்குப் போக கொஞ்சம் தாமதம் ஆனாலும், குயின்ஸ் நகைமாளிகையே ஆடி தான் போகுது...” என்றாள் இன்னொரு தோழி சிரித்தபடி. அவளுடன் சேர்ந்து மற்றவளும், “ஆமாம் ஆமாம் நீ ரொம்ப லக்கி தான் வதனா. குயின்ஸ்சோட பெஸ்ட் கலெக்ஷன்ஸ்ல ஒன்னான மயில் வைர நெக்லஸ் என் ஒரே தங்கச்சிக்குன்னு உன் அண்ணன் கூட மீடியா முன்னாடி சொன்னாரே” என்று சிலாகித்துப் பேச, அதை எல்லாம் அமைதியாக இதழில் மென்மையான கசந்த நகையுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் சந்தரவதனா.

ஆனால் அவள் மனதிலோ பலவித யோசனைகள் ஓடிக்கொண்டு இருந்தது. பார்வையில் படுவது எல்லாம் உண்மையாகாது என்ற வாசகம் வதனாவின் தோழிகளுக்கு தெரியவில்லை. அதனால் தான் வதனாவின் உதடு கசப்பைக் கலந்து சிரித்தது.

ஒடிசலான தேகம், மயில் போன்று நடையில் நிமிர்வு, பார்ப்பவரைக் கட்டி இழுக்கும் அப்பாவியான முகம், கதை பேசும் பெரிய கண்கள், செண்பகப்பூ போன்ற மூக்கு, வண்ணம் பூசாத செர்ரி நிற உதடு என அழகின் பிறப்பிடமாய் மின்னினாள் வதனா.

சந்தம் என்ற சொல், ஒலியின் வண்ணம், அழகு என்ற பொருளை தாங்கி வருகிறது அதனைத் தன் பெயரின் முற்பாதியாக கொண்ட சந்தரவதனா, பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். அனைவரிடமும் அன்பாக நட்பு பாராட்டுபவள். வகுப்பில் எப்போதும் முதல் மாணவி.

ஆனால் இதெல்லாம் கல்லூரியில் மட்டுமே, வீட்டில் வதனா இருக்கும் நிலையோ வேறு. காயத்தின் மீது கற்கள் மட்டும் அல்ல அழகான பூக்கள் விழுந்தாலும் வலிக்கவே செய்யும்.

அவளைக் கூப்பிட மகிழுந்து வந்ததும், அதில் ஏறிய வதனா, ஜன்னலில் தன் தலையை சாய்த்து தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

‘இறுதியா என்னோட இத்தனை வருஷ பிரார்த்தனையை கடவுள் கேட்டுட்டார்’ என்று அவளுள் பெருமூச்சு ஒன்று எழுந்தது. அதே கடவுளிடம் தான் பலமுறை, “இப்படி இருக்கத்தான் என்னை படைச்சியா? பேசாம என் உயிரை எடுத்துக்கொள்” என்று வேண்டி இருந்தாள்.

சுலபமாக தங்கக்கூண்டில் இருந்து தப்பிவிடலாம் என்ற ஆசை நிறைவேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கண்களை மெதுவாகத் திறந்து ஜன்னல் வழியாக கடந்து போகும் மரங்களைப் பார்த்தாள், தன் வீட்டில் இதற்கு ஒத்துக்கொள்வார்களா என்ற எண்ணம் எல்லாம் அவளுள் எழவில்லை மாறாக, ‘நானே அவர்களுக்கு சுமை தானே! அதனால் இதை நான் சொன்னதும், சந்தோஷமாக அனைவரும் ஏற்றுக்கொள்வர்’ என்று நினைத்துக்கொண்டாள்.

“பெரிய அண்ணன் எங்க இருப்பாரு தாத்தா” என்று வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த முதியவரிடம் கேட்டாள் வதனா.

“பெரியவர் நம்ம மெயின் பிராஞ்ச்சில் தான் இருப்பாரு அம்மா” என்றார் வண்டியை ஓட்டிக்கொண்டே,

“அப்ப நேர அங்கயே போங்க தாத்தா” என்றாள் வதனா. அவள் கட்டளையை ஏற்று அவரும் நேராக அவர்கள் நகைமாளிகைக்கு வண்டியை செலுத்தினார்.

குயின்ஸ் நகைமாளிகை என்று பொன் எழுத்துக்களுடன், வைரமாக ஒளியும் மின்ன, ஐந்து அடுக்குகள் கொண்ட, அந்த பெரிய வளாகத்தின் உள்ளே நுழைந்தது வதனா அமர்ந்திருக்கும் மகிழுந்து.

தங்க நகைகள் மட்டும் இல்லாது ஒரு மாடியில் வைரம், இன்னொன்றில் முத்துக்கள், என வெள்ளி, பிளாட்டினம் என முறையே இருந்ததது. முதல் மாடியில் வைரநகைகள் பிரிவில், உள்ள ஒரு அறையில் அமர்ந்து மடிக்கணினியில் எதுவோ செய்துகொண்டிருந்தான் அஜய். வதனாவின் முதல் அண்ணன்.

அஜய்க்கும் வதனாவிற்கும் கிட்டத்தட்ட ஒரே முகஜாடை. கதவைத்தட்டி விட்டு அஜய்யின் முன்னால் வந்து நின்றாள் வதனா. அவள் முகத்தில் கேள்வியாக பார்வையை செலுத்திவிட்டு, திரும்பவும் தன் மடிக்கணினியை நோக்கி செலுத்தியவன், “காலேஜ் பீஸ் எல்லாம் கட்டியாச்சே!” அதான் உனக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டேனே பின் எதுக்காக இங்கே வந்தாய் என்பது போல் தான் இருந்தது அவனது பேச்சு.

மூச்சை ஆழமாக இழுத்து வெளியேவிட்டவள், “எனக்கு உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றதும், மடிகணினியைத் தட்டிக்கொண்டிருந்தவன் கை அப்படியே நின்றது. தன் கூரிய விழிகளை, வதனாவை நோக்கி வீசியவன், “இதை ஏற்கனவே நாம பேசிட்டோம்னு நினைக்குறேன். அதுக்கு நீயும் ஒத்துக்கிட்ட. குயின்ஸ்ல உனக்கு எந்தவித ஷேர்ஸ்சும் கிடையாது” என்றான் உறும்பளோடு.

“நானும் வேண்டாம்னு தான் சொல்றேன் அண்ணா. எனக்கு அது தேவை இல்ல” என்றாள் பிசிறாத குரலில்.

“பின்ன எதுக்கு இங்க வந்த?” என்றான் குரலில் சிடுசிடுப்புடன். வந்தவளை அமரக்கூட சொல்லவில்லை.

“நான் இதுக்கு மேலையும் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல...” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் கைகளை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவன், “ஏன் சாகப்போறியா?” என்று வார்த்தைகள் என்னும் அமிலத்தை அவள் மீது தெளித்தான்.

ஆனால் இதற்கு எல்லாம் சிறிதும் கலங்காத வதனா, “அப்படி எல்லாம் இல்லை அண்ணா” என்றாள் சாதரணமாக, முதல் தடவை என்றால் வருத்தம் இருக்கும், அவன் வாயில் இருந்து அவள் அடிக்கடி கேட்கும் சொல் தானே, அதனால் பெண்ணவள் அதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“பின்ன எதுக்காக இங்க வந்த?. இங்க எல்லாம் நீ வரக்கூடாதுன்னு உன்னை ஏற்கனவே சொன்னதா நியாபகம்” என்று கடினமான குரலில் பேசினான்.

