எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆத்ம ராகமாய் ஒரு காதல் - கதைதிரி

Status
Not open for further replies.

Nandhaki

Moderator
அனைவக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
இதுவரை நான் முயற்சித்ததில் வித்தியாசமான ஒரு கதைக்களம்

கொஞ்சம் அமானுஷ்யம்
கொஞ்சம் கிரைம்
கொஞ்சம் வெறுப்பு
கொஞ்சம் விருப்பு
கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்

கதைக்குள் செல்வோம்
 

Nandhaki

Moderator


ஆத்ம(மா) ராகம் - 01உயிருக்கு போரடிக்கும் போது உடலை விட்டு வெளியே சென்று உலாத்தி விட்டு திரும்பி வரும் விந்தை அனுபவமே Out of Body Experience (OBE). சிலருக்கு இது கனவாக மட்டும் ஞாபகம் இருக்கும் சிலருக்கு அப்படி நடந்ததே நினைவில் இருக்காது. ஒரு பெண் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் பார்த்தாள் வீடு விற்பனைக்கு என்று என்னவாயிற்று....சில வருடங்களுக்கு முன்,


வெறிச்சேடியிருந்த அந்த மருத்துவமனை காரிடரில் நடந்து வந்து கொண்டிருந்தாள் அந்த சிறுமி ஒரு ஆறு வயது இருக்கும் போல் இருந்தது. முழங்கால் வரை நீண்டிருந்த கையில்லாதா சட்டை, காலில் சாக்ஸ் ஷூ, சுருண்ட கேசம் இடை வரை நீண்டு அதில் ஒரு பகுதி முன் பக்கமாக விழுந்திருக்க பெருவிரலை வாயில் வைத்து தன் முட்டை கண்களினால் சுற்றும் முற்றும் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தாள்.அருகே நின்ற பெண்மணியை பார்த்ததும் பெரு விரலை வாயில் வைத்தவாறே சிரித்தாள் ஓடி போய் அவர் தொடையில் தட்ட கை உள்ளே போய் வந்தது. காற்றில் துழாவுவதை போல் இருக்க கண்ணில் நீர் நிறைய திரும்பி பார்த்தாள் அவள் பின்னால் சற்று தூரத்தில் இருவர் அவளையே பார்த்தபடி நின்றனர். அவர்கள் கிட்டே நெருங்கி வரவும் இல்லை அதே அளவு தூரத்தில் பின் தொடர்ந்து கொண்டே இருந்தனர். ஏனோ அவர்களை அவளுக்கு பிடிக்கவில்லை ஆனால் அவளையே தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். எப்படி தப்பிப்பது எதுவும் புரியவில்லை அவள் பேசுவதும் இலகுவில் யாருக்கும் கேட்கவில்லை. அழுகையாய் வரும் போல் இருந்தது ஆனால் கண்ணீர் வரவில்லை. வாயில் விரலை வைத்தவாறே நிமிர்ந்து பார்த்தவள் பரிதாபமாய் அழைத்தாள் "அம்மா..."இப்போது


கிளாங்.....


கீழே உருண்டு கிடந்த பத்து போத்தல்களுடன் பதினோராவது போத்தலாக அதுவும் போய் சேர்ந்து கொண்டது. நிமிர்ந்து இருக்க முடியாத அளவுக்கு குடித்து விட்டு மேசையில் கவிழ்ந்தவாறே கையை மட்டும் உயர்த்தி "ஒன்.... ஹிக் மோர்...." என்று இன்னொரு பாட்டிலுக்கு ஆர்டர் கொடுத்தான் அவன்.


"நோ நோ நோமோர்" அவசரமாய் சொன்னாள் அவள். தலையை மட்டும் லேசாக நிமிர்த்தி பார்த்தவன் கண்களில் மங்கலாய் தண்ணீர் ஊடே பார்த்தது போல் அலம்பலாய் தெரிந்தது அவள் உருவம். அந்த பாருக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு தோற்றம். மெரூன் நிற தாவணி பாவாடையில், ஒற்றை பட்டையில் தாவணியை போட்டு விரிந்த கூந்தல் இடையை தாண்டி முழங்காலை தொடவா வேண்டாமா என்று நிற்க, மூக்கில் மின்னிய சிறு மூக்குத்தியுடன் சிறந்த சிற்பி அளவெடுத்து செய்து வைத்த சிலை போன்ற தேகம் என இருந்தவள் முட்டை கண்களால் முறைத்து தள்ளினாள்.


"ஹேய் ஸ்வீட்டி... ஹிக் இருபதாவது பாட்டிலுக்கு ஹிக்.. பிறஹிக்..தானே வருவா இப்பவே வந்து... ஹிக்..." விக்கல்களுக்கு நடுவே கேட்டவனை பார்த்து தன் பெரிய கண்ணை இன்னும் விரித்தாள்.


"இப்பதான் உன் கண்ணுக்கு தெரியுறானா மேன், ஏன் இப்படி குடிக்கிற"


அவளை பார்த்ததும் போதையேறிய அவன் கண்களில் ஒரு மின்னல் அவள் கையை பிடிக்கிறேன் என்று காற்றில் துழாவினான்.


"ஒன் மோர் ஹிக்..."


யாரும் கொண்டு வரவில்லை என்றதும் அதிகாரம் தூள் பறக்க சத்தமிட்டான் "வெயிட்டர்..... வெயிட்டர்" யாரும் வரவில்லை. "என்னடா இது ஒருத்தன் கூடவா இல்லை" எழுந்து நிதானமின்றி ஆடியவாறே சென்று பக்கத்து மேசையில் இருந்த போத்தலை எடுத்தவன் "ப்ரோ நீங்க ஆர்டர் பண்ணுங்க ப்ரோ நா..ஹிக் பே பண்றன் எனக்கு யாரும் தர மாட்டேங்கிறாங்க" பாவமாய் சொன்னான். தன்னிடமிருந்த மற்ற ஒன்றையும் எடுத்து அவனுக்கு கொடுத்தான் அந்த குடிகார பாரி.

போத்தலை திறந்து அப்படியே வாயில் சரிக்க போனவன் முன் "இதை குடித்து விட்டு அதை குடி" முன்னால் ஒரு அழகான கண்ணாடி போத்தலை வைத்தான் ஒருவன்.


சிறுவர்களின் வட்ட ரிங் போத்தலை போல் கண்ணாடி குடுவையின் கரையில் கல் வேலைப்பாடுடன் கருப்பும் கோல்டுமாய் இருந்த போத்தலை பார்த்தவன் அந்த போதையிலும் அதை அடையாளம் கண்டு சட்டென தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டான்.

"இல்லை ஹிக்... முடியாது" குழந்தையாய் மாறி மறுத்தான்.நெடுநெடுவென உயரத்துடன் அதற்கேற்ற உடல் கட்டுடன் நின்றவனை பாராட்டாய் பார்த்தாள் முன்னே இருந்த சிவப்பு தாவணி.


"போவோம் வா... ஹிக்" வெறும் இடத்தை பார்த்து கூறி போத்தலை வைத்தவனையும் வெறுமையான இடத்தையும் மாறிமாறி பார்த்தவன் "அவள் வருவாள் நீ வா" அழைத்தான். அவளோ அவன் பின்னால் நின்று தலையில் அடித்தாள் "நான் இங்க இருக்கின்றேன்".

"நீ.... எப்ப.... போ.... ஹிக்" போக்கேட்டினுள் எதையோ தேடினான்.


"என்ன தேடுகிறாய்?" கடுமையாக கேட்க "யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டி பார்க்கும் இல்லையா டேய்....மன்" நிமிர்ந்து பார்த்தவன் கண்ணில் போதையையும் மீறி இருந்த சோகம் யாரையும் கலங்க வைக்கும் போல் இருந்தது. அந்த டேமன் கண்களிலும் ஏதோ ஒரு சோகம்.கலங்கிய கண்களை அவனுக்கு காட்டாமல் இருக்க சட்டென முகத்தை மறுபுறம் திருப்பிய டேமன் நொடியில் தன்னை சமளித்து "இந்த போதையில் டிரைவ் பண்ணால் வீட்டிற்கு இல்லை நேரே பரலோகம் தான்... வா நானே ட்ரைவ் பண்ணுறேன்" சொன்னவனை பார்த்து விரக்தியாய் சிரித்தான் "அவள் எங்கே இருந்தாலும் உன்னை ஆட்டி வைக்கிறாள் இல்ல" வெறுப்புடன் கூறினான்.எந்த போதையாய் இருந்தாலும் அவள் சம்பந்தப்பட்டவை மட்டும் தெளிவாய் புரியும்.


அவனின் வெறுப்பின் போர்வையில் இருந்த காதலை புரிந்தவனாய் எதுவும் பேசாமல் அவன் கையை தன் தோளை சுற்றி போட்டு வெளியே கூட்டி சென்றவன் வாய் தன் பாட்டில் முணுமுணுத்தது "இவ்ளே லவ் பண்ணுறவன் அப்பவே சொல்லி தொலைச்சிருக்க வேண்டியது தானே"


***********


"என்னடா அஸ்வின் இவ்வளவு பெரிய வள்ளலா நீ... ரெண்டு போத்தலை தூக்கி கொடுத்திட்டா.." அந்த குடிகார பாரி அருகே இருந்த ஒருவன் கேட்க அவனும் ஐந்து போத்தலை உள்ளே இறக்கியும் நிதானத்தில் இருந்தவன் திருப்பி கேட்டான் "இப்ப போற இருவரும் யார் தெரியுமா?"இல்லை என்பது போல் தலையசைதான் மற்றவன்.


"வார்தா குரூப் ஒப் கம்பெனி தெரியுமா? அதோட ஷேர்மனும் சிஇஓவும்" கையிலிருந்த கிளாசை பார்த்தவாறே கூற கேள்வி கேட்டவன் ஸதம்பித்து போய் நின்றான்.


இந்தியாவை சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் தொழிலை ஆரம்பித்து ஏசியன் லெவலில் பெரிய அளவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனம்.


"இந்த பார் கூட அவர்களுடையது தான். அந்த டேபிளில் அவனை தவிர வேறு யாரும் கிட்டே கூட போக முடியாது" சொல்லி கொண்டிருக்கும் போதே ஒருவன் வந்து மேசையை சுத்தம் செய்து அதன் மேல் ரிசெர்வேட் என்று ஒரு போட்டையும் வைத்து சென்றான்."ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடக்கும் கூத்து தான்" என்ற அஸ்வின் தானும் வெளியே சென்றான்.

***********

சிவப்பு தாவணியுடன் அமர்ந்திருந்தவளுக்கு இரு ஆண்களும் கண் கலங்கியதை காணவும் ஏனென்றே தெரியாமல் தாங்க முடியாது வெளியே வந்துவிட்டாள். இருவரும் காரில் ஏறி செல்வதை பார்த்தபடி அருகே இருந்த மெட்டாலிக் சாம்பல் வண்ண காரின் மேல் கை வைத்தபடி சற்று தூரத்திலேயே நின்றும் விட்டாள்.


கார் ஓட தொடங்கி சற்று நேரம் மௌனமாய் இருந்தவன் தீடிரென கேட்டான் "உனக்கு தெரியுமால் இருக்காது... அவள் ஏதாவது பிளான் பண்ணி இருந்தாளா?" முன் இருக்கையில் அமர்ந்திருந்தவன் கையிலிருந்த அந்த குடுவை போன்ற போத்தலை வருடியவாறே கேட்டான்.


"பிளான் இருந்தது..." தயங்கியவன் மேலே சொன்னான் ".....ஆனால் இப்படி இல்லை..."


