எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 1

subasini

Moderator
காதலைக் களவாடியவன்

பகுதி – 1

பெரும் மழைக்காலம் அது.

அவன் உடலில் இருந்து குருதிக் குறையில்லாமல் வழிந்து மழை வெள்ளத்தோடு வெள்ளமாய்ப் பாதையில் ஒடியது.நடந்தேறிய விபத்தின் விளைவாகக் கீழே விழுந்த வேகத்தில் அவன் முகம் முழுவதும் சாலையில் இருந்த கற்கள், தன் கை வண்ணத்தைக் காட்டியிருந்தது.இந்தப் பூமியில் தன் பயணம் இன்றோடு முடிந்தது என்று, அவனை விட்டுப் பிரிந்துச்செல்லும் நினைவுகளைத் தன்னிடம் பிடித்து வைக்க வெகுவாகப் போராடினான்.தன் பயணத்தின் கடைசி நிமிடத்தில், அவன் விழிகளில் தோன்றிய முகம், அதன் நெற்றியில் வீற்றிருக்கும் வட்டப் பொட்டு அந்த முகத்திற்கு அழகு மட்டுமல்ல, கம்பீரத்தையும் தந்தது, அந்த முகத்தின் விழிகளில் கடந்த சில நாட்களாகத் தன்னிடம் எதையோ எதிர்பார்த்து ஏமாந்ததை அவனுக்கு உணர்த்தியது.அந்த ஏமாற்றத்தை இந்த நிமிடம் சரி செய்யத் துடிக்கும் எண்ணம், மனதின் அடி ஆழத்தில் இருந்து தோன்றியதன் விளைவாக, தன் போகும் உயிரைப் பிடித்து வைக்க மரணத்திடமிருந்து போராடினான் ....ஐயோ பாவம்! அவனால் அது மட்டும் முடியவில்லை. தன் உடலைச் சிறிதளவுக் கூட அசைக்க முடியாமல் போனது துயரத்தின் உச்சம்.

மனதின் வேட்கையை நிறைவேற்ற முடியாத தன் இயலமையை இந்த நொடி வெறுத்தான். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் இனி தன் உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை மனதில் அறைந்தது.

உதட்டோரம் தோன்றிய விரக்திப் புன்னகையோடு , மெல்லக் கண்களின் இமையை மூடினான். அவன் மயக்கதிற்குப் பயணிக்கும் நேரம், அவன் மன வேதனையைக் நிவர்த்திச் செய்வது அந்தக் கடவுளின் எண்ணமாக இருந்தது.ஆபத்பாந்தவனாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர், குற்றுயிராக இரத்த வெள்ளத்தில் கிடந்தவனைக் கண்டு மனித நேயத்துடன் அருகே வந்தார். அவனுக்கு மூச்சிச் சீராக இருக்கிறதா? என்று அவன் அருகில் குனிந்தவரிடம் ஏதோ பெயரை உச்சரிப்பது புரிந்தது.அந்த பெயர் அருகே இருக்கும் மருத்துவமணையின் பெயர் என்று உணர்ந்ததும் அவன் காரினுள்ளே எட்டுப்பார்த்தார். டேஸ்போர்டில் அவன் கூறிய மருத்துவமணையின் கார்டு இருந்தது. உடனே அதை எடுத்து அவசர ஊர்திக்கு அழைத்தவர் கையோடு காவல் துறைக்கு அழைத்து விபத்தின் விவரமும், அந்த இடத்தைப் பற்றிய தகவல்களையும் கொடுத்தார்.

அவனை அழைத்துச் செல்லும் மருத்துவமனை ஒரு வகையில் அவனுக்குப் பாதுக்காப்பானது மட்டும் அல்ல, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்தது அவன் நல்ல நேரம்.அவன் உடலில் உயிர் மட்டுமே இருக்க, நினைவினை இழக்கும் நேரம் அவனை அவசர ஊர்தியில் எடுத்துக்கொண்டு அருகே இருக்கும் அந்த ஊரின் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.

அந்த மருத்துவமனையின் சொந்தக்காரன் என்ற போதும் அவனை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. இரவு நேரம் என்றதாலும் அவனைத் தெரிந்த மருத்துவர்கள் எல்லாம் தங்கள் வேலை நேரம் முடிந்துச் சென்று இருந்ததால், டூட்டி டாக்டர் தான் அவனுக்கு மருத்துவம் பார்த்தார்.அவனுக்கு இரத்த மாதிரியில் இருந்து எல்லாப் பரிசோதனைகள் தொடங்கியதும், ஐ சி யு வில் இருந்து வெளியே வந்த டாக்டர், அவனுக்கு மேலும் மருத்துவம் தொடர, அவருக்கு எல்லாத் தகவல்களும் தேவையாக இருந்தது.