முன்பு ஒருமுறை வதனா இங்கே வந்த பொழுது, அனைவரிடமும் சமமாய் பழகும் அவளின் மனது, நகைமாளிகையில் வேலை செய்யும் பணியாட்களைக் கவர்ந்தது. அவர்கள் தங்களுக்குள் வதனாவை வாழ்த்தி பேச, அது எப்படியோ அஜயின் காதில் வந்து விழுந்துவிட்டது. அதில் இருந்து அவள் நகைமாளிகைக்கு வரவே கூடாது என்று தடையும் போட்டான்.

“மன்னிச்சிடுங்க அண்ணா. இனி இந்த தவறு நடக்காது. நான் கேம்பஸ் இண்டர்விவ்ல செலக்ட் ஆகிருக்கேன். நான் இனி இங்க இருக்க மாட்டேன்” என்று தான் சொல்ல வந்ததை வேகமாக சொல்லிவிட்டு, அஜயின் முகத்தைப் பார்த்தாள்.

அஜயின் முகத்தில் யோசனை ரேகைகள். முன்பு அவன் மனைவி அமலா சொன்ன விஷயங்கள் அவன் முன்னால் வந்து நின்றது.

“வதனா படிப்பு முடியப்போகுது. அவளை என்ன பண்ணப்போறீங்க?” என்றாள் சுமையைத் தூக்கி தன் தோளில் வைத்திருப்பவள் போல.

“அவளுக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி, அப்பாக்கு நான் தந்த வாக்கை காப்பாத்தணும்” என்று கடமை உணர்ச்ச்சியுடன் பேசினான்.

அதற்கு முகத்தை சுழித்த அவனின் மனைவி, “குயின்ஸ்ல பாதி ஷேர்ஸ் அவளுக்கு இருக்கு. அது உங்க நியாபகத்தில் இருக்கு தானே! என்ன தான் அவளுக்கும் நகைக்கடைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நீங்க அவளிடம் தினமும் பத்து தடவை ஓதினாலும், பத்திரத்தில் இருப்பது தானே உண்மை” என்றாள்.

“இப்ப நீ என்ன தான் சொல்ல வர்ற?” என்று அவன் கேட்க.

“வதனாக்கு கல்யாணம் ஆனாத்தான் அவளால் ஷேர்ஸ்சை விற்க முடியும்னு, உங்க அம்மாவும் அப்பாவும் சேர்த்தே உயில் எழுதி வச்சிட்டு போயிருக்காங்க. உங்க அம்மாவோட மொத்த ஷேர்ஸ்சும் அவளுக்குத் தான் சொந்தம். அவளுக்கு திருமணம் செஞ்சா, அவளுக்கு வர்றவன் சும்மா இருக்க மாட்டான். குயின்ஸ்ல வந்து உரிமை கொண்டாடுன்னா என்ன பண்ணுவீங்க...” என்று அவள் சொல்லும் போதே அஜய்க்கு கோபம் வந்துவிட்டது.

“போதும் நிறுத்து. கண்டவன் எல்லாம் வந்து உரிமை கொண்டாட நான் ஒருநாளும் விடமாட்டேன்” என்றான் வீரஆவேசமாக.

“அதைத்தான் நானும் சொல்றேன்ங்க. அதுக்காக நாம தலையில் துண்டை போட்டுட்டுப் போக முடியாது. நான் சொல்றதைக் கேளுங்க. நாம சொல்ற பேச்சைக் கேட்டு நமக்கு அடிமை மாதிரி இருக்கும் ஒருத்தன் தான் வதனா கழுத்தில் தாலி கட்டணும். வதனா கடைசி வரையும் இந்த வீட்டில் தான் இருக்கணும் அது தான் நமக்கும் நாளைக்குப் பிறக்கப்போகும் நம் குழந்தைக்கும் நல்லது” என்று திட்டம் தீட்டினாள்.

அவளுக்கும் அஜய்க்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் குழந்தை இல்லை. இன்னும் உருவாகாத தன் பிள்ளைக்காக உயிர் உள்ள பெண்ணவளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் திட்டத்தை அருமையாக நடத்திக்கொண்டிருந்தாள் அமலா.

தன் மனைவி சொன்னதை யோசித்தவன், தன் முன்னே நின்றிருந்த வதனாவைப் பார்த்து, “உனக்கு கல்யாணம் செய்யலாம்னு ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு” என்றான் ஒற்றை வாக்கியமாய்.

“ஆனா அதுக்கு நான் சம்மதம் சொல்லவே இல்லையே அண்ணா” என்று முதன்முதலாக தன் வாழ்க்கைக்காக பேசினாள் வதனா.

கோபத்தில் இருக்கையில் இருந்து படாரென்று எழுந்த அஜய், “இப்படி எல்லாம் பேச யார்கிட்ட இருந்து கத்துக்கிட்ட?. சரியா பேசுறதா நினைப்பா உனக்கு?” என்று கண்மண் தெரியாமல் பேசினான்.

‘வதனா யோசிக்க ஆரம்பிச்சா நமக்கு நல்லது இல்ல’ என்று அவனது மனது எடுத்துரைக்க, சிறிது நிதானித்தவன், “சரி பார்க்கலாம். இப்ப வீட்டுக்குப் போ” என்றான் கட்டளையாக.

“நான் என் முடிவில் உறுதியா இருக்கேன் அண்ணா” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் வதனா.

தன் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்ட அஜய், வதனாவின் பெயரில் இருக்கும் பங்குகளை எவ்வாறு கைப்பற்றுவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
 
Last edited:

NNO7

Moderator
அத்தியாயம் – 2

“என்ன? இன்னைக்கு நம்ம கடைக்கு வந்திருந்தாளா?” என்று வதனாவின் வருகையை அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்தாள் அஜயின் மனைவி அமலா.

“ம்... வதனா ரொம்ப யோசிக்குறா” என்றான் தன் நாடியைத் தடவியபடி.

“ம்ச்... அவளை யோசிக்க விடுறது நல்லதுக்கு இல்லைன்னு நான் முன்னவே சொல்லி இருந்தேனேங்க. அவளை அவள் போக்கில் விட்டுப்பிடிப்போம்” என்று இன்னொரு திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.

“அதுக்காக அவளை வேலைக்கு அனுப்ப சொல்றியா?. இவ்வளவு நாள் நாம் சொல்றதைக் கேட்கும் கைப்பாவை போல இருந்தவள். வெளிய மட்டும் அவள் போயிட்டா, அவள் மூளை எப்படி வேணாலும் யோசிக்கும்” என்று சொல்லும் மடையனுக்குத் தெரியவில்லை, வதனா இவ்வளவு நாள் கட்டுப்பட்டிருந்தது அண்ணன் என்ற சொல்லால் மட்டுமே என்று.

“நான் அப்படி சொல்லலைங்க, நீங்க அவளிடம் அன்பா பேசுங்க. உனக்கு கல்யாணம் பண்றது தான் வதனா எனக்கு முக்கியம். உனக்கு கல்யாணம் ஆனதும் நீ என்னவேணாலும் செய்ன்னு சொல்லுங்க” என்று வேதம் ஓதினாள்.

“இதுக்கு அவள் ஒத்துப்பாளா?” என்று அவன் சந்தேகத்துடன் வினவ, “கண்டிப்பா ஒத்துப்பா, பாசத்துக்காக அவள் என்னவேணாலும் செய்வாள். அப்படி ஒத்துக்கவில்லைன்னா நான் பேச வேண்டிய விதத்தில் பேசுறேன்” என்றாள் விஷம புன்னகையுடன்.

எ.எஸ்.பி பாஸ்கர் – குமாரி தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் முதலாவது மகன் தான் அஜய் அவனின் மனைவி அமலா. சுயநலத்தின் மொத்த உருவமும் அஜய் தான். அவனைப் போலவே அவனுக்காகவே படைக்கப்பட்டவள் தான் அமலா.