"என்ன விட்டு போறது தான் பிளான் இல்லையா?" கேட்டவனுக்கு டேமனிடம் மெளனம் மட்டுமே பதிலாய் இருந்தது. "நானே தான் காரணம் இல்லையா?" என்றவன் கோட்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அடுத்த போத்தலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்தான்.

"ஏய்... பார்த்து கவனம்" எச்சரித்த டேமன் அவனுக்கு புறையேரவே காரை நிறுத்தினான். சட்டென கதவை திறந்து இறங்கி புறையெரியதோடு சேர்த்து வயிற்றில் இருந்த அனைத்தையும் வெளியேற்றி சோர்ந்து போய் அப்படியே அந்த மேம்பாலத்தின் பக்க சுவற்றில் சாய்ந்து நின்றான். கீழே பார்க்க உள்ளங்கை ரேகை போல் குறுக்கும் நெடுக்குமாய் சென்ற ரோடுகள் அவன் கண்களில் தென்படவில்லை மாறாக ஒரு மலை பள்ளத்தாக்கும் அதில் நீட்டியிருந்த கல்லை பற்றி தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் அவனை நோக்கி கையை நீட்டுவது மட்டுமே தென்பட சிறிதும் யோசிக்காமல் அவளை காப்பற்றுகின்றேன் பேர்வழி என்று முன்னே சரிந்து நிலை தடுமாறி அப்படியே விழுந்தான்.


டேமன் காரை ஓரமாக நிறுத்தி தண்ணீர் போத்தலை எடுத்து வரும் சில நொடிகளில் அனைத்தும் நடந்திருக்க ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தவன் ஓடி வந்து எட்டிப் பார்க்க அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தான்.
தொங்கிக் கொண்டிருந்தவன் கையையும் அவள் நின்ற இடத்தையும் மாறிமாறிப் பார்த்தவன் நெற்றியில் அந்த மார்கழி இரவின் குளிரிலும் லேசாய் வியர்வை துளிகள்.

"ஜோ என்னடா பார்த்திட்டு இருக்க ஹெல்ப் பண்னு எருமை கனம் கனக்கிறான்." அதிர்ச்சியில் உறைந்திருந்தவனை கலைத்தாள் அந்த சிவப்பு தாவணி பெண்.


சட்டென சுதாரித்து அவன் கையை பிடித்து மேலே தூக்கினான். நெற்றி ஓரத்தில் அடிபட்டு காயத்திலிருந்து வழிந்த ரத்தம் பக்கவாட்டு முகத்தில் வாய்க்கால் கட்டி மெதுவாய் கீழிறங்கி கொண்டிருந்தது.அவனோ "விடு என்னை அவள காப்பத்தனும்... " விடுபட போராடினான். ஹிஸ்டிரியா வந்தவன் போல் திமிர அவனை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான் ஜோ.


சற்று பொறுத்து பார்த்த சிவப்பு தாவணி பெண் பொங்கி வந்த கோபத்துடன் அருகே வர எங்கிருந்தோ வந்த காற்று மூவரையும் புரட்டி போடும் போல் வீசவே சட்டென ஓடி போய் கார் பின் பக்க கதவைத் திறந்தாள். அவனை உள்ளே ஏற்ற வசதியாக. அவளை கண்டதும் நல்ல பிள்ளையாய் சொல் பேச்சுக் கேட்டான்.


மின்னல் விரைவில் அவனை அள்ளி உள்ளே போட்டவன் கதவை சாற்றும் முன் அவளும் அவசராமாய் உள்ளே சென்று அமர மறுபுறம் சென்று ஸ்டார்ட் செய்தவன் கைகளில் கார் பறந்தது.


கார் சைட் மிர்ரர் வழியே பார்க்க ஏதோ அசைவது போல் தோன்றியது. அவர்கள் அங்கிருந்து செல்வதற்காவே காத்திருந்தது போல திடிரென அடித்த காற்று கூட நின்றுவிட்டிருந்தது.

காரை ஓட்டியவாறே பின்னால் ரத்தம் வழிய அவள் மடியில் படுத்திருந்தவனை திரும்பி பார்த்தவன் நெற்றியோர வியர்வை காதருகே வாய்க்கால் கட்டி ஓடியது.***********

சற்று முன் அவர்கள் நின்ற அந்த மேம்பாலத்தின் மேல் தாடியும் அழுக்கு துணியுமாய் வந்த ஒரு கிழவன் கத்தினான் "அவளை காப்பாற்றுங்க.... அவளிடம் நிறைய நாள் இல்லை"

************

வீட்டிற்குள் அழைத்துச் செல்ல விழ பார்த்தவன் கையை பற்றி கொள்ள அவளையே வெறித்து பார்த்தான் ஜோ.


அறையில் மருத்துவர் அவனுக்கு கட்டு போட எதையோ தேடுவது போல் அந்த அறையையே சுற்றி வட்டமடித்தது ஜோவின் கண்கள்."என்ன தேடுகிறாய்?" இரு பெண் குரல்களும் ஒரே நேரத்தில் கேட்க "ஒன்றுமில்லை" என்று தலையசைத்தவன் பல்கணியை நோக்கி சென்றான்.


மருத்துவர் கட்டு போட்டு விட்டு அகல கட்டிலில் அமர்ந்தவர் "ஏன்டா.... இப்படி..." செல்லமாய் வளர்த்த செல்வ மகனின் நிலை பொறுக்காமல் புலம்பினார் அவன் தாய்


"இப்படி குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் ஆன்டி"


"ஏன்டா இப்படி குடிச்சு உன்னை நீயே அழிக்கிறாய்?" கேசத்தை கோதியவாறே கேட்கவே பாதி போதையிலும் பாதி மயக்கத்திலும் அவன் வாயில் இருந்து ஒரே ஒரு வார்த்தை வந்தது.


"யதி..."அவன் அந்த பெயரை கேட்டதும் முகத்தை சுருக்கியவளாய் பால்கனிக்கு சென்று புலம்பி தள்ளினாள் "ஏன் எங்களை பார்த்தால் பொண்ணு மாதிரி தெரியல யதி யதி என்று எப்ப பார்த்தாலும் யதி சொல்லி கொண்டு திரியுறான் க்கும்..." கழுத்தை வெட்டி திருப்பினாள். "பின்னாலயே சுத்துறன் இல்ல அதான் கண்ணுக்கே தெரியல" உதட்டை சுழித்து திரும்பியவள் அப்போது தான் கைகளில் முகம் புதைத்து அங்கே இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த ஜோவை பார்த்தாள்.அவன் தலையில் கைவைக்க மெதுவே நிமிர்ந்தவன் எங்கோ வெறித்து பார்த்தவாறு கேட்டான் "நீ இன்னும் போகலையா? இங்கே தான் இருக்கிறாயா?"கேட்குமா.....
 
Last edited:

Nandhaki

Moderator

ஆத்ம(மா) ராகம் - 02அந்த பெண் தன் கணவரிடம் அந்த வீட்டை பற்றிய விளம்பரத்தை காட்டி “இது தான் நான் தினமும் கனவில் ஊஞ்சலாடும் வீடு போய் பார்ப்போமா?” இருவரும் பார்க்க சென்றார்கள். அவளுக்கு வீட்டை சுற்றி காட்டிய வீட்டு சொந்தகாரர் அவர்கள் கேட்ட விலைக்கு கொடுத்துவிட்டார். உண்மை என்னவென்றால் அவர் வீட்டில் பேய் இருப்பதாக நம்பினார். ஒரு நாள் இரவில் ஊஞ்சலடுவதையும் பார்த்தார். அதில் என்ன ஆச்சரியம் என்றால்.....சில வருடங்களுக்கு முன்


அந்த குழந்தை என்ன முயன்றும் தாயை தொடக் கூட முடியவில்லை. குழந்தை கண்ணில் நீர் நிறைய பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த அறையின் முன்னே எரிந்து கொண்டிருந்த சிகப்பு மின்குமிழ் அனைய வெளியே கையுறையை கழட்டியபடி பச்சை உடையுடன் வந்த மருத்துவர் “இப்ப கொஞ்சம் ஹார்ட் பீட் பரவாயில்ல, எதற்கும் காலை வரை....” என்று பாதியில் விட்டவர் தோளில் தட்டி சென்றார்.“பாப்பா என்னோட வா” அந்த பெண்மணியின் அருகே கீழே பார்த்தவாறே அழைத்தார் அந்த மனிதர். அந்த பெண்மணியே இவர் யாரை அழைக்கின்றார் என்பது போல் அம்மனிதரை நிமிர்ந்து பார்த்தாள். ஒற்றை நாடி சரீரத்தில் காவி நிறத்தில் உடை கவனிப்பாரற்ற பரட்டை தலை, முகத்தில் நரைக்கவா வேண்டாமா என்ற போட்டியில் தாடியுடன் ஆண்டு கணக்கில் குளிக்காதது போல் ஒரு தோற்றம் ஆனாலும் அவர் மேனியிலிருந்து மெல்லிய நறுமணம்... வயதை கணிக்கவே முடியவில்லை.“யார் நீங்கள்? என்னால் எதாவது செய்ய முடியுமா?” அந்த பெண்மணியின் கேள்வியில் மெலிதாய் புன்னகைத்தவர் “இந்த பாப்பாவை என்னுடன் வரசொல்” என்றார்.

குனிந்து அவர் கைகாட்டிய இடத்தை பார்த்த பெண்மணிக்கு தூக்கிவாரிப் போட்டது.இன்று

“டேமன்...” அழைப்பில் அவன் உள்ளே செல்ல பல்கனி சுவற்றை பிடித்தவாறே அண்ணாந்து நட்சத்திரங்களை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.“ஏய் பட்டிகாடு... அழைப்பில் திரும்பியவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள் இத்தனை குடித்தும் எப்படி எழுந்து நிற்கின்றான். அவன் கைகளை நீட்ட ஓடி போய் அவன் கைகளில் அடைக்கலமானவள் ஏதோ சொல்ல போக முகத்தை நிமிர்த்தி முகம் முழுவதும் முத்தமிட்டான்.“யதின்....” அவனை தடுக்க ஒரு கணம் கண்ணை பார்த்தவன் “திரும்ப சொல்லு” விழிகளில் உணர்ச்சி கார்க்கால கடலாய் பொங்க கேட்டான்.“யதின்” அவள் உச்சரித்து முடித்த அவள் இதழ்களை அவன் இதழ்கள் மூடியது. மென்மையாக அவள் இதழ் வழி அமுதம் பருகியவன் கைகள் அவளை தன்னோடு இறுக்கி கொள்ள மூச்சுக்காக கூட நிறுத்தாமல் தொடர்ந்தான்.