காவல் அதிகாரியோ அவனுடைய பொருட்களும் அவன் அழைப்பேசியையும் கைப்பற்றி அதில் அவன் பற்றிய தகவல்கள் தேடிக்கொண்டிருந்தார்.

அவனோ அங்கிருக்கும் அவசரப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். விபத்தின் அடையாளம் முகத்தில் கல்வெட்டுப் போன்று அவன் முகத்தில் தன் தடயங்களைப் பதித்திருந்தது.

முதல் உதவி மட்டுமே செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு மருத்துவம் தொடங்க அவனுடைய உற்றார் உறவினர் கையொப்பம் வேண்டும் என்ற நிலையில், அவனுக்கு மருத்துவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அவனுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் வந்து காவல் அதிகாரியிடம் கூறினார்."சார், உயிரைப் பிடிச்சு வைக்க நாங்க எல்லாம் முயற்சியும் பண்ணிட்டு இருக்கோம், மேற்கொண்டு மூவ் பண்ண அவங்கக் கார்டியன் கையெழுத்து வேண்டும்" என்று தன் கடமையைச் செய்தார்.டாக்டர் கூறியதைக் கேட்டக் காவல் அதிகாரி,

"ஒகே டாக்டர், அவன் ஃபோன் லாக் ஆகி இருக்கு, பேஷண்ட் பெரிய இடம் தான், நீங்க தைரியமாக அவனுக்குச் சிகச்சையைத் தொடருங்கள். நான் பேசிக்கிறேன்" என்றவர்.

அவனுடைய அலைப்பேசியின் எமர்ஜென்சி நம்பரை அழுத்தினார்.

ரிங் போன இரண்டாவது அழைப்பிலேயே எடுக்கப்பட்டது.

"எஸ், நீலக்கண்டேஸ்வரன் ஹியர்" என்ற அந்தக் கம்பீரமான குரலில் காவல் அதிகாரிக்கு அவர் யாரெனத் தெரிந்திருந்தது. இந்த மருத்துவமணையின் உடைமையாளரும், அந்த ஊரில் மிகவும் அறியப்படும் பெரிய பணக்காரர்களில் ஒருவர். மிகவும் எளிமையான மனிதர்.காவல் அதிகாரிக் கூறியத் தகவல்கள் கேட்டவருக்கு அதிர்ச்சியில் அவர் உடல் நடுங்கியது.

அவனுக்கு மேற்கொண்டு சிகிச்சையைத் தொடரும் படிக் கூறியவர், இன்னும் சிறிது நேரத்தில் நான் மருத்துவமனையில் இருப்பேன் என்று அலைபேசியை வைத்தார்.எவ்வளவு துயரச் சம்பவங்களைக் கடந்த மனிதருக்கு இப்பொழுதுக் கேட்டச் செய்தி , உடலில் ஒரு தடுமாற்றத்தைத் தந்தது. சட்டென்று தன் காரை எடுத்தவர் மருத்துவமனைக்குக் காற்றை விட வேகமாக வந்தடைந்தார்.அவர் வந்த வேகத்திலேயே உள்ளே உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவன், எவ்வளவு முக்கியமானவன் என்று சொல்லாமல் சொல்லியதது. அவரின் காரின் வேகத்தைப் பார்த்தே அது தங்கள் முதலாளி என்று தெரிந்ததும் , முன்னாடி வந்த காவலாளியிடம் தன் காரின் சாவியை வீசியவர் புயலென ஓடினார் மருத்துவமணைக்கு.