மெகா சீரியலில் வருவது போல் கொடூரமான அண்ணி இல்லை அமலா. ஆனால் அன்பாக பேசி அதே நேரத்தில் விஷத்தைக் கக்கும் தந்திரவாதி. ஒருவரை அடித்து தான் காயப்படுத்த வேண்டும் என்பது இல்லை. சொற்களின் வீரியத்தால் கத்தி போல் குத்தி கிழிப்பதும் ஒரு வித கொடுமை தான்.

பக்கத்தில் இருந்தே பாந்தமாய் பேசி நஞ்சை விதைப்பவள் தான் அமலா. வதனா தன்னை இன்னும் அறியவில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாள் அமலா. ஆனால் இவர்கள் சுயரூபம் தெரிந்து தான், வதனா இவர்களை விட்டு தூரமாக செல்ல நினைக்கின்றாள் என்பது வேறு கதை.

இது தான் வதனாவின் மூத்த அண்ணன் குடும்பம்.

பாஸ்கர் – குமாரி தம்பதியின் இரண்டாவது மகன் தான் விஜய் அவனது மனைவி மகா.

“இன்னைக்கு வதனா, அண்ணனைப் பார்க்க மெயின் பிராஞ்ச் போய் இருக்கா” என்று அந்த பெரிய மாளிகையில் இன்னொரு அறையில் அமர்ந்தபடி தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான், வதனாவின் இரண்டாவது அண்ணன் விஜய்.

“உங்க அண்ணன் அதுக்கு ஒரு ஆட்டத்தைப் போட்டு இருப்பாரே” என்று சரியாக கணித்தாள் அவனது மனைவி மகா.

“ம்... ஆமாம் தலையை பிடிச்சிட்டே அவன் ரூமுக்குப் போனான். மேனேஜர் தான் என்கிட்ட சொன்னாரு” என்று தனக்குத் தெரிந்த விவரத்தைக் கூறினான்.

“சரி வக்கீலைப் பார்த்து பேசுனீங்களா? நமக்கு எவ்வளவு ஷேர்ஸ் வரும்?” என்று இப்போது கணக்குப் போட ஆரம்பித்தாள் மகா.

“அவர் எதுவும் சொல்ல மாட்டேங்கிறார் மகா. வதனா கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் எதுனாலும் சொல்லுவேன்னு சொல்லிட்டார்” என்றான் விஜய்.

“எனக்கு என்னமோ உங்க அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும்னு சந்தேகம் வருது” என்று மனதில் பட்டதைக் கூறினாள்.

“ஆனா எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது. நான் அடிச்சு சொல்லுவேன் அவனுக்கு இதைப் பத்தின விஷயம் தெரிஞ்சி இருக்கு. எங்க அண்ணன் ரொம்ப மோசமானவன்” என்று தன்னுடன் பிறந்தவனின் மனநிலைமையை நன்றாக ஆராய்ந்தவன் போல் கூறிக்கொண்டிருந்தான்.

“அமலா அக்கா கூட எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை. நமக்கு வரவேண்டிய பங்கு சரியா வரும் வரை” என்று சொன்ன மகா, தன் கணவனின் யோசனை முகத்தைப் பார்த்து, “என்னங்க யோசிக்குறீங்க?” என்று கேட்டாள்.

“அஜயும் வதனாவும் அப்படி என்ன பேசி இருப்பாங்கன்னு யோசிக்குறேன்” என்றான் அவளிடம்.

“ஒருவேள சொத்து சம்பந்தமா ஏதாவது இருக்குமோ?” என்று மகா கேட்க.

“அஜய் டென்ஷன் ஆகுறான்னா கண்டிப்பா குயின்ஸ் சம்பந்தப்பட்ட விஷயமாத் தான் இருக்கும்” என்ற விஜயின் மனதும் சுற்றி சுற்றி பங்கில் வந்தே நின்றது.

விஜயும் மகாவும் காதல் திருமணம் புரிந்தவர்கள். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது.

வதனாவின் மூத்த அண்ணன் அண்ணியைப் போல் இவர்கள் கிடையாது. அவளிடம் பாசமாகவும் பேசமாட்டார்கள், வன்மத்துடனும் பேச மாட்டார்கள். மாறாக வதனா என்ற ஒருத்தி இருப்பதாகவே கண்டுகொள்ளமாட்டார்கள்.

இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு பிறந்தவள் தான் சந்தரவதனா. அவளது தாய் குமாரி உயிருடன் இருக்கும் வரை இளவரசி போல் இந்த மாளிகையை வலம் வந்தவள், இன்றோ “சாப்டியா” என்று கூட கேட்க ஆள் இல்லாமல், அனாதை போல் இருக்கின்றாள்.

தன் பதினைந்து வயதில் திடீரென்று ஒருநாள் தாயை இழந்தாள். மாரடைப்பால் தன் உயிரை விட்டிருந்தார் குமாரி. அவர் இறந்த பிறகு பாஸ்கர் மிகவும் உடைந்து போனார். விளைவு நோய் வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகிப் போனார். அவரைத் தாயாகி பார்த்துக் கொண்டாள் வதனா.

அந்த சமயத்தில் தான் படிப்பு முடித்து வந்த அவளின் இரண்டாவது அண்ணன் நகைக்கடையின் பாதி பொறுப்பை ஏற்றான். அஜய் அதற்கு முன்பே அங்கு வேலை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

மூன்று வருடங்கள் படுக்கையில் கழித்த பின்பு தான் பாஸ்கர் தன் உயிரை நீத்தார். அதற்கு முன்பே தன் கடைசி ஆசையாக, மகனை திருமண கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டு, தன் நண்பனின் மகள் அமலாக்கு அவனை திருமணம் செய்து வைத்தார். அவர் செய்த பெரிய தவறே அது மட்டும் தான்.

சிறுவயதில் இருந்தே அம்மா மற்றும் அப்பாவின் கைக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவள் தான் வதனா. ஆனால் அஜயும் விஜயும் சிறு வயதில் இருந்தே ஹாஸ்டலில் தான் தங்கிப்படித்தனர். தொழில் வித்தைகள் அனைத்தையும் தன் மகன்களுக்குக் கற்றுக் கொடுத்த பாஸ்கர், அன்பை போதிக்க மறந்தார். விளைவு சகோதரர்களுக்குள் பாசம் பிணைப்பு அன்பு எதுவும் கிடையாது. அதே தான் அவர்களின் மனைவிகளுக்குள்ளும் இருந்தது. இதில் வசமாக சிக்கி, மன அழுத்தத்திற்கு உள்ளானது என்னவோ வதனா தான்.

அமலா உள்ளே நுழைந்ததில் இருந்து ஐந்து வருடங்களாக நரக வேதனையில் தான் இருக்கின்றாள் வதனா. தாய் தந்தையை இழந்த பெண்ணின் மனதை வந்த முதல் நாளே குத்திக்கிழித்தாள் அமலா.

“அண்ணி” என்று ஆசையாக அவளிடம் வந்த வதனாவைப் பார்த்து, முகத்தை சுழித்தவள் வார்த்தைகள் மட்டும் வேறு மாதிரியாக வந்தது.

“ஏன் என்னோட ரூமுக்கு எல்லாம் வர்ற வதனா?. இனி நீ உன் அறையில் மட்டும் தான் இருக்கணும். நீ நல்லா படிக்கணும் அதுக்காக மட்டும் தான் சொல்றேன். உன் படிப்பு தடை படக்கூடாது பாரு” என்று தேன் கலந்த சொற்களைப் பேசினாள்.