*************

மணி பத்தை தாண்டியிருக்க மெல்லிய ஏசி காற்றில் சிகை அலைய முகத்தில் சிறு புன்னகையுடன் உறங்கியவனையே பார்த்திருந்தாள் அந்த சிவப்பு தாவணி. மெல்ல கதவை திறந்து கொண்டு அவன் தாயார் உள்ளே வர அவசரமாய் ஓடி ஒளிந்தாள். அவரோ உறங்கும் மகனையே ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார். கடந்த ஆறு மாதத்தில் அவன் உறங்குவதை பார்த்ததே இல்லை, குடித்தால் கூட உறக்கம் என்பது அந்த போதை தெளியும் வரைதான். அதுவும் முகத்தில் இருக்கும் அந்த மெல்லிய புன்னகை.கட்டிலில் அமர்ந்து அவன் நெற்றி வருடி கேசம் கோத “அம்மா” என்று புரண்டு படுத்தான். அவர் கண்களில் நீரே வந்துவிட்டது. யார் இப்படி நெற்றியில் கைவைத்தாலும் யதி என்ற கூவலுடன் எழுந்துவிடுவான் ஆறு மாதத்திற்கு பின் இன்றுதான் அம்மாவையே இனம் கண்டிருக்கின்றான். அவன் உறக்கத்தை கலைக்க மனமின்றி சென்றுவிட்டார்.மேலும் அரைமணி நேரம் கடக்க பத்தாவது முறையாக அடித்த தொலைபேசி ஓசையில் புரண்டு படுத்தவன் தொடர்ந்து அடிக்கவும் “ம்பச்” என்றவாறு எடுத்து பதிலளித்தான். “ஹலோ..” மறுபுறம் டேமனின் குரல் ஒலிக்க சட்டென எழுந்து அமர்ந்தவன் “சொல்லுடா ஏதாவது செய்தி...”“இல்லை அதில்லை முதலில் நீ கீழே வா”“ஒ...” பெரும் ஏமாற்றமாய் ஒலித்தது அவன் குரல் “சரி வரேன்” கண்களை மூடியவனுக்கு கனவில் அவளை முத்தமிட்டது நினைவில் வர உதட்டில் புன்னகையும் கண்களில் நீரும் சேர்ந்தே வந்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் மரண வலியுடன் அவளுக்காக ஏங்குவதை எப்படி அவளிடம் சொல்வான்.தினமும் நரகம்...உறக்கத்தில் வரும் கனவிற்காகவே உறங்குவான்.என்றாவது ஒருநாள்....கனவுகள் நனவாகுமா...இனி நடக்குமா....மீண்டும் ஒரே ஒருதரம் அவளை பார்க்க முடியமா....அவளைப் பார்த்து ஒரே ஒரு தரம் தன் மனதை கூற முடிந்தால் அதைவிட உலகத்தையே தாரை வார்த்தாலும் அவனுக்கு வேண்டாம். ஆனால் முடியாதே.... அவள் தான் இல்லையே.... தினமும் நரகம்....இறுக கண் மூடி உணர்வுகளை கட்டுப்படுத்தி அந்த நாளை ஆரம்பிக்க எழுந்தவன் காதில் இனிய கீதமாய் கேட்டது அவள் குரல்.“சரியான தூங்கு மூஞ்சி..” நெற்றியில் விழுந்திருந்த சிகை துள்ளி விழ திரும்பி பார்த்தவன் கண்கள் விரிய அப்படியே பார்த்திருந்தான் “ஆளும் தாடியும் மூஞ்சியும் ஒவ்வொரு நாளும் காகம் கரையிற மாதிரியே கரையுரன் காதில ஏறுதா பார்” திட்டியவாறே அவன் கர்போட்டை திறந்து அன்று போடுவதற்கு தேவையான ஆடைகைளை எடுத்து வைத்து கொண்டிருந்தாள். அவனோ அசைய மறந்திருந்தான். “இன்று என்ன கலர், அந்த வெள்ளைகாரனோட மீட்டிங் வேற இருக்குல்ல ஹ்ம்ம் மரூன் ரெட் கலர் நல்ல இருக்கும்” அவன் ஆடைகளை கொணர்ந்து கட்டிலின் மேல் வைத்தவளையே விழி வாங்காது பார்த்திருக்க இடுப்பில் கைவைத்தவள் முக்கை சுழித்து முறைத்தாள் “என்ன மேன் குளிக்கிற யோசனையே இல்லையா? அந்த குடி குடிச்ச இப்படி தான் நாறும்” மீண்டும் முக்கை சுளிக்க அவளையே பார்த்தவாறு எழுந்து வாஷ் ரூம் சென்றான்.“அப்படியே அந்த தாடியையும் எடுத்திரு மேன்” கதவை பூட்டியவனுக்கு சத்தம் கேட்க புன்னகையுடன் ஷேவிங் மிசினை கையில் எடுத்தான்.தலை முழுகி டவல் மட்டும் இடையில் அணிந்து வந்தவன் அவள் எடுத்து வைத்த ஆடைகளை அணிந்து தயாரானவன் கண்ணாடியை பார்க்க கிட்டத்தட்ட ஆறு மாததிற்கு முன் உள்ள யதின் தெரிந்தான். கேசம் மட்டும் காடாய் தென்பட்டது ‘போகும் போது சாலுன் போக வேண்டும்’ தனக்குள் எண்ணி கொண்டவன் சுற்றும் முற்றும் யாரையோ தேடினான்.

வெள்ளி சதங்கையாய் சிரிக்கும் சத்தம் பல்கனியில் இருந்து வரவே அங்கே எட்டி பார்த்தான். பல்கனி ஊஞ்சலில் அமர்ந்து ஆடியவாறே அவன் நாய் பைரவுடன் கையாட்டி விளையாடி கொண்டிருந்தாள் அவள். மார்புக்கு குறுக்கே கைகட்டி வாசலில் சாய்ந்து நின்று சிறிது நேரம் அவளையே பார்த்தவன் முகம் லேசாய் வெளுக்க அவளை விளையாட விட்டு கீழே இறங்கி சென்றான்.

கீழே ஆறேழு வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருக்க அவர்களை லட்சியம் செய்யாமல் மாடிப்படிகளில் கடகடவென இறங்கியவனை பார்த்த அனைவருக்கும் திடிரென ஆறு மாத காலம் முன் சென்று விட்ட உணர்வு. அனைவருமே அவரவர் வேலையை விட்டு அவனை பார்த்தது பார்த்தபடி உறைந்து போய் நின்றார்கள்.

“நான் உங்களிடம் சொல்லி கொண்டே இருகின்றேன் எங்கே வேடிக்கை” கோபத்துடன் கேட்டவாறே வந்தவள் மாடிப்படியின் முடிவில் நின்றவனை பார்த்ததும் “அண்ணா...” என்ற கூவலுடன் ஓடி சென்று கட்டி கொண்டாள். ஒருதரம் தூக்கி சுற்றி நிறுத்தியவன் “ஷ்.... பார்கவி அழ கூடாது ஹ்ம்ம்” தங்கையை சமாதானம் செய்தான். சட்டென அவனிடமிருந்து பிரிந்தவள் “அண்ணி எங்கே மேலேயா?” செல்ல போனவளை பிடித்து நிறுத்தினான் டேமன்.“அவள் இங்கில்லை இப்போது அண்ணனை கவனி”“பின் எப்படி அண்ணா....” குழப்பமான முகத்துடன் இருவரையும் பார்த்தவளுக்கு டேமனின் கண்கள் என்ன செய்தி சொன்னதோ “அண்ணா வாண்ணா சாப்பிடலாம்” கண்ணில் பனி படலத்துடன் கை பிடித்து அழைத்து சென்றாள். பார்கவியின் கண்கள் அண்ணனையே அளவேடுத்தது. ஆறு மாதமாய் மழிக்கத முகமும் பரட்டை தலையுமாய் இருந்தவன் சவரம் செய்து திருத்தமாய் தலைவாரியிருந்தான். மரூன் ரெட் ஷிர்டின் மேல் கபிலம் கலந்த பிளேசர் அணிந்து அதே நிறத்தில் பண்ட் இடது கையில் வாட்ச் மறு கையில் பஞ்ச லோக காப்பு என பழைய மாதிரி வந்த அண்ணனை பார்க்க அவளுக்கு தெவிட்டவில்லை. கண்களில் நீருடன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.டேமனோ உண்ணும் அவனையே ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான். நேற்று நடந்த விபத்தில் எதாவது அம்னிசியாவா? இல்லை நேற்று நான் பார்த்தது உண்மையா? யோசனையுடன் அவன் பார்வை மாடிப் பக்கம் அடிக்கடி பாய்ந்தது.அவன் பார்வையை ஓர கண்ணால் கவனித்து கொண்டே இருந்தவன் “என்ன டேமன் என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்றாயே”“உனக்கு ஏதும்....” தயக்கத்துடன் இழுத்தான் டேமன்.உதட்டுக்குள் கசப்பாய் சிரித்தவன் அவன் கூறியதையே திரும்பி படித்தான் “எனக்கு ஏதும்.. என்ன”டேமன் சந்தேகமாய் பார்க்க “எதுவும் மறக்கவில்லை” வறண்ட குரலில் அவன் சந்தேகத்தை நிவர்த்தி செய்த யதின் எழுந்து கைகழுவ சென்றவாறே “ஏதோ சொல்ல வேண்டும் என்றாயே” விசாரித்தான்.அவன் பின்னால் சென்ற டேமன் மாடியை பார்த்தவாறே “உனக்கு சில உண்மைகளை சொல்ல வேண்டும்”ஒரு கணம் அசைவின்றி நின்றவன் “எனக்கும் தான் சில உண்மைகள் தெரியனும்” வறட்சியாய் புன்னகைத்தான் “இங்கே வேண்டாம் கம்பனி கெஸ்ட் ஹவுஸ் போவோம் வா” என்றான் கழுவிய கையை துடைத்தவாறே

“இந்த வீடியோக்களை பார்” என்றவன் சில வீடியோக்களை காட்டினான். அதை பார்த்தவன் முகம் இறுக உணர்ச்சியற்று வெறித்து பார்த்தவாறே இருந்தான். நீண்ட நேரத்தின் பின் கரகரத்த குரலில் கேட்டான் “அப்படியானால் அவள்....
 

Nandhaki

Moderator

ஆத்ம(மா) ராகம் - 03


அந்த வீட்டில் இரவில் பேய் போல் உஞ்சலடியது அந்த பெண்மணிதான். உண்மையில் அந்த பெண்மணி கண்டது கனவில்லை. ஒவ்வொரு நாள் இரவும் உறங்கும் போது அவர் உயிர் உடலை விட்டு வெளிவந்து அந்த வீட்டில் உலவி திரிந்தது. இதனை ஆங்கிலத்தில் OBE என சுருக்கமாக அழைப்பார்கள். அதன் விரிவாக்கம் Out of Body Experience. இது அனைவருக்கும் நிகழுமா...? எப்போது நிகழக்கூடும் இதை மையாமாக வைத்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டார்கள். நிறைய புத்தகங்களும் உள்ளது.பல வருடங்களுக்கு முன்


அவர் கைகாட்டிய இடம் வெறுமையாக இருந்தது.

அதற்குள் அங்கே வந்த ஒரு தாதி “நீ இங்கே என்ன செய்கிறாய்? போய் அங்கே இருந்து தனியாக பேசு” அதட்டலாய் கூற “உனக்கு ஒன்றை பார்க்க திறமை இல்லை என்றால் அது பொய்யா?” அலட்சியமாய் கேட்டவர் மீண்டும் அந்த பெண்மணியிடம் திரும்பி “உம் சொல்லமா.. நீ சொன்னால் தான் பாப்பா வருவாள்” ஊக்கினார்.

அந்த தாதி “அம்மா சும்மாவாது சொல்லிவிடுங்கள் இல்லை கிழம் அசையாது. கொஞ்சம் அப்செட் கேஸ், ஒன்றுமில்லை தனியாக இருந்து இப்படிதான் பேசி கொண்டிருப்பார் சிலவேளை பயங்கரமா பேச்சு விழும். அவர் சொல்வது போல் செய்துவிட்டால் போயிருவார்” திரும்பி அவர் கண்களை பார்த்தாள் அந்த பெண்மணி. இதை விட தீர்க்கமான தெளிவான கண்களை அவர் வாணாளில் பார்த்ததில்லை. அவர் பார்வையில் மெதுவே அவர் மனதிலும் அமைதி பரவுவதை உணர்ந்தவர் அவரை அறியாமலே “பாப்பா போம்மா” என்றார்.அந்த குழந்தையின் கையை பிடித்து அழைத்து சென்றவர் திரும்பி நின்று ஓரிடத்தையே வெறித்து பார்க்க தொடங்கினார்.இன்று

வர்தா கொம்பனி கெஸ்ட் ஹவுஸ்...