அவரின் இந்த வேகம் பார்த்த ரிஷப்சனில் இருக்கும் பெண் தங்களுக்கு மேல் அதிகாரி மற்றும் அங்கு வேலைச் செய்யும் மருத்துரான சுமித்ராவுக்கு அழைத்து முதலாளி மிகவும் பதட்டமாக வந்திருப்பதாகத் தகவல் கூறித் தன் கடமையைச் சரி வரச் செய்தாள்.மருத்துவமணையின் முழுப் பொறுப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிர்வாகியை அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐ சியு வில் பார்த்த டாக்டர்களுக்குப் படுத்திருப்பது யார் எனத் தெரியவர, அடுத்து அடுத்து வேகமாக அங்கு வந்த பெரிய ஸ்பெஷலிட்டிகளின் வரவே வெளியே இருந்த பொலீஸாருக்கும் அவனின் உயரம் புரிய அங்கே நீலக்கண்டேஷ்வரன் வந்தார்.நீலக்கண்டேஷ்வரனிடம் தன்னை அறிமுகம் செய்தவர் தனக்குத் தகவல் வந்ததும், அதற்குப் பின் நடந்த அனைத்தும் அவர் கேட்காமலே பகிர்ந்தார் போலீஸ் அதிகாரி. எல்லாம் அமைதியாகக் கேட்டவர், "நீங்க எனக்கு இரண்டு மணி நேரம் தாங்க, நான் மேற்கொண்டு என்ன பண்ணனும் சொல்லறேன் " என்றவர் தன் மன வலியைக் காட்டாமல் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு இருப்பது அவர் இறுக்கத்திலேயே தெரிந்தது.அப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளி வந்த சுமித்ரா ஈஷ்வரின் அருகில் வந்தவர் "அண்ணா" என அழைத்தாள்." சுமி அவனின் கன்டிஷன் இப்போ எப்படி இருக்கு" எனக் கேட்டார்.சுமித்ராவோ " இன்னும் எதுவும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க முடியாது , அவனுக்கு நினைவு திரும்பினால் தான் எதுவுமே தெரிவிக்க முடியும் அண்ணா " என்று கூறினாள்."ம்ம் சரி சுமி, நான் இப்போ அவனைப் பார்க்க முடியுமா? " என்று கேட்ட அவரின் கேள்வியில் இருந்த வலி அவளையும் தன்னிலை இழக்கச் செய்தது."வெளியே இருந்தே பாருங்கள், அவன் இருக்கும் நிலையில் தொற்று எதுவும் பரவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், அதனால் அனுமதி இல்லை யாருக்கும், ஆனால் உங்களிடம் இதெல்லாலம் ரூல் என்று சொல்ல முடியாதே, ப்ளீஸ் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்" என்று அவரின் கைப்பிடுத்துக் கெஞ்சியது அவளின் பார்வை."ம்ம் புரியுது" என்று தலையை மட்டும் ஆட்டியவரின் நிலையைக் கண்டதும், சுமித்ராவிற்கு அவரை அவன் அருகில் அனுப்புவதில் பயம் மட்டுமே இருந்தது. வேறு வழி இல்லாமல் வெளியே இருந்தே பார்த்தவரின் இதயத்தில் இரத்தம் வழிந்தது.எவ்வளவு சுறுச்சுறுப்பாக இருக்கும் தன் மகன், இப்படி உயிரோடு போராடிக்கொண்டிருப்பதைக் கண்டவருக்கு ஆத்திரத்தில் கண்கள் சிவந்தது.

அறிவு விழித்துக்கொள்ள, அவரின் மனதில் எங்கையோ தவறு இருப்பதாக எடுத்துச் சொன்னது.

உடனே, தன் அலைபேசியை எடுத்தவர் தன்னுடைய ஆட்களுக்குத் தகவல்கள் அனுப்பி விபத்தைப் பற்றிய தகவல்கள் கூறியவர், நடந்தது விபத்துத் தானா? என்றும், தனக்கு இது பற்றி அனைத்துத் தகவல்களும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வரவேண்டும், என்ற வார்த்தைகள் அவரின் பணப் பலத்தையும், அவருக்கென இருக்கும் செல்வாக்கையும் பறைசாற்றியது.இந்த இரவு அவருக்கு மிகவும் நீண்டதாகத் தோன்றியது.எப்பொழுதும் தன்னிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கும் மகன், எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் கைகளில் வந்து சேர்ந்து விட வேண்டும் என்பது மட்டுமே இந்த நொடி அவருடைய வேண்டுதல் ஆக இருந்தது.அவனைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியே கசிய விடவில்லை ஈஷ்வர்.