அவளின் சுயரூபம் தெரியாத வதனாவோ, எப்போதும் தன்னிடம் பேசாத அண்ணன்கள் மத்தியில் தன்னிடம் பேசுவதற்கும், தனக்காக யோசிப்பதற்கும் ஒரு உறவு வந்துவிட்டது என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அதிக சொத்துடன் பார்க்க அழகாகவும் வளமான வாழ்வு வாழும் அஜய் மட்டுமே அமலாவிற்கு தேவை. அவனுடன் இலவச இணைப்பாக வரும் அவனது தங்கையையும், அவள் தந்தையையும் அவள் சிறிதும் விரும்பவில்லை. அவள் உள்ளே வந்த ஒரு வாரத்திலையே பாஸ்கர் இறந்திருந்தார்.

இத்தனைக்கும் குயின்ஸ் நகைக்கடையை தனியாளாக உருவாக்கியவரே பாஸ்கர் தான். வசதியில் மிகவும் பின் தங்கி இருந்த, தன் நண்பனின் மகள், பொறுப்பாக குடுப்பத்தை நடத்துவாள் என்று தப்புக்கணக்குப் போட்டார்.

அவளோ நன்றாக பேசுவது போல் பேசி வதனாவை நன்றாக வேலை வாங்கினாள். ஒரு நாள் திடீரென்று வதனாவின் அறைக்குள் வந்தவள், அங்கே ஓடிக்கொண்டிருந்த ஏசியைப் பார்த்து, “இப்ப எதுக்கு உனக்கு ஏசி வதனா?. உன் அண்ணன் கஷ்டப்பட்டு சம்பாத்தியம் பண்றார். நானும் ஏசி இல்லாம தான் இருக்கேன். நாம் என்ன அவரை மாதிரி சம்பாத்தியமா பண்றோம். உனக்கு காலேஜ் பீசே ஏகப்பட்டது வருது. எந்த வீட்லையும் எந்த அண்ணனும் அவங்க தங்கச்சிக்கு இவ்வளவு பண்ணி, நான் பார்த்ததே இல்ல. நீ ரொம்ப கொடுத்து வைத்தவள் தான் வதனா” என்று பேசினாள்.

அவள் தேன் தடவிய பேச்சுக்குள், “நீ வெறும் தண்டச்சோறு தான் சாப்பிடுகின்றாய். இதெல்லாம் என் கணவனின் பணம்” என்ற அர்த்தம் பொதிந்து இருந்தது. அதில் “நாம்” என்ற வார்த்தையை மட்டும் சரியாக சேர்த்து பேசினாள்.

அமலாவின் பேச்சு பெண்ணவளுக்கு சாதாரணமாகத் தான் இருந்தது. பின் ஒவ்வொரு விஷயமும் வதனாவிடம் இருந்து பறிக்கப்படும் வரை.

கதை எழுதுவதில் ஆர்வம் மிகுந்த வதனாவை, “இதெல்லாம் எதுக்குப் பண்ற வதனா? உன் படிப்பைப் பார்” என்று சொல்லி பார்த்தாள்.

ஆனால் அவளோ, “இப்ப எனக்கு செமஸ்டர் லீவ் அண்ணி” என்று கூற, ‘இவள் காலம் முழுவதும் நமக்கு அடிமையாக மட்டும் தான் இருக்கணும், முன்னேறவே கூடாது’ என்று நினைத்த அமலா, “இது நல்ல பழக்கம் கிடையாது வதனா, உன் அம்மா உயிரோடு இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லி இருப்பாங்க” என்று மெதுவாக எது எதையோ சொல்லி அவளை எழுதவிடாமல் தடுத்தாள்.

“அவள் என்ன பண்ணா உனக்கு என்ன? அவளைக் கண்டுக்காத” என்று அஜய் சொல்ல, “அப்படி எல்லாம் சொல்லாதீங்க. இன்னைக்கு எழுதுற வதனா, நாளைக்கு உரிமை கேட்பா. எழுத்தாளர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் கிடையாது. இதை எல்லாம் முளையிலையே கிள்ளி எறியணும்” என்று துவேஷமாக பேசினாள்.

விளைவு கூண்டில் அடைந்த பறவை போல் அறைக்குள்ளே முடங்கி போனாள் வதனா. அவள் உள்ளே இருந்தாலும் அமலா அவளை கண்காணித்துக் கொண்டே தான் இருப்பாள். அவள் பாவப்பட்டு விட்டது என்னவோ வதனா படிக்கும் படிப்பை மட்டும் தான்.

அமலா திருமணமாகி வரும் போது வதனா முதல் வருட பொறியியல் படிப்பில் இருந்தாள். மனப்பாடம் செய்து எதையோ பரிச்சையில் எழுதுகின்றாள். இதனால் என்ன மாற்றம் வரப்போகின்றது என்று நினைத்துக் கொண்டாள் அமலா. அவளும் அவள் தோழிகளைப் பார்த்து இருக்கின்றாளே, அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள் இல்லை என்பது அவள் நினைப்பு. வதனாவை ஒடுக்கி வைக்கவே, அவள் பால்கனியில் நின்றால் கூட, “யார் கூட ஓடிப் போகலாம்னு பார்க்குற வதனா?” என்று நெருப்பை அள்ளி வீசிவிட்டு, “இந்த இடத்தில் உன் அம்மா இருந்தாலும் இப்படி தான் பேசி இருப்பாங்க. வயசு பொண்ணு நீ உன் மனசு அலைப்பாயும் வயசு. ஏதாவது ஒன்னு தப்பா நடந்தா எங்களுக்குத் தான் கெட்ட பெயர். உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று இறுதியாக கூறிய வார்த்தைகளில் அழுத்தத்தைக் கொடுத்தாள் அமலா.

சிலசமயம் இல்லை பலசமயங்களில் வதனாவிற்கு உண்ண உணவு கூட கிடைக்காது. விஜய் எதையும் கண்டுகொள்ள மாட்டான், அவன் சாப்பாடு எல்லாம் வெளியே தான். ஒரு நாள் இவள் தான் என் மனைவி என்று மகாவை அழைத்து வந்தான் விஜய்.

அமலாவிடம் அப்போது தான் பாடம் படித்திருந்த வதனா, தானாகவே மகாவிடம் இருந்து ஒதுங்கிக்கொண்டாள். அமலா, மகாவை போட்டியாகவெல்லாம் எண்ணவில்லை, “நான் நேர்வழியில் வந்தவள், நீயோ குறுக்கு வழியில் வந்தவள்” என்பதொரு பார்வை மட்டுமே இருக்கும்.

அமலாவின் குறிக்கோள் எல்லாம், தங்களுக்கு சேர வேண்டிய சொத்தைத் தவிர வதனாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களும் ஷேர்ஸ்களும் அவளது கைகளுக்கு வரவேண்டும். இதில் விஜயின் பங்கை எல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை.

****

மயில், தொகைகளை விரித்து அழகாக நடனம் ஆடுவதைப் போல இருந்த வைர நெக்லஸ்சை ஆசையாக தடவிப்பார்த்தவள், அதை எடுத்து தன் கழுத்தில் அணிந்து கொண்டாள். அவள் பெயர் ரத்னா.

மீடியாவின் முன் அஜய், “இதை என் ஒரே தங்கைக்கு பரிசளிக்கின்றேன்” என்று அவன் கூறிய அதே நெக்லஸ்.

பின் தன் கைப்பேசியை எடுத்த ரத்னா, “ஹலோ அஜய் அண்ணா. நான் இப்ப அங்க தான் வரேன்” என்று கூறிவிட்டு வைத்தாள்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 3

தன் மகிழுந்தை ஓட்டிக்கொண்டே தன்னுடைய இன்னொரு கையால், மயில் தோகையில் அழகாக தன் கழுத்தில் மின்னும் நெக்லசை அடிக்கடி தடவிக்கொண்டாள் ரத்னா. பின் தன் முன்னே இருந்த மகிழுந்தின் கண்ணாடியை சரி செய்தபடி, அதில் தன் முகத்தைப் பார்த்தவள், “எனக்காகவே செய்தது போல் இருக்கு இந்த நெக்லஸ்” என்று வாய்விட்டுக் கூறி சிலாகித்தாள்.