டேமன் கொடுத்த வீடியோக்களை பார்த்தவன் முகம் களையிழந்து இருந்தது. “இந்த வீடியோக்களையும் பார்” என்றவன் இன்னும் சில வீடியோக்களை காட்டினான். அதை பார்த்தவன் முகம் இறுக உணர்ச்சியற்று வெறித்து பார்த்தவாறே இருந்தான். நீண்ட நேரத்தின் பின் கரகரத்த குரலில் கேட்டான் “அப்படியானால் அவள்....” அவனால் முழுதாக முடிக்க கூட முடியவில்லை.இரு கையாளும் முகத்தை அழுத்தி தேய்த்தவன் மீண்டும் கேட்டான் “உனக்கு எப்படி தெரியும்” பதிலாய் எதுவும் சொல்லமால் அழுத்தமாய் பார்த்த டேமன் அவன் கையை பிடித்து முழுக்கை சட்டையின் கையை முட்டி வரை ஏற்றி விட்டு மணிக்கட்டை கண்ணால் காட்டினான். நேற்று விழும் போது தூக்கி விட்ட வலது கை மணிக்கட்டு யாரோ அழுத்தமாய் பிடித்தது போல் விரல் தடத்துடன் சிவந்திருந்தது.“அது மட்டுமில்லை...” சில கணம் இடைவெளி விட்டவன் “நேற்று காரில் பார்த்தேன். நானே பார்த்தேன்” அவன் பதிலில் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்தான் யதின். அவனுக்கு இன்று காலை ஊஞ்சலில் அவளை பார்த்த போதே ஓரளவு புரிந்துவிட்டது.“நீ அவள் மடியில் தலை வைத்து படுத்திருந்தாய் யதின்” அதிர்ந்து போய் பார்ப்பான் என்று நினைத்தால், மெல்ல மேலும் கீழுமாய் தலையட்டியவன் கண்களில் நீர் படலத்துடன் திரும்பினான். அவன் கண்களில் பட்டது ஓடிக் கொண்டிருந்த வீடியோவும் அதில் போகும் காரை பார்த்து ஏதோ கத்தி கொண்டிருந்த அந்த பெரியவரும்.“இந்த பெரியவர்...” வீடியோவை இடையில் நிறுத்தி வைத்து சுட்டி காட்டியவன் “இந்த பெரியவரை பார்க்கணும். எங்கே இருப்பார் உனக்கு தெரியுமா?”“இல்ல தெரியல” தலையாட்டியவன் கண் சுருக்கி கேட்டான் “ஏன்..”“இவர் என்னிடம் என்னவோ சொல்ல முயற்சிக்கின்றார். நிறைய தரம். இந்த ஆறு மாதத்தில் நிறைய இடத்தில் பார்த்தேன்” யதின் யோசனையுடன் கூறினான். “பாஸ்” என்றவாறு உள்ளே வந்தான் ஆனந்த், யதினின் டிரைவர், செக்யூரிட்டி பிஏ ஆல் இன் ஆல் ஆனந்த். “பாஸ் ஹேர் ஸ்டைலர் வந்தாச்சு” யதின் பதிலின்றி இருக்க டேமனே பதிலளித்தான் “அவர் வேலையை செய்ய சொல்லு”“வேண்டாம்” யதின் மறுக்க “உளறாதே இப்படியே விட்டால் காட்டுவாசி போல் மாறிவிடுவாய்” ஆனந்துக்கு கண்ணை காட்டினான். அவர் தன் வேலையை பார்க்க யதினோ ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.“என்ன யோசனை” டேமன் கேட்க “இல்லை இந்த பெரியவரை பார்த்து இருக்கிறேன் எங்கே... அது தான் ஞாபகம் வருதில்ல” நெற்றி பொட்டை தேய்த்துவிட்டவன் வாய்க்குள் முணுமுணுத்தான் “அவளுடன் தான் அதில் சந்தேகமில்லை, ஆனால் எங்கே” தீவிரமாய் மூளையின் நினைவடுக்குகளை கிளறினான். ஹேர் ஸ்டைலிஸ்ட் தன் வேலையை முடித்து எப்போதோ சென்றிருக்க சற்று குனிந்து மேலுதட்டில் கை வைத்து கை முட்டியை முழங்காலில் ஊன்றி இருந்தவனை இருவருமே வைத்த கண் வாங்காது பார்த்தார்கள்.

இருந்த விதத்திலேயே என்ன ஒரு கம்பீரமும் ஆளுமையும் இவனை இப்படி பார்த்து எத்தனை மாதங்கள்.அவனின் போன் ஆனந்தின் போன் என இரண்டும் சத்தமிட அதை கூட உணராமல் நெற்றி சுருக்கி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். “DP வர்தா காலனி வர சொல்லுங்க” ஆனந்த் யாருடனோ போனில் பேச சட்டென துள்ளி எழுந்து “அங்கேதான்” என்றான்.இருவரும் குழப்பத்துடன் பார்க்க “அந்த பெரியவரை அங்கே தான் பார்த்தேன். சீக்கிரம் வா” வேகமாக சென்று காரில் ஏறினான். அவர்கள் கம்பனியில் வேலை செய்யும் ஆட்களுக்காக என்று குறைந்த செலவில் வீடு கட்டி கொடுத்த இடம். கிட்டதட்ட அவர்கள் கம்பனியில் வேலை செய்யும் முக்கியமான அனைவரும் அங்கே இருக்கின்றார்கள். ஒரு முறை அவளுடன் சென்றிருந்த போது அங்கிருந்த கோவிலில் சந்தித்தான்.காரை அரை வட்டமடித்து நிறுத்தியவன் ஷூவை கழட்டி எறிந்துவிட்டு கோவிலினுள் சென்று வழமையாக அந்த பெரியவர் இருக்கும் இடத்தை தேடியவன் கண்களில் பட்டார் அவர். கோவில் மதிலில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தார். அருகே சென்று அவர் முன்னால் மண்டியிட்டான் யதின்.அவனை தொடர்ந்து உள்ளே வந்த டேமனுக்கும் ஆனந்துக்கும் ஒரு கணம் கண்முன் நடப்பதை நம்பவே முடியவில்லை “இந்த யதிந்திரவர்தன் யாரிடமும் அடி பணிய முடியாது என்று சொல். அது கடவுளவே இருந்தாலும் சரி” என சிங்கமாய் கர்ஜித்த யதின் கண் முன்னே வந்து போக அருகே செல்ல முயன்று பின் அசையாமல் நின்றார்கள்.அந்த பெரியவர் கண்ணை திறந்ததும் அல்லாமால் கையை உயர்த்தி அவர்களையும் தடுத்து நிறுத்திவிட்டிருந்தார். மேலுக்கு சாதரணாமாய் அழுக்காய் காவி நிறத்தில் ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்திருந்த அவர் கண்களின் தீட்சண்யம் யாரையும் அடிபணிய வைக்கும் போல் இருந்தது. தன் முன்னே மண்டியிட்டவனை பார்த்தவர் “நீ ரொம்ப தாமதமாய் வந்திருக்கிறாய்” மீண்டும் கண்மூடி சாய்ந்தவர் கேட்டார் “எப்படி தெரியும்? எப்போது தெரியும்?”மெல்ல கண்மூடி தலை குனிந்தவன் கண்களில் இருந்து இரு துளி நீர் அவர் காலடியில் விழ கண் திறந்து பார்த்துவிட்டு சிரித்தார். அவன் நெற்றி பொட்டில் பெரு விரலால் சிறிது நேரம் அழுத்தி விட்டு “உனக்கு சில ஞாபகங்கள் கனவாய் வரும். ஒரு நாள் கழித்து மீண்டும் இங்கே வா” என்றவரிடம் எதுவும் பேசமால் தலையாட்டி விடைபெற்று திரும்பியவனிடம் “வரும் போது தனியாக வராதே” அவன் அதிர்ந்து நின்று திரும்பி பார்க்க அவர் விழிகளில் ஆயிரம் அர்த்தங்கள். அவன் விழி விரித்து பார்க்க “ஹஹஹாஹ்” என்று முத்து பட துறவி ரஜனி ரேஞ்சில் சிரித்தார்.தன் உடலே தனக்கு பாரம் என்பது போல் வெளியேறி காரை நோக்கி நடந்தான் யதின்.டேமன் ஆனந்த் இருவரும் வர, டேமனின் தோளில் கைவைத்து “அடுத்த மூன்று நாளும் கம்பனியை நீயே பார்த்து கொள்” என்றவன் முன் இருக்கையில் அமர ஆனந்த் காரை எடுத்தான்.சோர்ந்திருந்த பாஸ் முகத்தை பார்த்த ஆனந்துக்கு சகிக்கவே முடியவில்லை. ஆனால் அவனால் என்ன செய்ய முடியும். எதுவும் பேசாமல் கார் ஓட்டும் வேலையை மட்டும் பார்த்தான். அவனுக்கு யதினை இன்று நேற்றா தெரியும். அவன் தெருவில் நின்ற போதிருந்து அவனுடன் இருக்கின்றான். கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்ட போது கூட இப்படி சோர்ந்து ஒரு நாள் கூட பார்த்ததில்லை.சுற்றிலும் மௌனமாய் இருக்க மனதின் அடி ஆழத்தில் புதைந்து கிடந்த ஏதேதோ நினைவுகள் சத்தமாய் வெளிவரத் துடிக்க இரு வேறுபட்ட சூழ்நிலைகளை தாங்க முடியாது ரேடியோவை தட்டி விட்ட யதின் “கடற்கரைக்கு விடு” என்றான். அவன் மனநிலையை பிரதிபலிப்பது போலவே பாடல் ஒலித்தது. பாடலை மனதில் வாங்கியபடி தலையை பின்னால் சாய்த்து அமர்ந்தான்.காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்…