தன் மறு பதிப்பாக வலம் வரும் மகன் ருத்ரேஷ்வரனின் தொழிலில் தனக்கு முன்னே பயணித்து, வெற்றிப் பெற்றுத் சிறந்து விளங்குபவனின் இந்த நிலையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ருத்ரனின் காரியதரிசியும் தன் விசுவாசியுமான சக்திக்கு மட்டுமே அந்த நேரத்தில் அழைத்தவர், தன்னைக் காண அவர்கள் மருத்துவமணைக்கு வரும் படி உத்தரவிட்டதும் அன்றைய அலைச்சலின் காரணம் மெல்லக் கண் முடியவனுக்கு அதிர்ச்சி என்றால் 'விபத்து யாருக்கு' என்ற பயம் மனதில் வர “பாஸ், யாருக்கு என்ன ஆச்சு? என்று கேட்டான். அவன் கேள்விக்குப் பதில் தந்த ஈஷ்வரிடம் பதட்டதுடன் “இன்னும் பத்து நிமிடத்தில் நான் அங்கே இருப்பேன்” என்றான் சக்தி.“சக்தி உன்னுடைய சார், பத்தின எந்த விசியம் வெளியே தெரிய வேண்டாம், சோ பார்த்து வா" என்றவர் தன் அலைப்பேசியை வைத்தார்.அவரின் அழைப்பை வைத்த அடுத்தப் பத்து நிமிடத்தில் அவர் அருகில் நின்றிருந்தான் சக்தி.

ஈஷ்வரே எதிர்பாராத விஷயம் அவனின் இந்த வேகம், அந்த நிலையிலும் அவன் மேல் கொண்ட அக்கறையில் “ என்னடா, இப்படி வேகமாக வந்திருக்க , இந்த வேகம் தான் ஒருத்தனை உள்ளே படுக்க வைத்திருக்கு, நீ வேற ஏன்டா மனுஷன் பீபி ஏத்தற ” என்றவரின் வார்த்தைகள் ஏதும் காதில் வாங்காமல் “ பாஸ் எப்படி நடந்தது இந்த விபத்து ” என்று கேட்டான் சக்தி.

அவன் கேட்ட அனைத்துக் கேள்விக்கு எல்லா விவரமும் அவனிடம் தந்தார், தான் விசாரிக்கச் சொன்னதும் அவனிடம் பகிர்ந்தவரின் நிலையைக் கண்டவன்.மெல்ல “ பாஸ் , மேடமிடம் சொல்ல வேண்டாமா ” என்றதும்.

‘ வேண்டாம் ‘ என்று தலையை அசைத்தபடி “ அவன் வேறக் கண் முழிக்காமல் படுத்தறான் சக்தி , அவன் ஒன்ஸ் கண் திறக்கட்டும் அப்பறம் சொல்லிக்கலாம் ” என்றவர் மேலும்“அவள் வந்தால் சமாளிப்பது கஷ்டம்” என்றவர் மேலும் “ சுமித்ரா வேறு அவன் பக்கத்திலேயே இருக்கா, இதெல்லாம் பார்த்து உங்க மேடம் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதுடா ” என்றவர் அமைதியாக அமர்ந்தார்.சக்தியும் அவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்து, விபத்தைப் பற்றிய தகவல்கள் விசாரிக்கச் சொன்ன ஆட்களிடம் என்ன நடந்தது எனக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான்.ஈஷ்வர் சொன்ன இரண்டு மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை அவரின் ஆட்கள் கஸ்ட்டியில் எடுத்திருந்தனர். போலீஸிடம் தாங்களே தகவல் தரோம் என்று அவர்களை அனுப்பி வைத்தான் சக்தி. அவனுக்குக் கிடைத்த தகவல்கள், அந்த அளவுக்கு வருத்தம் தருவதாக இருந்தது.அதனால் காவல் அதிகாரயிடம் மெல்ல எல்லாம் புரியும் படிக் கூறியவன் மிகவும் பணிவாக "சார் , அவர் மன நிலைப் புரிந்துக்கொள்ளுங்கள் அவரே உங்கிட்ட எல்லாம் சொல்லுவார், அதனால் இந்த விஷயம் கொஞ்சம் பொறுமையாக விசாரிக்கலாம் சார் ப்ளீஸ்" என்றவன் அவரை அங்கிருந்து அகற்றினான். பின் தனக்குத் தெரிந்த எல்லாத் தகவல்களையும் தன் பாஸிடம் பகிர்ந்தான் .அவசரச்சிகிச்சையில் இருந்தவனோ இரண்டு நாட்கள் கடந்து போன நிலையில் கண் விழிக்காமல் அவரை வாதித்துக்கொண்டிருந்தான் ருத்ரன் என்னும் ருத்ரேஸ்வரன் .படித்தவன் பண்பானவன், எல்லாம் நற்பண்புகளும் தன்னுள்ளே கொண்டவனுக்கு , சினம் அவன் உடன் பிறந்தது, கூடவே பயணிக்கும் குணம் அது.தன் மகனைப் பற்றி அலோசித்தபடி இருந்தவரிடம் , அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த சுமித்ரா அவரிடம் தயங்கயபடியே வந்து "அண்ணா” என்று அழைத்ததில் நடைமுறைக்கு வந்தார் நீலகண்டேஷ்வரன்."ம்ம் சொல்லும்மா , எதாவது பிரச்சினையா? ருத்ரா உடல் நிலை இப்போது எப்படி இருக்கு , சீக்கிரம் கண் முழிப்பானா? " என்று பல கேள்விகள் அடிக்கிக்கொண்டே சென்றவரைப் பார்த்துப் புன்னகைத்த படி,