மாளிகை போல் அழகாக மின்னிக்கொண்டு இருந்த அந்த பெரிய வீட்டில் அவளது மகிழுந்து நுழைந்ததும், அவளை வரவேற்பதற்காகவே காத்திருந்தனர் அஜய் அமலா தம்பதியினர்.

தன் மகிழுந்தை விட்டுக் கீழே இறங்கிய ரத்னா, “அண்ணா” என்று ஆர்பரித்தபடி, ஓடி வந்து அஜயை அணைத்துக் கொண்டாள்.

செல்லமாக அவளின் தலையைத் தடவியவன், “நல்லா சாப்பிடுறது இல்லையா ரத்னா? இளைச்சுபோயிட்ட” என்று செல்லமாக கடிந்தான்.

அமலாவோ, “வீட்டுக்கு வான்னு கூப்பிட்டாத் தான் வருவியா ரத்னா? இது உன் வீடுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்” என்று சொல்ல, அவள் குரல் கேட்டு அமலாவை ஏறிட்டவள், “அண்ணி” என்று கூறியபடி அவளையும் அணைத்துக் கொண்டாள்.

“சரி சரி வாங்க உள்ள போகலாம்” என்று அஜய் கூற மூவரும் உள்ளே சென்றனர்.

அப்போது அங்கே வந்த விஜய் ரத்னாவைப் பார்த்து, “எப்படி இருக்க ரத்னா. பார்த்து ரொம்ப நாளாச்சு” என்று சம்பிராதாயத்திற்கு விசாரிக்க, “ஆமாம் விஜய் அண்ணா. ஒரு ப்ராஜெக்ட்ல ரொம்ப பிஸியா இருந்துட்டேன்” என்றாள்.

“ம்... நம்ம ரத்னாக்கு வேலை அதிகம் விஜய். இந்த சின்ன வயசிலையே தனியா பொட்டிக் ரன் பண்றது சாதாரண விஷயம் இல்லையே!” என்றான் அஜய்.

“ஐயோ அண்ணா இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம். உங்க பாசமும் அரவணைப்பும் இல்லைன்னா, இதெல்லாம் சாத்தியம் இல்ல” என்று சொல்லிக் கொண்டே போக, “சரி சாப்பிடலாம் வா” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அமலா.

இங்கே நடந்த கூத்தை எல்லாம் மேலே இருந்து பார்த்த மகா, ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு, அலைபேசி மூலம் தன் கணவனை அழைத்தாள்.

அவனோ தன் அலைபேசியைப் பார்த்தவன், “மகா எதுக்காக கூப்பிடுறா?” என்ற எண்ணத்துடன் தன் அறையை நோக்கி நடந்தான்.

“வெளியே போற நேரம் எதுக்காக கூப்பிட்ட மகா. ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று தன் மனைவிடம் விஜய் கேட்க, “ரத்னா எதுக்காக இங்க வந்துருக்கா? உங்க அண்ணனும் அண்ணியும் எதுக்காக அவளிடம் இப்படி குலையுறாங்க” என்றாள் சிடுசிடுப்புடன்.

இது எப்போதும் வீட்டில் நடக்கும் ஒன்று தான். தன் சொந்த தங்கையை விட விபத்தில் இறந்து போன தன் சித்தாப்பா சித்தியின் மகள் ரத்னாவின் மேல் அஜய்க்கு கொள்ளை பாசம். அமலாவும் ரத்னாவை தாங்கு தாங்கென்று தாங்குவாள்.

மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்தக்கூத்தில் மகாவிற்கு எரிச்சல் தான் வரும். மகாவைப் பொருத்தவரை, வதனா எப்படியோ அப்படியே தான் ரத்னாவும். பெரியதாக எதுவும் பேசிக்கொள்ள மாட்டாள். கண்டுகொள்ளவும் மாட்டாள்.

தன் மனைவியின் பேச்சில், “இது எப்போதும் நடக்குறது தானே மகா” என்று விஜய் சகஜமாக பேச.

“ம்ச்... நான் அதுக்காக சொல்லலை. ரத்னாவைப் போல தானே வதனாவும் அவளைப் பார்த்தா மட்டும் அவங்களுக்கு என்ன தான் ஆகுமோ” என்றாள். அவளுள்ளும் சிறிது ஈரம் இருந்திருக்கும் போல.

தன் மனைவியை வித்தியாசமாக பார்த்தவன், “உன் கருணைப் பார்வை வதனா மேல எப்ப இருந்து விழுந்தது?” என்றான் சிரிக்காமல்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல. நான் கொஞ்சம் சுயநலவாதி தான். புதுசா திருமணமாகி, அதுவும் காதல் திருமணம் பண்ணி வந்த இடத்தில் எப்படி இருக்கணுமோ அப்படி தான் இருக்கேன். அதுக்காக ராட்சஸி கிடையாது” என்றாள் முகத்தை தூக்கி வைத்தபடி.

அதற்கு சிரித்த விஜய், “சரி அப்படியே இருக்க வேண்டியது தானே! அவங்க வதனாவை எப்படி நடத்துனா உனக்கு என்ன?” என்றான்.

“அப்படி இல்லைங்க. ஏதோ தப்பா தெரியுது. சொந்த தங்கச்சிக்கிட்ட முகத்தைக் காட்டும் உங்க அண்ணன். சித்தாப்பா பெண்ணை தன் சொந்த தங்கச்சியா பார்க்குறாரு. அதை தான் கேட்குறேன்” என்றதும், விஜயின் முகம் இறுகியது.

உடனே அதை தன் மனைவிடம் இருந்து மறைக்கும் விதமாக, அவளுக்கு முதுகு காட்டி நின்றவன், “வதனாக்கு சொத்தில் பங்கு இருக்கு. ரத்னாவுக்கு இல்லையே. அதனால் கூட இருக்கலாம்” என்றான்.

“ம்... இருக்கலாம். ரத்னாக்கு சொத்தில் பங்கு கிடையாது. அவளுக்குன்னு எதுவும் செய்யணும்னு அவசியம் இல்ல. அவங்க அப்பாவே எல்லாத்தையும் செஞ்சி வச்சிட்டு தான் போயிருக்கார். ஆனா அந்த மயில் தொகை வைர நெக்லஸ்சை எதுக்காக ரத்னாவிடம் தூக்கி கொடுக்கணும்?” என்றாள் மகா.

“இது ஒரு வியாபார தந்திரம் மகா. செண்டிமெண்ட் டச் கொடுத்தாத்தான் ரீச் கிடைக்கும். சரி எனக்கு வேலை இருக்கு நான் வரேன்” என்று சொன்னவன், இதுக்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து என்பது போல் வேகமாக கீழே சென்றான்.

உணவு மேஜையில் அமர்ந்திருந்த ரத்னாவிற்கு உணவை பரிமாறிக்கொண்டிருந்த அமலா, “நீ பேசாம இங்கயே வந்துரு ரத்னா. எதுக்காக தனியா இருக்க” என்றாள்.

“எனக்கு என் பிளாட் தான் சரியா இருக்கும் அண்ணி. என்னோட பொட்டிக்கில் இருந்து பக்கமா வேற இருக்கு. அதான் உங்களைப் பார்க்க நான் வரேனே” என்றாள் சிரித்தபடி.

“யாரு? நீ மாசத்துக்கு ஒருக்க தான் இங்க வர்ற. சண்டே கூட விடாம வேலை பார்க்குற” என்று சலித்துக்கொண்டான் அஜய்.