உன்னை அன்றி யாரை தேடும்…

விலகி போகாதே தொலைந்து போவேனே…

நான் நான் நான்…உயிரின் உயிரே உயிரின் உயிரே…

நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…

ஈர அலைகள் நீரை வாரி…

முகத்தில் இறைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

இரவின் போர்வை என்னை சூழ்ந்து…

மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து…

விடியலை தேடினேன்…

உன்னிடம் வா பெண்ணே…பாதமெங்கும் சாவின் ரணங்கள்…

நரகமாகும் காதல் கணங்கள்…

ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே…

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்…

தவணை முறையில் மரணம் நிகழும்…

அருகில் வாராயோ விரல்கள் தாராயோ… நீ நீ நீ…
பாடல் முடிந்து கடற்கரை வரும் வரை அமைதி கலையவில்லை. அவன் மூளைக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலையலையாய் எழ தலை தெறிப்பது போல் வலிக்கவே ஏதோ ஞாபகங்கள் வெளிவர துடித்து கொண்டிருக்க எதுவும் பேசவும் முடியவில்லை. கார் நின்றது கூட தெரியாமல் கண்மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தவனை மெல்ல அழைத்தான் ஆனந்த் “பாஸ்”“ஆஹ்..” அவன் அழைப்பில் கலைந்தவன் ஆனந்த் காரை நிறுத்தியிருந்த இடத்தை பார்த்து கசப்பாய் புன்னகைத்தான். நீலாங்கரையில் உள்ளே விலாவின் முன்னுள்ள கடற்கரை. எதுவும் பேசாமல் இறங்கி கடற்கரை மணலில் அடிக்கும் வெயிலை கூட உணராமல் கண்மூடி சரிந்தவன் மனதில் இத்தனை நாள் எங்கோ ஒதுங்கியிருந்த நினைவுகள் குமிழியிட சூரியன் அஸ்தமிக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகரவில்லை.இருட்டவே நேரே வீட்டிற்கு சென்றவன் அவளை தேடி வேகமாக அவன் அறைக்கு சென்றான். அறைக்குள் இல்லை என்றதும் பல்கனியை எட்டி பார்த்தான் அங்கும் இல்லை. கீழே தோட்டத்தை துலாவ அங்கும் இல்லை. “எங்கே போனாள்” உதடு முணுமுணுக்க கீழே இறங்கிச் சென்றான். டையை தளர்த்தி சேர்டின் மேல் பட்டன்களை கழட்டியவாறே வீடு முழுவதும் தேடிவிட்டான் எங்கும் இல்லை.“ஏதாவது வேண்டுமா அண்ணா?” அவன் தங்கை பார்கவி தான் கேட்டாள். அண்ணன் தள்ளாடாமல் வீட்டிற்கு வந்ததே பெரிதாய் இருக்க சோர்ந்திருந்த அவன் முகத்தையே பார்த்திருந்தாள். அவனுக்கு புரிந்தது தன் சோகத்தில் மூழ்கி கூட இருந்தவர்களை வருத்தபடுத்திவிட்டான். ஆனால் அவனும் தான் என்ன செய்வான். அவன் மனமே அவன் வசமில்லாத போது எதைப் பற்றி தான் யோசிப்பான். அவள் தலையில் கை வைத்து சிரித்து சமாளித்தவனுக்கு ஏதோ தோன்ற தோட்டத்தை தாண்டி இருந்த சிறு குளத்தினை நோக்கி சென்றான்.அவன் எதிர் பார்த்தது போல் அங்கே தான் இருந்தாள். அங்கே இருக்கும் சிறு குளத்தில் இரண்டு ஜோடி அன்னங்கள் இருக்கின்றன ஒன்று அவனுடையது மற்றது...பெருமூச்சு விட்டவன் கண்கள் அவளை சல்லடை போட்டது. அந்த அன்னங்களின் அருகே தானும் ஒரு அன்னமாய் முழங்காலை கட்டிக் கொண்டு கன்னத்தை கால் முட்டியில் பதித்து அமர்ந்திருந்தாள்.

அவனை கண்டதும் ஓடி வந்த அன்னங்களை அணைத்துக் கொண்டவன் அவளருகில் ஒரு கால் மடித்து பின்னால் கையூன்றி அண்ணாந்து பார்த்தவாறு அமர்ந்தான். ஒன்று அவன் கழுத்தோடு தன் கழுத்தை வைத்து தேய்த்தது. இன்னொன்று மடியில் தலை வைத்து அவனிடம் தன் அன்பை வெளிப்படுத்தியது. அவற்றை தடவி கொடுத்தவாறே சுற்றிப் பார்த்தவனுக்கு அனைவரும் தன்னையே கவனிப்பது புரிய குனிந்து உதட்டுக்குள் கூறினான் “மேலே அறைக்கு வா”சட்டென தூக்கிவாரி போட நிமிர்ந்தாள். அவனை பார்த்தவள் அழுகையில் உதடு பிதுங்க “சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனாய்? உன்னை எங்கே எல்லாம் தேடுவது? போடா என்னுடன் பேசாதே போ” சில கணங்கள் கண்ணிமை வெட்டாது அவளின் கோபத்தை வேடிக்கை பார்த்தவன் “சரி இனிமேல் சொல்லாமல் போகவில்லை மேலே வா” என்றவன் வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.“நீ... நீங்கள்.. என்னுடன்.. நிஜமா....” அவளுக்கு சந்தோசத்தில் வார்த்தை வரவில்லை. “நீங்க நிஜமாகாவே என்னுடன்தான் பேசினீர்களா? உண்மையாகவா?” அவனருகில் துள்ளியவாறே கேட்க ஒரு முறுவலுடன் சென்றவனை வீடே வேடிக்கை பார்த்தது.அறைக்குள் சென்றவன் பிரெஷ் ஆகி பான்ட் டீ ஷேர்ட் அணிந்து வந்தவன் “முத்து இன்று முக்கியமான கான்பிரன்ஸ் இருக்கு ஒருத்தரையும் டிஸ்ட்ரப் செய்ய வேண்டாம் என்று சொல்லிடு” என்று அவன் அறையின் அனைத்து கதவையும் சாத்தினான்.அந்த சிவப்பு தாவணி பெண்ணை பார்த்து “அங்கே இரு” சோபாவை காட்டினான். அவள் அமர்ந்ததும் டிரெஸ்ஸிங் டேபிள் முன்னே இருந்த சிறிய மேடாவை எடுத்து போட்டு அவள் முன் அமர்ந்தான்.அவனுக்கு தெரியும் இந்த சோதனை அவனுக்கு மிக பெரிய வலியை கொடுக்கும். உண்மையில் அவசியமற்றதும் கூட ஆனாலும் செய்து தான் ஆகவேண்டும். வாயை கையால் அழுத்தமாய் பொத்தி வாய் வழி மூச்சை விட்டவன் நடுங்கிய தன் வலது கையை உள்ளங்கை மேல் நோக்கி இருக்க அவள் முன்னால் நீட்டினான்.அவள் முகத்தை பார்த்தவாறே கேட்டான் “உன் கையை தா” அவன் பார்வையில் மயங்கி குழம்பியவள் அவன் கைமீது தன் கையை வைத்தாள். குனிந்து அவள் கையை பார்த்தவன் கண்களில் இருந்து விழுந்த இரு துளி கண்ணீர் அவள் கையினூடே சென்று அவன் உள்ளங்கையை சுட்டதுகேட்குமா....
 

Nandhaki

Moderator

ஆத்ம(மா) ராகம் - 04

உண்மையில் இந்த OBE என்பது ஒரு விதமான கூடு விட்டு கூடு பாயும் வித்தை போன்றது. இதனால் இதனை தமிழில் வெளிப்படையாக எழுதி வைத்தவர்கள் குறைவு. ஆனால் இந்தியாவின் உயர் நீதிமன்ற நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண ஐயர் அவர் மனைவி இறந்த பின்னர் “மரணத்திற்கு பின்னால்” என்று புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தில் ஆங்கிலத்தில் பல அறிஞர்கள் மரணத்திற்கு பின்னால் மனிதனுக்கு என்ன நடக்கின்றது என்பதனை ஆராய்ந்து எழுதிய பல புத்தகங்களை அலசி ஆராய்கின்றார். அடுத்து சச்சிதானந்த யோகிஸ்வரர் எழுதிய ‘ஜனன மரண ரகசியம்’ ஆனால் இவையெல்லாம் உயிர் உடலை விட்டு நிரந்தரமாக பிரியும் போது நடப்பவை. இன்னும் ஒன்று என் கணேஷன் என்பவர் தினத்தந்தியில் தொடராய் எழுதிய ஆழ்மனத்தின் அற்புத சக்தி...பல வருடங்களுக்கு முன்


குழந்தையை தொடர்ந்து வந்த இருவரும் அந்த பார்வையின் தீட்சண்யத்தில் அங்கிருந்து வேகமாக விலகி ஓட கையிலிருந்த பாப்பாவை குனிந்து பார்த்தவர் அதன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தார் “பாப்பா அதோ அங்கே உன்னை மாதிரியே இன்னொரு பாப்பா மாட்டி இருக்கு. அந்த பாப்பாவை கூட்டிட்டு வாறியா?” வாயிலிருந்து கையை எடுத்த குழந்தை அழகாய் தலை சரித்து பார்த்தது பின் திரும்பி அவர் சுட்டி காட்டிய இடத்தை பார்க்க அது இருளாய் இருந்தது.கண்ணில் பயத்துடன் பார்க்க “நானும் உன்னுடன் வருவேன் அந்த பாப்பவால் என்னை பார்க்க முடியாது. ஆனால் உன்னை பார்க்க முடியும். உன்னை இருவர் மிரட்டுவதை போல் அவனையும் இருவர் மிரட்டுறாங்க பாவம் இல்லையா?” மெல்லிய புன்னகையுடன் பாவம் போல் கேட்டார்.பெரியவர் பாவம் போல் கேட்கவே சரி என தலையசைத்த குழந்தை அந்த இருளை நோக்கி நடக்க தொடங்க “இரு பாப்பா நானும் வருகிறேன்” என்றவர் குழந்தையும் அழைத்து கொண்டு அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று கட்டிலில் படுத்தார்.இன்று


அவள் முகத்தை பார்த்தவாறே கேட்டான் “உன் கையை தா” அவன் பார்வையில் மயங்கி குழம்பியவள் அவன் கைமீது தன் கையை வைத்தாள். குனிந்து அவள் கையை பார்த்தவன் கண்களில் இருந்து விழுந்த இரு துளி கண்ணீர் அவள் கையினூடே சென்று அவன் உள்ளங்கையை சுட்டதுஎவ்வளவு நேரமென்றே தெரியாமல் அவளையே பார்த்திருந்தவன் கண்களில் இருந்து சத்தமின்றி வழிந்து கொண்டிருந்த கண்ணீர் அவன் காதலின் ஆழத்தை சத்தமாய் கூறியது. சிலவேளை இன்று அந்த பெரியவரை பார்க்கமால் போயிருந்தால்.... இன்று கடற்கரையில் அவனுள் புதைந்திருந்த சில ஞாபகங்கள் மீண்டு வராமல் இருந்திருந்தால்.... இன்று அவனின் இறுதி நாள் என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை. அந்த ஞாபகங்களும் அந்த பெரியவரும் கொடுத்த ஏதோ ஒரு நம்பிக்கை அவன் இந்தக் கணம் உயிரோடு இருக்கின்றான்.“ஏண்டி என்னிடம் ஒரு வார்தை சொல்லல, எனக்கு தான் ஞாபகம் இல்லை உனக்கு இருந்திச்சு தானே” கரகரத்த குரலில் கேட்க அவளோ விழித்தாள் “என்ன ஞாபகம் யதின், நான் எதை சொல்லல” நெற்றி சுருக்கி யோசித்தவள் “அது சரி இத்தனை நாளில் இல்லமால் இன்று மட்டும் எப்படி மேன் நான் உன் கண்ணுக்கு தெரிந்தேன். எந்த நேரமும் யதி... யதி... என்று யதி புராணம் பாடுவே” அழகாய் தலை சாய்த்து கேட்டாள்.அவள் வார்தையை கிரகித்தவனுக்கு புரிந்த உண்மையில் கண்ணீர் கூட நின்று விட அதிர்ந்து போய் அவளையே பார்த்திருந்தவன் மெதுவாய் கேட்டான் “உன்னோட பெயர் என்ன?”.“என்னோட பெயர்...” வேகாமாய் ஆரம்பித்தவள் “எனக்கு தெரியதே.. வேண்டுமென்றால் பட்டிகாடு என்றே வைத்து கொள்” அப்பாவியாய் உதடு பிதுக்கினாள். எதிர்பாரத விதமாக யதின் வாய் விட்டு சிரித்துவிட்டான்.நீண்ட நாளின் பின் சிரித்தவனுக்கு நிறுத்தவே முடியவில்லை. தொடர்ந்து சிரித்து கொண்டே இருக்கவே பின்னே தலை சாய்த்து அவன் சிரித்தது அவள் உள்ளத்தை கொள்ளை கொள்ள “ஏண்டா சிரிக்கிறாய்? சிணுங்கி அவன் தோளில் அடித்தாள். அவள் கை அவன் தோளின் ஊடே சென்று மறுபக்கமாய் வந்தது.“ஹேய்... சில்லென்று இருக்கு” மெதுவாய் சிலிர்த்தான்.புன்னகையில் மலர்ந்திருந்த முகத்தை ரசனையாய் பார்த்திருந்தவளை பார்த்து ‘என்ன’ என்பது போல் ஒற்றை புருவம் தூக்கினான்.“இல்ல உங்களை பார்த்த நாளில் இருந்து இன்று தான் இப்படி சிரித்து பார்கின்றேன்”“இன்று தானே உன்னை பார்த்தேன்” அவன் பதிலில் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள் “சரி என்ன தீடிர் தோசைமா மாதிரி தீடீர் மகிழ்ச்சி...” தலை சாய்த்து கேட்டாள்.