"அண்ணா நிதானமாக இருங்கள், நான் உங்களை அழைத்தன் காரணம் இதுவல்ல என்றவள்

" இந்த மருந்துச் சீட்டு அவனோட சட்டையில் இருந்து கிடைத்ததாம், உங்களுக்கு இது தெரியுமா? அண்ணா" என்று கேட்டாள் சுமித்ரா."ஏன் ம்மா எதாவது பிரச்சனையா? "" ம்ம் ஆமா, இது போன்ற மருந்துகள் எல்லாம் அதைச் சாப்பிடும் ஆட்களின் மனநிலையை ஒரு நிலையில் இல்லாமல் பல சிந்தனைகள் தூண்டக்கூடிய மருந்துகள், இதனால் அவருடைச் சிந்தனை எதுவும் ஸ்டேபிலாக இருக்காது. அது மட்டும் இல்லை இந்த மருந்துச் சீட்டு நம்ம மருத்துவமணையின் பெயரில் இருக்குப் பார்த்தீங்கா?" என்றாள்.இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே சிலையென அமர்ந்திருந்தார் இந்தப் பெரிய மனிதன்.இப்போது அவனுடைய உடல் நிலை எப்படி இருக்குச் சுமி , இதன் பாதிப்பு அவனுக்கு எதாவது உயிராபத்து வருமா?" என்று கேட்டார் ஈஷ்வர்." அதெல்லாம் இல்லை அண்ணா, இப்போ வரைக்கும் எந்த விபரீதமும் நடக்கவில்லை அண்ணா.

நீங்க பயபட வேண்டாம்" என்று அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தாள்.

இதையெல்லாம் கேட்டதும் நீலகண்டேஷ்வரனுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது, கடந்து நாட்களில் அவனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் எதனால் நடந்தது என்றும், அவன் இழந்தது எவ்வளவு என்பதும் படுத்திருக்கும் அவனை விட அவருக்கு நன்றாகவே புரிந்தது.சக்தியை அழைத்தவர் " இந்த மருந்துச்சீட்டு பற்றிய எல்லாத் தகவலும் எனக்கு இன்னும் பத்து நிமிடத்தில் எனக்கு வேண்டும் சக்தி" என்றார்.மருந்துச்சீட்டினைப் பார்த்தவனுக்குப் புரிந்தது, தன் முதலாளியின் அனுமதி இல்லாமல் அவன் தந்தையிடம் பகிர மனம் வரவில்லை. நல்ல பிள்ளையாக மருத்துவமணையின் வரவேற்பாளரிடம் சென்று அந்தச் சீட்டில் இருக்கும் தகவலை விசாரித்துத் தெரிந்துக்கொண்டான் சக்தி.சக்தி ,தன்னிடம் சொன்னத் தகவல்கள் மற்றும் இந்தத் தவறு எங்கே நடந்தது என்பது அவருக்குத் தெளிவாகத்தெரிந்தது. அடுத்து என்ன முடிவு எடுக்கவேண்டும் என்று வேகமாகத் தீர்மானித்தார்.தன் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ருத்ரேஷ்வரனின் விபத்தைப் பற்றிய தகவல் சொல்லியவர், தன் உயிர் தோழியும் , ருத்ரேஷ்வரனின் வளர்த்திய அம்மா மாயாவதிக்கும் அறிவித்தார்.அடுத்து இரண்டு மணி நேரத்தில் அங்குப் பிரச்சமானார் அவருடைய தோழி மாயாவதியும் ,

அவள் கணவன் நரேந்திரன் தம்பதியினர்.தன் தோழியின் முகம் கண்டதுமே அவருக்குப் புரிந்தது அழுது இருக்கிறாள் என்று.