“சரி அண்ணா. உங்களுக்காக வாரவாரம் இங்க வர முயற்சி செய்றேன்” என்று சொல்லி சிரித்தாள் ரத்னா.

கடுவான் பூனை போல் எப்போதும் முகத்தை வைத்திருக்கும் அமலா, ரத்னாவிடம் மட்டும் விழுந்து விழுந்து பேசுவதென்ன கவனிப்பதென்ன என்பது தான் மகாவின் யோசனையாக இருந்தது.

அனைத்திற்கும் காரணகாரியம் வைத்திருக்கும் அமலா, இதற்கு மட்டும் என்ன வைக்காமலா போவாள்.

ரத்னா சாதாரணப்பட்ட ஆள் கிடையாது. அவளது தந்தை கிரனைட் வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்தவர். அவரும் அவர் மனைவியும் ரத்னா கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். தன் படிப்பை முடித்த ரத்னா அந்தத் தொழிலில் விருப்பம் இல்லா காரணத்தால், தனக்கென்று தனியாக பொட்டிக் வைத்து நடத்துகின்றாள். இப்போது தன் தந்தையின் தொழிலை மேனேஜர் வைத்துப் பார்த்துக் கொள்கிறாள். அதில் மாத வருமானமே கோடிகளுக்கு மேல் செல்லும்.

இப்படிப்பட்ட மகாலட்சுமியை அமலா மெச்ச வில்லை என்றால் தான் ஆச்சரியம். தன் ஒரே தம்பியை ரத்னாவிற்கு மணமுடித்து வைக்க அவள் போடும் கணக்கு தான் இந்த உபசரிப்பு. இதைப் பற்றி மகாவிற்கு எதுவும் புரியவில்லை.

இவர்கள் விஷயத்தில் எப்போதும் தலையீடு காட்டாத கடுகு உள்ளம் கொண்டவள் மகா. தான் தன் கணவன் என்று தனக்குள் ஒரு வட்டத்தை அமைத்து வாழ்பவள். அதையும் மீறி அவளுள் சிறு ஆச்சரியம், ரத்னாவிற்கு தரும் வரவேற்பு வதனாவிற்கு இல்லை என்பது தான். விஜய் சொன்ன பதிலில் அவள் முழுவதுமாய் திருப்தி அடையவில்லை.

தன் கல்லூரிக்கு செல்வதற்காக வெளியே வந்த வதனா, கீழே ரத்னாவின் பேச்சு சத்தம் கேட்கவே சிறிது தயங்கி நின்றாள். பின் நேரமாவதை உணர்ந்தவள் வேகமாக கீழே இறங்கினாள். அப்போது தன் கையைக் கழுவ சென்ற ரத்னா, மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் வதனாவைக் கண்டு, ஆர்வமாக அவள் அருகில் சென்றாள்.

தன் முன்னே வந்த ரத்னாவைக் கண்டு தேங்கி நின்றவள், சிரிக்கவா வேண்டாமா என்பது போல் ரத்னாவை ஏறிட்டாள்.

மயில் தொகை நெக்லசை தடவியபடி வதனாவைப் பார்த்த ரத்னா, “அண்ணாக்கு என் மேல ரொம்ப பாசம்ல” என்றாள்.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டிக்கொண்ட வதனா, அங்கிருந்து செல்லப்பார்த்தாள், “கொஞ்சம் நில்லு வதனா” என்று சொல்லி அவள் முன்னே வந்து நின்ற ரத்னா, “காலம் எப்படி எல்லாம் மாறுது பார். அப்பா அம்மாவோட மகிழ்ச்சியா வாழ்ந்த நீ, இன்னைக்கு சொந்த வீட்டில் சாப்பிடாம வெளிய போற. ஆனா அப்பா அம்மா இருந்தும் பாசம் இல்லாம வளர்ந்த நான், இப்ப அண்ணா அண்ணின்னு சந்தோஷமா இருக்கேன்” என்றாள்.

“எது இந்த நெக்லசை அவன் கொடுத்ததாலையா?” என்பது போல் வதனாவின் பார்வை ரத்னாவின் கழுத்தைத் தொட்டு மீண்டது.

அதைப் புரிந்துகொண்டவளாக, “இது மட்டும் இல்ல. அவங்க என் மேல உயிரே வச்சிருக்காங்க. போன மாசம் எனக்கு உடம்பு சரியில்லாம போனதும், அண்ணி என் பிளாட்க்கு வந்து என்னை எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா” என்றாள்.

ரத்னாவின் பேச்சு எல்லாம், ‘உனக்கு கிடைக்காதது அனைத்தும் எனக்குக் கிடைக்கிறது’ என்பது போல் இருந்தது. தாயை இழந்தவனிடம் சென்று தாயின் அருமைகளைக் கூறுவது தவறு என்று சிலருக்குப் புரிவதில்லை. அதே போல் தான் ரத்னாவும் அவளுக்கு நன்றாக தெரியும், வதனா இங்கே வாழும் வாழ்வு. இருந்தும் அவள் மனதை வேதனைப்படும் படி பேசினாள்.

சிறுவயதில் இருந்தே ரத்னா இப்படித் தான். அதனால் வதனா இதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் அவளும் மனுஷி தானே! தான் பார்த்தாலே முகம் சுழிக்கும் தன் அண்ணன், ரத்னாவிடம் பாசத்தைப் பொழிவதைக் கண்டு பெண்ணவளுக்கு வலிக்கத் தான் செய்தது.

ரத்னாவைப் பார்த்தவள், “எனக்கு நேரமாச்சி அக்கா நான் போகணும்” என்று வெளியே சாதரணமாக கூறிவிட்டு, மனதில் பாரத்தை சுமந்தபடி அங்கிருந்து சென்றாள் வதனா.

ரத்னாவின் முகத்திலோ மகிழ்ச்சியின் சாயல். அப்போது அமலா கூப்பிட, “இதோ வரேன் அண்ணி” என்றாள்.

****

“உண்மையைச் சொல். எதிரி நிறுவனத்திற்கு ப்ராஜெக்ட்டை வித்தது நீ தானே!” என்று மூவர் சுற்றி நின்று, ஒருவனை துப்பாக்கியை அவன் தலையில் வைத்தபடி மிரட்டிக் கொண்டிருந்தனர்.

முகத்தில் மரணபீதி தெரிய, “நான் சொல்றதை நம்புங்க அது நான் இல்ல” என்று முன்பு சொல்லிய அதே பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தான் அந்த மனிதன். அப்போது திடீரென்று சத்தம் கேட்க, அங்கே இருந்த அனைவரும், “கிங் வந்துட்டாரு... கிங் வந்துட்டாரு...” என்க.

மரண பீதியில் நின்று கொண்டிருந்த அந்த மனிதனுக்கு அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு மயக்கம் வர ஆரம்பித்தது.

“கி...கிங்...” என்று பயத்தில் தன் எச்சிலை விழுங்க, அவன் எதிர்பார்ப்பதற்குள் அவன் தலையில் துப்பாக்கியை வைத்திருந்தான் கிங் என்று அனைவராலும் சொல்லப்பட்ட கிங் என்றவன்.

அவனைப் பார்த்ததும் நடுநடுங்கிப் போனவன், “நான்... நான் பிள்ளைக் குட்டிக்காரன் சார்” என்றான் திணறியபடி.

இதுவரை ‘அது தான் இல்லை’ என்றவன், தன் முன்னால் ஆறடி உருவத்தில் ஆளுமை தோற்றத்துடன் நின்ற ஆண்மகனைப் பார்த்து உண்மையைத் தன்னை அறியாமல் உளறினான்.