“இல்ல உன் முகத்தில அப்பாவிதனத்தை பார்த்தனா....? உனக்கும் அந்த லுக்குக்கும் செட்டே ஆகல அதான் சிரிப்பை அடக்க முடியல” அப்போதும் புன்னகையை அடக்க முயற்சித்தவனை பொய் கோபத்துடன் முறைத்தவள் “உங்களுக்கு நான் யாரென்று தெரியுமா?” ஆர்வமாய் கேட்டாள்.“எனக்கு முதலே தெரிந்திருந்தால்” முகம் ஒரு கணம் சொல்லில் வடிக்க முடியாத வேதனையை பிரதிபலித்தது. ஆர்வத்தில் அவன் முகத்தில் தென்பட்ட வேதனையை கவனிக்கமால் “ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்களேன்... என்னை தெரியுமா? எங்கே பார்த்தோம்... முதலில் என் பெயர் என்ன....? உங்களுக்கு தெரியும் இல்லையா?” நொடியில் முகத்தில் உணர்ச்சிகளுக்கு திரையிட்டவன் மேடாவில் இருந்து எழுந்து பக்கவாட்டில் அவளை பார்த்தவாறே அமர்ந்தான். கண்களோ அவளையே விழுங்கி விடுவது போல் பார்த்து கொண்டிருந்தது.“நீ எப்போதிருந்து என்னுடன் இருக்கின்றாய்?” பதிலுக்கு கேட்டான்.“அந்த மலையில் நீங்கள் அழுது கொண்டிருந்தீர்களே அப்போதிருந்து” அவசரமாய் சொன்னவள் பதிலுக்காய் ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தாள். கண்கள் மங்க அண்ணாந்து பார்த்தவன் அந்த நாளின் ஞாபகத்தில் அமைதி காக்க அவளோ அவன் புஜத்தை பிடித்து உலுக்கினாள் “சொல்லுங்களேன்....”“ஹ்ம்ம்..” திரும்பியவன் அவள் ஆவலை கண்டவன் உதட்டுக்குள் நகைத்தான் ‘அத்தனை சீக்கிரம் பதில் கிடைக்காது பெண்ணே..” தனக்குள் எண்ணியவன் “சரி அங்கே என்ன நடந்தது” மீண்டும் விபரம் கேட்டான்.

இந்த முறை சற்று சுதாரித்தவள் “சரி சொல்கின்றேன். ஆனால் நீங்களும் பதில் சொல்லனும் ஓகேவா?” அவனுடன் ஒப்பந்தம் போடவே இரு புருவங்களையும் வேகமாக ஏற்றி இறக்கி சிரித்தான்.அவளோ எரிச்சலுடன் “இன்று ரெம்பத்தான் சிரிக்கிற மேன்” காய்ந்தாள்.“ஹ்ம்ம்....” சத்தமாய் பெருமூச்சு விட்டு சோபாவில் சாய்ந்து விட்டத்தை நோக்கியவன் “நீண்ட நாட்களின் பின் இன்று தான் ஹப்பியா இருக்கிறேன் அதான்” என்றான். “அது தெரிய இன்று தானே தெளிவாய் இருக்கிறாய் மேன்” கோபத்துடன் உதட்டையும் முக்கையும் சுழித்து கழுத்தை வெட்டி திருப்பினாள். அவள் கோபத்திற்கு பதிலாய் சிறு முறுவல் செய்தவன் “சொல்கிறேன்... சொல்லத்தானே வேணும் அதற்கு முன் நீ எனக்கு ஒரு பதில் சொல்லு. அங்கே எப்படி வந்தாய்? அந்த மலை உச்சிக்கு” முகத்தில் ஏதேதோ உணர்வுகள் போட்டியிட அவள் பதிலுக்காய் காத்திருந்தான்.சிறிது நேரம் யோசித்தவள் “முழுக்க ஞாபகமில்லை கொஞ்சம் கொஞ்சமாய் தான் இருக்கு.” பாவமாய் சொன்னாள்.பாவம் போல் வைத்திருந்த அவள் முகத்தை பார்த்து வந்த சிரிப்பை மீண்டும் உதட்டுக்குள் அடக்கியவன் “பரவாயில்ல சொல்லு” என்றான்.“அந்த மலை உச்சியில் உங்களை சந்திக்க முன் ஆகாய வெளியில் நின்று பூமியை பார்த்தேன். நீல நிறத்தில் ரெம்ப அழகாய்.... பூமியின் மலை பள்ளத்தாக்கு அதில் ஓடும் ஆறு... அருவி... கடல், எரிமலை எல்லா இடத்தையும் கணினியில் ஜூம் செய்து பார்ப்பது போல் தெளிவாக பார்த்தேன். அப்படியே பறக்கிற மாதிரி பாரமே இல்லமால் லேசாய்.... திரும்பி பூமிக்கு வரவே விருப்பமில்லாமல்...” அவள் கண்மூடி உணர்ந்து கூற குறுக்கிடாமல் அமைதியாக கேட்டுகொண்டிருந்தான்.பின் எழுந்து அவன் சோபா, டிடேபிள் குறுக்கே இருந்த சிறிய மேடா என்று அனைத்தின் ஊடேயும் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவள் அவனை நோக்கி திரும்பி “அங்கிருந்து ஏதோ விசை என்னை எங்கோ இழுத்தது போல் உணர்வு. அங்கே ஒரு பெண் நின்றாள் அழகிய கண்களுடன் கருப்பாய்.... நீண்ட கேசம்... அந்த பெண்ணுடன் இன்னும் சிலர் அவர்கள் முகமோ யாரென்றோ ஞாபகம் இல்லை...” சிறிது நேரம் யோசித்தாள் ஞாபகம் வருகின்றாதா என்பது போல்.கவனாமாய் கேட்டு கொண்டிருந்த அவன் வைத்து முகத்தை அவன் என்ன நினைக்கின்றான் என்பதை கணிக்க முடியவில்லை.பின் தலையாட்டி அவளே தொடர்ந்தாள் “அவர்களிடம் பேசி கொண்டிருக்கும் போதே யாரோ கூப்பிடுவது போல் தோன்ற திரும்பி பார்த்தால் நீங்கள் அந்த மலை உச்சியில்.... அந்த பெண் என்னை பார்த்து போ என்றால் அவ்வளவுதான் நான் உங்கள் பக்கத்தில் வந்துட்டேன்..... நீங்க ஏதோ.... அப்புறம் அந்த ஜோ உங்கள் கழுத்தில்....” புருவத்தை சுழித்து எதையோ நினைவு படுத்த முயன்றவள் முடியாமல் போகவே “ஆ.....” என்று அலறினாள்.அது நரியின் ஊளை சத்தத்தை போல் அந்த பங்களாவை ஊடுருவியது.சட்டென விளக்குகள் எல்லாம் எரிய வெளியே ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்க சட்டென சுதாரித்தவன் “ஷ்... உனக்கு தெரியாவிட்டால் பாதகமில்லை நானே சொல்றன். புண்ணியவதி கொஞ்சம் சத்தம் போடாதே” என்றவாறு கதவை திறந்து வெளியே செல்ல அவனுடனே வந்தாள். மாடி வளைவில் இருந்த அலங்கார கைபிடியில் கையூன்றி நின்றவன் “கவி என்னம்மா சத்தம்?” அப்பாவியாய் கேட்டான்.அருகே நின்றவள் “நான்தானே கத்தினேன் நீதான் பார்த்திட்டு இருந்தியே மேன்” அவனையும் அறியாமல் அருகே பார்க்க கீழிருந்து அவன் தங்கையோ அவனையே பார்த்தாள்.“சாரி அண்ணா தூக்கம் கலைஞ்சிட்டா?” கவலையுடன் கேட்டாள். அவனே இன்றுதான் நிதானமாக வந்தான்.“இல்லாம்மா... என்ன சத்தம்?” மீண்டும் கேட்டான்.“சில நாட்களில் இப்படி தான் கேட்குது ஆனா எங்கே என்ன என்று தெரியல. பார்ப்போம் நீங்க போய் படுங்க அண்ணா” என்றவள் வெளியே செல்ல போக “வேண்டாம், எதாவது நாய் நரியாக இருக்கும் காலையில் பார்த்து கொள்ளலாம். அனைவரும் போய் படுங்கள்” என்றவனை முறைத்தாள் அருகே நின்றவள்.“நான் உனக்கு நாய் நரியா மேன்” காய்ந்தவளை உதட்டின் மேல் கைவைத்து மறைத்து “கொஞ்ச நேரம் சும்மா இரேன்” என்று அடக்கியவன் “மார்னிங் தோட்டத்தை சுற்றி பார்க்க ஆட்களை நானே ஏற்பாடு செய்கின்றேன் இப்ப அனைவரும் போய் படுங்கள்” இறுதியாய் கூற அனைவரும் சென்றுவிட்டனர்.“யூசுவலா உனக்கு தான் அனைத்தும் ஞாபகம் இருக்கும்... பட் ஏன் மறந்தது?” கதவை பூட்டிவிட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தவன் புருவத்தை சுருக்கினான். அவளோ குழப்பமாய் பார்த்தாள் “என்ன ஞாபகம்?” என்றவள் “நான் யாரென்று இன்னும் சொல்லவே இல்லையே?” கவலையாய் கேட்டாள்.“நாளை என்னுடன் ஒரு இடத்திற்கு வா. அதன் பின் சொல்கின்றேன்”“ஏன் இப்போதே சொன்னால் என்ன?”“நிறைய சிக்கல் இருக்கும் போல் இருக்கு... நீ மறுபடியும் கத்தினாலும் கத்தி ஊரை குடி எழுப்புவாய்”“வீணே நீயும் குழம்பி என்னையும் குழப்புகிறாய்”“நாளை பெரியவரை பார்க்கும் போது அனைத்து குழப்பமும் தீர்ந்துவிடும்”கேட்குமா....
 

Nandhaki

Moderator

ஆத்ம(மா) ராகம் – 05


இதிலும் பெரும்பாலும் இறந்த பின் ஆத்மாவின் பயணத்தை பற்றி கூறினாலும் பால் ரெய்மொன்ட் இன் ஆராய்ச்சி அனுபவங்களை பெரிதும் குறிபிட்டுள்ளார். இதற்கும் உயிரோடு இருக்கும் போதே உயிர் உடலை விட்டு வெளிவந்து மீண்டும் கூட்டுக்குள் போவதற்கும் என்ன தொடர்பு...

பால் ரெய்மொன்டின் ஆராய்ச்சிகளில் இதைப் பற்றியே ஆராய்ச்சியே அதிகம்.

மரணித்து உயிர்த்தவரின் அனுபவம்...பல வருடங்களுக்கு முன்


படுத்தவரையே குழப்பத்துடன் பார்த்த பாப்பா வாசலை நோக்கி செல்ல திடிரென பின்னால் ஒரு குரல் கேட்டது “போவோமா..” திரும்பி பார்க்க அந்த காவியுடை மனிதர் குழந்தையின் பின்னால் நின்றார். வாயில் இருந்த கையை எடுத்து விட்டு கட்டிலையும் அவரையும் மாறிமாறி பார்த்த பாப்பா “ஐ இரண்டு தாத்தா” கைகொட்டி சிரித்தது.