ஈஷ்வரை கண்டதும் " என்ன பண்ணி வச்சு இருக்கீங்க என் பையனை " என்று நீலகண்டேஷ்வரின் சட்டையைப் பிடிச்சு அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் தான் அவரிடம் இல்லை."அவன் என்னிடம் இருந்தப்பொழுது எவ்வளவு நல்லாச் சந்தோஷமாகத் தானே இருந்தான், என் பையனை என்னிடமே திருப்பித் தா, அவனை என் உயிராகப் பார்த்துப்பேன், வாங்கினது இதுக்குத் தானா, இப்படி அவன் உயிரை எடுக்கறதுக்குத் தானா" என்று அழுதபடியே ஈஷ்வரை குற்றம் சாட்டிக்கொண்டிருந்த அவளின் வார்த்தைகள் அனைத்தும் அட்சரம் பிசகாமல் செவிச் சாய்த்துப் படி அங்கே வந்தாள் அவரின் மனைவி கங்கா , தன் தோழி சுமித்ராவோடு.அவள் செவி வழிக் கேட்ட எல்லா வார்த்தைகளும் அமிலம் பட்டது போன்று மிகவும் கொடுரமாக இருந்தது அவளுக்கு.ஏற்கனவே தன் கணவனின் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் அவரைப் பிரிந்து வாழ்கிறாள் , இப்போது இதைக் கேட்டதும் அவர் உயிரை யாரோ வேறோடு பிடிங்கியது போன்று உணர்ந்தவர் , அங்கே இருக்கும் இருக்கையில் சடாரென்று அமர்ந்ததும் ஏற்பட்ட ஓசையில் இவர்கள் மூவரும் திரும்பிக் கங்காவைப் பார்த்தனர்.கங்கா வின் நிலைப்பாடுக் கண்ட மாயாவதிக்கு , தான் செய்தத் தவறின் வீரியம் புரிந்தது. ஒர் இயலாமைப் பார்வையைத் தன் நண்பனின் மீது படிய விட்டாள், அதில் இப்பொழுது என்ன பண்ணுவது என்ற கேள்வியும் தொங்கி நின்றது, அதற்கான பதில் தெரியவில்லை நீலகண்டேஷ்வரனுக்கு.தன்னுடைய காதல் மனைவியைப் பார்ததும் அவருக்கு அவளுடைய ஆறுதல் வார்த்தைகள் தேவையாக இருந்தது.அவளுக்குத் தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னைப் பிரிந்துச் சென்றப்போதும் தன்னை உயிர்ப்போடு வைத்திருந்தது ருத்ரேஷ்வரின் அன்பு மட்டுமே.அவனே இங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, இந்த நிலையில் தனித்து விடப்பட்ட அவருக்கு மனைவியின் துணைத் தேவையாக இருந்தது. தன்னவளிடம் ஆறுதல் தேடி நிற்கும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் அருகே சென்று கரம் பிடித்தவரின் கைகளைக் கோபத்தில் தட்டி விட்டவள்." இப்ப கூடச் சொல்ல மாட்டிங்களா, நீ தான் ருத்ரனின் அம்மா என்று, உங்களை நம்பாமல் போனதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? ” எனத் தன் மார்ப்பைப் பிடித்தப்படி, கணவனைப் பார்த்துக் கேட்ட அந்தத் தாயின் பார்வையில் ‘உன் பதிலில் தான் எல்லோருடைய வாழ்க்கையின் நிம்மதியும் இருக்கிறது’ என்ற செய்தியே பிரதிபலித்தது.அவள் எல்லா உண்மைகளையும் தெரிந்துக் கொண்டாள் என்பது ஆறுதலாக இருந்தபோதும் , அந்தக் கேள்வியின் அர்த்தம் பல அனர்த்தங்களைத் தந்தது.மாயாவதியின் முகமும் இந்தக் கேள்விக்கு நண்பனின் பதிலை எதிர்பார்த்து அவரையே பார்க்க , காதல் மனைவியா ? இல்லை துன்பத்தில் தோள் கொடுத்து உதவியத் தோழியா ? என இருவருக்கும் இடையே தவித்தார் நீலகண்டேஸ்வரன்.