ஆனால் அதற்கு மனம் இறங்காத ஆறடி ஆண்மகன், “ப்ராஜெக்ட்டை விற்கும் போது, உன் பிள்ளை, ஏன் உன் கண்ணுக்குத் தெரியல” என்று கேட்டுக்கொண்டே துப்பாக்கியை அழுத்தி அவன் கதையை முடித்திருந்தான்.

அருகில் நின்ற தன் ஆட்களிடம், “டிஸ்போஸ் பண்ணிரு”என்று சொல்லும் போதே, ஒருவன் டிசு பேப்பரை அவனிடம் நீட்ட, அதில் தன் கையைத் துடைத்தவன், “நான் கேட்டது என்ன அச்சு?” என்றான்.

தன் காற்சட்டைப் பையில் இருந்து ஒரு பெண்ணின் படத்தை எடுத்த அவனின் ஆள், “இது தான் கிங், அந்தப் பொண்ணு” என்று சொல்லி வதனாவின் புகைப்படத்தை அவனிடம் நீட்டினான்.

அதனை வாங்கிப் பார்த்த, அந்த ஆடவனின் இதழ்கள் விரிந்தது. அது மகிழ்ச்சியில் விரிந்ததா அல்லது வன்மத்தில் விரிந்ததா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 4

கட்டுமானத்தொழிலில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கிங் என்ற பட்டப்பெயரைக் கொண்டவன் தான் இந்த குறளரசன். திருவள்ளுவரின் இன்னொரு பெயரை தன் பெயராகக் கொண்டவன். மன்னிப்பு என்ற சொல் அவனது அகராதியிலையே கிடையாது.

ஆறடியில் ஒல்லியான உடல்வாகு, பளிங்கு சிலை போன்ற தேகம் என பார்க்க சாக்லேட் பாய் தோற்றத்தில் இருந்தாலும், உள்ளே ரத்தத்திற்கும் சதைக்கும் பதில், இருப்பும், கல்லும் உள்ளது என்றால் அது மிகை அல்ல.

பார்த்ததுமே பெண்களைக் கவரும் தோற்றம். இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான கிங் கன்ஸ்ட்ரக்ஷனை ஒற்றை ஆளாக கட்டி ஆள்பவன். அவனிடம் பழக பல பெண்கள் போட்டி போட, தன் பார்வையாலையே அனைவரையும் தள்ளி வைப்பவன்.

தென் கொரிய தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்தவன். அதனால் தான் என்னவோ கிரேக்க சிலை போல் மின்னுகிறான்.

வதனாவின் புகைப்படத்தை தன் கையில் ஏந்திய குறளரசன், “ஜகியா(லவ்) நான் வந்துட்டே இருக்கேன்” என்றான் புன்னகை முகமாக, அதை அவன் சொல்லும் போதே அவன் நினைவு சிறிது பின்னோக்கி சென்றது.

பத்து வயதே இருக்கும் அழகிய பெண் குழந்தை ஒன்று, சிறிய வயது குறளரசனின் கையைப் பிடித்துக் கொண்டு, “என்னை விட்டு எங்கையும் போகமாட்டேன்னு சொல்லிட்டு, இப்ப என்னை விட்டுட்டுப் போற. போ... நான் உன்கூட பேசவே மாட்டேன்” என்று முகத்தைத் திருப்பியது.

அந்த குழந்தையின் தலையைத் தடவிய குறளரசன், “ஜகியா, நான் கூடிய சீக்கிரம் திரும்பி வந்து உன்னை என்னோடவே கூட்டிட்டுப் போவேன் சரியா. அதுவரை நீ சமத்தா இருக்கணும்” என்று சொல்ல, பொம்மை போல் அந்த குழந்தையும் தன் தலையை ஆட்டிக் கொண்டது.

இப்போது அதை நினைத்துப் பார்த்த குறள், “நான் திரும்பி வர ரொம்ப நேரம் எடுத்துட்டேன்னு நினைக்குறேன் ஜகியா... இதுக்கும் மேல அந்த நரகத்தில் உன்னை விட்டு வைக்கமாட்டேன்” என்றவன் கண்கள், செய்தித்தாளில், புதிய டிசைன் நெக்லஸ் ஒன்றை வெளியிட்டு அதில் சிரித்துக் கொண்டிருந்த அஜய் மீது வன்மமாகப் படிந்தது.

****

“நான் நேத்தே சொன்னேன் தானே அண்ணா” என்று அந்த வீட்டின் தோட்டத்தில், பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் அஜய் முன் நின்று பேசிக் கொண்டு இருந்தாள் வதனா.

“அதான் நேத்தே சொல்லிட்டேனே! உனக்கு திருமணம் முடிஞ்சதும் நீ எங்க வேணாலும் போ. இதுக்கு மேல பேசுறதுக்கு ஒன்னுமே இல்ல வதனா” என்று எரிச்சலுடன் பேசினான் அஜய்.

கூண்டுப் பறவை வெளியே சிறகடித்துப் பறக்க காத்துக் கொண்டிருப்பதைப் போல, புதிய உத்வேகத்துடன் அஜயை நோக்கியவள், “நான் டெல்லி போகப்போறேன்னு உங்கக் கிட்ட தகவல் தான் கொடுத்தேன் அண்ணா. அனுமதி கேட்கல” என்று தைரியமாக வதனா மொழிந்தாள்.

இது போன்ற எழுச்சியை அவளிடம் கண்டு அதிர்ச்சி அடைந்த அஜய், “ஓ... பீஸ் கட்ட மட்டும் இந்த அண்ணன் வேணும். படிச்சு முடிச்சு ஒரு வேலை கிடைச்சதும் நீ யாருடான்னு கேட்குற?” என்றான்.

“அப்படி நான் எதுவும் கேட்கல அண்ணா. ஆனா எப்போ கல்யணம் பண்ணனும்னு நான் தான் முடிவு பண்ணனும். அது தனி மனித சுதந்திரம். அதில் உங்க தலையீடு வேண்டாம்னு தான் சொல்றேன். அது போல டெல்லி போறதும் அப்படித்தான். உங்களால் என்னைத் தடுக்க முடியாது” என்று கூறி அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்தாள் வதனா.

இவர்களது சம்பாஷனைகள் அனைத்தையும் சிறிது தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அமலாவிற்கும் பேரதிர்ச்சி உண்டானது. வேகமாக அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்தவள், “என்ன பேச்சு பேசுற வதனா?. உன்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சி இந்த நிலைக்கு கொண்டு வந்த உன் அண்ணனைப் பார்த்து இப்படி பேச உனக்கு எப்படி தான் மனசு வந்துச்சுன்னு எனக்கும் தெரியல” என்று சோகமாக பேசி நடிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் வதனவோ, அவளின் நடிப்பை கண்டுகொண்டவள் போல, “நான் அப்படி என்ன பேசிட்டேன் அண்ணி?” என்றாள்.

“உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுக்கணும்னு உங்க அண்ணன் நாயா அலையுறாரு. ஆனா நீ ரொம்ப சுலபமா எங்களை விட்டுட்டுப் போறதுக்கு ப்ளான் பண்ற” என்று கூறி கண் கலங்கினாள்.

அஜயும், “உனக்காகத் தான் நாங்க இன்னும் குழந்தை கூட பெத்துக்காம இருக்கோம்” என்று அமலாவிற்கும் மேலே ஒரு படி தாண்டி சென்று பேசினான்.

அவனது அட்டகாசமான நடிப்பில், வதனா வீழ்ந்தாள். அஜயின் வலி மிகுந்த பேச்சில் தன்னிலை இழந்தவள் மனதில், ‘தனக்காக மற்றவரையும் தொல்லை செய்கின்றேனோ!’ என்ற எண்ணம் எழுந்தது.