“நான் தாத்தாவா உனக்கு” கைகொட்டி சிரித்த பாப்பாவை கைகளில் தூக்கியவர் வெளியே வர இப்போது யாருக்குமே அவர்கள் இருவரும் தெரியவில்லை. சுற்றிலும் இருந்தவர்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அவர்கள் பாட்டில் சென்று கொண்டிருந்தார்கள். அந்த பாப்பா அம்மாவை பார்த்ததும் “தாத்தா... அம்மா..” அவர் கன்னத்தை தட்டி கைகளை நீட்டி காட்டியது.இன்று


அடுத்த நாள் காலை எழுந்தவன் உற்சாகமாய் தயாராகி கீழே வந்தான். இன்று ஜோ வந்திருக்கவில்லை. பார்கவி பிடித்துக் கொண்டாள். “அண்ணா அண்ணி எங்கே என்று தெரியும் தானே. ப்ளீஸ் எனக்கு மட்டும் சொல்லு யாருக்குமே சொல்ல மாட்டேன்” ஆவலாய் நோக்கியவள். “ஷிவஸ்க்கு கூட சொல்லமாட்டேன்” கழுத்தில் இரு விரல் வைத்துக் கூறினாள் “ப்ராமிஸ்”.யதினுக்கு கண்கள் கலங்கிவிட்டது. அவளுக்காக எத்தனை தரம் தன்னிடம் சண்டை போட்டிருப்பாள் இந்த வாண்டு. “உன் அண்ணியை எப்படியாவது கூட்டிட்டு வர்றேன். அதுவரை கொஞ்சம் அமைதியாய் இரு” அணைத்து அவள் தலையை வருடிவிட்டான்.“பேசாமல் நீ ஸ்ரேயாவை மணமுடிக்க போவதாக அறிக்கை விடு அண்ணி எங்கே இருந்தாலும் வந்திருவா” சொல்லி முடிக்கும் போதே அவள் உச்சந் தலையில் யாரோ குட்டியதைப் போல் உணர்ந்தவள் “ஆ... ஷ்...” தலையை தடவியவாறே ஆர்வத்துடன் திரும்பினாள் “அண்ணிஈ...”“அண்ணா அண்ணி வந்திட்டா தானே இப்ப குட்டினது ...” அவன் கன்னம் பிடித்து தன்னை நோக்கித் திருப்பியவள் “அண்ணி தானே”யதினுக்கு தங்கையை விட தன்னை சமாளிப்பதுதான் சிரமாய் இருந்தது. தங்கையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் முன்னே நின்றவளை முறைத்தான். ‘கொஞ்ச நேரம் சும்மாயிரு’ சத்தமின்றி வாயசைத்தவன் “அண்ணி வரலம்மா வந்ததும் நானே அழைத்து வாரேன். இன்று உனக்கு எக்ஸாம் இல்லையா போய் தயாராகு. அப்புறம் அண்ணி வரும் போது நீ பெயிலான கதைதான் சொல்ல வேண்டி வரும் பரவாயில்லையா?” ஏதேதோ பேசி அனுப்பி வைத்தான்.*****அலுவலகத்தில் அமர்ந்து அடுத்த ஒரு வாரத்திற்கான உள்ள சந்திப்புகளை பார்த்தவன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, முன்னே நின்ற ஆனந்திடம் “இதில் நான் ஹைலைட் செய்திருக்கும் சந்திப்புகளை தவிர அடுத்த இரண்டு வாரத்திற்கான அனைத்து வேலைகளையும் ஜோவையும் ஷிவேஷையும் பார்க்க சொல்லு” கண்மூடி யோசித்தவன் “தேவைபட்டால் ஷிரேயாவையும் கேட்க சொல்லு” என்றான்.அதுவரை ஆனந்தின் பின்னால் குறுக்கம் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவள் சட்டென நின்று புருவம் சுருக்கிப் பார்த்தாள். ‘ஷிரேயா’ இந்தப் பெயர்... கேட்கும் போது கோபமாயும் இருந்தது அதே நேரம் அந்த பெண்ணைப் பார்க்க வேண்டும் போல் ஏதோ உந்துதல்.“அவள் எங்கே?”“யாரு” என்றான் யதின்குழப்பத்துடன் பார்த்த ஆனந்த் “யாரை கேட்கறீர்கள்?” தன் அருகேயிருந்த வெறுமையான இடத்தை நோக்கினான்.“அதான் அந்த ஷிரேயா” நெளித்தாள்.“பொறாமையா?” குறும்பாய் நோக்கியவன் “இங்கிருந்து மூன்றாவது அறை” என்றான்.அடுத்த கணமே கதவின் ஊடே வெளியே சென்றவளைப் புன்னகையுடன் பார்த்தவன் ஏதோ தோன்ற எழுந்து அவள் பின்னே சென்றான்.தலையை சொரிந்தான் ஆனந்த் ‘இங்கிருந்து மூன்றாவது அறையில் இருப்பது ஷிரேயா அவளைப் பார்த்து எனக்கு ஏன் பொறாமை. இவனுக்கு என்ன ஆனது நான் எங்கோ நிற்கின்றேன், அவன் எங்கோ பார்த்து பேசுகின்றான்’.ஷிரேயாவின் அறைஅந்த பெரிய அறையில் ஒரு புறம் மீட்டிங்க்கு தேவையான சோபா ப்ராஜெக்டர் என இருக்க மறுபுறம் இருந்த பெரிய மேஜையின் பின்னே இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து அவள் முன் இருந்த மெல்லிய எல்சிடியில் எதையோ வெறித்துப் பார்த்தவளையே இமை வெட்டாது பார்த்திருந்தால் அவள். உடல் இருந்திருந்தால் நிச்சயமாய் கண்ணில் நீர் வந்திருக்கும். அவள் பின்னேயே கதவைத் திறந்து வந்த யதின் அவளை அணைத்து ஆறுதல் கூட கொடுக்க முடியாத தன் நிலையை வெறுத்தவனாய் பான்ட் பொக்கெட்டில் இரு கையையும் விட்டு தொண்டையைக் கனைத்தான்.இரு பெண்களுமே கலைந்து அவனைப் பார்க்க அருகே வந்தவள் “யதின் அவளை அழ வேணாம் சொல்லு. நான்....” எதையோ சொல்ல முடியாமல் தவித்தாள்.உதட்டைக் கடித்தவன் “ஷிரேயா என்ன இது” மென்மையாய் கடிந்து கொள்ள புருவம் சுருக்கி பார்த்தாள்.“அத்தான்... அவள் அருகே இருக்...” அவனருகே வந்து கையை கட்டி பக்க தோளில் முகம் புதைத்தவள், கண்கள் விரிய நிமிர்ந்து பார்த்தாள். “அத்தான் நீ..” வார்த்தைகள் வர மறுத்தது. கடந்த ஆறு மாதமாக பகலிலும் அவனில் வீசும் மதுவாடை இல்லை. கண்களில் தெளிவு. ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள் “எங்கே?” சுற்றும் முற்றும் யாரையோ தேடினாள்.“என்னுடன் கோபமா அதான் வரலைய? நான் மன்னிப்பு கேட்கிறேன்” அவன் முகத்தையே ஆவலுடன் நோக்க கன்னம் தாங்கி கூறினான் “இன்னும் இல்லை ஆனா சீக்கிரமே அழைத்து வாரேன் போதுமா?”அவன் பதிலில் பொங்கி வந்த மகிழ்ச்சியில் துள்ளி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவளை புன்னகையுடனேயே ஒரு கையால் தாங்கிக் கொண்டான்.இருவரையும் ஒன்றாக பார்த்தவளுக்கு சந்தோசம் துக்கம் இரண்டுமே சேர்ந்து வந்தது. கைகளை பிசைந்தவாறே அமைதியாக திரும்ப பாதி திறந்த கதவருகே நின்றான் ஜோ. வலிந்து வந்த சிரிப்புடன் கையாட்டினாள்.உதட்டைக் கடித்தபடி இருவரையும் பார்த்த ஜோ சத்தமின்றி கதவைச் சாற்றிச் செல்ல, இருவரையும் திரும்பிப் பார்த்தவள் கதவை ஊடுருவிக் கொண்டு அவன் பின்னே சென்றாள்.பல்கனியில் கையூன்றி வெளியே இருந்த கட்டிடங்களின் மேலாக தெரிந்த வானத்தையே வெறித்து பார்த்திருந்தான் ஜோ. அவனருகே கைபிடிச் சுவரில் ஏறி அமர்ந்து அவன் தோளை தட்டிக் கொடுத்தாள் “உனக்கு ஷிரேயவை பிடிக்குமா? ஆனா அவங்க இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு போலேயே என்ன செய்வோம்?” சற்றுக் குனிந்து அவன் முகம் பார்த்தவள் கேட்டாள் “உனக்கு வேற பொண்ணு பார்க்கவா? அழகாய் லட்சணமாய்”“ஜோ” இருவரும் திரும்பிப் பார்க்க குழப்பத்துடன் நின்றான் ஆனந்த்.‘என்ன’ என்பது போல் பார்த்தான் ஜோ.“பாஸ்...” தயங்கி கூறினான் “பாஸ் நான் எங்கோ நிற்கின்றேன் அவர் எங்கோ பார்த்து.. காரில் வரும்போது கூட பக்கத்திலேயே பார்த்திட்டு வந்தார்”“என்னை தான் பார்த்திட்டு வந்தான்” ஜோ நெற்றி சுருக்கி யோசிக்க அருகேயிருந்தவள் கூறினாள்சட்டென ஞாபகம் வந்தவனாய் “ஷிட்” பிடித்திருந்த கைப்பிடிச் சுவரை ஓங்கி அடித்தவன் “யதின் எங்கே” அவசரமாய் கேட்டான்.“இங்கேதான்” என்ற குரலில் அனைவருமே திரும்பிப் பார்க்க “உன்னுடன் பேசவேண்டும் வா” கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் ஜோ.அவன் அறைக்கு அழைத்துச் சென்றவன் தெளிவாய் இருந்த கண்களையும் மது வாடையற்ற மூச்சையும் அவதானித்தவன் உணர்ச்சியற்ற முகத்துடன் “அவளுடன் வாழ முடியாது. அது முட்டாள்தனம். நீ பேசமால் ஷிரேயாவையே கல்யாணம் செய்” என்றான்.நடுவில் நின்று இரு ஆண்களையும் மாறிமாறிப் பார்த்தவள் முகம் சோகமாய் மாற அவர்களை விட்டு விலகிச் சென்று வெளியே வானத்தைப் பார்த்தாள். பேசாமல் அந்த அழகிய கண்களையுடைய கறுத்தப் பெண்ணிடமே போய்விடுவோமா மனம் அது பாட்டில் சிந்தித்தது.அவள் விலகிச் செல்வதைப் பார்த்த யதின் “பைத்தியமா உனக்கு” கோபமாய் எரிந்து விழுந்தான்.“ஏன் உங்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயம் நடந்தது தானே? அதுவும் உங்கள் இருவரின் விருப்பத்துடன்” கேள்வி கேட்டுத் திரும்ப கதவின் அருகே நின்றிருந்தாள் ஷிரேயா. ஜோவின் பேச்சில் அதுவரை முகத்தில் இருந்த சந்தோஷ புன்னகை மறைய வலியை மறைக்க புன்னகைத்தாள்.ஜோவின் தோளைப் பற்றி “முட்டாள்தனமாய் உளறதே ஜோ. இன்று அந்தப் பெரியவரை சந்திக்கப் போவேன் நீயும் வா அதற்குப் பின் முடிவெடு” என்றவன் ஷிரேயாவின் அருகே இருந்த தடுப்பின் ஊடே வெளியே சென்றவளைப் பார்த்து ஆழ்ந்த மூச்சைவிட்டான்.