பெற்றவளுக்கா ? அவனை வளர்த்தவளுக்கா ?

இனி உண்மையை மறைத்தும் பயனில்லை என அறிந்தும் அவரின் இந்த மௌனம் கங்காவைக் கொன்றது.

"இன்னும் உங்க மனைவியிடம் சொல்லனும் தோன்றவில்லை அப்படித் தானே " என்று அவர் கண்களையே பார்த்தவள் மெல்ல " என் பையனிடம் எப்போது நான் அவன் அம்மா என்று சொல்லுவீங்க" என்றவள் "இந்த விதியைப் பார்த்தீங்களா , எல்லாக் குழந்தைக்கும் ஒரு தாய்த் தான் தன் தந்தையை அடையாளம் காட்டுவாள், ஆனால் இங்கே எல்லாம் தலைகீழாக இருக்கிறது, என் பையனிடம் நான் தான் அவனோட அம்மானு அடையாளம் காட்டுங்கள் என்று கெஞ்சிட்டு இருக்கேன்” என்றாள்.

மாயாவதியைப் பார்த்து “ என் பையனை என்னிடமே தந்திரு, நான் உன் காலில் வேணாலும் வீழ்கிறேன்" என அவளின் காலில் விழப் போக, ஈஷ்வர் தன் மனைவியின் செயலில் “கங்கா” என்று அழைக்க, சுமித்ராவோ அவள் செய்கையைத் தடுக்க வரவதற்குள் மாயாவதி அவளைத் தாங்கியபடி,"கங்கா என்ன பண்ணற, அவனுக்கு நீ தான் அம்மா, இதில் எந்த மாற்றமும் இல்லை, ஏன் இப்படிப் பண்ணறீங்க, நான் அவன் வாழ்க்கையில் இருந்து விலகிக்கிறேன், அவன் முதலில் கண் முழிக்கட்டும் " என்றவள் கங்காவின் கைகளைப் பிடித்து அமைதியாகத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். இந்த அணைப்பு மிகவும் ஆறுதலைத் தந்தது கங்காவிற்கு.அப்போது அங்கே வந்த டாக்டர் "மிஸ்டர் ருத்ரேஷ்வரன் கண் முழிச்சுட்டாரு, வந்து பாருங்க" என்றவர் அங்கிருந்துச் சென்றார்.கண் விழித்த ருத்ரன் முதலில் தன் தாயைத் தான் தேடினான். வேகமாக உள்ளே வந்த கங்காவைப் பார்த்தவன் தெளிவாக “மாம் வரலையா?” எனக் கேட்டதும், ஈஷ்வருக்குத் தான் 'இதென்ன புதிதாக' என்று ருத்தரனைப் பார்க்க, கங்காவோ நீலகண்டேஸ்வரனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

ருத்திரன் மாயாவை அதிகம் அம்மா என்று அழைக்க மாட்டான் 'மாயா மா' என்று தான் இருக்கும் அவரை அவன் அழைக்கும் சொல்.

ருத்திரன் மனதில் என்ன போகிறது என அறியாதுக் குழம்பிப் போனார்கள் இருவரும்..இயலாலாமையோடு தன் கணவனைப் பார்த்தாள் கங்கா. அங்கே சிலையென நின்றிருந்த ஈஷ்வரின் செயலில், அங்கிருந்துச் சினத்தோடு வெளியே செல்ல எத்தனிக்க, அவள் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய நீலகண்டேஷ்வரன், பாவமாகத் தன் மகனைப் பார்த்தார். அவனோ முகத்தில் குறும்புத் தாண்வமாடக் கண்ணடித்து அவரின் பீபியை எகிற விட்டான்.நீண்ட வருடங்கள் கழித்துத் தன்னிடம் வந்து அருகில் நிற்கும் தன்னவளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தினறினார் எல்லாமும் நடத்திக் காட்டும் வித்தகர்.காதல் தான் மனிதனை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது.தந்தையின் நிலையைக் காணப் பாவமாக இருந்த போதும், அவனுக்கு அவர் மேல் பாசம் இருந்த போதும் , அதை விடத் தன்னையும் தாயையும் பிரித்த கோபம் அதிகமாக இருந்தது அவனுக்கு.