‘தனக்காகத் தான் குழந்தை பிளானை தள்ளி வைத்திருக்கின்றனர்’ என்று நம்பிய வதனா, “நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் கேட்குறேன் அண்ணா. ஆனால் மாப்பிள்ளை எனக்கு பிடிச்சா மட்டும் தான் நான் இதுக்கு சம்மதம் சொல்வேன்” என்ற நிபந்தனையை மட்டும் வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

“நான் தான் சொன்னேன்ல பேச வேண்டிய விதத்தில் பேசினால் தான் காரியம் வெற்றி பெரும்“ என்று வதனா சென்ற திசையைப் பார்த்தபடி பேசினாள் அமலா.

“அதெல்லாம் இருக்கட்டும். இப்ப திடீர்னு மாப்பிள்ளையை எங்க இருந்து பார்க்குறது? அதுவும் இல்லாம மாப்பிளை எனக்கு பிடிச்சா, மட்டும் தான் கல்யணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போறா. நமக்கு பிடிச்ச மாப்பிளை இவளுக்கு எப்படி பிடிக்கும்” என்று தன் நாடியைத் தடவினான் அஜய்.

“இப்ப சம்மதிக்க வச்ச மாதிரி, அப்போதும் பேச வேண்டிய விதத்தில் பேசி சம்மதம் வாங்கிடலாம்ங்க” என்று யோசனை கொடுத்தாள் அமலா.

“சரி நாம் சொல்றதை எல்லாம் கேட்குற மாப்பிளைக்கு எங்க போறது” என்று அவன் தன் மனைவிடம் கேட்க, அமலா இதை ஏற்கனவே யோசித்து வைத்திருப்பாள் போல, அஜயின் காதில் ஏதோ கூற, அதைக் கேட்டவன், “இது சரியா வருமா அமலா?” என்றான்.

“கண்டிப்பா சரியா வரும். நான் அந்த மாப்பிள்ளையைப் பத்தி எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். எல்லாம் நமக்கு ஏத்தவன் தான்” என்றாள் புன்னகை முகமாக.

அதனைக் கேட்டுத் தானும் மகிழ்ந்த அஜய், “அப்ப நான் இப்பவே இதைப் பத்தி விஜய்கிட்ட பேசுறேன்” என்றான்.

“சரி நீங்க பேசுங்க நான் உள்ள போறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் அமலா.

கைப்பேசி மூலம் விஜயை அழைத்திருந்தான் அஜய். உடனே அவனும் தோட்டத்திற்கு வந்தான்.

“என்ன விஷயம் அண்ணா?” என்று விஜய் கேட்க.

அவனை சைகையால் கல் இருக்கையில் அமர சொன்ன அஜய், அவன் அமர்ந்ததும், “வதனாக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கேன் விஜய். பையன் ரொம்ப நல்லவன். எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டா நாம நிம்மதியா இருக்கலாம் பாரு. அதான் உன்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லலாம்னு உன்னைக் கூப்பிட்டேன்” என்று எடுத்ததும் மடமடவென்று பேசினான்.

“ம்.. அதவும் சரி தான் அண்ணா. ஆமாம் மாப்பிள்ளை யாரு? என்ன பண்றான்?” என்று விஜய் கேட்க.

“எல்லாம் நமக்கு தெரிஞ்சவன் தான்” என்றதும் விஜயின் முகம் யோசனைக்கு உண்டானது.

விஜயின் அமைதியைப் பார்த்து, “அதான் நம்மக்கிட்ட வேலை பார்க்குறானே மாரி அவன் தான் மாப்பிள்ளை” என்று கூற, விஜயின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

“என்னது அவனா? அவனுக்கு எத்தனை வயசாகுதுன்னு உனக்குத் தெரியுமா? அதுவும் இல்லாம அவன் நம்மக்கிட்ட கைக்கட்டி சம்பளம் வாங்கும் வேலைக்காரன்” என்று கொதித்தான்.

விஜயும் சுயநலவாதி தான் அதற்காக மனிதநேய மற்றவன் கிடையாது.

“ஹேய் அவன் ரொம்ப நல்லவன்டா. நாம சொல்றதைக் கேட்பான். வதனாவும் நல்லா இருப்பா. அதுவும் இல்லாம வீட்டோட மாப்பிள்ளையா இருக்க அவன் சம்மதிப்பான்” என்றான்.

“இப்ப எதுக்காக நீ வீட்டோட மாப்பிளை பார்க்குற?. வதனாவின் பாரம் நம்ம ரெண்டு பேருக்குமே இருக்கு. அதுக்காக இன்னொரு பாரத்தையும் நம்மாள சுமக்க முடியாது. அவளை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்கலாம். இல்லாட்டி ஏதாவது பிரச்சனை என்றால் நம்மிடம் தான் வந்து நிற்பாள்” என்றான் விஜய்.

விஜயின் எண்ணம் எல்லாம், நல்ல இடமாகப் பார்த்தால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். தங்களுக்கும் பிரச்சனை வராது. திருமணம் முடிந்ததும் அத்தோடு அவளைக் கைகழுவி விடுவதில் தான் விஜயின் எண்ணம் இருந்தது.

அவனின் தோளில் தன் கையைப் போட்டவன், “நகை இல்லாம வதனாவை கல்யாணம் பண்ணி, நாம் சொல்றதைக் கேட்டு மாரி நடப்பான் விஜய். அவனுக்கு அம்மாவும் அப்பாவும் கிடையாது” என்றான்.

இருக்கையில் இருந்து எழுந்த விஜய், “என்னது நகை இல்லாமலா? அம்மா வதனாக்கு வச்சிட்டுப் போன நகையே கோடி ரூபாய் பெரும் அதை எல்லாத்தையும் நீ ஆட்டைய போடலாம்னு பார்க்குறியா?” என்றான் கோபமாக.

“நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்ட விஜய். அவளோட உரிமை எல்லாம் அவளுக்குக் கிடைக்கும். இதை நான் சத்தியம் பண்ணி சொல்றேன். ஆனா அப்பா என்னை நம்பி தான் வதனாவை விட்டுட்டுப் போய் இருக்கார். அவள் நல்லதுக்காக வீட்டோட மாப்பிள்ளை பார்க்குறது தப்பில்லையே” என்றான் அஜய்.

மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விட்ட விஜய், “நீ என்ன நினைச்சு இந்த முடிவை எடுத்தன்னு தெரியல. ஆனா ஒன்னு சொல்றேன் கேளு, மாரிக்கும் வதனாக்கும் செட் ஆகாது. பெரிய குடும்பத்துப் பொண்ணு வதனா. ஆனா மாரி ரோட்டில் கிடப்பவன்” என்று அவனுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தான்.

“இதில் பணத்தைக் கொண்டு வராத விஜய். பணத்தைப் பார்க்காமல் மனசைப் பாரு” என்று வசனம் பேச.

“ம்ச்... நீ சொல்றது காதல் திருமணதிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனா அரேன்ஞ் மேரேஜ்க்கு இது சாத்தியமே இல்ல. ஒரு நல்ல குடும்பத்தில் வதனாவை திருமணம் செய்து வைத்தால், நாளை அவளுக்கும் பிரச்சனை இல்ல, நமக்கும் பிரச்சனை இல்ல. வீட்டோட மாப்பிள்ளை அது இதுன்னு சொன்னா உனக்குத் தான் பிரச்சனை. இதில் நான் தலையிட மாட்டேன்” என்றான் விஜய்.

“என்ன நடந்தாலும் வதனா என்னோட பொறுப்பு விஜய். உன் தலையில் அவள் பொறுப்பை கட்டமாட்டேன். ஆனா நான் முடிவு பண்ணிட்டேன். மாரி தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்று சொல்லிவிட்டு, அதோடு அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்தான்.
 
Status
Not open for further replies.
Top