ஷிரேயாவிடம் திரும்பி “அதிர்ச்சியில் இருக்கின்றான். அவன் என்ன பேசுறான் என்று அவனுக்கே புரியவில்லை. நீ இதைப் பெரிதாக எடுக்காதே” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.அவளைப் பார்த்த ஜோ “ஏதாவது முக்கிய அலுவலா?” விசரித்தான். எதுவும் பேசாமல் இல்லை என்று தலையாட்டினாள் அவள். அவள் கண்களில் வலியை கண்டு கொண்டவன் “ரேயா...” என்று ஏதோ சொல்ல வந்து தயங்கி நிறுத்தினான். அதற்குள் கதவைத் தட்டி சத்தம் கேட்க “கம் இன்” இருவரும் சேர்ந்தே சொன்னார்கள்.உள்ளே வந்த இஸ்லாமியப் பெண்ணைப் பார்த்து “அட பொம்மர் கிரனேட்” ஆச்சரியமாய் அழைத்தவன் “எப்போது வந்தாய்? என்னாச்சு” விசாரித்தவாறே அவளுடன் வெளியே சென்றுவிட்டான்.“பொம்மர் கிரனேட் ம்க்கும்” அவன் பின்னால் உதட்டை சுளித்து கழுத்தை நொடித்தாள்.முன்னிருந்த கண்ணாடியில் பார்த்தவாறே சென்ற ஜோவின் முகம் மலர்ந்தே இருந்தது.*****“பெரிய தியாகச் செம்மல்” வாய்க்குள் முனங்கியவாறே லிப்டை விட்டு அந்த கட்டிடத்தின் அடித் தளத்தில் இருக்கும் பார்கிங் ஏரியாவிற்கு வந்தான் யதின். அவன் எதிர்பார்த்தது போலவே அவன் காரின் முன் பனாட்டில் ஏறி முழங்காலைக் கட்டி அதன் மேல் கை வைத்து கையின் மேல் கன்னம் வைத்திருந்தாள் அவள்.ப்ளூடுத்தை காதில் மாட்டியவாறே அவளருகே ஒரு காலை நீட்டி மறு காலை மடித்து அதில் கையைத் தொங்க விட்டு அமர்ந்தவன் “அஹ் ஜோ கீழே பார்கிங்கில் வெயிட் பண்ணுறேன் கீழே வா” என்று விட்டு போனை கையில் சுழற்றியவாறே திரும்பி அவளை பார்த்தான். பார்ப்பவர்களுக்கு அவன் போனில் பேசுவது போலவே தோன்றியது.“என்ன அம்மணி தீடிரென்று விட்டு வந்தாச்சு” குரலில் கோபம் தெளிவாகவே தொனித்தது.“கோபமா யதின்?”“ஏண்டி அப்படி என்னை விட்டுட்டு வந்திடுவியா?” அவள் பிடரியை பிடிக்க முயன்றால் கை அவளூடே சென்றது. அக்கம் பக்கம் ஆட்கள் வர கையை குவித்து வாயில் வைத்தவன் அப்படியே பின்புறம் சாய்ந்தான் “இன்னொரு தரம் என்னை விட்டுப் போன நானே உன்னை கொன்னுருவன்”.“நான்தான் ஏற்கனவே செத்திட்டனே” அப்பாவியாய் தலை சாய்த்துக் கூறினாள். உடல் எஃகாய் இறுக கண்களை மூடியவன் முகத்தில் வலி மட்டுமே இருந்தது. “யதின்” நெற்றியில் கை வைத்தாள். சில்லென்ற உணர்வு பரவ கண்களை திறந்து பார்த்தவன் கேட்டான். “எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்வாயா?” குரல் கெஞ்சியது.என்ன என்பது போல் பார்த்தவளிடம் “இன்னொரு தரம் சாவைப் பத்தி பேசாதே” முழங்கை வளைவை கண்ணுக்கு மேல் வைத்து அமைதியாய் இருந்து விட அவனையே பார்த்தவாறு இருந்தாள்.அந்த மௌனம் தொடர “யதின்” செல்லமாய் அழைத்தாள்.“....”“ப்ளீஸ் நான் இனி அப்படி பேசல, இத்தனை பேர் இருக்கிற உலகத்தில நீ மட்டும் தான் என் கூட பேசின நீயும் பேசாம இருக்காதே ப்ளீஸ்”அதுவும் அவனுக்கு வலிக்கவே செய்தது. ஆனாலும் இருந்த நிலையிலிருந்து மாறவில்லை.திடிரென கேட்டாள் “எவ அவ”“யாரைக் கேட்கிறாய்?”“அதான் யாரைப் பார்த்தாலும் உன்னைப் பார்த்ததும் கேட்கிறாங்களே அவள் வந்திட்டாளா என்று அவதான்”“ஏன் பொறாமையா?” கையை அசைக்கமால் வைத்திருக்க அவன் உதடுகளில் மெல்லிய புன்னகை கீற்றாய் தோன்றியது மட்டும் தென்பட்டது.“எனக்கு ஏன் பொறாமை” கழுத்தை வெட்டினாள்.அதற்குள் லிப்டில் இறங்கி அருகே வந்த ஜோ “யதின் என்ன விஷயம்” கேட்டான். பனாட்டில் இருந்து குதித்து இறங்கியவன் “பின்னே ஏறு” என்றவாறு டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.“ஏன் முன் சீட் சும்மாதானே இருக்கு” சிறு கேலியுடன் பின்னால் ஏறினான்.ஸ்டாரிங் வீலின் பின்னே அமர்ந்து சீட் பெல்டை போட்டவன் “முதலில் ஷிரேயவிற்கும் எனக்குமான திருமணத்தைப் பற்றிப் பேசுவதை நிறுத்து. பெரியவரிடம் போகின்றோம். அவர் என்ன சொல்கின்றார் என்பதை கேட்டுவிட்டு முடிவெடு”. ஒரு கணம் தயங்கியவன் உறுதியாய் கூறினான் “எனக்குத் தெரியும் அவள் சாகவில்லை. சாகவும் விடமாட்டேன்”எரிச்சலுடன் முன் கண்ணாடியை பார்த்தவன் முகம் மாறியது. ஜோவைக் கண்ணாடியில் பார்த்த யதின் “என்ன தெரியுதா?” கேட்டுப் புன்னகைத்தான்.ஜோவின் விழிகள் அசையாது கண்ணாடியில் தென்பட்ட சிவப்புத் தாவனியையே பார்க்க தனக்குச் சொந்தமானதை திருடியது போல் பார்த்தவன், ஜோ பார்க்க முடியாதபடிக்கு கண்ணாடியை சரி செய்தான்.“தாவனில சூப்பரா இருக்கிறாள் இல்ல” என்ற ஜோவின் மீதுள்ள கடுப்பை காரில் காட்ட சத்தமாய் சிரித்தான் ஜோ.கோவிலுக்கு முன்னே காரை நிறுத்த மூவரும் காரிலிருந்து இறங்கினார்கள். முன் மண்டபத்தில் தியனாத்தில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் கண்களைத் திறக்கமாலே புன்னகைத்தார்.அவரைப் பார்த்ததும் “தாத்தா” என்று அருகே ஓடினாள்.“இவரைத் உனக்கு நினைவிருக்கா?” ஆச்சரியத்துடன் கேட்டான்.“ஹ்ம்ம் நீ கூட என்னிடம் பேசாத போது இவர்தான் பேசுவார்” அவர் முன் ஆவலாய் சம்மணமிட்டு அமர்ந்தாள். அவனும் அவள் அருகே அமர ஜோ தான் விழித்துக் கொண்டு நின்றான். இவன் யாரிடம் பேசுகின்றான்.அவன் யாரிடம் பேசுகின்றான் என்று புரிய சில நொடிகள் எடுக்க “யதின் அவள் வ” ஏதோ சொல்ல வந்தவன் வாயைப் பொத்தி “பொறு அவசரப்பாடதே, நிறைய சிக்கல், இங்கே தான் இருக்கிறாள். பெரியவரிடம் பேசும் வரை பொறுமையாக இரு” என்றான்.ஜோவின் கண்கள் காற்றையே துளைத்து விடும் போல் சுற்றிப் பார்க்க தன்னருகே அவள் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டினான். அவன் பார்க்க அவள் “ஜோ” என்றாள்.ஆச்சரியத்துடன் கேட்டான் “இப்போது கூப்பிட்டாளா?”யதின் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.“எனக்கு கேட்டது” பிரமிப்புடன் யதினின் மறுபுறம் அமர்ந்தான்.மெதுவே கண் திறந்த பெரியவர் அவர்களைப் பார்த்து சிரித்தார்.யதின் ஜோ இருவருக்குமே சில மாதங்களுக்கு முன் அவர் கூறியது நினைவு வந்தது “நீங்கள் மூவரும் ஒன்றாக ஒரே மனதுடன் வரும் காலம் வரும்”யதினின் அருகே அருபமாய் அமர்திருந்த அவளையே சில கணம் நோக்கி “ஈருயிர் ஓர் உடல் இல்லையா?” என்று கண் மூடி தியானித்தவர் கண் திறக்க உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் தவிப்புடன் அவரயே பார்த்திருந்தான்.அவன் கேளாமலே கூறினார் “அவள் இறக்கவில்லை”“என்ன” அதிர்ச்சியுடன் ஜோ கூவ, மனம் நிறைந்த ஆறுதலில்உடல் தளர்ந்து நிலத்தில் சாய்ந்து விடமால் கையூன்றி சமாளித்து நிமிர்ந்த யதின் கண்களில் மெலிதாய் ஈரம்.“நான் சகலையா? பின் எனக்கு ஏன் உடல் இல்லை” தன்னைத்தானே குனிந்து பார்த்தவள் கைகளை முன்னே உயர்த்திப் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள்.“இவளின் உடல் நீரின் நடுவே வடக்குப் பக்கமாய் உள்ளது. அவளே கண்டு பிடிக்கலாம்”“ஆனால் அவளுக்கே ஒரு ஞாபகமும் இல்லையே” வருத்ததுடன் கூறினான் யதின்.அவன் உடலில் முக்கிய சக்கரங்கள் சுழலும் ஏழு இடங்களை அழுத்தி கடைசியாய் அக்ன சக்கரமான நெற்றிப் பொட்டில் அழுத்திவிட்டார்.“இப்போது உன்னால் உடலை விட்டுப் பிரிந்து கடந்த காலத்திற்கு பயணிக்க முடியும். இவளையும் சேர்த்து கடந்த காலத்திற்கு அழைத்துச் செல். அனைத்தும் சிறிது சிறிதாக நினைவுக்கு வரும். அனைத்து நினைவுகளும் வந்த பின்னர் அவள் உடல் எங்கே என்று அவளுக்கே தெரியும். முக்கியமான விடயம் கடந்த காலத்தில் எதையும் மாற்றக் கூடாது. இவளின்...” என்று யதினை உற்றுப் பார்த்தார். புரிந்தது என்பது போல் தலையாட்டினான். “அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். முற்று முழுதாக இவளை தொலைக்கவும் கூடும். ஆனால்...” என்று நிறுத்தினார்.மூவருமே என்ன என்பது போல் பார்க்க “அவளுக்கு காலம் அதிகமில்லை” என்றார்.

கேட்குமா....
 

Nandhaki

Moderator
இனிமையான இந்நேர வணக்கம் ஸ்விடிஷ்...

உங்கள் பொன்னான கருத்துகளை பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் பதிவு செய்யுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 
Status
Not open for further replies.
Top