இதனால் அவன் வேணும் என்று தான் செய்தான்.அவனால் நன்றாகப் பேச முடியாத போதும் பேசிய அந்த ஒரு வார்த்தைத் தம்பதியரைப் பிரச்சினைக்குள் ஆக்கியது.ஈஷ்வரின் மௌனமும் ருத்ரனின் குறும்பினையும் உணர்ந்தக் கங்கா, சினத்தின் உச்சானிக் கொம்பில் இருந்தார்.அவளின் மென்மை, சாந்தம் எல்லாம் கடல் கடந்து சென்றது."யார் பையனுக்கு யாருடா அம்மா. உன் வாயால வேற யாரையாவது அம்மா என்று கூப்பிடு, அப்போ இருக்கு உனக்கு, அடிபடாத வாயிலேயே அடிப்பேன். அப்பறம் நானே செலவுப் பண்ணி மருத்துவமும் பார்ப்பேன் ” எனக் காளி அவதாரம் எடுத்தாள்.ஈஷ்வர் எதிர்பாராத ஒரு வெர்ஷனாகக் கங்கா நிற்பதைப் பார்த்துக் " கங்கா ஏன் இப்படிச் சத்தம் போடற, அவனுக்கே முடியல விடு , அதுவும் இல்லாமல் இது நம்ம வீடு இல்லை" என நாம் எங்கு இருக்கின்றோம் என்று அவளுக்கு நினைவுப் படுத்தினார்.தன் தாயின் அகங்கார அவதாரத்தில் உள்ளுக்குள்ளே மிகவும் ஆனந்தக் குத்தாட்டம் போட்டது என்னவோ ருத்ரன் தான்.அவனால் எழுந்து ஆட முடியவில்லை என்ற ஆதங்கம் மட்டுமே மனதில்.

தன் தாயின் வாயில் இருந்து இந்த உரிமையான வார்த்தைகள் வருவதற்கு அவன் காத்திருந்த காலம் நீண்ட நெடிய வருடங்கள்.

இந்தக் காலங்களில் அவளை நேரில் காணும் பொழுது அவனுள் ஏற்படும் ஏக்கங்கள் மட்டும் துன்பம் எதுவும் சொல்லில் அடங்காது.வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து நிற்பவனுக்கு , இந்த இருவரையும் இழக்கத் தயாராக இல்லை. அவர்களுக்கு இடையே இருக்கும் மௌனத்திரையைத் தன் செயலால் மெல்ல மெல்லக் கீழித்துக்கொண்டிருந்தான் ஈஷ்வரின் மகன் ருத்ரேஷ்வரன்.

இனி வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என மனதில் நினைத்தவன் அதைச் செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கி விட்டான்.அவனின் இந்தத் திட்டத்தில் அதிகம் பாதிக்கப் படுவது என்னவோ அவன் தந்தை தான்.ஆனாலும் அவர்கள் இழந்த வாழ்க்கை அவன் திருப்பித் தர முயன்று கொண்டிருக்கின்றான் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே.

காதலில் தோற்றவனுக்கு வாழ்க்கையில் தோற்க மனமில்லை போலும்.

தனக்கு ஒர் அழகான குடும்பத்தை உருவாக்கிவிட்டான்.

தாயவளின் மகனாய்

மனதில் வரித்த உருவம்

இதோ அவன் முன்னே.

அவளின் பிறை நெற்றிப் பொட்டில்

இதோ மடிந்துக் கொண்டிருந்தவனை

மீட்ட எடுக்கும் சக்தி உள்ளதாய்.அவள் மடியின் கதகதப்பில்

இளைப்பாறத் துடிக்கும் மனதை

கட்டுப்படுத்த முடியாமல்

தன்னைக் கட்டிப் போட்டிருக்கும்

இந்தச் சூழலை வெறுத்தவனாய்

கங்காவின் புதல்வன் ருத்ரேஷ்வரன்.தாயவளின் பிடிவாதத்தின் மறுபிறப்பாய்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த உறவினை இணைத்து விட்டான் அவன் ஒற்றை வார்த்தையில்.

மனதில் தன் தந்தையின் தடுமாற்றத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான் இந்தக் குறும்பின் நாயகன். இனி வரும் காலங்களில் இந்த இரும்பு மனிதனின் மனதை மாற்றும் இருவேறு சக்தியாக இருந்தனர் அவர் மனைவியும் அவருக்குப் பிறந்த பிள்ளைகளும்.தொடரும் ...
 
Last edited:
Top